Kandeepanin Kanavu – 28

                         காண்டீபனின் கனவு 28

 

வீரா கன்னத்தைத் தட்டிச் சிரித்ததும் , அவனுடைய சிரிப்பில் மயங்கி நின்றாள் சாம். இருக்காதா..! எத்தனை பெண்கள் இதில் மயங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க இன்று மனதில் காதலுடன் இருக்கும் சம்ரக்க்ஷா மட்டும் என்ன விதிவிலக்கா!?

அவன் முகத்தையே பார்த்த வண்ணம் இருக்க,

“என்ன யோசிக்கிறியா?” புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“ஆங்…ம்ம்ம்.. ஆமா..” முதலில் புரியாமல் பின் ஆம் என பொய் சொல்லி வைத்தாள்.

“எனக்கு ஒன்னும் புரியல. நீயே சொல்லு? அப்படி என்ன நன்மை செஞ்சுட்டான்?” பழைய கோபம் ஞாபகம் வந்தது.

“அந்த குகைல இருக்கற வரை தான் அந்த பழைய கதை நினைவுக்கு வரும். எனக்கு வருண் சொல்லியும் எதுவும் ஞாபகம் வராததால, அவன் இந்த முரட்டு வைத்தியம் செஞ்சிருக்கான்.

அவன் என்னைப் புடிச்சு அழுத்தலன்னா என் மூளை விழிச்சு இருந்திருக்காது. சாவோட விளிம்புல மனுஷன் இருக்கும் போது அவனுக்கு பல நினைவுகள் மூளைல வந்து மோதும். அப்படி ஒரு சம்பவம் தான் எனக்கும் நடந்தது.”

நடுவில் குறுக்கிட்டுக் கேட்டாள். “அப்போ உனக்கு ஞாபகம் வந்துடுச்சா? நீ தான் அர்ஜுனனா?”

“பாதி உண்மை.” சிரித்தான்.

“என்ன பாதி உண்மையா? அப்படீனா? நீ வெறும் ‘அர்’ மட்டுமா? மீதி ‘ஜுனன்’ ஆ எப்போ மாறுவ?” கிண்டல் செய்தாள்.

“ஹா ஹா.. அது என்னவோ உண்மை தான். நான் பாதி தான்…”

அவனது சிரிப்பு அவளுக்குக் குழப்பத்தைத் தந்தது.

“எனக்குப் புரியல வீரா.” கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

வருண் அருகில் வந்தான்.

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா தான் அர்ஜுனன். இந்த ஈருடல் ஓர் உயிர் கேள்விப் பட்டிருக்கியா?” என்றான் வருண்.

“வாட்…?! நீயும் வீராவும் சேர்ந்தா அர்ஜுனனா… ஐயோ… ஆண்டவா…!” தலையில் கை வைத்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள்.

“சாம். மொதல்ல நாம ஊருக்குப் போகலாம். எல்லாம் விவரமா சொல்றேன்.” அவள் அருகில் வந்து அமர்ந்தான் வீர்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்ணடித்தான் வீரா.

ஒரு நொடி வெட்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் விளங்கியது சாமிற்கு.

“போலாமா?” கையை நீட்டினான்.

மறுக்காமல் அவளும் தன் கையை அவனிடம் கொடுத்தாள்.

மூவரும் மீண்டும் மலை மீதிருந்து இறங்கி கில் இருந்த பகுதிக்கு வந்தாலும், வரும் வழி அனைத்தும் வருணிடம் அவள் பேசவே இல்லை. வீரா தான் இருவரையும் சமாளித்துக் கொண்டு வந்தான்.

கில் மூவரையும் ஆர்வமாகப் பார்க்க, யாரும் எதுவும் பேசாமல் தங்கள் டெண்ட்டுக்குள் புகுந்து கொண்டனர்.

ஏதோ களைப்பில் செல்கின்றனர் என அவருமே விட்டுவிட, எதுவும் உண்ணாமலே சாம் உறங்கி விட்டாள்.

அவள் அருகில் சென்று அமர்ந்தான் வீரா. அவள் தனக்காக அழுதது. தன்னை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க அவள் தவித்தது அனைத்தும் அவன் மனதை ஏதோ செய்தது. என்ன நடந்தாலும் அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

அழுததில் அவளது கண்கள் சற்று வீங்கி இருந்தது. அதனால் தான் கண்ணை மூடியவுடன் தூங்கிவிட்டாள் என்பதை அறிந்தான். அருகில் சென்றவன் அவளது மூடிய இமைககளை முத்தமிட்டான்.

