Kanavu 24

Kanavu 24

கனவு – 24

சத்தம் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, சீதாவும் எழுந்து ஓட யத்தனித்தாள். அவள் கைகளை பிடித்துத் தடுத்த அந்த பாட்டி,

“உன் குழந்தை உன்னிடம் வருவதற்கான பயணத்தை தொடங்கிவிட்டது. நேராக வீட்டிற்கு செல். பத்திரமாக இரு” என கூறினார்.

அவர் கூறிய வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்து, அந்த பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு விடை பெற்று வீடு திரும்பினாள் சீதா.

வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்ரிதாவை தூக்கி தன் மடியில் போட்டு அழுதுக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அம்மு… எழுந்திரு டி… ப்ளீஸ் டி! எழுந்திரு. நீயும் என்னை விட்டுட்டு போய்ட்டா எனக்குனு யாரு டி இருக்கா? கண்ண திற அம்மு… என்ன கொஞ்சம் பாரு ப்ளீஸ் பயமா இருக்கு டி” – ஆஷ்ரிதாவின் ராகம் சுற்றியிருந்தவரையும் கண்ணீர் கடலில் தள்ளியது.

அப்பொழுது அந்த சிறிய கட்டிடத்தின் முன் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து நின்றது அனேகனின் கார். காரை விட்டு இறங்கியவன் நெற்றியின் வியர்வை துளிகள் புருவ முடிச்சுகளில் சிக்கி சிதைந்து அரைகுறையாய் வெளியே தெறிக்க, அதை துடைத்தபடி கூட்டத்தை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருந்தான். அவன் கால்களோடு சேர்ந்து மனதின் யோசனைகளும் கட்டுக்கடங்காமல் ஓட்டம் பிடித்தது.

‘ஓ மை காட். லாரி சகி –அ இவ்வளவு தூரம் அடிச்சித் தூக்கி எறிஞ்சிருக்கா? அவளுக்கு எவ்வளவு அடி பட்டுருக்கோ தெரியலையே! ரொம்ப வலியில துடிச்சிருப்பாளே!’ என்று அவனது எண்ணங்கள் அவனுக்கு துணையாய் ஓடிக்கொண்டிருக்க, “அம்மு………” என பெரும் குரலெடுத்து தொண்டையை காட்டினாள் ஆஷ்ரிதா.

அங்கு பதறியபடி ஓடிவந்துக் கொண்டிருக்கும் அனேகன், இரண்டடியில் கூட்டத்தை நெருங்கும் முன் ஆஷ்ரிதாவின் இந்த அதீத சத்ததில் திடுக்கிட்டவனாய் கால் தடுமாறி கீழே விழுந்தான்.

தரையில் குப்புற விழுந்தவன், கூடியிருந்த மக்களின் கால் இடுக்குகளுக்கு இடையே மண்ணிற்கு குருதி கொடையளித்த வண்ணம் கிடக்கும் அம்ரிதாவை கண்டான்.

தரையில் கிடந்தபடியே “சகி…….” என்று உணர்வுச் சீற்றத்தால் அவன் வாய் விட்டு கத்த, தற்பொழுது அந்த கூட்டத்தில் சிலர் அனேகனைத் திரும்பிப் பார்த்து ஓடி வந்து அவனை தூக்கி நிறுத்தினர்.

அவர்களது உதவியோடு அம்ரிதாவை அவனது காரின் பின்புறம் கிடத்திவிட்டு, அனேகனும் ஆஷ்ரிதாவும் முன்புறம் ஏறிய பின்னர் கார் சீறிப்பாய்ந்து அருகில் உள்ள மருத்துவமணையை வந்தடைந்தது.

மருத்துவமணையின் வாசலில் காரை நிறுத்தியவன் ஆஷ்ரிதாவிடம் “அச்சு, நான் போய் ஸ்ட்ரெச்சர் கொண்டுவர சொல்லுறேன்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினாள்.

தன் கண்களில் வடியும் கண்ணீரை துடைக்கக் கூட நேரமில்லாதவளாய் வேகமாய் காரை விட்டு வெளியேறி பின்பக்க கதவை திறந்து “அம்மு… அம்மு” என அவளை அழைத்தவாறே நின்றிருந்தாள் ஆஷ்ரிதா.

