Kanavu 19

Kanavu 19

கனவு – 19

அம்ரிதாவையும் அனேகனையும் மாறி மாறி கேள்வியாகப் பார்த்தாள் ஆஷ்ரிதா.

“ஷீ ஹேவ் டு நோ இட் அம்ரிதா… எத்தனை நாளைக்கு உன்னால இத மறைக்க முடியும்?” – அனேகன்.

பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதுக்கொண்டிருந்தாள் அம்ரிதா. அவள் அருகே சென்ற ஆஷ்ரிதா அவளது தோள்களில் கைவைத்து “அம்மு… என்ன டா?” என்று அமர்ந்த அடுத்த கணம் அவளை கட்டி அணைத்து ஓவென கதறத் தொடங்கினாள் அம்ரிதா.

ஆஷ்ரிதாவுக்கு மட்டுமல்ல, திரவியத்திற்குமே எதுவும் விளங்கவில்லை.

“அனேகன் என்ன ஆச்சு?” என்றான் திரவியம்.

“அத அம்ரிதாவே சொல்லுவா திரு” – அனேகன்.

“நோ அனேகன்… நோ… ஐ காண்ட்” – கண்ணீரில் தத்தளித்தாள் அம்ரிதா.

“பரவாயில்ல அம்மு சொல்லு… என்ன ஆச்சு?” அம்ரிதாவின் கன்னத்தை பற்றியபடி கேட்டாள் ஆஷ்ரிதா.

“இல்ல… முடியாது… என்னால சொல்ல முடியாது… நான் எப்படி டி சொல்லுவேன் உன்கிட்ட” என்று தேம்பித் தேம்பி அழுதாள் அம்ரிதா.

“நீங்களே சொல்லுங்க அனேகன்” பஞ்சால் செய்த வார்த்தைக் கொண்டு கேட்டாள் ஆஷ்ரிதா.

அமைதி காத்து அம்ரிதாவை பார்த்தான் அவன். அவளோ கண்ணீர் கடலில் தான் மிதந்துக்கொண்டிருந்தாள். திரவியத்திற்கு பொறுமை காக்க முடியவில்லை.

“அம்மு அழுது இதுவரை நான் பார்த்ததில்ல அனேகன்… இன்னைக்கு அவ இவ்வளவு கதறுறானா… நீங்களே சொல்லிடுங்களேன்” என கேட்டான் திரவியம்.

“சரி… நானே சொல்லுறேன்… மோகன் எத்தனையோ இல்லீகல் பிஸ்னஸ் பண்ணுறான்… அதுல ஒன்னு பொண்ணுங்க… பொண்ணுங்கள கட்த்தி விக்கிறது அவனுக்கு கடையில கத்தரிக்காய் விக்கற மாதிரி… இத்தனை வருஷம் போலீஸ் கண்ணுல மண்ண தூவியும், மாட்டிக்கற சின்ன சின்ன கேஸ்லயும் தனக்கு பதிலா வேற ஆள ஜெயிலுக்கு அனுப்பியும் தப்பிச்சிட்டு இருந்தான். விஸ்வநாதன் பணத்துக்கு ஆசை பட்டு மோகனோட கூட்டு சேர்ந்த ஆரம்ப காலத்துலயே மோகன் தப்பான தொழில் செய்யுறது யசோதா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. அவங்க கெஞ்சியும் பார்த்திருக்காங்க, கண்டிச்சும் பார்த்திருக்காங்க. விஸ்வநாதன் கேட்கல. ஒரு அக்ரிமெண்ட் –காக யசோதாவையே மோகன் கிட்ட பணயமா வைச்சான் விஸ்வநாதன். அதுக்கு அப்புறமா லண்டன் –ல ஒரு பொண்ண செட் பண்ணிட்டு அங்க ஓடிட்டான். விஸ்வநாதன், யசோதா அம்மாவ வச்சி பெட் கட்டி அதுல தோத்துப்போய், தப்பிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு ஓடிட்டதா பொய் சொல்லி மோகன் யசோதா அம்மாவுக்கு எல்லா விதத்துலயும் டார்ச்சர் கொடுத்திருக்கான். அந்த வயசுல அனுபவிக்க கூடாத வேதனை எல்லாம் யசோதா அம்மா அனுபவிச்சாங்க. இருந்தும் தன் பொண்ணுங்க முன்ன எதையும் காட்டிக்காம சிரிச்சிட்டு வாழ்ந்தாங்க. ஆனா இந்த மோகன் யசோதா அம்மாவோட நிறுத்தல” என கூறி சற்று தயங்கினான் அனேகன்.

