Kandeepanin Kanavu-33

Kandeepanin Kanavu-33

                            காண்டீபனின் கனவு 33

 

    சம்ரக்க்ஷா வீராவின் அருகில் வந்து அமர்ந்ததும், அவளுக்கு அனல் அடித்தது. அவளுக்கு நெருப்பின் அருகில் அமர்ந்திருப்பது போல இருந்தது.

ஏன்னென்று தெரியாவிட்டாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அவனை விட்டு நகராமல் அருகிலேயே இருந்தாள்.

வருணும் வீராவைப் போலவே கண்ணை மூடிக் கொண்டு பூஜையில் இருந்தான்.

சற்று நேரத்தில் வீராவின் மார்பு நீல நிறத்தில் ஒளிர ஆரம்பித்தது. அது தணல் போலத் தெரிந்தது.

‘ஒரு வேளை நீலக் கல் தான் பூஜை செய்யச் செய்ய சூடு ஏற ஆரம்பித்து இருக்கிறதோ!?’ சாம் நினைத்து அவசரமாக வெளியே வந்தாள்.

தாத்தாவிடம், வீராவின் நெஞ்சில் இருக்கும் நீலக் கல் பற்றிக் கூற,

“இதுல நாம ஒண்ணுமே செய்ய முடியாது மா. இத அவன் தான் ஒண்டியா நின்னு சமாளிக்கணும். நாம வேடிக்கை பார்க்க வேண்டியவர்கள்.” தாத்தா கையை விரித்தார்.

“தாத்தா, இப்படியே போனா.. அவன் நெஞ்செல்லாம் எரிய ஆரம்பிச்சுடும். இப்போவே அவன் பக்கத்துல இருந்தா நெருப்பு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கு.” அவள் பொறுக்க முடியாமல் கண்ணீர் விட,

“அம்மா.. உச்சிக்கு நிலவு வந்து நம்ம மலை அடிவாரத்துல இருக்கற குளம் வெளிய வரப்ப தான் இந்த நெருப்பு அணையும்.அது வர பொறுமையா இரு. வீராவுக்கு ஒன்னும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்க. அவர் இப்போ உனக்கு புருஷன். உன் தாலிய காக்கற சக்தி வேணும்னு வேண்டிக்க..”கோடங்கி அவளுக்கு நல்ல வழியைக் காட்டினார்.

மனதை திடப் படுத்திக் கொண்டு சாம் பூஜை அறையின் உள்ளே சென்று தீவிரமாக வேண்டிக் கொண்டாள்.

அவளது கணவன், அதுவும் அவள் மீது அக்கறையும் ஆசையும் அதிகமாக வைத்திருக்கும் கணவன் எப்படியும் தன்னிடம் முழுமையாகத் திரும்பிவிட வேண்டும், தங்கள் வாழ்வு சிறக்க வேண்டுமென உள்ளமுருகி வேண்டிக் கொண்டாள்.

மூவரின் அந்த நிலையையும் கண்ட குடும்பத்தினர் ‘என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்துடனே பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிலவு உச்சியை அடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தது.

வீராவும் வருணும் ஒரே நேரத்தில் கண்விழித்தனர்.

வருண் கண்ணில் எப்போது போன்ற அமைதி ஆனால் வீராவின் கண்கள்  பயத்தை அளித்தது.

அவனது விழி இரண்டும் நீலக் கல்லை பிரதிபலித்தது. கருவிழிகள் இப்போது நீலமாக இருந்தது.

இருவரும் எழுந்து வெளிய வர, அவர்களின் பின்னால் சம்ரக்ஷாவும் வந்தாள்.

அனைவரும் விலகி வழி விட, வீரா நெஞ்சின் சூடு தாங்க முடியாமல் ஓடினான். அவனோடு வருணும் ஓட, மற்றவர்கள் பின்னாலேயே சென்றனர்.

கொல்லைப் புறத்திற்குச் சென்றனர். மலையின் அடிவாரத்திற்கு தலை தெறிக்க ஓடினார்கள்.

“சக்ரவானா….!! என் காண்டீபத்தைக் காட்டு..!” வீரா இப்போது அர்ஜுனனாக மாறிக் கத்தினான்.

“சக்ரவானா…! காண்டீபத்தை என்னிடம் கொடு” வீரா கத்திய அதே நேரம் வருண் தன் வாயால் இதைச் சொல்ல,

ஒரு பெரும் இடிச் சத்தம் காதைப் பிளந்தது. மலையின் அடிவாரம் பிளந்து அதில் நீலத் தாமரைக் குளம் தோன்றியது.

