Kanavu 23

Kanavu 23

கனவு – 23

அனேகன் அவ்வாறு பேசியதிலும், ஆஷ்ரிதா தன்னை அவனிடத்தில் தள்ளி விட்டதிலும் அதிர்ச்சியடைந்த அம்ரிதா ‘என்னதான் நடக்குது இங்க’ என விழித்துக் கொண்டிருந்தாள்.

“போ டி… போ… அவன கல்யாணம் பண்ணிட்டு நீயாவது சந்தோஷமா இரு. என் கூட இருந்தா என்ன மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிச்சிரும்னு அனேகன் பயப்படுறாரு போல” – ஆஷ்ரிதா.

இதை கேட்டு அனேகன் விரைப்பாய் நின்றிருக்க, அம்ரிதாவோ “அச்சு… என்ன பேசிட்டு இருக்குற நீ?” என கேட்டாள்.

“நீ லவ் பண்ணுற விஷயம் எனக்கு தெரியும் அம்மு. உங்க வாழ்க்கைக்கு நான் தடையா இருக்க மாட்டேன். அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் தங்கச்சி செஞ்சிக்கணும்னு எந்த ரூல்ஸ் –ம் இல்ல. எப்படியும் நாம் ட்வின்ஸ் தானே” – ஆஷ்ரிதா.

“அச்சு… பைத்தியம் மாதிரி பேசாத” – அம்ரிதா.

“நான் ஒன்னும் பைத்தியம் போல பேசல! நீ வார்த்தைக்கு வார்த்தை அனேகா அனேகா –னு கூப்பிடுற, நீ சோகமா இருக்கும்போது எல்லாம் அவரு உன்ன பேபி –னு கூப்பிடுறாரு. எனக்கு தெரியாதா அம்மு இது எல்லாம்” என கூறிக்கொண்ட ஆஷ்ரிதா, அம்ரிதாவின் முன்ஜென்ம விஷயங்களை தான் அவளிடம் உளரவில்லை என்று காட்டும்படியே அனேகனிடம் ஒரு பார்வையையும் செலுத்தினாள்.

ஆஷ்ரிதா இவ்வாறு பேசிய பின்பு தான் தன்னை மறந்து அனேகனை அவள் ‘அனேகா’ என அழைத்ததில் உள்ள உரிமை அம்ரிதாவுக்கு உறைக்கத் தொடங்கியது. அனேகன் ‘பேபி’ என்று கூறும் வேளைகளில் எல்லாம், அந்த வார்த்தையில் தன் இன்னல்களை மறந்தாலே ஒழிய அவனது காதல் வெளிப்படுத்தும் அச்சாணி அது என உணராது இருந்தாள். அனேகனும் அம்ரிதாவும் மானசீகமாக காதலிக்கும் விஷயம் அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது என்று எண்ணியிருந்த அம்ரிதாவின் எண்ணம் அப்பொழுது தவிடுப்பொடியானது. தன் காதலை தன்னவனிடம் தான் சொல்லும் முன்னே அது அம்பலமாக்கப்பட்டதையும், தன் அக்காவிடம் தான் எடுத்துக்கூறினோம் என்பது இல்லாமல் அவளே கண்டுக்கொண்டாள் என்பதையும் எண்ணும் பொழுது சங்கடமாய் போனது அம்ரிதாவுக்கு. இருந்தும்,

“அச்சு… நீ நினைக்கற மாதிரி எல்லாம்…” என ஏதோ அவள் கூற வர,

“என்கிட்ட சொல்ல என்ன பயம் அம்மு. எனக்கு இதுல சந்தோஷம் தான். விடு. என் வாழ்க்கை தான் மண்ணா போச்சு. நீயாவது சந்தோஷமா இரு” என்று கூறிவிட்டு அவர்களது அறைக்குள் புகுந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா.

அனேகனுக்கோ அம்ரிதாவின் முகத்தை பார்க்கவே சங்கடமாய் போனது.

“என்ன இப்படி பேசிட்டீங்க?” என அம்ரிதா அனேகனை நோக்கிக் கேட்டாள்.

“இல்ல அம்மு. நான் ஏதோ சொல்ல வந்து அது வேற மாதிரி மாறிடுச்சு. ஐ டிட்டின்ட் மீன் தாட்” என்றான் அனேகன்.

