கனவு – 14

அவனது அதட்டலில் ஒரு வினாடி உறைந்தவள் தனக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள்.

“சும்மா நீங்க வச்ச ஆளு மாதிரி எப்பவும் என்கிட்ட கத்தாதீங்க… ஏன் தங்கச்சிய காணோம்னு சொல்லிட்டு இருக்குறேன்…” – கொலை வெறியுடன் ஆஷ்ரிதா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அருகாமையில் அம்ரிதாவின் குரல் கேட்டது.

குரல் வந்த திசை நோக்கி ஆஷ்ரிதாவும் அனேகனும் திரும்பிப்பார்க்க, அம்ரிதாவோ அங்கு ஒரு பென்ச் –ல் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டே குச்சி ஐஸ் –ஐ ருசித்துக்கொண்டும் ஏதோ முனகிக்கொண்டும் இருந்தாள்.

“அம்மு அங்க இருக்கா…” – சூட்டிப்பான குரலோடு கூறிய ஆஷ்ரிதா எழுந்துக் கொள்ள, அவளை பிடித்து இழுத்து தன் அருகிலேயே அமர்த்தினான் அனேகன்.

“வாட் ஆர் யூ டூயிங் மேன்?” – எரிச்சலோடு கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஜஸ்ட் சிட் ஹியர்” – அழுத்தமாக கூறிய அனேகனது பார்வை அம்ரிதாவை தீர்க்கமாக ஊடுருவிக்கொண்டிருந்தது.

“ப்சே..” என்று அவனிடம் இருந்து சிறிது தள்ளி அமர்ந்த ஆஷ்ரிதாவின் கண்கள் அனேகனது பார்வை செல்லும் வழியில் பயணிக்கத் தொடங்கியது. அதன் இலக்கு அம்ரிதாவாக இருப்பதை அறிந்தவள்,

‘எதுக்கு இவன் இவ்வளவு தீவிரமா பார்க்குறான்?’ என்ற யோசனையில் ஆஷ்ரிதாவும் சில நொடிகள் அம்ரிதாவை உற்று கவனிக்கலானாள். அம்ரிதாவின் நடவடிக்கைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை போல இருப்பதை அப்பொழுதுதான் ஆஷ்ரிதாவால் இனம் கண்டு கொள்ள முடிந்தது.

“என்ன அவ? இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்குறா? எல்லாரும் பார்க்குறாங்க… நான் போய் அவள கூட்டிட்டு வரட்டுமா?” – தயக்கத்துடன் அனேகனிடம் கேட்டாள் ஆஷ்ரிதா.

“நோ” – மீண்டும் தீர்க்கமான பதில் அனேகனிடத்தில்.

“பட் வய்? எல்லாரும் அவள எப்படி பார்த்துட்டு போறாங்க பாருங்க… அசிங்கமா இருக்கு…” – ஆஷ்ரிதா.

“அவள பொறுத்தவர இப்ப அந்த ஐஸ் தான் உலகம்… மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்க மாட்டா…” – அனேகன்.

“ஏன்??” – ஆஷ்ரிதா.

“அவளுக்கு இப்ப அஞ்சு வயசு” – அனேகன்.

“என்ன அஞ்சு வயசா?” – புதிர்கள் சூழ்ந்த பிணியுடன் கேட்டாள் ஆஷ்ரிதா.

“யஸ்… உன்கிட்ட சொல்லியிருந்தேன் –ல, அவளுக்கு முன்ஜென்ம நியாபகமும், அடுத்த ஜென்ம நியாபமும் மாறி மாறி வருதுனு…” என்று அனேகன் கேட்க, கலங்கிய கண்களோடு பாவமாய் தலையை மட்டும் ”ஆம்” என அசைத்து வைத்தாள் ஆஷ்ரிதா.

“இது அவளோட நெக்ஸ்ட் இன்கார்னேஷன் –கான இண்டிமேஷன்” – அனேகன்.

“எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு? முன்ஜென்மம் பத்தி சொன்னீங்க… அதுல ஒரு லாஜிக் இருக்கு… இது என்ன அடுத்த ஜென்மம்? இனிமே வரப்போறத எப்படி இப்பவே கனிக்க முடியும்?” – ஆஷ்ரிதா.

