Kandeepanin Kanavu – 23

                      காண்டீபனின் கனவு 23

 

வேதாவும் சுஜாதாவும் பயத்தில் உறைந்து நிற்க, மலையிலிருந்து இறங்கியவர் நேரே தாத்தாவிடம் வந்தார்.

அவரது நடையில் ஒரு நளினம். கூடவே அவரது காலில் இருந்த சலங்கை வேறு. ஆனால் பார்ப்பதற்கு ஆண் என்று தெரிந்தது.

சுஜாதா அவரை உற்று நோக்கினார். பார்த்த முகம் ஆனாலும் யாரெனத் தெரியவில்லை.

வந்தவர் எதுவும் பேசாமல் தாத்தாவையும் கோடங்கியையும் பார்த்தார்.

“தமா..” தாத்தாவின் கலங்கிய குரல் அனைத்தையும் புரியவைத்தது.

“எதுக்கும் கலங்காத நீ இப்போ ஏன் கலங்கி நிக்கற?” தமா கேட்க,

தாத்தா பேசமுடியாமல் நின்றார்.

“ஐயா, நீங்க இந்த குடும்பத்துக்கு காவல் தெய்வம் மாதிரி. நம்ம காண்டீபன் தம்பி இப்போ போயிருக்கற இடத்துல ஆபத்து. நான் பார்த்த வரை, அது ஒரு பிரம்ம ராட்ஷசன். இதுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்னு கேட்கத் தான் இப்படி பலி கொடுத்து பூஜை செய்யவேண்டியதா ஆயிடுச்சு. குத்தம் இருந்தா மன்னிச்சிருங்க.” கோடங்கி பதில் சொன்னார்.

“பலி கொடுத்து ஒவ்வொரு முறை பூஜை செய்யறது தப்பு. அது கடவுள் சக்திய மீறி தீய சக்தி உள்ள வர அனுமதிக்கற மாதிரி. அதுனால இனிமே அதை செய்யாத. இந்த முறை பரவாயில்ல.” பெண்ணைப் போல அழகாகத் திரும்பி தாத்தாவைப் பார்க்க,

“தமா…” என தாத்தா கண்கள் கலங்கினார்.

“தம்பி, நீ அழாத. உனக்கும் எனக்கும் இனி கடமைஎல்லாம் முடியப் போகுது. போன முறை வந்தப்பவே நான் இத சொன்னேனே. இன்னும் ஏன் இந்த பயம்.

காண்டீபன பத்தி நீங்க கவலைய விடுங்க. அவனுக்கு ஆபத்து வந்தாலும் அவன் அதிலிருந்து தப்பி வருவான். ஆனா சில கஷ்டங்களை அவன் பட்டுத் தான் ஆகணும். இந்த பரம்பரையோட மொத்த பாவமும் அவனால் தான் போகப் போகுது.” பொறுமையாக எடுத்துரைத்தார்.

“இந்த ராட்ஷசன் யாரு? அவன் ஏன் தொல்லை குடுக்கணும்.?” தாத்தா பயந்து கேட்க,

“அவன் அர்ஜூனனால ராட்ஷசன் ஆகி, அவனாலேயே காவலுக்கும் வைக்கப் பட்டான்.

அவன் அவனோட பழிய தீத்துக்க நமக்கு பல ஆபத்துகள உண்டாக்குவான், ஆனால் முடிவுல அது நமக்கு நன்மை தான். அவனால தான் இப்போ காண்டீபன் குலதெய்வத்த விடுவிக்கற ஒவ்வொரு கதவா திறந்துட்டு வரான்.

இப்போ அவன் கடலுக்கும் அடில இருக்கற பாதாள லோகத்த அடைஞ்சதும் அவனுக்கு நம்ம குடும்பத்தோட மொத்த வரலாறும் தெரியவரும்.”

“எப்படி? அவனுக்கு யார் சொல்லுவா? நம்ம கதை நம்மளத் தவிற வேற யாருக்கும் தெரியாதே.” தாத்தா குழம்பினார்.

“அவசரப் படாத. உனக்கு எல்லாம் பின்னால தெரியும்.” சிரித்தார் தமா.

“ஐயா அந்த வருண்.” கோடங்கி வாய்பொத்தி அவரிடம் கேட்க,

கோபம் வந்தது தமாவிற்கு. தூக்கி முடிந்திருந்த அவரது தலை முடி அவிழ , பெருமூச்சு விட்டு, கையை இறுக மூடிக் கொண்டு

“வல்லையா…, அவன பத்தி நீ தேட முயற்சிக்காத. அது உன்ன அழிச்சிடும்.” கண்கள் சிவக்க, காலின் சலங்கையை ஜல் ஜல் என உதைத்துக் கொண்டே முறைத்தார்.

பயந்து போனார்கள் அனைவரும். தமாவின் இந்த ரூபம் அவர்கள் காணாதது.

தாத்தா அவரின் காலில் விழுந்தார்.

