Kandeepanin Kanavu -24

Kandeepanin Kanavu -24

                       காண்டீபனின் கனவு 24

 

 

      வீராவை அந்தச் சுரங்கத்தில் இருந்து காப்பாற்ற நினைத்து இப்போது அவனோடு சேர்ந்து வருணும் பிளவு பட்ட அந்த அதள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.

வீராவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

வருனைப் பார்க்க,

 “வருண் நாமளே கடலுக்கு அடில வந்துட்டுட்டோம். இது என்ன அதுக்கும் கீழ் போயிட்டு இருக்கோம்” புரியாமல் கேட்க,

“கொஞ்சம் பொறு. உனக்கே தெரியும்.” என்றான்.

 

இருவரும் ஒரு புதிய இடத்தில் வந்து விழுந்தனர். அங்கே வெளிச்சம் இருந்தது அனால் அது எங்கிருந்து வந்த வெளிச்சம் என தெரியவில்லை.

சூரியனும் இங்கு தெரிய வாய்ப்பில்லை!

அந்த இடத்தையே ஆச்சரியமாகப் பார்த்தான் வீரா.

 

வருண் முகத்தில் அந்த ஆச்சரியம் தென்படவில்லை.

ஏற்கனவே அவனுக்குப் பரிச்சயமான இடம் போல நடந்துகொண்டான்.

வீரா அவனை கவனித்தான்.

 

“எங்க வந்திருக்கோம்? இது என்ன இடம்?” அவனை சந்தேகமாகப் பார்த்தான்.

 

“இது தான் பாதாள லோகம்!” வருண் தெளிவாக உரைத்தான்.

“என்னது..பாதாள உலகமா? என்ன சொல்ற வருண்? உனக்கு எப்படி தெரியும்?”  வீரா படபடத்தான்.

 

“எனக்கு எல்லாம் தெரியும். உனக்கு தான் நீ யாரு .. எதுக்காக வந்திருக்கன்னு எதுவும் தெரிஞ்சுக்காம இருக்க.” சூசகமாகப் பேசினான்.

 

“புரியல..” அவன் அருகில் வந்தான்.

 “என்கூட வா” முன்னே நடக்க வீரா அவனைத் தொடர்ந்தான்.

அங்கிருந்த ஒரு பாறையில் அவனை அமரச் சொன்னான். வீராவும் எதையும் யோசிக்காமல் அமர, அவனது உடல் முழுதும் இப்போது தீப்பற்றி எறிவது போல இருந்தது. உடனே சட்டென அவன் எழுந்துவிட,

வருண் அவனை விடாமல் பிடித்து அமர வைத்தான். வீரா வெப்பம் தாளாமல் போட்டிருந்த தன் மேல்சட்டையை கழட்டினான்.

அவனது நெஞ்சில் அன்று ஏற்பட்ட டேட்டூ போன்ற அந்த ஓவியம் இப்போது எரிந்து மறைந்தது. தீராத வலி ஏற்பட வீரா கத்தினான்.

“கொஞ்சம் பொறுத்துக்கோ.” வருண் அவனது தோளைப் பிடித்து அழுத்தி அந்தப் பாறையை விட்டு அவன் அகலாத படி பார்த்துக் கொண்டான்.

மெல்ல மெல்ல வீராவின் மனது சமன் பட்டது. எறிந்த உடல் இப்போது சற்று குளிர ஆரம்பித்தது.

வருணைப் பார்க்க, அவன் இப்போது விளக்கம் அளித்தான்.

“வீரா இது தான் பாதாள உலகம். ராமாயணம் மகாபாரதம் காலத்துக்கு அப்பறம் மக்கள் இதைப் பத்தி கேள்விப்பட்டோ இல்ல பார்த்தோ இருக்க முடியாது. நீயும் அப்படித் தானே!?” வீரவைக் கேட்க,

“இதெல்லாம் நான் புராணங்கள்ல மட்டும் தான் கேட்டிருக்கேன்.” பதில் தந்தான் வீரா.

