Kalangalil aval vasantham 1(a)

Kalangalil aval vasantham 1(a)

 

காலங்களில் அவள் வசந்தம்

அத்தியாயம் 1

சித்திரை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அடிக்கின்ற வெயில் எல்லாம் தன் தலை மேல் மட்டும் தான் போல என்று தோன்றியது அவளுக்கு. தூசியும் குப்பையுமான அந்த இடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சென்னை நகரின் ஓய்வில்லாத வாகனப் போக்குவரத்தின் படிமங்கள் படியாதவொரு இடம். கடற்கரையை ஒட்டிய நீலாங்கரையின் முக்கியமான அந்த இடத்தில் தயாராகிக் கொண்டிருந்தது, அந்த பல மாடிக் கட்டிடம்.

மாலை மற்றும் இரவு வேளைகளில் அந்த இடம் அழகாக இருக்கலாம். ஆனால் மண்டையை பிளக்கும் அந்த சித்திரை மாத வெயில் அவ்வாறு அவளை ரசிக்க விடவில்லை.

அவள் பிரீத்தா!

வயது இருபத்தி ஆறு, ஐந்தரை அடிக்கும் சற்று கூடுதலான உயரம். பெண்களில் அந்த வளர்த்தி சற்று அபூர்வம். சுண்டினால் ரத்தம் தெறிக்கும், சந்தனமும் மஞ்சளும் சேர்த்தரைத்த நிறம். கூர்மையான நாசி, இயற்கையாகவே சிவந்த ஆரஞ்சு சுளை உதடுகள், நீள விழிகளில் கருவண்டாய் கண்மணிகள், சதைப் பிடிப்பான கொழு கொழு ஆப்பிள் கன்னங்கள், வெண்சங்காய் கழுத்து, உயர்த்தி போடப்பட்ட தீபிகா படுகோன் டாப் நாட் என இலக்கணம் மாறாத அழகி, எப்போதும் போல, ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் இருந்தாள்!

இத்தனை அழகும் மொத்தமாய் மய்யம் கொண்டிருப்பது, ‘ஜுபிடர் ரியல்ட்டர்ஸ்’ ஸில். சென்னை மட்டுமல்ல, ஹைதராபாத், பெங்களூர் என பரந்து விரிந்திருந்த, சென்னையின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனம். அதன் சீஈஓ திருவாளர் சசாங்கன் அவர்களின் தனி செயலாளர். தனி செயலாளர் என்றால் தனி செயலாளர் மாதிரி… கூடுதல் பொறுப்பு என்று கூறப்பட்டாலும், அதற்கான அர்த்தம் வேறு. ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதை போல!

ஆரம்பத்தில் அவளது சுறுசுறுப்பைப் பார்த்து பிடித்துப் போய், ஒவ்வொரு வேலையாக கூடுதலாக கொடுக்கப்பட, அவற்றையும் அவள் விதியே என செய்தாலும் ஜோராக செய்து விட, அப்போது அவளுக்கு பிடித்தது ஏழரை, சசாங்கன் வடிவில்!

படித்தது சிவில் இன்ஜினியரிங். வேலை பார்க்க வந்ததும் ஜூனியர் இஞ்சினியராகத்தான். இப்போதும் அவள் பார்ப்பதும் அதே வேலை தான். ஆனால் கொத்தனார் ஒருவர் வரவில்லையென்றால் கூட, அந்த வேலையை அவள் பார்க்க வேண்டி வரலாம். இன்னும் அந்த கொத்தனார், சித்தாள் வேலைகளை மட்டுமே அவள் பார்த்ததில்லை. ஆனால் வெகு விரைவில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக அவள் முன்பு நிழலாடிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில் அனைவருக்குமே அப்படித்தான் என்றாலும், சுறுசுறுப்பு அதிகமென்பதால், அதிகம் பலியாவது பிரீத்தா தான்!

விட்டால் காபி தூள் வாங்குவதிலிருந்து டாய்லெட் பேப்பர் வாங்குவது வரை அவள் தலையில் வேலையை கட்ட தயாராக இருப்பவன் என்பதால், ‘உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்… நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்…’ என்று பாடிக் கொண்டிருக்கிறாள்.

