Kanavu 16

Kanavu 16

கனவு – 16

அம்ரிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற ஆஷ்ரிதா அங்கு கண்ட காட்சியில் நிலைக் குழைந்துப்போனாள். மெல்ல மெல்ல அம்ரிதாவின் அருகே நடந்துச் சென்றவள்,

“அம்மு??” என கேள்வியாய் பார்த்தாள்.

“தெரியல அச்சு… லைட் ஆஃப் ஆகி இருந்தது… அத ஆன் பண்ணிட்டு வாங்க பொன்னம்மானு சொல்லி இந்த டேபிள தான் நகர்த்தினேன்… அப்படியே சேரோட சரிஞ்சி விழுந்துட்டாங்க… பேச்சு மூச்சே இல்ல…” – உதட்டை பிதுக்கிக்கொண்டு கூறினாள் அம்ரிதா.

அமைதியாய் பொன்னம்மாவின் அருகில் சென்ற ஆஷ்ரிதா தரையில் சரிந்து கிடந்த பொன்னம்மாவை நடுங்கும் கைகளுடன் தொட்டுப்பார்த்தாள். அவர் மேனி பனிக்கட்டியை போல சில்லென்று இருந்தது.

“பொன்னம்மா… எழுந்திருங்க… ப்ளீஸ் பொன்னம்மா… எழுந்திருங்க…” – கூப்பாடு போட்டாள் ஆஷ்ரிதா.

இதனை கண்ட அம்ரிதாவுக்கு கண்களில் கண்ணீர் அருவியென கொட்டியது. தன் கைகளால் வாயை அழுந்த பொத்திய வண்ணம் தேம்பிக்கொண்டிருந்தாள் அவள்.

“என்ன பாருங்க பொன்னம்மா… என் மேல கோபம் இருந்தா அடிங்க… திட்டுங்க… இப்படி ஒரு தண்டனை கொடுக்காதீங்க பொன்னம்மா… ப்ளீஸ் எழுந்திருங்க…” – ஒப்பாரி வைத்த ஆஷ்ரிதா, அம்ரிதாவிடம் திரும்பி,

“அம்மு… எழுந்திருக்க சொல்லு அம்மு… எழுந்து என்ன திட்ட சொல்லு அம்மு… அடிக்க சொல்லு அம்மு…” என்று கூறிவிட்டு பொன்னம்மாவின் கைகளை தன் கைகளால் பிடித்து தன்னை தானே அடிக்கத் தொடங்கினாள்.

“அடிங்க பொன்னம்மா… அடிங்க… முன்ன பின்ன யோசிக்காம கோபத்துல கத்துவியா-னு கேட்டு அடிங்க… நல்லா அடிங்க…” என வேகம் எடுத்து தன்னை அடித்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு…” என்று அவளிடம் ஓடிச் சென்ற அம்ரிதா, “ஸ்டாப் இட் அச்சு” என்று அழுதவாறே அவள் கையை பிடித்து நிறுத்தினாள்.

“நாம என்ன டி பாவம் பண்ணோம்… ஏன் இப்படி நிம்மதியே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம்? ஒரு வார்த்தை யாரையும் தப்பா பேசிருப்போமா அம்மு? ஏன்?? ஏன் இப்படியெல்லாம் நடக்குது?? என்னால தாங்க முடியல அம்மு…” – குலுங்கிக் குலுங்கி அழுத ஆஷ்ரிதாவை தன் மார்போடு அணைத்துக் கொண்டு தானும் அழுதாள் அம்ரிதா.

அந்நேரம் ஆஷ்ரிதாவின் தொலைபேசி அழைப்பு மணி அடிக்க, எழுந்துச் சென்ற அம்ரிதா அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ ஆஷ்ரிதா… அனேகன் ஸ்பீக்கிங்”

அனேகன் பெயரை கேட்டதும் அமைதியானாள் அம்ரிதா.

அந்த அமைதியை கணித்தவன், “அம்ரிதா?” என்றான்.

“யஸ்… நீங்க… எப்படி அக்கா மொபைல் –ல?” – இழுத்து பேசியவளிடம்,

“அத அப்பறமா சொல்லுறேன்… இஸ் தேர் எனி ப்ராப்ளம்?” என்றான்.

