Kandeepanin Kanavu -16

                                             காண்டீபனின் கனவு 16

 

 

வீரா வருண் சொன்னதற்காக அல்லாமல், தனக்கு ஏன் இதெல்லாம் நடக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவே அந்த மலைகளுக்குச் செல்ல வேண்டும் என தீர்மானித்தான்.

அதிக பாரம் இல்லாமல், தண்ணீரும், சில எனர்ஜி ட்ரிக்ங்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அவர்கள் போகும் வழியில் வீராவிற்கு ஒன்று தோன்ற அங்கேயே நின்றான்.

“என்ன ஆச்சு வீர். எதாவது மறந்துட்டியா?” வருண் கேட்க,

“என் கனவுல வந்தது நடந்துச்சுன்னு நாம எடுத்துகிட்டோம்னா , நான் குகைக்குள்ள பார்த்த அந்த முனிவர் ஏன் இன்னிக்கு நான் பார்க்கல? வெறும் அந்த லாவா வ மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது. அது தான் யோசனையா இருக்கு.” சிந்தித்தான்.

“நீ தான் நேத்தே முனிவர பார்த்துட்டியே! அங்க கிடச்ச ஓலைகளை வச்சுத் தான நாம இன்னிக்கு அந்த மலைக்குப் போயிட்டு இருக்கோம். அதுனால நேத்து நடந்ததோட தொடர்ச்சியா ஏன் உன் கனவை எடுத்துக்கக் கூடாது?” வருண் பதில் தந்தாலும்,

அதை முழுமையாக வீராவால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து யோசித்துக் கொண்டே நடந்தான்.

மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இந்த மலையில் தனக்கு என்ன ஆபத்து வேண்டுமானாலும் வரலாம் என்று வீரா நன்கு அறிந்து கொண்டான். ஆகையால், தன்னுடைய குலதெய்வத்தை அவனது மனம் வேண்டிக்கொண்டது.

தெரிந்தோ தெரியாமலோ அவன் அந்த தெய்வத்தை வேண்ட, அதே நேரம் குல தெய்வப் பூஜையை தாத்தா செய்து கொண்டிருந்தார்.

இரண்டும் ஒன்று சேர்ந்து அவனை வழி நடத்த, முதல் அடியை எடுத்து வைத்தான்.

வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், அந்த மலையில் உச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏறிக் கொண்டிருந்தான்.

அவனோடு கூடவே ஈடுகொடுத்து வருணும் ஏற, இருவரும் பேசாமல் ஏறினர். பேசினால், உடலின் சக்தி குறையும் என்பதாலும், மலை ஏறும் போது உடலின் சக்தியை தக்கவைத்துக் கொள்ளும் யோசனையிலும், இருவரும் பேசாமல் வர,

ஒரு மூன்று மணி நேரப் பயணம் அவர்களை மலையில் உச்சிக்குக் கொண்டு சென்றது. இன்னும் நூறு மீட்டர் ஏறினால் உச்சியைப் பிடித்து விடலாம் என்று அவர்கள் நினைத்த நேரம், வீரா கால் வைத்த கல் இடறி நூறு மீட்டர் சறுக்கினான்.

“வீர்…பாத்து…!” வருண் பதற,

“நத்திங்… நீ ஏறு” அவனை மேல ஏறச் சொல்லி தானும் பார்த்துப் பார்த்து கால்களை வைத்து ஏறினான்.

வருண் முன்னேறாமல் , வீர் வரும் வரை காத்திருந்து பின் ஏறினான்.

இருவரும் ஒருசேர தங்கள் பாதங்களை அந்த பிரம்ம மலையில் மீது பதித்தனர்.

வீரா கனவில் கண்டது போலவே. மலையில் உச்சியை மேகம் சூழ்ந்து அழகாகக் காட்சியளித்தது.

