காம்யவனம் 12

ப்ரத்யும்னன் அவளது மனதில் காதல் விதை தூவ ஆரம்பித்திருந்தான்.
அது நன்றாக வளர அவனே தான் தண்ணீர் ஊற்றி உரமிட்டு வளர்க்க வேண்டும்.
அவளிடம் கூறியது போல, மாயாவின் நினைவுகளில் அவன் எப்போதெல்லாம் தவழ்கிறானோ, அப்போது அவனது காதல் பாடத்தை அவன் நடத்தியே ஆக வேண்டும்.
மாயா எப்போதும் போல விட்டத்தைப் பார்த்துப் படுத்துக்க கொண்டு, ப்ரத்யும்னின் ஆளுமையையும் அவனது அழகையும் மனக்கண் முன் கொண்டு வந்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
என்ன தான் பெண்கள் ஆண்களின் முன் தங்களுக்கு அவர்களின் நினைப்பே இல்லை என்று காட்டிக்கொண்டாலும், அவர்களது தனிமையில் சம்மந்தப் பட்டவனின் நினைவைத் தவிர வேறு சிந்தனையே இருக்காது.
அவனைத் தலை முதல் கால்வரை அங்குலம் அங்குலமாக அளந்து வைப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! அவனே அறியாத பலவற்றை அவனுக்கே உணர்த்துவதில் கைத்தேர்ந்தவர்கள்.
சாதாரண ஆண்களுக்கே அந்த நிலையெனில், காதலின் மொத்த குத்தகையும் அவனுக்கே என்று இருக்கும் ப்ரத்யும்னன், மாயாவின் மனதில் குடிகொள்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது.
மாயா தன் முன் ஜென்மம் பற்றிய நினைவுகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவள் தான் ரதி என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அவளது ஆழ்மனம் அவளுக்குள் இருக்கும் காதலை அவளுக்கே தெரியாமல் மெல்ல மெல்ல தூர் வாரிக் கொண்டிருந்தது.
ப்ரத்யும்னனை நினைக்கும்போது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாவதை அவளால் தடுக்க முடியவில்லை. இப்போது ஒரு சாதாரணப் பெண்ணின் உணர்வுகளோடே அவனை மனதில் அசை போட்டாள்.
‘அன்னிக்கு கனவுல இருக்கும்போதே நிஜத்துக்கு என்னைக் கூட்டிட்டு போய் அந்த அழகான நதிக்கரைல காதலா என்னை அவன் பார்த்தப்ப உயிர் மொத்தமும் அவன் காலடில போட்டுட்டு அப்படியே அவன் மேல சாஞ்சுடணும் போல இருந்தது. அது உண்மை தான். ஆனா அவன் யார்னு அப்போ தெரியாம இருந்துச்சு. அந்த நெருடல் தான் என்னை அவன் கிட்டேந்து தள்ளி வெச்சுதா?
அப்படீன்னா இப்போ அவனைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு போச்சு. இப்போ நான் அவனைக் காதலிக்கலாமா? இல்லை இல்லை.
ஒரு வேளை, எனக்கு அவன் புரியவைக்கறேன்னு சொன்னானே! அப்போ நான் தான் அவனோட மாயான்னு எனக்குத் தோணிடுச்சுன்னா அதுக்கப்புறம் அவனை நான் காதலிக்க எந்தத் தடையும் இல்ல!’ அவளது மனம் அவனைக் காதலிக்க ஒரு நியாயமான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தது. அது இப்போது தானே வழி கண்டு கொண்டது.
தனக்குள் சிரித்துக் கொண்டாள் மாயா.
இவள் தனக்குள் நடத்திக் கொண்டிருக்கும் சம்பாஷணைகளை ப்ரத்யு கேட்டுக் கொண்டு தான் இருந்தான். மாயா எப்போதும் அவனுக்குப் போதையான மயக்கம் தருபவள் தான், அதிலும் இப்போது தன்னைக் காதலிக்க அவள் கூறிக்கொள்ளும் சிறுபிள்ளைத் தனமான சமாதானங்கள் அவனை மேலும் வெறியூட்டியது.

இந்த மனித பிறவியில் சாதாரண பெண்போல் அவள் இருப்பது கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவளை இந்த உலகத்தில் பிறந்த மாயாவாகவே சிறிது காலம் காதல் செய்ய முடிவு செய்தான். உடனே அவளுக்கு முற்பிறவியினை நினைவூட்ட அவன் விரும்பவில்லை.