“அக்காவுக்கும் திரவியத்துக்கும் கல்யாணம் நடக்கணும் அனேகா” பாவமாய் கூறினாள் அம்ரிதா.

அவள் கண்ணில் சிறு நீர் துளி வெளியே எட்டிப்பார்க்க, அதை தாங்காத அனேகன் அவளை நெருங்கி அவளது முகத்தை தன் இரு கைகளுக்குள் ஏந்தினான்.

அவளோ தன் விழிகளை உயர்த்திஅவனை ஏறெடுத்துப் பார்க்க, எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் துளி அவளது மேடான பஞ்சு கன்னத்தில் கட கடவென பயணம் செய்தது. அதை தன் கட்டை விரலால் துடைத்தவன் “தெயர் மேரேஜ் இஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி பேபி. அச்சு அவ வாயாலையே திரவியத்தை லவ் பண்ணுறதா சொல்லுவா. நான் சொல்ல வைப்பேன். நீ கவல படாத சரியா?” என்றான்.

சரி என்பது போல அம்ரிதா தலையை ஆட்டவும் அவள் நெற்றியில் ஆறுதலாய் முத்தம் ஒன்றை பதித்தவன் ஐ லவ் யூ அம்மு. இப்படி ஒரு சிட்டிவேஷன் –ல இத சொல்ல வேண்டியது வரும் –னு நான் நினைக்கல. ஆஷ்ரிதா இவ்வளவு பேசின பிறகு நான் எப்படி சொல்லாம இருக்குறது. ஐ ரியலி ரியலி லவ் யூ” என்றான் அனேகன்.

“யஸ். ஐ க்னோ. லவ் யூ டூ அனேகா” என்று அம்ரிதாவும் சொல்ல, அவளது நெருக்கத்தில் இருந்து விலகியவன், நீ எத நினைச்சும் ஃபீல் பண்ணாத, நான் அச்சுகிட்ட நாளைக்கு பேசுறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்தான் அனேகன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக திரவியத்திற்கு அழைப்புக் கொடுத்தான்.

“ஹலோ… சொல்லுங்க அனேகன்” வாடிய குரலோடு கேட்டான் திரவியம்.

“என்ன திரு. நான் சொல்ல சொல்ல கேட்காம இப்படி கிளம்பி போய்ட்டீங்க?” – ஆற்றாமையாய் அனேகன்.

“வேற என்ன செய்ய சொல்லுறீங்க அனேகன். எனக்காக என் அம்மாவும் அங்க இருந்து அவமானப்படனுமா?” – திரவியத்தின் கேள்வியில் கொப்பளித்தது அத்தனை வலிகள்.

“நான் அப்படி சொல்லல திரு. எல்லாரும் போபப்பட்டா என்ன பண்ண முடியும். அவ விரக்தியில பேசுற. நாம தானே எடுத்து சொல்லனும்?” கூறினான் அனேகன்.

“சரி. நீங்க இருந்து பேசுறேன் –னு சொன்னீங்களே, பேசுனீங்களா? அவ புரிஞ்சிக்கிட்டாளா?” – ஆஷ்ரிதாவை முற்றிலும் அறிந்து வைத்திருக்கும் தெணாவட்டு தெரிந்தது திரவியத்தின் தொனியில்.

“…..” – மெளனாமாய் இருந்தான் அனேகன்.

“என்ன அனேகன்? சத்தத்த காணோம்? நீங்க நினைச்சது நடக்கலதானே?! அவ புரிஞ்சிருக்க மாட்டா. நான் தான் அப்பவே சொன்னனே?” – வேண்டா வெறுப்பாய் சிரித்துக்கொண்டான் திரவியம்.

“சரி திரு. நீங்க சொன்னது சரிதான். ஆனா அச்சு –வ விட்டுட்டு இப்படியே இருந்துருவீங்களா நீங்க? இல்ல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்களா?” – தற்பொழுது திரவியத்தை அறிந்தவனாய் அனேகன் கேட்டான்.