அந்தக் குளுமையான இதத்தை அனுபவிக்கும் நேரம் அவனது காலடியை ஒரு நீரோடை வந்து நனைக்க, இருவரும் திகைத்தனர். தண்ணீரைக் குடிப்பதில்லை என வீரா ஏற்கனவே முடிவு செய்திருக்க,

“அப்போ எல்லாமே நிஜம்! சம்த்திங் இஸ் காலிங் மீ!” வீராவிற்கு அடுத்து என்ன என்பதில் மனம் ஓடிக் கொண்டிருந்தது.

“அது என்னன்னு தான் பார்ப்போமே! வா” என அவனையும் அழைத்துக் கொண்டு நடந்தான்.

கால் தடுக்கி கீழே விழுந்து விடக் கூடாது என்பதில் வீரா தீவிரமாக இருந்தான். கனவில் கண்ட அதே கல் அவன் கண்களில் தென்பட, ஒரு தாவில் அந்தக் கல்லைக் கடந்தான்.

அவன் கடந்த அடுத்த நொடி அந்தக் கல் தானாகவே கீழே விழுந்தது. வீரவிற்கும் வருணிற்கும் அதைக் கண்டு தொண்டை வறண்டே போனது.

 

“இனி எந்தத் தடங்கலும் இல்ல. வா போகலாம்.” நிம்மதியாக அழைத்தான் வருண்.

கையில் இருந்த பாட்டில் நீரைப் பருகியவன், கண்களை மூடித் திறக்க, இப்போது அந்த இடமே ஒரு குட்டி சொர்க்கம் போல காட்சியளித்தது.

ஒருவேளை இது தனது பிரம்மையோ என நினைத்தவன், கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு மீண்டும் பார்க்க,

மேகமூட்டம் கால்களில் தவழ, குளுமையான இடத்தில் ஆங்காங்கே அழகிய பூச்செடிகளும் பச்சை மரங்களும் பசுமையை அங்கே விதைத்திருந்தது. எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக அங்கே ஒரு குளம்!

“அங்க பாரு வருண். ஒரு குளம் இருக்கு. இந்த தண்ணி தான் நீரோடையா வந்திருக்குமோ?” வீரா ஆராய,

“குளம் எப்பயுமே தண்ணிய வெளிய விடாது. நாமளா வெட்டி விட்டா தான் வரும். இது வேறன்னு நினைக்கறேன்.” வருண் பதில் தந்தான்.

இருவரும் முன்னேறி அந்த குளத்தின் அருகே செல்ல, “தாமரைக் குளம்!!” வீரா அதைக் கண்டான்.

“ஆச்சரியமா இருக்குல. மலைக்கு மேல இப்படி ஒரு ப்ளசென்ட்டான இடம். அதுலயும் இப்படி ஒரு நீலத் தாமரை..அழகா இருக்கு.” வருண் சொல்லும்போதே வீரா தனது காமிராவில் படமெடுத்துக் கொண்டான்.

“இதே மாதிரி குளம். அதுவும் நீலத் தாமரைக் குளம், எங்க ஊர்ல இருக்கு. எங்க வீட்டுக்குப் பின்னாடி.” வீரா கூறிவிட,

“வாவ்.. அப்படியா! ஐ வான்ட் டூ சீ தட்” வருண் தன் வருகைக்கான கோரிக்கையை முன் வைத்தான்.

“கண்டிப்பா.. எங்க ஊருக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன். என் கூட ஸ்டே பண்ணு.” வீரா உறுதியாகக் கூறி அவனை வரவேற்றான்.

“ஷுர்.”

“இந்த குளத்துல நமக்கு எதாவது கிடைக்கப் போகுதா? இதைத் தாண்டி இங்க எதுவுமே இல்லையே!” என அந்தக் குளத்தை எட்டிப் பார்த்தான் வீரா.

பார்த்தவன் பார்த்தபடி அப்படியே அசையாமல் நின்றான்.

அவனால் உடலை அசைக்க முடியவில்லை. கண்களால் பார்க்க முடிந்தது. அனைத்தையும் கேட்க முடிந்தது. பேச முடிந்தது. ஆனால் உடல் அந்தக் குளத்தால் ஈர்க்கப் பட்டு அப்படியே நின்றது.

