Kalangalil aval vasantham 1(b)

பத்தாவது முதலே அப்படித்தான். அவளது மேல் செலவுகளுக்கெல்லாம் அப்படித்தான் பணம் சேர்ப்பாள். பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் பணம் வேண்டுமென நிற்பது அவளுக்கு பிடிக்காது. சென்னையில் கல்லூரி சேர்ந்தபின் பகுதி நேர வேலையாக நிறைய பார்த்திருக்கிறாள். கேட்டரிங் குழுவில் வரவேற்பு பெண்ணாக, நோட்டீஸ் சப்ளை செய்ய என எத்தனையோ மரியாதையான வேலைகள். எதையும் விட்டதில்லை.

படித்து முடித்து ஜுபிடரில் சேர்ந்த பின் தான் சற்று நிம்மதியானாள். அதனாலேயே எவ்வளவு வேலைகளை அவள் தலையில் கட்டினானாலும் எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்மானம் இருந்தது அவளிடம். அதை சரியாக இனம் கண்டு கொண்டான் சசாங்கன். வேலை எவ்வளவுக்கெவ்வளவு கொடுப்பானோ, அதே அளவு சம்பளத்தையும் கொடுப்பான். ஆரம்பத்தில் இருபத்தி ஐந்தாயிரம் என்பது இப்போது அறுபதை தொட்டது.

வேலையில் சேர்ந்த நான்கு வருடத்தில் பாதி கடனை அடைத்து விட்டவளுக்கு தெய்வமாக சசாங்கனின் ரூபத்தில் உதவி செய்தது. இக்கட்டான நிலையில் மொத்தமாக ஐந்து லட்சம் கடனாக தந்து, மாதம் இருபதாயிரம் என பிடித்தம் செய்து கொள்ள செய்திருக்கிறான். தங்கையை பொறியியல் படிப்பில் சேர்த்ததும் அந்த பணத்திலிருந்துதான்.

தந்தை, வியாபாரம் செய்கிறேன் பேர்வழி என்று சேர்த்து வைத்த கடன்களுக்காக இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாதவரா சீதாலக்ஷ்மி? கணவரின் கடனையும், கடமைகளையும் தலை மேல் ஏற்றுக் கொண்டு, திருமணத்தை மறந்துவிட்டு இப்படி உழைக்கிறாளே என்ற வேதனை ஒரு புறம் என்றால், இப்போதும் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு, வெற்று ஜம்பத்துக்காக ஆடம்பரமாக திரியும் கணவர் ஒரு புறம், பிரீத்தாவுக்கு பின் பிறந்தவளான காயத்ரியின் செயல்பாடுகள் மறுபுறமென அல்லாடிக் கொண்டிருந்தார்.

மகளை பொறுப்பை எடுத்துக் கொண்டதால், கடனை அவள் எப்படியாவது அடைத்து விடுவாள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. அவரது தினசரி செயல், காலையில் வீட்டைவிட்டு கிளம்பினார் என்றால், தோழமைகளுடன் அரட்டை கச்சேரியை முடித்து விட்டு வீட்டுக்கு வர இரவாகிவிடும். நடுவே அவருக்கு உணவு கூட வேண்டாம். டீயும் சிகரெட்டும் போதும்.

அவர் சிகரெட் புகையோடு வீட்டுக்குள் நுழையும் போதே பிரீத்தாவுக்கு எரிச்சலாகி விடும். அவளை பார்த்தால், அவருக்கு குஷியாகிவிடும்.

“பாப்பா… ஒரு சூப்பர் பிஸினஸ்டா…” என்று ஆரம்பிப்பார். கொலைவெறியாக அவரைப் பார்ப்பாள் பிரீத்தா. மாதமொருமுறை நடக்கும் வாடிக்கையான நிகழ்ச்சி தான்!

