கனவு – 5
“நான் சொன்ன டைம்-க்கு கரெக்ட் -ஆ தான் வந்திருக்கேன்.. நீங்க சீக்கிரமே வந்து உட்கார்ந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை சார்.. இதுக்கும் என்ன திட்டாதீங்க..” அவனது பார்வையில் பயந்தவள் தாமாக உளறத் துவங்கினாள். அதனை கொஞ்சமும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அனேகன். அவளாய் கஷ்டப்பட்டு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, வாயை மூட முடியாமல் மூடி, ஒரு நிலைக்கு வர, தற்போது அவன் பேசலானான்.
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா..?” – அனேகன்.
‘என்ன இவன் திட்டப்போறான்னு பார்த்தா இப்படி கேட்குறான்..?’ என மனதினுள் நினைத்தவள், “அது எல்லாம் உங்களுக்கு எதுக்கு..? என் தங்கச்சியோட பிரச்சனை என்ன-னு கண்டுப்பிடிச்சி சரி செய்யுறதுதான் உங்க வேலை.. அதை மட்டும் பாருங்க..” என்றாள் ஆஷ்ரிதா.
.
‘மூஞ்சியையும் முழியையும் பாரு.. ஒரு பொண்ணு வந்து பேசிட்டா போதுமே.. ஜாதகத்தையே கேப்பீங்களே..’ என்று தன் வாய்க்குள் முணுமுணுத்தவள் அவனை முறைத்துவிட்டு வேறு திசைக்கு தன் தலையை திருப்பிக்கொண்டாள்.
இப்பொழுதும் அவன் முகத்தில் எந்த ஒரு சலனமும் காணப்படவில்லை. மாறாக நாயகனுக்கே உரித்தான கச்சித புன்னகையை மட்டும் தன் உதட்டில் மாட்டிக்கொண்டவன் தன் விரல்களை சுண்டி சப்தமெழுப்பி அவளை அழைத்தான். அதில் இன்னும் அதிகம் சூடானவள் “என்ன நீங்க வச்ச ஆளு மாதிரி சுண்டிக் கூப்பிடுறீங்க..?” என்று வெடிக்கத் தொடங்கினாள்.
அப்பொழுதும் புன்னகை மாறாதவனாய் “ஆத்மா, முன் ஜென்மம் இதை பற்றியெல்லாம் கேள்வி பட்டது உண்டா..?” என்றான்.
அவனது சிரிப்பினில் ஆஷ்ரிதாவின் எரிச்சல் எல்லையை மீறியது. “நான் பேசுறது உங்க காதுல விழுதா இல்லையா.. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்..” என்றவளது வாயினை தன் கைகளால் சட்டென அழுந்த மூடியதோடு அவ்வளவு நேரம் தன் உதட்டில் தேக்கி வைத்திருந்த சிரிப்பினை தெரிந்தே தொலைத்துவிட்டு ஒரு கொடூரப் பார்வை பார்த்தான் அனேகன்.
“பேய்-க்கு பயப்படுவியா..?” என்றான் அரக்கனின் குரலில்.
பேய் என்று கேட்டவுடன் எங்கிருந்துதான் அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை படாரென அவன் கைகளை தன் வாயிலிருந்து தட்டிவிட்டவள் “என்னது பேயாஆஆஆஆ..??!!” என விழிகள் பிதுங்கிடக் கேட்டு நின்றாள்.
“அமைதியா உட்காரு..” என்றான் அனேகன்.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும்..? தங்கச்சி பத்தி பேசனும்னு தானே வர சொன்னீங்க..? வந்தா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க..? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல..?” என்று கோபமாய் கேட்க ஆசைப்பட்டாலும் பயத்தின் காரணமாய் படபடத்த குரலில் மட்டுமே கேட்க முடிந்தது ஆஷ்ரிதாவால்.
“இதுவும் உங்க சிஸ்டர் பத்தின விஷயம் தான்..” என்று சுறுக்கமாக விடையளித்தான் அனேகன்.
