கனவு – 22

திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் எழுந்து தன் அம்மாவிடம்,

“அம்மா… வாங்களேன், அம்மு காஃபி போடுற வர நீங்க வீட்ட சுத்திப்போருங்களேன்” என அழைத்தான்.

அந்த சத்தம் கேட்ட அம்ரிதாவும், “ஆமா மா… சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் காஃபியோட வர்றேன்” என்கவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூவரும் முதலில் இயற்கையை வளம் வர எண்ணி, கட்டிடத்தை விட்டு வெளியேறி தோட்டப்பகுதிக்கு சென்றனர்.

காஃபியை தயார் செய்த அம்ரிதா, ஆஷ்ரிதாவை அழைக்க எண்ணிர் அவர்களது அறைக்குச் செல்ல, கதவின் உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பது தெரிந்தது.

“அச்சு… அச்சு… கதவ திற” கதவை தட்டியபடியே கூறினாள் அம்ரிதா.

கதவு திறக்கப்பட்டது. வேகமாக அறையின் உள்ளே சென்று தாழிட்ட அம்ரிதா,

“என்ன அச்சு பண்ற நீ? நீ நடந்துக்கறது உனக்கே நல்லா இருக்கா?” – அம்ரிதா.

“அப்போ இங்க நடக்கறது எல்லாம் நல்லா நடக்குதா?” – ஆஷ்ரிதா.

“அப்படி என்ன நடந்தது இப்போ? ஏன் திரு நம்ம வீட்டுக்கு வரக்கூடாதா?” – அம்ரிதா.

“தயவுசெய்து தெரியாத மாதிரி பேசதா அம்மு” – கைக்கூப்பி கும்பிட்டாள் ஆஷ்ரிதா.

“ஏய் அம்மு… ஏன் டி இப்படி எல்லாம் பேசுற? உன் நல்லதுக்காக தான டி சொல்லுறோம். திரு உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காரு தெரியுமா? அவனோட அம்மா உன்கிட்ட பேச வீடு தேடி வந்துருக்காங்க! இதுக்குமேல என்ன டி வேணும் உனக்கு?” – சாந்தமாய் கேட்டாள் அம்ரிதா.

பதில் ஏதும் சொல்லாமல் சிவந்த கண்களோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஒன்னுமில்ல அச்சு” என அவளது கண்களை துடைத்துவிட்ட அம்ரிதா, “அவங்க எல்லாரும் தோட்டத்துக்கு போய்ருக்காங்க. நீ முகத்த கழுவிட்டு வா. வந்து வாங்கனு ஒரு வார்த்த கேளு. வீடு தேடி வந்திருக்குற பெரியவங்கள மதிக்கணும்ல?” – அம்ரிதா.

அம்ரிதா பணிவாய் சொன்ன வார்த்தைகளை காதில் போட்டுக்கொண்ட ஆஷ்ரிதா, எழுந்து தன் முகத்தை கழுவி கருமை நிறத்தில் பொட்டு ஒன்றை வைத்துக்கொண்டாள்.

“வெரி குட். இப்பதான் நல்லா இருக்க. வா” என அவளை அழைத்துக்கொண்டு, தயாரித்து வைத்திருந்த காஃபியினை அனைவருக்கும் கோப்பையில் ஊற்றி தோட்டத்திற்கு எடுத்துச் வந்தாள் அம்ரிதா.

அம்ரிதா காப்பி கோப்பைகள் அடுக்கப்பட்ட ட்ரேயை தூக்கிக்கொண்டுவர, தூரத்தில் தன் அம்மாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியத்தை பார்த்தபடியே அவளுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

அவ்வளவு நேரம் தனது வாயில் இருக்கும் பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டிருந்த திரவியம், ஆஷ்ரிதாவின் வரவை கண்டதும், திடுமென அதரத்தை மூடி நிதானமாய் சிரித்தான்.

