Kandeepanin Kanavu-12
Kandeepanin Kanavu-12
காண்டீபனின் கனவு 12
கனவில் கண்டது போன்ற ஒளியை நேரில் பார்த்ததும் வீராவிற்கு மனதைப் பிசைந்தது. இதெல்லாம் நடப்பது எதனால்? இதற்கும் தனக்கும் என்ன சம்மந்தம் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனிடம் அதிகமாகியது.
“வீர்..நம்பவே முடியல என்னால…! நீ கனவுல இப்படி ஒரு ஒளிய தான் பாத்தியா?” அவன் காதருகில் சாம் கேட்டாலும் , அவன் தனி உலகத்தில் இருந்தான்.
“லெட்ஸ் கோ அஹெட்” வருணும் அவனைத் தூண்ட, மூவரும் முன்னேறினர்.
“வீரா..அப்போ நீ பாத்த அந்த பாதி பெய்ண்டிங் இங்கயே தான் இருக்குமா?” சாம் தொணதொணக்க,
“கொஞ்ச நேரம் சும்மா வா. எனக்கே என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு. என் கனவுல வந்தது எல்லாம் இனி நடக்குமோன்னு தோன ஆரம்பிச்சுடுச்சு.” வீர் சற்று கலக்கமுற்றான்.
“ச்ச ச்ச ஏதோ இது ஒன்னு நடக்குதுன்னு நீ எல்லாத்துக்கும் பயப்படாத.” சாம் அலட்ச்சியமாகக் கூற,
“அப்படி இல்ல சாம். எல்லாமே ஒரு இலக்கோட தான் நடக்கும். கண்டிப்பா அவன் கனவுகளுக்கு அர்த்தம் உண்டு. இது கோடி ல ஒருத்தருக்கு கிடைக்கும் யோகம். அவங்களோட கனவுகளுக்கு எல்லாரும் பயந்து தான் ஆகனும்.” வருண் அவளது நக்கலுக்கு பதிலடி கொடுத்தான்.
“நீங்க என்ன பயமுறுத்தப் பாக்கறீங்க.” வருணை குற்றம் கூறி,
“சரி நேத்து உனக்கு என்ன கனவு வந்துச்சுன்னு சொல்லு வீர். அது நடக்குதான்னு பார்ப்போம்.” வீராவிடமே வந்து நின்றாள்.
“நேத்து கனவா…!” என யோசிக்கப் போனவன், பாதியில் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
“அத விடு. இப்போ நடக்கறத பார்ப்போம். வேகமா வாங்க” அவனது கனவைப் பற்றி கூறாமல் மறைத்தான்.
ஏனெனில் அவன் கண்ட கனவு வெளியில் சொல்லும்படி இல்லை. அவனது தயக்கத்தை வருண் கவனித்துப் பின்னால் அதைப் பற்றிக் கேட்க எண்ணினான்.
“நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு. கொஞ்சம் ஜாக் பண்ணி போலாமா?” வீரா சொல்லிக் கொண்டே சற்று ஜாகிங் செய்ய ஆரம்பித்தான்.
மற்றவர்களும் அவனைப் போலே செய்து வேகத்தைக் கூட்டினர்.
நெருங்க நெருங்க அந்த ஒளி பெரிதாக்கிக் கொண்டே வந்தது. வீர், அது ஒன்றே இலக்கு என வேகமாக அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
இன்னும் கொஞ்ச தூரம் நெருங்கியதும், வீர் அந்த ஒளியை அடையாளம் கண்டு கொண்டான்.
அவ்வொளி ஒரு விளக்கு அல்ல.அது எங்கிருந்தோ வருவது போல இருந்தது. புள்ளியாக இருந்தது இப்போது ஒரு கோடாகத் தெரிந்தது.
மூவருக்கும் இப்போது அது என்னவென்று தெரியும் ஆவல் மிகுந்து, நடக்க ஆரம்பிக்க, வீராவிற்கு மட்டும் எங்கிருந்தோ காற்று வீசுவது போல இருந்தது.
“உங்களுக்கு காத்து அடிக்கற மாதிரி எதாவது ஃபீல் ஆகுதா? இல்ல எனக்கு மட்டும் தோணுதா.?” அதையும் வெளிப்படையாகக் கேட்க,
“எனக்கு தோனல வீர்.” சாம் வகுப்பில் கேட்விக்கு உடனே பதில் சொல்வது போலக் கூற,
“எனக்கும் எதுவும் இல்ல” வருண் ஆமோதித்தான்.
அந்தக் குகையில் அனைவருக்கும் வியர்த்துக் கொட்ட, வீராவிற்கு மட்டும் குளு குளு வென இருந்தது.
