Kalangalil aval vasantham – 5

Kalangalil aval vasantham – 5

5

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,

சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,

கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!

ஹெட்செட்டில் மென்மையாக ராஜா வழிய, அமைதியாக சாய்பாபாவை பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி. அதுவொரு வரம். பிடித்த இசையோடு அவரைப் பார்ப்பதென்பது.

அவளுக்கு அந்த சாய்பாபா கோவில் என்பது அமைதியை தருமொரு பூங்கா… கூடவே அவளது ராஜா!

மனம் நிர்மலமாக இருந்தது.

முந்தைய தினம் ஷானிடம் வேறு எதுவும் கூறவில்லை. கூறினால் அவனை உதவி கோரும்படி நேரிட்டு விடுமோ என்ற பயம் அவளுக்கு. அல்லது அவள் கேளாமலும் கூட அவன் உதவி செய்யலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் அவனிடம் தான் கொண்டிருக்கிற அழகான நட்பை அவளால் விட்டுக் கொடுக்க முடியாது.

அதோடு தன்னால் எவ்வளவு தூரம் சமாளிக்க முடிகிறதோ, அதுவரை சமாளிக்கலாம் என்ற எண்ணமும் கூட. அது தவறு கிடையாதே! முடியாவிட்டால், கண்டிப்பாக அவனிடம் தான் கேட்போம் என்பது திண்ணம். அவனைத் தவிர, அவளுக்கு வேறு யாரையும் தெரியாது.

அவனிடம் கூறிய பிறகு, ஏதோவொரு சொல்ல முடியாத வலிமை கிடைத்தார் போல இருந்தது. சமாளித்து விடலாம் என்ற தெம்பும் பிறந்தது.

ஷானை பொறுத்தவரை, அவள் தன்னுடைய பிரச்சனையைப் பற்றிக் கூறாதது ஒரு வடுவாக நின்று விட்டாலும், அவளாக எதிர்கொள்ளப் பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், ஒன்றுமரியாத சிறு பெண்ணாகத் தான், அவனிடம் வந்து சேர்ந்தாள்.

உழைக்கத் தயங்காத, அப்பாவித்தனம் மிகுந்த, அந்தச் சிறு பெண்ணை எதனாலோ அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக மிக பிடித்திருந்தது. எவ்வளவு வேலைச் சுமை என்றாலும், முகம் சுளிக்காமல், புகாரளிக்காமல் செய்து விடுவதாலோ என்னவோ, அவளை அத்தனை வேலைகளுக்கும் பழக்கிக்கொண்டிருந்தான். அவனுக்கும் அந்த வருடங்கள் அனைத்தும் பயிற்சிக் களமே!

சிறு வயது முதலே, அவர்களது வியாபாரங்கள் பரிட்சயம் என்றாலும், அவன் முழுதாகத் தொழிலுக்கு வந்தது, எம்பிஏ முடித்த பின் தான். அதுவும் அவனது தாயாரின் வற்புறுத்தல் காரணமாகத்தான்!

இவை அனைத்தையும் பிரீத்தியும் முழுவதுமாக அறிவாள்.

அவள் பாபாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாளே தவிர, மனம் ஷானை தேடித்தான் போனது.

முதலாளி என்பதைத் தாண்டி எவ்வளவு புரிந்தலான நண்பன். அவளது முகம் கொஞ்சம் வாடியிருந்தாலும் கண்டுபிடித்து விடுவான். என்ன பிரச்சனை என்று அவளை நச்சரித்து விஷயத்தை வாங்கிவிடுவான். என்னவோ இந்தமுறை தான் இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தான். அவளாக நீந்தக் கற்றுக் கொள்ளட்டும் என்றுதான் நினைத்திருப்பான் என்பது அவளது திண்ணமான எண்ணம்!

இத்தனை வருடத்தில் அவனது எண்ணப்போக்குப் புரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

இருவருக்குமிடையில் இருந்த இந்த ப்ரியம் தான் அவளை அவனிடம் உதவிக்காக அணுக தடையாக இருந்தது. அவனை எந்தவிதத்திலும் அவளால் தன்னுடைய சுயலாபத்துக்காக உபயோகிக்க முடியாது.