சகோதரிகள் இருவரும், முக்கோணமாய் நின்று பேசிக்கொண்டிருப்பவர்களை அடைந்ததும், “காஃபி வந்தாச்சு” என்றாள் அம்ரிதா.

ஆஷ்ரிதா திரவியத்தின் அம்மாவுக்கு வணக்கம் வைத்தாள்.

அவரோ “எப்படி மா இருக்க?” என கேட்டவாறு அவளது தலையை வாஞ்சையாக தடவினார்.

அதற்கு பதிலாக “ம்ம்ம்” என அவள் தலையாட்டிட, அவளது கண்களில் இருந்து வடிந்தது ஒரு சொட்டு கண்ணீர்.

அவளது தலையசைப்பிற்கும், வடியும் கண்ணீருக்கும் அர்த்தம் என்ன எனும் யோசனையில் திரவியத்தின் அம்மா செல்ல யத்தனித்த சமயம், அம்ரிதா பேச்சை திசைத்திருப்பும் பொருட்டு, “வாங்க எல்லாரும் அங்க உட்கார்ந்து பேசலாம். ரொம்ப நேரம் ட்ரே –ய தூக்கிட்டே நிக்குறேன். கை வலிக்குது” என்றாள்.

“ஹாஹா… கொடு அம்மு” என அவளிடம் இருந்த ட்ரே –யை அனேகன் வாங்கிக்கொள்ள, அனைவரும் அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த வட்ட மேஜையை சுற்றியிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தனர்.

தோட்டத்தை பற்றியும் அந்த வீட்டை பற்றியும் பேசியவாறு அனைவரும் காஃபியினை குடித்து முடிக்க, திரவியத்தின் தாய் தான் வந்த விஷயத்தை பேசத் தொடங்கினார்.

“சரி மா. நான் எதுக்காக வந்தேன் –னு உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல அச்சு. உன்ன என் மருமகளா கூட்டிட்டு போக நான் அசைப்படுறேன். ஏற்கனவே எனக்கு உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சனை. ஏதோ மாத்திரை மருந்துனு வண்டி ஓடிகிட்டு இருக்கு. என் கண்ண மூடுறதுக்குள்ள உன்ன அவன் கையில புடிச்சு கொடுத்துட்டா நீ அவன பார்த்துப்பங்கற நினைப்புலயே என் கட்ட நிம்மதியா வேகும்” என்று ஒரே போடாக போட்டார்.

அவர் இந்த விஷயம் பேசத்தான் வந்திருக்கிறார் என்பது சகோதரிகளுக்கு தெரிந்திருந்த போதிலும், எடுத்ததும் நேரடியாக மருமகள், கல்யாணம் என்று அவர் பேசவும் ஆஷ்ரிதாவுக்கு சிறிது பதட்டமாய் தான் இருந்தது. மிகுந்த சிரமத்துடன் பேச திராணியை திரட்டியவள்,

“அம்மா… நீங்க தெரிஞ்சிதான் பேசுறீங்களா? எந்த ஒரு அம்மாவும் தன்னோட புள்ளைக்கு என்ன மாதிரி ஒரு பொண்ண கட்டித்தர நினைக்க மாட்டாங்க. ஆனா நீங்க எப்படி மா?” – கண்களில் கண்ணீர் வடியக்கேட்டாள் ஆஷ்ரிதா.

“இதோ இப்படி நெஞ்சில நேர்மையும் கண்ணுல பாசத்தையும் வச்சி பேசுறியே இத விட வேற என்ன தங்கம் வேணும்? புள்ள பெத்துக்கிட்டா மட்டும் போதுமா? என் பையன காலம் முழுக்க நேசத்தோட அரவணைச்சு நிக்க வேணாமா?” என கேட்டார் திரவியத்தின் அம்மா.

அவர் பேசிய வார்த்தையின் ஆழத்தை உணர்ந்தவள் எழுத்த வேகத்தில் திரவியத்தின் அம்மாவுடைய பாதங்களை சரணடைந்தாள்.

