Kandeepanin Kanavu – 34

Kandeepanin Kanavu – 34

                          காண்டீபனின் கனவு 34

 

 வீராவின் செயலை சற்றும் எதிர்ப்பாராத வருண், கையிலிருந்து காண்டீபம் போனதை பதட்டத்துன் பார்க்க,

“நான் சொன்னது அப்போ சரி தானே… நீ ஒரு வகைல இந்தக் குடும்பத்து வாரிசா இருக்கலாம். ஆனா நீ நான் நினைத்தது மாதிரி வருண பகவானின் சக்தியும் சேர்ந்த ஒருவன் தான். அதனால் நிச்சயம் உன்னிடம் என் காண்டீபத்தை கொடுக்க மாட்டேன்.” சிரித்துக் கொண்டு கர்ஜித்தான்.

“வீரா…” சற்று எரிச்சலாக வருண் கத்த

“ம்ம்ம்ம்” வீரா முறைத்தான்.

“அர்ஜுனா.. இது கலியுகம். நீ இந்த காண்டீபத்தை வைத்து என்ன செய்ய போகிறாய். இது சேர வேண்டிய இடம் வருண பகவானின் கை. அதனால் உன்னுடைய ஆசையை மட்டுப் படுத்து. நல்லதை நினை. உன்னுடைய அனைத்து நல்ல குணங்களும் இந்த பேராசையினால் அழியப் போகிறது.” வருண் எச்சரித்தான்.

“என்னுடைய நல்ல குணங்களினால் நான் சாதித்தது என்ன. கடைசியில் என் குலத்தையே அழித்து நரகத்தை தேடிக் கொண்டது தான் மிச்சம். அதனால், இந்த முறை நான் விட்டுக் கொடுக்கப் போவது இல்லை. இது கலியுகம் தான். ஆனாலும் இந்த உலகில் பல விஷயங்களை இந்த கண்டீபத்தை வைத்து சாதிக்கலாம்.”

“முட்டாள் தனமாகப் பேசாதே. பாவங்களைத் தொலைத்து முக்த்தியைத் தேடி வாழ்கையை நடத்து. நேற்று தான் உனக்குத் திருமணம் ஆகி இருக்கு. அதனால் காண்டீபத்தை ஒப்படைத்து அவளுடன் நிம்மதியாக வாழப் பார்.”

“ஏன்.. என்ன செய்துவிடுவாய்? இந்த காண்டீபத்தை வைத்து உன்னை ஒரே நொடியில் என்னால் அழித்துவிட முடியும். பழகிய தோஷத்திர்க்காகவும், என்னுடைய அர்ஜுன ரத்தம் சிறிது இருப்பதினாலும் உன்னை விட்டுவிடுகிறேன். கண் முன்னே நிற்காமல் ஓடு.”

இவர்கள் இருவரின் சம்பாஷணையில் யாராலும் குறுக்கப் பேச முடியவில்லை. வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

தமா இதில் தான் என்ன செய்ய முடியும் என யோசிக்க, தன் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தார்.

வல்லையா பயத்தை மறைத்து நின்றார். ஏனெனில் அவருடைய இறுதி நாள் இது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அது எந்த வகையில் வந்து சேரும் என்று தான் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.

வீரா வருணின் வாதம் முற்றிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நிச்சயம் அது சண்டையாக மாறும் என யோசிக்கும் போதே வீரா, காண்டீபத்தின் நாணை மட்டும் இழுத்து விட, அது இடியென சப்தத்தை உண்டாக்கி அனைவரையும் அதிரச் செய்தது.

மெல்லிய இதயம் படைத்த சுஜாதாவும் வேதாவும் மயங்கி கீழே விழுந்தனர்.

அவர்களை அவர்களது கணவன்மார்கள் கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர்.

வெளியில் நடந்து கொண்டிருப்பது அவர்களுக்கும் சரியாகப் படவில்லை. மீண்டும் கடவுளை வேண்டிக்கொண்டு வர,

வீரா மீண்டும் காண்டீபத்தின் சக்தியை காட்ட முற்பட்டான்.