அன்றும் அதே போல ஆரம்பிக்க, அவரிடம் எல்ஐசி டிடியை கையில் கொடுத்து,

“டிடிய பிடிங்க. நாளைக்கு போய் எல்ஐசில கட்டிட்டு வாங்க…” என்று அவர் கையில் திணிக்க, அவரது முகம் வெளிச்சமானது. தொழில் செய்ய, வீட்டை வைத்து எல்ஐசியில் கடன் வாங்கியிருந்தார். தொழிலும் தேறாமல், கடனையும் கட்ட வழியில்லாத போது, ஆபாத்பாந்தவனாக மகள் தானே பொறுப்பை எடுத்துக் கொண்டது.

அதுவரை அவர் வெளியில் வாங்கியிருந்த சில்லறை கடன்களை எல்லாம் அவள் அடைத்துக் கொண்டிருந்த போது, எல்ஐசியில் வாங்கிய கடனுக்கு, அவர்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்துவிட, அவசரமாக அவள் பணிபுரிந்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் கடனை வாங்கி, கட்டினாள். அப்போதிருந்து மாதமானால் தவணையை கட்டுவதும் அவள் தான்.

“சும்மா வராது பணம். ஒரு மாசம் பணம் கட்டலைன்னாலும் கடங்காரன் வீட்டுக்கு வந்துடுவான். இருக்கறதே இது ஒண்ணு தான். இதையும் வெச்சு கடன் வாங்கியாச்சு. இதுல இன்னொரு பிசினஸாம்… ஏன் காலம் முழுக்க நான் கடனை கட்டிக்கிட்டே இருக்கணுமா?” சிறியதாக ஆரம்பித்த குரல், உச்சத்தை எட்ட, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார் சீதாலட்சுமி.

கணவரின் கைங்கர்யம் அவருக்கு தெரியும். சும்மா சத்தம் போட மாட்டாள் மகள்.

“அப்பாவ கெடுக்கறதே நீதாக்கா. கஷ்டமே இல்லாம நீ பணத்தை தூக்கிக் குடுத்தா இப்படித்தான்…” கையில் புத்தகத்தை வைத்தபடி காயத்ரி குரல் கொடுக்க, சீதாலட்சுமிக்கு அவமானமாக இருந்தது. என்ன இருந்தாலும் பிள்ளைகளிடம் இந்த பேச்சை வாங்க வேண்டுமா இந்த மனிதன்?

“பெரியதனமா பேசாத காயத்ரி. ஒழுங்கா படிக்கற வழிய பாரு…” அங்கிருந்தே அவர் குரல் கொடுக்க,

“எது பெரியதனம்? நானும் அக்கா மாதிரி இளிச்சவாயா இருந்தா உனக்கு நல்ல தனமா?” பிரீத்தாவை காட்டி, காயத்ரி கேட்க,

“அடிங்க… என்ன வாய் ரொம்ப ஆடுது?” தோசைத் திருப்பியை திருப்பிக் கொண்டு அவர் வர,

“பின்ன? உன் புருஷன் பண்றதையெல்லாம் எதுவும் கேட்க மாட்ட!? எதுவும் பேசாம வடிச்சு கொட்டுவ!? ஒருத்தர் பண்ற தப்பை எதிர்க்காம மௌனமா இருக்கறதும், அவங்க தப்பு பண்ண துணை போறது மாதிரிதானாம். அக்காவும் பாவம்ன்னு என்னைக்காவது நினைச்சு பார்த்து இருக்கியா?” என்று சீதாலட்சுமியை கேள்வி கேட்ட காயத்ரியை ஆச்சரியமாக பார்த்தாள் பிரீத்தா.

“ஏய் அதிகப்ரசங்கி… சும்மா இருக்க மாட்ட?” பிரீத்தா கோபமாக கூற,

“ஆமா நீ உன் காதை நல்லா காட்டிக்கிட்டு உக்காந்து இரு… இன்னும் நல்லா பெரிய கம்மலா வாங்கி குத்தி விடட்டும்!” என்றவள், எழுந்து தங் தங்கென்று நடந்து அவளது அறைக்குப் போனாள்.

