kalangalil aval vasantham 2(2)

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை பொறுத்தவரை சசாங்கன் தான் அவருக்கு அனைத்துமாக இருந்தவன். மகனை விட்டுத் தரவே மாட்டார். அதனால் தானோ அவர் போன பின்பு, தன் வாழ்வை மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் சசாங்கன்.

கண்களில் லேசாக ஈரம் படர, ரவியை நோக்கி,

“வாங்க மாப்பிள்ளை…” என்றழைக்க, அவன் மாதேஸ்வரனை பார்த்து புன்னகைத்தான்.

“எப்படி மாமா இருக்கீங்க. நைட் நல்லா தூக்கம் வந்துதா?” எப்போதும் போல கேட்க,

“உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு மாப்பிள்ளை… மனசுல தான் வேதனை… நேத்து ரெண்டு தூக்க மாத்திரை போட்டேன். ஆனாலும் மூணு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு. சும்மா முழிச்சுட்டு இருக்கும் போதெல்லாம் இந்த பையனை நினைச்சா அவ்வளவு துக்கமா இருக்கு…”

மாப்பிள்ளையின் முகத்தை பார்க்கும் போதே, அவருக்கு அத்தனையும் கொட்டிவிட வேண்டும். புருவத்தை நெரித்தபடி தந்தையை பார்த்தாள் வைஷ்ணவி. அவளிடம் கூட சரியாக பேச மாட்டார். ஆனால் ரவியிடம் மொத்தமாக கொட்டி விடுவார்.

ரவியிடம் கொட்டுவதில் அவளுக்கொன்றும் பிரச்சனையில்லை. ஆனால் எல்லா கணவர்களை போலவும், ஏதாவது பிரச்சனை என்றால் சசாங்கனை இணை கூட்டி வைத்து பேசாமலிருக்க மாட்டான். என்னதான் இருந்தாலும் தம்பியை சொல்லும் போது அவளுக்குப் பற்றிக் கொண்டு வரும். அவன் எவ்வளவு தான் தவறுகள் செய்தாலும், அவளது உடன்பிறப்பு! அது மாறாது… அதை அவன் புரிந்து கொள்ள மாட்டான்.

அவன் நல்லவன் தான். ஆனால் அதே போல சசாங்கனும் இருக்க வேண்டுமென நினைப்பது எப்படி சாத்தியமாகும்?

“மாப்ள நைட்டு தான் வந்தாரு போல இருக்கே…”

“ம்ம்… ஆமா மாப்ள…” சொல்லும்போதே குரல் கமறியது.

“பத்து நாளா அவ கூட தான் மாமா இருந்திருக்காரு சார்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற, மாதேஸ்வரனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததுதான். ஆனால் ரவியின் வாயிலாக அதை கேட்கும் போது தலையிறக்கமாக இருந்தது.

“வரும் போது கூட முழு போதைல தான் இருந்தான் வைஷும்மா…” மகளிடம் கூறுவதைப் போல மெல்லிய குரலில் கூற,

“அதுதான் எப்பவும் நடக்கறதாச்சே…” ரவிதான்!

ரவியும் மது அருந்துவான். ஆனால் எப்போதும் கட்டுபாடு இருக்கும். சோசியல் ட்ரிங் என்பதைப் போல மட்டுமே. அதை வாடிக்கையாக கொண்டதில்லை. ஆனால் சசாங்கன் இப்போதெல்லாம் இரவானால் மதுவில் மிதந்து கொண்டே இருப்பதாக கேள்விப்படவும், அதையும் வைஷ்ணவியிடம் கூறியிருந்தான். அது அவள் வாயிலாக முன்னரே மாதேஸ்வரனுக்கு வந்து சேர்ந்திருந்தது. சொல்லக் கூடாது என்று நினைத்தாலும் அவளால் சொல்லாமலிருக்க முடியாது.

“அப்பா… எல்லாம் சரியாகிடுவான் ப்பா…” குரல் கமற கூறியவளுக்கு தந்தையைப் பார்க்கும் போது மனம் ஆறவில்லை.