அவனது பதிலில் அமைதியடைந்த ஆஷ்ரிதா “அம்மு-வ பத்தியா..?” என குழப்பத்துடன் நின்றுக்கொண்டிருக்க “டோண்ட் வேஸ்ட் மை டைம்!” என அழுத்தமாக கூறினான்.
“சாரி சார்.. சொல்லுங்க.. ஆமா.. எனக்கு பேய்-னா பயம்.. கடவுள் நம்பிக்கை இல்லைனு கிடையாது.. ஆனா ரொம்ப பக்தி பழமாவும் இருக்க மாட்டேன்.. ஆத்மா, முன் ஜென்மம் இதை பத்தி எல்லாம் கொஞ்சம் கேள்வி பட்டிருக்கேன் சார்..” என்று அவனது கேள்விகள் அனைத்திற்கும் மொத்தமாக பதில் அளித்தாள் ஆஷ்ரிதா.
“குட்.. லிசன் கேர்ஃபுலி.. மிஸ். அம்ரிதா அடிக்கடி அம்மாவ கேட்குறது, சம்பந்தம் இல்லாம எதையாவது பேசுறது இது எல்லாத்துக்கும் காரணம் அவங்களோட முன்ஜென்ம நினைவுகள் தான்..” – அனேகன்.
“என்ன.. முன்ஜென்மமா..?” அதிர்ச்சித்தாள் ஆஷ்ரிதா.
“எஸ்.. முன்ஜென்மம் மட்டும் இல்லை.. அவளுக்கான அடுத்த ஜென்மத்தோட தேடலும் அவங்களோட ஆன்மாவுல ரொம்ப அழுத்தமாவே இருக்கு..” – அனேகன்.
“வாட் ஆர் யூ சேயிங்??!! சீரியஸ்லி??” தலை வெடித்துவிடும் போல இருந்தது ஆஷ்ரிதாவுக்கு.
“யஸ்.. ஒரு மனுஷன் பூமியில பிறக்கும் பொழுதே அவனது ஆழ்மனசுல அவனோட பூர்வ ஜென்ம வாசனை இருக்கும். குழந்தையில இருந்து பெரியவனா வளர வளர அவனோட ஆழ்மனதுல இருக்குற ஜென்ம ரகசியங்கள் அமைதி ஆகிடும்.. அந்த நேரம் வெளி மனது அப்பொழுதைய வாழ்க்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திக் காட்டும்.. அதனால ஆழ்மனசோட குரல நம்மால கேட்க முடியுறது இல்லை.. நூறு-ல இருபது சதவிகித மக்களுக்கு மட்டும் தங்களோட கடந்த காலத்து நிகழ்வுகள் நிகழ்காலத்தோட வந்து இம்சை செய்யுது.. அம்ரிதாவுக்கு நடந்துக்கிட்டு இருக்குறதும் இதுதான்.. கூடுதலா வரும் காலத்தோட தேடலும் அந்த ஆத்மாக்கு அதிகமா இருக்கறதால இது எனக்கே ஒரு சேலஞ்சிங்கான கேஸ்-ஆ தான் இருக்க போகுது..” மிகவும் சுருக்கமாக அதே நேரம் அம்ரிதாவுடைய பிரச்சனையின் வீரியம் எவ்வளவு பெரிது என்பதை ஆஷ்ரிதாவுக்கு புரியும்படி கூறினான் அனேகன்.
தன் தங்கையின் நிலையை தெரிந்துக்கொண்டவளால் தன் கண்களில் அருவியைக் கொட்டாது இருக்க முடியவில்லை. அவன் கூறிய செய்தியில் மனம் பாறை போல கனத்தது ஆஷ்ரிதாவுக்கு. மனவலியில் வாயடைத்து அமர்ந்திருந்தவளை புரிந்துக் கொண்டவன் அவளுக்காய் சிறிது நேரம் பொறுமை காத்தான். ஒரு சிறு நிமிடங்களில் பெரு மூச்சு ஒன்றை வெளியே விட்ட ஆஷ்ரிதா “இத சரி பண்ணிடலாம்-ல சார்..??” என்று பாவமாய் அனேகனிடம் கேட்டாள்.