அறுபதாயிரம் சம்பளத்தை கொடுத்து விட்டு, நட்ட நடு இரவு வரை வேலையை கறக்கிறானே என்ற கோபம் மட்டும் தான் பிரீத்தாவுக்கு. மற்றபடி சசாங்கனின் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு. இந்த சம்பளம் வேறு எங்கு கிடைக்கும்? அதுவும் படிப்பை முடித்த ஆறு வருடத்தில்?!

மற்ற இடங்கள் போல, மேலும் கீழும் பார்ப்பவன் கிடையாது. அவனுக்கே அவனுக்காய் இருக்கும் தனி சேனலின் விபரம், தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்தி கூறும் நல்லுலகங்கள் முழுவதும் அறிந்திருந்தபடியாலோ என்னவோ, அவனது பார்வை, அனாவசியமாக ஒரு டிகிரி கூட கீழே இறங்காது.

ஆனால்  வேலையில் அசுரன்!

வேலை வாங்குவதிலும் அசுராதி அசுரன்!

எப்படியென்றாலும் இந்த வேலை பிரீத்தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. முனகிக் கொண்டே செய்தாலும், கற்றுக் கொள்ள எக்கச்சக்க வாய்ப்பை தருவதாலும், அந்த சம்பளத்தாலும் நிறுவனமும், சசாங்கனும் அவளுக்கு மிகவும் பிடித்த விருப்பங்கள்!

இப்போது அந்த சர்ப்ளஸ் பேரழகு பார்த்துக் கொண்டிருப்பதும் சசாங்கனின் வேலையை தான். அவன், தனது பெர்சனல் சேனலை பார்க்க போனதால், தனியே தன்னந்தனியே வெய்யிலில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்தாள்.

சுள்ளென அடிக்கும் அந்த மதிய வேளையில் அரைகுறையாக கட்டப்பட்டிருந்த அந்த மொட்டைமாடியில் நின்று வேலை பார்ப்பது மட்டுமல்ல, மேற்பார்வை பார்ப்பதும் கூட கொடுமையானது தான்.

அவளால் ஏனோதானோவென்று நிழலில் அமர்ந்து கொண்டு கணக்கு பார்த்துவிட்டு போக பிடிக்காது. பிடிக்காத வேலையென்றால் கூட அதை செய்ய மாட்டாள். பன்னிரெண்டாவது மாடிக்கு தளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். தளம் போடும் போது கண்டிப்பாக கூடவே இருப்பாள் அவள். தான் சற்று சுணங்கி, ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் என்னாவது என்ற ஜாக்கிரதை உணர்வு!

அனைத்தும் ரெடிமேட் தான் என்றாலும், அவள் அருகில் இருந்தால் தான் அவளுக்கு திருப்தி, அவளை விட சசாங்கனுக்கு திருப்தி.

ஏனென்றால் அது எத்தனையோ பேரின் கனவு, வாழ்க்கை, லட்சியம், எல்லாவற்றையும் விட கூடவே சம்பந்தப்பட்டிருப்பது உயிர்!

அதனால், கட்டிடம் கட்டும் போது முக்கியமான நிலைகளில் எல்லாம் கொஞ்சம் கூட பாதுகாப்பை விட்டுக் கொடுக்க மாட்டான். அந்த அர்ப்பணிப்பை தான் அனைவரிடமும் அவன் எதிர்பார்ப்பான்.

அதனால் தான் ஜுபிடர் ரியல்ட்டர்ஸ் அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. மக்களும் ஜுபிடரின் பிளாட்ஸ் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கினார்கள்.

அதுவும் கட்டி முடிக்கும் முன்னரே, முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விடும்.