யசோதா அனுபவித்த கொடுமைகளை கேட்டதில் திரவியத்திற்கே கண்கள் கலங்கிவிட்டது. ஆஷ்ரிதாவை கேட்கவா வேண்டும்? தன் நெஞ்சில் கை வைத்தபடி உடைந்து போய் அமர்ந்திருந்தவள்

“சொல்லுங்க… என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“நான் கேட்குறேன் –னு தப்பா எடுத்துக்காத ஆஷ்ரிதா… ஒரு டாக்டரா உன்கிட்ட கேட்குறேன்… உன்னோட ப்யூபர்டிக்கு அப்பறம் உனக்கு மென்சுரேஷன் சைக்கிள் கம்ப்ளீட் –ஆ இல்ல… சரிதானே?” – அனேகன்.

“ஆ… ஆமா” – கலங்கியபடி கூறினாள் ஆஷ்ரிதா.

“அதுக்கு காரணம் உன்னோட ஹெல்த் இஸ்யூஸ் இல்ல… மோகன்… மோகன் தான் காரணம்… உனக்கு ட்ரக்ஸ் கொடுக்கப்பட்டு உனக்கே தெரியாம தான் அது நடந்தது… அன்னைக்கு யசோதா அம்மா அம்ரிதாவுக்கு உடம்பு முடியலை –னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்காங்க. பொன்னம்மா நேரத்தோட வேலைய முடிச்சிட்டு தன்னோட வீட்டுக்கு போய்ட்டாங்க. நீ நல்லா தூங்கிட்டு இருந்த. உன்ன வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டு அம்ரிதாவ தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனதுதான் யசோதா அம்மா பண்ண பெரிய தப்பு. வழக்கம் போல யசோதாவ டார்ச்சர் பண்ண மோகன் உங்க வீட்டுக்கு வந்தப்ப கதவு பூட்டியிருந்தத பார்த்து கோபமாகி ஜன்னல் கதவை குத்தி உடச்சிட்டு கிளம்பப்போன நேரம் உடஞ்ச ஜன்னல் கதவு வழியா நீ தெரிஞ்சிருக்க” என்று அனேகன் கூறவும் தன் கையை காட்டி அவன் பேச்சை நிறுத்திவிட்டாள் ஆஷ்ரிதா.

அவள் கண்கள் தீயென சிவந்திருந்தது. உள்ளம் கனலில் விழுந்த புழுவென துடித்துக்கொண்டிருந்தது.

“மோகனோட உண்மையான முகம் நான் சொல்லிதான் என் அம்மாவுக்கு தெரியும். அதனாலதான் அம்ரிதா எங்க வீட்டுக்கு வந்தப்ப நீ –னு நினைச்சு என் அம்மா அவகிட்ட மன்னிப்பு கேட்டாங்க… ஐ அம் சாரி ஆஷ்ரிதா” – அனேகன்.

“….” மெளனாமாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

“உனக்கு உண்மை தெரியனும் ஆஷ்ரிதா… உனக்கு நடந்தது நியாயம் இல்ல தான்… ஆனால் இதுதான் நிதர்சனம்… இத ஏத்துக்குட்டு நீ தையரியமா இந்த உலகத்த ஃபேஸ் பண்ணனும்” – அனேகன்.