“மாயா உன்னை விதம் விதமா காதலிக்கப் போகிறேன். எப்போதுமே நீ என் ரதி தான். அதனால் உன்னுடைய இந்தச் சிறு பிள்ளைத் தனமான அன்பும் எனக்கே வேண்டும். கலியுகத்து பெண்ணான உன்னை இந்தக் காலத்திற்கு தகுந்தாற் போலக் காதல் செய்யவும் நான் விரும்புகிறேன்!” அதே நதிக்கரையில் இப்போது அமர்ந்து மானசீகமான அவளிடம் பேசினான்.
இப்போதே அவளைக் காணும் ஆவல் எழ, அன்று போல் இன்றும் அவளை அழைத்து வரச் சென்றான். இம்முறை அவளுக்கு நிச்சயம் பயம் எதுவும் இருக்காது என்பதில் அவனுக்குத் துளியும் சந்தேகமில்லை. மனதில் கோடி ஆசையை வைத்துக் கொண்டு கிளம்பினான்.
விட்டதைப் பார்த்துப் படுத்துக் கொண்டிருந்தவள், அவன் நினைவில் சற்று மனதை அலையவிட்டுப் படுத்திருந்தவள் சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கிவிட்டிருந்தாள்.
அவர்களின் குடிசை வாசலில் வந்து நின்றான். அந்த மெல்லிய மரக்கதவு அவனுக்கு ஒரு பொருட்டில்லை. உள்ளே நுழைந்தான்.
குரு, தேவா , மகதி கூட ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது பிரத்யுவால் உணர முடிந்தது.
தனது உயிரின் இணையை இதழ்கள் விரியப் பார்த்தான். அழகுக்கே இலக்கனமானவள். அவளோடு கூடித் திரிந்த காலத்தை நினைத்தால் இப்போதும் இனித்தது.
இனி அவளை அவன் பிரியப் போவதே இல்லை. அந்த ஒரு நினைப்பிலும். அவள் மனத்திலும் லேசாக உள்நுழைந்த தைரியத்திலும், அவள் அருகில் சென்றான்.
கால்களை லேசாக மடக்கி, ஒருபுறமாகத் தன் கையைத் தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்தாள் மாயா. அவளது கை லேசாகச் சிவந்ததைக் கூட அவனால் பொறுக்க முடியாமல் கையை மெல்ல விலக்கினான்.
அவள் அசைவின்றி அப்போதும் உறக்கத்தில் இருந்தால். அவள் மூச்சுவிடும் அசைவில் காணாமல் போனான்.
சற்றும் யோசிக்காமல் தன் கைகளில் மாயாவை ஏந்தினான். அங்கிருந்து மறைந்து தங்களின் வழக்கமான இடத்திற்கு வந்தான்.
அன்றுபோல் இன்றும் ஒரு மயிலிறகு மெத்தையை அந்த ஆற்றங்கரையிலேயே அமைத்துத் தலைக்கு இதமான ஒரு தலையணையை கொடுத்து அவளைக் கிடத்தினான்.
அவள் தலை அதற்குள் அமுந்த, இதமாக உணர்ந்தாள் போலும். உறக்கத்தில் மெல்லிய புன்னகை அவள் முகத்தில்!
அதை ரசித்தான். கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு சற்று தள்ளி நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளது மேடுபள்ளங்கள், அவய அசைவுகள் அவனது கட்டுப்பாட்டைத் தளர்த்திக் கொண்டிருந்தது.
“என்னிடம் நீ வந்து சேர உனக்கு இத்தனை காலம் தேவைப்பட்டதா மாயா! நான் பாவம் என்று உனக்குத் தோன்றவே இல்லையா! அல்லது என் காதலை சோதித்தாயா? ம்ம்ம்! என்னை இப்படி தள்ளி நின்று சில காலம் தவிக்க விடலாம் என்று எண்ணமா?! அதை எப்படியெல்லாம் முறியடிக்கிறேன் பார்!” சிரித்தான்.
சில்லென்ற காற்று அவளுக்குக் குளிரூட்டியது. உடலைச் சற்றுக் குறுக்கிக் கொண்டாள். கைகள் தானாகப் போர்வையைத் தேடியது.
விஷமமாகச் சிரித்தான் அவன்.