அவள் சற்று சிணுங்க, அவளது தலையை வருடி இதமளித்தான். மீண்டும் ஆழ்ந்து உறங்கினாள்.

அவளின் காதலை அவனும் இன்று உணர்ந்தது , மனதில் இருந்த பெரும் பாரம் இறங்கியது போல ஆனது.

அவளை மீண்டும் நெருங்கி நெத்தியில் முத்தமிட நினைத்த போது, சாம் கண்களை மெல்லத் திறக்க, அவனை அருகில் கண்டதும் ஒரு நொடி திகைத்தாள்.

“ஹே.. என்ன..!” அவனை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அவளது சந்தேகப் பார்வை அவனை தடுமாற வைத்தது.

“நீ நினைக்கற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா தூங்கிட்டியான்னு பார்த்தேன்.” எனக் கூற,

“தூங்கறேனான்னு பாக்கறவன் இப்படித் தான் பக்கத்துல வந்து உத்து பார்ப்பானா. தள்ளி நின்னு பாத்தா தெரியாதா.உண்மைய சொல்லு.. என்ன பண்ண வந்த?!” புருவத்தை சுருக்கி அவனை குற்றவாளியாக்கிப் பார்த்தாள்.

அவன் எதுவும் சொல்லாமல் எழுந்து தன் படுக்கைக்குக் செல்ல,

“பிராடு..சொல்லு டா..” அவன் பின்னோடு வந்தாள்.

அவன் எதிர்பாராமல் திரும்ப, அவள் மேல் இடித்து இருவரும் அவனது படுக்கையில் தடுக்கி விழுந்தனர்.

வீரா சாமை தாங்கிப் பிடிக்க அவளது இடையைப் பற்றியிருந்தபடியே விழுந்தான். அவளும் வாகாக அவனது தோளைப் பற்றிக் கொண்டு விட, கண்காளாலேயே அவனும் காதலைக் கூற மனதால் அவளும் சம்மதம் சொன்னாள்.

போகப் போக அவனது கைகள் அவளை இறுக்க, அவனோடு நெருங்கி ஒட்டிக் கிடந்தாள்.

தன்னிச்சையாக அவனது உதடுகள் அவளுடையதை நாட, அவளோ கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய அந்த வெட்கம் அவனுக்குப் புதிது தான். அதை ரசிக்கத் தோன்றினாலும், இந்த நொடி மீண்டும் கிடைக்காது என்றெண்ணி ஏமாற்றாமல் அவளது பூவிதழை மென்மையாக முத்தமிட்டான்.

ஆசையும் நாணமும் அவளை அந்த வேளையில் கட்டிப் போட்டது. கூச்சம் வந்து அவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவளை வளைத்து வாளிப்பான அவளது கழுத்தில் அடுத்த முத்தத்தை வைத்தான். ஒன்று பத்தாக மாறியது.

சாம் அவனது அந்த முத்தங்களில் தன்னை இழந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளது முகத்தை இரு கைகளிலும் ஏந்தி, “ வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்றான்.

ஊடுருவும் அவனது பார்வையை கண் கொண்டு பார்க்க முடியாமல், கட்டிப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து “ம்ம்..” என்றாள்.

மெல்லச் சிரித்தவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான்.

அப்படியே அவளை சிறிது நேரம் பிடித்திருக்க, அவனது அணைப்பின் சுகத்தில் அவள் உறங்கியே விட்டாள்.

அவளிடம் அசைவில்லாது கண்டு நிமிர்த்திப் பார்க்க, அவள் உறங்கிப் போனது தெரிந்தது.

அவளது தலையை லேசாக முட்டி சிரித்தவன், அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே வந்தான்.

நீண்ட தன் கைகளை நீட்டி நெட்டி முறித்தான். எப்படியும் அடுத்து ஊருக்குச் செல்ல வேண்டும். அதை கில்பர்ட்டிடம் கூறவேண்டும் என அவரைத் தேடிச் சென்றான்.

அவரோ அங்கே அனைவருக்கும் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

“ஹாய் கில்! சாரி கொஞ்சம் டயர்ட்டா இருந்துச்சு அதான் நேரா போய் கொஞ்சம் படுத்துட்டேன்.” அருகில் வந்து நின்றான்.