“எனக்கு உங்க கோ-ஆப்ரேஷன் வேணும்.. ஐ வில் டூ மை பெஸ்ட்.. இந்த கேஸ்-க்கு தேவையில்லாத எத பத்தியும் உங்களிடம் பேசவோ கேட்கவோ மாட்டேன்.. அதுக்கு எனக்கு நேரமும் இல்லை.. அது எனக்கு தேவையும் இல்லை..” – அனேகன்.
“சாரி சார்.. இனிமே சரியா நடந்துக்குறேன்..” என்றவளுக்கு திடீரென எழுந்தது அந்த சந்தேகம்.
“சார்.. என் தங்கச்சி முன்ஜென்மத்தோட நினைவுகளால தான் இப்படியெல்லாம் நடந்துக்கறா அப்படீன்னு எத வச்சு சொல்லுறீங்க..?” என்று அவள் கேட்கவும் அவளை ஒரு கோபப்பார்வை பார்த்தான் அனேகன். ‘இப்பதான ஒழுங்கா நடந்துக்கறேன் –னு சொன்ன..? அதுக்குள்ள முருங்க மரம் ஏறுறியா..?’ என்று அவன் மனதில் நினைப்பதை அந்த பார்வையிலேயே புரிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.
“இல்லை சார்.. அவ முன்ஜென்மம் நியாபகம் வந்து தான் அம்மாவ கேட்குறா –னு சொல்லுறீங்க.. ஆனால் என் அம்மா யசோதா இந்த ஜென்மத்துல தானே அவளுக்கு அம்மா..?” என்று சற்று பணிவோடு கேட்டாள்.
“அவள் கேட்கறது யசோதாவை இல்லை.. அவளது முந்தைய ஜென்மத்து அம்மாவ..” என்று இடியைத் தூக்கிப்போட்டான் அனேகன்.
இதை கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவ்வாறே அங்கிருந்து வீடு திரும்பிய ஆஷ்ரிதாவுக்கு நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அம்மாவை கேட்டு அவள் அழுத பொழுது என்னவெல்லாம் பேசினாள் என்று தன் மனதினுள் அசைப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். முந்தைய ஜென்மத்தில் அம்ரிதா யாருக்கு மகளாக இருந்திருப்பாள்? அவள் அம்மாவின் பெயர் என்ன? அவளது வாழ்வு எவ்வாறு இருந்திருக்கும்? என தன் மனதிடம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் பாவம் அவள் மனதினிடத்தில் இதற்கான பதில்கள் எதுவும் இல்லையே. தனக்கு தெரியாத ஒன்றை எவ்வாறு அது கூறும்..?
ஆனால் அவளது கேள்விக்கான பதிலைக் கொடுக்க இயலாமல் தவித்த மனமோ அவளுக்கு உதவும் விதமாக ஒன்றை செய்தது. என்றோ ஓர் நாள் அம்ரிதா தூக்கத்தில் உளறிய செய்தி ஒன்றை அவளுக்கு நியாபகப்படுத்தியது.
ஓர் நாள் நீண்ட பயணம் ஒன்றை மேற்க்கொண்டிருந்த ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் நள்ளிரவு 2 மணியளவில் தங்கள் வீட்டை அடைந்தனர். அன்று தூக்கக்கலக்கமும் பயண அலுப்புமாக தங்கள் படுக்கையில் இருவரும் தஞ்சம் அடைந்த பொழுது அம்ரிதா “அம்மா எதுனாலும் உன்கிட்ட தானே சொல்லுவேன்.. இப்படி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு உட்கார்ந்தா நான் எங்கே போவேன்.. நான் காலேஜ் போகமாட்டேன் போ” என்று தன்னை அறியாது ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். தானும் அதீத கலைப்பில் இருந்ததால் அதனை ஆஷ்ரிதா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறுவதை விட அவளது மூளை அப்பொழுது அதனை சரிவர கிரகிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்வினை யோசித்த ஆஷ்ரிதாவுக்கு ஒன்று தெளிவாய் புரிந்தது. தங்களின் குழந்தை பருவத்திலேயே யசோதா இறந்துவிட்டாள். அம்மு புலம்பும் பொழுது காலேஜ்- க்கு போகமாட்டேன் என அம்மாவிடம் சொல்கிறாள். அப்படியானால் அனேகன் சொல்லியபடி அவள் யசோதாவை கேட்டு இத்தனை நாள் அழவில்லை. உண்மையை உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு தலைக்குள் லட்சம் அணுகுண்டுகள் வெடித்துத் தெறிப்பதுபோல இருந்தது. தன் கைகளால் தலையை இறுகப்பற்றிக்கொண்டு அடை மழையென அழதுத் தீர்த்தாள்.