முகத்தை அழுந்த தேய்த்து விட்டபடி, ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள் ப்ரீத்தி.

சுற்றிலும் மக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக!

அன்று வியாழக் கிழமை இல்லையென்ற காரணத்தால் கூட்டம் சற்றுக் குறைவாகத்தான் இருந்தது.

ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவிலில் இதுவொரு விஸேஷம். காற்றோட்டமான பெரிய கோவில். சென்னைக்கு நடுவில் இருக்கும் கோவில்கள் எல்லாம் கசகசவென இருக்கும் அல்லது சிங்கிள் பெட் ரூமில் பாபாவை அடைத்து வைத்தார் போல வைத்திருப்பார்கள். அவர்களைப் போலவே!

ஆனால் இங்கு, இடமும் சரி, சூழ்நிலையும் சரி, அவளுக்கு மிகவும் பிடித்தம். கடலலைகளின் தாலாட்டுடனான அமைதி…

பிரீத்தியை பொறுத்தமட்டில், அவளுக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் ரொம்பவும் கிடையாது. உழைக்காவிட்டால் எந்தத் தெய்வமும் வந்து சோறு போட்டுவிடாது என்றெண்ணும் ரகம். கோவில்கள் என்பது மன அமைதிக்காக மட்டுமே!

அங்கு தெய்வம் இருக்கிறது என்றோ, பிரார்த்திக்க வேண்டும் என்பதோ அவளுக்கு முக்கியம் கிடையாது. குறிப்பாக மந்திரத்தால் மாங்காயையை வரவைக்க முடியும் என்பதில் சற்றும் நம்பிக்கை இல்லாதவள் ப்ரீத்தி.

செய்யும் தொழிலே தெய்வம்… ஒருவர் நம் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதே பக்தி… நேர்மையும் உண்மையுமே அபிஷேகமும் ஆராதனையும்!

இந்த இருபத்தி ஏழு வருடங்கள் சொல்லித் தந்த பாடம் இதுதான், எப்படி இருக்க வேண்டும் என்று!

பாபாவுக்கு ஆரத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். உன்னைப் பற்றி நானறிவேன் என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்!

கண்களால் அவரை நிறைத்துக் கொண்டவள், எழுந்து கொள்ள எண்ணும்போது செல்பேசி அழைத்தது.

தந்தை தான்!

அவசரமாக எடுத்தாள். நடேசனிடம் பேசப் போயிருந்தார். அவள் அமைதியை வேண்டி அங்கு வந்ததன் காரணமும் அவர்தான்.

எப்படியாவது சரியாக அவர் பேச வேண்டுமே என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது அவளுக்கு.

“பாப்பா…” அவர்மேல் கோபம் இருந்தாலும், அந்தச் சொல்லும் மென்மையான அந்தத் தொனியும் அவளை ஆற்றுப் படுத்தியது.

“சொல்லுங்க…”

“பஞ்சாயத்து பேசிட்டு இருக்கோம் பாப்பா…”

“ஹும்ம்… சொல்லுங்க…”

“வட்டியை குறைக்க முடியாதுன்னு பிடிவாதம் பண்றான்…” சொல்லும் போதே அவரது குரல் உள்ளுக்குள் போய்விட்டது.

இதென்ன அநியாயமாக இருக்கிறது? அவரிடம் கடனாக வாங்கியிருந்தால் வட்டி வசூலிக்க நினைக்கலாம். ஆனால் இது அவரது லாபத்துக்காக, வியாபாரத்துக்காகக் கொடுத்த பணத்துக்கு வட்டி வாங்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?

“ஏன்? நீங்க தெளிவா பேசினீங்களா?”

“சாஹிபு பாய் இங்க தான் இருக்காரு. நீ வேண்ணா கேக்கறியா பாப்பா?” என்று அருகிலிருப்பவரிடம் கொடுக்கப் பார்க்க,

“அதெல்லாம் வேண்டாம். நீங்களே சொல்லுங்க…”

“எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டோம் பாப்பா… எதுவும் பண்ண முடியல…”

“அதெப்படி அப்படிச் சொல்ல முடியும்? இன்னும் கொஞ்சம் கறாரா பேச வேண்டியதுதான?”