“நோ ப்ராப்ளம் வீர். இந்தா இந்த காஃபி எடுத்துக்கோ” சூடாக இருந்த காபியை பிளாஸ்க்கில் இருந்து ஊற்றிக் கொடுத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ்.” சிப்பிக் கொண்டே விஷயத்தை ஆரம்பித்தான்.

“இன்னிக்கு ட்ரிப் ஒன்னும் பெருசா இல்ல கில். சேம் மௌன்டைன். நத்திங் ஸ்பெஷல்.” என்றான்.

“ஒ…! பராவல்ல.” சிரித்துக் கொண்டே சொன்னார்.

பட்டர் ஸ்ப்ரே செய்து அவரது உணவை இன்னும் சுவையாக செய்து கொண்டிருக்க,

“கில்.. ஒரு விஷயம் சொல்லணும்.. இல்ல கேட்கணும்..” தயங்காமல் துவங்க,

“என்ன வீர்..”அவனைப் பார்த்தார்.

“ நானும் சாமும் ..கல்யாணம் செய்துக்கலானு முடிவு செஞ்சிருக்கோம். சோ ஊருக்கு போறோம்.” சொல்லி விட்டான்.

“வாட்… ஹே! கங்க்ராட்ஸ் மேன்..!” ஆனந்த அதிர்ச்சியில் அவனை வந்து கட்டிக் கொண்டார்.

“தேங்க்ஸ் கில்… இந்த ப்ராஜெக்ட் என்னால கண்டினியு பண்ண முடியாது. அதான் வருத்தமா இருக்கு.” போலியான வருத்தத்தைக் காட்ட,

“ ஒன்னும் பிரச்சனையில்ல. நாங்க பாத்துக்கறோம். கல்யாணம் பண்ணிட்டு இங்க வருவியா இல்ல அங்கேயே இருந்துடுவியா?”

“இங்க வரணும் தான். ஆனா என்னோட சூழ்நிலை அங்க எப்படின்னு தெரியாது. சோ அதையும் பார்த்து நான் உங்களுக்கு அங்கிருந்து மெயில் அனுப்பறேன்.” உறுதி கூறினான்.

“கூல்… ஐ அம் சோ ஹாப்பி. என்னுடைய வாழ்த்துக்கள்..” உளமார வாழ்த்தினார்.

“ரொம்ப நன்றி கில். அப்பறம் நாம் இன்னிக்கு நைட் ஸ்டே பண்ணிட்டு நாளைகுக் காலைல இங்கிருந்து கிளம்பிடலாமா!?” என்றான்.

“நானும் அத தான் சொல் வந்தேன்.” வருண் வந்தான்.

“ஓகே… இங்க ஒன்னும் வேலை இல்ல. நான் அப்பறம் ப்ளான் பண்ணி ப்ரஜெக்ட்க்கு வந்துக்கறேன். வருண் நீங்க கண்டிநியு பண்றீங்க தானே?” கில் வருணைப் பார்க்க,

“ஆமா ஆனா வீரா கூட அவன் ஊருக்கு போறேன். சோ அதுக்கு அப்பறம் வரேன்.” என்றான்.

“கல்யாணத்துக்கா?” கில் விஷயத்தை கூற,

சிரித்தபடி தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினான் வீரா.

“ஹா ஹா….ஆமா…” வந்து வீராவைக் கட்டிக் கொண்டான்.

அவனது சிரிப்பே வீராவிற்கு தனியாக அவனிடம் விஷயத்தை சொல்ல வேண்டாமென உணர்த்தியது.

கில் சமைத்த உணவையும் அந்த அழகான இடத்தையும் ரசித்துக் கொண்டே மூவரும் உணவை உண்டபின் தங்கள் இடத்திற்குச் சென்று உறங்கினர்.

அன்று வீராவிற்கு வழக்கம் போல கனவுகள் துரத்தியது.

அவனுடைய காண்டீப வில்லைக் கனவில் கண்டான். தூரத்தில் ஒரு பாறையின் அடியில் அழகாக உறங்கிக் கொண்டிருந்தது. ஓடிச்சென்று அதைக் கைகளில் எடுக்கப் போகும் சமயம் அவனை ஒரு அம்பு வந்து தாக்கியது.