“என் கூட வா…” – எழுந்து நடந்தான் அனேகன்.

ஆஷ்ரிதா அவள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

“கம் ஆன்… டைம் இல்ல…” – கடுகடுத்தான் அனேகன்.

“வந்து தொலையுறேன்” என்று கத்தியவள் ‘எப்ப பாரு கால் –ல சுடு தண்ணி ஊத்திட்டே அலைய வேண்டியது’ என தன் மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே வேகமாய் அவன் பின்னே சென்றாள்.

அவனது ஆறடி உயரம் எடுத்து வைக்கும் வேகமான கால் அடிகளுக்கு ஆஷ்ரிதாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவன் எடுத்து வைக்கும் இரண்டு அடிகளை கடக்க நான்கு அடிகள் வைத்தும் போதவில்லை பெண்ணால்.

“கொஞ்சம் மெதுவா நடங்க… உங்க வேகத்துக்கு என்னால நடக்க முடியல” – ஆஷ்ரிதா.

அவள் கூறியதை கேட்டவன், தன் இட பக்க தோள்பட்டையை பின்புறமாய் திருப்பி, தன் ஒற்றை புருவத்தை தூக்கி அவளை உற்று நோக்கிவிட்டு, “சாரி” என்றுவிட்டு தன் வேகத்தை குறைத்து நடக்கலானான்.

ஒருவழியாக இருவரும் அந்த பூங்காவின் வாசலை ஒன்றாய் அடைந்திட, தனது சிகப்பு நிற சுசுகி பலேனோ காரை நோக்கி நடந்தான் அனேகன். காரில் இருந்து எதையோ எடுக்கப்போகிறான் போல என நினைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. அவனோ காரினுள் அமர்ந்து அதனை உயிர்ப்பித்து, செலுத்தியபடி ஆஷ்ரிதாவின் அருகில் கொண்டுவந்து நிறுத்தினான்.

“கெட் இன்” – அனேகன்.

வினாவாய் விழித்தாள் ஆஷ்ரிதா.

“ஏறு” – அதிர்ந்தான் அனேகன்.

தடார் படார் என உள்ளே ஏறி அமர்ந்தவள் “அங்க வச்சே பேச வேண்டியதுதானே? காருக்கு உள்ள உட்கார்ந்துதான் பேசனுமா?” – – பொரிந்தாள் ஆஷ்ரிதா.

அவளது ஆர்ப்பாட்டத்தை சிறிதும் சட்டை செய்யாதவன் படுவேகமாக தன் வண்டியை கிளப்பினான்.

“ஹேய்… எங்க போறீங்க?? அம்மு அங்க இருக்கா… அவள தனியா விட்டுட்டு எங்க போறீங்க… ஸ்டாப் தி கார்…” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“அவளுக்கு ஒன்னும் ஆகாது… நீ அமைதியா வா!!” – வண்டியை செலுத்தியபடியே கூறினான் அனேகன்.

“என்ன ஒன்னும் ஆகாது? உனக்கு அவ வன் ஓஃப் தி பேஷண்ட்… அவ்வளவு தானே… அதான் இவ்வளவு ஈசியா சொல்லுற… ஆனா எனக்கு அவ தங்கச்சி… என் கூட பொறந்த தங்கச்சி… கருவா உருவானதுல இருந்து இப்ப வர ஒன்னாவே இருக்கோம்… உனக்கு வேணும்னா அக்கறை இல்லாம இருக்கலாம்… ஆனால் எனக்கு அக்கறை இருக்கு… காரை நிறுத்து முதல…” – என்று அவள் சொல்லி முடித்த மாத்திரத்தில் ‘கீர்ர்ச்ச்ச்ச்ச்ச்ச்’ எனும் சத்தத்தோடு உலோகத்தின் உராய்வை உணர்த்தி நின்றது அந்த கார்.

பலம் பொருந்தி முறுக்கேறிய தன் இரு கைகளையும் கார் ஸ்டியரிங் –ல் வைத்தபடி தலையை குனிந்து இருந்த அனேகனது மூச்சின் வேகமும் வெப்பமும் வழக்கத்தை விட தாறுமாறாய் எகுறி இருந்தது. தரை நோக்கி தாழ்த்தியிருந்த அவன் சிரசிலிருந்து நீண்ட ஒற்றை கத்தை முடி ஆழம் விழுது போல தொங்கிக்கொண்டிருக்க, அதன் ஊடாய் காட்சியளித்த அவனது சிவந்த கண்கள் ஆஷ்ரிதாவின் மனதில் திகலை நிறைத்தது.