அந்த நம்பிக்கையை மக்கள் மனதில் விதைப்பது சாதாரணமில்லை. அவனது தாத்தா காலத்திலிருந்து அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டிருப்பதும் அவ்வளவு எளிதில் சாத்தியப்படாத ஒன்று! அதிலும் ரியல் எஸ்டேட் தொழிலே சுத்தமாக படுத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் கூட ஜுபிடர் என்றால் முதலிடம் தான். மார்க்கெட் ஏறினால் என்ன இறங்கினால் என்ன… மக்கள் வைத்த நம்பிக்கை… அது மிகவும் பெரியது… சசாங்கனை பொறுத்தவரை!

அந்த நம்பிக்கை கெட தான் காரணமாகிவிட கூடாது என்ற எண்ணம் அவளுக்குள் வேரோடிப் போய் இருந்தது.

ஆனாலும் அந்த வெயிலில் நிற்பது அவ்வளவு எரிச்சலாக இருந்தது. கூடவே கசகசவென வேர்வை வேறு! ஊரிலிருந்தால் பெற்றவள், உச்சி மண்டையில் நல்லெண்ணையை இறக்கி, நலங்கு மாவும், அரப்பும், சீகைக்காயுமாக தேய்த்து அவளை பராமரிப்பாள். இப்போது அதற்கும் வழியில்லை. பிரீத்தா இருப்பது, பிஜியில்.

தனியாக பிளாட் எடுத்து தங்கலாம். நிறுவனம் கண்டிப்பாக அதற்காக பணம் செலுத்தி விடும். ஆனால் அவளுக்கு தனியாகவெல்லாம் இருக்க முடியாது. பிஜியில் தங்கினோமா… வேலையை பார்த்தோமா, விடுமுறையானால் ஊருக்குப் போய் அம்மா கையால் சாப்பிட்டோமா, நன்றாக படுத்துத் தூங்கினோமா என்றிருப்பது அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

ஞாயிற்றுகிழமையானால், அந்த வாரத்துக்கான துணிகளை மெஷினில் போட்டு எடுக்கவும், தூங்கி எழவும் மட்டுமே நேரம் சரியாக இருந்தது. கொஞ்சம் நேரம் கிடைத்தால், ரூம்மேட்ஸுடன் ஒரு சினிமா அல்லது பீச்.

காற்று வாங்கி விட்டு பிஜி வந்து சேர்ந்தால், தூக்கம் கண்களை சுழற்றும். அதற்கு மேல் அவளை எங்கே பராமரித்துக் கொள்வது? ஊருக்கு போகும் போது தான் சேர்த்து வைத்து பெற்றவளிடம் திட்டு வாங்கியபடி கிணற்றடியில் அமர்வாள். ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து, அவளுக்கு எண்ணைக் குளியலோடு, வசவுக்குளியலும் நடக்கும்.

முந்தைய தினம் கூட அப்படித்தான்…

“ஒழுங்கா தலைய வாரவாச்சும் செய்யறியா? எதுவுமில்ல… என்னதான்டி அங்க பண்ற?” நங்கென்று மண்டையில் கொட்டியபடியே தலையில் அரக்கை வைத்து அழுந்த தேய்த்த சீதாலக்ஷ்மியை பார்த்து,

“ஏம்மா, அங்க எனக்கு தலைவாரத்தான் சம்பளம் குடுக்கறாங்களா? எவ்வளவு பெரிய ஆஃபீஸ்… எவ்வளவு பெரிய பொசிஷன்ல இருக்கேன்… நீ என்னடான்னா…” என்று நக்கலாக அவள் சொன்ன பதிலை கேட்டவருக்கு இன்னமும் தான் பற்றிக் கொண்டு வந்தது. அவரைப் பொறுத்தவரை சுய பராமரிப்பு தான் முதலில். அதற்கு அடுத்ததாகத்தான் எதுவுமே!

பிரீத்தாவின் தலையில் இன்னொரு கொட்டு நங்கென்று விழவும், “இஸ்ஸ் ஆஆ…” என்று தலையை தேய்த்தாள்.

“லூஸாம்மா நீயி? கொட்டிக் கொட்டியே என் வளர்த்தியை கம்மி பண்ணிடுவ போலருக்கே…” என்று சலித்துக் கொள்ள,

“அப்படியாவது கொஞ்சம் ஹைட்டு கம்மியாகறியா பாக்கறேன்… எதுவும் வெளங்க மாட்டேங்குதே!”

