Kanavu 8

Kanavu 8

கனவு – 8

மீண்டும் அங்கு அமைதி நிலவ மறுபடியும் அலைபேசி அதிர்ந்து தன் வேலையை செவ்வன செய்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ அலைபேசி மணியின் திடீர் சத்தத்திற்கு இம்முறை மோகன் பதறவில்லை.

“எடுத்து பேசுங்க பா.. மிஸ்டர் விச்சு முக்கியமான விஷயம் ஒன்னு உங்ககிட்ட சொல்லுறதுக்கு தான் கால் பண்ணுறாரு” என்றான் அனேகன்.

ஆம்.. அந்த மடிகணினியின் திரையில் தற்பொழுது இருக்கும் புகைப்படமும் மோகனது அலைபேசி அழைப்பில் வந்திருப்பதும் மிஸ்டர் விச்சு தான். அம்ரிதா – ஆஷ்ரிதாவின் அருவருப்பிற்கு சொந்தமான அப்பாவும் யசோதாவின் வெறுப்பிற்குரிய கணவனுமான தீ கிரேட் விஸ்வநாதன் தான்.

மோகன் வேகமாக அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான். அனேகன் அங்கிருந்து நகன்று குளிர்சாதனப் பெட்டியை அடைந்தான். அதில் வைத்திருந்த பழச்சாறு எசன்ஸ் ஒன்றை எடுத்து வந்து பால் சேர்த்து கலக்கத் துவங்கினான். சரியான விகிதத்தில் பாலையும் எசன்ஸையும் கலந்தவன் அதில் சர்க்கரையை சேர்க்கத் தொடங்கிய நிமிடம் வேகமாக அனேகனின் அருகில் வந்தான் மோகன்.

அனேகன் கொஞ்சமும் திரும்பிப் பார்க்காமல் “சொல்லிட்டாரா எல்லாம்.? எதையும் மறந்துடலையே..?” என்றான்.

“என்ன டா செஞ்சுக்கிட்டு இருக்க நீ..?” என மிகுந்த ஆவேசத்தில் கத்தினான் மோகன்.

“பார்த்தா தெரியலை.. ஜூஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன்” – அனேகன்.

“டேய்.. அந்த விச்சுவோட பொண்ணா டா இவ..? இந்த மாதிரி பொண்ணுகள எல்லாம் தொட்டோமா விட்டோமானு யூஸ் அன் த்ரோ போல தூக்கிப்போட்டுட்டு போய்கிட்டே இருக்கனும்.. கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுக்க நினைக்கறதுலாம் டூ மச் டா..” – ஆத்திரத்தில் பொரிந்துக் கொண்டிருந்தான் மோகன்.

“அப்பா சொல்லுறத கேட்ப தானே.. இந்த பொண்ண புடிச்சிருக்கா உனக்கு? சரி நாளைக்கே நான் ஏற்பாடு பண்ணுறேன்.. அடுத்த வாரம் கனடா மாமாகிட்ட பேசுறேன். அவரோட பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ.. ஒரே பொண்ணுங்கறதால அவங்க பிஸ்னஸ் பிராஃபிட் எல்லாம் அவளுக்குதான் வரும். அவளுக்குனா அஃப்கோர்ஸ் நமக்கு தான்.. எப்படி ஐடியா..?” என தற்போது தன்மையாய் பேசி நயவஞ்சகமாய் காயை நகர்த்தி அனேகனை தன் பக்கம் இழுக்கப்பார்த்தான் மோகன்.

மோகனின் வார்த்தைகளைக் கேட்ட அனேகன் சிரித்துக்கொண்டே திரும்ப, “என் மகன் டா நீ.. ஹாஹா..” என அனேகனை கட்டி அணைக்க வந்த மோகன் அடுத்த நொடியே மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்துக் கிடந்தான்.

தன் மூக்கில் இருந்து வழியும் ரத்தத்தினை தொட்டு பார்த்த மோகனுக்கு அதீத வலியின் காரணமாக சற்றுமுன் என்ன நடந்தது என ஒரு நாளிகைக்கு மறந்திருக்க, நடந்தவற்றை தன் மனதினுள் மீண்டும் காட்சிப்படுத்திப் பார்த்தான். தன்னை கட்டி அணைக்க முற்பட்டவனின் மூக்கை தன் கை முட்டியினைக் கொண்டு ஒரு விநாடியில் உடைத்திருந்தான் அனேகன்.

“டேய்.. அப்..அப்..அப்பா மேலயே கை வைக்குறியா..?” என திக்கிதிணறி வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தது மோகனிடம் இருந்து.