“அந்த ஒளி எங்கிருந்தோ வருது. எனக்குத் தெரிஞ்ச வரை அது சூரிய ஒளியா தான் இருக்கும்.” எடுத்துரைத்தான்.
“இந்த குகைக்குள்ள எப்படி சூரிய ஒளி வர முடியும்? மலைய பாத்தியா எவ்வளவு பெருசாவும் அகண்டும் இருக்கு.” சாம் எப்போதும் போல மறுத்தாள்.
“இல்ல. வீரா சொல்றது தான் நிஜம். இது கண்டிப்பா சூரிய ஒளி தான். ஒரு காலத்துல இங்க தங்கி இருந்த மக்கள் புத்திசாலிங்க. சூரிய ஒளி அவங்களுக்கு வேணும்னு கூட எதாவது ட்ரிக் பண்ணி இப்படி குகைக்குள்ள ஒளி வர மாதிரி செஞ்சிருபாங்க.” சரியாக சொன்னான் வருண்.
“எஸ். நீ சொல்றது கரெக்ட் வருண்.” வீரா புன்னகைத்தான்.
“இப்போ மணி என்ன?” வீரா கேட்க,
“இப்போ ஒன்பது” தன் ட்ராக் வ வாட்சில் கண்டு வருண் சொல்ல,
“அப்போ கண்டிப்பா சூரியன் வந்திருக்கும். இதந்த ஒளி எது வழியாவோ தான் உள்ளே வருது.” வீரா இப்போது வேகமாக நடக்க,
அந்த ஒளி சூரிய ஒளிதான் என்பது நூறு சதவிகிதம் உறுதியாகியது. அந்த நீண்ட குகை ஒரு முடிவிற்கு வந்தது. அந்த நீண்ட பாதியின் முடிவில், ஒரு பெரிய அரை. கிட்டத்தட்ட இரு நூறு பேர் அமர்ந்து உரையாடும் அளவிற்கு சமதள அரை. இவர்கள் வந்த பாதை மட்டுமல்லாமல், அறுபது எழுவது பாதைகள் அந்த இடத்தில் முடிவடைந்தது. அப்போது தான் உணர்ந்தனர்.
அவர்கள் வெளியே கண்ட அனைத்து குகை வாசல்களும் முடிவில் இங்கு வந்து ஒன்று சேர்கிறது என தெரிந்து கொண்டனர்.
அந்த அறையில் ஆங்காங்கே கை அளவு ஓட்டைகள். ஒரு நூறு துவாரங்கள் இருக்கும். அதிலிருந்து தான் சூரிய ஒளி அங்கே வந்தது. ஒரு குவியலாக இந்த அறைக்குள் ஒளி படர்வதினால் அது தூரத்திலிருந்து ஒரு புள்ளியாகத் தெரிந்தது.
மூவருக்கும் இந்த குகைக்குள் இப்படி ஒரு இடமா என ஆச்சரியம் மேலோங்கியது.
“வருண் நீ சொன்னது உண்மை தான். இங்க மக்கள் தங்கி இருந்திருக்காங்க. இந்த இடத்திற்கு வர அவங்க செஞ்ச வாசல் தான் இப்போ நாம வந்த வழி.. வெளி ஆளுங்க இவ்வளவு தூரம் இந்த குகைய தாண்டி வரது கஷ்டம். கொடிய விலங்குகளோ வேற எதுவோ இந்த நீண்ட பாதைய கடந்து உள்ள வர்றது அவ்வளவு சுலபம் இல்ல. ரொம்ப சேஃப் ஆன பிளேஸ்” வீரா விளக்கம் தந்தான்.
அனைவரும் ஒவ்வொரு திசை நோக்கிச் செல்ல, ஒவ்வொன்ற கண்டு அதிசயித்தனர்.
சரக்க்ஷா அங்கிருந்த சுவரில் அலமாரி போல் இருந்த இடத்தில் சென்று பார்த்துக் கொண்டிருந்தாள். பொன்னிறத்தில் அகலமான தட்டு போன்ற ஒன்று கிடைக்க,
“ஹே லுக்!” இருவரையும் அழைத்துக் காட்டினாள்.
வருணும் வீராவும் வந்து பார்க்க,
“வாவ்… இது சுத்தத் தங்கம். தங்க தட்டுல சாப்பிட்டு இருப்பாங்க போல இங்க இருந்தவங்க.” வருண் அதை வாங்கிப் பார்த்தான்.
வீரா அந்த இடத்தை நன்றாகப் பார்க்க, அது பல பேர் வந்து உணவு உண்டு அமர்ந்து உரையாடும் இடம் போலத் தோன்றியது.