மீண்டும் எதிர் முனையில் மெளனம்.

“ஆர் யூ தேர் அம்ரிதா?” – அனேகன்.

“யா… யஸ்… ஐ அம்” – அம்ரிதா.

“எதுவும் பிரச்சனையா?” – மீண்டும் கேட்டான் அனேகன்.

“பொன்னம்மா…” – அடுத்த வார்த்தை வரவில்லை, அழுகை தான் வந்தது அம்ரிதாவுக்கு.

“பொன்னம்மா?” – கேட்டான் அனேகன்.

“கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா ப்ளீஸ்…” – அம்ரிதா.

“ஷ்யுர்… அட்ரஸ் டெக்ஸ்ட் பண்ணு… லொக்கேஷன் வாட்ஸ் ஆப் –ல ஷேர் பண்ணு” என கூறிவிட்டு, தான் அணிந்திருந்த கருப்பு நிற கையில்லா பனியனின் மேல் பர்பிள் நிற ஓவர் கோட்டை ஒன்றை அணிந்துக்கொண்டவன், தான் போட்டிருந்த அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் பேண்ட் -ஐ மாற்றாமல் தன் வீட்டில் இருந்து புறப்பட்டான் அனேகன்.

அனேகன் கேட்டபடி அனைத்தையும் வாட்ஸ் ஆப் –ல் அனுப்பி வைத்த அம்ரிதா அவன் நமக்கு துணை நிற்க வருகிறான் என்ற தெம்புடன் ஆஷ்ரிதாவிடம் சென்றாள்.

சரிந்துக்கிடந்த பொன்னம்மாவை நிமிர்த்து அமர்த்தி அவரது மடியில் தலை வைத்து படுத்தபடி அழுதுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. இதை கண்ட அம்ரிதாவுக்கு நெஞ்சில் இரத்தம் கொட்டியது. ஆஷ்ரிதாவையும் கடிகாரத்தையும் இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் “சீக்கிரம் வாங்க அனேகன்… என்னால முடியல…” என்று தன் மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.

“நான் வந்துட்டேன் சகி…” காரை ஓட்டியபடி மானசீகமாய் அனேகன் கூறிட ஒரு வித தெம்பு பிறந்தது அம்ரிதாவுக்கு. அவனுக்காய் காத்திருந்து, அழுது வடியும் கண்களோடு வாசலையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தவளுக்கு திடுமென நினைவுக்கு வந்தான் திரவியம்.

வேகமாய் தன் அலைபேசியை எடுத்தவள் திரவியத்தின் தொடர்பு எண்ணை எடுத்து அழைப்புக் கொடுத்தாள்.

“ஹலோ… அம்மு… என்ன இப்பதானே பார்த்துட்டு போனோம்… அதுக்குள்ள கால்?? உயிரோட இருக்கேனா –னு செக் பண்ணுறியா?” – விஷயம் அறியாமல் கேலியாய் கேட்டான் திரவியம்.

“திரு….” – அழு குரலில் இழுத்து நிறுத்தினாள் அம்ரிதா.

“ஹேய் என்ன ஆச்சு? ஏன் அழுதுட்டு இருக்குற??” – பதறிப்போனான் திரவியம்.

“எங்க வீட்டுல வேலை செய்யுற பொன்னம்மா பத்தி சொல்லியிருக்கேன் –ல??” – அம்ரிதா.

“ஆமா அம்மு… என்ன ஆச்சு அவங்களுக்கு?? உடம்பு எதுவும் முடியலயா??” – திரவியம்.

“இறந்துட்டாங்க டா” – கதறிக்கொண்டே கூறினாள் அம்ரிதா.

“ஓ சிட்… என்ன ஆச்சு… எப்படி??” – திரவியம்.

“தெரியல டா… பேச்சு மூச்சே இல்ல… உடம்பு ரொம்ப சில் –னு இருக்கு… இறந்து ரொம்ப நேரம் இருக்கும் போல… இன்னைக்கு பார்த்தா நாங்க இப்படி ஊர சுத்தீட்டு லேட்டா வீட்டுக்கு வருவோம்??” என்று கூறி ஓவென அழத் தொடங்கினாள் அம்ரிதா.

“நோ டா… அழாத… நான் வர்றேன் உடனே… ஆனா உங்க வீடு?? வீடு எனக்கு தெரியாதே?!” – திரவியம்.