“நெவர் அனேகன். எனக்கு கல்யாணம் –னு ஒன்னு நடந்தா அது அச்சுவோட மட்டும்தான். அவகிட்ட ஒரு பேச்சுக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணுறேன், கல்யாணத்துக்கு வந்துருனு சொல்லிட்டு வந்ததே மனசுக்கு என்னவோ போல இருக்கு” – காதலின் தாக்கம் அப்பட்டமாய் தெரிந்தது திரவியத்திடம்.

மெலிதாக சிரித்தான் அனேகன்.

“சிரிக்காதீங்க ப்ரோ. ஏற்கனவே நெஞ்சில ஆணி அடிச்சா மாதிரி இருக்கு” – திரவியம்.

“ஹப்பா… இப்பதான் வழக்கம் போல ப்ரோ வந்திருக்கு. கூல் திரு. எல்லாம் சரியாகிடும். அச்சு போல ஒரு தங்கமான பொண்ணு கிடைக்கிறதுக்கு இவ்வளவு கூட கஷ்ட படல –னா எப்படி?” – அனேகன்.

“ம்ம்ம்… பேசுவீங்க ப்ரோ. ஏன் பேச மாட்டீங்க? உங்க ரூட் ரொம்ப க்ளியர் –ஆ இருக்குற ஆனவத்துல ஆடாதிங்க ப்ரோ” என விளையாட்டாய் கூறினான் திரவியம்.

“அட ஆமா திரு. சொல்ல மறந்துட்டேன். இன்னைகு நீங்க போன பிறகு வாக்குவாதத்துல எங்க லவ் மேட்டர் –அ அச்சுவே போட்டு உடச்சிட்டா” என்று நடந்தவற்றை திரவியத்திடம் கூறினான் அனேகன்.

“அட பாவிகளா!! எங்க கல்யாணத்த பேசுறதா கூட்டிட்டு போய்ட்டு உங்க லவ் – அ ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துட்டீங்களா?” – திரவியம்.

“வெரி குட் திரு… தேட்ஸ் தி ஸ்பிரிட். இப்படி ஜாலியாவே பேசிட்டு இருங்க. எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரியாகிடும். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. கால் யூ பேக்” என அழைப்பை துண்டித்தான் அனேகன்.

தன் காதில் இருந்து பிரித்த அலைபேசியை பார்த்த திரவியம், “என்னது ஜாலியா பேசுறேனா? என் சோகம் உங்களுக்கு ஜாலியா தெரியுதா?” என சிரித்துக் கொண்டு, அலைபேசியில் சில தட்டுகள் தட்டி ஆஷ்ரிதாவின் புகைப்படத்தை திரையில் விரியச்செய்தான்.

அதை பார்த்தவாறு “மத்தவங்க லவ் –க்கு எல்லாம் நல்லது பண்ணு. நம்ம லவ் –க்கு ஆப்பு வை” என்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலானான்.

ஆடவர்கள் இருவரும் இப்படி இருக்க, அங்கு அம்ரிதாவுக்கு ஏதோ இனம் புரியாத இன்னல் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ஆஷ்ரிதாவிடம் அந்த நேரம் பேசவும் பயமாக இருந்தது அவளுக்கு. ஆதலால் அன்று ஆஷ்ரிதாவிடம் அவள் எதுவும் பேசாமலேயே இருந்துவிட, நன்னாளாக தொடங்கிய அத்தினம் வருத்தத்திற்குரிய நாளாய் முடிந்தது.

மறுநாள் பொழுது விடிந்து ஆஷ்ரிதா எழுகையில் அருகே அம்ரிதா இல்லை. கண்களை கசக்கியபடி தன் அறையை விட்டு வெளியே வந்த ஆஷ்ரிதா குளியலறையில் இருந்து வரும் தண்ணீர் சத்தத்தை கேட்டு அம்ரிதா உள்ளே தான் இருக்கிறாள் எனும் அனுமானத்தோடு பற்களை துலக்கச் சென்றாள்.

ஆஷ்ரிதா பற்களை சுத்தம் செய்துவிட்டு தேனீர் கோப்பையை எடுத்துக்கொண்டு வரவும் அம்ரிதா குளியலறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்க,

“என்ன டி? இவ்வளவு சீக்கிரம் குளிச்சிட்ட? ஆஃபிஸ் போகலனு தானே சொன்ன நேத்து. வெளிய எங்கேயும் போறியா?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“இல்லயே டி! மணி பத்தாகுது –ல. நீ தான் ரொம்ப நேரம் தூங்கிட்ட” என்றாள் அம்ரிதா.