எப்பேர்ப்பட்ட மனிதர். எவ்வளவு பெரிய பிசினஸ்மேன். சர்க்கரை ஆலை, இரும்பு உருக்காலை என எத்தனை வியாபாரங்களின் தலைவர் அவர்! அத்தனையும் தாயார் இருந்தவரை மட்டும்! இப்போது அனைத்துக்கும் ஒவ்வொரு தலைமையை நியமித்து விட்டு, மகனின் பொறுப்பற்ற தன்மையால் அனைத்திலுமிருந்து ஒதுங்கி இருக்கிறார்! தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதன் பொறுப்பை மட்டும் தான் இப்போதைக்கு சுமக்கிறார்.

அத்தனைக்கும் காரணம் சசாங்கன்… அவனது செயல்பாடுகள்! ஆனால் இப்படி இருந்தவனல்ல அவளது சகோதரன். ஆனாலும் காலம் நேரம், அவனை ஆட்டி வைக்கிறது போல… அதனாலேயே வைஷ்ணவியால் சகோதரனை விட்டுக் கொடுக்க முடியாது.

தாத்தா வகையில் வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மட்டும் சசாங்கன் பார்த்துக் கொள்கிறான். மாதேஸ்வரன் வகையில் வரும் எதையும் அவன் தொடுவதில்லை. கண்டுகொள்வதில்லை. ஏன் இந்த மாற்றம்? தாய் இருந்தமட்டும் நன்றாக இருந்தவன் தானே?

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பாட மட்டும் தான் செய்ததில்லை. மற்றபடி, அவர்களது குடும்பத்தை போல வருமா?

ஒரு வீட்டில் பொறுப்புக்கு பெண் இல்லையென்றால் அந்த வீடு வீடாக இருப்பதில்லை. அதை நிதர்சனமாக உணர்ந்தாள் வைஷ்ணவி.

அதிலும் ரவி, வைபவ் முன்னரே சகோதரனை பற்றி பேச ஆரம்பித்ததை பார்த்தவளுக்கு கோபம் வந்தது.

“ரவி… பையன் இருக்கான்… இப்ப இந்த பேச்சு தேவையா?” கடுப்பாக கேட்க,

“ஏன், அவனும் தெரிஞ்சுக்கட்டுமே… எப்படி இருக்கக் கூடாதுன்னு…” சூடாக பதில் கொடுத்தான்.

“அதெல்லாம் தெரிஞ்சுக்க இன்னும் வயசிருக்கு. என் தம்பி நாளைக்கே நல்லபடியா மாறிடுவான். கண்டிப்பா மாறிடுவான். அவன் ஒண்ணும் சின்ன வயசுல இருந்து இப்படியில்ல. அவ்வளவு நல்ல பையனா இருந்தவன். சேர்க்கை சரியில்லை. அவ்வளவுதான். அதுக்காக அவனைப் பத்தி வைபவ் தப்பா நினைக்கணுமா? அதுக்கு நான் அலோ பண்ண முடியாது…” அழுத்தமாக கூறிய வைஷ்ணவியை கூர்மையாக பார்த்தவன்,

“நீ சொல்றதும் சரிதான் வைஷு…” என்று ஒப்புக் கொள்ள, மெல்லிய புன்னகை படர்ந்தது அவளது முகத்தில். இதுதான் ரவி. தான் கூறியது தவறென்றால் உடனே ஒப்புக் கொள்வான். அந்த மனம் இருந்தது.

ஆனால் மாதேஸ்வரனுக்குத்தான் அவமானமாக இருந்தது. வீட்டு மாப்பிள்ளையின் முன் இப்படி?!

“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” வாஞ்சையாக அவன் கேட்க, விட்டால் அழுதுவிடுவார் போல… குனிந்தபடி தலையைப் பிடித்துக் கொண்டார்.

“அப்பா… மொதல்ல நீங்க எழுந்துக்கங்க… போய் குளிச்சுட்டு வாங்கப்பா…” வைஷ்ணவி மாதேஸ்வரனை எழுப்பி விட, அவருக்கும் அதுதான் சரியென்று பட்டது.

