Kadhal 9

Kadhal 9

சித்தார்த் தன்னை மறுபடியும் அழைத்து பேசக்கூடும் என்று மேக்னா சிறிதேனும் நினைத்து இருக்காத நிலையில் அவனிடம் இருந்து வந்த அழைப்பு அவளை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“மேக்னா என்ன எதுவும் பேச மாட்டேங்குறீங்க?” சித்தார்த்தின் கேள்வியில் தன்னை மீட்டுக் கொண்டவள்

“ஆஹ்! அது அது வந்து நீங்க கேட்ட கேள்வி எல்லாம் வைத்து பார்த்து மறுபடியும் எனக்கு நீங்க போன் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல அது தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்” முயன்று இயல்பான குரலில் அவனது கேள்விக்கு பதில் அளித்தாள்.

“நான் எதுவும் தப்பாக உங்க கிட்ட கேட்கலயே! செல்லில் இருக்கும் போது போன் பாவிக்க முடியாது தானே அது தான் கேட்டேன்”

“அது தெரியும் ஸார் உங்க கிட்ட ஒரு உதவி தேவைப்பட்டது அது தான் வார்டனோட போனை வாங்கி பேசுனேன்”

“சரி சொல்லுங்க மேக்னா என்ன விஷயம்?”

“நான் உங்க கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் ஸார்”

“அது தான் மேக்னா சொல்லுங்க என்ன விஷயம்”

“ஸார் கொஞ்சம் சீக்ரெட்டான விஷயம்” மேக்னாவின் தயக்கமான குரலைக் கேட்டு சித்தார்த்தின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டது.

“அப்போ நான் வேணும்னா உங்களை அங்கே நேரில் வந்து சந்திக்கட்டுமா?”

“அய்யய்யோ! அது மட்டும் வேணாம் ஸார் அந்த தனபாலனுக்கு தெரிஞ்சால் அவ்வளவு தான் இந்த இடத்தில் உங்களை பார்த்து பேசுவது சரியாக வராது” பதட்டத்துடன் ஒலித்த மேக்னாவின் குரலில் குழப்பமடைந்தவன்

“தனபாலன்?” என யோசனையோடு கேட்டான்.

‘அய்யோ! அவசரப்பட்டு உளறிட்டேனே!’ தன் தலையில் தட்டிக் கொண்டே நாக்கை கடித்துக் கொண்டவள்

“அது வந்து ஸார் அது” என்று தயக்கத்துடன் இழுக்கவும்

அவளது தயக்கத்தை புரிந்து கொண்டவன் “சரி நீங்களே சொல்லுங்க மேக்னா நான் என்ன பண்ணணும்?” என்று கேட்க

“வேறு எங்காவது சந்திக்க முடிந்தால்…” என அவள் பேச ஆரம்பிக்க

அந்த நேரம் பார்த்து அந்த சிறை அறையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த விமலம்மா
“மேக்னா யாரோ வர்றாங்க! சீக்கிரம் போனை கொடும்மா” என்றவாறே அவளது கையில் இருந்த போனை வாங்கி எடுத்தார்.

“ஹலோ! ஹலோ! மேக்னா!” சித்தார்த்தின் குரல் மேக்னாவின் செவிகளை அடைவதற்கு முன்னரே அவளது புறம் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

“ச்சே! என்ன சொல்ல வர்றான்னு தெரியுறதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சே!” சலிப்போடு தன் போனை தூக்கி மேஜையில் போட்டவன் கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

மறுபுறம் மேக்னா பதட்டத்துடனும், தவிப்போடும் தன் அறைக்குள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

சித்தார்த்தை எப்படி சந்திப்பது என்ற குழப்பம் ஒரு புறம், தனபாலனிடமிருந்து தப்பிப்பது எவ்வாறு என்ற குழப்பம் ஒரு புறம் என்று வெகுவாக குழம்பி போய் இருந்தாள் மேக்னா.

கடைசியாக அவர்களது ஆசிரமத்தில் வைத்து ராணியுடன் தனபாலனைப் பார்த்த பிறகு அவள் அவனை வேறு எங்கேயும் சந்திக்கவில்லை.