“எத ஏத்துக்கனும் அனேகன்?” தீர்க்கமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஆஷ்ரிதா… ப்ளீஸ்” – அனேகன்.

“இட்ஸ் ஓகே அனேகன்… சொல்லுங்க… காதால கேட்டாதான் அத தாங்குற சக்தி இந்த இதயத்துக்கு வரும்” – ஆஷ்ரிதா.

“நோ ஆஷ்ரிதா… இட்ஸ் நாட் ஃபேர்” – அனேகன்.

“அனேகன் ப்ளீஸ்… சொல்லுங்க” – ஆஷ்ரிதா.

சிறிது நேரம் மறுத்துப் பார்த்தவன் அவளது அடத்தை தாக்குப்பிடிக்க முடியாதவனாய் கூறினான் “உன்னால கொழந்த பெத்துக்க முடியாது ஆஷ்ரிதா” என்று.

அவள் முகத்தில் இறுக்கம். கண்ணகளில் கண்ணீர். உதட்டில் சிரிப்பு.

“ஐ அம் சாரி ஆஷ்ரிதா” – அனேகன்.

“நீங்க எதுக்காக சாரி சொல்லனும்? என் தலை எழுத்து அப்படி இருந்தது உங்க தப்பு இல்லையே?” – வேதனை நிரம்பிய குரலில் சிரிப்பை அப்பிய உதட்டோடு கூறினாள் ஆஷ்ரிதா.

“உன்ன இந்த நிலைமைக்கு கொண்டுவந்த அந்த மோகன காலி பண்ண உன் தங்கச்சி போராடிட்டு இருந்தா ஆஷ்ரிதா… கம்பெனிக்கே ஓனர் –ஆ இருக்குறவன் மேனேஜர் போஸ்ட் –ல மட்டும் யாரையும் அப்பாய்ன்ட் பண்ணாம, அந்த இடத்துல அவனே இருந்தது வேலைய பார்த்ததுக்கு முக்கிய காரணம் பொண்ணுங்க டீலிங்க் தான்… ஆனா வெளியில பெரிய மனுஷன், தன்னலம் இல்லாதவன்னு பேரு… அவன் கூடவே இருக்கறஅம்ரிதா யசோதாவோட பொண்ணு-னு அந்த மோகனுக்கு தெரியல… ஏன்னா யசோதா இறந்ததுமே மோகனுக்கு ட்ரக் ட்ரேஸ்ன்ஸ்போர்ட் –ல பெரிய ப்ரெஷர். அதுல கான்சென்ரேட் பண்ண ஆரம்பிச்சவன் அடுத்து உங்க சாப்டர் –அ எடுக்கல… சின்ன வயசுல குடி போதையோட பார்த்த முகம் அவனுக்கு நியாபகமும் இல்ல… இதுதான் நமக்கு ப்ளஸ் –ஆ அமைந்த விஷயம். மோகன அன்னைக்கு நான் கொல்லலைனா அடுத்த நாள் அம்ரிதா கொலை பண்ணியிருப்பா… அம் ஐ ரைட் அம்ரிதா?” என அம்ரிதாவை பார்த்தான் அனேகன்.

இது கூடுதல் அதிர்ச்சி ஆஷ்ரிதாவுக்கு. மோகன் இறந்த செய்தியை சகோதரிகள் இருவரும் அலைபேசியில் பார்த்த அன்று அம்ரிதா அவளிடம், தான் ஒரு கோல்மால் செய்திருப்பதாகவும் அதனால் தன் மொபைல் –ஐ சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதாகவும் கூறியது நினைவுக்கு வந்தது. அதன்மூலம் மோகனை தீர்த்துக்கட்ட தான் ஏதோ செய்திருக்கிறாள் என புரிந்தது அவளுக்கு.