“அம்மா… உங்களுக்கு பெரிய மனசு. ஆனா தயவு செய்து நான் சொல்லுறத கேளுங்க. நான் உங்களுக்கு வேணாம் மா!” என கதறினாள்.

தன் அக்கா அழுவதைக் கண்ட அம்ரிதாவுக்கு மனம் தாங்கவில்லை. நெற்றியை சுருக்கிப்பார்த்துக் கொண்டிருந்தவளது கையை பிடித்த அனேகன், “எவ்ரிதிங்க் வில் பீ ஆல்ரைட் பேபி” என்றான்.

தனது காலில் விழுந்து அழுதுக்கொண்டிருக்கும் ஆஷ்ரிதாவை பதறியபடி தூக்கிய திரவியத்தின் அம்மா,

“ஏன் மா இப்படி எல்லாம் நடந்துக்கற? ஒருவேள நாங்க உங்களவிட வசதி கம்மினு நீ நினைச்சா நீ தாராளமா சொல்லலாம் மா” என்றார்.

“அய்யோ… அம்மா. என்ன வார்த்தை கேட்குறீங்க? அக்கா அப்படி நினைக்கறவ இல்ல” – பொங்கிய அம்ரிதாவை மீண்டும் கைப்பிடித்து சட்டென அடக்கினான் அனேகன்.

“இல்ல அனேகா… அவங்க” என்ற அம்ரிதாவை அடுத்துப் பேச விடாமல் கண்களால் அமைதியாய் இருக்குமாறு கூறினான் அனேகன்.

அதனால் அம்ரிதா தன் வாதத்தை தொடராமல் நிறுத்த, தற்போது ஆஷ்ரிதா பேசினாள், “அப்படியெல்லாம் இல்ல மா. திருவுக்கு ஒரு நல்ல ப்ரெண்டா நான் சொல்லுறேன். நான் அவனுக்கு வேண்டாம்” என்று.

“நீ ஏன் மா வேண்டாம் –னு சொல்லுற? குழந்தை விஷயத்தை தவிர வேறு எதும் காரணம் இருந்தா சொல்லு. குழந்தை ஒரு விஷயமே இல்ல. உனக்கு திரு –வ பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவனும், நீங்க நட்பான காலத்துல இருந்து உனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கான் –னு எனக்கு தெரியும். அப்பவே திருகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். அவன் நாங்க ப்ரெண்ட்ஸ் தான் –னு சொல்லி மறுத்துட்டான். ஆனா அவனுக்கு உன்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்” – திரவியத்தின் அம்மா.

இப்பொழுது ஆஷ்ரிதா முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தவளாய் “அவனுக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம். நீங்களும் பேரக்குழந்தைகளோட ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். அவனோட அனுதாப காதல் எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவள் கடைசியாய் கூறிய அனுதாப காதல் எனும் வார்த்தை திரவியத்திற்கு தேள் கொட்டியது போல இருந்தது. தான் அமர்ந்திருந்த நாற்காலியை தடார் என தட்டிவிட்டவாறு எழுந்தவன் ஆஷ்ரிதாவை நோக்கி, “என்ன சொன்ன? அனுதாப காதலா? இதுக்கு நான் வந்தப்பவே வெளிய போடா நாயா –னு சொல்லி என்ன துரத்தியிருக்கலாம் நீ” என்றான்.

திரவியத்தின் திடீர் சீற்றத்தை கண்டு திகைத்த அம்ரிதாவும் அனேகனும் பதறிப்போய் தங்கள் நாற்காலிகளில் இருந்து எழுந்துக்கொள்ள, திரவியத்தின் அருகே சென்ற அனேகன் அவனது தோள்களை பற்றி “ரிலக்ஸ் திரு… டோன்ட் பீ எமோஷ்னல்” என்றான்.