சந்திக்கவில்லை என்பதை விட அதற்கான காலமும், நேரமும் அமையவில்லை என்பது தான் உண்மை.

ராணி தன் ஆசிரமத்து குழந்தைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்று இருக்க மேக்னாவும் பல கனவுகளோடு தன் புதிய வேலையில் இணைந்து கொண்டாள்.

அவள் வேலையில் இணைந்து முதல் இரண்டு, மூன்று மாதங்களுக்கு அவளுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

அவள் வேலையில் இணைந்த மூன்றாவது மாதம் அவளது மேனேஜர் ரூபத்தில் பிரச்சினை ஒன்று அவளுக்கு உருவானது.

அவளது கம்பெனி மேனேஜர் சுதர்சனிற்கு எப்படியும் முப்பத்தைந்திலிருந்து, நாற்பது வயது இருக்கும்.

திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் இருந்தும் அவரது பார்வை அடிக்கடி மேக்னாவை சுற்றி வருவதுண்டு.

மேக்னா ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும் நாளாக நாளாக அந்த நபரின் பார்வை இன்னும் பல பெண்கள் மேல் பரவிச் செல்வதைப் பார்த்து சிறிது அச்சம் கொண்டவள் அந்த பார்வை சிறிது நாள் கடந்து தொடுகையாக மாறி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போனாள்.

தன் முன்னால் தவறு நடப்பதைப் பார்த்து ஒரு போதும் மேக்னா அமைதியாகப் போனதில்லை.

அவள் சிறு வயது அனுபவங்களே அதற்கு காரணம்.

சிறு வயது முதலே தைரியம் மட்டுமே தனக்கு துணை என்று தன்னை திடப்படுத்திக் கொள்பவள் ஒரு நாள் தன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த மேனேஜரைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் முன்னால் சென்று நின்றாள்.

மேக்னா எப்போதும் அதிகமாக சுதர்சனோடு பேசியதில்லை.

ஆனால் இன்று அவளாகவே தன்னை தேடி வந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் கொண்ட சுதர்சன்
“அடடே! மேக்னா என்ன அதிசயம்? நீயே என்னை தேடி வந்து இருக்க என்ன விஷயம்?” வாயில் இருக்கும் பற்கள் அனைத்தும் வெளியே தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டே கேட்க

சலிப்போடு அவரை நிமிர்ந்து பார்த்தவள் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்து கொண்டு
“நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு ஸார்!” என்று கூறினாள்.

“தப்பா? என்ன தப்பு?” சுதர்சன் புரியாதது போல கேட்கவும்

சற்று முகம் சிவக்க அவரை நிமிர்ந்து பார்த்தவள்
“உங்க கிட்ட வேலை பார்க்குற ஆளுங்கன்னா உங்களுக்கு இளக்காரமா ஸார்? நம்ம கிட்ட கை கட்டி வேலை பார்க்குறவங்க நம்ம என்ன சொன்னாலும், பண்ணாலும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? நீங்க என்ன தவறுதலான எண்ணத்தோடு பழகுறீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? ஆரம்பத்தில் கண்டும் காணாதது போல ஒன்றிரண்டு தடவை விட்டால் அதையே சாக்காக வைத்து என்ன வேணும்னாலும் செய்துக்கலாம் என்று நினைப்பா உங்களுக்கு?” படபடவென பட்டாசு போல வார்த்தைக் கணைகளைத் தொடுக்க அவரோ பேயறைந்தாற் போல அதிர்ச்சியாகி நின்றார்.