திரவியத்தின் மனமோ அனேகனுக்கு தானும் ஒரு சல்யூட் அடிக்க வேண்டுமென துடித்தது.

அம்ரிதாவின் நிலையோ படுமோசமாய் போனது.

“அச்சு…” என அவளை கட்டிக் கொண்டு அழுது தவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிரசை இதமாய் தடவிக்கொடுத்த ஆஷ்ரிதா “எனக்காக எதுக்கு டி இவ்வளவு ரிஸ்க் எடுத்த?” என்றாள்.

அம்ரிதாவுக்கு எவ்வளவு அழுதும் தீரவில்லை. தன் கடைசி கண்ணிர் வடிந்து தீரும் வரை அழ வேண்டும் என எண்ணினாள் போலும். அவளின் அழுகை சத்தம் மட்டும் தான் வீட்டை நிறைத்திருந்தது.

“அம்மு… நீதான சொல்லியிருக்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அடுத்த நிமிஷம் மூச்சு நிக்கப்போகுதுனு தெரிஞ்சாலும் தைரியமா இருக்கனும்னு… எனக்கு சொல்லிக்கொடுத்துட்டு நீயே இப்படி ஏங்கி ஏங்கி அழலாமா? என் தைரியமே நீ தான் அம்மு… நீ அழுத நான் உடஞ்சிருவேன் டி… ப்ளீஸ் அழாத” – ஆஷ்ரிதா.

அவள் பேசியதை கேட்டு தன்னை சாந்தப்படுத்திக்கொண்ட அம்ரிதா தன் கண்களைத் துடைத்து அமைதியானாள். சிறிது நேரம் அவளை சமாதானப்படுத்திய ஆஷ்ரிதா, எழுந்துக் கொண்டு “சரி நான் சமைக்கிறேன்… இருந்து சாப்பிட்டு போங்க ரெண்டு பேரும்” என திரவியத்தையும் அனேகனையும் பார்த்து கூறினாள்.

அதை கேட்ட திரவியத்தின் மனம் வெதும்பிப்போனது.

“என்ன அச்சு? விளையாடுறியா?” – திரவியம்.

“ஏன் பா? நான் சமைக்கிறேன் –னு சொன்னது விளையாட்டா தெரியுதா? நல்லாதான் சமைப்பேன். பயப்படாம சாப்பிடலாம்” என மென்னகை புரிந்தாள்.

“அச்சு… சிரிச்சனு வை அறஞ்சிருவேன்” – திரவியம்.

“நான் சிரிக்கறது அந்த கடவுளுக்கு தான் பிடிக்காதுனு நினைச்சென்… உனக்குமா திரு?” – ஆஷ்ரிதா.

“அச்சு…” வாயடைத்து நின்றான் திரவியம்.

அவன் தோளில் கை வைத்து அழுத்திய அனேகன் ஆஷ்ரிதாவை செல்லுமாறு கண் அசைத்துவிட்டு “கன்ட்ரோல் யுவர் செல்ஃப் திரு” என்றான்.

“பாருங்க அனேகன் எப்படி பேசுறா –னு… பெரிய இவ –னு நினைப்பா அவ மனசுல? இன்னொரு தடவ அவ இப்படி பேசினா நானே அவள கொன்னுருவேன்… அவகிட்ட சொல்லி வைங்க” என சொல்லிவிட்டு தன் முகத்தை மூடி அழுதான் திரவியம்.

“என்ன திரு இது… சின்ன பையன் போல அழுதுகிட்டு?” – அனேகன்.

“முடியல அனேகன்… அவ கூட எப்பவும் சண்டை தான் போட்டுருக்கேன்… கோவத்துல அவள என்னவெல்லாமோ பேசியிருக்கேன்… இப்ப அத எல்லாம் நினைச்சா என் மனசாட்சி என்ன கொல்லுது… என்னால தாங்க முடியல” மேலும் மேலும் அழுதான் திரவியம்.