“வெயிட்… என் ப்ரெண்ட் ஒருத்தர் வர்றாரு… நீ உன் வீட்டு பக்கத்துல இருக்கற சிக்னல் –ல நில்லு… அவர உன்ன பிக் அப் பண்ணிட்டு வர சொல்லுறேன்” – அம்ரிதா.

“ஓகே அம்மு… இதோ உடனே கிளம்புறேன்” – திரவியம்.

திரவியத்தின் அழைப்பை துண்டித்தவள் ஆஷ்ரிதாவின் அலைபேசியை எடுத்து அனேகனுக்கு அழைப்பு கொடுத்தாள். அழைப்பை ஏற்ற அனேகன்,

“ஆன் தி வே பேபி…” என்றான்.

“அனேகா… என் ப்ரெண்ட் ஒருத்தர பிக் அப் பண்ணிட்டு வர முடியுமா? நீங்க வர்ற வழி தான்… ப்ளீஸ்…” – அம்ரிதா.

“இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம்… எங்க –னு இடம் சொல்லு” – அனேகன்.

திரவியம் நிற்கும் சிக்னலை அனேகனுக்கு சொல்லிவிட்டு திரவியத்தின் நம்பரையும் கொடுத்தாள் அம்ரிதா.

“ஓகே பேபி… நான் பார்த்துக்கறேன்… நீ பத்திரமா இரு” – அனேகன்.

“ம்ம்ம்… சரி” என அழைப்பை துண்டித்தவள் மீண்டும் திரவியத்திற்கு அழைப்பு கொடுத்தாள்.

“திரு… அவர்கிட்ட உன் நம்பர் கொடுத்திருக்கேன்… ஹி வில் கான்டேக்ட் யூ…” என்றாள்.

“டன் அம்மு… நான் சிக்னல் ரீச் ஆகிடுவேன் இப்ப” – திரவியம்.

“ஓகே டா” அழைப்பை நிறுத்தினாள் அம்ரிதா.

ஆஷ்ரிதா இன்னும் தன் புலம்பலை நிறுத்தியதாய் தெரியவில்லை. பொன்னம்மா… பொன்னம்மா… என்ற அவளது ராகம் அவ்வீட்டில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அந்த அறைக்கு செல்லும் தைரியம் இல்லாமல் ஹாலிலேயே நின்றுக்கொண்டிருந்த அம்ரிதா தன் தாய் யசோதாவின் உருவ படத்தை பார்த்து அழுதுக்கொண்டே “ஏன் மா? எங்களுக்கு துணையா பொன்னாம்மா இருக்காங்க –னு நினைச்சோம்… அவங்களையும் ஏன் மா உன்கூட கூப்பிட்டுக்கிட்ட? உன் பொண்ணுங்க மேல உனக்கு என்ன மா கோபம்?? இனி யாரு மா இருக்கா எங்களுக்கு??” என்று விசும்பிக் கொண்டிருந்தாள்.

அவளது தாய் எந்த பதிலும் தராமல் சிரித்த வண்ணம் அப்படியே படத்தில் இருக்க, நிற்க திராணியற்றுப் போனவள் சோபாவில் வந்து குத்துக்கால் வைத்து முட்டைக் கட்டிக்கொண்டு அம்ர்ந்தாள்.

அம்ரிதா சொன்ன சிக்னல் வந்ததும் தன் காரை ஓரமாய் நிறுத்திய அனேகன், அவள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு கொடுத்தான்.

“ஹலோ” – திரவியம்.

“ஹாய்… நான் அம்ரிதா… ப்ச்… ஆஷ்ரிதாவோட ப்ரெண்ட்… உங்கள பிக் அப் பண்ண வந்திருக்கேன்” – அனேகன்.

“ஹா… யா ப்ரோ… நான் சிக்னல் –ல தான் நிக்கறேன்… என்ன வண்டி?” – திரவியம்.

“ரெட் கலர் பலேனோ… நீங்க என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க?” – அனேகன்.

“ப்ளூ கலர் செக்கட் ஷர்ட்” – திரவியம்.

“யா… நான் உங்கள பார்த்துட்டேன்… கம்மிங்…” என்ற அனேகன் தனது காரை இயக்கிக்கொண்டு திரவியத்தின் அருகில் நிறுத்தினான்.