எரிமலையென கொதித்துக் கொண்டிருந்த அனேகன் அருகில் இருந்த மர நாற்காலியை இழுத்து மோகனுக்கு அருகில் போட்டு அதன் இருக்கை பகுதியில் ஒரு காலை வைத்துக்கொண்டு ஒரு முழங்கையினை அந்த கால் முட்டியின் மேல் சாய்வாக சரித்தவண்ணம் நின்றான். கண்கள் நெருப்பை கக்கிக்கொண்டிருக்க பற்கள் கடித்து முழுங்கிவிடும் ஆக்ரோஷத்தை அடக்கிக் கொண்டிருக்க எதிரே நிற்கும் அனேகனை கண்ட மோகனுக்கு நீண்ட நாள் பட்டினி போட்டு கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட சிங்கத்தின் முன் நிற்பது போலவே இருந்தது.

“டேய் அனேகா.. அப்பா டா” – தற்பொழுது பம்மியேவிட்டான் மோகன்.

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..” என கண்களில் ருத்ர தாண்டவம் தெரிய கூறினான் அனேகன்.

பயத்தில் நடுநடுங்கிய மோகனுக்கு தொண்டை வரண்டு போனது. வாயினுள் எச்சில் கூட்டி முழுங்கிக்கொண்டவன் “த..தண்ணீர்” என்றான். அனேகன் கொஞ்சமும் கருணை காட்டவில்லை என்பதால் மெல்ல அசைந்து அருகே இருந்த தண்ணீர் குடுவையை எடுக்க முயன்றான் மோகன். அவனுக்கு முன் விரைந்துச் சென்று அந்த குடுவையை எடுத்த அனேகன் தனக்கு எதிர்திசையில் அதனை தூக்கி எறிந்தான்.

எறியப்பட்ட வேகத்தில் சுவற்றில் பயங்கரமாக மோதிய தண்ணீர் குடுவை கீழே விழுந்து, மூடி உடைந்து தண்ணீர் அனைத்தும் சிந்தி சிதறத் தொடங்கியது. சிந்தும் தண்ணீரை ஏக்கத்துடன் பார்த்த மோகன் “அப்பாக்கு தண்ணீர் கொடு டா” என மீண்டும் கெஞ்சினான்.

“பெத்த அப்பனா இருந்தாலும் சரி, அந்த அம்மையப்பனா இருந்தாலும் சரி.. தப்பு பண்ணினா இதுதான் கதி” என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர நாற்காலியை எடுத்து மோகனது காலில் ஒரே அடியாக அடித்து உடைத்தான்.

“அம்மாஆஆஆஆ” என உயிர் போகும் வலியில் தொண்டையே கிழியும் வண்ணம் கத்தித் துடித்தான் மோகன்.

“இப்படி தான அந்த ரெண்டு பொண்ணுகளும் அம்மா அம்மானு அழுது கதறிருக்கும்.. கத்து பா.. நல்லா கத்து.. அந்த யசோதாவுக்கு நீ கத்தித் துடிக்கிறது கேட்கனும்.. ம்ம்ம்.. இன்னும் சத்தமா கத்து” என வெறி பிடித்தாற் போல கர்ஜித்தான் அனேகன்.

வலியில் முனகிக்கொண்டே “அப்பாவ பார்த்தா பாவமா இல்லையா டா.. வலிக்குதுடா அனேகா” என்று உளறிய வண்ணம் கூறினான் மோகன்.

“அப்பாவா..? நீ எனக்கு அப்பாவா..? அப்படி சொல்லாத இனிமேல்.. நான் உன்மேல உள்ள பாசத்துல உன்ன அப்பானு கூப்பிடல..! நீ செஞ்ச பாவத்துக்கு உன் மகன் என்கிற அடையாளத்தோட நான் பரிகாரம் செய்ய நினைச்சேன்.. அப்படி செஞ்சா மட்டும்தான் யசோதாவோட ஆத்மா அவங்க பொண்ணுகள பத்தி கவலை படாம ஷாந்தி அடையும்.. அந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் உன்ன நான் அப்பானு கூப்பிட்டேன்” என்ற அனேகனின் கோபம் தற்பொழுது அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.

“என்ன மன்னிச்சிடு அனேகா.. இனி திருந்தி வாழறேன் டா.. ப்ளீஸ் டா” என உடைந்த காலோடு தரையில் நகர்ந்து நகர்ந்து வந்து கேட்டான் மோகன்.