“நீங்க வேணும்னே எதுவும் செய்யல திரு… வருத்தப்படாதீங்க… ரிலக்ஸ்…” – அனேகன்.

அப்போது அங்கே முதலுதவி பெட்டியை எடுத்து வந்த அம்ரிதா திரவியத்திடம் “திரு… உண்மைகள ஏத்துக்க பழகிக்கனும்… உன்ன கன்ட்ரோல் பண்ணிக்க… நீயே பார்த்தேல? நேத்து இருந்த பொன்னம்மா இன்னைக்கு இல்ல, நீ எதிரி போல பார்த்துட்டு இருந்த அனேகன் இன்னைக்கு உன் நண்பன், எது அச்சுக்கு தெரியவே கூடாதுனு நான் நினைச்சனோ அது அவளுக்கு தெரிஞ்சு, அத அவ தைரியமா ஏத்துக்கவும் செஞ்சிருக்கா… அஃப் கோர்ஸ் வலிக்கும் தான்… ஆனா நாம ஏத்துக்க தான் வேணும்… ஏன்னா இவ்வளவு தான் வாழ்க்கை” என்றாள்.

“கேட்குற எனக்கே இவ்வளவு வலிக்குது… ரெண்டு பொண்ணுங்களா தனியா இருந்து இத்தனை பிரச்சனைகள தனியா எப்படி ஃபேஸ் பண்ணீங்க அம்மு?” – திரவியம்.

“பொண்ணா இருந்தா என்ன திரு? பெண் தான் இந்த உலகத்தோட மிகப்பெரிய சக்தி. அவ நினைச்சா ஒரு உயிர உருவாக்கவும் முடியும் ஊரையே அழிக்கவும் முடியும். என்ன மாதிரி அச்சு மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் ஈசனும் நாங்க தான், சக்தியும் நாங்க தான். எல்லா பொண்ணுங்களுக்கு உள்ளேயும் இந்த சக்தி இருக்கு. அவங்க அவங்களுக்கான காலம் வரும்போது அவங்க அத உணருவாங்க… பொண்ணுங்க தானே… புழுவ போல நசுக்கி தூக்கி எறிஞ்சா ஒரு மூலையில அப்படியே முடங்கிக்கிடப்பா –னு நினைக்குறானுங்க சில மனுச மிருகங்க… ஆனா புழுவுக்கு அப்பறம் தான் திரு பட்டாம்பூச்சி. எங்களுக்கு எப்பேற்பட்ட பிரச்சனை வந்தாலும் எதிர்த்து துணிச்சலா போராடி வெற்றியையும் பார்த்து வண்ணத்து பூச்சியா நிச்சயமா பறப்போம். துர்கையா, காளியா, பரா சக்தியா துஷ்டன அளிப்போம். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு பிரச்சனையில பாதிக்கப்படும் போது நினைக்குறது எல்லாம் என்ன தெரியுமா? இனி தன்ன போல ஒரு பெண் இந்த கஷ்டத்துல சிக்க கூடாது. அப்படீன்றது மட்டும் தான் அவளோட எண்ணமா இருக்கும். அதுக்காக எந்த அவதாரம் எடுக்கவும் நாங்க தயங்க மாட்டோம். அந்த சக்தி எல்லாம் ஒன்னு கூடுற நாள் சீக்கிரம் வரும். அன்னைக்கு ஒரு பொண்ண இல்ல… ஒரு பொண்ணோட நிழல தொடுறதுக்கு கூட ஒவ்வொருத்தனும் யோசிப்பான்” என்று கூறிய அம்ரிதாவை கை கூப்பி வணங்கவே தோன்றியது திரவியத்துக்கு.

“போய் முகத்த கழுவிட்டு வா திரு” – அம்ரிதா.