“நடேசன் கிட்ட நீ பேசேன் பாப்பா…” பொறுப்பை அவள் புறம் தள்ளுவது அவளுக்கும் தெரிந்தது. ஆனால் முன் பின் தெரியாதவர்களிடம், அதிலும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு… எப்படிச் சட்டென்று பேசிவிட முடியும். தன் வேலை சார்ந்து பேசுவதென்பது வேறு, யாரோ ஒருவர், சற்றும் பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது என்பது வேறு. அவளால் இயல்பாகப் பேசிவிட முடியாது. ‘எப்படி இவருக்கு இப்படிப் புத்தி போகிறது என்று புரியவில்லையே’ என்று நினைத்துக் கொண்டாலும்,

“சரி குடுங்க…” என்றாள். ‘வேறு வழி?’

அவசரமாக அவர் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுப்பது கேட்டது.

“சொல்லும்மா…” முந்தைய தினம் அவளிடம் பேசிய அதே குரல்.

“சார்… உங்க கிட்ட கடனா வாங்கியிருந்தா கூடப் பரவால்ல. உங்க வியாபாரத்துக்காக நீங்க போட்ட பணம். அதுக்கு எப்படி வட்டி வேற கேக்கறீங்க?” பொறுமையாகப் பேசலாம் என்று நினைத்தாலும் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. குரல் சற்று உயரப் பார்த்தது, எரிச்சலில்!

“இந்தா பாரும்மா… எனக்கு லாபம் சம்பாதிச்சு குடுக்கறேன்னு தானமா தான் உங்கப்பா என்கிட்ட பணம் வாங்கினாரு?”

“அதுக்காகப் பைனான்ஸ்ல உங்க பணத்தைப் போட்ட மாதிரி வட்டியோட கேப்பீங்களா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா. எனக்கு என் பணம் வட்டியோட வரணும்…”

“சர்… வியாபாரம் ஒரு நேரம் நல்லாருக்கும், ஒரு நேரம் வேற மாதிரி போகும். இதே லாபம் வந்திருந்தா டபுள் கமிஷன் தந்திருக்கப் போறீங்களா?”

“ஏம்மா… லாபமும் இல்லாம, இடமும் என் பேருக்கு வராம என் பணத்தை விட்டுட்டு சும்மா இருக்கேன். இன்னும் என்னைக் கடுப்பாக்கி பாக்கறியா? வேண்டாம்… இடமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட பணம், வட்டியோட திரும்ப வேணும். அவ்வளவுதான்…”

தட்டையாக, அவர் சொல்வதுதான் நியாயம் என்பதைப் போல அவர் வாதிட,

“நீங்க பேசறதுல கொஞ்சமாவது நியாயம் இருக்கா?” என்று கேட்டாள், ஆற்ற முடியாமல்!

“உனக்கு நியாயமோ இல்லையோ… எனக்கு இதுதான் நியாயம். இதுதான் ஃபைனல்…” என்று அவர் கறாராக முடிக்க, அதற்கும் மேல் போராட முடியாமல் செல்பேசியை வைத்தாள்.

மனிதர்கள் தான் எத்தனை வகை!

சுயநலம் ஒன்றே குறியாக… பணத்துக்காக எதையும் செய்பவர்களாக… தன் லாபம் ஒன்றே முக்கியமாக… எத்தனை முகங்கள்!

மனதின் ஆழத்துக்குள் அந்தக் கசப்பு இறங்கியது.

அவரிடம் பேசும் போதே சீதாலக்ஷ்மியும் அழைத்துக் கொண்டிருந்தார். தந்தையுடைய அழைப்பை துண்டித்தவள், தாயின் அழைப்பை ஏற்றாள்.

“சொல்லும்மா…” என்றவளின் குரலில் சற்றும் உயிர்ப்பில்லை.

“ப்ரீத்தி…” தயக்கமாக அழைத்தவரின் குரலும் அப்படியே. மிகவும் சங்கடமாக ஒலித்தது.