“மே பீ இது ஒரு டிஸ்கஸ் பண்ற பண்ற இடமா இருக்கும்னு நினைக்கறேன். எல்லாரும் இங்க கூடி இருந்து சாப்பிட்டு, கலந்துரையாடற இடம் மாதிரி தோணுது எனக்கு.” என்றான்.
“அப்போ அவங்க யூஸ் பண்ண பொருள் எல்லாம் இங்க இருக்குமா? நமக்கு ஒரு வேளை ட்ரெஷர் கிடைச்சாலும் கிடைக்கலாம்.” சாம் குதூகலித்தாள்.
“உன் லக் கெடச்சாலும் கெடைக்கலாம்.” சிரித்துக் கொண்டே வருண் சென்றான்.
மீண்டும் ஒவ்வொரு இடமாகச் செல்ல, அந்தக் கல் சுவர்களை தடவிக் கொடுத்த படி நடந்தான் வீரா. கைகளில் தூசி அப்பிப் கொள்ள இரு கைகளையும் தட்டினான்.
அடுத்த நொடி, அங்கிருந்த ஒவ்வொரு குகை வாசலும் அந்த கைத்தட்டலை எதிரொலித்தது. மூவரும் அங்கு என்ன நடக்கிறது என புரியாமல் குழம்பினர்.
மீண்டும் கை தட்டினான் வீர். மறுபடியும் அதே எதிரொலி, ஒவ்வொரு குகை வாசலும் கொடுத்தது.
“என்ன இது? ஒரு வாட்டி தான எக்கோ கேட்கும். இங்க ஒவ்வொரு வாசலிலும் கேட்குதே!” வருண் யோசித்தான்.
“இது ஒன் வே ரிஃப்ளக்ஷன்(one way reflection) பப்ளேஸ். அதாவது இப்போ நாம இருக்கறது மையப் பகுதி. இங்கிருந்து கூப்பிட்டா அது ஒவ்வொரு குகைக்குள்ள இருக்கறவங்களுக்கும் கேட்கும். சப்போஸ் ஒரு ராஜா எல்லாரையும் கூப்பிட்டு பேசனும்னு நெனச்சா, இந்த மையப் பகுதிக்கு வந்து ஒரு முறை கூப்பிட்டாலும் போதும். அது இங்க இருக்கற மத்தவங்களுக்கு ஒவ்வொரு அறை வாசலிலும் போய் அது கேட்கும்.” தன்னுடைய ப்ரீகுவென்சி கால்குலேட்டரில் ஒலியை அளந்து பார்க்க ஆரம்பித்தான் வீரா.
“எனக்கு என்னவோ வெறும் சைன்ஸ் மட்டும் இங்க தெரிஞ்சுக்கப் போறதில்ல. வேற எதுவோ கண்டிப்பா இருக்குனு தோணிட்டே இருக்கு வீர்” சாம் எச்சிலை விழுங்கினாள்.
“என்ன சொல்ற சாம்?!” வீர் அவள் அருகில் வந்தான்.
“வீர், இது உண்மையா இல்ல என்னோட ப்ரம்மையானு தெரில. ஆனா நேத்து நான் ரெண்டு வெள்ளி மான்கள பாத்தேன். ஜஸ்ட் ஒரு செகண்ட் தான். அதுக்குள்ள அத காணும்.” அவளது கண்களில் மிரட்சி தெரிந்தது.
வீராவிற்கு இது சாதாரணமாகப் படவில்லை. இருந்தாலும் அவள் கவலைப் படுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. உடனே கிண்டல் செய்து சமாதானப் படுத்த எண்ணி,
“எனக்கு கனவு வந்துச்சுன்னு எவ்வளோ கிண்டல் பண்ண, இப்போ தெரியுதா.. அது ஒன்னும் இல்ல, எதாவது வாட்டர் ரிஃப்ளஷன் ஆகிருக்கும். அது உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கும். வெயில் சமயத்துல இப்படி நீரோடை பக்கம் நின்னா, சூரிய ஒளி பட்டு அப்படித் தெரியும்.” அவளது தலையைக் கலைத்துக் கூறினான்.
“நிஜமாவா!?” இன்னும் தெளியாமல் அவள் நிற்க,
“இதுக்குத் தான் கொஞ்சமாவது சைன்ஸ் படிக்கணும். சும்மா கிளாஸ்ல ஒபி அடிச்சா, இப்படி தான் முழிக்கணும். இந்த மாதிரி இடத்துல அப்படித் தான் டா நடக்கும்.” சாதரணமாக அவன் கூறியது, சம்ரக்க்ஷாவிற்கு கவலையை சுத்தமாகக் கலைத்தது.