இது நாள் வரை தான் கேள்வி கேட்டால் கூட அளந்து வைத்தாற் போல பதில் சொல்லும் பெண்ணா இவள் என்று அதிர்ச்சியோடு சுதர்சன் நின்று கொண்டிருக்க அவர் முன்னால் விறைப்பாக வந்து நின்றவள்
“நீங்க தப்பு பண்ணால் அதை பார்த்தும் பார்க்காமல் போற வகை ஆளு இல்ல நான்! எதுவாக இருந்தாலும் சரி, என்ன ஆனாலும் சரி அந்த தப்பை நிவர்த்தி செய்யுறது தான் என் வழக்கம் அப்படி தான் நான் பண்ணுவேன் இதற்கு மேலயும் நீங்க உங்க பழக்கத்தை மாற்றலேனா நான் எந்த எல்லைக்கும் போய் உங்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வைப்பேன்” என்று விட்டு செல்ல போக அவரோ சட்டென்று அவளின் முன்னால் வந்து நின்றார்.

அவரது செய்கையில் மேக்னா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க புன்னகையுடன் அவளை ஏற இறங்கப் பார்த்தவர்
“நீ சொன்னது எல்லாம் சரி தான் மேக்னா எல்லாம் ரொம்ப ரொம்ப சரி ஆனா ஒரு விஷயம் எப்போ நீ எனக்கு எதிரில் நின்று தைரியமாக பேசுற அளவுக்கு வந்து இருக்கியோ இனியும் உன்னை இந்த இடத்தில் வைத்து இருக்கணுமா சொல்லு?” என்று கேட்க அவளோ பதிலேதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“ஆனா என்னை பற்றி எல்லாம் தெரிந்த உன்னை அப்படி ஈஸியாக இங்கே இருந்து அனுப்ப முடியுமா?” சுதர்சன் கேள்வியூனூடு அவள் தோளில் கை வைத்து இருக்க அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தவள் அந்த பார்வையில் தெரிந்த மாற்றத்தை பார்த்து கோபம் பொங்க அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“மேக்னா!” சுதர்சனின் குரல் கர்ஜனையாக ஒலிக்க அதை சிறிதும் கண்டு கொள்ளாதவள்

“உன்னை மாதிரி கேவலமான ஒரு ஆளு கிட்ட வேலை பார்க்குறதை விட நான் வேலை இல்லாமலே இருப்பேன்” என்று விட்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி சென்றாள்.

கோபமாக அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி வந்தவள் அங்கிருந்து வேகமாக நடக்க தொடங்கி அந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்த தன் ஹாஸ்டலிற்கு வந்து தன்னறைக்குள் அடைந்து கொண்டாள்.

மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்து கொள்ள தன் தலையை இரு கைகளாலும் பிடித்து கொண்டவள் அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

கண் முன்னால் தவறு ஒன்று நடக்கும் போது அதை பார்த்தும், பார்க்காமல் இருக்க அவளால் முடியவில்லை.

ஏதோ ஒரு வேகத்தில் வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டு விட்டு வந்து விட்டாள்.

செய்து கொண்டிருந்த வேலையை விட்டாயிற்று இனி என்ன செய்வது என்ற கேள்வி மனதிற்குள் எழ யோசனையோடு தன் எதிரில் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தவள் ராணியிடம் பேசினால் சிறிது மனம் தெளிவாகக் கூடும் என்று எண்ணி அவரது தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற ராணி தனக்கு தெரிந்த நபர்களின் உதவியுடன் தன்னுடன் இருந்த பிள்ளைகளோடு குன்னூரில் தங்கி இருந்தார்.

அவ்வப்போது மேக்னா அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் விஷயம் வேறு யாருக்கும் தெரியாத வகையில் அவர்கள் இருவரும் பார்த்து கொண்டு வந்தனர்.

தன் மாத சம்பளத்தில் தன் தனிப்பட்ட செலவு போக மீதி பணம் எல்லாவற்றையும் அவருக்கே அவள் அனுப்பி வைத்து விடுவாள்.

ராணி பலமுறை சூசகமாக அதை மறுத்து பார்த்தும் மேக்னா அதை மாற்றி கொள்ள முனையவில்லை.

பழக்கம் இல்லாத ஊரில் சிறு குழந்தைகளோடு அவர் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த மட்டும் பல உதவிகளை செய்து வந்தவள் இன்னும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் காத்திருந்தாள்.