“அது எதுவுமே கதை இல்லை. எல்லாமே நிஜம். ஆனா அதை நிரூபிக்கற மாதிரி இப்போ நம்ம உலகத்துல ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் இருக்கு. ஆனாலும் மக்கள் அதை நம்ப முடியாம இருக்காங்க.

உதாரணத்துக்கு, கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை கடலுக்கு அடில போயிட்டதா நாம படிச்சிருப்போம். முன்னாடி கதை தான் இதுன்னு சொன்னவங்க , இப்போ அதே கடலுக்கு அடில சில ஆதாரங்களை பார்த்த பிறகு நம்ப ஆரம்பிச்சிருக்காங்க.”

“ஆமா, நான் கூட அதை பத்தி நெட்ல பார்த்திருக்கேன். துவாரகை கடலுக்கு அடில கிடைச்சிருக்குன்னு வீடியோ ஒன்னு இருக்கு.” வீரா ஒத்துக் கொண்டான்.

“அப்போ கிருஷ்ணர் காலம் உண்மைன்னு நம்பறியா?” சந்தேகமாக வருண் பார்க்க,

“அந்த வீடியோ எல்லாம் பாத்தா நம்பத் தான் வேணும்.” வீரா அமோதித்தான்.

“அப்போ பாண்டவர்கள்?” அடுத்த கேள்வி கேட்டான்.

“கிருஷ்ணர் இருக்காருன்னு நம்பரப்ப அவர் காலத்துல வாழ்ந்த பாண்டவர்களும் நிஜம் தானே.”

“அப்போ நீ நம்பர?” வருண் அவனை உற்று நோக்க

“ம்ம்.. ஆமா.” தோளைக் குலுக்கினான்.

“சரி அப்போ உனக்கு நான் இந்தக் கதைய சொல்றேன். கேளு!”

பஞ்சபாண்டவர்கள் அஞ்சு பேர்ல சிறந்தவன் அர்ஜுனன். அழகு, அறிவு, எதையும் ஆராய்ந்து செய்யறதுன்னு அவன் கிட்ட பல நல்ல குணங்கள் இருந்தது. அதே மாதிரி பெண்கள் யாரா இருந்தாலும் அவனோட அழகுல கண்டிப்பா மயங்கிடுவாங்க.

அதனால தான் அவனுக்கு பல மனைவிகள். பட்டத்து ராணிகள்னு சிலர் இருந்தாலும், சில சிற்றரசர்கள் அவர்களோட பொண்ணை அர்ஜுனனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க.

அதனால அவனுக்கு பிள்ளைகளும் நிறைய. நாம வரலாற்று புத்தகத்துல சில மனைவிகளும் அவங்க பசங்களும் மட்டும் தான். ஆனால் வெளிய தெரியாமல் எத்தனையோ பேர் இருந்தாங்க.

அதுல ஒருத்தன் அர்ஜுனனுக்கு ரொம்ப நெருக்கமானவன். அவன் பேரு சக்ரவானா.

இது இப்படி இருக்க, அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைச்சது எப்படின்னா அக்னி தேவன் சொல்லி, வருண தேவன் ஒரு சக்தி வாய்ந்த வில்லை அர்ஜுனனுக்குக் கொடுத்தான்.

கடைசி வரை அந்த வில்லால தான் அர்ஜுனன் எல்லா எதிரிகளையும் வென்றான். அவனால அந்த வில்லை விட்டு பிரியவே முடியாது. அவனோட உடல் உறுப்பு மாதிரி அதை எப்பவுமே கூடவே வெச்சிருந்தான்.

அப்போ தான் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள பாண்டவர்கள் கடைசியா யாத்திரை புறப்பட்டாங்க. அந்த நேரத்துல ஒரு பெரிய மலை உச்சியை அடைந்து அங்க தவம் செஞ்சு தங்கள் உயிரை விடனும்னு யுதிஷ்டிரன் சொல்ல, பஞ்சாலியோட கிளம்பினாங்க.