“ம்ம்ம்.. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு வீர்.” மீண்டும் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றாள்.
இவர்களின் பேச்சை வேறு ஒரு மூலையில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான் வருண்.
அவள் சென்றதும் எதேர்ச்சையாகத் திரும்பிய வீரா, தன் கைகளில் தூசி படிய காரணமாக இருந்த அந்த சுவரை பார்க்க நேர்ந்தது.
“ஐ கான்ட் பிலீவ் திஸ்….!” அப்படியே முட்டி போட்டு கீழே சரிந்தான்.
இருவரும் அவன் அருகில் ஓடி வர,
“என்ன ஆச்சு..என்ன ஆச்சு?” இருவரும் அவனை துளைக்க,
“அங்க பாருங்க…” கை காட்டினான் வீரா.
அவன் காட்டிய அந்தச் சுவரில் தெரிந்தது, அவன் கனவில் கண்ட பாதி தாமரை.
“இங்க என்னவோ இருக்கு… நான் எத நோக்கியோ இழுக்கப் படறேன். என்னனு எனக்கே தெரியல..” எழுந்து வேகமாக அந்த சுவரை ஒரு சிறு துணி வைத்துத் துடைத்தான்.
சாமும் வருணும் கூட , அருகில் இருந்த சுவர்களை துடைக்க,
பாதி தாமரை, பாதி வட்டமும் அதில் கூரான பகுதிகளும், பாதி மனிதன் என அவன் கனவில் கண்ட அனைத்தும் பெரிய வடிவில் அங்கே காட்சி அளித்தது. அனைத்தும் தங்கத்தோடு கலந்து வரையப் பட்டிருந்தது. இவர்கள் துடைத்ததும் அது பளபளத்தது.
கூடவே இன்னொரு படம், ஆனால் இது வீராவின் கனவில் வராத ஒன்று.
தாத்தாவும் வல்லயாவும் அன்றே கிளம்பி, ஊருக்கு வந்து சேர்ந்தனர். வல்லயாவை ஒரு அறையில் தங்கிக் கொள்ளச் சொன்னார் தாத்தா.
இருவரும் இரவு நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, வல்லய்யா மட்டும் நள்ளிரவு விழித்தெழுந்தார்.
வீட்டின் பின்னாலிருந்து ஏதோ சத்தம் வந்தபடி இருந்தது. தூரத்தில் ஒருவன் அலறும் சத்தம் போல இருந்தது.
முதலில் என்ன வென்று பார்க்க எழுந்தவர், மீண்டும் படுத்துக் கொண்டார்.
அவர்களது குடும்பமும், அவர்களின் குலதெய்வம் பற்றித் தெரிந்தாலும், இன்று அந்த சத்தம் கேட்டது எதனால் என அவருக்குப் புரியவில்லை.
ஏகாதசி இல்லை. இருப்பினும் இந்தச் சத்தம் யாரால் வருகிறது என கண்ணை மூடி க்ரஹித்துப் பார்த்தார். அவருக்கே சற்று கிலி கிளம்பியது.
அந்தரத்தில் படுத்தபடி ஒரு பெரிய ஆண் உருவம், தொந்தி பெருத்த அந்த உருவத்திற்கு மேலாடை இல்ல. இடுப்பின் கீழே இருந்து முழங்கால் வரை ஒரு தோல் உடையை சுற்றிக் கொண்டு கண்ணை மூடிப் படுத்திருந்தது.
தலைக்கு மேலே இரண்டு கொம்புகள். காதை மறைத்தபடி பெரிய பெரிய வட்ட வடிவ காதணி அணிந்து, தன் வயிற்றை தடவியபடி இருந்தது. அவ்வப்போது வாய திறந்து கோப முகத்துடன் கத்தியது. பற்கள் கூறிய பற்களாகத் தெரிந்தது.
“இது ஒரு பிரம்ம ராட்சசன்!!” தனக்குள் முணுமுணுத்தார் வல்லய்யா.
அதைக் கண்டதும் சுத்தமாக உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தார் வல்லய்யா.
அதே நேரத்தில் அந்தக் குகையில் அவர்கள் பார்த்த மற்றொரு ஓவியம் இந்த பிரம்ம ராட்ஷசன் தான்.
அந்தப் படத்தின் கீழே ஏதோ பளபளக்க, அதை வேகமாக துடைத்தான் வீரா.
“தொடாதே தொடர்ந்து வரும்” என தெளிவான தமிழில் எழுதப் பட்டிருந்தது.
அதைக் கண்டதும் இரண்டடி விலகி நின்றான் வீரா.