காரானது தார் ரோட்டை உராய்ந்து நின்ற தாக்கத்தில் இடியென முழங்கிக்கொண்டிருந்த பெண் அவளும் அமைதியாகிப் போயிருக்க, அனேகனது இந்த அகோர அவதாரம் அவள் உடலை நடங்க வைத்தது. யாருமற்ற அந்த வீதியில் பொங்கி பறக்கும் புழுதி மட்டும் அவர்கள் மேனியில் மோதி சத்தத்தை எழுப்பி காற்றோடு மறைந்துக் கொண்டிருந்தது.

நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க ஆஷ்ரிதாவை திரும்பிப் பார்த்த அனேகன் “அவ வளர்த்த நாய் நீயே இவ்வளவு துடிக்கும்போது, அவளோட உயிரா இருந்தவன் நான் துடிக்கமாட்டேனா?” என்றான்.

அவனது பார்வையும் பாசையும் ஆஷ்ரிதாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.

“நா… நான்… அவ வளர்த்த நாயா? என்ன பேசுறீங்க நீங்க?” – அம்ரிதா தான் உனக்கு சோறு போட்டு வளர்க்கிறாள் என்று நக்கலாய் அவன் கூறுவதாக தவறாய் புரிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“என்ன வேணும்னாலும் பேசலாம் நான் கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்காதீங்க மிஸ்டர். அனேகன்…” – ஆஷ்ரிதா.

தன் பக்க கார் கதவை வேகமாக திறந்து வெளியேறிய அனேகன் காரின் முகப்பு வழியாக ஆஷ்ரிதா இருந்த பக்கத்திற்கு வந்து அந்த கதவையும் திறந்தான்.

“இறங்கு” – அனேகன்.

ஒரு நொடி தாமதமாக்கினாலும் இடியை போல இவன் கத்துவான் என்பதை அறிந்தவளாய் வேகமாக காரை விட்டு கீழே இறங்கினாள் ஆஷ்ரிதா.

இம்முறை அவள் இறங்கியதும் “வா” என்று கட்டளையாய் கூட கூறாமல் அந்த வீதியில் நடக்கத் துவங்கினான் அனேகன். அவனோடு பயணப்பட்டு பழகியவளுக்கு அவன் மூளையின் பாசைகள் புரிய தொடங்கிவிட்டது போலும் அவனை பிந்தொடர்ந்து தானும் நடக்கலானாள் ஆஷ்ரிதா.

பூங்காவில் வைத்து ஆஷ்ரிதா கூறியதை மனதில் வைத்திருந்தவன் அப்பொழுது தன் வழக்கமான வேகத்தை குறைத்தே நடந்துக்கொண்டிருந்தான். அதனால் ஆஷ்ரிதாவும் அதிகம் சிரமமின்றி அவனோட நடந்தாள்.

இவ்வாறு இருவரும் ஒருவருக்கு பின் ஒருவராக நடந்துக்கொண்டிருக்க, சில நிமிடங்களில் அங்கே ஒரு சிறிய கோவில் தென்பட்டது. அதன் வாசலுக்குச் சென்று தன் ப்ரெளன் நிற ஷு –வை கழற்றியவன் பின்னே வரும் ஆஷ்ரிதாவை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு ஒரு அடி தொலைவில் நின்றுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா “நானெல்லாம் என்னைக்கு கோவிலுக்கு வந்தேன்… என் அம்மா கூப்பிட்டே நான் போனது இல்ல…” என்று தனக்குள் கூறிக்கொண்டிருந்தவள் அனேகன் வெளியே வரும் வரை காத்திருக்கலாமென அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள்.

அப்படியே பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டிருந்தது. அவனும் வெளீயே வந்த பாடில்லை, இவளும் உள்ளே சென்ற பாடில்லை.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிக்கறது…” என்று நொந்தவள் வேறு வழியின்றி கோவிலுக்குள் சென்றாள்.