பின்பு இவை அனைத்தையும் ஆழ்ந்து யோசித்தவள் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்தாள். இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் அம்ரிதாவை தனியே விடக்கூடாது. அவளது செயல்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கூர்மையாக கவனிக்கவேண்டும் என எண்ணினாள். அவர்களது அறையில் யாரும் அறியாத வண்ணம் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்திவிட வேண்டும் என உறுதியானாள்.
அதே நேரம் ஆஷ்ரிதாவை சந்தித்துவிட்டு கிளம்பிய அனேகன் அம்ரிதாவின் அலுவலகத்தை அடைந்திருந்தான். அங்கே மோகனின் அறை கதவைத் தட்ட எத்தனித்தவனை தடுத்தது அவனது அலைபேசியின் மணியோசை. அழைப்பில் வந்திருந்தது டாக்டர் பிரபாகரன்.
“ஹலோ டாக்டர்” – அனேகன்.
“வெரி குட் மிஸ்டர் அனேகன். நீங்க கண்டிப்பா சக்சஸ் பண்ணிடுவீங்கனு எனக்கு தெரியும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரத்துல பிரச்சனையோட ரூட்-அ கண்டுபிடிப்பீங்க-னு நான் எதிர்பார்க்கலை..” – மிகுந்த மரியாதையுடன் கூறினார் டாக்டர் பிரபாகரன்.
“சார்.. யூ ஆர் டூ லேட்.. நான் சொலியூஷனே கண்டிபிடிச்சிட்டேன்.. இன்னும் நீங்க அந்த மெயிலை பார்க்கலைனு நினைக்கிறேன்.. நான் ஸ்பாட் –ல தான் இருக்கேன்.. நீங்க மெயில் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்ளை பண்ணுங்க.. நான் வேலைய முடிச்சிட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன்..” என்றவன் சட்டென அலைபேசியை அணைத்து பையில் போட்டுவிட்டு மோகனது அறையின் கதவைத் தட்டினான்.
இவ்வளவு படு சுறுசுறுப்பான ஒருவனை கண்டிறாத டாக்டர் பிரபாகரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தால் அவன் பூரித்துப்போவான் என எண்ணி அவனை அழைத்து பேசினார். ஆனால் அவனோ ‘உங்கள் பாராட்டை கேட்டு விண்ணில் மிதப்பதற்கு நான் சராசரி மனிதன் அல்ல. அத்துடன் நீங்கள் வியப்பதை விடவும் அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் அனேகன் நான்’ என்று தனது செயலின் வழியே காண்பித்துவிட்டான். இதனை உணர்ந்த டாக்டர் பிரபாகரன் அனேகனை எண்ணி கூடுதல் வியப்படைந்து “மிஸ்டீரியஸ் மேன்” என்று புன்னகைத்துக் கொண்டே அவனது மின்னஞ்சலை தேடலானார்.
அங்கே அனேகன் மோகனது அறை கதவைத் தட்டவும் “யஸ் கம் இன்” என்ற குரல் அவனை உள்ளே அழைத்து வந்தது. வந்ததும் கையை குழுக்கிக்கொள்ள நீண்டு நின்ற மோகனது கரத்தை அலட்சியம் செய்தவனாய் எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டான் அனேகன். இதில் மூக்கறுபட்ட மோகன் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்
“தேங்க்ஸ் அனேகன். நீங்க இவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லுவீங்கனு நான் எதிர்பார்க்கலை..” – மோகன்.
“நானும் தான்” – விரைப்பாக கூறினான் அனேகன்.
