kalangalil aval vasantham 2(1)

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு

சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் நடப்பதுமாய் இருக்க, அந்த பிரதேசமே அவ்வளவு அமைதியாக இருந்தது.

சித்திரை மாத காலை நேரம், சூரியன் எழும் போதே சூடாக எழுவானாக இருக்குமோ? சுற்றிலும் அத்தனை மரங்கள் சூழ்ந்த நந்தவனத்துக்குள் இருந்தாலும் மாதேஸ்வரனுக்கு சற்று வியர்த்தது.

காலை வாக்கிங்கை முடித்த பின் அத்தனை செடிகளுக்கும் அவராக தண்ணீர் ஊற்றினால் தான் நிம்மதி. லூசாக பெர்முடாஸும் பனியனும், காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவுமாக ஐந்து மணிக்கு கிளம்பினாரென்றால், ஆறு மணிக்கு வீட்டிலிருப்பார்.

சமையலுக்கு இருக்கும் வாசு போட்டுக் கொடுக்கும் சூப்பை குடித்து விட்டு அடுத்த ஒரு மணி நேரம் தோட்டத்தில் தான் இருப்பார். அவருக்கு அவரது கையால் அத்தனை செடிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அவரது ஸ்ரீமதி இருந்த போது இந்த நிகழ்வுகளில் எல்லாம் உடன் அவரும் இருப்பார். இருவருமாக வாக்கிங் சென்று, இருவருமாக ஒன்றாக சூப்பை அருந்தி, இருவருமாக தோட்டத்தில் ஒவ்வொரு செடியையும் கொஞ்சி, கெஞ்சி வளர்த்தெடுப்பார்கள்.

ஸ்ரீமதி போன பின் சசாங்கன் இருந்தாலும் அவருக்கு தனிமை தான் துணை!

அந்த செடிகளோடு பேசுவார், தன்னுடைய மனக் கஷ்டத்தை எல்லாம் அவைகளிடம் தான் கூறுவார், சொல்லப் போனால் புலம்புவார். அவரது மன உணர்வுகளை அந்த தோட்டம் மட்டுமே அறியும்.

பேசலாம், மூத்த பெண்ணிடம் நன்றாகவே பேசலாம். ஆனால் சசாங்கனின் ஒரு சில செயல்பாடுகள் பற்றி அவளிடம் கூட கூற முடியாது.

அறுபத்தி ஐந்து வயது என்பது தள்ளாத வயதில்லை தான். ஆனாலும், மனதில் சொல்ல முடியாத துயரம். துணையை இழத்தல் என்பது எந்த வயதிலும் வேதனை தான். அதிலும் துணைத் தேவைப்படும் இந்த முதுமைப் பருவத்தில் அத்துணையை இழப்பது என்பது தாள முடியாத துயர். உடனிருந்த வரை மனைவியின் அருமையை அறியவில்லை. அவரைப் பற்றிப் புரிந்து கொண்டதில்லை. கூடவே தானே இருக்கிறாள், அவளுக்கென என்ன ஆசைகள் தனியாக இருந்துவிடக் கூடும் என்ற சராசரி ஆண்மகனின் மனநிலை தான்.

ஆனால் அவர் சட்டென மீளாவுறக்கம் கொண்ட போது தான், வாழ்க்கையில் தனக்கு அடுத்தது என்ன என்று கூட யோசிக்கத் தெரியாது என்பது மாதேஸ்வரனுக்கு உரைத்தது. ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஸ்ரீமதியின் யோசனை இருக்கும். மாதேஸ்வரன், மனைவி சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்க மாட்டார். ஆனால் ஸ்ரீமதி சொல்வதை தான் செய்திருப்பார்.

அது அனிச்சை செயல். இருவரும் ஒருவராக வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் அது, தன்னடையாளம் துறத்தல் என்பது! அது தவறல்ல… மனைவியாக இருந்தாலும், கணவனாக இருந்தாலும் அது வரம்!