ஆனால் அதற்குள் என்னென்னவோ நடந்து அவளது வேலையும் இல்லாமல் போயிற்று.

அன்றும் வழக்கம் போல சிறிது நேரம் அவருடன் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தவள் அவர்களது வரவு, செலவு கணக்குகளை பற்றி பேச்சு தொடுக்க மறுமுனையில் அமைதியே நிலவியது.

ராணியின் அமைதியான பதிலே அவர்களது சூழ்நிலையை எடுத்துரைக்க அவளது ஒரு புற மனதோ
‘அவசரப்பட்டு வேலையை விட்டு விட்டோமோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தது.

அவசரமாக தன் தலையை மறுப்பாக அசைத்து அந்த யோசனையை இல்லாமல் செய்தவள்
‘இந்த வேலை இல்லாமல் போனால் இன்னொரு வேலை பணத்திற்காக அந்த கொடுமைகளை எல்லாம் அனுசரித்து போகத்தான் வேண்டுமா?’ என எண்ணிக் கொண்டே சிறிது நேரம் இயல்பாக அவருடன் பேசி விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்தாள்.

அடுத்த நாள் விடிந்ததுமே முதல் வேலையாக தன் சர்டிபிகேட் எல்லாவற்றையும் சரி பார்த்தவள் தன் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடத் தொடங்கினாள்.

ஒரு வாரம் கழித்தும் அவளுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை.

கையில் சேர்த்து வைத்து இருந்த பணமும் சிறிது சிறிதாக கரைந்து செல்ல ஆரம்பித்திருந்தது.

அதை பார்த்து சிறிது மனம் சோர்ந்தவள் பின் தன்னை தானே தேற்றி கொண்டு மனம் தளராமல் எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தன் செலவுகளை சரி செய்யவாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று தேடத் தொடங்கினாள்.

அப்படி தேடியும் அவளுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை.

படிப்பு, தகுதியை விட பணம் மற்றும் சிபாரிசுகளையே பல கம்பெனி முதலாளிகள் ஆர்வத்துடன் கை நீட்டி வாங்க காத்திருந்தனர்.

இதை எல்லாம் பார்த்து மனம் சோர்ந்து போக தன் நிலையை எண்ணி வருந்தியவாறே கால்கள் போன போக்கில் நடக்க ஆரம்பித்த மேக்னா தன் ஹாஸ்டல் அருகே இருந்த ஒரு பார்க்கில் வந்து அமர்ந்து கொண்டாள்.

எந்தவித கவலையும் இன்றி மகிழ்ச்சி துள்ளலோடு விளையாடும் குழந்தைகள் ஒரு புறம், அதே மகிழ்ச்சி நிலையில் எல்லாக் கடமைகளையும் முடித்து விட்ட திருப்தியோடு இருக்கும் வயதானவர்கள் ஒரு புறம் என அந்த பார்க் பல்வேறு பட்ட நபர்களால் நிறைந்து போய் இருந்தது.

தன் பார்வையை அந்த பார்க்கை சுற்றிலும் பரவ விட்டவள் ஒவ்வொரு நபர்களின் முக பாவனைகளையும் ஆழ்ந்து பார்த்த வண்ணம் இருந்தாள்.

தன்னை போன்ற கஷ்டமான நிலையில் இங்கே யாருமே இல்லையோ? என அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி சிறு சலசலப்பு கேட்க ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு மெல்ல அந்த இடத்தை நோக்கி எட்டி நடை போட்டவள் அங்கே கூடியிருந்த நபர்களை விலக்கி கொண்டு சற்று முன்னேறி சென்று பார்த்தாள்.

அங்கே நாற்பத்தைந்தில் இருந்து ஐம்பது வயதிற்குள் இருக்க கூடிய நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து கிடக்க அவரருகில் அதே வயதையொத்த பெண்மணி ஒருவர் கண்களில் கண்ணீர் வடிய கதறி அழுது கொண்டு இருந்தார்.