உள்ளே சென்ற அனேகன் அங்கிருந்த ரிஷப்ஷனிற்கு சென்று, “சிஸ்டர், என் சகிக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. வெளியில கார் –ல இருக்கா. வாங்க க்விக்” என்று கால் பரபரக்க கூறினான்.

“சார் வெயிட். ஆக்சிடென்ட் கேஸ் –னா முதல்ல போலீஸ் –க்கு சொல்லணும்” என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்.

“வாட் நான்சென்ஸ்… ப்ளெட் அதிகமா போய்ருக்கு. முதல்ல ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க. நான் டாக்டர் பிரபாகரனோட ஃபேமிலி ஃரெண்ட். ஐ அம் அ சைக்கியார்ட்டிஸ்ட்” என்றவன் தன் பர்சில் இருந்து தனது ஐ.டி. கார்டை எடுத்து நீட்டினான்.

அதை பார்த்தவள் “ஓ… ஓகே சார். ஆனா போலீஸ்…” என்று இழுத்தவளிடம் “வெயிட்” என்ற அனேகன் தனது கைபேசியை எடுத்து கமிஷ்னர் லேகாவுக்கு அழைத்து விஷயத்தை கூறினான்.

சற்று நேரத்தில் அந்த ரிஷப்ஷனில் இருந்த லேண்ட்லைன் ஒலிக்க, ரிஷப்ஷனிஸ்ட் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ…”
…..
“எஸ் டாக்டர்”
…..
“சாரி டாக்டர்”
…..
“ஓகே டாக்டர் ஷ்யூர்”
…..
“ஓகே டாக்டர்”

என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள், அம்ரிதாவை தூக்கிவருவதற்கு ஸ்ட்ரெச்சரை அனுப்பி வைத்தாள். உள்ளே தூக்கிவரப்பட்ட அம்ரிதாவை நேராக அவசர சிகிச்சை பிரிவுக்குள் எடுத்துச்சென்றனர். ஐ.சி.யூ. –வின் வாசல் வரை சென்ற அனேகனை ஒரு நர்ஸ் அங்கேயே தடுத்து நிறுத்திவிட, அப்போது அங்கு வந்தார் டாக்டர் சுந்தர்.

“ஹாய் மிஸ்டர் அனேகன்” என்று அவனிடம் கைக்குழுக்கிய டாக்டரிடம்,

“டாக்டர் நானும் உள்ள வர்றேன்” என்றான் அனேகன்.

“கம் அனேகன்” என்று டாக்டர் சொல்லவும் இருவரையும் வியப்பாய் பார்த்தாள் வாசலில் நின்றிருந்த நர்ஸ்.

“அச்சு… நீ பயப்படாத. அம்முவுக்கு எதுவும் ஆகாது” என்ற அனேகன் உள்ளே சென்றுவிட, வெளியே அழுதுக் கொண்டே நின்றிருந்த ஆஷ்ரிதா திரவியத்திற்கு அழைப்புக் கொடுக்க எண்ணினாள். ஆனால் அவளின் துரதிர்ஷ்டம் அவள் கைபேசி வீட்டில் இருந்தது. நேரத்திற்கு திரவியத்தின் தொடர்பு எண்ணும் நியாபத்திற்கு வரவில்லை.

“கடவுளே! என்னை ஏன் இப்படி சோதிக்கற?” என்று வாய்விட்டு கூறியே அழுதாள் ஆஷ்ரிதா.

அவள் வேதனையைக் கண்டு கடவுள் மனம் இறங்கினார் போலும், ஐ.சி.யூ. –வின் உள்ளே சென்றிருந்த அனேகன் வேகமாக வெளியே வந்து,

“அச்சு… இந்தா என் ஃபோனை வச்சிரு. உள்ளே கொண்டுப்போகக் கூடாது” என்று அவளிடம் கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்.

“தேங்க் காட்” என்றவள் அனேகனது கைபேசியை இயக்க முயல, அவனோ லாக் போட்டு வைத்திருந்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல ஆனது ஆஷ்ரிதாவுக்கு. ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு நாற்காலியை நோக்கி “ஷிட்” என்றவாறு அனேகனது அலைபேசியை தூக்கி எறிந்தாள் ஆஷ்ரிதா.

அப்பொழுது அங்கு அருகே நின்றிருந்த நர்ஸ் ஒருவர் ஓடி வந்து “மெம்… அமைதியா இருங்க. இது ஹாஸ்பிடல்” என்றாள்.