அப்படியொரு சகாயமான நிலையிலிருந்தவருக்கு மனைவியின் இழப்பு என்பதன் தாக்கத்தை அவர் போன பின் தான் உணர்ந்தார். இவ்வளவு தூரம் ஸ்ரீமதி தனக்குள் நிறைந்திருந்து இருந்தார் என்பதை அவர் போன பின் உணர்ந்தாலும், அது மன நிறைவான வலி!

வலிகளை அனுபவிப்பதிலும் ஒரு சுகமுண்டு! அந்த சுகத்தை சற்று அதிகமாக பழக்கிக் கொண்டால் அது தன்னிரக்கமுமாகிவிடும் அபாயமுண்டு!

அதனாலேயே, ஸ்ரீமதி சொல்லிக் கொடுத்த வாழ்க்கை நிரலை இப்போதும் அவர் மாற்றவில்லை. இன்றும் ஒவ்வொன்றும் அவர் திட்டமிட்டுக் கொடுத்தது.

அதுவுமில்லாமல் மூத்த பெண் வைஷ்ணவி அவரது வீட்டுக்கு அருகேயே வந்துவிட, அவரது தனிமை பாரம் வெகுவாக நீங்கியது. காலை ஏழு மணியானால் பேரன், வைபவ் எழுந்தவுடன், தாத்தாவை காணத்தான் வருவான்.

‘தாத்தா…’ என்று வரும் போதே கத்திக் கொண்டு, மாதேஸ்வரன் மேல் வந்து விழுந்தால் தான், அவனுக்கும் திருப்தி, மாதேஸ்வரனுக்கும் திருப்தி.

அவன் வருவதற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும், பேரனுக்கு என்னவாயிற்றோ என்று மனம் கிடந்து தவிக்கும். ஒருவேளை இரவு காய்ச்சல் எதுவும் வந்து விட்டதோ, சளியோ என்று விதவிதமாக யோசிக்கத் துவங்கி விடுவார்.

இப்போதும் அப்படித்தான், கையில் தண்ணீர் பைப்போடு, திறந்திருந்த கேட்டை ஒரு பார்வை, செடிகளை மறுபார்வை என்று பார்த்தபடியிருந்தார் மாதேஸ்வரன்.

“தாத்தா….” என்று கத்தியபடியே கேட்டை தள்ளிக் கொண்டு வைபவ் அவரை நோக்கி ஓடி வந்தான்.

“அச்சோ தங்கக் குட்டி….” ஓடிவந்து தன் மேல் விழப் பார்த்த வைபவை அப்படியே தன் மேல் தாங்கி தூக்கிக் கொண்டார் மாதேஸ்வரன்.

“தாத்தா நான் வாட்டர் விடறேன்…” அவர் செம்பருத்தி செடியின் மேல் போட்டிருந்த பைப்பை எடுக்க முயல,

“அதை அப்புறம் பண்ணலாம். இப்ப ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா?” என்று பேசியபடியே உள்ளேக் கூட்டி சென்றார்.

அருகிலேயே இருப்பதால் பள்ளி கிளம்பவும் அங்கு தான் வருவான். பள்ளி விட்டப் பின்பும் அங்கு தானிருப்பான். வைஷ்ணவிக்கும் அதுவே வசதியாக இருந்தது. முன்பு மாமியாரின் வீட்டிலிருந்த போதும் கூட அடிக்கொருமுறை அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். ரவிச்சந்திரன் அவளது எந்த ஆசைக்கும் தடை கூறியதில்லை. எள் என்பதற்கு முன் எண்ணெயாக இருப்பான்.

தாத்தாவும் பேரனும் செல்லம் கொஞ்சிக் கொண்டே உள்ளே போக, அவனது பைகளை தூக்கிக் கொண்டு வந்தாள் வைஷ்ணவி.