“ம்ம்ம்… சொல்லு…”

“ஒண்ணுமில்ல கண்ணு. உன் குரலை கேக்கணும் போல இருந்தது.” என்றவரின் குரல், நீச்சலில் தத்தளிக்கும் போது கைக்கு ஏதாவது கிடைக்காதா என்று தவிப்பவரின் குரல்.

“என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் மா. கவலைப்படாத!” என்று அவருக்கு நம்பிக்கையை கொடுக்க முயன்றாள். ஆனால் அந்த நம்பிக்கை அவளுக்கே இல்லை.

“நீயும் எவ்வளவு தான் பண்ணுவ ப்ரீத்தி.”

“விடு…” என்று முடித்தவள், “காயத்ரி என்ன பண்றா? இப்ப எப்படி இருக்கா?” என்று கேட்க,

“ரொம்ப பயந்துட்டா. காலேஜ் போக வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா வீட்ல இருந்தா அதே நினைப்பா இருக்கும்ன்னு சொல்லி, காலேஜ் கிளம்பிட்டா…”

“காயத்ரியை ஜாக்கிரதையா பார்த்துக்கம்மா. அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்ல…”

“இப்படியொரு மனுஷனுக்கு வாக்கப்பட்ட நானும் இதையெல்லாம் பழகிக்கணும். அந்த மனுஷனுக்கு பொறந்த அவளும் இதை பழகிக்கணும். வேற வழி…” என்று அவர் தேம்ப,

“ம்மா… இப்ப நீ திட்டினா, அழுதா எல்லாம் மாறிடுமா? விடு…” என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு அழைப்பை துண்டித்தாலும், அவளுக்கு முன்னிருந்த வழி, இருளாகத்தான் இருந்தது.

‘வேறு வழிகளில் தான் முயற்சி செய்ய வேண்டும். வட்டியோடு சேர்த்துக் கொடுப்பதென்றால் தன்னால் அது முடியவே முடியாது’ என்றெண்ணிக் கொண்டவள், முகத்தை அழுந்த துடைத்தபடி எழுந்தவளின் முகம் ஒளிர்ந்தது.

அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் வைபவ்.

கூடவே வைஷ்ணவியும், மாதேஸ்வரனும், அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி!

“ஹலோ மேம்…” என்று வைஷ்ணவியை பார்த்துக் கூறியவள், மாதேஸ்வரனை பார்த்துக் கைக் கூப்பி வணக்கம் தெரிவித்தாள். அவரும் தலையசைத்து ஏற்றுக் கொள்ள,

“மேம் சொல்லாத… அக்கா சொல்லு ப்ரீத்தி…”

“வர மாட்டேங்குது மேம்…” என்று புன்னகைக்க, வைஷ்ணவி முறைக்க, “சாரி… அக்கா…” என்றவளை கூர்ந்து பார்த்தார் மாதேஸ்வரன்.

காரணமின்றி ஒட்டவும் மாட்டாள், வெட்டவும் மாட்டாள்!

வைபவ்வோ கோவில் என்றெல்லாம் பார்க்கவில்லை.

“சாக்கி ஆண்ட்டி…” என்று மேலே வந்து விழுந்தவனைச் சிரிப்போடு ஏந்திக் கொண்டாள்.

பிரீத்தியை அவ்வளவு பிடிக்கும் அந்தக் குட்டி வாண்டுக்கு!

எப்படியும் அடிக்கடி மாதேஸ்வரனின் போட் கிளப் பங்களாவுக்குப் போக வேண்டியிருக்கும். கம்பெனி சம்பந்தமாக ஏதாவதென்றால் இவளைத்தான் அனுப்புவான். அதனாலேயே நல்ல பழக்கம் உண்டு.

அதிலும் ப்ரீத்தியின் முடியைப் பார்க்கும் போதெல்லாம் அதை இழுத்து விளையாடுவது அவனுக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. அவள் முடியை வெட்டியபோது, யார் வருத்தப்பட்டார்களோ இல்லையோ, வைபவுக்கு தான் மிகுந்த வருத்தம்!