அவரது கவலை அவருக்கு!

“ம்மா… எல்லாரும் என்னோட ஹைட் பார்த்து மாடல் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. ஆனா உனக்கு மட்டும் வெளங்காதே…”

“ஆமான்டி… இன்னும் நாலடி வளரு… மாப்பிள்ளை நல்லா கிடைப்பான்…”

“கிடைக்கறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கறது கிடைக்காது லச்சு…” சிரித்தாள் பிரீத்தா.

முண்டு போல பாவாடையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு சீகைக்காய் கண்களில் பட்டு எரிந்தது. ஆனாலும் அந்த எரிச்சலிலும் பஞ்ச் டையலாக் அடித்தே தீருவேன் என்று உறுதி பூண்டவளை என்ன செய்ய?

தலையிலடித்துக் கொண்டார் அவர்.

“இந்த சிரிப்புக்கொண்ணும் குறைச்சலில்லை. முடியப் பாரு… வரவரவரன்னு… எண்ணெய் வைக்கறதில்லை… சீகைக்காய் போடறதில்லை… கண்ட கண்ட கிரீமும் போட்டுத் தொலை…”

“ம்மா… ஹேர் ஸ்ப்ரே மா அது…”

“அது என்ன எழவோ… சின்ன வயசுல இருந்து உசுரக் கொடுத்து வளர்த்த முடியை எப்படி கட் பண்ணி விட்டிருக்க?!” நங்கென்று இன்னொரு கொட்டு விழுந்தது. விழாதா பின்னே? இடையை தாண்டி முழங்காலை தொட்ட முடியை, சென்னையில் பராமரிக்க முடியவில்லையென்று வெட்டி விட்டு, அதையும் திருச்சி வரும்போது தானே சொன்னாள்! அந்த ஆற்றாமை அவருக்கு இன்னமும் போகவில்லை.

“லச்சு… ஜீன்ஸ் போட்டுட்டு, முடியை பின்னிட்டு இருக்க முடியுமா? காமெடி பண்ணாத…”

“அந்த கர்மம் வேற… எப்பப்பார்த்தாலும் அழுக்கா ஒன்ன மாட்டிக்க…”

அவளது தலையை பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிக் கொண்டிருந்தார் லச்சு. விட்டால் இப்போதைக்கு அவளது தலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டார் அவர்!

“அழுக்கெல்லாம் இல்ல. வாரத்துக்கொருவாட்டி தோச்சு போடுறேன்…” சுயமரியாதை சிங்கம் சொல்லிவிட, அதற்கொரு தரம், பாட்டுப் படித்தார் லச்சு!

“பெருமாளே பெருமாளே… இந்த புள்ளைக்கு நல்ல புத்திக் குடுடாப்பா…” என்று புலம்பியவர், “அதுவரைக்கும் என்னடி பண்ணுவ? அழுக்கையேத்தான் போட்டுப்பியா?” என்று கேட்க,

“இல்லம்மா… வாரத்துக்கொருவாட்டி எல்லா துணியும் துவைப்பேன்….” என்று எப்படியாவது அவரிடமிருந்து தப்பிக்க முடியுமா என்று தீவிரமாக வழிகளை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினாள் பிரீத்தா!

“அப்படியெதுக்கு நீ அங்க வேலை பார்க்கணும்? பேசாம இங்கயே வந்துடுடி… உன்னோட ஜாதகக் கட்டையும் இன்னும் மூணு மாசத்துல எடுக்க சொல்லிருக்கார் நம்ம வாத்தியார்… வயசு இருபத்தாறு முடிஞ்சிருச்சு. குருபலன் வந்தோடனே கட்டெடுத்தா உடனே முடிஞ்சுருமாம். கொஞ்சம் தயவு பண்ணுடி…” அவளை மிரட்டி பணிய வைக்க முடியாதென்பது அவருக்கு தெரியும். ஆனால் என்ன செய்வது?