“ஆமா மாமா… இதையெல்லாம் விடுங்க…” என்று அவரது மனநிலையை மாற்ற முயன்றவன், “இந்த டி20 க்கு டீம் செலக்ஷனுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” என்று கேட்க, மாதேஸ்வரனின் முகம் பல்ப் போட்டதை போல வெளிச்சமானது.

அந்த வருட டி20 க்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தது. ஆனால் அதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். மாதேஸ்வரனுக்கு கிரிக்கெட் மேல் பைத்தியம் என்பதை தாண்டி வெறித்தனமே உண்டு. சிறு வயதில் அவர் கிரிக்கெட் வெறியர். அவரது இளமைப் பருவத்தில் கிரிக்கெட்டுக்கு தனியான ஒரு இடம் உண்டு.

எல்லாவற்றிலுமிருந்து தள்ளி ஒதுங்கி இருக்கும் இந்த நாட்களில் கூட கிரிக்கெட் அவருக்கு விருப்பமான விளையாட்டு. 1932 இல் தமிழகத்தில் கிரிக்கெட் வாரியம் அமைந்த காலம் தொட்டு அதில் இவர்களது குடும்பத்தின் ஆதிக்கம் உண்டு. அவை அனைத்தும் சற்று வெளியிலிருந்து ஆதரவை கொடுத்த வகையே. ஆனால் மாதேஸ்வரன் அப்படி அல்ல. மிக தீவிரமாக பங்கு கொண்டார். தமிழக கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல… வட இந்தியர்கள் கோலோச்சும் இந்தியா கிரிக்கெட் வாரியத்திலும் இவரது கொடி தான் பறந்து கொண்டிருந்தது.

சுழற்சி முறையில் வரும் போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்போதும் மாதேஸ்வரன் சொல்வதுதான் அங்கு வேதம். எத்தனையோ அரசியல் நடந்தாலும், அதை தாண்டி ராஜபாட்டை போட அவருக்கு தெரியும்.

ஆனால் மாதேஸ்வரனுக்கு பின் மகன் இவற்றை தூக்கிப் பிடிப்பானா என்ற கவலையும் உண்டு அவருக்கு! ஆனால் மகள், மருமகன் வகையில் அவர் கொடுத்து வைத்தவர் என்று எவ்வளவோ முறை எண்ணியிருக்கிறார்.

இவரை விடவும் கிரிக்கெட்டிலும், வாரியத்திலும் அதிக ஆர்வம் ரவிக்கு உண்டு. அதன் மதிப்பும் மரியாதையையும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன். சொல்லப் போனால், வைஷ்ணவி ரவியை சந்தித்ததே ஷட்டில் கிரவுண்டில் தான். விளையாட்டு மட்டுமே இருவருக்கும் பொதுவானது. அந்த ஆர்வம் மற்றவற்றிலும் தொடர, இருவரது வாழ்க்கையும் ஒன்றாக பிணைக்கப்பட்டு விட்டது.

ரவி, டி20 மேட்ச் பற்றி பேச்சை எடுக்க, மடை திறந்த வெள்ளமாக, கவலைகளை மறந்து பேசத் துவங்கினார் மாதேஸ்வரன். வைபவ் பள்ளிக்கு கிளம்ப வைஷ்ணவியை படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தாள் அவள்!

அவர் ஆர்வமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் சசாங்கன்!

மாமன் வருவதை பார்த்த வைபவ்வுக்கு உற்சாகம் பீறிட்டது.

“மாமாஆஆஆ….” என்று கத்தியபடி அவனை நோக்கிப் போனவனை அதே வேகத்தில், “ஹேய் கேப்டன்…” என்று  சிரிப்போடு ஓடி வந்த சசாங்கன், அவனை அப்படியே கையிலேந்தி, ஏந்திய வேகத்தில் தலைக்கு மேல் தூக்கிப் போட்டு பிடிக்க, வாய் நிறைய பல்லாக சிரித்தான் வைபவ்.