அதை பிடுங்கி எரிய முடியாமல் தவித்தான். வலியையும் தாண்டி காண்டீபம் அவனை அழைக்க, முயற்சி செய்து அதைக் கையால் தொட்டு விட,

வருண் அந்த நேரம் வந்து அதனைப் பிடுங்கிக் கொண்டான்.

எவ்வளவோ கேட்டும் அவனிடம் கொடுக்க மறுக்கிறான். பின் ஆசை தீர ஒரு முறை தன் கைகளில் ஏந்த அத்துடன் அந்த வில் அவனது கைகளை விட்டு மறைந்தது.

அவனது உயிரே போகும் படி கதறுகிறான்.

கனவில் கத்தியது வெளியேயும் பிரதிபலிக்க, சாம் அடித்துப் பிடித்து எழுந்து அவன் அருகில் வந்தாள்.

“வீரா…! இங்க பாரு.. என்ன ஆச்சு.. கனவு தான். பயப்படாத…” அவனைப் பிடித்து உலுக்கினாள்.

அவனது கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவளுக்கும் வலித்தது.

“டேய்.. வீரா.. கண்ண திற. என்னைப் பாரு…” கன்னத்தைத் தட்டி அவனை எழுப்பினாள்.

“தரமாட்டேன்… நோ…!” மீண்டும் வீரா கத்த,

“வீரா…!” அவள் தண்ணீரை எடுத்து வந்து தெளித்தாள்.

உடனே விழித்துக் கொண்டான்.

எழுந்து அமர்ந்து… “நான் பார்த்தேன்… என்னோட வில்ல பார்த்தேன். அத என்கிட்ட இருந்து பரிச்சுக்கிட்டாங்க. நோ… அது என்னோடது…” அவனுக்குள் உறங்கிக் கிடந்த அர்ஜுனன் விழித்துக் கொண்டான்.

சாமிற்கு அது நன்றாகவே புரிந்தது.

“உங்கிட்ட இருந்து யாரும் அதை எடுத்துக்கல. ஏன்னா அது உன்கிட்ட அது இல்ல இப்போ. அதைத் தேடிட்டு தான் இருக்கோம்.” உண்மை நிலையை சொன்னாள்.

“எனக்குத் தெரியும் அது எங்க இருக்குன்னு. ஊருக்கு போலாம்.” என எழுந்து கொண்டான்.

மற்றவர்களுடன் சேர்ந்து அவன் அந்த இடத்தை காலி செய்து கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுதும் காண்டீப வில்லின் மேல் தான் இருந்தது.

அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, சாம் தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிவதைக் கண்டாள். பின் மீண்டும் தன் உடமைகளை எடுத்துவைப்பதில் மூழ்க,

சற்று நேரத்தில் வருண் எங்கோ செல்வதையும் கண்டாள்.

அவன் பின்னோடு சென்று பார்க்க நினைத்தவள், “இதையும் பேக் பண்ணு வீர். வரேன்” என மெதுவாக சென்றாள்.

வருண் அங்கிருந்த ஒரு பாறைக்குப் பின்னால் செல்வதைக் கண்டவள், அங்கு தான் அன்று வெள்ளி மான்கள் தென்பட்டது என்பதை கவனித்தாள்.

வருணுக்குத் தெரியாமல் மெல்ல அவன் பின்னால் செல்ல, அந்தப் பாறைக்குப் பின்னால் மறைந்திருந்து பார்த்தாள்.

கண்டவள் கண்ட இடத்திலேயே உறைந்தாள்.

மீண்டும் அந்த இரண்டு வெள்ளி மான்கள்!

இல்லை மூன்று. அந்த வெள்ளி மான்களைக் கண்ட வருணும் இப்போது ஒரு மானாக மாறி இருந்தான்.

அதிர்ச்சியின் உச்சம் இன்று சம்ரக்ஷாவை தாக்கியது.

என்ன நடக்கிறது என அவளுக்குப் புரியவில்லை. மூன்று மான்களும் ஒரே இடத்தில் தண்ணீர் குடித்தது. அவற்றுக்குள் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது புரிந்தது.

மான்கள் பாஷை தான் இவளுக்குத் தெரியாதே!

இரண்டு மான்களும் சிறிது நேரத்திலேயே அவ்விடம் விடு மறைய , ஒரு மான் மட்டும் திரும்பி வந்தது. வரும் போதே வருணாக மாறியது.