தாத்தா ஆர்வமாக குளத்தைப் பார்க்க, இப்போது ஒரே ஒரு நீலத் தாமரை மட்டுமே பூத்திருந்தது.

“யார் உயிர் பிழைக்கப் போவது இவங்க ரெண்டு பேர்ல” வாய்விட்டுப் புலம்ப சம்ரக்க்ஷா அதிர்ந்தாள்.

“கண்டிப்பா என் வீரா தான்.” என அவருக்கு பதில் கூறிவிட்டு வீராவை நோக்கிச் செல்ல,

அதற்குள் வீராவின் நெஞ்சு இப்போது நன்றாவே தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது இருந்தது.

வீரா குளத்தினுள் உடனே குதித்தான்.

அதன் பின்னால் வருண், அவனைத் தொடர்ந்து சாமும் உள்ளே குதித்துவிட,

“பாப்பா..”

“ரக்ஷா..”

என குடும்பமே கத்திக் கொண்டு குளத்தின் அருகில் சென்று நின்றது.

குளத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தான் வீரா. வீராவாகிய அர்ஜுனன்.

சற்று தூரம் சென்றதுமே அந்தப் பாதை மூன்றாகப் பிரிந்தது.

தந்திரமாக பின்னால் வருண் வருகிறானா எனப் பார்த்தவன்,

அவன் சற்று தள்ளி வந்து கொண்டிருப்பது தெரிந்ததும், நீரின் அடிமட்டத்தில் இருந்த மண்ணைக் காலால் கிளறிவிட்டான்.

அந்த இடமே அவன் கிளறிவிட்ட புழுதியால் மங்கலாகிப் போக, வருண் சற்று தடுமாறினான். அந்த நேரத்தை உபயோகப் படுத்திகொண்டு, அவனுக்கு மட்டுமே அன்று தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது தெரிந்த  வழியைக் கண்டுபிடித்து சரியாக வலது பக்கம் பிரிந்த பாதையில் சென்றான்.

கண்ணை மூடிக் கொண்டே நீந்தி வந்த வருண், நேரான பாதையில் சென்று கொண்டிருந்தான். வழி தவறி விட்டான்.

ஆனால் வீரா சரியான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். எந்த வித தடங்கலுமின்றி தன் பாதையில் சென்றவன், அவனது நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணையும் முன் காண்டீபத்தை கையில் தொடவேண்டும் என்பது தான் அவன் அறிந்து கொண்ட உண்மை.

அதனால் வேகமாக நீந்திச் சென்றான்.

பின்னால் வந்த சாம் , சரியாக வீரா சென்ற இடத்தை நோக்கிச் சென்றாள்.

வீரா தூரத்தில் சென்று கொண்டிருப்பதும் தெரிய, அவள் முடியாமல் நீந்திச் சென்றாள். மிகவும் களைத்து இருந்தாலும், வீராவிற்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்பதில் அவளது வேகம் அதிகரித்தது.

வீரா சென்ற பாதையில் ஒரு சிறு ஒளி தெரிய, அது போகப் போக நீண்டு ஒளிர, நீண்ட நெடிய காண்டீப வில் அவனது கண்களைப் பறித்தது.

அதைக் கண்டதும் அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் பரவசம் தோன்ற இன்னும் வேகமாக நீந்தினான். சரியாக அவன் கையை அதன் மேல் வைக்க , வருணும் வந்து அதன் மீது கை வைத்தான்.

இருவரும் கை வைத்ததும் அந்த இடத்தின் நீர் அனைத்தும் உடனே வடிந்தது.அந்த ஆழமான குளமும் இப்போது சமதளமாகி மலை அடிவாரம் தெரிந்தது.

மூவருமே இப்போது குளத்தில் குதிக்கும் முன்பு இருந்த இடத்தில் நின்றுகொண்டிருக்க, வீரா வருணின் கையில் காண்டீப வில் இருக்க,

“யப்பா…. தெய்வமே… காண்டீபா….!”

“குலசாமி…!” என தாத்தா கோடங்கி மோகன் கிருஷ்ணன் வேதா சுஜாதா அனைவரும் வில்லை விழுந்து வணங்கினர்.

அந்த இடமே பிரகாசமாக இருந்தது. வில்லின் சக்தி அபாரமாக இருந்திருக்கும் என அனைவரும் உணர்ந்தனர்.

“விடு… இது எனக்குத் தான் சொந்தம்.” என வீரா ஒரே மூச்சில் வில்லை வருணிடமிருந்து பிடுங்க,

முதலில் சற்று பிடியை விட்டாலும், மீண்டும் இருக்கப் பற்றிக் கொண்டான் வருண்.