ஆஷ்ரிதாவோ உணர்ச்சிகள் துடைத்த முகமாக கற்சிலையென அமர்ந்திருந்தாள்.

“பின்ன என்ன அனேகன். பாருங்க அவ என்ன பேசுறானு?” என்று கோபக்கனல் தெரிக்க பேசினான் திரவியம்.

“என்ன அச்சு நீ? இப்படியா பேசுவ?” என்றாள் அம்ரிதா. அப்பொழுதும் அவள் அசைதாளில்லை.

“என்னையும் என் அம்மாவையும் அசிங்கப்படுத்தனும்னு இப்படியெல்லாம் பேசுறியா அச்சு?” – திரவியம்.

“ஓ… நீங்க சொல்லுறத எல்லாம் கேட்டா நல்லவ. இல்லைனா கெட்டவ. அதுதான உங்க கோட்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“உன்ன கெட்டவனு இப்ப யாரு சொன்னா அச்சு. எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்குற?” – அனேகன்.

“சாரி அனேகன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவ்வளவுதான்” என எழுந்து வீட்டிற்குள் சென்றாள் ஆஷ்ரிதா.

“யேய்… நில்லு டி…” என அவள் பின்னே ஓடினான் திரவியம்.

அவர்கள் இருவரும் பேசி தீர்க்கட்டும் என எண்ணிய மூவரும் தாங்கள் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. திரவியத்தின் அம்மாவை நோக்கி “அவன் அச்சுகிட்ட பேசிட்டு வரட்டும் மா. நீங்க வருத்தப்படாதீங்க. பார்த்துகலாம்” என்றான் அனேகன்.

தோட்டத்தை தாண்டி செல்லும் ஆஷ்ரிதாவை வழிமறித்த திரவியத்திடம் திமிறியபடி வீட்டிற்குள் சென்றிருந்தாள் அவள். விடாப்பிடியாக அவளை துரத்தி வீட்டின் வரவேற்பறையில் தன் கைகளின் பிடியால் ஆஷ்ரிதாவை சிறைப்பிடித்திருந்தான் திரவியம்.

“வாட் இஸ் திஸ் திரு? கை – அ விடு. என்ன அம்மாவும் புள்ளையும் வீட்டுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி அராஜகம் பண்ணுறீங்களா? – ஆஷ்ரிதா.

“என்னது? அராஜகம் பண்ணுறோமா? எங்கள பாத்தா எப்படி தெரியுது அச்சு உனக்கு? உன்ன காதலிச்ச பாவத்துக்கு நான் தான் உன்ன கெஞ்சிகிட்டு இருக்கேன் –னா, என் அம்மாவும் வந்து உன் காலுல விழனுமா?” – பற்களை கடித்தபடி கேட்டான் திரவியம்.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் திரு” என ஒரே உதறலில் தன் கையினை அவன் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்ட ஆஷ்ரிதாவின் கண்கள் ருத்ர தாண்டவம் ஆடியது.

“என்ன டி முறைக்குற? நான் சொல்லுறதுல என்ன தப்பு சொல்லு? நான் உன்ன ப்ரொப்போஸ் பண்ணதுக்கு அப்பறம் என்னை எல்லா இடத்துலயும் நீ இக்னோர் பண்ண, அவாய்ட் பண்ண. நான் என்னைக்காவது உன்ன டிஸ்டர்ப் பண்ணியிருக்கேனா? நீயா என்ன புரிஞ்சிட்டு வருவனு தான டி வெயிட் பண்ணேன். இன்னைக்கு அம்மாவ தான கூட்டிட்டு வந்து பேசுனேன்? நாலு ரெளடிகள கூட்டிட்டு வந்து மிரட்டவா செஞ்சேன். அந்த ரேன்ஜ்க்கு தான் பேசிட்டு இருக்குற நீ” – ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் திரவியம்.