“அய்யோ! என்னம்மா ஆச்சு?” பதறிப்போய் அவரருகில் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட மேக்னா கோபமாக தன்னை சுற்றி நின்ற நபர்களின் புறம் திரும்பி

“ஏங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா? ஒரு ஆளு மயங்கி விழுந்து கிடந்தால் இப்படி தான் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பீங்களா? இதே நிலை உங்க சொந்தக்காரங்க யாருக்கும் வந்தால் இப்படி தான் இருப்பீங்களா?” என்று கேட்க அங்கிருந்தவர்களோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றனர்.

“என்னம்மா ஆச்சு?” மறுபடியும் தன்னருகில் இருந்த பெண்ணின் புறம் திரும்பி மேக்னா கேட்கவும்

“என்ன ஆச்சுன்னு தெரியலம்மா திடீர்னு நெஞ்சில் கை வைத்துட்டு மயங்கிட்டாரு எப்படியாவது என் வீட்டுக்காரரை காப்பாற்றும்மா எனக்கு அவரை விட்டால் சொந்தம்னு சொல்லக் கூட ஆளு இல்ல” என்றவாறே கண்ணீரினூடு அவர் மேக்னாவின் கையை பிடித்து கதறி அழ ஆரம்பித்து இருந்தார்.

“அம்மா எதுவும் ஆகாது பயப்படாதீங்க!” அந்த பெண்ணை தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவள் அவசரமாக தன் போனை எடுத்து ஆம்புலன்சிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து விட அந்த நபர் மற்றும் அவரது மனைவி சகிதம் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டவள் அவர்களுடன் ஹாஸ்பிடல் நோக்கி புறப்பட்டாள்.

அவர்கள் யார்? என்ன? என்று எதைப்பற்றியும் அவள் விசாரிக்கவில்லை.

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாத்திரமே அவளது மனதிற்குள் அந்த தருணம் வியாபித்து இருந்தது.

சிறிது நேரத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அந்த நபர் சேர்த்து கொள்ளப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்க அப்போதும் அந்த பெண்மணி சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து மனம் கேளாமல் அவரருகில் வந்து நின்ற மேக்னா அவரது தோளில் கை வைக்க கண்ணீர் நிறைந்த கண்களோடு திரும்பி அவளைப் பார்த்தவர் அவளது கைகள் இரண்டையும் பற்றி கொண்டு
“ரொம்ப ரொம்ப நன்றி ம்மா! நீ யாரு? என்ன? எதுவுமே எங்களுக்கு தெரியாது அங்கே அத்தனை பேரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துட்டு இருந்த நேரம் நீ மட்டும் தான் எங்களுக்கு முன் வந்து உதவி செஞ்சம்மா! இந்த உதவியை எங்க வாழ் நாளிற்கும் மறக்க மாட்டோம்மா” என்று கூறவும்

புன்னகையுடன் அவரது கைகளை அழுத்தி கொடுத்தவள்
“அதெல்லாம் இருக்கட்டும்மா பரவாயில்லை! ஏதோ என்னால முடிந்த சிறு உதவி இது ஆமா உங்களுக்கு வேறு யாரும் சொந்தக்காரங்க இல்லையா?” என்று கேட்க அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.

அவரது அமைதியை பார்த்து சிறிது சங்கடம் கொண்ட மேக்னா
“ஸாரி ம்மா நான் எதுவும் தப்பாக கேட்டுட்டேனா?”

“இல்லை ம்மா அப்படி எல்லாம் எதுவும் இல்லை எங்களுக்கு சொந்தம்னு சொல்ல யாருமே இல்லை என் அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு அதேமாதிரி என் வீட்டுக்காரரோட அப்பா, அம்மாவுக்கு அவர் ஒரே பையன் அதனால எங்களுக்கு உறவுக்காரங்க யாரும் இல்லை”

“ஓஹ்! அப்போ உங்களுக்கு பசங்க?”

“இருந்தா ஒரு பொண்ணு ஆனா இப்போ இல்லை” இறுகிய குரலுடன் வந்த அவரது பதில் கேட்டு குழப்பத்துடன் அவரைப் பார்த்து கொண்டு நின்றாள்.