காரின் பக்கவாட்டு கண்ணாடியை இறக்கிவிட்டு தலையை வெளியே நீட்டி “ஹாய்… மிஸ்டர்…??” என்று தன் புருவத்தில் கை வைத்து யோசித்தான் அனேகன்.

அனேகனை அங்கு சற்றும் எதிர்பாராதவனுக்கு அது பேரதிர்ச்சியாய் இருந்தது. என்னவென்றே சொல்லத்தெரியாத உணர்வு ஒன்று அவனை ஆட்கொள்ள ஸ்தம்பித்து நின்றுக்கொண்டிருந்தான் திரவியம்.

“எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில் மேன்… திஸ் இஸ் அனேகன்… இப்ப கால் பண்ணனே…” என்றான் அனேகன்.

அதிர்ச்சியில் விழித்துக்கொண்டிருந்தவன் ஒன்றும் பேசாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு காரின் பின்புறமாய் சுற்றி வந்து முன்னால் ஏறி அமர்ந்துக்கொண்டான்.

‘வாட்ஸ் ஹப்பனிங்? நேம் கேட்டா ஒன்னும் சொல்லாம வந்து உட்கார்ந்துட்டான்’ என மனதில் நினைத்த அனேகன், தன் தோளை உலுக்கிக்கொண்டு அலைபேசி காட்டும் லோக்கேஷனை பார்த்துக்கொண்டே காரை மீண்டும் இயக்கத் தொடங்கினான்.

‘பெயர் கேட்டதற்கே பதில் சொல்லவில்லை இவனா பேசப்போகிறான்?’ என்று அனேகன் எண்ணினானோ என்னவோ அம்ரிதாவின் வீட்டை அடையும் வரை திரவியத்திடம் அவன் பேச்சு கொடுக்கவில்லை.

திரவியமோ மிகுந்த குழப்பத்தில் வாயடைத்து அமர்ந்திருந்தான். ‘அம்ரிதாவுக்கு இவனை எப்படி தெரியும்? அச்சு –கிட்ட அவ்வளவு பேசினேனே இவன பத்தி… அம்மு –க்கு தெரிஞ்சு நடக்கறதுக்கு வாய்பில்லையே?’ என தலையை சுற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.

இருவரிடையே மெளனம் குடிக்கொண்ட வண்ணம் தொடர்ந்த அப்பயணத்தின் முடிவாய் அம்ரிதாவின் வீடு வந்தது. அனேகன் அவ்வீட்டின் போர்ட்டிகோவில் தன் காரை நிறுத்தியதும், ஆடவர் இருவரும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஹாலில் முட்டை கட்டியபடி அழுதுக்கொண்டிருந்த அம்ரிதாவின் அருகில் இரண்டே அடியில் சென்றிருந்தான் அனேகன்.

“அம்ரிதா” என்று அவள் தோளில் கைவைத்தான் அனேகன்.

“நிமிர்ந்து பார்த்தவள், அனேகா… பொன்னம்மா…” என அவர் அறையை கையால் சுட்டிக்காட்டிவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள்.

அம்ரிதா காட்டிய திசை நோக்கி விரைந்த திரவியம் அங்கு பொன்னம்மாவின் மடியில் படுத்து அழுது தேம்பிக்கொண்டிருக்கும் ஆஷ்ரிதாவை கண்டு பதறி ஓடினான்.

“அச்சு… நோ… ஒன்னுமில்ல… இட்ஸ் ஓகே… ரிலக்ஸ்…” என்று அவள் தோள்களை பிடித்து நிமிர்த்தி ஆறுதல் கூறினான்.

திரவியத்தை கண்டதும் ஆஷ்ரிதாவின் ஓலம் அதிகரிக்க அவளை தோளோடு அணைத்துக்கொண்டான் திரவியம்.

அக்காவின் அலறல் சத்தம் அம்ரிதாவையும் தாக்கிட, “பொன்னம்மா…” என கத்தியவாறு தானும் குலுங்கி அழத் தொடங்கினாள் அம்ரிதா. பொன்னம்மா இறந்துவிட்டார் என்பதை அனேகனால் அப்பொழுது புரிந்துக்கொள்ள முடிந்தது.