“தமா… தமா… உன்னை விட்டா எங்கள வழிநடத்த யாருமில்ல.” அவரின் பாதத்தைத் தொட்டதும் தமா உணர்வு பெற்றவராக தாத்தாவை தொட்டு எழுப்பினார்.

“மன்னிச்சிடுங்க ஐயா. இனி நான் அதைப் பற்றித் தேட மாட்டேன்.” வல்லய்யா சரணடைந்தார்.

“ எங்களுக்கு இது புதுசு தமயந்தி. நீ தான் சொல்லணும்.” தாத்தா சாந்தமாகக் கேட்க,

“என்ன தெரியனும் உனக்கு. வருங்காலம் சொல்லட்டுமா.? கேளு.” அங்கேயே அமர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

“ இப்போ காண்டீபன் கடலுக்குள்ள இருக்கான். அவனோட இருக்கற பொண்ண அவனுக்கு காவல். அவனுக்கு எந்த ஆபத்து வந்தாலும் அதிலிருந்து தப்பிச்சிடுவான்.

அடுத்து அவன் பாதாள லோகம் போனா, அவனுக்கு இந்த குடும்ப வரலாறு தெரிஞ்சு, மறுபடியும் இங்க வருவான். இதோ, இந்த குளம் அதுக்கு அடில புதைஞ்சு கிடக்கற குலதெய்வம் எல்லாம் அவனுக்குப் புரியும். அவன் பார்த்துப்பான். போதுமா?” தமயந்தி இவற்றைக் கூறினாலும் வல்லய்யாவிற்கும் தாத்தாவிற்கும் வருண் என்கிற கேள்விக்கு விடை தெரியவில்லை. குழப்ப ரேகை இருவர் முகத்திலும் இருப்பதை தமா அறிந்தார்.

“நான் யாரு!”

“தமயந்தி!” தாத்தா பதில் சொல்ல,

“நாளனா இருந்த நான் எப்படி தமயந்தி ஆனேன்! அதுக்கு காரணம் வருண் யார் என்ற கேள்விக்கு விடை தெரிஞ்சுக்க முயற்ச்சித்தது தான்.!” அவர் கூறியதும் இருவருக்கும் உடலெல்லாம் கூச்சமெடுத்து நடுங்கியது.

“தமா!” தாத்தாவின் கண்களில் நீர் திரண்டது.

“மனுஷங்க கிட்ட மோதிப் பார்க்கலாம், ஆனா தெய்வத்துக்கிட்ட வச்சுக்காத.” எச்சரிக்கை செய்தார்.

“சரி” இருவரும் மனதார ஒத்துக்கொண்டனர்.

“நான் வரேன். அடுத்த ஏகாதசிக்கு நான் கண்டீபனை இங்க பார்ப்பேன்னு நம்பறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

தாத்தாவும் வல்லய்யாவும் அவர் சென்ற பிறகு விழுந்து வணங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்ப,

வேதாவும் சுஜாதாவும் நிற்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

“மாமா..” வேதாவின் கண்களில் நீரைக் கண்டதும் தாத்தாவின் உள்ளம் வருத்தத்தில் ஆழ்ந்தது.

எந்தத் தாய் தான் தன் மகம் ஆபத்தில் இருக்கிறான் என்பதைத் தெரிந்து நிம்மதியாக இருப்பாள். அவளின் வருத்தத்தை உணர்ந்தார்.

“நீ பயப்படாத மா. ஒண்ணுமில்ல.” தாத்தா சொல்லிவிட்டு உள்ளே சென்றார். வேறு எதுவும் தன் வாயால் கூறி செய்த சத்தியத்தை பொய்யாக்கி விடக் கூடாது என்பதற்காக!

வல்லய்யா அவர் பின்னோடு செல்ல, வேதாவும் சுஜாதாவும் விடுவதாக இல்லை.

“அண்ணி, நீங்க வாங்க, என்ன நடக்குது நம்ம புள்ளைக்குன்னு நாம தெரிஞ்சுக்க வேண்டாமா.” வேதாவையும் இழுத்துக் கொண்டு தன் தந்தையின் அறைக்குச் செல்ல,

தாத்தா மோகன் அறைக்குச் சென்று  உள்ளே தாழிட்டார். மோகனை எழுப்பி,  

“இனிமே வேதாகிட்டையும் , சுஜாதகிட்டையும் மறைக்க முடியும்னு எனக்குத் தோணல மோகன். உனக்கு செஞ்சு குடுத்த சத்தியத்துக்காகத் தான் நான் யோசிக்கறேன். ஆனா இன்னிக்கு அவங்க கேட்கக் கூடாத விஷயங்கள, பார்க்கக் கூடாததெல்லாம் பாத்தாச்சு. இனியும் என்னை என்ன செய்யச் சொல்ற?” தாத்தா தர்மசங்கடமாக உணர்ந்தார்.