உள்ளே நுழைந்ததுமே அங்கு அனைவருக்கும் முதலில் காட்சி தந்தது ஒரு பெரிய அரச மரம் தான். வாசலின் எதிர் திசையில் கோவிலின் எல்லை சுவரை ஒட்டியபடி அது நின்றுக்கொண்டிருந்தாலும் அந்த சிறிய கோவிலை நிறைத்திருப்பது என்னவோ அந்த ஒற்றை பெரிய மரமாகதான் இருந்தது.

பல மஞ்சள் கயிறுகளும், சதுரமாகவும் செவ்வகமாகவும் செய்யப்பட்ட சிறு சிறு தொட்டில்களும் அந்த மரத்தில் அதிகம் இருப்பதை தூரத்தில் இருந்தே கண்டுக்கொள்ள முடிந்தது. மெதுவாக முன்னேறி அதன் அருகில் சென்றவள் “இத போல சினிமா –ல எல்லாம் காட்டுவாங்க தானே?” என்று மனதில் எண்ணியவள் அதில் இடை இடையே காணப்படும் காகித மாலையை தொட்டுப்பார்த்தாள்.

அப்பொழுது தன் தொண்டையை செறுமிக்காட்டியபடி அங்கு வந்து நின்றான் அனேகன்.

“இது எல்லாம் ஒவ்வொரு வேண்டுதல்… குழந்தை இல்லாதவங்க தொட்டில் கட்டுவாங்க, கல்யாணம் ஆகாதவங்க மஞ்சள் கயிறு கட்டுவாங்க, வேற ஏதேனும் வேண்டுதல் இருந்தா இதோ இத போல பேப்பர் –ல எழுதி மாலையா போடுவாங்க…” என்று அவன் கூற,

“தெரியும்… நானும் தமிழ் சினிமா எல்லாம் பார்த்திருக்கேன்” என்றாள் ஆஷ்ரிதா.

“ஆனா நான் இத எல்லாம் தமிழ் சினிமா பார்த்து தெரிஞ்சிக்கல…” – அனேகன்.

அடுத்து அவன் என்ன சொல்லவருகிறான் என பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“கம் டு தி பாய்ட்… அதோ அங்க ஒரு பாட்டி உட்கார்ந்திருக்காங்க தெரியுதா?” – அனேகன்.

“அந்த காவி சேல கட்டினவங்களா?” – ஆஷ்ரிதா.

“ஆமா… அவங்க தான் இந்த கோவில் –ல ஸ்பெஷல்… அவங்க சொல்லுற வாக்கு தப்பவே தப்பாது” என்ற அனேகனை ஏற இறங்க பார்த்தவள்,

“நீங்க டாக்டர் தானே?” – என்று கடுப்பு நிறைந்த நல்லக்கலோடு கேட்டாள்.

“அப்படிதான் ஊரு –லா எல்லாரும் சொல்லுறாங்க” என்றான் அனேகன்.

“என்னது… ஊருல சொல்லுறாங்களா? அப்ப நீங்க உண்மையிலயே டாக்டர் இல்லை?” – படபடத்தாள் ஆஷ்ரிதா.

“அது இல்ல… இந்த பாட்டிய சொல்லுறேன்… அவங்க சொன்னா அப்படியே நடக்கும்னு ஊருல எல்லாரும் சொல்லுறாங்க…” – அனேகன்.

தன் தங்கையை பற்றி இவரிடம் கேட்கலாமா எனும் எண்ணம் ஆஷ்ரிதாவின் மனதில் தோன்றினாலும் “இப்ப இத தெரிஞ்சிகிட்டு நான் என்ன செய்ய போறேன்?” என்றாள் அனேகனிடத்தில்.

“நான் சொல்லுறத கவனமா கேளு… அம்ரிதாவோட மறுஜென்ம கனிப்புகள இந்த பாட்டியால தான் சரியா சொல்ல முடியும்… சொல்லப்போனா அந்த அத்தியாயம் தொடங்கப்போறதே இவங்க மூலமாதான்… நான் சேகரிச்ச டீட்டயில்ஸ் படி ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் இவங்க அருள்வாக்கு சொல்லுறாங்க… மற்ற நாட்கள் அவங்க சாதாரணமா கூட யார்கிட்டயும் பேசமாட்டாங்க…” – அனேகன்.