அவன் எதற்கு அப்படி கூறுகிறான் என்பது புரியவில்லை என்று முகத்தில் அப்பட்டமாக காட்டிய மோகன் சிரித்துக்கொண்டே “காஃபி, டீ, ஃப்ரெஷ் ஜூஸ்” என்றார்.
“என்ன இதுக்கு முன்னாடி பிளாட்ஃபாம் கடையில் வேலை பார்த்தீங்களா..?” – கேலி புன்னகையோடு கேட்டான் அனேகன்.
இதை கேட்டதும் மோகனுக்கு ஈயாடவில்லை. அடுத்த வார்த்தை பேச மோகன் வாயெடுக்கவும் அனேகனது அலைபேசி மீண்டும் அலறியது. ‘இவன் மட்டும் இல்லாம இவனோட ஃபோனும் சேர்ந்து நம்மை வாருதே’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டவன் வேறு வழியின்றி அமைதி காத்தான்.
அலைபேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “யஸ் மாம்” என்றான்.
“என்ன டா.. ரீச் ஆகிட்டியா இல்லையா..” – அனேகனின் அம்மா.
“இன்ஃபிரண்ட் ஆஃப் ஹிம்” – அனேகன்.
“ஓகே.. டேக் கேர்” – அனேகனின் சுருக்கமான பேச்சுக்கு வித்தான அவனது தாய் அழைப்பை துண்டித்திருந்தாள்.
“உங்க அம்மாவ மாதிரியே வளராத டா.. மனுஷனா பொறந்தா கொஞ்சமாவது கலகல –னு பேசனும்” கூறியவர் வேறு யாரும் இல்லை அனேகனின் அப்பா மோகனே தான்.
“டோண்ட் வேஸ்ட் மை டைம்” மீண்டும் சுருக்கம் காக்கும் பாணியில் அனேகன் கூறினான்.
“உன்ன எல்லாம் திருத்த முடியாது.. சரி சொல்லு.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியாமே.. எப்ப பண்ணிக்க போற..?” – மோகன்.
“சீக்கிரமே” – அனேகன்.
“ஏதோ ஒரு பொண்ண செலக்ட் பண்ணிட்டதா உங்க அம்மா சொன்னாளே!” – மோகன்.
“யஸ்” – அனேகன்.
“யார் அந்த பொண்ணு? சிதம்பரம் அங்கிள் டாட்டரா? யூ.கே. –ல டெண்டிஸ்-ஆ இருக்கிறாள்.. எனக்கு ஓகே தான்” – மோகன்.
“நோ” – அனேகன்.
“இல்லையா? இந்த பொண்ண தான் செலக்ட் பண்ணிருப்ப-னு நினைச்சேன்.. அப்போ அந்த வெள்ளக்காரி ஃபெல்சியா தானா..? உங்க அம்மா எப்படி ஒத்துக்கிட்டா..? உன் ப்ரெண்டு ராபர்ட் க்ளையண்ட் தானே அந்த பொண்ணு..?” என மோகன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அந்த அறையின் கதவை தட்டினாள் அம்ரிதா.
“சார்.. எக்ஸ்க்யூஸ் மீ” என அம்ரிதா கேட்க
“கம் கம்” என்று ஏளனமான குரலில் மோகன் கூற அனேகனுக்கோ மோகனை சுட்டெறிக்கும் அளவு கோபம் வந்தது.
இது பழகிப்போன ஒன்று என்பதால் அவள் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லையா இல்லையேல் அனேகன் அங்கிருந்ததால் மீண்டும் அவனது பரஸ்பர வாசம் அவளது ஆன்மாவை தொட்டு அவளை ஆல்ஃபா நிலையில் வைத்திருந்ததா என தெரியவில்லை. அம்ரிதா எந்த எரிச்சலும் இன்றி தான் வந்த விஷயத்தை நிதானமாய் கூறலானாள்.
“சார்.. நேத்து பெங்களூர் பிரான்ச்-ல இருந்து வந்த ஃபண்ட்ஸ்-அ செக் பண்ணி லே-அவுட் ரெடி பண்ணிட்டேன். நீங்க வெரிஃபை பண்ணி ஓகே சொல்லிட்டா ப்ரிண்ட்க்கு அனுப்பிடலாம்” என்றாள்.