அந்த மலை ஏறினா அவங்க வாழ்க்கையே முடிவுக்கு வந்துடும்னு அக்னி தேவன் தெரிஞ்சுகிட்டாரு. எல்லாரும் எல்லாத்தையும் துறந்து போறப்ப இந்த அர்ஜுனன் மட்டும் வில்லின் மேல இருந்த ஆசையால அதை மட்டும் கூடவே கொண்டு வந்திருந்தான்.

அக்னி தேவன் உடனே அங்க தோன்றினார்.

“அர்ஜுனா, நீ இந்த வில்லை மீண்டும் வருண பகவானுக்கு அர்ப்பணம் செய்யாத வரை உன்னோட உயிர் போகாது. உன் அண்ணன் தம்பி எல்லாம் இறந்தாலும் நீ மட்டும் உயிரோட இருப்ப. அதுனால உனக்கு நான் ஒரு வாய்ப்புத் தரேன்.

ஒன்னு இந்த வில்லை சமர்ப்பணம் செஞ்சு உன் உடன்பிறந்தவங்க கூட உயிரை விடு. அப்படி இல்லன்னா இந்த வில்லை நீ வச்சிக்கிட்டு உன் நாட்டுக்கே திரும்பிப் போய் உன்னோட மகன்களோட நீ ஆட்சி செஞ்சு வாழு.

இந்த இரண்டில் நீ எதை தேர்ந்தெடுக்கப் போற?”ன்னு கேட்டாரு.

அர்ஜுனனுக்கு அண்ணன் தம்பிய விட்டு வாழவும் மனசில்ல, அதே சமயம் காண்டீபத்தை விட்டுக் கொடுக்கவும் மனசில்ல.

பிறகு மறு நாள் காலைல அந்த காண்டீப வில்லை நதியில சமர்ப்பணம் செய்யறதா சொல்லி அனுப்பினான்.

அன்னிக்கு இரவு வரை இதே சிந்தனையில வருந்திகிட்டு இருந்தான். அப்போ தான் அவனோட மகன் சக்ரவானா அவனை கடைசியா பார்க்க வந்தான்.

உடனே அர்ஜுனன் மனசுல ஒரு சபலம் வந்தது. அந்த வில் வேற யார் கைக்கும் போயிடக் கூடாதுன்னு ஒரு பொறமை எட்டிப் பார்க்க, ஒரு வேலை செஞ்சான்.

சக்ரவானாவ கூப்பிட்டு,

“நாளைக்கு நான் இந்த நதியில என்னோட உயிருக்கு உயிரான இந்த வில்லை சமர்ப்பிக்கணும். ஆனா இதை நான் யாருக்கும் தர விரும்பல, நீ ஒரு காரியம் செய்.” அப்படீன்னு கேட்டான்.

“சொல்லுங்கப்பா, ஒரு மகனா நான் உங்க பேச்சை மீற மாட்டேன்.” ன்னு சக்ரவானா வாக்களிச்சதும் அவன் கிட்ட தன்னோட யோசனைய சொன்னான் அர்ஜுனன்.

“நாளைக்கு காலைல சரியா சூரியன் உதயமானதுக்கு அப்புறம் நான் குளிச்சுட்டு காண்டீபத்த இந்த நதில விடுவேன். அப்போ நீ நீருக்கு அடில நீந்தி வந்து இந்த வில்லை எடுத்துட்டு போய் பத்திரமா ஒரு இடத்துல வை. நான் என்னோட மருபிறவில கண்டிப்பா இந்த வில்லைத் தேடி வருவேன். அதுவரை அது பாதுகாப்பா இருக்கணும்.” அர்ஜுனன் தன் திட்டத்தை சொன்னான்.