அனைவரையும் விட மாமன் சசாங்கனின் மேல் உயிராக இருந்தான் வைபவ். ஆனால் இப்போதெல்லாம் அதிகமாக மாமாவை காண முடியாததால், இப்போது பார்த்த மகிழ்ச்சியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“டேய் பார்த்துடா… பார்த்து…” மகனது சட்டை கசங்கி விடும் என்ற எண்ணம் தோன்றினாலும், இது அபூர்வம், இந்த நிலை, இந்த புன்னகை, இந்த சசாங்கன்!

“நான் இருக்கேன்ல… என்னோட கேப்டனை நான் விட்டுடுவேனா?” என்றபடி, அவனுக்கு கிச்சு கிச்சு மூட்ட, சசாங்கனின் கைகளை எடுத்து விட்டபடி கத்திக் கொண்டே சிரித்தான் வைபவ்.

இருவரும் விளையாடுவதை ரசித்துப் பார்த்தார் மாதேஸ்வரன்.

‘இவன் இப்படியே எல்லோரிடமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ தகப்பனாக அவர் மனம் ஏங்கியது. ஸ்ரீமதி இறந்த பின் இருவருக்கும் பெரும் இடைவெளி விழுந்து விட்டதை அவர் மனம் உணர்ந்தது. ஆனால் எப்படி அது உருவானது என்றே அவர் அறியவில்லை.

“எப்ப வந்த ஷான்?”

“உங்களுக்கு தெரியாம நான் வர முடியுமா மாமா?” வைபவ்வை துரத்திப் பிடித்தபடியே கூறியவன், சற்று நின்று, சிறிதாக புன்னகைத்தபடி, “வாங்க மாமா…” என்று கூற,

“இதுக்கு நீ வான்னு கூப்பிடாமையே இருக்கலாம் மாப்ள…” என்று சிரித்தான் ரவி.

“இருக்கலாம் தான். ஆனா அக்கா இருக்காளே. அவளுக்காகவாவது கூப்பிட்டுத்தானே ஆகணும்…” என்றவன், தப்பிக்கப் போன வைபவ்வை வாரியெடுத்துக் கொண்டான்.

“எங்கடா தப்பிச்சு ஓடற?” என்றபடி மீண்டும் அவனுக்கு கிச்சுக்கிச்சு மூட்ட, அவனிடமிருந்து தப்பிக்கப் பார்க்க, அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“மாமா… மாமா… ப்ளீஸ்…” என்று கெஞ்சியபடியே வைபவ் சிரிக்க,

“சார் கொஞ்சி முடிச்சாச்சா? அவனுக்கு லேட் ஆகுது…” என்று அவனுக்கு முன்னால் வந்து நின்ற வைஷ்ணவி இடுப்பில் கைவைத்தபடி முறைக்க,

“கெடாக்குட்டி…” என்று இறுக்கி அணைத்து முத்தமிட்டப் பின் அவனை விடுவித்தவன், “உன் பையன் என் மேல மூச்சா போய்ட்டான்… அவனை என்னன்னு கேளு…” தமக்கையை பார்த்து சிரிக்காமல் சசாங்கன் கூற,

“மா… மாமா பொய் சொல்றான்… அவனை நம்பாத…” என்று வீறிட்டான் வைபவ்.

“அடேய்… அவன் இவன்னா சொல்ற…” என்று வைபவ்வை பிடிக்க ஓடி வந்தவனுக்கு சிக்காமல் அவனுக்கு அழகு காட்டிவிட்டு ஓடினான் அந்த திருடன்.

“இருடா… சாய்ந்தரம் இங்க தான வருவ? அப்ப உனக்கு இருக்குடிய்யே…” என்று மிரட்ட, வைபவ் வேண்டுமென்றே இடுப்பை மட்டும் பின்னால் தூக்கி ஆட்டிக் காட்டிவிட்டு சிரித்தபடி காரில் ஏற,

“வானரம்…” என்று சிரித்தபடி உள்ளே வர, இந்த காட்சிகளை எல்லாம் ஆனந்தமாக கண்டுகொண்டிருந்த மாதேஸ்வரன் அப்படியே அமர்ந்திருந்தார்.