“சின்னக் குட்டி ரொம்ப பெரியவளாகிட்டா லச்சு…” சிலாகித்துக் கொண்டார் மோகன்.

“எல்லாருக்கும் வயசு கூடிக்கிட்டே தான் போகுது. ஆனா உங்களுக்கு மட்டும் கம்மியாகுது…” என்று அங்கிருந்தே இடித்துரைக்க,

“எனக்கு என்னடி கவலை? ஐ ஆம் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆன் தி எர்த்…” என்று இரண்டு கைகளையும் அகல விரித்தபடி கூற,

“எப்படி சாமி உங்களுக்கு கவலை இருக்கும்? சம்பாதிச்சு போட்டு கடனை கட்டி, இன்னொரு புள்ளைய படிக்க வைக்க மூத்த புள்ளை, ஆக்கி போட பொண்டாட்டி… அப்புறம் சந்தோஷத்துக்கு என்ன குறை?”

“ஏன் என் புள்ள தான? யாருக்கு அவ குடுக்கறா? அவளை பெத்தவனுக்கு தான?” அசால்ட்டாக கேட்டார் மோகன்.

“ஆமா அவளுக்கு தலையெழுத்து. உங்களுக்கு சம்பாதிச்சு கொட்டனும்ன்னு?”

“அவ கடமையை அவ செய்யறா. இதுல உனக்கென்ன வந்துது? சும்மா அதையும் இதையும் பேசி புள்ளைய குழப்பாத…” கோபமாக மோகன் கத்த, அறையிலிருந்து காயத்ரி எட்டிப் பார்த்தாள். பெற்றோரது சண்டையை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரீத்தா.

“அப்படீன்னா உங்க கடமை எதுவும் இல்லல்ல?” உச்சஸ்தாயில் சீதாலக்ஷ்மி கேட்க, அவரை முறைத்தார்.

“நான் என்ன செய்யாம விட்டுட்டேன்?” பிரீத்தாவின் தந்தையும் கத்த, அடாவடியாக பேசும் கணவனுக்கு புரிய வைக்க முடியாது என்பதெல்லாம் அவரது கவனத்துக்கு வரவில்லை.

“நீங்க என்ன செஞ்சீங்க?”

“படிக்க வைக்கலையா? உத்தியோகம் வாங்கி தரலையா? நல்லபடியா புள்ளைய வளர்த்து ஆளாக்கலையா? என்ன பண்ணல?” அந்த இரவில் அத்தனை வீட்டுக்கும் கேட்கும்படி மோகன் கத்த, அதற்கும் மேல் சீதாலக்ஷ்மியால் அவரோடு போராட முடியவில்லை. நாலு பேர் வாயில் விழுந்து எழ அவருக்கு பிடிக்காது.

முறைத்தபடி, “எல்லாம் நடந்துச்சு. ஆனா அதுக்கு ஒரு துரும்பு கூட நீங்க கிள்ளி போடல…” என்று கூறியவருக்கு குரல் உடைந்தது. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை, சேலை முந்தானையை வைத்து துடைத்தபடி அவர் சமையலறைக்கு போனார். அவரும் தான் கணவனை கட்டிய நாள் முதலாக பார்க்கிறார். வெற்று ஜம்பத்தை தவிர வேறெதை கண்டிருக்கிறார்? பிள்ளைகளாக எட்டு வைத்து பிழைக்க வேண்டிய நிலைக்கு வைத்திருக்கிறாரே என்ற கோபம்.

மனைவி அழுவதை பார்த்த மோகனுக்கு மனம் தாளவில்லை. அழுதால் இன்னும் ஒரு வாரத்துக்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, அவரது செலவுகளுக்கு பணம் தர மாட்டாளே மனைவி என்ற பயம் தான்.