“அவங்ககிட்ட முழுசும் சொல்லவேண்டிய நேரம் வந்தாச்சுப்பா, நானே நம்ம குடும்பக் கதைய சொல்றேன். இனி நீங்க அந்த சத்தியத்த நினைச்சு கவலைப் படாதீங்க.”  மோகன் கனத்த மனதோடு கூறி வெளியே சென்றார்.

அனைவரும் அங்கே காத்திருக்க, மோகனையும் தாத்தாவையும் கேள்வியாகப் பார்த்தனர்.

கடலுக்குள் சென்ற வீராவும் வருணும் ஆளுக்கொரு புறம் விழுந்தனர். விழுந்த வேகத்தில் அடியாழத்திற்கு சென்றுவிட, இருவரும் தரையைத் தொட, திடீரென வீராவிற்கு மூச்சு முட்டியது. அதற்கு மேல் அவனால் நீருக்குள் இருக்க முடியுமெனத் தோன்றவில்லை.

அப்படியும் கஷ்டப் பட்டு நீந்த முயற்சித்தான். அப்போது யாரோ அவனது கழுத்தை நெரிப்பது போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்க நினைத்தான் ஆனால் முடியவில்லை.

வாய்க்குள் நீர் சென்று கண்களை சுழற்றியது. மூச்சு விட்டே ஆகவேண்டும் என்கிற ஆவேசம், உயிரைக் காத்துக்கொள்ளும் ஒரு உத்வேகம் வரவே, நெரித்த கைகளைப் பிடித்துகொண்டு, ஒரு இழுப்பில் அந்தக் கைகளை உதறினான்.

திரும்பிப் பார்த்தால் , நேற்று பார்த்த அந்த ராட்ஷசன் தான் நின்று கொண்டிருந்தான்.

வருனை உதவிக்கு அழைக்க அவனைத் தேடினான். அவன் இப்போது எங்கு நீந்திக் கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் தான் மிஞ்சியது. அந்த அரக்கனிடம் இப்போது நின்று சண்டை செய்ய அவன் உடலில் சக்தியில்லை.

நீரைக் குடித்து மூச்சு சற்று விழுங்கி வெளியே விட்டுக் கொண்டிருந்தான். பிராண அவஸ்தை என்னவென்பதை அப்போது தான் உணர்ந்தான்.

வேகமாக நீந்தி வெளியே செல்ல வேண்டும் என நினைத்து மேல் நோக்கி நீந்த ஆரம்பிக்க, அந்த ராட்ஷசன் பெரிய உருவத்தை வரவைத்துக் கொண்டு வீராவை ஒரே எட்டில் பிடித்தான்.

அப்போது மயங்கினான் வீரா.

ஆனால் சம்ரக்ஷா கடலுக்குள் விழவே இல்லை. அவள் அங்கேயே சிக்கிக் கொண்டிருந்தாள். குதிக்க முயற்சித்தும் முடியாமல் மெல்ல மெல்ல வெளியே வரப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீராவை அந்த ராட்ஷசன் கடலுக்கடியில் உள்ள ஒரு பெரிய சுரங்கத்தில் அடைத்தது. ஆனால் வீராவிற்கு மயக்கம் தெளியவில்லை.

ராட்ஷசன் அங்கிருந்து சென்றதும், வருண் அதே இடத்திற்கு நீந்தி வந்தான்.

வீராவைப் பிடித்து உலுக்க, வீரா கண்ணைத் திறக்க முடியாமல் கிடந்தான்.

இப்போது அந்தச் சுரங்கத்தில் நீர் வடிந்து காணப்பட்டது. முழங்கால் அளவே நீர் இருந்தது. அங்கிருந்த கரும் பாறைகளில் வீராவைச் சாத்தி நிற்க வைத்து , முதுகை அழுத்துனான்.

குடித்த தண்ணீர் வெளியே வந்து வீரா சற்று சுயம் பெற்றான். அதற்குள் மீண்டும் அந்தச் சுரங்கம் நடுங்கி இரண்டாகப் பிளந்தது.

அதை அவர்கள் உணரும் முன்னமே உள்ளே சென்றிருந்தனர்.

**

“என்ன நடக்குது. எனக்கு நீங்க எல்லாத்தையும் இப்போவே சொல்லுங்க. என்னோட மகன் தான் எனக்கு முக்கியம். யாரா இருந்தாலும் அவனுக்கு அப்பறம் தான்.” வேதா வர,

“வீரா எனக்கும் பிள்ளை. அவன சின்ன வயசுலேந்து தூக்கி வளர்த்த உரிமையில கேட்கறேன். என்ன ஆச்சு அவனுக்கு. அவனுக்கு என்ன ஆபத்து?” சுஜாதாவும் வரிந்து கட்டி வந்தார்.

மோகனும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

“எல்லாம் தெரியனும்னா மொதல்ல நம்ம குடும்ப வரலாறு என்னனு நீங்க தெரிஞ்சுக்கணும்.”

“என்ன வரலாறு?” இருவரும் ‘இது என்ன புதுக் கதை என்பது போலப் பார்க்க,

மோகன் கூற ஆரம்பித்தார்.