“நீ செஞ்சது மன்னிக்க முடியாத தவறு மிஸ்டர் மோகன். ஒரு அழகான குருவி கூட்ட தேவை இல்லாம துவம்சம் பண்ணிட்ட.. உன்னோட பேராசையால எந்த தப்புமே பண்ணாத ஒரு உயிரு போய்டுச்சு. தன் அம்மாவோட சாவ பிஞ்சு வயசுல பார்த்த ஒரு உயிரு தனக்கு என்ன நடக்குதுனே தெரியாம இந்த பூமியில நடமாடிக்கிட்டு இருக்கு. அத பார்த்து இன்னும் ஒரு உயிரு தினம் தினம் அணுஅணுவா வலிய அனுபவிச்சு சித்ரவதையோட வாழ்ந்துட்டு இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் நீயும் அந்த விஸ்வநாதனும் தான்..” – அனேகன்.

“இல்லை.. இல்லை அனேகா.. இனி நான் அந்த தப்ப பண்ண மாட்டேன்.. நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.. உன் சொல் கேட்டு நடக்கறேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் டா.. ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போ பா.. வலி தாங்க முடியலை..” என கதறினான் மோகன்.

“ஓ.. என்ன சொன்னாலும் செய்வியா..?” – மோகனின் தலையை கோதியபடியே கேட்டான் அனேகன்.

“ம்ம்.. ஆஆ.. கண்டிப்பா செய்யறேன்.. செய்யறேன்..” – அவசர அவசரமாக வார்த்தைகளை அடுக்கினான் மோகன்.

“யசோதாவ திருப்பிக் கொடு” என கையை நீட்டினான் அனேகன்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த மோகன் “அது எப்படி பா கொடுக்க முடியும்..?” என கேட்டவும்

“அப்போ உன் உயிர கொடு டா” என ஓங்கி மோகனின் செவிட்டில் தன் அத்தனை ஆத்திரமும் வெளிப்படும் வண்ணம் அறைந்தான் அனேகன். அதில் தலை சுற்றி நிலை தடுமாறிப்போனவன் அப்படியே தரையில் தன் முழு நீளத்திற்கும் சரிந்தான்.

“நீ என்னோட அம்மாவுக்கு வேணாம். நீ செத்துட்டனு தெரிஞ்சா அவங்க அனுபவிக்கிற வலிய விட, நீ துரோகம் செஞ்சுருக்கனு தெரிஞ்சா வர்ற வலிதான் அதிகமா இருக்கும்.. அந்த கொடுமை என் அம்மாவுக்கு வேணாம்.. அவங்கள நான் பார்த்துக்கறேன்” என்ற அனேகன் வாசலை நோக்கி நடக்கலானான்.

அவன் பேசுவதின் அர்த்தம் முழுமையாக புரியாமல் அரை மயக்கத்தில் கிடந்த மோகன் அனேகனது காலை பிடித்து நிறுத்தி கேள்வியாய் பார்த்தான்.

“கிட்சன் –ல என்ன சும்மா சர்க்கரைய மட்டும் கலந்துக்கிட்டு இருந்தேன்னு நினைச்சியா” என தந்திரமாய் ஒரு புன்னகை சிந்தியபடி தன் காலை உதறிவிட்டு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு மீண்டும் வாசலை நோக்கி அடியெடுத்தான் அனேகன்.

அவ்வளவு நேரம் அங்கு நடப்பவற்றை வாசலில் பதுங்கி நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த திரவியத்தின் மூக்கு சமையல் எரிவாயுவின் வாடை வந்துக்கொண்டிருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தது.

அதிர்ந்து போன திரவியம் மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்க அனேகன் வாசலை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பட்டுவிடக் கூடாது என அங்கிருந்து வேகமாக வெளியேறிய திரவியம் பிளாட்டின் அடி தளத்திற்கு விரைந்து அங்கிருந்த ஒரு தூணின் பின் மறைந்துக் கொண்டு அனேகன் வருகிறானா என கவனிக்கலானான். அனேகனது பிளாட் முதல் தளத்தில் என்பதால் திரவியத்தால் எளிமையாக தப்பித்து கீழே வர முடிந்தது.

திரவியம் கீழே வந்த இரண்டாம் நிமிடம் அனேகனும் அங்கு வந்திருந்தான். அவனை கண் சிமிட்டாது ஒருவித பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திரவியம். மேலே சமையல் எரிவாயுவினை நுகர்ந்தவனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகிக்க முடிந்திருந்தது. கை கால் லேசாக நடுக்கம் கொடுக்க அந்த தூணுக்கு பின்னிருந்தே வெறித்துக் கொண்டிருந்தான் திரவியம்.