இருவரும் கையை எடுக்காமல் பிடித்துக் கொண்டிருக்க, மலை மேலிருந்து ஒரு உருவம் இறங்கி வர,

அர்த்தனாரியாக இருந்த தமயந்தி தான் அது என்பதை வீரா உணர்ந்து கொண்டான்.

ஆனால் அவர் அப்படியே வருணின் பிரதியாக இருந்தது நம்பமுடியாமல் இருந்தது.

தாத்தா அவரைக் கண்டதும் ஓடி வர,

“அங்கேயே நில்லு.” என அவரை நிறுத்தினார் தமா.

அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் , வீரா வருண் முன் வந்து நின்றார்.

“அர்ஜுனா….!” அழைக்க,

இருவரும் நிமிருந்து பார்த்தனர்.

“உங்கள் இரண்டு பேரில் யார்  அர்ஜுனன் என்பதை நான் கண்டுபிடிக்கறேன்.” அவர்களின் எதிரில் வந்து நின்றார்.

“நான் அர்ஜுனனா இல்லையா என சோதிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு விலகிப் போ” வீரா சிங்கமென கர்ஜித்தான்.

இந்த பதிலை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

“பொறுமையா இரு, அவர் சொல்றதைக் கேளு. அப்பறம் நீயே காண்டீபத்தை எடுத்துட்டுப் போ” சாம் அருகில் வந்து கூற,

ஏதோ ஒன்று அவனை சரியென சம்மதிக்க வைத்தது.

“அதற்கு முன் எனக்கு இவன் யாரெனத் தெரிய வேண்டும். இவன் வெள்ளி மானாக மாற என்ன இருக்கிறது. அர்ஜுனனுக்கும் வெள்ளி மானுக்கும் சம்மந்தம் இல்லை. தேவர்கள் மட்டுமே வெள்ளி மானாக மாறுபவர்கள். அப்படி இருக்கும் போது இவனை நான் வருணன் என சந்தேகப் படுவது உண்மை தானே!?” தமாவைப் பார்த்துக் கேட்டான்.

“உன்னுடைய சந்தேகம் நியாயமானது தான். ஆனால் வேறு சில அர்த்தங்களும் இதில் உண்டு. அதுக்கு முதலில் என்னுள் நடந்த சில மாற்றத்தை நீ தெரிந்து கொள்ள வேண்டும்.

அமைதியாக இருந்தான்.

தமா தன் கதையைக் கூற ஆரம்பித்தார்.

தன் குடும்பத்தில் மிகுந்து அக்கறை கொண்ட அவர். தன் வாழ்க்கையையே தியாகம் செய்ய நினைத்து, திருமணம் என்ற ஒன்ற செய்து கொள்ளாமல் சிறு வயதிலேயே துறவு பூண்டார்.

கடவுளையே கட்டி இழுக்கும் அளவிற்கு அவரது பூஜைகளும் தவமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் ஒரு முனிவரை சந்தித்தார்.

அவரிடம் தான் இருக்கும் காலத்திலேயே தன் குடும்பத்தில் அர்ஜுனன் பிறக்க வேண்டும். அதற்கு தான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூற,

அந்த முனிவர் அவரை முதலில் நீ பெண்ணாக மாற வேண்டும். அதன்பின் நீ வேண்டும் அனைத்தும் சுலபமாகக் கிடைக்கும்.

கடவுளுக்கு நீ உன் ஆண்மையை பலி கொடுத்து பெண்மையை வாங்கிக் கொள். அப்போது உன் வம்சத்தில் அர்ஜுனன் பிறப்பது உன் வாழ்நாளிலேயே நீ காண முடியும்.

இது தான் அதிபட்ச சமர்ப்பணம் . நான் அதன் பின்பு உன்னை வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட,  அவரும்

தன் உருவ உணர்ச்சிகளை பெண்ணுக்கு உரியது போல முதலில் போலியாக நடந்து கொள்ள கொள்ள ஆரம்பித்தார்.

தன் மேல் துண்டை தாவணி போல அணிய ஆரம்பித்தார். கடவுளிடமே தன் ஆண்மைய அழித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

கண்களில் மை தீட்டி, காலில் சலங்கை கட்டிக் கொண்டார்.

பல நாட்கள் இப்படியே அவர் போலியாக தன்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அந்த நிகழ்வு உண்மையானது.

அவரது ஆண்மையே ஒரு நொடி பெண்ணாக மாறிய அவரது தேகத்தினால் விழித்தது.