“ஓ… நான் தான் லேட்டா?” என்றவள் அமைதியாக சோஃபாவில் சென்று அமர்ந்து தேனீரை குடித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வாடியிருப்பதை கண்ட அம்ரிதா “முகம் ஏன் டி இவ்வளவு வாட்டமா இருக்கு?” என கேட்டாள்.

“ஏன்? இப்ப நான் நல்லா இருந்து என்ன பண்ண போறேன். கட்டிக்க மாப்பிள்ளை என்ன லைன் கட்டி வரப்போறாங்களா?” – ஆஷ்ரிதா.

இதை கேட்ட அம்ரிதாவின் மனம் எண்ணெயில் விட்ட கடுகென உணர்ந்தது. ‘இவளிடம் வாயை கொடுக்காமலே இருப்போம்’ என எண்ணியவள், தன் மனதை சமன்படுத்த மொட்டை மாடிக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அங்கு பக்கத்து வீட்டு மாடியில் தடுப்பு சுவரின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்சாதத்தை ஒரு அணில் தன் இரு கைகளால் அள்ளி அழகாய் உண்ணும் காட்சியை ரசித்தபடி நின்றவள், அந்த அணில் ஓடிச் சென்றதும் தன் பார்வையை வீதிக்கு திருப்பினாள்.

அப்பொழுது அவள் கோவிலில் பார்த்த அதே கம்பூன்றிய பாட்டி தன் கழுத்தை நிமிர்த்தி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அம்ரிதாவின் உள்ளுணர்வு அவர் தம்மை பின் தொடர்வதாகவே கூறியது அப்பொழுது. அவளும் சிறிது நேரம் அவரையே நோக்க, அப்பாட்டி சற்று நேரத்தில் அவளிடம் இருந்து பார்வையை எடுத்துவிட்டு தனது வலது திசை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இன்று எப்படியாவது அந்த பாட்டியிடம் பேசி என்னவென்று கேட்டுவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் கீழே இறங்கி ஓடினாள் அம்ரிதா. ஆஷ்ரிதா எங்கே என்று வீடு முழுக்கத் தேடிட, அவளோ தோட்டத்திற்கு சென்றிருப்பாள் போலும், வீட்டிற்குள் தேடிய அம்ரிதாவின் கண்களுக்கு அவள் அகப்படவில்லை. தாமதித்தால் அந்த பாட்டியை விட்டுவிடுவோமே என்ற எண்ணத்தில் ஆஷ்ரிதாவிடம் கூறிக்கொள்ளாமல் வெளியே வீதிக்கு ஓடினாள் அம்ரிதா.

ஓடி வந்தவள் பாட்டியை தேட, அவரோ தெரு முனையை தாண்டிக் கொண்டிருந்தார். தன் கால்களில் கூடுதல் வேகத்தை சேர்த்து தற்பொழுது அசுர வேகத்தில் தான் பறந்தாள் அம்ரிதா.

ஒருவழியாக அவள் அந்த பாட்டியை நெருங்கிவிட, அவரோ அங்கிருந்த சிறு கோவில் போன்ற அமைப்புக்கொண்ட கட்டிட்த்திற்குள் நுழைந்தார். அங்கு அப்பாட்டியிடம் சீதா என்ற பெண் அழுதுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

“கல்யாணம் ஆகி நீங்க சொன்ன 5 வருஷம் முடியப்போகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. எனக்கு எப்ப மா குழந்தை பிறக்கும்?” என்று அந்த பெண் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அம்ரிதாவின் மனதில் தாங்க முடியாத இறுக்கம்.