“ம்மா… உனக்கும் வேலையில்லை. அந்த வாத்தியாருக்கும் வேலையில்லை…” என்றவள், “நான் இருக்கறது எவ்வளவு முக்கியமான பொசிஷன்னு உனக்குத் தெரியல. அவ்வளவு சீக்கிரம் இந்த பொசிஷனுக்கு போக முடியாது. ஆனா எனக்கு தேடி வந்திருக்கு. இப்ப போய் என்னோட கேரீரை கெடுத்துக்கிட்டு, கல்யாணத்தை பண்ணி ஒரெடியா உக்காந்துக்க சொல்ற…” என்று கடுப்படித்தவள், சீதாலக்ஷ்மியின் கையை விலக்கி விட்டு, கிணற்றில் இறைத்து வைத்திருந்த நீரை தலையில் கவிழ்த்துக் கொண்டாள்.

“கேரீரெல்லாம் கொண்டு போய் உடைப்புல போடு. உன் வயசுதான தெய்வா மகளுக்கு. அவளுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையுமாச்சு…”

“அவ கல்யாணம் பண்ணிட்டா, நானும் பண்ணிடனுமா?”

எதிர்கேள்வி கேட்பவளை பார்க்கையில் லச்சுவுக்கு தலை வேதனையாக இருந்தது!

“சரி… வேணாம்! இங்கேயே பார்க்கற மாதிரி வேலைய மாத்திக்க ப்ரீத்தி…” வேறு வழியில்லாமல் அவர் கூற!

“அதை நீ ஆரம்பத்துல சொல்லி இருக்கணும் லச்சு…” குளித்து முடித்து தலைக்கு துண்டைக் கட்டிக் கொண்டே கூறினாள். கிணற்றடியில் குளிப்பதால், மீதக் குளியலை உள்ளே பாத்ரூமுக்குள் முடித்துக் கொள்வாள். அவளுக்கு மிகவும் பிடித்தது, இந்த கிணற்றடி குளியல்.

“ஏன்? இப்ப என்ன?” முறைத்தார் சீதாலக்ஷ்மி!

“வாங்கி வெச்சு இருக்கமே கம்பெனில கடனா… அதை யார் கட்டுவா?”

“நான் வாங்க சொன்னேனா?”

“வேண்டாம்னு சொன்னியா?” கொக்கிப் போட்ட மகளை பாவமாக பார்த்தார்.

அவளது தந்தை, சந்திரமோகன், வாங்கிய கடன் கிட்டதட்ட பதினைந்து லட்சத்துக்கும் மேல். இருக்கும் வீடு மட்டுமே சொந்தம். வேறு நிலபுலன்களோ, சொத்துக்களோ இல்லை. அதுவும் தாத்தா வழி வந்தது. கல்லூரி வரை அவள் படித்ததெல்லாம் ஸ்‌காலர்ஷிப்பில் தான். அரசாங்க ஸ்‌காலர்ஷிப் பாதி, தனியார் ஸ்‌காலர்ஷிப் மீதி என்று கஜகர்ணமடித்து இருக்கிறாள் அப்போதே!

கிடைக்கும் வேலையானைத்தும் செய்வாள், பகுதி நேர வேலையாக! நல்ல வேளையாக கல்லூரிப் படிப்புக்கு சென்னையில் இடம் கிடைத்து விட்டது. இல்லையென்றால் தந்தையின் செயல்பாடுகளை பார்த்தால் கண்டிப்பாக அவளால் படிக்க முடிந்திருக்காது.

படிப்பு செலவுக்காக ஒற்றை ரூபாய் கூட கேட்டதில்லை தந்தையிடம்! பனிரெண்டாவது வரை அரசாங்கப் பள்ளி. சீதாலக்ஷ்மிக்கு தையல் நன்றாக வரும். தலைகாணி உறை தைத்துத் தருவது, பெட்ஷீட் அடிப்பது என்று பல வேலைகள். பிரீத்தா கூடவே தைப்பாள். அவள் அடித்த பெட்ஷீட் கூலி அவளுக்கு.

 

 

error: Content is protected !!