திரவியம் எழுந்து சென்றதும் தன் கையில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்து அனேகனது வாயோரமாய் இருந்த இரத்தை துடைத்து சுத்தம் செய்த அம்ரிதா அவனுக்கு மருந்தும் போட்டுவிட்டாள்.

“டாக்டர் –கே ட்ரீட்மெண்ட் –ஆ ?” என்று கேட்ட அனேகனின் பார்வையில் ஈர்க்கப்பட்டவள் “இந்த டாக்டர் –க்கு நான் போடாம யாரு போடுவாங்க?” என்றாள்.

“இன்னைக்கு நீ போட்டுவிட்ட… இனி தினம் தினம் நான் தான பேபி போட்டுக்கனும்?” – அனேகன்.

சிரிதாக மலர்ந்தவள் “விஸ்வநாதனுக்கு உங்கள எப்படி தெரியும்?” என கேட்டாள்.

“மோகனும் விஸ்வநாதனும் பண்ண எல்லா இல்லீகல் விஷயத்துக்கான ஆதரத்தோட காஃபி –அ விஸ்வநாதனுக்கு மெயில் அனுப்பி அவன நடுங்க விட்டேன். அப்ப நான் தான் மோகனோட பையன் –னு சொல்லியும் இருந்தேன். அவன் மெயில் பார்த்த்தும் நேரா மோகனுக்கு கால் பண்ணான். அந்த கால் வரும்போது மோகன் என் முன்னாடி தான் இருந்தான், அன்னைக்கு தான் மோகன நான் கொன்னேன். நான் தான் கொலை பண்ணியிருப்பேன் –னு விச்சு –வுக்கு தெரியாம இருக்குமா என்ன?” – கண்ணடித்தான் அனேகன்.

“சரி, இந்த கேஸ் –அ டீல் பண்ண லேகா மூலமா எங்க குடும்பத்த பத்தின எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சிகிட்டது ஓகே… ஆனால் நான் மோகனுக்கு போட்ட ப்ளான் –அ எப்படி?” என தயங்கிக்கொண்டே கேட்டாள் அம்ரிதா.

அதற்கு,

“உன் உள்ளத்தை நான் அறிவேன் சகி” என்ற அவனது குரல் அம்ரிதாவை ஏதோ செய்தது.

“டயலாக் எல்லாம் நல்லா பேசுறீங்க” என்று ஓரக்கண்ணால் பார்த்தபடி அவனிடம் கூறிவிட்டு ஆஷ்ரிதாவுக்கு சமையல் வேலையில் உதவி செய்ய சமையலறைக்குள் சென்றுவிட்டாள் அம்ரிதா.

“இது டயலாக் இல்ல சகி… நீ சீக்கிரமே புரிஞ்சிப்ப” என்று அவளை வெறித்தபடியே கூறினான் அனேகன்.

சில மாதங்களுக்கு பிறகு…

“அய்யோ அக்கா… நான் முக்கியமான மீட்டிங் –ல இருக்கேன்… வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா கிருஷ்ணா சார் –அ பார்த்து பெயிண்டிங் –அ வாங்கிட்டு வந்திடுவேன்… ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் அம்ரிதா.

அமைதியை உடைத்து மீண்டும் அலறியது அம்ரிதாவின் அலைபேசி.

“அடடடடா… முடியல… இந்தா அனேகா… நீயே சொல்லு அச்சுகிட்ட” என தன் அலைபேசியை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த அனேகனிடம் நீட்டினாள் அம்ரிதா.

அதை வாங்கியவன் “ஹலோ அச்சு… சொல்லுங்க” என்றான்.

“என்ன ஃபோன் –அ உங்ககிட்ட கொடுத்துட்டாளா? அப்படி என்ன முக்கியமான மீட்டிங்?” – ஆஷ்ரிதா.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… நாங்க நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கறோம்… அம்மு –வ இப்ப அனுப்பி வைக்கறேன் அச்சு… டோன்ட் வொரி” என்று அனேகன் கூற அவனிடம் இருந்து வெடுக்கென அலைபேசியை பிடுங்கினாள் அம்ரிதா.