“முடியாதுனு சொன்னா விடவேண்டியது தானே” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“முடியாதுனு தான சொன்ன? பிடிக்காதுனு சொல்லு அச்சு. அப்ப நான் போறேன். எனக்கு உன்ன பிடிக்கல, அதனால உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் –னு சொல்லு. அப்ப நான் போறேன். சும்மா சும்மா உன்னோட நல்லதுக்குதான் சொல்லுறேன். நல்லா பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ, குழந்த பெத்துக்கோ இப்படியெல்லாம் டயலாக் பேசாத” – திரவியம்.

“ஆமா, எனக்கு உன்ன பிடிக்கல. போதுமா? போ” – காதைப் பொத்திக்கொண்டு சீறினாள் ஆஷ்ரிதா.

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற திரவியம் “ஓ… ஓகே ஃபைன். தேங்க்ஸ் ஆச்சு. சாரி, இனி உன்ன அப்படி கூப்பிட மாட்டேன் மிஸ். ஆஷ்ரிதா. உன்னவிட செம அழகா ஒரு பார்த்து கல்யாணம் பண்ணுறேன். நிச்சயமா கல்யாணத்துக்கு வந்துரு. இனி உன்ன…. சாரி, உங்கள நான் தொந்தரவு பண்ண மாட்டேன். குட் பை” என்று சல்யூட் செய்வது போல சைகை செய்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

பேதை அவள் உள்ளமும் உடலும் நடுங்க, கதறியபடி சுவற்றில் சாய்ந்தவள் அப்படியே தரையில் அமர்ந்து அழுத்தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் ஓடி வந்த அம்ரிதா, “அச்சு… என்ன டி ஆச்சு? திரு அவனோட அம்மாவ கூட்டிட்டு கோவமா கிளம்புறான். என்ன நடந்துது?” என கேட்க, அவளது அழுகை ஓலம் மட்டுமே பதிலாக இருந்தது.

அம்ரிதாவின் பின்னோடு மெல்லமாய் நடந்து வந்த அனேகன், ஆஷ்ரிதாவின் அருகே அமர்ந்து “அச்சு… ச்சில்… எதுக்கு இவ்வளவு அழனும்? அவன வேணாம் –னு சொன்ன. அவன் சரி –னு அவன் இப்போ ஒதுங்கிட்டான். நீ கேட்டத தான் உனக்கு செஞ்சிருக்கான். பிறகு எதுக்கு இப்படி அழுற. விடு” என்றான்.

“என்ன பார்த்து என்ன வார்த்தை கேட்டான் தெரியுமா அனேகன்?” என்று அழு குரலிலேயே கேட்டாள் ஆஷ்ரிதா.

“தெரியும்… அவன் சத்தம் கார்டன் வர கேட்டுச்சு” என்றான் அனேகன்.

“அவ்வளவு தான் அவன் என்ன புரிஞ்சிகிட்டதா அனேகன்? என்ன பார்த்து எப்படி அப்படி எல்லாம் பேச முடிஞ்சிது அவனால?” – ஆஷ்ரிதா.

“அவன் உங்கள புரிஞ்சிகிட்டவனா இருந்துருந்தா நீங்க வேணாம்னு சொன்ன உடனே உங்கள விட்டு போய்ருக்கனுமே! ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ணனும்?” – திரவியத்தின் மேல் அவளுக்கு இருக்கும் பாசத்தை வெளியே கொண்டுவர எண்ணி அவனை பழியாக்கிப் பேசினான் அனேகன்.

“அவனுக்கு என் மேல அக்கறை உண்டு அனேகன். உங்க விஷயத்துல நான் எவ்வளவோ அடம் பிடிச்சேன். அப்போ எல்லாம் அவன் என்னை விடவே இல்ல. இன்னைக்கு என்ன அப்படி பேசிட்டு கல்யாணத்துக்கு வந்திருனு சொல்லிட்டு போய்ட்டான்” எனறு முகத்தை மூடி அழுதாள் ஆஷ்ரிதா.