“என் கணவர் உயிரைக் காப்பாற்றுன்ன உன் கிட்ட நான் உண்மையை மறைக்க மாட்டேன்ம்மா என் பேரு வள்ளி என் கணவர் பேரு நடராஜன் அவர் சாதாரணமாக ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வர்றாரு அவர் இந்த நிலைக்கு வரக் காரணமே நான் பத்து மாதம் சுமந்து பெற்ற அந்த பாவி தான் ஆசைக்கு எங்களுக்கு கடவுள் ஒரே ஒரு பொண்ணை கொடுத்தான் இருபத்தைந்து வருஷம் அவளை பூ மாதிரி பொத்தி பொத்தி வளர்த்தோம் ஆனா அவ இரண்டு வருஷத்திற்கு முன்னாடி கூட வேலை பார்க்குற பையனை காதலிக்கிறேன்னு வந்து நின்னா நாங்களும் ஒரே பொண்ணு ஆசைப்பட்டான்னு சந்தோசமாக கல்யாணம் பண்ணி வைத்தோம் அப்படி இருந்தும் அவ கல்யாணம் பண்ணி மூணே மாதத்தில் எங்க கிட்ட சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாட்டுக்கு போயிட்டா அவ இப்போ எங்கே இருக்கா? என்ன பண்ணுறா? எதுவுமே எங்களுக்கு தெரியாது ஏன் அவ உயிரோடு இருக்காளான்னு கூட தெரியல அவளைப் பற்றி தினமும் நினைத்து நினைத்தே என் வீட்டுக்காரர் இந்த நிலைக்கு வந்துட்டாங்க அப்படி எங்களை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நாங்க என்ன பண்ணோம்னு கூட தெரியலம்மா” கண்கள் கலங்க கூறிய அந்த பெண்ணை தன் தோளோடு அணைத்து கொண்டவள்

“எல்லாம் இருக்குறவங்களுக்கு அந்த பொருளோட மதிப்பும், மரியாதையும் தெரியாது ம்மா அந்த பொருளுக்காக இல்லைன்னா அந்த விஷயத்திற்காக ஏங்குறவங்களுக்கு தான் அதோட மதிப்பும், பெறுமதியும் தெரியும்” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே வைத்தியர் ஒருவர் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

“பேஷன்ட் நடராஜனோட சொந்தக்காரங்க?” கேள்வியாக அவர் அவர்கள் இருவரையும் நோக்க

“யெஸ் டாக்டர் நாங்க தான் சொல்லுங்க என்ன விஷயம்?” மேக்னா அவர் முன்னால் வந்து நின்று கேட்டாள்.

“பேஷன்டோட ஹார்ட்டில் ஒரு சின்ன ப்ளாக் ஒண்ணு இருக்கு அதை ஆபரேஷன் பண்ணி எடுத்தே ஆகணும் இல்லைன்னே அது இன்னும் ஆபத்தாக மாற வாய்ப்பு இருக்கு சோ நீங்க அந்த ஆபரேஷனிற்கு ஏற்ற மாதிரி பணம் ஏற்பாடு பண்ணால் கூடிய சீக்கிரம் அவர் உயிரைக் காப்பாற்றலாம் இல்லைன்னே கஷ்டம்”

“எ…எல்லாம் எவ்…எவ்வளவு டாக்டர் செலவு ஆகும்?”

“கிட்டத்தட்ட பத்து இலட்சம்”

“என்ன?” மேக்னா அதிர்ச்சியாக அந்த வைத்தியரைப் பார்க்க

அவரோ வெகு இயல்பாக
“இது ஆரம்ப கட்டம் என்பதால் தான் இவ்வளவு குறைவாக சொல்லுறோம் இதுவே இன்னும் கொஞ்சம் நாளைக்கு அப்புறமாக வந்து அட்மிட் ஆகி இருந்தால் முப்பது, நாற்பது இலட்சம் ஆகி இருக்கும் ஒரு வாரத்திற்குள் பணம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க அது போக ஹாஸ்பிடல் செலவு வேறயா கட்டிடுங்க” என்று விட்டு சென்று விட அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் இருவருமோ விக்கித்துப் போய் நின்றனர்.