“லச்சு…” என்றபடி அவர் பின்னாலேயே மோகனும் போக, காயத்ரி தலையிலடித்துக் கொண்டாள்.

நான்கு வார்த்தைகள் நன்றாக பேசிவிட்டால் போதும், தாயாருக்கு கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள தெரியாது என்பதை அவளறிவாள்.

சமாதானப்படுத்தும் படலம் நடந்து கொண்டிருக்கும் போதே, பிரீத்தா கிளம்பிவிட்டாள்.

“ம்மா… நான் கிளம்பறேன்…” என்று குரல் கொடுக்க, அவசரமாக வந்தார் சீதாலக்ஷ்மி.

“நீ இன்னும் சாப்பிடவே இல்ல பாப்பா… இரு ரெண்டு தோசை ஊத்திடறேன்…” என்று அவர் அவசரப்பட, அவரை கையமர்த்தினாள்.

“பஸ்ஸுக்கு டைமாச்சு மா. பஸ் ஸ்டாண்ட்ல ஏதாச்சும் வாங்கிக்கறேன்…” என்று கூற, அவளை முறைத்தார்.

“அதெல்லாம் என்ன எண்ணெய்ல செஞ்சதோ? ஒரு அஞ்சு நிமிஷம் இரு பாப்பா…” என்று கூறியவர், மாவை அடுப்பில் காய்ந்திருந்த கல்லில் ஊற்றினார்.

அதை தான் பத்து வருடமாக உண்கிறேன் என்பதை எப்படி சொல்வது என்று நினைத்துக் கொண்டாள் பிரீத்தா.

“லச்சு…” பின்னால் வந்து நின்ற மோகன், மனைவியின் தோளை பிறாண்ட,

“கொஞ்ச நேரம் இருங்க… புள்ளை கிளம்பறால்ல…”

“புள்ள கிட்ட இருந்து, ஒரு ரெண்டு லட்சம் வாங்கி குடுடி. சூப்பர் இடமொன்னு வருது. அதுல இன்வஸ்ட் பண்ணா எப்படியும் நல்ல அமெளண்ட் தேத்தலாம்…” கண்களில் கனவோடு எங்கோ பார்வையை வைத்தபடி கேட்க, திரும்பி அவரை லச்சு பார்த்த பார்வையில் கோபம் கொப்பளித்தது.

“நீயெல்லாம் மனுஷனா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சமையலறைக்கு வந்த பிரீத்தா, சுட்டு வைத்திருந்த ஒரே தோசையை தட்டில் போட்டு அவசரமாக விழுங்கியவள், தந்தையை பார்த்து,

“நாளைக்கு எல்ஐசிக்கு கட்டிடுங்க…” என்று முடித்துவிட்டு கிளம்பினாள். அவளுக்கும் கேட்டது, தந்தை மனைவியிடம் வைத்த கோரிக்கை. இதற்காகவெல்லாம் டென்ஷனானால் இன்னும் எத்தனை விஷயத்துக்கு டென்ஷனாவது?

“பாப்பா…” அவளது தந்தை இழுக்க, அவரை திரும்பிப் பார்த்து,

“கம்பெனில வாங்கின அஞ்சு லட்சத்துக்கு மாசம் இருபது கட்டறேன். அதுக்கப்புறம், இங்க எல்ஐசிக்கு மாச தவணை பத்தாயிரம். வீட்டு செலவுக்கு இருபதாயிரம் குடுக்கறேன். அதுல நீங்க பண்ற தண்ட செலவும் அடக்கம். மீதி பத்தாயிரத்துல, என்னோட பிஜிக்கு நாலாயிரம். மீதி ஆறாயிரத்தை வெச்சுதான் சாப்பாட்டு செலவு, வந்து போறதுக்கு எல்லாத்துக்கும்… போதுமா?” என்று கேட்டுவிட்டு நகர, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தவர்,

“இரு பாப்பா… வந்துடறேன்…” என்று அவசரமாக சட்டையை எடுத்து மாட்டினார், அவள் வேகமாக ஆட்டோவை பிடிக்கப் போவதை பார்த்து! ஒழுங்காக பஸ் ஏற்றி விடவில்லை என்றால் அவரை ஒரு வழியாக்கி விடுவாறே லச்சு!

ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பிரீத்தா. இப்போது சற்று சுலபமாக சுவாசிக்க முடிந்தது. மாதம் ஒரு முறை தான் திருச்சிக்கு வருவாள். ஆனால் அந்த இரண்டு நாட்கள் கூட இந்த அழுத்தத்தை தாள முடியவில்லை அவளால்! அவளுக்கும் புரிந்திருந்தது. தாயின் மன அழுத்தம். தந்தையின் தாந்தோன்றித்தனத்தையும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. முன்பெல்லாம், கேட்கும் போதெல்லாம் நகைகளை கழற்றி கொடுத்து பழக்கி விட்டுவிட்டார்.

இப்போது பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்ற போதும், எதுவும் செய்யமுடியாமல் இருப்பது அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பது அவளுக்கும் புரிகிறது.

அதனாலேயே பெற்றவளுக்காக எவ்வளவோ பொறுத்துக் கொண்டு போனாள். சென்னையில் தனது செலவுகள் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வாழப் பழகி இருந்தாள். ஆனால் இந்த அழுத்தம்?

நீண்டப் பெருமூச்சை இழுத்து விட்டவள், புஷ் பேக் சீட்டை பின்னால் சாய்த்து விட, அவளது இறுக்கம் இன்னும் கொஞ்சம் தளர்ந்தது.

சீராக மூச்சை இழுத்து விட்டாள்.

‘மியாவ்’ பூனை கத்தியது. அவளது செல்பேசி நோட்டிபிகேஷன்!

எடுத்துப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாமல் புன்னகை!

சசாங்கன் தான், வாட்ஸப் செய்திருந்தான்!

‘இஸ் எவ்ரிதிங் ஓகே?’

‘எஸ்’ என்று டைப் செய்து அனுப்ப,

‘ஸ்டார்டட்?’ கிளம்பி விட்டாளா என்று கேட்க, ‘எலி ஹாஃப் பேண்ட் போட்டுக் கொண்டு போகாதே…’ என்று சிரித்தபடி,

‘எஸ் பாஸ்…’ என்று டைப்பி அனுப்ப, உடனே அழைத்தான்.

“சொல்லுங்க பாஸ்…” என்றாள், உடனே அழைப்பை எடுத்து!

“எதுவும் பிரச்சனை இல்லல்ல?” பார்க்க வந்தது பெற்றோரை… எதுவும் பிரச்சனை இல்லையே என்று கேட்கிறான். என்ன செய்வது?

“பிரச்சனை நம்மள பார்த்தா துண்டை காணோம், துணியக் காணோம்ன்னு ஓடிடும் பாஸ்…” என்று சிரிக்க,

“ஷப்பா… இப்பத்தான் நிம்மதியா இருக்கு…” அவனும் சிரிக்க,

“பாஸ் உங்க நிம்மதி எதுக்குன்னு சொல்லட்டா?” என்று கேலியாக இவள் கேட்க,

“சொல்லு…”

“ஏதாவது பிரச்சனை ஆகிட்டா எங்கடா லீவ போட்டுவாளோ? உங்க வேலை கேட்டுடுமோன்னு தான பயப்படுறீங்க?” என்று சிரித்தபடியே கூறினாள். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை.

“சென்ட் பர்சண்ட்…” என்று சிரித்தவன், “நாளைக்கு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு ப்ரீத்தி. ஹைதராபாத் போறேன். நீலாங்கரை சைட் இன்ஸ்பக்ஷன பார்த்துக்க…” என்று கூற, ஹைதராபாத் எனும் போதே அவளது புன்னகை விரிந்தது.