“டேய்… உன்னோட பேகை தூக்கிட்டு வர வேண்டியதுதான?” பல்லைக் கடித்துக் கொண்டு வைஷ்ணவி மகனை திட்ட,

“விடு வைஷு… குழந்தைய திட்டாத…” அவளது தந்தை, வைபவ்வை கொஞ்சிக் கொண்டே கூற,

“ப்பா… நீங்க இதுல நுழையாதீங்க… இப்ப இருந்தே கண்ட்ரோலா இருந்தாதான் உண்டு… இல்லைன்னா இவன் மாமா மாதிரிதான்…” என்று ஆரம்பித்துவிட்டு நாவைக் கடித்தபடி நிறுத்த, அவரது முகம் அவமானத்தில் குன்றிப் போனது.

அதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பரிதாபமாக இருந்தது. அவள் அப்படி சொல்ல நினைக்கவில்லை. அவளையும் அறியாமல் வந்துவிட்ட வார்த்தையது. சொல்லப் போனால் சகோதரனை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிப்பவள் அவள்.

முந்தைய தினம் கூட ரவிச்சந்திரன் கூறியதை நினைத்தால் மனதைப் பிசைகிறது!

“வைஷு… ஒரு நியூஸ் தெரியுமா?” என்று அவன் ஆரம்பித்தபோதே திக்கென்று இருந்தது. கம்பியூட்டரில் தந்தையின் ஆண்டுக் கணக்கு வழக்கை சரி பார்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்து,

“என்னங்க?”

உள்ளுக்குள் ஏதோவொன்று சொன்னது, எதுவோ தவறாக இருக்கிறதே என!

“நந்து லீலா பேலஸ் போயிருக்கான் போல…” என்று அவன் இழுத்தான். நந்தகுமார் அவன் நண்பன்!

“ம்ம்…”

“அங்க உன் தம்பியும் வந்திருந்தான் போல…”

“ம்ம்…”

“ஃபுல் தண்ணி… செம ஆட்டமாம்…” என்று அவன் இயல்பாக கூற, டைப்படித்துக் கொண்டிருந்த கை அப்படியே நின்றது.

“ம்ம்…”

“கூட யாருங்க்ற?” சிறிய நக்கல் சிரிப்போடு கேட்க,

“ம்ம்… யாரு?” பதிலை அவள் ஊகித்து இருந்தாள்.

“அழகே பொறாமை கொள்ளும் பேரழகி. சௌத் இந்தியாவோட சூப்பர் ஸ்டார். அப்படித்தான அவ சொல்லிக்குவா…” சொல்லும் போதே அவனது குரலில் அவ்வளவு கசப்பு மண்டிக் கிடப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் இவளெதுவும் பேசவில்லை. அவள் ஸ்வேதா தான். அவளைப் பற்றிதான் அவன் இவ்வளவும் கூறுவது.

“என்ன வைஷு எதுவும் பேச மாட்டேங்கற?” சற்று கோபமாக ரவி கேட்க,

“என்ன பேசறது?” அவளுக்கு தலையிறக்கமாக இருந்தது. தாய் இருந்திருந்தால் இப்படி கெட்டு குட்டி சுவராக போயிருப்பானா? ஸ்வேதா தான் நெருங்கி இருக்க முடியுமா?

ரவியின் தந்தை கூட படத் தயாரிப்பாளர் தான். அவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் மணம். ஆனால் இதுவரை ஒரு சிறு தவறையாவது ரவியிடம் காண முடியுமா? இல்லவே இல்லையே!

தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும், சினிமா துறையில் எவ்வளவு கெட்டுப் போக வாய்ப்பிருந்தாலும், அவற்றிலெல்லாம் சற்றும் மனம் போனதில்லை அவனுக்கு. ஆனால் தன்னுடைய தம்பி மட்டும் எப்படி இப்படி ஆனான் என்பது அவளுக்கு மிகப் பெரிய கேள்விக் குறியாக இருந்தது.