“பத்து இலட்சம்! அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்?” வள்ளி தன் தலையில் கை வைத்து கொண்டு தள்ளாடியபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள

அவரருகில் வந்து அவரது தோளில் ஆதரவாக அழுத்தி கொடுத்த மேக்னா
“கவலை பட வேண்டாம் ம்மா! நான் உங்களுக்கு எப்படியாவது அந்த பணத்தை ஏற்பாடு பண்ணி தர்றேன்” என்று கூறவும்

ஆச்சரியமாக அவளை திரும்பி பார்த்தவர்
“நீ ஏன் ம்மா எங்களுக்காக இப்படி கஷ்டப்படணும்? சொந்த பொண்ணே கண்டுகொள்ளாமல் விட்டுட்டு போயிட்டா உனக்கு எதற்கு வீணாக கஷ்டம்? பரவாயில்லை ம்மா நான் ஏதாவது வழி பார்க்கிறேன்” என்று கூற

“என்ன வழி இருக்கு?” கேள்வியாக அவரை நோக்கினாள்.

சிறிது நேரம் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராது போகவே அவரைப் பார்த்து புன்னகை செய்தவள்
“எனக்கு ஒரு அம்மா, அப்பா இருந்தால் நான் இதை பண்ண மாட்டேனா ம்மா? அது மாதிரி இதை நினைச்சுக்கோங்க நான் பணத்தோட மறுபடியும் இங்கே வர்றேன்” என்று விட்டு அங்கிருந்து சென்று விட அவரோ கவலையுடன் அவள் சென்ற வழியையே பார்த்து கொண்டு இருந்தார்.

ஆபரேஷன் செய்வதற்கு ஒரு வார காலமே அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க மேக்னா அங்கிருந்து சென்று ஆறு நாட்கள் கடந்து இருந்தது.

மேக்னா ஆறு நாட்களாக ஹாஸ்பிடல் வராமல் இருக்கவே வள்ளி தன் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்திருந்தார்.

ஏழாம் நாள் இனி அவள் வரவே மாட்டாள் என்றெண்ணிய படி அவர் தன் கணவரோடு அந்த ஹாஸ்பிடலில் இருந்து செல்வதற்கு தயாராக போக எங்கிருந்தோ மின்னல் போல அவர்கள் முன்னால் வந்து நின்றாள் மேக்னா அதுவும் பத்து இலட்சம் பணத்துடன்.

“ஸாரி ம்மா பணம் ஏற்பாடு பண்ண கொஞ்சம் லேட் ஆகிடுச்சு இடையில் உங்களை தொடர்பு கொண்டு பேசவும் எனக்கு கிடைக்காது போயிடுச்சு” என்றவள் அவர்கள் கையில் இருந்த பையைப் பார்த்து விட்டு

“நான் வர மாட்டேன்னு நினைச்சுட்டீங்களா ம்மா? நான் ஒரு வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் விட மாட்டேன் ம்மா சரி நான் பணத்தை கட்டிட்டு வர்றேன் நீங்க இங்கேயே இருங்க” என்று விட்டு அவரது தோளில் ஆதரவாக அழுத்தி விட்டு செல்ல அவரோ அவளை வியப்பாக பார்த்து கொண்டு நின்றார்.

“முன்ன பின்ன தெரியாத நமக்காக இந்த பொண்ணு எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கா? இப்படி ஒரு பொண்ணு நமக்கு இல்லாமல் போயிடுச்சே!” சற்று கவலை கலந்த குரலில் வள்ளி நடராஜனிடம் மேக்னாவை சுட்டிக் காட்டி கூற அவரும் அந்த நேரம் அவளையே ஆச்சரியமாக பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

மேக்னா ஆபரேஷன் செய்வதற்கான பணம் எல்லாவற்றையும் கட்டி விட சிறிது நேரத்தில் அவருக்கு உரிய அறுவை சிகிச்சையும் ஆரம்பமானது.