“உப்ப்…” என்றபடி அந்த சோபாவில் சரிந்தான் சசாங்கன்.

“ஷான்… என்ன டிஃபன் செய்றதுன்னு வாசு கேக்கறார்டா…” என்ற தமக்கையை பார்த்து,

“எதுன்னாலும் ஓகே கா… நீயே சொல்லு…” என்று கூற,

“வாசுவ பால் கொலுக்கட்டை செய்ய சொல்லு வைஷு…” மாதேஸ்வரன் ஆதூரமாக கூறினார். சசாங்கனுக்கு மிகவும் பிடித்தது பால் கொலுக்கட்டை.

“வேண்டாம்…” என்றான் நிர்தாட்சன்யமாக!

“ஷான்…” தவிப்பாக அழைத்த தமக்கையை பார்த்து கசப்பாக புன்னகைத்தவன், முகத்தை அழுத்தமாக தேய்த்து விட்டுக் கொண்டான்.

“இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற ஷான்?” ரவி காரமாக கேட்க,

“அதை நீங்க தான் டிசைட் பண்ணனும் மாமா…” இயல்பாக கூறுவதைப் போல தோன்றினாலும் அவ்வளவு கசப்பாக இருந்தது.

“கல்யாணாம் பண்ணாம இப்படி அவ கூட இருக்கியே… இது உனக்கே நல்லா இருக்கா?” மாதேஸ்வரன் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க, ரவி தான் கேட்டான்.

“நல்லா தான் இருக்கு மாமா… நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்…” என்று சிரித்தான்.

“கன்றாவியா இருக்கு ஷான்…” வைஷ்ணவி அவளது பங்குக்கு கொதித்தாள்.

“உனக்கு அப்படி இருக்குன்னா நான் என்ன பண்ண முடியும்?” அலட்சியமாக தோளை குலுக்கியபடி அவன் கூற,

“சரி அதையெல்லாம் விடு… மாமாவோட எந்த ஆக்டிவிட்டீஸ்க்கும் நீ ஹெல்ப் பண்ண மாட்டேங்கற… எதுக்கும் வர மாட்டேங்கற… ஏன்டா இப்படி இருக்க?” ரவி பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“அது என் இஷ்டம்…” மாதேஸ்வரனை பார்த்தபடி இறுக்கமாக அவன் கூறிவிட்டு எழுந்து அறைக்கு செல்ல முயன்றான்.

“ஈஸிஆர்ல அவ கட்டற ஹோட்டலுக்கு நீ பணம் கொடுத்தியா?” ரவி கேட்க, அவன் பக்கம் திரும்பிய சசாங்கன்,

“அதை கேக்க நீங்க யாருன்னு கேக்க மாட்டேன்…” என்றவன், இடைவெளி விட்டு, “அது என் இஷ்டம்…” என்றான்.

ரவியால் கோபத்தை அடக்க முடியவில்லை!

“நீலாங்கரை ப்ராஜக்ட்ல ஒரு ப்ளாட்டை அப்படியே தூக்கிக் குடுத்துருக்க… பிரீயா…”

“எவ்வளவு வேகமா உங்களுக்கு இன்பர்மேஷன் வருது…” என்று ஆச்சரியப்பட்டவன், “ஆமா… நேத்துதான் சைன் பண்ணேன்…” என்று கூறியவன், இடைவெளி விட்டு, “அதுவும் என் இஷ்டம்…”

அதை கேட்டுக் கொண்டிருந்த மாதேஸ்வரனுக்கு ரத்தம் கொதிக்கவாரம்பித்தது.

“ச்சை…” என்றபடி தலையில் கை வைத்துக் கொண்டார்.

“நீ இப்படி இருந்தவனில்லையே ஷான். ஏன் இப்படி?” வைஷ்ணவி அவனைத் தடுத்தபடி கேட்க,

“அது என் இஷ்டம் கா…” மீண்டும் அதே இறுக்கமான தொனி!

 

error: Content is protected !!