“வேண்டாம் காண்டீபா.. இது நல்லதல்ல. காண்டீபம் எப்படிப்பட்ட சக்தியை உடையது என்று உனக்குத் தான் நன்றாகத் தெரியும். அதனால் மீண்டும் நாணை ஏற்றாதே..” தாத்தா சொல்ல,

“நான் அதைச் செய்யாமல் இருக்க அவனை இங்கிருந்து போகச் சொல்லுங்கள்.” முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“அது நடக்காது. நான் உடைமைப் பட்டவன். நான் போகமாட்டேன். காண்டீபத்தை உரிய இடத்தில் சேர்க்கும் வரை உயிரே போனாலும் நகரமாட்டேன்.” வருண் வீராவை நோக்கி அடி எடுத்து வைக்க,

“ஹா ஹா. நீ கடைசியாகச் சொன்னது என்னவோ நடக்கத் தான் போகிறது. உயிரை விடத் தான் போகிறாய்.” வீராவும் எதிர்க்க,

காண்டீபத்தை தன் தோளில் குறுக்காக மாட்டிக் கொண்டான் .

அதைத் தொட முயன்ற வருணை காலால் எட்டி உதைக்க,

சற்று நகர்ந்து சென்றாலும் சுதாரித்துக் கொண்டான் வருண்.

“என் மேல எப்போ கை வெச்சியோ அப்பறம் நான் சும்மா இருந்தா சரிப்பட்டு வராது.” அவன் பங்கிற்கு அவனும் வீராவின் மேல் பாய,

இருவரும் சண்டைப் போடத் தொடங்கினர்.

சண்டை வலுக்க, வலுக்க, இருவரும் சளைக்காமல் இருந்தனர்.

அப்போது தான் தமா வல்லையாவை அழைக்க,

“ஐயா..?!” வந்து நின்றார் வல்லையா.

“இப்போ நமக்கு வேற வழியே இல்ல. இந்த காண்டீபம் இருக்கும் வரை வீரா மனசு மாற மாட்டான். அதனால் அவனை எப்படியாவது மயக்கம் அடையச் செய்ய வேண்டும்.” என்றார்.

பக்கத்தில் நின்ற சம்ரக்ஷா.. “ஐயோ..என்ன செய்யப் போறீங்க வீராவ.?” என பதைக்க,

“கவலைப் படாதமா.. வீராவுக்கு ஒன்னும் ஆகாது.” சமாதனம் சொல்லி, வல்லையாவின் காதில் விஷயத்தைக் கூறி அனுப்பினார்.

தமாவின் கட்டளையை ஏற்று வல்லையா செல்ல,

“வீரா.. வேண்டாம்.. அந்த காண்டீபத்த குடுத்துடு. நாம நிம்மதியா வாழலாம்.” அவனிடம் சென்று கெஞ்சினாள் சாம்.

அவளைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வருணை எதிர்த்துக் கொண்டிருந்தான்.

“வருண்.. ப்ளீஸ்.. நீங்களாவது கொஞ்சம் இத நிறுத்துங்க. சண்டை வேண்டாம்.” அவனிடமும் பேச,

“நீ இங்கிருந்து போ… அவனுக்கு சொன்னா புரியாது இப்போ..” என விரட்டினான் வருண்.

செய்வதறியாது தவித்தாள். வல்லையா இரண்டு எலும்மிச்சை மற்றும் மிளகாயைக் கொண்டு வந்து அதி மந்திரம் சொல்லி உருவேற்றிக் கொண்டிருந்தார்.

சாமுக்கு அது சரியாகப் படவில்லை. வீராவின் உயிரை பாதிக்குமோ என பயந்தாள். கூடவே பையில் ஒரு உயிரற்ற பூனை வேறு வெளியே எடுக்க,

“இல்ல..இல்ல… இதெல்லாம் வெச்சு நீங்க வீரா உயிர்க்கு எதுவும் பண்ணிடாதீங்க.” சாம் இங்கும் அங்கும் மாறி மாறி சென்று ஒவ்வொருவரிடமும் கேட்க,

யாரும் அவளை மதிக்க வில்லை.