“வருண். ஹெல்ப் மீ! அசைய முடியல!” வீரா கத்த,

“வாட்!!” ஓடிவந்து அவனைப் பிடித்து இழுத்தான் வருண். மிகவும் கடினமாக இருந்தது.

“அப்படி என்ன ஆச்சு?” என அவனும் எட்டிப் பார்க்க, வருணும் உறைந்து நின்றான்.

“இந்த குளம் நம்மள ஈர்குது.” குனிந்து அந்தக் குளத்தில் என்ன இருக்கிறது என ஆராய,

முதலில் சில நீலத் தாமரைகள் மட்டும் தெரிய, இப்போது அந்த நீரின் நிறம் மாற ஆரம்பித்தது.

“இங்க ஏதுவோ நடக்குது. பொறுமையா பார்ப்போம்.” வருண் புரிந்துகொண்டான்.

நீரின் நிறம் மாறியதும், இருவரது முகமும் அந்த நீரில் பிரதிபலித்தது. உறைந்த அவர்களது உடலும், அசையும் அவர்களது விழிகளும் புலப்பட, இப்போது வீரா தன் முகத்தையே உற்று நோக்கினான்.

லேசான அவனது தாடி வைத்த முகம் மறைந்து, ஒரு கடுமையான முகம் தெரிந்தது. இப்போது அது வேறு ஒரு முகமாக மாறியது.

வீராவிற்கு அது யாரென்று தெரியவில்லை.

அதன் உதடுகள் அசைவதைப் போலத் தோன்ற, கூர்ந்து கவனித்தான் வீரா.

இப்போது அந்த உருவத்தின் பேச்சு சத்தம் அவனுக்குக் கேட்டது.

“நான் இந்தக் குளத்தில் பலலட்ச ஆண்டுகளாக இருக்கிறேன்.உனக்கு வழிகாட்டவே இந்தக் குளத்தில் என்னை அமர்த்தியுள்ளனர்.” அந்த முகம் கேட்டது.

“நீங்க யாரு? நான் எதுக்காக இங்க வரணும்? எனக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? இந்தக் கனவு , காட்சி இதெல்லாம் என்ன? நீங்க தான் அந்த குகைல இருந்த யோகியா?” வீரா படபடத்தான்.

“காண்டீபா நீ இதெல்லாம் தெரிந்துகொள்வாய்! பொறுமை! உனக்கு விதித்திருக்கும் பொறுப்புகள் ஏராளம். நான் பொறுமையாக சொல்கிறேன் கேள்.” அந்த முகம் அவனிடம் அனைத்தையும் பேச ஆரம்பிக்க,

“என்னால் சிலவற்றை மட்டுமே கூற முடியும்.அதற்கு மட்டும் தான் எனக்கு திறன் உள்ளது. அந்த குகையில் நீ பார்த்த யோகி உன்னுடைய முன்னோர்களில் ஒருவர் தான். நீ செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றும் இனி வரிசையாக உனக்கு நிகழும். அனைத்து இன்னல்களையும் தாங்கி நீ அதை முடிக்க வேண்டும்.”

“நான் ஏன் செய்யணும்னு முதல்ல சொல்லுங்க. எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” அவன் மனதை அரித்த கேள்வியை முதலில் கேட்க,

“இதற்கு பதில் உன் தாத்தாவிடம் தான் நீ கேட்க வேண்டும். நான் இங்கிருக்கும் சிலவற்றுக்கு மட்டுமே பதில் சொல்லுவேன். நேற்று நீ அந்தக் குகையில் ஒரு ராட்ஷசனின் கண்களை திறந்து, அவனோடு போராட சம்மதம் தெரிவித்து விட்டாய். அவன் உனக்கு பல ஆபத்துக் களை கொடுப்பான். ஆனால் நாங்கள் உனக்கு கனவுகளில் அந்த ஆபத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.