“ஏன் ஆன்ட்டி இவ்வளவு வெட்டிட்டீங்க?” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்ட வைபவ்விடம், “வில்லப் பயலே… அவங்களை இப்பவே ஆன்ட்டியாக்காதடா. அக்கா சொல்லு…” என்று அவனிடம் மல்லடித்த சஷாங்கனை எப்போது நினைத்தாலும் புன்னகை தானாக மலரும்!

இப்போதும் சிரித்தபடி மேலே விழுந்தவன், “எங்க சாக்கி?” என்று கேட்க, இவள் புன்னகையோடு, அவளது கைப்பையிலிருந்த, எப்போதும் அவள் வைத்திருக்கும் கிட் கேட்டை எடுத்து அவனிடம் நீட்டியவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் செய்ததைப் போலவே வைபவ்வும் செய்ய, அவளது முகத்தில் புன்னகை பூப் பூத்தது.

பிரீத்திக்கு இதுவொரு பழக்கம். கிட்கேட் பிரியை. அதோடு டைரி மில்க்கும். அதனாலேயே அவளது பையில் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது உள்ளே போய்க் கொண்டே இருக்கும்.

அதிலும் வைபவ்வை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு சாக்லேட் தராமல் இருந்ததில்லை என்பதால், அவள் வீட்டுக்கு வந்தால், உரிமையாக அவளிடமிருந்து கைப்பையைப் பறிப்பது அவனாகத்தான் இருப்பான். அதனாலேயே அவள் ‘சாக்கி ஆண்ட்டி’.

சாக்லெட்டைக் கொடுத்துவிட்டாலும், அவளது கைப்பையை ஆராயாமல் விடமாட்டான், வேறெந்த வகை சாக்லேட்டாவது இருக்கிறதா என்று பார்க்க!

அது போலவே அப்போதும் அவளது கைப்பையை அவன் கைப்பற்ற, அவசரமாக வந்தாள் வைஷ்ணவி.

“வைபவ்… ஹேன்ட்பேகை ஆன்ட்டி கிட்ட குடு…” கறாராக அவனைப் பார்த்துக் கூற,

“இட்ஸ் ஓகே மேம்…” என்றவள், நாக்கை கடித்துக் கொண்டு, “ஸ்ஸ்ஸ்… அக்கா…” என்று புன்னகைத்தபடி, “வைபவ் குட்டிக்கு இல்லாததா?” என்றவளை புன்னகையோடு ஏறிட்டாள் வைஷ்ணவி.

“ரொம்பச் செல்லம் கொடுக்காதே ப்ரீத்தி. தலைல ஏறி உட்கார்ந்துக்குவான். அவங்க மாமா மாதிரி…” முடிக்கும்போது குரல் சற்றே சுருதி குறைய,

“எம்டிக்கு என்ன? ஹி இஸ் எ ஜெம்…” என்று புன்னகையோடு கூற, அவளைச் சற்று வியந்த பார்வை பார்த்தாள் வைஷ்ணவி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மாதேஸ்வரன் பிரீத்தியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கும் மிகவும் பிடித்தவள் ப்ரீத்தி. எளிமையான குடும்பமாக இருந்தாலும் மரியாதை தெரிந்த பெண் என்ற மதிப்பு அவள்மேல் எப்போதும் உண்டு. அவருக்கு, ஏதோவொரு விதத்தில் ஸ்ரீமதியை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள் இவள்.

அதோடு அவளது அமைதியும், நேர்மையும், சுறுசுறுப்பும், எல்லை அறிந்து பழகும் முறையும், நேர்த்தியாக இடத்துக்குத் தகுந்தார் போல உடையணியும் பாங்கும் ஸ்ரீமதியை பார்த்தது போலவே இருக்கும்.

அதிலும் முந்தைய தினம் கிருஷ்ணன் நாயரிடம் அவள் பிடிவாதமாக இருந்த முறையை வீடியோ காலில் பார்த்தபோது அவரது எண்ணவோட்டத்தை அவராலேயே கணிக்க முடியவில்லை.

ஸ்ரீமதியும் அப்படியே!