கீழே வந்த அனேகன் தன் காற்சட்டை பையில் இருந்து சிகரெட் லைட்டரை எடுத்து அதில் இருக்கும் பொத்தான் அழுந்தி நிற்கும் வண்ணம் ஒரு க்ளிப்பை மாட்டியவன் எரியும் தீச்சுடரை கூர்மையாக பார்த்து “யசோதா மா.. இது உங்களுக்காக” என கூறிவிட்டு தன் பிளாட்டின் ஜன்னல் நோக்கி எறிந்தான்.

அவன் வீசிய ஒற்றை கொள்ளியில் வெடித்து சிதறியது சிலிண்டர் மட்டும் அல்ல; மோகனும் தான். தீடிரென ஏற்பட்ட சத்தத்தில் அருகாமை தளத்தில் வசித்தவர்கள் எல்லாரும் ஓடி வர, அனேகன் அந்த லைட்டரை தூக்கி எறிந்தவாறு அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறினான்.

இத்தனை சாதூரியமாக இவ்வளவு பெரிய காரியத்தை இவனால் எப்படி செய்ய முடிந்ததென திரவியம் வியந்தாலும், கொஞ்சமும் கருணையின்றி பெற்ற தகப்பனை இப்படி கொலை செய்யும் அளவு என்ன தவறு செய்திருப்பான் அந்த மோகன் என்ற யோசனை அவனது தலையினுள் கிடந்து குடைந்துக் கொண்டிருந்தது.

ஆஷ்ரிதாவை உடனே சந்திக்க எண்ணி அவளது எண்ணிற்கு அழைப்பு கொடுத்தான் திரவியம். அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா வைப்ரேஷனில் இருக்கும் தனது அலைபேசி உறுமுவதை உணரவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்து சோர்ந்தவன் தற்பொழுது ஒன்றும் செய்ய இயலாது என எண்ணி தன் வீட்டிற்கு விரைந்தான்.

வீட்டில் தனது அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த திரவியம், அனேகன் பேசியவற்றை மீண்டும் மீண்டும் தன் தலைக்குள் ஓட விட்டுக் கொண்டிருந்தான். ‘இப்படி தான அந்த ரெண்டு பொண்ணுகளும் அம்மா அம்மானு கத்திருக்கும்’ என்று அனேகன் கூறியதில் இருந்து மட்டுமே ஒட்டுக்கேட்டவனுக்கு அதற்கு முன் என்னென்ன பேசியிருப்பார்கள், மோகன் யார், அவன் என்ன செய்திருப்பான், இவர்களுக்கும் ஆஷ்ரிதாவின் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் என பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. அத்துடன் அவர்களது கடந்த காலத்தை பற்றி ஒன்றும் அறியாமல் ஆஷ்ரிதாவை நோகடித்துவிட்டோமோ என எண்ணி வருந்தினான் திரவியம்.

நல்ல தோழர்களாய் பழகுகிறார்கள் என்றாலும் தங்களது அலைபேசி எண்களை பறிமாறிக்கொண்ட ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் தங்களது வீட்டு விலாசத்தை திரவியத்திடம் கொடுக்கவில்லை. அதை அவர்கள் செய்திருந்தால் இப்பொழுது இருக்கும் நிலைமையில் திரவியம் ஆஷ்ரிதாவின் வீட்டிற்கு சென்றே மன்னிப்பு கேட்டிருப்பான். இளம் வயது பெண்கள் தனியே வாழ்க்கை போராட்டம் நடத்தும் பொழுது வெள்ளையாய் இருப்பதெல்லாம் பால் என நம்பிவிட முடியாது அல்லவா..! இக்காலத்தில் நூறு சதவிகிதம் யாரையும் நம்பிவிட முடிவதில்லை. பெற்ற தகப்பனே தங்களுக்கு துரோகம் இளைத்து விட்டுச் சென்றுவிட்டான் என்கையில் இந்த உலகில் வேறு யாரை நம்பத் தோன்றும் அந்த கன்னிகளுக்கு.