மெல்ல அவளது அருகில் சென்று படுத்தான். குழந்தையைப் போல அவளைத் தூக்கி, தன் மார்பில் அவளது மார்பு பதிய மேலே கிடத்திக் கொண்டு வாகாக அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவனது தோளில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருக்க, அவளது மூச்சுக் காற்று அவனது கழுத்தில் உரசி அவனுக்கு உஷ்ணத்தை கிளப்பியது.
அந்த வீரியத்தில் அவளது இடையைத் தன் கையால் பிடித்துக் கொள்ள, அதன் வளைவும் மென்மையும் அவனை ருசிக்கத் தூண்டியது.
அவனது இடைத் தீண்டலால் சுகமாக உணர்ந்த மாயாவும் தலையணையை அணைப்பது போல அவனது மார்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள, தவித்துப் போனான் பிரத்யு.
இந்த இன்பவேதனை அவனுக்கு எப்போதும் இனி தேவைப் படும் என்பதில் ஐயமில்லை.
அவளது உறக்கைதைக் கலைத்துவிடாமல் உறங்க வைத்து விடிவதற்குள் மீண்டும் அவளை அவள் இடத்திலேயே விட்டுவிட எண்ணினான். இதைத் தினமும் செய்வதென்றும் மனம் ஒப்புக்கொண்டது.
அந்த நிலவொளியில் தன் மேல் படர்ந்திருக்கும் பூக்குவியலைப் பார்த்துப் பார்த்து இன்பமடைந்தான். பார்ப்பது அவனுக்குச் சுகமாக இருந்தாலும், பார்த்துக் கொண்டு எதுவும் செய்யமுடியாமல் இருப்பது நரக வேதனையாக இருந்தது.
இதுவரை அடைந்த தண்டனை போதாமல் இது வேறா! என்று தான் தவித்தான். சிறிது நேரத்தில் அவளைத் தன் மேலிருந்து பக்கத்தில் கிடத்தினான்.
அவள் புறமாகத் தானும் திரும்பிப் படுத்துக் கொண்டு, மெல்லிதாக அவளைச் சீண்ட நினைத்தான்.
“நீ என் மனைவி. எனக்கு எல்லா உரிமையும் உண்டு. உனக்குத் தெரியுமா!” அவளிடம் சரசமாகக் கேட்டான்.
அவளுக்கு அது எட்டியதோ! அல்லது அவள் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் ரதி என்பவளுக்கு எட்டியதோ! “ம்ம்ம்” என்றாள் உறக்கத்திலேயே.
ஆச்சரியமாக அவளைப் பார்த்து, “ஓ! தெரியுமா! அப்போது என்னை நீ தடுக்கக் கூடாது.” என்று கூறி அழகாகச் சிரித்தான். தன் கைவிரலை மெல்ல எடுத்து அவளது முன் நெற்றியில் உறுத்திக் கொண்டிருந்த முடிக் கற்றையை மெல்ல விலக்கினான்.
லேசாகச் சினுக்கியவள் தூக்கம் கலைந்து எழும்முன், இதமாக அவள் முகத்தில் தன் வாயால் ஊத, அவள் மீண்டும் அயர்ந்தாள்.
முடிகள் என்னும் மகுடி அவனை ஈர்த்ததோ! கைவிரல்கள் அவளது நெற்றியை நீங்க மறுத்தன.
பட்டும் படாமல் அவளது பிறை நெற்றியை அளந்தான். அந்த நெற்றியில் தன் கையால் திலகமிட துடித்தான். அவனது நினைப்பு அவனது விரலில் லேசான குங்குமம் வந்து ஒட்டிக்கொள்ள, அவளது நெற்றியில் அதை வைத்தான்.
“என் மனைவி” கர்வத்தோடு அவள் காதில் விழாமல் தனக்கே சொல்லிக் கொண்டான்.
அதைத் தாண்டி வந்த புருவ மேடுகள், அவற்றை மீண்டும் ஒருமுறை வரைந்தான். கண்! அது மூடியிருக்கும் போதே கொள்ளை அழகுடன் இருந்தது. அதன் பாதுகாவலர்களான இமைகளை லேசாகத் தொட்டு தானும் அவளது பாதுகாவலன் என வலியுறுத்தினான்.