தன்னவள் தன் கண் எதிரே கதறி அழும் அவலத்தை காண இயலாத அனேகனுக்கு அவளை இறுக கட்டி அணைத்து ஆறுதல் சொல்லவேண்டுமென மனம் துடித்தது. ஆனால், தற்பொழுது அவள் முழுதாய் அம்ரிதாவாய் இருக்கிறாள். என்னதான் அவள் மனதில் அனேகன் மேல் நேசம் இருக்கிறதென்றாலும், அவளது மேனேஜரின் மகனாய் அவளுக்கு அறிமுகமான அனேகன், இதுவரை தன் விருப்பத்தை எந்த வகையிலும் அவளுக்கு தெரியப்படுத்தியது இல்லை. அந்த ஒற்றை காரணம் அப்பொழுது அவன் கைகளில் தளையிட்டிருந்தது.

“ஜஸ்ட் காம் அம்ரிதா… இட்ஸ் ஆல்ரைட்” என்று அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான் அனேகன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கும் பொழுது, சகோதரிகள் இருவர் மட்டும் தனியாய் இருக்கும் வீட்டில், உடைந்து அழுதுக்கொண்டிருக்கும் தன் அக்கா ஆஷ்ரிதாவுக்கு துணையாய் தைரியமாய் இருக்க வேண்டுமென இத்தனை நேரமும் தன் அழுகையையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அம்ரிதாவுக்கு தற்பொழுது அணையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல அழுகை பெருக்கெடுத்து வந்தது.

“எனக்கு பொன்னம்மா வேணும் அனேகா… எனக்கு வேணும்…” என்று அவனது நெஞ்சில் குத்திக்கொண்டே தோளில் சரிந்தாள் அம்ரிதா.

ஸ்பரிசம் பட்டால் தன்னை தன்னுள் இழுத்துக்கொள்ளும் தொட்டாற்சிணுங்கியை போல, அவள் தீண்டியதுமே தன்னை மறந்து தன்னவளை தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டான் அனேகன். அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகளை கைவிட்டவனாக, அம்ரிதாவை சிறு குழந்தையை ஏந்துவது போல தன் கரத்தின் வளைவில் சரித்து ஏந்தியவாறு அவளது முடியினை கோதிய படி,

“ஒன்னுமில்ல டா… கூல்… கூல்… நான் உன் கூட தான் இருக்கேன்… இட்ஸ் ஓகே…” என்று அவளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தான் அனேகன்.

“மதியமே அவங்க சரியா பேசல தெரியுமா?? நானும் அச்சுவும் வெளியில கிளம்பும்போது வந்து டாடா காட்டவும் இல்ல… நாங்க வேற ரொம்ப லேட்டா இப்ப தான் வீட்டுக்கு வந்தோம்… எப்ப நடந்துதுனே தெரியல… உடம்பெல்லாம் சில்லுனு இருக்கு அனேகா… பாவம் பொன்னம்மா…” என கதறித் துடித்தாள் அம்ரிதா.

“நோ டா பேபி… நோ… அவங்க போக வேண்டிய நேரம் வந்தாச்சு… போய்ட்டாங்க… நாம ஏத்துக்கதான் வேணும்… அழாத… காம் டவுன் டா… காம் டவுன்…” என அவளை நிமிர்த்தி முதுகினை தடவிக்கொடுத்தான் அனேகன்.

எழுந்து ஏங்கி ஏங்கி அழுகையை முழுங்கியவள் “அச்சு… அச்சுகிட்ட போகனும்…” என்றாள்.

“வா” என அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தான் அனேகன். அங்கு ஆஷ்ரிதாவும் கதறி கலைத்துப்போய் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவளது கரத்தை பற்றியபடி அருகில் அமர்ந்திருந்தான் திரவியம்.

அனேகனது அரவணைப்பில் மெதுவாய் நடந்துவந்து ஆஷ்ரிதாவின் அருகே அமர்ந்த அம்ரிதா “அக்கா” என ஆஷ்ரிதாவின் தோளில் கை வைக்க அவளை தன்னோடு சேர்த்தணைத்து மீண்டும் அழத்தொடங்கினாள் ஆஷ்ரிதா. சிறிது அழுது தீர்க்கட்டும் என அவர்களை தடுக்காமல் அப்படியே விட்டிருந்தனர் ஆடவர் இருவரும்.