அவளது அதட்டலில் தன் இயலா நிலையை அடக்கிக் கொண்டவள் உதட்டைக் கடித்தவாறு நின்றிருந்தாள். கோபத்தில் தூக்கி எறிந்த அனேகனது அலைபேசியை பார்த்தவள் ஒரு பெருமூச்செடுத்துக் கொண்டு அதனை கையில் எடுத்தாள்.

அலைபேசிக்கு பெரிதாய் எதுவும் சேதாரம் இருக்கவில்லை. டெம்பர் மட்டும் தன் மேனியில் பல கீறல்களை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. அதை பார்த்தபடியே அந்த நாற்காலியில் அமர்ந்த ஆஷ்ரிதா,

“உன்ன போல தான் நானும், மனசுல பல கீறல வச்சிட்டு இருக்கேன். நீ வெளியில காமிக்கற, நான் காமிக்கல… அவ்வளவு தான் வித்தியாசம்” என்று அதனோடு பேசிக்கொண்டிருந்தாள்.

நேரம் கடந்தது. நொடிகள் நிமிடங்கள் ஆகி, நிமிடங்கள் மணிநேரங்கள் ஆனது. அவ்வப்போது அங்கும் இங்கும் சில நர்ஸ்கள் நடந்துக் கொண்டிருந்தார்களே ஒழிய அனேகனோ, டாக்டர் சுந்தரோ அல்லது அம்ரிதாவை குறித்த செய்தி எதுவுமோ வரவில்லை.

ஆஷ்ரிதாவின் மனம் உலைகனலாக கொதித்துக் கொண்டிருந்தது. ‘திரவியத்திடம் எவ்வாறு விஷயத்தைக் கொண்டு சேர்ப்பது, நேற்று அவ்வளவு பேசிவிட்டு எந்த முகத்தைக் கொண்டு அவனிடம் பேசுவது, நாம் பேசாவிட்டாலும் நேற்று நடந்த சம்பவத்திற்கு இனி அவனாக என்னை தேடமாட்டான்’ என்று அவளது மனம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்க, அது தவறு என விதி நிரூபித்தது.

முந்தைய தினம் கோபமாக ஆஷ்ரிதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய திரவியம், அனேகனிடம் பேசியதில் இருந்து “கொஞ்சம் பொறுமையாய் பேசியிருக்கலாமோ” என்று எண்ணி தன் தூக்கத்தை தொலைத்திருந்தான். ஆகையால் அந்த காலை பொழுதிலேயே ஆஷ்ரிதாவை தேடி அவள் வீட்டிற்கு தான் வந்திருந்தான் திரவியம்.

அவர்களது வீடு திறந்திருக்க, தயங்கியபடியே உள்ளே நுழைந்த திரவியம், ஆஷ்ரிதாவின் பெயரை சொல்லி அழைக்கும் தைரியம் இல்லாமல் “அம்மு” என்றழைத்தான். வீட்டின் உபகரணங்கள் கூட அவனுக்கு பதில் தரவில்லை. அத்தனை அமைதியாய் இருந்தது அவ்வீடு.

‘என்ன இது சத்தமே காணோம்?’ என யோசித்த திரவியம் முன்னேறி உள்ளே செல்லாமல் தன் அலைபேசியை எடுத்து அம்ரிதாவுக்கு அழைப்பு கொடுத்தான். அவளது அலைபேசி ஒலிக்கும் சத்தம் அவர்களது அறையில் இருந்து கேட்டது. அந்த சத்தத்தை கேட்டதும் யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான் திரவியம். யாரும் தம் குரலை கேட்கவில்லை என வருந்திய அலைபேசியின் மணியோசையோ தன் வாயை மூடிக்கொண்டது.

மீண்டும் அம்ரிதாவுக்கே முயற்சி செய்தான் திரவியம். தற்பொழுதும் தோல்வியே கிட்டியது. பிறகு இல்லாத தைரியத்தை திரட்டி ஆஷ்ரிதாவுக்கு அழைத்தான். தற்பொழுது அவன் அருகில் இருக்கும் சோஃபாவில் இருந்து எழுந்தது ஓசை.

“ச்சே… ரெண்டு பேரும் எங்க போய்ட்டாங்க?” என எண்ணியவன் தோட்டத்திற்கு சென்றான். அங்கும் யாரும் இல்லை என்றதும் சந்தெகம் கொண்டவனாய் அனேகனுக்கு அழைத்தான்.