“இதை எங்கு பாதுகாப்பா வைக்கணும். உங்களுக்கு மறுபிறவியில எப்படி இது ஞாபகம் வரும். அதுனால நீங்களே ஒரு இடம் சொல்லுங்க. நான் அங்க வைக்கறேன்.” சக்ரவானா சொன்னதும்,

 அர்ஜுனன் அதுக்கும் ஒரு யோசனை சொன்னான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி என்னோடு போராடி இந்த வில்லை அபகரிக்க முயன்ற ஒருவன் இப்போ சாபத்தால பிரம்ம ராட்ஷசன் ஆயிட்டான். அவனை இதுக்கு காவல் வைக்கறேன். ஆனா அவனை சிறையும் வைக்கறேன்.

இதை நீ பாதாள லோகத்துல கடலுக்கு அடில ஒரு சுரங்கம் அமைச்சு அதுக்குள்ள ஒளிச்சு வை.

என்னைத் தவிற வேறு யாராலையும் இந்த வில்லை நெருங்க முடியாது.

அந்த பாதாள லோகத்துக்கும் நீ இருக்கற இடத்துக்கும் ஒரு சுரங்கம் அமைக்க உனக்கு விஷ்வகர்மா ( தேவர்களோட மாளிகை அமைப்பவர்) உதவிசெய்வார்.

அந்தச் சுரங்கம் யார் கண்ணுக்கும் தெரியாது. நீ, உனக்கு அப்பறம் உன்னோட சொந்த மகன் மகன், அவனோட மகன், இப்படி உன்னோட வம்சத்துக்கு மட்டும் தான் அது இருக்கற இடம் தெரியனும். அப்படி வெளியாட்கள் யாராவது இதை தெரிஞ்சுக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சி செஞ்சா அவங்க உயிர் போகும்.

அப்பறம் இதை நீ ஒளிச்சு வச்ச பிறகு அது உன் கண்ணுக்கே தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். உன்னோட சந்ததில நான் பிறந்து ஒரு நாள் வருவேன். அப்போ இதை நான் தேடி எடுத்து ஆனந்தப் படுவேன்.”  அர்ஜுனன் தன் திட்டத்தை எண்ணி மகிழ்ந்தான்.

“அப்பா! நீங்க ஒரு வேளை பிறந்தா, உங்களை எப்படி அடையாளம் கண்டுக்கறது? அதுவுமில்லாம, நான் இறந்த பிறகு என்னோட சந்ததிக்கு உங்களை பத்தியும், நீங்க அடைய வேண்டிய உங்க வில்லை பத்தியும் எப்படி சொல்லி வைப்பேன். உங்களுக்கே அது ஞாபகம் இல்லனா எப்படி நினைவு படுத்தறது.?” முக்கியமான கேள்வியைக் கேட்டான்.

“சக்ரவானா, உன் சந்ததியினர் அனைவர்க்கும் இந்த வில்வித்தையை சொல்லிக்கொடு. நீ மறைத்து வைக்கும் சுரங்கம் ஒரு மலையில் அடியில் உள்ள கடலுக்குள் இருக்க வேண்டும்.  நானே பிறந்திருக்கேன்னு என்னோட தலையில் இருக்கும் இந்த மச்சத்த வச்சு தெரிஞ்சுக்கோ. எப்படியும் எனக்கு உதவி செய்ய நானே சில ஏற்பாடுகளை செஞ்சுப்பேன். நீ கவலைப் படாதே!

நாளைக்கு மறக்காம இந்த ஆற்றுக்கு அடில வந்து காத்திரு.” என்று கூறி அவனை அனுப்பினான்.

நாளை சக்ரவானா வில்லை ஒளித்து வைத்த பிறகு, அங்கே பல ஆபத்துக்களை உன்டாக்கி அதற்கு காவலாக அந்த ராட்ஷசனை சிறை வைக்க முடிவு செய்தான் அர்ஜுனன்.

மறுநாள் காலை விடிந்தது. சொன்னபடி அர்ஜுனன் அந்த ஆற்றங்கறைக்கு வந்தான். உடன் அவனுடைய சகோதரர்கள் மற்றும் அக்னி தேவன் சாட்சிக்கு வந்தார்.