“அப்படீன்னா அவங்க வெள்ளிக்கிழமை மட்டும் தான் வாயா திறப்பாங்க… அவங்க வாய திறக்குறது அருள்வாக்குக்காக மட்டும் தான் கரெக்ட் –ஆ?” –ஆஷ்ரிதா.

“யஸ்… விஷயத்தை தெரிஞ்சுக்கோ… இப்ப வரும்போது நீ என்கிட்ட கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் உன்ன தேடி தானா வரும்…” – அனேகன்.

“ம்ம்ம்… நீங்க சொல்ல வந்த விஷயம் முடிஞ்சிடுச்சுனா நான் சொல்ல வந்தத சொல்லலாமா?” – ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… சொல்லு” – அனேகன்.

“கார் –ல போய்ட்டே பேசலாமே… அம்மு தனியா இருப்பா…” – தயங்கியபடியே கூறினாள் ஆஷ்ரிதா.

தன் கண்களை மூடி அம்ரிதாவை மனதினுள் நிறைத்தவன், “ஷி இஸ் ஃபைன்… இங்கயே சொல்லு… அவகிட்ட போய்ட்டா நம்மாள பேசமுடியாது” – அனேகன்.

அவன் சொல்வதில் உள்ள உண்மை தன்மையை உணர்ந்துக்கொண்ட ஆஷ்ரிதா, அம்ரிதாவை எண்ணி துடிக்கும் மனதை மிகுந்த கடினப்பட்டு அடக்கினாள்.

“நேத்து அம்முவோட மேனேஜர் ஒரு ஃபயர் ஆக்சிடண்ட் –ல இறந்துட்டாரு… அவரோட இறுதி சடங்குக்காக காலையில அம்மு அங்க போனா.. அந்த டைம் நான் உங்கள மீட் பண்ணுறதுக்காக கால் பண்ணிட்டே இருந்தேன்… நீங்க எடுக்கல…” – ஆஷ்ரிதா.

“ஆமா… ஏன்னா நானும் அங்க தான் இருந்தேன்” – அனேகன்.

“வாட்?? நீங்க எதுக்கு அங்க??” – ஆஷ்ரிதா.

“பிகாஸ் ஹி இஸ் மை டேட்” – அனேகன்.

“என்ன?? நீங்க மோகனோட பையனா??” – அதிர்ச்சியடைந்த ஆஷ்ரிதா “அப்டீன்னா அம்முவுக்கு உங்கள தெரியுமா? இன்னைக்கு மோகனோட பையன மீட் பண்ணதா என்கிட்ட சொன்னாளே?” என கேட்டாள்.

“யஸ்… ஷி க்னோ மீ… ஆனால் மேனேஜர் பையனா மட்டும்தான் தெரியும்..” – அனேகன்.

“விச் மீன்ஸ்??” – ஆஷ்ரிதா அம்ரிதாவின் அலுவலகம் சென்றிருந்த பொழுது அனேகன் அவளை இறுக அனைத்து அவள் இதழை ருசித்தபடி நின்றிருந்த காட்சி நினைவுக்கு வந்தவளாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

அவள் மூளையில் விரிந்த அக்காட்சியை உணர்ந்த அனேகன், “அன்னைக்கு நான் அம்ரிதாவை கிஸ் பண்ணது வன் ஆஃப் தி ட்ரீட்மெண்ட்… அவளுக்கு அன்னைக்கு நடந்தது எதுவும் தெரியாது… இன்னைக்கு தான் அவ என்ன பார்த்து பேசினா… இதுவரை என் முகத்த கூட அவ பார்த்ததில்ல…” – அனேகன்.

‘நீ கிஸ் பண்ணது ட்ரீட்மெண்ட் –ஆ?’ என அவனை நாக்கை பிடுங்கிக்கொள்ளும் விதமாய் கேள்வி கேட்க துடித்தாள் ஆஷ்ரிதா. இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுக்க, மனதின் வலியை பொறுத்து துடிக்கும் உதட்டினை அடக்கிக்கொண்டு தன்மையாய் கேட்டாள் “அதுல என்ன ட்ரீட்மெண்ட்?” என்று.