அவ்வளவு நேரம் தன் உணர்வு போராட்டங்களை தன்னுள் அடக்கியபடி அனேகனது அலைபேசியிடம் பேசிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவிடம் பதில் பேசியது அந்த அலைபேசி.

திரையில் “மிஸ்டர் காலிங்” என்று எழுத்து திரவியத்தின் புகைப்படத்தோடு ஒளிர, கண்கள் விரிய ஒருவித சந்தோஷமும் தைரியமும் பிறந்தவளாய் அழைப்பை ஏற்று,

“ஹலோ… திரு… திரு” என்று வரண்ட தொண்டையில் எச்சில் முழுங்கிக் கொண்டே பேசினாள் ஆஷ்ரிதா.

எதிரே அழைப்பில் இருந்த திரவியம் ஒரு நிமிடம் குழம்பி தெளிந்தவனாய்,

“ப்ரோ… எனக்கு உங்க வாய்ஸ் கூட என் அச்சு வாய்ஸ் போலவே கேட்குது ப்ரோ” என்றான்.

அழுகையை அடக்கமுடியாமல் “திரு… நான் அச்சு தான் பேசுறேன்… அம்முவுக்கு” என்று கதறினாள் ஆஷ்ரிதா.

“என்ன… அச்சு? அச்சு… நீ எப்படி அனேகன் ஃபோன் –ல? உன்ன தேடிதான் உன் வீட்டுக்கு வந்திருக்கேன். எங்க இருக்க?” – அவளது அழுகுரலில் அவனது பயம் காணாமல் போய் தன் தேவதையை காக்கும் தேவையறிய கேட்டான்.

“அம்முவுக்கு ஆக்சிபென்ட் ஆகிடுச்சு திரு” என்று கூப்பாடு போட்டவள் அவர்கள் வந்திருக்கும் மருத்துவமணையின் பெயரை சொல்ல, காலம் கடத்தாமல் அங்கு வந்திருந்தான் திரவியம்.

அவனை கண்டதும் ஓடிச் சென்று கட்டிக்கொண்ட ஆஷ்ரிதா, “அம்மு எனக்கு வேணும் திரு” என்று அவன் மார்பில் அடித்தபடி அழுதுக் கொண்டிருந்தாள்.

“ஒன்னுமில்ல டா… அம்முவுக்கு ஒன்னும் ஆகாது. கவல படாத. இப்ப எங்க இருக்கா அம்மு?” என ஆஷ்ரிதாவின் தலையை தடவிக்கொடுத்தபடி கேட்டான் திரவியம். எப்படி விபத்து நடந்தது என கேட்க தோன்றினாலும் தற்பொழுது நிலைமை சரியில்லை என எண்ணியவன் அவள் இருக்கும் அறையை மட்டும் கேட்டான்.

“ஐ.சி.யூ –ல” என்று அழுகை மாறாமல் கூறினாள் ஆஷ்ரிதா.

“அனேகன் வந்திருக்காரா?” என்று திரவியம் கேட்டதும்

“ஆமா… அவரோட கார் –ல தான் அம்மு –வ கூட்டிட்டு வந்தோம்” என ஆஷ்ரிதா கூறிட, திரவியத்தின் மனதில் முள்ளை வைத்து தைத்தாற் போல இருந்தது.

‘இப்பொழுதும் பிரச்சனை என்றதும் அவனை தானே அழைத்திருக்கிறாள். தன்னிடம் கூற வேண்டுமென அவளுக்கு தோன்றவில்லை தானே? அவளை தேடி இப்பொழுது தான் வரவில்லை என்றாள் நம்மை தேடியிருக்கவே மாட்டாள்’ என்று எண்ணி வருந்தினான் திரவியம்.

பாவம், நங்கை அவள் அவனுக்காய் தவிக்கும் தவிப்பை எப்பொழுதுமே அவனால் காணமுடிந்ததில்லை. ஆகையால் அவனுக்கான அவள் பாசத்தை அவனால் உணரவும் முடியவில்லை. எல்லாம் விதியின் விளையாட்டு வேறென்ன?!

“அனேகன் எங்க?” என்று ஆஷ்ரிதாவை தன்னிடம் இருந்து பிரித்தவாறு கேட்டான் திரவியம்.