அவளது மூக்கு, எடுத்துச் செய்தார்போல! வாய். அதுவே அவன் தடுக்கிவிழும் புதர்குழி. ஆரஞ்சு சுளையை அவனுக்கு எப்போதும் நினைவுபடுத்தும். அதன் ரசம் அவனைப் பருகத் தூண்டும் அமுதம்.
அந்த இடத்தைத் தாண்டுவது அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது.
முத்தமிடவா வேண்டாமா என அங்கே இருந்துகொண்டு அவனது மனம் பட்டிமன்றம் நடத்தியது.
ஆரம்பித்தால் அவன் எங்கு சென்று முடிப்பது என இன்னொரு கவலையும் வந்தது.
இதழ்களால் அல்லாமல் விரல்களால் என அவனே அப்பட்டிமன்றதிற்கு தீர்ப்புக் கூறிக் கொண்டான்.
அவனது விரல் அவற்றைத் தீண்டிப் புத்துயிர் பெற்றது.
“என்ன தவம் செய்தாயோ!” என விரல்களைப் பாராட்டி அவற்றுக்கே முத்தம் வைத்துக் கொண்டான்.
மீண்டும் அவளது உடலில் விரலின் பயணம் தொடர்ந்தது. கழுத்து. அதில் விரல்கள் பயணம் செய்து நேரே அவளது தொண்டைக் குழியில் வழுக்கிக் கொண்டு இறங்கியது.
அடுத்த பகுதியை அவனது விரல்கள் பரபரப்பாகத் தொட நினைக்க, அவற்றை மடக்கி அடக்கினான்.
மனதை அடக்கவென்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“அவள் உன் மனைவி!” உள்ளம் பேசியது.
“மனைவியாக இருந்தாலும் அவளது விருப்பமின்றி தீண்டலும் தவறே!” இவனும் வாதித்தான்.
“அவள் உன்னை விரும்புகிறாள்.” மீண்டும் உள்ளம் கூற,
“அவள் என்னிடம் நேராக ஒரு சைகையாவது காட்டட்டும். அதன் பிறகு நான் இப்படி பொறுப்பேனா!” எதிர்வாதம் செய்தாலும் மனம் ஏங்கவே செய்தது.
காதலுக்கும் காமத்திற்கும் இந்தச் சிறு வித்தியாசம் உள்ளது என்பதை அவன் விளக்கிக்கொண்டிருந்தான்.
அதன் பிறகு அவனது கைகளும், அவனும் மாயாவின் அருகாமையை மட்டுமே ரசித்தான். இரவு முழுதும் அவளின் சுவாசமும் ஸ்பரிசமும் அவனை மீண்டும் மீண்டும் தெம்பூட்டிக் கொண்டிருந்தது.
அதிகாலை கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கும் சமயம் மனமே இல்லாமல் அவளை மீண்டும் அவர்களின் குடிலுக்குக் கொண்டு சென்றான்.
பழையபடி படுக்க வைத்துவிட்டு அவளது கையைப் பற்றி முத்தமிட்டுச் சென்றான்.
எப்படியும் காலையில் அவள் தன்னைத் தேடி வருவாள் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
மாயா விடிந்ததும் ஏதோ ஒரு புதிய உணர்வுடனும் உற்சாகத்துடனும் இருந்தாள். மனதில் இனம் புரியாத இன்பம் பொங்கி வழிந்தது.
வழக்கம்போல நண்பர்களுடன் கலகலப்பாக இருந்தாலும், உள்ளே பிரத்யும்னனை காண அவளும் ஆர்வமாகத் தான் இருந்தாள்.
‘என்ன சொல்லி அவனைக் காணச் செல்வது?’ யோசித்துப் பின்,
“மகி குளிக்கப் போகலாமா?” என்றாள்.
“அன்னிக்கு போன அதே இடத்துக்கா… ஐய்… போலாமே” என்று கிளம்ப,
குருவும் தேவாவும், “நாங்க துணைக்கு வரோம்” என்றனர் ஒரு சேர.
அவர்களைக் கழட்டிவிட நினைத்து அவசரமாக,
“பொண்ணுங்க குளிக்கற எடத்துல உங்களுக்கு என்ன வேலை…நீங்க….ம்ம்ம்” என வாயை மூடிகாட்ட,
இருவரும் கப்சிப்.
ஆர்வமாக, ஆசையாகக் கிளம்பினாள் மாயா.
காத்திருந்தான் அவன். அவள் தன்னிடம் பேசப் போகும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும்!

error: Content is protected !!