பிடிவாதம் பிடித்தால் அது பிடிவாதம் தான். அவரைப் போல அமைதியாக இருக்கவும் முடியாது, அதே போலப் பிடிவாதம் பிடிக்கவும் யாராலும் முடியாது. கோபப்படுபவர்களின் உணர்வுகள் அவ்வளவு வீரியமில்லாதது.

ஆனால் அமைதியாக வெளிப்படும் பிடிவாதம் நிறைந்த கோபம் அத்தனை வீரியமானது!

அதைத் தான் முந்தைய தினம் பிரீத்தியிடம் உணர்ந்தார் மாதேஸ்வரன்.

“நீ தான் ஜெம்ன்னு சொல்லணும்…” குறையாகக் கூறிய வைஷ்ணவியை ஆழமாகப் பார்த்தாள் ப்ரீத்தி.

“பாஸ் எப்பவுமே ஜெம் தான் மே… க்கா. நான் சொல்லலைன்னாலும் அவர் அப்படித்தான்…” அழுத்தமான அந்த வார்த்தைகள், என் முன்னே சஷாங்கனை தவறாகப் பேசாதே என்று உறுதியாகக் கூறியது. ஆனால் அந்த உடல்மொழி வைஷ்ணவிக்கு புரியவில்லை. மாதேஸ்வரனுக்கு புரிந்தது.

ஸ்ரீமதிடமும் இதே கண்டிப்பு இருக்கும். அவரது உடல்மொழியும் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. மகனைப் பற்றியோ மகளைப் பற்றியோ யாரும் அவரிடம் தவறாகப் பேசிவிட முடியாது.

விளையாடிக் கொண்டே வைஷ்ணவியின் சுடிதார் டாப்ஸை பிடித்து இழுத்த வைபவ்வை, “அந்தப் பக்கம் போய் விளையாடு வைபவ்…” என்று கண்டித்த வைஷ்ணவி, ப்ரீத்தியை பார்த்து,

“ஜெம் தான் வீட்ல பெரியவங்க சொல்றதை கேக்காம, யாரோடவோ லிவிங் டுகெதர்ல இருப்பானா?” என்று கேட்க,

“வைஷு…” கோபமாக அவளைத் தடுக்கப் பார்த்தார் மாதேஸ்வரன்.

என்ன இருந்தாலும் குடும்ப விஷயங்களை யாரோ மூன்றாம் நபரிடம் கடை பரப்ப வேண்டுமா?

“இருங்கப்பா. ப்ரீத்தி சொன்னா அவன் கண்டிப்பா கேப்பான்…” என்று வைஷ்ணவி அவரைச் சமாளித்தது உண்மைதான். ப்ரீத்தி சொன்னால் கண்டிப்பாகக் கேட்பான் தான்.

ஆனால் சட்டென உரிமை எடுத்து அதுபோலக் கூறிவிட மாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும். மாதேஸ்வரனுக்கும் தெரியும்.

“அது அவரோட பெர்சனல் மேம்.”

ப்ரீத்தியை பொறுத்தவரை, இந்த ஒரு புள்ளியை மட்டும் வைத்து அவனது ஒழுக்கத்தைப் பறைசாற்றுவது சரியென்று படவில்லை. இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தால் கண்டிப்பாகத் திருமணம் செய்திருப்பான். காதலிக்கும் பெண்ணிடமிருக்கும் அத்தனை குறைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட எத்தனை பேரால் முடியும்? இவனால் முடியும்.

இதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் கூட அவனிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவனிடம் நல்ல விஷயங்கள் இல்லையென்றால் கூட அவளால் அவனை விட்டுக் கொடுத்துவிட முடியாது.

ஏனென்றால் அனைத்தையும் தாண்டி அவன் அவளது நண்பன்! அவளிடம் மட்டுமே அத்தனை காயங்களையும் பகிரும் நண்பன். அவனை எப்படி விட்டுக் கொடுத்துவிட முடியும்?