“அவளோட மனசுல இருக்குற முன்ஜென்ம ரேகைகளை நான் படிச்சிட்டு இருக்குறப்ப, அடுத்த ஜென்மத்தோட அழைப்பு அவ ஆத்மா –வ உலுக்கத் தொடங்குச்சு… அதுல இருந்து மீட்டெடுக்கதான் நான் அப்படி செஞ்சேன்…” – அனேகன்.

இப்படி கூறுபவனிடம் என்ன பதில் கூறுவது என்று வாயடைத்து நின்றவள் தனது கையாளாகத நிலையை எண்ணி தன்னுள் அழுதுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“மிஸ். ஆஷ்ரிதா… டோட் பீ சோ எமோஷ்னல்… நான் சொல்லுறது ஈசியா புரிஞ்சிக்கற விஷயம் இல்ல… ஈசியா ஏத்துக்கக்கூடிய விஷயமும் இல்ல… எனக்கு புரியுது… பட் நீ எனக்கு கோ ஆப்ரேட் பண்ணா சீக்கிரம் நல்லபடியா முடியும் எல்லாம்…” – அனேகன்.

“யா… ஐயம் ஓகே…” – தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் தன் பேச்சை தொடர்ந்தாள்.

“நைட் அவ தூங்கும் போது அர்ஜுன் –னு ஒரு பேரு சொன்னா… யாரு அந்த அர்ஜுன் –னு தெரியல… எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துல ஃபிரெண்ட்ஸ் –ல யாரும் அர்ஜுன் –ங்கற நேம் –ல இல்ல…” – ஆஷ்ரிதா.

அனேகன் இதற்கு ஏதோ பதில் கூற வரவும், தன் கையை நீட்டி அவனை தடுத்த ஆஷ்ரிதா “இந்த ஜென்மத்துல இருக்கனும்னு அவசியம் இல்ல… அதுதானே? நான் ஏத்துக்க ஆரம்பிச்சிட்டேன் அனேகன்… இது அவளோட முன்ஜென்ம சொந்தமா இருக்கலாம்… ஏற்கனவே ஒரு நாள் அவ தூக்கத்துல தன்னோட அம்மாகிட்ட காலேஜ் டேஸ் பத்தி சொல்லிட்டு இருந்தா… நான் சின்ன குழந்தையா இருக்கறப்பவே எங்க அம்மா யசோதா இறந்துட்டாங்க… அப்படின்னா நிச்சயமா நீங்க சொன்னது போல போன ஜென்மத்து அம்மாகிட்ட தான் அவ பேசியிருக்க… இது புரிஞ்சதாலதான் உடனே உங்கள பார்த்து விஷயத்த சொல்லனும்னு கிளம்பினேன்…” – ஆஷ்ரிதா.

“குட்…” – அனேகன்.

“உங்கள பார்க்க முடியல –னு நான் வேற விஷயமா ஒரு இடத்துக்கு போனேன்… வரும்போது ரிக்‌ஷா –ல தூங்கிட்டேன்… அப்ப எனக்கு ஒரு கனவு வந்தது. அதுல ஒரு பெரிய அரண்மணை… ரொம்ப பழசா இருந்துது… அதுக்கு பெரியா இரும்பு கதவு… அங்க இருந்த சூழல் எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு ரொம்ப முரணா இருந்தது… என்ன அங்க கூட்டிட்டு போனது ரொம்ப சின்ன பையன்… அவன் எந்த கஷ்டமும் இல்லாம அந்த பெரிய கதவ அவ்வளவு ஈசியா தொறந்துட்டான்… உள்ள நாங்க ரொம்ப தூரம் நடந்தோம்… அப்புறம் அங்க ஒரு இடத்துல ப்ரைட்டா கோல்டன் கலர்ல ஒரு பெரிய ரே மேல இருந்து கீழ விழுந்திருந்தது… அந்த பையன் கை வச்சதும் அந்த ரேஸ் மறஞ்சி அங்கு ஒரு நோட் புக் தெரிஞ்சது… அந்த பையன் அத என்கிட்ட காட்டி இது நம்மளோட ஜென்ம சாசனம் –னு சொன்னான்… கடைசியா அவன் பேரு அர்ஜுன் –னு சொன்னான்…” என்று கூறி எச்சில் விழுங்கினாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)

error: Content is protected !!