“ஐ.சி.யூ –ல இருக்காரு. போய் ரொம்ப நேரம் ஆகுது. யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க” என்று உதடுகளை பிதுக்கினாள் ஆஷ்ரிதா.

“சரி வெயிட் பண்ணலாம். பயப்படாத. வா… வந்து உட்காரு” என்ரு ஆஷ்ரிதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தவன் அங்கிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்திவிட்டு தானும் அமர்ந்தான்.

இரண்டரை மணிநேரம் கழிந்த பிறகு டாக்டர் சுந்தரும் அனேகனும் ஏதோ பேசியபடியே வெளியே வர, அவர்களைத் தொடர்ந்து நான்கு நர்ஸ்களும் வந்தனர். அவர்களை கண்டதும் எழுந்து ஓடிய ஆஷ்ரிதா,

“எப்படி இருக்கா என் அம்மு? கண்ணு முழிச்சிட்டாளா? பேசினாளா? வலிக்குதுனு சொன்னாளா?” என இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்க, அவளிடம் “வெயிட் அச்சு” என்ற அனேகன் டாக்டர் சுந்தரோடு அவரது அறையினுள் புகுந்துக் கொண்டான். பின்னால் வந்த நர்ஸ் ஒருவரிடம் ஆஷ்ரிதா விசரித்த பொழுது “டாக்டர் வந்து சொல்லுவார்” என கூறிவிட்டு தங்களது அடுத்த வேலையை கவனிச் சென்றுவிட்டார்.

வேறு வழியின்றி அமைதியாய் காத்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவை அதிக நேரம் காக்க வைக்காமல் அங்கே வந்தான் அனேகன்.

“என்ன ஆச்சு அனேகன்? அம்மு எப்படி இருக்கா?” – ஆஷ்ரிதா.

“ஒரு ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க. நிறைய ப்ளெட் போயிருக்கு. இன்னும் ரெண்டு ஆப்ரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க. நாளைக்கு காலையில அம்மு கண்ணு முழிக்கல –னா…” என்று எச்சில் விழுங்கினான் அனேகன்.

“சொல்லுங்க அனேகன்” பதபதைத்தாள் ஆஷ்ரிதா.

“நாளைக்கும் அம்மு கண்ணு முழிக்கலைனா நம்ம அம்மு நமக்கு கிடைக்கறது கஷ்டம் தான்” – அனேகன்.

“நோ…” என கத்தியவாறு தன் காதுகளை மூடிக்கொண்ட ஆஷ்ரிதா, “என்ன சொல்லுறீங்க அனேகன்? எனக்கு என் தங்கச்சி வேணும். அவள எப்படியாவது காப்பாத்த சொல்லுங்க! அவ இல்லனா நானும் என் உயிர விட்டுடுவேன். எனக்கு என் தங்கச்சி வேணும்!!” என்று கீழே அமர்ந்தவள் தரையில் அடித்து அடித்து அழுதாள்.

அவளிடம் ஓடிச் சென்ற திரவியம் “அச்சு… ப்ளீஸ் ரிலக்ஸ். அம்முவுக்கு ஒன்னும் ஆகாது” என்று ஆறுதல் சொல்ல, ஏதோ யோசனையில் நின்றிருந்தான் அனேகன்.

“ப்ரோ. நான் அச்சு –வ வீட்டுல விட்டுட்டு வர்றேன். என் அம்மா அவளுக்கு துணைக்கு வந்து இருப்பாங்க. நாம இங்க இருந்து அம்முவ பார்த்துக்கலாம்” என்றான் திரவியம்.

“இல்ல… நான் எங்கேயும் வரமாட்டேன். அம்முவோட தான் நான் வீட்டுக்கு வருவேன்” என பதறினாள் ஆஷ்ரிதா.

“அடம் பிடிக்காத அச்சு. சொல்லுறத கேளு” – கெஞ்சினான் திரவியம்.

“நோ திரு! அச்சு இல்லாம என்னால அந்த வீட்டுல இருக்க முடியாது… ப்ளீஸ் திரு. அம்மு –வ காப்பாத்தித் தர சொல்லு” என்று மீண்டும் அழுகுரல் எடுத்தாள்.

யோசனை தெளிந்த அனேகன், “வாங்க. நாம மூணு பேருமே கிளம்பலாம்” என்றான்.

“வாட்?? என்ன ப்ரோ சொல்லுறீங்க?” – திரவியம்.