“உன்னை மாதிரி ரெண்டு பேர் அவன் பண்றதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டா, எங்கிருந்து திருந்துவான் ப்ரீத்தி? அவன் பண்றது தப்புன்னு எடுத்துச் சொல்ல வேண்டாமா?” உண்மையிலேயே கவலையாகக் கேட்ட வைஷ்ணவியை அழுத்தமாகப் பார்த்தாள் ப்ரீத்தி. ஆனால் பதில் சொல்லவில்லை. “அவனை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு எங்களுக்குப் புரியவே இல்ல…” அவளது மனக் குமுறலை வெளிப்படுத்த, பிரீத்திக்கு வைஷ்ணவியின் அந்தச் சோகம் மனதை அழுத்தியது. முன்னவளுக்குத் தெரியும், பிரீத்தியிடம் கூறினால், அது கண்டிப்பாகச் சஷாங்கனை அடைந்து விடுமென!

இருவரின் நட்பைப் பற்றித் தெளிவாகப் புரியும் அவர்கள் இருவருக்கும்!

மாதேஸ்வரனுக்கு என்ன ஆதங்கம் என்றால், இந்தப் பையன் இந்த மாதிரி நல்ல பெண்களை விடுத்து, போயும் போயும் குப்பைத் தொட்டியில் விழுந்து கிடக்கிறானே என்பதுதான்!

ஒருவேளை ப்ரீத்தியை திருமணம் செய்து வையுங்கள் என்று அழைத்து வந்தால் கூடச் சந்தோஷமாகத் தலையாட்டி இருக்கலாம் என்று கூடத் தோன்றியது அவருக்கு.

ஆனால் ஸ்வேதாவை போல ஒரு தரமே இல்லாத பெண்ணை எப்படி இந்தப் பையனுக்குப் பிடித்தது என்று அவருக்கு விளங்கவே இல்லை.

அவள் அவரிடமே வேலையைக் காட்ட முயன்றவள் என்பதை யாரிடம் கூற முடியும்? அவளை நினைக்கும் போதே வெறுப்பாக இருந்தது.

அவரைப் பொறுத்தவரை நடிகை என்பதெல்லாம் கண்டிப்பாகத் தடையில்லை. அவர் அதற்காகப் பார்க்கவுமில்லை. நடிகையாக இருந்தால் குணமும் கெட்டு விடுமா என்ன? எத்தனையோ நல்ல பெண்களை அங்கும் பார்த்திருக்கிறாரே! ஸ்வேதாவின் குணம் கொஞ்சமும் சரியில்லாதது. பணம் ஒன்று மட்டுமே அவளது குறி! அப்படித்தான் அவள் அவருக்கு அறிமுகம்!

சுயஒழுக்கம் சிறிதும் இல்லாத, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அந்தக் குணம் கொண்டவளை மட்டும் தான் அவர் எதிர்த்தார். அப்படிப்பட்டவளை எப்படி மகனது மனையாளாக அனுமதிக்க முடியும்? அவனது வாரிசுகள் அவள் மூலமாகவா? அவைகள் எப்படி நல்ல வித்துக்களாக இருக்க முடியும்?

“யாரும் வந்து சொல்லித் திருத்தற அளவுக்கு எம்டி கெட்டவர் கிடையாது. அவருக்குத் தெரியும், தான் செய்றது தப்பா சரியான்னு! அவரோட மனசாட்சியை மீறி அவரால தப்புப் பண்ணவே முடியாது. இதையெல்லாம் மீறி ஒரு விஷயம் நடந்தா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கணும். கண்டிப்பா இருக்கும்…”

அழுத்தமான, தெளிவான, உறுதியான வார்த்தைகள்!

ப்ரீத்தி வைஷ்ணவியிடம் பேசுவதைக் கேட்டபோது மாதேஸ்வரனுக்கு பளாரென்று யாரோ தன் கன்னத்தில் அறைந்தார் போல இருந்தது! அத்தனையும் மகனுக்காக ஸ்ரீமதி பேசும் வார்த்தைகள்!

வார்த்தை மாறாமல்!

என்னதான் நம்பிக்கை என்றாலும் இவ்வளவு உறுதியாகவா?

ஆச்சரியமாக இருந்தது மாதேஸ்வரனுக்கு. அதைக் காட்டிலும் வைஷ்ணவிக்கு இன்னுமே ஆச்சரியம்.