அப்போதும் அதே எண்ணத்தோடு தான் தந்தையிடம் பேசி இருப்பாள் போல, மனதுக்குள்ளிருந்தது வெளிவரவும் அவளுக்கே சங்கடமாக இருந்தது.

இத்தனைக்கும் ரவி எவ்வளவோ கூறியிருந்தான். ‘தயவு பண்ணி மாமா கிட்ட மட்டும் இந்த விஷயத்தை பற்றி பேசிடாதே… அவருக்கு பிபி சுகர்ன்னு எல்லாம் இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணாகிட போகுது வைஷு…” என்று கூறிவற்றை மறந்து உளறி விட்டோமே என்று தலையிலடித்துக் கொண்டாள்.

இப்போது தந்தையின் மன ஆறுதல் தான் முக்கியமென்று தோன்றியது.

“விடுங்கப்பா… அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல…” என்று தந்தையின் தோளை தொட்டு உலுக்க, சிலையாக நின்றிருந்தவருக்கு உயிர் வந்தது.

அவரது மனமெங்கும் ரணம்!

“புரியுது வைஷு… விடு…” என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு,

“நேத்து நைட் தான் வந்தான் மா…” சற்று குரலை கீழிறக்கிக் கூற,

“தாத்தா என்ன சொல்றீங்க?” அவரையே கவனித்துக் கொண்டு தாயிடம் உணவை வாங்கியபடி இருந்த வைபவ் கேட்க,

‘சுப் ரஹோ வைபவ்… பெரியவங்க பேச்சு சின்னவங்களுக்கு எதுக்கு?” என்று அவனை அதட்ட,

“பெரியவங்க சின்னத்தனமா நடந்துக்கிட்டா, சின்னவங்க பெரியவங்க பேச்சு பேசத்தான் செய்வாங்கமா…” கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ரவி, சுருக்கமாக ரவிச்சந்திரன்.

தமிழகத்தின் மிக முக்கியமான சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் மகன். ஒற்றை மகனாக இருந்தாலும், மனைவியின் மன நிம்மதிக்காக அவளது தந்தை வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு பார்த்து வருமளவு மனைவி மேல் பிரியம் கொண்டவன்.

அதற்காக தாய் தந்தையை விட்டு விடவும் மாட்டான். வாரமொருமுறை அங்கும் போய்விடுவான். வைபவ்வும் குதியாட்டம் போட்டுக் கொண்டு போவான். அந்த தாத்தாவும் நிறைய வாங்கி தருபவர் என்பதால் வைபவ்வுக்கு அலாதி ஆனந்தம்! அவ்வாறு போகும் போது தான் மாதேஸ்வரன் தவித்துப் போய்விடுவார். பேரன் இருக்கும் போது இருக்கும் உற்சாகம் அவனில்லாவிட்டால் இருப்பதில்லை. அதுவும் இப்போதெல்லாம் அவருக்கு எதிலும் நாட்டமில்லை.

சசாங்கனின் செயல்பாடுகள் அவரை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது. ஒற்றை மகன். தனக்குப் பிறகு அனைத்தையும் ஆள வேண்டியவன். இப்படி வீணாக போய்க் கொண்டிருக்கிறானே என்ற வேதனை அவரை தின்றுத் தீர்த்துக் கொண்டிருந்தது.

இதில் மருமகன் ரவிச்சந்திரன் மட்டுமே அவரது ஆறுதல்!

ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வதிலிருந்து, ஒவ்வொரு நிமிடமும் ஆறுதலாக கூடவே இருப்பது வரை!

அந்த வகையில் அவர் குடுத்து வைத்தவர்.

தேடிப் பிடித்திருந்தாலும் இப்படியொரு மருமகனை கண்டிருக்க முடியாது.

 

 

error: Content is protected !!