ஒரே நிமிடம், ஒரு பெண்ணின் ஸ்பரிசம் தன் ஆண் உடம்பில் உணர்ந்தார்.  அப்போது அவரது விந்தணு வெளிவர,

அதுவும் பெண்ணாக மாறிக் கொண்டிருந்த அவருக்கே அந்த ஆண்மையின் ஸ்பரிசம் கிளர்ச்சியை உண்டாக்க,

அந்த இரண்டும் சேர்ந்த அந்த நிமிடம், ஒரு கரு முட்டை உண்டானது.

இது இயற்கைக்கே முரணானது.

அந்த கருமுட்டை அவர் நின்றிருந்த அந்த மரத்தடியில் படிந்து இலைகளால் மூடப் பட்டு ஒரு பாதுகாப்புக் கவசத்தை அணிந்தது.

இதை அறியாதா அவரோ அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வருண பகவான், வெள்ளி மானைப் போல உருவம் கொண்டு இந்திரனுடன் மீண்டும் இவ்வலுகத்திற்கு வந்தார்.

இருவரும் சேர்ந்து அந்த கருவை வளர்க்க வருணனின் சக்தியும் அந்தக் கருவிற்குள் சேர்ந்தது.

வருணிற்கு தன்னுடைய வளர்ப்பு பற்றி ஓரளவு தெரிந்தது. ஒரு காலம் வந்ததும் வருண பகவான் அவனுக்கு அனைத்தையும் கூறி மறைந்தார்.

அவ்வப்போது அவர்கள் மான்களாக சந்திப்பது நடந்தது.

அப்படித்தான் வருணும் மானாக மாறியது.

எதுவுமே அறியாத தமயந்தி, மீண்டும் அந்த முனிவரைச் தேடிச் செல்ல,

அவர் தமாவின் இந்த மாற்றத்தைக் கண்டு நெகிழ்ந்து, அவருடைய எண்ணம் நிச்சயம் நடக்கும் என வாழ்த்தினார்.

அதன் பிறகே தமா, தன் தம்பியிடம்  வந்து கூற, தன்னுடைய பேரனை அவர் அர்ஜுனன் என்று நினைத்தே வளர்த்தார்.

இப்போது தமா வேண்டிக் கொண்டது போல தன்னுடைய தம்பியின் வம்சத்தில் அர்ஜுனன் பிறந்தான்.

அவர் வேண்டாமலே கிடைத்த வரமாக அவருக்கே ஒரு மகன் பிறந்தான்.

இதை பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் தமா தெரிந்து கொண்டார்.

மீண்டும் அந்த முனிவரைத் தேடிச் சென்று, அவரின் குழப்பத்தை தீர்க்கச் சொல்ல,

“தமா, உன்னுடைய குடும்பம் சாதாரண மனிதர்கள் உள்ளக் குடும்பம். அங்கு அர்ஜுனன் பிறப்பான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் அப்படியே பிறந்தாலும், அவன் மீண்டும் சுயநலமாக காண்டீபத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளும் எண்ணம் கொண்டவனாக மட்டும் தான் இருப்பான்.

ஆனால் நீயோ உன்னையே தியாகம் செய்தவன். அப்படியிருக்க, உன் மூலம் உண்டான கரு, அதுவும் அர்ஜுனன் அம்சம் தான். ஆனால் தியாகம் மட்டுமே செய்யும் எண்ணம் உள்ள அர்ஜுனன். அதுவும் வருணனின் சக்தி சேர்ந்திருப்பதால்,

அவன் நிச்சயம் காண்டீபத்தை வருண பகவானிடம் திருப்பிக் கொடுத்துவிடம் எண்ணத்தோடு இருப்பான்.

அதனால் கவலை கொள்ளாதே, ஒரு அர்ஜுனன் உன் விருப்படியும், ஒருவன் கடவுளின் எண்ணம் நிறைவேறும் படியும் தோன்றியுள்ளனர்.

இரண்டுமே அர்ஜுனன் என்ற ஒருவனின் வெவ்வேறு எண்ணங்கள். அவ்வளவே! அர்ஜுனன் தனக்குள்ளேயே போராடி, வருணனிடம் அவரது கண்டீபத்தை ஒப்படைப்பான், என்று முடித்தார்.

இந்தக் கதைய தமா கூறியதும், அனைவருமே வியந்தனர்.

ஆனால் வீரா தன் எண்ணத்தில் விடாப்படியாக நின்றான்.

தன் பலம் அனைத்தும் ஒன்று திரட்டி காண்டீபத்தை வருண் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டான்.

 

 

 

 

 

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!