“இப்ப எமோஷ்னல் –ஆ யோசிக்கிறத விட ஸ்மார்ட் –ஆ யோசிக்கிறது தான் முக்கியம் திரு. அது மட்டும்தான் நம்ம அம்மு –வ நம்மகிட்ட திருப்பிக் கொடுக்கும்!” – அனேகன்.

அனேகன் என்ன சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று முழுதாய் நம்பும் ஆஷ்ரிதா, தன் கண்களை துடைத்துக் கொண்டு “என்ன செய்யணும் அனேகன். அம்மு திரும்ப கிடைக்க நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்” என்றாள்.

“முதல் விஷயம் நீ அழக் கூடாது” என்றான் அனேகன்.

“சரி அழமாட்டேன். சொல்லுங்க!” – ஆஷ்ரிதா.

“இங்க பேச முடியாது. வாங்க வெளியில போகலாம்” என்று அனேகன் கூற, மூவரும் அந்த மருத்துவமணையின் வெளி வளாகத்தில் ஒரு ஓரமாக நின்று பேசத் தொடங்கினர்.

“எனக்கு ஒரு விஷயம் சொல்லு அச்சு. மோகன் இறந்ததுக்கு அப்பறமா அம்மு தூக்கத்துல முன்ன போல பேசுறது, இல்லனா பகல் –லயே அவளோட அம்மா –வ கேட்குறது, ஆளில்லாம யார்கிட்டயாவது பேசுறது இதுபோல எதுவும் செஞ்சாளா?” என கேட்டான் அனேகன்.

சற்று சிந்தித்தவள், “இல்ல அனேகன். முன்னாடி இருந்த அளவு இல்ல. அர்ஜுன் –னு சொல்லி ஒரு தடவ தூக்கத்துல பேசினா. அவ்வளவுதான்” – ஆஷ்ரிதா.

“குட். அதுக்கு காரணம் இரண்டு விஷயம். அவளோட பெரிய ஸ்ட்ரெஸ் –ஆ இருந்தது மோகன். அவன் செத்ததும் அவளோட பாதி ப்ரெஷர் குறைஞ்சாச்சு. அடுத்து பொன்னம்மா இறந்ததும் உன்ன கவனிச்சிக்கறத அவளோட பெரிய பொறுப்பா எடுத்துக்கிட்டா. இந்த ரெஸ்பான்சிபிலிட்டி –அ அவளோட பேச்சுலயே அன்னைக்கு நீ கண்டுப்பிடிச்சிருக்கலாம்” – அனேகன்.

“ஆமா அனேகன். நான் கவனிச்சேன். இதபத்தி உங்ககிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன். பொன்னம்மா இறந்த அப்பறம் இன்னைக்கு வர, அவ முழுக்க முழுக்க என்னோட அம்முவா தான் இருந்தா” – ஆஷ்ரிதா.

“யஸ். அவளோட கான்செண்ட்ரேஷன் எல்லாம் உன்ன பாத்துக்கறதுல திரும்பிடுச்சு. அதனால அவளோட கடந்த காலத்தினாலேயோ எதிர் காலத்தினாலேயோ அவள சீண்ட முடியல” – அனேகன்.

“அப்படீன்னா அம்முவுக்கு இருந்த பிரச்சனை சரியாகிடுச்சா அனேகன்?” – மலர்ந்த முகத்தோடு கேட்டான் திரவியம்.

“நோ. இப்பதான் மிகப் பெரிய பிரச்சனை வந்திருக்கு” என இடியை தூக்கிப்போட்டான் அனேகன்.

“என்ன சொல்லுறீங்க? இப்பதான் எந்த ஓரு டிஸ்ட்ராக்‌ஷனும் இல்லையே அவளுக்கு?” – ஆஷ்ரிதா.

“அம்முவோட அடுத்த ஜென்ம பயணத்துக்கு தடையா இருந்தது அவளோட இந்த ஜென்மத்துக்கான தேடல். அதாவது மோகனோட மரணம். அது பூர்த்தியானதால அவளோட மைன்ட் பீஸ்ஃபுல் –ஆ இருந்தது. அந்த பீஸ் அடுத்த ஜென்மத்துக்கான பயணத்தத் தொடங்க வழிவகுத்துருச்சு” என்று அனேகன் கூற பேரதிர்ச்சியில் உறைந்தாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)

error: Content is protected !!