“நீ தான அச்சு அவன ஃப்ரெண்டா மட்டும் இருக்க சொன்ன. ஒரு ஃப்ரெண்டா அன்னைக்கு என் விஷயத்துல நீ கேட்காமலே எல்லாம் செஞ்சான். இன்னைக்கு நீ வேண்டாம் –னு இவ்வளவு உறுதியா இருக்கறதால சரி –னு டீசண்ட் –ஆ ஒதுங்கிக்கறான்” – அனேகன்.

“இருக்கட்டும் அனேகன். அதுக்காக இத்தனை நாள் என்ன அக்கறையா பார்த்துக்கிட்டவன் இப்படி பேசிட்டு போவானா?” – ஆஷ்ரிதா.

இதைக் கேட்டு சிரித்த அனேகன், “வாட் சைல்டிஸ் அச்சு? அவன பிடிக்காதுனு சொல்லுறீங்க. அப்பறம் எதுக்கு அவன் உங்க மேல அக்கறை எடுத்துக்கனும்னு இவ்வளவு துடிக்கிறீங்க?” – பொட்டில் அடித்தாற் போல கேட்டான் அனேகன்.

அவன் கேள்வியில் திணறி நின்ற ஆஷ்ரிதா உண்மையை சொல்லிவிட முடிவு செய்தாள். தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள்,

“என்ன காதலிக்கற அவன் நல்லா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா அனேகன்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

‘அப்படி வா வழிக்கு’ என நினைத்துக் கொண்ட அனேகன், “கரெக்ட் அச்சு. ஆனா அது ஒரு பொதுவான நல்லெண்ணம் தானே. நீங்க நினைச்ச மாதிரி அவன் வேற பொண்ண கல்யாண்ம் பண்ணி சந்தோஷமா இருக்குறதா சொல்லிட்டான். இனி எதுக்கு நீங்க வருத்தப்படனும்?” – அனேகன்.

“எனக்கு வருத்தம் இருக்கும் அனேகன். பிறந்ததுல இருந்து இப்ப வர ஆச பட்ட வாழ்க்கைய வாழ முடியாம தவிக்கிற எனக்கு வருத்தம் இருக்க தான் செய்யும். இன்னைக்கு நான் இப்படி கடுமையா பேசுறேன்னா அதுக்கு காரணம் நான் அனுபவிச்ச வலிகள். விதி தான் என்ன இன்னைக்கு இப்படி மாத்திருக்கு” – ஆஷ்ரிதா.

“புரியல அச்சு. உனக்கு திரு விஷயத்துல என்ன வலி இருக்க போகுது? அவனுக்கு வேணும்னா காதல் தோல்வினு வலி இருக்கலாம். நீங்க தான் அவன காதலிக்கவே இல்லையே. அப்புறம் எதுக்கு வலிக்கனும் உங்களுக்கு?” – அனேகன்.

தன் தலையைப் பிடித்துக் கொண்டு பல்லைக் கடித்தவள்,
“எனக்கு வலிக்கவே இல்ல சாமி… விட்டுடுங்க!” என்று கூறினாள்.

“நீ நடந்துக்கறத பார்த்தா என் லைஃப் நினைச்சு எனக்கு பயமா இருக்கு அச்சு. உனக்கு அப்பறம் தானே அம்முக்கு கல்யாணம் ஆகும். நீ கல்யாணம் பண்ணலனா எப்படி?” – அனேகன்.

“ஓ… இப்ப அதுதான் உங்க பிரச்சனையா?” என்று கேட்டவள், தன் அருகில் நின்றிருக்கும் அம்ரிதாவை பிடித்து அனேகனை நோக்கி தள்ளிவிட்டு,

“இப்பவே வேணும்னாலும் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் யார் வாழ்க்கையிலயும் தடையா இருக்க மாட்டேன்!” என்றாள்.

(களவாடுவான்)

error: Content is protected !!