சண்டை வலுத்துக் கொண்டே தான் போனது. ஒரே வேகத்தில் வருணைப் பிடித்துத் தள்ளிய வீரா,

அர்ஜுனனாக இருந்த போது கற்ற மந்திரத்தை மறக்காமல் கூறி கையில் ஒரு அம்பை வர வைத்தான்.

“காண்டீபா…வேண்டாம். இது சரியில்ல.” என குறுக்கே வந்தார் தாத்தா.

“நகருங்க…அவன் உயிரோட இருக்கக் கூடாது.” ஒரே சிந்தனையாகப் பேசினான்.

“வீர்… இது புராண காலம் இல்ல. அவனைக் கொன்னுட்டா நீ ஜெயிலுக்குப் போகணும். நியாபகம் வெச்சுக்கோ…” சாம் வேறு இடையிட்டாள்.

“அதை சாட்சியே இல்லாமல் என்னால் பண்ண முடியும். பாக்கறியா…” சிரித்தான்.

“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்க்கல வீரா. நீ என் வீரா வா..?” கண் கலங்கி அவள் நிற்க,

அவள் முகத்தைப் பார்க்காமல் “இல்ல நான் அர்ஜுனன்.” என்றான்.

“இல்ல…நீ என்னோட வீரா தான். உன்னோட நல்ல குணம் எல்லாம் இன்னும் உனக்குள்ள தான் இருக்கு. இந்த வில்ல குடுத்துடு வீரா.” அவன் கையைப் பிடித்து கெஞ்சினாள்.

“கைய எடு.” எரிச்சலை அடக்கியபடி கூறினான்.

“முடியாது. நீ குடுத்துடு..நமக்கு இது வேணாம். எனக்கு நீ வேணும் வீரா. உன்கூட ரசிச்சு ரசிச்சு வாழனும் டா. இத்தனை நாள் உன்கூட போட்டி போட்டே நான் பாதி வாழ்க்கைய ஒட்டிட்டேன். இனிமே உன்கூட நான் அனுபவிச்சு வாழனும். வா வீரா..” கண்களில் கண்ணீருடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“சொன்னா கேட்க மாட்ட..போ…” என வேகமாக அவளது கையை உதற, அது அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அவனது அந்த அறையில் மயங்கி கீழே விழுந்தாள்.

“வருண் நேரமில்ல. நிலவு போய்கிட்டே இருக்கு..” தமா வருணிடம் கூற,

அதற்குள் வல்லையா அந்த எழுமிச்சையையும் மிளகாயையும் உருவேற்றி எடுத்து வந்து ஒன்றை எலுமிச்சையை வீரா வின் மீது எரிய, அதற்குள் அவன் எடுத்த அந்த அம்பை வருணைப் பார்த்து எறிந்தான்.

எலுமிச்சையை வீராவின் மேல் எறியவும், அவன் அம்பை விடவும் சரியாக இருக்க, அது அவன் கை மீது பட்டு குறி தவறியது.

அவன் நெஞ்சுக்குக் குறிவைத்தது, வருணின் தோளைப் பதம் பார்த்தது.

அவன் தரையில் சரிய, எலுமிச்சை பட்டதும் வீரா தன் வலிமை இழந்தான்.

அவனால் சரியாக நிற்க முடியவில்லை.

“வல்லையா…அடுத்து ..” தமா குரல் கொடுக்க,

வீராவின் மேல் மிளகாயை வீசினார். அது அவன் உடலெங்கும் எரிய ஆரம்பித்தது.

இரண்டும் சேர்ந்து அவனை வீழ்த்த, பிடி தளர்ந்து கண்டீபத்தை தளர்த்தினான்.

“வருண் எழுந்திரு…” தமாவும் தாத்தாவும் அவனை எழுப்ப,

மெல்ல தன் தோளைப் பிடித்தபடி எழுந்தான்.

வீராவின் காண்டீபத்தை அவனிடமிருந்து பிடுங்க முயற்சிக்க, அவனோ விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான்.

இது தான் சமயமென்று, வருண் அவனை மறு கையால் தாக்க,

காண்டீப வில் இடம் மாறியது. வருணின் கைகளில் அது இருக்க,

வருண் இப்போது வேகமாக மலையின் மீது ஏற ஆரம்பித்தான். தமாவும் தாத்தாவும் அவனது பின்னால் செல்ல,

வீரா சட்டென சுதாரித்து எழுந்து ஓடினான்.