மற்றவர்கள் யாரையும் நம்பாத பெண்கள் தன்னிடம் ஓரளவு நட்புணர்வோடு பழகியது திரவியத்திற்கு சந்தோஷமாய் இருந்தது என்பது எவ்வளவு உண்மையோ இனி இந்த நட்பு தொடருமா என அவன் நெஞ்சில் ஏற்பட்ட பயமும் அதே அளவு உண்மை. மேம்போக்காக காதில் கேட்ட விஷயங்களே நம்மை உயிர் வரை பதறச் செய்கிறது என்றால் இவை அனைத்தையும் அனுபவித்து கடந்து வந்தவர்கள் அவர்கள் இருவர் நெஞ்சிலும் எந்த அளவு காயம் இருக்கும். அவள் இன்று டாக்டர் பிரபாகரன் க்ளீனிக்கில் அப்படி நடந்துக்கொண்ட போதும், அம்ரிதாவை பற்றி பேசும் பொழுதும் அவளை புரிந்து நடந்துக்கொள்ளாமல் வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை உதிர்த்து துன்பம் செய்துவிட்டோமே என உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தான் திரவியம்.

இவ்வாறு இத்தனை பிரளயங்களும் நடந்துக்கொண்டிருக்க இவை ஒன்றும் அறியாத அம்ரிதா வழக்கம் போல தனது அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள். உள்ளே நுழைந்ததும் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்த ஆஷ்ரிதாவை கண்டவளுக்கு இதயம் படபடத்தது. அவளது அருகே சென்று அமர்ந்தவள் மென்மையாய் தலையை வருடிவிட ஆஷ்ரிதா விழித்துக் கொண்டாள்.

“என்ன டி ஆச்சு..? இந்த நேரத்துல தூங்கிட்டு இருக்க..?உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என நெற்றியிலும் கழுத்திலும் தொட்டுப்பார்த்தாள் அம்ரிதா.

அந்த நேரம் அங்கு வந்த பொன்னம்மா “வந்துட்டீங்களா சின்ன பாப்பா” என்றவாறு நடந்தவற்றை சொல்ல வாயெடுக்கவும் அவரை பேசவிடாது தடுப்பதற்காக “எனக்கு உடனே ஒரு டீ போட்டு கொடுங்களேன் பொன்னம்மா.. பாதி தூக்கத்துல எழுந்தது தலைக்கு பாரமாய் இருக்கு” என்றாள் ஆஷ்ரிதா.

“இதோ எடுத்துட்டு வர்றேன் மா” என பொன்னம்மா செல்லவும் பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் திரும்பி “எனக்கு ஒன்னும் இல்லை டி.. இன்னைகு ஸ்கூல் –ல குழந்தைகள் எல்லாரும் க்ரவுண்டுல விளையாடிக்கிட்டு இருந்தத பார்த்துட்டே நின்னேன். வெளியிலோ என்னவோ தலை ரெம்ப வலிக்க ஆரம்பிச்சிட்டு.. அதான் சீக்கிரம் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்..” என்று சொல்லி சமாளித்தாள்.

“அடடா.. இந்த நோஞ்சான் அக்காவ வச்சிக்கிட்டு நான் என்னதான் செய்ய போறேனோ.. சின்ன வயசுலையே என் கூட கபடி விளையாட வா-னு எத்தனை முறை கூப்பிட்டிருக்கேன்.. அந்த தடியன் பாலுவுக்கு பயந்து போய் வரவே இல்லை நீ.. அப்பவே நின்னு பழகியிருந்தால் இன்னைக்கு இப்படி இருப்பியா..?” என்று ஆஷ்ரிதாவை வார ஆரம்பித்தாள் அம்ரிதா.

“அய்யோ.. கீழ எங்கையும் விழுந்து வாங்கினா வலிய யாரு தாங்குறது..?” என உண்மையை அம்ரிதா கண்டுபிடிக்கா வண்ணம் அவளிடம் சகஜமாய் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஒரு சின்ன வலிய கூட தாங்க பயப்படுற.. உன்னை எல்லாம் என்ன பண்ணட்டும்.. இதுக்கு எல்லாம் பயந்தா முடியுமா.. தைரியமா இருக்கனும் சரியா.. பயந்தாங்கோலி.. ஹாஹா” என ஆஷ்ரிதாவின் கையில் ஒரு செல்ல அடியினை வைத்தவள் சிரித்தவாறு தன் உடைகளை மாற்றிக்கொள்ள தங்கள் அறைக்குள் புகுந்தாள்.

தனக்காக ஆஷ்ரிதா எத்தனை வலிகளை சுமந்துக்கொண்டிருக்கிறாள் என அறியாத பேதையாய் அம்ரிதா இருக்கிறாள். உண்மை என்னவென்று அம்ரிதாவுக்கு தெரியவந்தால் இந்த கேலி கிண்டல்கள் என்ன ஆகுமோ? அவள் மனம் எப்படி வாடுமோ?? அந்த இறைவனே அறிவான்.

(களவாடுவான்)

error: Content is protected !!