‘அந்த பொண்ணு அழுகுறத பாத்தா ஏன் என் மனசு இவ்வளவு வலிக்குது? கடவுளே! என்னால இந்த வலிய பொறுக்க முடியல. இப்பவே ஓடி போய் நான் இருக்க மா உனக்குனு சொல்லனும் போல தோணுது. ஆனா யாரு அவங்க? யாருனே தெரியாத ஒருத்தர் கிட்ட போய் நாம எப்படி அப்படி பேச முடியும். ஏன் எனக்கு இப்படி இருக்கு..?’ என தன் மனதினுள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

அம்ரிதா தன் மனதில் இவ்வாறு கேட்கும் கேள்விகள் அனேகனது மனோசக்தியின் உதவியால் அவனை அடைந்திட, வீட்டில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருந்த அனேகனோ,

“சகி நோ!” என்று கத்தியவாறு தன் இருக்கையை விட்டு எழுந்துக்கொண்டான். அவன் மடியில் இருந்த மடிகணினி தரையில் விழுந்து அதன் திரையில் கீறல்கள் ஏற்பட்டது.

அதை சற்றும் கவனிக்காத அனேகன், விரைந்தோடி தன் அலைபேசியை எடுத்து ஆஷ்ரிதாவிற்கு அழைப்புக் கொடுத்தான். தோட்டத்தில் இருந்தவள் அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைய, மெல்லமாக நடந்துச் சென்று அலைபேசியை கையில் எடுத்தாள்.

“கம் ஆன் அச்சு. சீக்கிரம் எடு கம் ஆன்” என்று பதறியபடி இங்கே நின்றிருந்தான் அனேகன்.

அனேகன் அழைப்பில் வருவதைக் கண்ட ஆஷ்ரிதா, ‘மறுபடியும் திரவியத்தை பத்தி பேச கூப்பிடுறாரோ?’ என ஒரு நிமிடம் யோசித்து பின் அழைப்பை ஏற்க முற்படுகையில் அழைப்பு நின்றுப்போயிருந்தது.

“ஓ ஷிட்! என்று அவர்களது வீட்டு லேண்ட்லைன் –க்கு அழைத்தான். அந்நேரம் ஆஷ்ரிதா மீண்டும் அனேகனுக்கு அழைக்க, அதில் பிஸி என்று வந்திடவே அலைபேசியை கீழே வைத்தவளின் காதில் விழுந்தது அவர்கள் வீட்டின் லேண்ட்லைன் –ன் மணியோசை.

அந்த அழைப்பை ஏற்ற ஆஷ்ரிதா “ஹலோ” என்றாள்.

“ஹலோ அச்சு. நான் அனேகன். அம்மு எங்க?” என்றான் பதட்டமான குரலில்.

இதுவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் அனேகன் பதட்டப்பட்டு யாரும் கண்டதில்லை. இன்று அவன் இத்தனை பதட்டத்தில் பேசுவது ஆஷ்ரிதாவுக்கு புதிராகவே இருந்தது.

இந்த யோசனையில் ஆழ்ந்திருந்த ஆஷ்ரிதாவிடம் மீண்டும் கேட்டான் அனேகன், “அச்சு… ஆர் யூ தேர்? அம்மு எங்க? இட்ஸ் எமர்ஜென்சி. ப்ளீஸ் பேசு” என்றான்.

அவன் கடுமையும் அழுத்தமுமாய் பேசியதில் ஆஷ்ரிதாவின் உடலில் நடுக்கம் ஏற்பட, “ஆ… ஆமா இருக்கேன் அனேகன். அச்சு இங்க தான் இருக்கா. அச்சு…” என்று அவர்களது அறை நோக்கி அழைத்துப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

“நோ… ஷி இஸ் நாட் இன் தி ஹோம்… உன் வீட்டுக்கு வெளில வா. வலது பக்கம் ரோட்டுல நடந்து போ. அங்க தெரு முனையில் சின்னதா ஒரு கட்டிடம் இருக்கும். அங்க போ. சீக்கிரம் போ. க்விவ். அம்முவோட உயிருக்கு ஆபத்து” என்று கத்தினான் அனேகன்.

“அனேகன். வாட் ஹப்பன்ட். அம்மு வீட்டுல தான் இருக்கா. நான் இப்பதான் பார்த்தேன். கனவு எதும் கண்டீங்களா?” என்று அவனிடம் கூறிவிட்டு “அம்மு… கொஞ்சம் இங்க வாயேன். அனேகன் கால் பண்ணியிருக்காரு. உன்கிட்ட பேசனுமாம்” என மீண்டும் கத்தினாள் ஆஷ்ரிதா.