“ஹலோ மிஸ்டர்… உங்க நேம் என்ன?” திரவியத்தை நோக்கி கேட்டான் அனேகன்.

பதிலாய் திரும்பிப்பார்த்து ஒரு முறைப்பை மட்டுமே வெளிப்படுத்தினான் திரவியம்.

“நாம தான் அடுத்த வேலைகள செய்யனும் பாஸ்… ஒவ்வொரு முறையும் மிஸ்டர் மிஸ்டர் –னு கூப்பிட வேணாமே –னு கேட்குறேன்…” என்றான் அனேகன்.

நிலவரத்தை கருத்தில் கொண்ட திரவியம் வாய் திறந்து “திரு” என்றான்.

“அப்ப மிஸ்டர் –னே கூப்பிடலாம்” என்ற கூறிய அனேகன் ‘பேர சொல்ல இவ்வளவு யோசனையா?’ என முனகிக்கொண்டே தன் அலைபேசியில் ஏதோ தட்டியவாறு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ஹாலில் நின்றுக்கொண்டு “திரு” என அவன் அழைக்க, எழுந்து வந்தான் திரு.

“அவங்க ரிகேஷன் யாருக்கெல்லாம் சொல்லனுமோ சொல்லிடுறீங்களா?” – அனேகன்.

“இல்ல… சொல்லிக்கற மாதிரி யாரும் இல்ல… அவங்க ஹஸ்பண்ட் இறந்த அப்பறமா இங்கயே தான் இருக்கறதா அச்சு சொல்லிருக்கா…’ – திரவியம்.

“ஓ… ஃபைன்… அப்படீன்னா காலையில தகனம் செஞ்சிடலாமா?” என்று அனேகன் கேட்டு நிற்க

“அனேகன்” என்று அங்கு வந்தாள் ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… சொல்லு…” என்று அவள் புறம் திரும்பினான் அனேகன்.

“எங்களுக்குனு யாரும் இல்ல… காலையில சுப்பு மட்டும் வாசல் க்ளீன் பண்ண வருவா… அப்ப அவ ஒரு டைம் பொன்னம்மா –வ பார்த்துக்கட்டும்… தென் எல்லாத்தையும் முடிச்சிடலாம்…” என்றாள்.

அவள் கூறியபடியே காலையில் சுப்பு வீட்டார் வந்து பார்க்கும் வரை பொன்னம்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்து, சகல மரியாதையோடு இம்மண்ணுலகை விட்டு அவருக்கு விடைக் கொடுத்தனர்.

எல்லாம் முடிந்து வீடே மயான அமைதிக் கொண்டிருந்தது. ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் உணவு மேசையில் அருகருகே அமர்ந்திருக்க, அனேகனும், திரவியமும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

முந்தைய தினம் பொன்னம்மாவுக்காக வாங்கி வந்த குழாய் புட்டு பார்சல் மேசையில் வைத்தபடி அப்படியே இருக்க, அதை பார்த்து“அவங்களுக்கு நாம சர்ப்ரைஸ் கொடுக்க இத வாங்கிட்டு வந்தோம்… கடைசியில அவங்க நமக்கு ஷாக் கொடுத்துட்டாங்க என்ன அம்மு?” என்றாள் ஆஷ்ரிதா.

கண்களில் கண்ணீர் கட்டி நிற்க, என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த பார்சலை எடுத்து அப்புறப்படுத்தினாள் அம்ரிதா.

“கடைசி நிமிஷத்துல என்கிட்ட பேசாம, மூஞ்ச தூக்கிவச்சிகிட்டே போய்ட்டாங்களே அம்மு? போற நேரத்துலயாவது என்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு போய்ருக்கலாம் –ல?? நேத்து இதே நேரம் தான் அவங்கள ஊட்டிவிட சொல்லி அடம்பிடிச்சி சாப்ட்டு போனேன்” என்று தன் முகத்தை மூடி அழுதாள் ஆஷ்ரிதா.

“இட்ஸ் ஓகே அச்சு… விடு… வி ஹவ் டு மூவ் ஆன்” என்று அவளை அணைத்துக்கொண்டாள் அம்ரிதா.

(களவாடுவான்)

error: Content is protected !!