பிரிய மனமே இல்லாமல் காண்டீப வில்லை வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் நின்று கண்ணீர்விட்டான்.

‘உன்னை நான் யாருக்கும் தர மாட்டேன். நீ எனக்கு மட்டுமே சொந்தம்.’ என எண்ணிக் கொண்டு, ஆற்றில் விட்டான்.

அவனது காலுக்கு அடியிலேயே நீருக்குள் நின்ற சக்ரவானா அந்த வில்லைப் பெற்றுக் கொண்டு நீந்திக் கொண்டே வெகு தூரம் சென்றான்.

அக்னி பகவானிடம் வணங்கி விடை பெற்று அர்ஜுனன் தன் சகோதரகளுடன் மலை ஏறத் துவங்கினான்.

ஒரு நாள் முழுதும் போனது. மலை மீதே ஓரிடத்தில் தங்கினர்.

சக்ரவானா அந்த வில்லை எடுத்துக் கொண்டு பாதாள லோகம் சென்றான்.

பாதாள லோகம் என்பது பூமிக்கு அடியில் துளை போட்டுக் கொண்டே சென்றால் வரும். அப்படி பூமியைக் குடைந்து கொண்டு கடலுக்கும் அடியில் சென்றான்.

அப்படி சென்ற பிறகு, அவனுக்கு பாதுகாப்பு என்று தோன்றிய ஓரிடத்தில் இந்த வில்லைப் பதுக்கி வைத்தான். பின் அந்த பாதாள லோகத்தை விட்டு வெளியே வந்தான்.

அர்ஜுனனுக்கு அவன் ஒளித்து வைத்தது மனக்கண் முன் தெரிய, பிரம்மா விஷ்ணு சிவன் மூவரையும் வணங்கி அங்கிருந்த மூன்று மலைச் சிகரங்களை அவர்களாக பாவித்து அவர்களிடம் வேண்டிக்கொண்டு அடுத்த வேலையைச் செய்தான்.

முதலில் பிரம்ம மலையில் சில சிக்கல்களை ஏற்ப்படுத்தி அதற்குக் காவலாக தன்னுடைய சக்திக்கு உட்பட்ட ஒரு மாயாவியை வைத்தான். தான் வந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு வழி சொல்லும்படி அவனை பணித்தான்.

அதே போல விஷ்ணு மலையில் சில சிக்கல்களை அந்த மாயாவியை வைத்தே ஏற்ப்படுத்திக் கொண்டான்.

பிறகு அந்த பிரம்மராட்ஷசனை அழைத்தான்.

மற்ற பாண்டவர்கள் உறங்கிய பிறகு, இவன் அவனை அழைத்து இந்த பாதாள லோகத்தின் மேல் விஷ்ணு மலையில் சிறை இருக்கும் படி உத்தரவிட்டான். அத்துடன் இல்லாமல், அவனுக்கு மோட்சம் பிரம்ம மலையில் உள்ள நீலக் கல்லை எடுத்து வந்து இங்கே விஷ்ணுவிற்கு வைத்தால் தான் கிடைக்கும். அதுவரை சிறை தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

இவன் விஷ்ணு மலையில் சிறை இருப்பதால், அதை விட்டு அவனால் பிரம்ம மலைக்குச் செல்ல முடியாது என்பது அவனுக்கு வைத்த குறி.

அடுத்த சிவன் மலையில் இப்படிப் பட்ட குகைகளையும் அதிலிருந்து இங்கே விழும் அளவிற்கு வழிகளை ஏற்ப்படுத்தச் சொன்னான்.

இவை அனைத்தையும் அவன் செய்து முடிக்க, இந்த விஷயம் அக்னி பகவானுக்குத் தெரிந்து அவர் நேரே வருணனிடம் சென்று கூறினார்.

தன்னுடைய வில்லை தனக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றிய அர்ஜுனன் மீதும், அவனுக்கு துணையாக வந்த சக்ரவானா மீதும் கடும் கோபம் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!