இப்போது கூட நீ அதை வைத்துத் தான் தப்பித்து என்னிடம் வந்து சேர்ந்தாய். அதே போல ஒவ்வொரு முறை அவன் உனக்குக் கொடுக்கும் ஆபத்துக்களை உனக்கு நாங்கள் அறிவுறுத்துவோம். நீ தான் அதை புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.” அவனுக்கு எடுத்துரைத்தது.

“சரி. இங்க நான் என்ன செய்யணும்?” வீரா கேட்க,

“இந்த மலை பிரம்மனுக்கு என்று உருவாக்கப் பட்டது. இது தான் ஆரம்பம். இதற்கு அடுத்து நீ விஷ்ணுவின் மலைக்குச் செல்லவேண்டும். அங்கே செல்வதற்கு முன்பு இங்கிருந்து சில பூக்களையும் சில கற்களையும் நீ எடுத்துச் சென்றால் தான் அந்த மலை மீது நீ காலே வைக்க முடியும்.”

“எந்த பூக்கள்? எந்த கல்? காட்டுங்க… உடனே எடுத்துப் போறேன்.” வீரா துடித்தான்.

“அவரசப் படாதே. அது அவ்வளவு சுலபம் இல்லை. முதலில் இந்தக் குளத்தில் எத்தனை தாமரை மலர்கள் இருக்கிறது என்பதை சொல்.” என்றது.

வீரா உடனே அதை எண்ணத் துவங்கினான்.

“மொத்தம் பதினாறு.” பதில் சொல்ல.

“இதில் நீலத் தாமரை எவ்வளவு?”

ஆச்சரியமாகப் பார்த்தவன், “எல்லாமே நீலத் தாமரை தானே” என்றான்.

“இல்லை. இதில் பச்சை, மஞ்சள் மற்றும் நீலம் கலந்து உள்ளது. அதை நீ பிரித்து அறியவேண்டும். அதை எடுத்துக் கொண்ட பின் இந்தக் குளத்தின் நீரை வடித்துவிட்டு அதன் அடியில் இருக்கும் நீலக் கற்களை எடுத்துக் கொண்டு செல்.

ஒரு வேளை நீ சரியான கற்களை எடுக்காவிட்டால் இந்தக் குளத்தின் நீர் மீண்டும் நிறைந்து விடும்.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு விஷ்ணு மலைக்குச் சென்று அங்கு காத்திருக்கும் அனைத்தையும் செய்து முடி. நான் வருகிறேன்.” அந்த முகம் மறைந்தது.

இருவரும் பிடி தளர்ந்ததும் கீழே விழுந்தனர்.

இருவரும் மெல்ல எழுந்தது, “இப்போ எப்படி கண்டுபிடிக்கறது இந்த நீலத் தாமரைய? எனக்கு எல்லாமே ஒரே மாதிரி தன் தெரியுது.” வீரா குழம்பினான்.

“பொறுமையா யோசிப்போம்.” என்றான் வருண்.

அங்கேயே அமர்ந்து இருவரும் சிந்திக்கத் துவங்கினர்.

 

வீரா தன்னை விட்டுவிட்டுச் சென்றதில் படு கோவமாக இருந்தாள் சம்ரக்க்ஷா.

கில் அவளைச் சமாதனப் படுத்த ,

“அவன் வரட்டும். நான் அவன்கிட்ட சொல்லாம கிளம்பிப் போறேன். அப்போ தெரியும் அவனுக்கு.” கத்தினாள்.

“அப்படி எல்லாம் செஞ்சுடாத சாம். அவன் பாவம். மலை மேல ஏற உனக்குக் கஷ்டமா இருக்கும்னு உன்னை விட்டுட்டுப் போயிருப்பான். நாளைக்கு நீ அவனோட போ! இங்கிருந்து இப்போ நீ தனியா கிளம்பினா உனக்குத் தான் ஆபத்து. என்னால முடிஞ்சா நானே உன்னை கூட்டிட்டு போவேன். சோ தனியா போகத. ப்ளீஸ்.” கில் சொல்ல,

“முடியாது. அவனை நான் கலங்க வைக்கத் தான் போறேன்.” அவள் ஒரு முடிவெடுத்தாள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!