ஒவ்வொரு தடவையும் இதே வார்த்தைகளைக் கூறி, அவரிடம் போராடிய ஸ்ரீமதியை நினைக்கும்போது இப்போது அவரது கண்களில் கண்ணீரின் பளபளப்பு!

அப்போதெல்லாம் மனையாளின் வார்த்தைகளைப் பெரியதாக நினைத்ததில்லை. அவளையே ஒரு பொருட்டாக மதித்தில்லை. மனைவியின் மதிப்பை அவள் இருக்கும்போது யாரும் அறிவதில்லை.

ஊன்றுகோல்களின் தேவை வயதாகும்போது தான்!

அந்த நேரத்தில் பற்று கோலாக அவளும் இல்லாமல், தோள் சாய்க்க மகனும் இல்லாமலிருக்கும் போதுதான் இழந்து விட்டதன் அருமை தெரிகிறது.

“அவனுக்குத் தெரியும் மதுப்பா. தான் செய்றது தப்பா சரியான்னு! மனசாட்சியை மீறி அவனால எதுவும் பண்ணவே முடியாது…”

பள்ளியில் மகன் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கிறான் என்று தெரிந்தவர் சொல்ல, மாதேஸ்வரனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற பணக்கார குடும்பங்கள் போல இங்குக் கிடையாது. அவரது தந்தை இதிலெல்லாம் வெகுகண்டிப்பு. அதைப் போலவே அவரும் சிகரெட்டோ, மதுவோ தொட்டும் பார்த்தது கிடையாது. மகனையும் அதுபோலவே தான் வளர்க்க வேண்டும் என்பதில் வெகுபிடிவாதம் அவருக்கு!

மாதேஸ்வரன் கத்தித் தீர்க்க, ஸ்ரீமதி, மகனை அணைத்தபடி அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூறினார்.

அதன் பிறகு தாய் இருந்தவரை சஷாங்கனால் சிகரெட்டை தொட்டும் கூடப் பார்க்க முடியவில்லை. தாயின் நம்பிக்கையை மீறி அவனால் எதையும் செய்துவிட முடியாது. அவனது மனசாட்சி ஸ்ரீமதி தான்!

ஆனால் இப்போது?

அவனது மனசாட்சி ப்ரீத்தியாக இருக்கக் கூடுமோ?

சற்றுத் தள்ளி நின்றிருந்தபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவர், ப்ரீத்தியை நெருங்கி, அவளது தலையை பரிவாகத் தடவிக் கொடுத்து,

“எப்பவும் இதே மாதிரி இரும்மா…” என்றபடி புன்னகைத்தார்.

அந்தப் புன்னகை அவளை ஏதோ சொல்லி வாழ்த்தியது போலிருந்தது! அவரிடம் அவ்வளவாகப் பேசியதில்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலை மட்டும் தான் சொல்லிப் பழக்கம். அதைத் தாண்டி ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனால் இன்று அவராகத் தலையைத் தடவிக் கொடுத்துப் பேசியதை எல்லாம் அவளால் நம்ப முடியவில்லை.

அவரது கண்களில் சற்றும் பொய்மையோ, கள்ளமோ இல்லை. அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதுக்குள்ளிருந்து வருபவை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

பதிலுக்குப் புன்னகைத்து, “தேங்க்ஸ் சர்…” என்று கூற,

“அப்பா சொல்லும்மா…” என்ற மாதேஸ்வரனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வைஷ்ணவி.

அவ்வளவு இயல்பாக அவரது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து விடுபவர் அல்ல, அவளது தந்தை என்பதை முற்றும் முழுவதுமாக அறிவாள். அவரே சொல்கிறார் என்றால்!

வைஷ்ணவியை காட்டிலும் ஆச்சரியமாக உணர்ந்தாள் ப்ரீத்தி!

பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தாள்!

இவள் வைஷ்ணவியிடம் பேசுவது, வைபவ்வை அணைத்து முத்தமிடுவது, கடைசியாக மாதேஸ்வரன் அவளது தலையைத் தடவி கொடுப்பது வரை புகைப்படங்களாகிக் கொண்டிருந்தன.

செல்பேசியில் வந்த புகைப்படங்களைக் கண்ணெடுக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சஷாங்கன்!

error: Content is protected !!