“வச்சிட்டு போ” என்றான் மோகன்.
“ஓகே சார்” என்ற அம்ரிதா அனேகனது தோளை கடந்து அவன் முன் இருந்த அந்த மேஜையில் லே-அவுட்டை வைத்தாள். வைத்திவிட்டு திரும்பும் நேரம் அவனது தோள்பட்டையில் அவளது மோதிர விரல் லேசான தீண்டலை சந்திக்க, ஒரு நொடி உயிர் பூத்து நின்றாள் அம்ரிதா. அவளது நிலையை தன் மனம் வழியே படித்த அனேகன் மென்மையாய் முறுவலித்துக்கொண்டிருந்தான்.
தனக்கு ஏற்பட்ட அந்த உணர்வில் ‘யார் இவன்’ என திடுக்கிட்டுப் பார்த்த அம்ரிதாவுக்கு அவனது முதுகு மட்டுமே தரிசனம் தந்தது. அவளது மேனியை தன் மனதின் உதவியால் அனேகன் ஊடுருவிச் செல்ல, அது தரும் ஒருவித வர்ணிக்க இயலா உணர்வினின்று அவளால் வெளிவர இயலவில்லை. இந்த உணர்வுக்கும் முந்தைய நாள் தன் கையில் இருந்த பூச்செண்டிற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது என்று அவளது மனது ஆணித்தரமாய் கூறியது.
அவன் யார் என்று நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்று துடித்தாள். அவளது துடிப்பினை தன் மனதினுள் ரசித்துக் கொண்டிருந்தவன் வேண்டுமென்றே திரும்பாமல் சிலையென அமர்ந்திருந்தான். அவளது கண்களும் உதடுகளும் படபடக்க மலையென விரிந்திருந்த அவனது முதுகையே ஏக்கமாய் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
“வச்சிட்டு போக சொன்னேன்” என்று மிரட்டலாக கூறிய மோகனின் குரல் அம்ரிதாவை தன்னிலைக்கு திருப்பியதும் தான் அங்கு மோகனும் இருக்கிறான் என்பது அவள் நினைவிற்கு வந்தது.
‘எப்படி கத்துது பாரு காண்டாமிருகம்’ என்று மனதில் திட்டியவாறு அங்கிருந்து வெளியேறிய அம்ரிதா தனது அறைக்குச் சென்றாள்.
“ச்சே.. அவன் முன்னால என்ன இப்படி திட்டிட்டானே அந்த காண்டாமிருகம்.. அவன் என்ன பத்தி என்ன நினைச்சிருப்பான்.. காண்டாமிருகம்.. காண்டாமிருகம்.. நல்லா முட்ட போண்டா மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு இவன் மொறைக்குற மொறை இருக்கே.. அந்த கண்ணு ரெண்டையும் நோண்டல என் பேரு அம்மு இல்லை.. ச்சே.. அவன் முகத்தை எப்படியாவது பார்த்திடலாம்-னு நினைச்சேன்.. எல்லாம் போச்சு..” என்று அவளது அறையில் அங்கும் இங்கும் நடந்தவாறு புலம்பிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.
சட்டென தனது புலம்பலை நிறுத்திக்கொண்டு காலுக்கு பிரேக் போட்ட அம்ரிதா “இவன் யாரு என்ன போ –னு சொல்லுறதுக்கு..? இன்னைக்கு அவன் முகத்தை நான் பார்க்காம ஓயமாட்டேன்..” என்றவள் தன் அறையின் வாசலை நோக்கி திருப்பிட, அங்கே அவளது அறையின் கதவை தாழிட்டு அதன் மேல் சாய்ந்துக்கொண்டு தன் கைகளைக் கட்டியவாறு சுவற்றில் இடது காலை ஊன்றி தன் தேகத்தின் மொத்த எடையையும் வலது தாங்கிய வண்ணம் மர்ம புன்னகையோடு நின்றிருந்தான் அனேகன்.
(களவாடுவான்)