“ஆல் தி பெஸ்ட் பாஸ்…”

“இப்ப எதுக்கு ஆல் தி பெஸ்ட்? நான் என்ன போருக்கா போறேன்?” சின்ன புன்னகையோடு அவன் கேட்க,

“ஏதோ விஷ் பண்ணிட்டேன் பாஸ். இந்த சின்ன புள்ளைய மன்னிச்சூ… ப்ளீஸ்…”

“இப்ப எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்…”

“பாஸ்… சின்னப்புள்ளத்தனமா இருக்கக் கூடாது…”

“அதெல்லாம் முடியாது. சொல்லப் போறியா இல்லையா?”

“பாஸ்… ஹைதராபாத்னா மேடமோட தானே போவீங்க… அதான் இந்த சின்னப் புள்ள தெரியாத்தனமா விஷ் பண்ணிடுச்சுன்னு விடுவீங்களா… அதையே புடிச்சுட்டு தொங்கறீங்க?” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, “டார்லிங்… இந்த நேரத்துல யாரோட பேசிட்டு இருக்கீங்க?” யாரோ சிணுங்குவது கேட்க, ப்ரீத்தா சங்கடமாக காதிலிருந்து ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.

“ஓகே ப்ரீத்தா. நாளைக்கு நான் அன்அவைலபில். டாஸ்க் எல்லாம் உனக்கு மெயில் பண்ணிருக்கேன். டேக் கேர்…” என்று அவசரமாக முடிக்க,

“யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு கேக்கறேன்ல…” என்று அவள் குரலை சற்று உயர்த்துவது கேட்டது!

அந்த இரவு வேளையில், பாஸுடன் இருப்பது யாரென அவளுக்கும் தெரியும். சசாங்கனிடம் எந்தவொரு குறையும் காணவியலாது! முழுமையான ஆண்மகன்! பிஸினஸில் எப்படியோ… அவளைப் பொறுத்தவரை அவன் நல்லவனே! ஆனால் இது மட்டும் எப்படி என்று மண்டைக்குள் ஏதோ பிறாண்டியது!

“ஓகே பாஸ்…” என்றபடி பேசியை வைத்தவள் தான், இப்போது நீலாங்கரை சைட்டில் வெயிலில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தாள்.

அப்போது பிரீத்தாவிடம் அவசரமாக பேசிவிட்டு பேசியை வைத்தவனை இன்னும் அவசரமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகை! தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் இன்னும் ஹிந்தியில் கூட நடித்திருக்கிறாள் அவள். அவளது மிக முக்கியமான தகுதி என்னவென்றால், சசாங்கனின் காதலி! அவனை அவளது கை பொம்மையாக்கி, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் நில்லென்றால் நிற்பான். உட்கார் என்றால் உட்காருவான். ஸ்வேதாவின் மேல் அளவு கடந்த பியார், பிரேமா, காதல் அவனுக்கு. அவள் என்ன செய்தாலும் அதை ரசிப்பான். ஆராதிப்பான். அவனது அந்த ஆராதனையை மனம் உருகி ரசிப்பாள் ஸ்வேதா.

தன்னை போன்ற அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இல்லை என்பதில் சந்தேகமேயில்லை அவளுக்கு, அவளைக் காட்டிலும் அவனுக்கு அந்த எண்ணமுண்டு!

அதனாலேயே நிறைய ப்ராஜக்ட்களில் அவளும் பங்குதாரர். அவள் கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டிக் கொண்டிருக்கும் ஹோட்டலுக்கு இவன் பங்குதாரர். ஆக பின்னிப் பிணைந்திருக்கும் உறவு அவர்களுடையது.

அது போலவே அவனைப் பின்னிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா!

அவளுக்குள் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தான் சசாங்கன்!