“ஆர் யூ மேட்? நான் தான் சொல்லுறேன் –ல? அவ வீட்டுல இல்ல! நான் சொன்னத செய். இல்லைனா உன் தங்கச்சி உனக்கு இல்ல, என் சகி எனக்கு இல்ல. மூ ஃபாஸ்ட்” என்று அவன் உச்சரித்த தீர்க்கம் ஆஷ்ரிதாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.

“வாட்?! என்ன சொல்றீங்க அனேகன்? இதோ… இதோ போறேன் அனேகன்” என்றாள் தீவிரம் நிறைந்த குரலோடு.

“குட். சீக்கிரம் போய் அவள பத்திரமா கூட்டிட்டு வா. நான் அங்கதான் வர்றேன் இப்ப. ஃபாஸ்ட்” என்று அழைப்பை துண்டித்தவன் தன் அம்மாவிடம் சென்றான்.

“அம்மா… நான் இதோ வந்திடுறேன். ஒரு எமெர்ஜென்சி” என்றுவிட்டு கார் சாவியை எடுத்தவன் வேகமாக காரை நோக்கி ஓடினான்.

“என்ன பா ஆச்சு?” என்று அவனது அம்மா அனேகனின் பின்னோடு ஓடி வர, காரில் ஏறி அமர்ந்திருந்த அனேகன்,

“அம்மா… உன் மருமகள உன்கிட்ட அறிமுகப்படுத்த போறனா இல்ல அந்த மோகன் கிட்ட அறிமுகப்படுத்த போறேனா –னு தெரியல. உன் மகன் ஜெயிக்கனும்னு அந்த ஆண்டவன வேண்டிக்கோ” என்று மட்டும் கூறிவிட்டு காரை கிளப்பிக்கொண்டு காற்றாய் பறந்தான்.

வீட்டில் அம்ரிதா இருக்கிறாளா என ஒருமுறை தேடிவிட்டு அவள் இங்கு இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட ஆஷ்ரிதா, அனேகன் சொன்னது போல தெரு முனைக்கு ஓடிச்செல்லும் பொழுது தூரத்திலேயே அம்ரிதா அங்கு நிற்பதைக் கண்டுக்கொண்டாள். அவளுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று எண்ணி மனதில் நிம்மதிக் கொண்ட ஆஷ்ரிதா, அந்த தொலைவில் இருந்தே அம்மு என கத்த, அங்கிருந்த சீதாவை எண்ணி மனம் கலங்கிக் கொண்டிருந்த அம்ரிதா திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஷ்ரிதா வருவதைக் கண்டு புன்னகைத்தவள்,

“என்னை காணோம் –னு தேடி ஓடி வந்துட்டாளா?” என்று தன் தலையில் அடித்து சிரித்துக்கொண்டவள் ஆஷ்ரிதாவை நோக்கி “இங்க வா” என்று கை அசைத்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள்.

அப்பொழுது அவளுக்கு பின்புறம் வேகமாக வந்த லாரி தன் கட்டுப்பாட்டை இழந்தவாறு தாறுமாறாய் வளைந்து வளைந்து தனது சக்கரத்தை உருட்டி, முதுகைக் காட்டிக்கொண்டு நடக்கும் அம்ரிதாவை நோக்கி அதீத வேகத்தில் வந்துக்கொண்டிருப்பதை கண்டுக்கொண்ட ஆஷ்ரிதா, பயத்தில் விழி விரிய “அம்மு மூவ்” என்று தொண்டை கிழிய கத்தியும் அதற்கு பலனின்றி அந்த லாரி அம்ரிதாவின் மீதி சரமாறியாக மோதி அந்த கட்டிட்த்தின் சுவற்றில் அவளை தூக்கி எறிந்துவிட்ட பின்புதான் நிதானமடைந்தது.

தன் தங்கையை அந்த லாரி வாரி அடித்ததை தன் கண்களால் கண்ட ஆஷ்ரிதா “அம்மு……” என வீரிட்டு அழுத சத்தத்தை அவ்வளவு எளிதாக மறைத்திருந்தது அந்த லாரி எழுப்பிய கீர் என்னும் சத்தம்.

திடீரென ஏற்பட்ட சத்தத்தில் அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, அம்ரிதா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் வீதியில்.

(களவாடுவான்)

error: Content is protected !!