சோர்ந்து போய் கண்களை மூடியவாறே சுவற்றில் சாய்ந்து நின்ற மேக்னாவின் அருகே வந்து நின்ற வள்ளி அவளது தோளில் கை வைக்க அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்தவள் தன் முன்னால் நின்றவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்தாள்.

“உன் பேரு என்ன ம்மா?” அவரது கேள்வியில் சிறிது புன்னகைத்து கொண்டவள்

“மேக்னா” என்று கூற

அவளது கைகளை பற்றி கொண்டவர்
“உன் பேரு கூட எனக்கு தெரியல ஆனா நீ எங்களுக்காக எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்க இதற்கு எப்படி நாங்க நன்றி சொல்றதுன்னு கூட தெரியலம்மா” என்று கூறவும்

அவரை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“நன்றி சொல்லி என்னை வேறு பிரிக்க பார்க்காதீங்க ம்மா! உங்க இரண்டு பேரையும் பார்க்கும் போது எனக்கு என் அப்பா, அம்மா ஞாபகம் தான் வந்தது அது தான் உங்களுக்கு உதவி செய்தே ஆகணும்னு முடிவு பண்ணுணேன் அப்படியே பண்ணிட்டேன்” என்று கூற அவரோ அவளை பார்த்து மெய்சிலிர்த்து போய் நின்றார்.

“இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா? உன்னை பெற்றவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி” அவரது கூற்றில் விரக்தியாக புன்னகைத்து கொண்டவள்

“அது தான் அந்த கடவுள் என்னை விட்டு அவங்களை அவன் கூடவே கூட்டிட்டு போயிட்டான் போல” என்று கூற

அவர் சற்று குழப்பத்துடன்
“அப்போ உன்னோட அம்மா, அப்பா?” கேள்வியாக அவளை நோக்கினார்.

கண்கள் கலங்க தன் உதட்டை கடித்து அழுகையை சிரமப்பட்டு அடக்கி கொண்டவள் தன் தலையை இடம், வலமாக அசைக்க வள்ளி உடனே அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டார்.

“கவலைப்படாதே ம்மா மேக்னா! அந்த கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காக தான் பண்ணுவான் எங்க பொண்ணு எங்க கிட்ட இருந்து பிரிந்து போனதும், உன் அம்மா, அப்பா உன்னை விட்டு போனதும் இத்தனை வருடங்கள் கழித்து எங்களுக்கு நீ ஒரு பிள்ளையாக கிடைக்கணும்னு தான் என்னவோ? இனி எப்போதும் உனக்கு அம்மா, அப்பாவாக நாங்க இருக்கோம்” அவரது கூற்றில் ஆச்சரியமாக அவரை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் மீண்டும் கண்ணீரை சொரிய மேலும் அவரோடு இறுக ஒன்றிக் கொண்டாள்.

‘இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்கும்னு நான் கனவிலும் நினைக்கவில்லையே! ஆனா இந்த ஆபரேஷனிற்காக நான் பணம் சேர்த்த வழி இவங்களுக்கு தெரிந்தால் இதே மாதிரி இவங்க இருக்க கூடுமா?’ தன் மனதிற்குள் அரித்து கொண்டிருந்த கேள்விக்கு பதில் தெரியாமல் மேக்னா தவிப்போடு நின்று கொண்டிருக்க அவரோ அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

பழைய சம்பவங்களின் தாக்கம் மற்றும் அந்த பணம் தன் கையில் வந்து சேர்ந்த தருணம் என எல்லாவற்றையும் எண்ணி விரக்தியாக புன்னகைத்து கொண்ட மேக்னாவின் கண்கள் இரண்டும் கண்ணீரை சொரிய
‘இல்லை நான் அழக் கூடாது! அழவே கூடாது! அழுவது கோழைத்தனம்’ தன் கரம் கொண்டு அந்த கண்ணீரை துடைத்து விட்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்…….

error: Content is protected !!