“நான் என்ன சொல்ல சொன்னேன்? நீ என்ன சொல்லிட்டு இருக்க?” சினந்துக்கொண்டாள் அம்ரிதா.

“ஏதாவது எமெர்ஜென்சியா இருக்க போகுது பேபி… போய்ட்டு வந்திடேன்… நாம இந்த ப்ராஜெக்ட் பத்தி நாளைக்கு பேசலாம்” – அனேகன்.

அவனை முறைத்துவிட்டு அலைபேசியை தன் காதில் வைத்த அம்ரிதா “இன்னும் ஹாஃப் அன் அவர் –ல கிருஷ்ணா சார் முன்னாடி இருப்பேன் டி… போதுமா?” – என்றாள்.

“ஹப்பா… டபுள் ஓகே டி… அவரு இன்னைக்கு ஈவினிங் ட்ரெயின் –ல மதுரைக்கு ரிடன் ஆகுறாராம்… அதான் இவ்வளவு அவசரப்படுத்தறேன்… கோச்சிக்காத டி” கொஞ்சினாள் ஆஷ்ரிதா.

“சரி சரி… சீக்கிரம் போறேன்” என்ற அம்ரிதா அனேகனிடம் விடைப்பெற்று ஆர்டிஸ்ட் கிருஷ்ணாவை காண அவன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கிளம்பினாள்.

அம்ரிதா அங்கிருந்து கிளம்பியதும் ஆஷ்ரிதாவுக்கு அழைப்பு கொடுத்த அனேகன், “ஹலோ அச்சு… அம்மு கிளம்பிட்டா” என்றான்.

“அவள உங்க கிட்ட இருந்து நகர்த்துறதுக்கு நான் என்ன பாடுபட வேண்டியது இருக்கு” – ஆஷ்ரிதா.

“இப்பதான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா சகியோட செயல்பாடுகள் வருது அச்சு… அதோட வெளிப்பாடுதான் எல்லாம்” – அனேகன்.

“கொஞ்சமா இருக்கறதே இப்படியா? இன்னும் உங்களோட பூர்வ ஜென்ம பந்தத்த எல்லாம் உணர்ந்து நீங்க தான் அவளோட சரி பாதினு தெரிஞ்சா எங்கள எல்லாம் கண்ணே தெரியாது போலயே?” – ஆஷ்ரிதா.

“அது நடக்கற மாதிரி எனக்கு தோணல” – அனேகன்.

“ஏன் நடக்காது??” – ஆஷ்ரிதா.

“நாம எதுக்காக அம்முவ இப்ப அவசரமா இங்க இருந்து அனுப்பி வச்சோம்?” – அனேகன்.

“எனக்கு ஹிப்நாடிசம் பண்ணி என் கனவு –ல வந்த அர்ஜுன் என்ன சொன்னான்னு தெரிஞ்சிக்கனும்… அதுக்கு நான் அங்க வரனும்… நான் அங்க வரும்போது அம்மு அங்க இருக்க கூடாது… அதனால” – ஆஷ்ரிதா.

“இன்னும் ஒன்னு… அம்மு உங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீங்க திரும்பி வீட்டுக்கு போகனும். இப்படி எங்கிட்ட ஃபோன் –ல பேசிகிட்டே இருந்தா எப்பாதான் இங்க வருவீங்க? நீங்க எப்ப இங்க வந்து, நான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு, என் சகி கூட டூயட் ஆடுறது” – அனேகன்.

“அவளோட அக்கா என்கிட்டயே எவ்வளவு தைரியாமா இத கேட்குறீங்க?” என சிரித்துக்கொண்டவள் “இதோ கிளம்பிட்டேன் அனேகன்” என்று அழைப்பை துண்டித்தாள்.

(களவாடுவான்)

error: Content is protected !!