இதயமே நின்றுவிட்டது போன்ற பிரம்மை சாமிற்கு.

‘இதை படத்துல தான் பார்த்திருக்கேன். அதுவும் பாம்பு தான் மனுஷனா மாறுன கதை இருக்கு. இது என்ன மான் மனுஷனா மாறுது!’ அவள் மனதில் யோசிக்கும் போதே வருண் அருகில் வருவது தெரிந்து அவனுக்கு முன் அந்த இடத்தைக் காலி செய்தாள்.

வருண் கில்லுடன் அவரது காரில் வர, சாமும் வீராவும் தங்கள் காரில் வந்தனர்.

இந்த விஷயத்தை வீராவிடம் எப்படிச் சொல்வது என யோசித்தாள்.

“என்ன டி ஒண்ணுமே பேச மாட்டேங்கற.?” அவளது ஒரு கையைப் பிடித்து தன் கையுடன் சேர்த்து காரின் கியரில் வைத்துப் பிடித்துக் கொண்டான்.

“பேசணும் ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல.” அவளது கலமுற்ற முகம் அவனுக்கு ஏதோ சரியில்லை என புரிய வைத்தது.

“என்ன டா.. என்ன விஷயம் சொல்லு.” என்றான்.

“இந்த வருண் பாதி நீ பாதின்னு அப்போ சொன்னியே அது என்ன.?” முதலில் இதை தெரிந்து கொள்ள நினைத்தாள்.

“அதுவா… என்ன எப்படின்னு என்கிட்டே கேட்காத.. அது எனக்கும் தெரியல. ஆனா அர்ஜுனன் அப்படீன்னு பார்த்தா, அந்த ஒரு உயிர் எங்க ரெண்டு பேர் உள்ளையும் பிரிஞ்சு இருக்கு.”

“அப்போ நீயும் அவனும் சேர்ந்தா தான் முழு அர்ஜுனன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த வில்ல எடுக்கணும். அப்படித்தானே!” தெளிவாகக் கேட்க,

வீராவிற்கு இப்போது சற்று குழப்பமானது.

“இல்ல. அந்த வில் எனக்கு மட்டும் தான் சொந்தம்.” அவன் உள் மனது அவனுக்கு உரைத்ததை அவளிடம் கூறினான்.

“உனக்கு இந்த ஃபீல் இருக்குல்ல. அப்போ அவனுக்கு ஏன் அது இல்ல? அவன் உன்ன ஏமாத்தறான்.”

வண்டியை ஓரமாக நிறுத்தினான் வீரா.

“அப்படி இல்ல சாம். அன்னிக்கு நான் தண்ணீருக்குள்ள இருந்தப்ப அர்ஜுனன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்வும், அதன் பிறகு அவனோட உயிர் பல ஆண்டுகளா காத்திருந்து அது ரெண்டா பிரிஞ்சு எனக்குள்ளேயும் அவனுக்குள்ளயும் புகுந்ததை நான் பார்த்தேன். அதை தான் எனக்கு அன்னிக்கு புரிய வெச்சான்.” அடரு கண்டதைக் கூறினான்.

“அது ஏன் அவனோட ட்ரிக்கா இருக்கக் கூடாது?” சாம் பதிலுக்கு அவனை நன்றாகக் குழப்பினாள்.

“அவன் என்ன மாஜிக் மேன் ஆ என்னை ட்ரிக் பண்ண.?”

“ஆமா வீர். நான் இன்னிக்கு அவன வேற மாதிரி பாத்தேன். அன்னிக்கு நான் வெள்ளி மான்கள் பார்த்தேன்னு சொன்னேனே! இன்னிக்கு அதுங்களோட இவன் பேசிட்டு இருந்தான். சும்மா இல்ல. இவனும் அதே மானா மாறி பேசிட்டு இருந்தான். அதனால தான் சொல்றேன். எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லை.” அவனுக்காக பதறியது அவள் மனது. அவனைக் காக்க வேண்டும் என்பது தான் அவளின் ஒரே எண்ணம்.

“நீ சொல்றது உண்மைன்னா, நான் பல விஷயங்கள ப்ளான் பண்ணனும். எப்படியும் அவன் நம்ம கூட ஊருக்கு வருவான். அப்போ நாம யோசிப்போம்.” மனதில் பல கணக்குகளை போட்ட படியே பயணத்தைத் தொடர்ந்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!