அந்தச் சமயம் வல்லையா கையில் இருந்த இன்னொரு எலுமிச்சைய அவன் மேல் வீச வர, அவரை ஒரு எட்டில் உதைத்தான்.  எலுமிச்சை எங்கோ உருண்டு ஓடியது. அவரும் கீழே விழுந்தார்.

தாத்தா மலை மீது காலை வைத்து ஏற ஆரம்பித்த சில நொடிகளிலேயே உயிரை விட்டார். 

அதைக் கண்ட வீராவின் மனது ஒரு நொடி பதறினாலும், கண்டீபத்தைக் கண்டு ஓடினான். தமாவும் வருணைப் பின் தொடர, வருண் சட்டென வெள்ளி மானாக மாறினான்.

வீராவின் கண்கள் கூசும்படி இன்னும் வெளிச்சம் அதிகமாக, அங்கே இந்திரனும் வருண பகவானும் வருணைப் போன்றே வெள்ளி மானாக வந்தனர்.

“கடவுளே!! எங்கள் குலத்தின் பொறுப்பை இன்று முடித்து விட்டோம். கண்டீபத்தை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு விமோசனம் தாருங்கள்.” என தமா அங்கேயே விழுந்து வணங்க,

வீராவின் கண்களுக்கு முன்னே, தமாவையும் வீராவையும் ஆசீர்வதித்து , காண்டீப வில்லைப் பெற்றுக் கொண்டு மூவருமே மறைந்தனர்.

வீரா தாங்க முடியாத வேதனையில் “ஓ!!!!” வெனக் கதறினான்.

தமா அவனைக் காண திரும்பி வந்தார்.

“வீரேந்திரா…” என்று அழைக்க, அர்ஜுனனாக அவன் கதறியது அவனை விட்டு அகன்று வீராவாக மாறியிருந்தான்.

அவனை விட்டு மாயை விலகியது போல ஆனது. நடந்தவை அனைத்தும் அவன் நினைவில் இருக்க, தன் செய்கையை எண்ணி வெட்கினான்.

“என்னை மன்னிச்சிடுங்க தாத்தா…” தமாவின் கால்களில் விழுந்தான்.

“இது உன்னோட தப்பில்ல. உன் மனசுல தூண்டப்பட்ட அர்ஜுனனின் ஆசை. அது இனி சுத்தாமாக மறைந்து விட்டது. இனி எல்லாம் நலமாக நடக்கும். நீ போய் ஆக வேண்டியதைப் பாரு.” என அவனை ஆசீர்வாதம் செய்தார்.

பின்பு அவர் வழியில் அவர் மீண்டும் செல்லத் துவங்கினார்.

தந்தையையும் மாமாவையும் அழைத்து தாத்தாவை எடுத்துச் சென்றான்.

பிறகு தன் கையால் அடி வாங்கி மயக்கமுற்ற தனது அன்பு மனைவியை தாங்கி அவளுக்குத் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

“வீரா…!” அவனை கலக்கமாகப் பார்த்தவள்,

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. காண்டீப வில் வருண பகவான் கிட்ட போய்டுச்சு. கவலைப் படாத..ஐ அம் சாரி டா” என கண் கலங்கி அவளை அணைத்துக் கொண்டான்.

தாத்தாவின் இறப்பு வீராவை வெகுவாக பாதித்தாலும், தன் கடமையை முடித்தது அவருக்கு நிறைவை அளித்திருக்கும் என மனதைத் தேற்றிக் கொண்டான்.

அனைத்து காரியங்களும் முடிந்து வல்லையா தன் ஊருக்குத் திரும்பினார். அவருக்குத் தெரியும் நிச்சயம் அவர் நீண்ட நாள் இருக்க முடியாதென்று. அதனால் ஊருக்குச் சென்று சாகும் வரை மௌன விரதம் இருந்து அடுத்த ஐந்து நாளின் உயிர் இழந்தார்.

வீராவும் அவர்களது குடும்பமும் தாத்தாவின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், அங்கிருந்து தங்களின் ஊர்க்குத் திரும்பிச் சென்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!