kandeepaninKanavu-2

kandeepaninKanavu-2

                   காண்டீபனின் கனவு – 2

 

காண்டீபன் தாத்தா உண்மையில் யாத்திரை எங்கும் செல்லவில்லை. மாறாக அவர் இந்த உலகத்தின் பார்வையிலிருந்து மறைந்திருந்த ஒரு அழகிய இடத்திற்குச் சென்றிருந்தார்.

அந்த இடம் அவரின் சொந்த ஊரில் அவருடைய வீட்டிற்குப் பின்னால் இருந்தது. அந்த  வீட்டில் ஒரே ஒரு வேலைக்காரன் மட்டுமே அவரின் உதவிக்கு இருந்தான்.

வீட்டின் பின் புறம் பெரிய காடு. அதைத் தாண்டிச் சென்றால் ஒரு சிறு மலை. இவர்கள் வீட்டின் பின் புறம் என்பதால் அங்கே ஆள் நடமாட்டம் இருக்காது. வேலைக்காரனுக்குக் கூட அங்கு செல்ல தடை விதித்திருந்தார். ஏனெனில் அது அவர்களின் குலதெய்வம் வாழும் இடம்.

பிள்ளைகளிடம் யாத்திரைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இங்கு வந்து சேர்ந்திருந்தார். கையோடு அவர் பாதுகாத்து வந்த நீலக்கல்லையும் எடுத்து வந்திருந்தார்.

அவருடைய தந்தை இதை அவரிடம் சர்வ ஜாக்கிரதையாக ஒப்படைத்திருந்தார்.

அவர்களின் குலதெய்வம் இப்போது சக்தியின்றி இருப்பதற்குக் காரணம் இவர்களின் முன்னோர். அதன் சக்தியை மீண்டும் அந்த தெய்வம் பெற இந்தக் கல் தான் மூல வேர்.

மூன்று தலைமுறைக்கு ஒருவர் தான் அந்த தெய்வத்தை விடுவிக்கும் ஆற்றல் பெற்றவராக இருப்பார்.        ஆனால் பல தலைமுறைகளாக அதை யாரும் செய்ய முடியவில்லை.

வீரேந்திரன் பிறந்த பிறகு, காண்டீபனுக்கு அந்த நம்பிக்கை வந்தது. காரணம் அவன் உச்சந்தலையில் இருந்த மச்சம், அவன் யார் என்பதை அவருக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது.

தன்னால் குல தெய்வத்தை விடுவிக்க முடியவில்லையே என அவர் பலகாலம் ஏங்கி இருந்தார். இருப்பினும் அது தன்னுடைய பேரனால் நடக்கப் போவதை எண்ணி தினமும் அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லி வருகிறார்.

மோகனிடம் யாரிடமும் உண்மையைக் கூறுவதில்லை என்று சத்தியம் செய்தாலும், வீரேந்திரனுக்கு எப்படியும் அவர் சொல்லியே தீர வேண்டும். இங்கிருந்தே இவர் செய்யும் சில செயல்களின் மூலம் அவனுக்குப் பலவற்றை உணரவைத்து ,களத்தில் இறங்கச் செய்யத் தான் இப்போது இங்கே இருக்கிறார்.

“முருகா! இன்னிக்கு ஏகாதசி. நான் எதுவும் சாப்பிட மாட்டேன். அதுனால நீ வெளிய போய் சாப்பிட்டு  ராத்திரி வந்து திண்ணையில படுத்துக்க. காலைல உள்ள வா” என்றார்.

“சரிங்கையா..” தலையை சொரிந்து கொண்டு அங்கேயே நின்றான்.

“என்ன டா காசு வேணுமா. இந்தா..” இருநூறு ரூபாய் கொடுக்க,

“அதில்லைங்க…” தயங்கி நின்றான் முருகன்.

“வேற என்ன வேணும்?” அவனை புரியாமல் பார்த்தார்.

“ஐயா, இன்னைக்கு பின் பக்கம் போகனும்களா?” தைரியத்தை வர வைத்துக் கொண்டு எஜமானிடம் கேட்டே விட்டான்.

முருகன் சிறு வயது முதலே இங்கேயே இருப்பதால் அவனுக்கு ஓரளவு அவர்களின் குடும்பம் பற்றித் தெரியும். அவனும் மோகனை விட மூன்று வயது தான் பெரியவன். வீட்டின் பின்னால் அவர்கள் குல தெய்வம் உண்டு, அதற்கு சக்தி இல்லை என்பது மட்டுமே அவன் அறிந்த விஷயங்கள்.எங்கு இருக்கிறது..அதன் பின்புலம் என்ன என்பதை அறியான்.

ஊரில் யாரும் அறியாத விஷயம் இது. அதனால் தான் அந்த வீட்டிற்கு அவன் காவல் இருந்தான்.

ஏகாதசி அன்று பின்னால் நடப்பவை என்னவென்று தெரியாது.ஆனால் அங்கிருந்து வரும் சத்தங்கள் அவனை உலுக்கிவிடும்.

அன்று மட்டும் அவ்வீட்டில் எப்போதும் அவன் தங்குவதில்லை. காலையிலேயே வேலையை முடித்து விட்டு ஓடிவிடுவான்.

இப்போது காண்டீபன் வந்திருப்பதால் அங்கே இருந்தான். இரண்டு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஏகாதசி அன்று அவர் மலைக்குச் செல்வது வழக்கம்.

மறுநாள் தீயில் இருப்பது போல அவரது உடல் கொதிக்கும். தவித்துப் போவார். இப்போது அவர் இன்னும் தளர்வுடன் காணப்படவே முருகன் சற்று வருத்தப்பட்டு கேட்டுவிட்டான்.

காண்டீபன் மெல்ல சிரித்தார்.

“இது எங்களுக்குக் கிடச்ச சாபம். இதுல என் பையன அமர்த்த என்னால முடியல. அதுனால நான் இருக்கற வரைக்கும் நானே அன்பவிக்கறேன். இதெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். நீ கெளம்பு” யோகி போல அவர் சொன்னதைக் கேட்டு முருகன் அங்கிருந்து அகன்றான்.

பகல் முழுதும் அந்த நீலக்கல்லை வைத்து பூஜை செய்தார். பிறகு சூரியன் மறையும் வரை அதற்கு முன் அமர்ந்து மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார்.

நிலவு தன் கதிர்களை பூமியில் செலுத்த ஆரம்பித்த சமயம், தாத்தாவின் உடல் மெல்ல ஆடியது.

“வா…வா…!!” அவரை ஒரு குரல் துரத்த, எழுந்து வந்தார்.

அந்தக் கல்லை பந்தாக சுருட்டப் பட்ட ஒரு பட்டு துணியில் எடுத்து வைத்தார். அப்போதே அந்தக் கல் சுட ஆரம்பித்து விட்டது.

 மலையடிவாரத்திற்குச் செல்லும் முன் நிச்சயம் அந்தத் துணி எரிந்தே விடும்.

சீக்கிரம் வா” முதுகின் பின்னால் இருந்து குரல் வந்தது.

கையில் கல்லை எடுத்துக் கொண்டு ஓடினார். நிலவொளி அதன் மீது பட பட கல்லின் ஒளி பிரகாசமாகியது. அத்தோடு அதன் உஷ்ணமும் ஏறிக்கொண்டே போனது. தோட்டத்தைக் கடந்து மலையடிவாரத்திற்கு மூச்சிரைக்க வந்து கொண்டிருந்தார். கையில் இருந்த துணி கல்லின் வெப்பம் தாளாமல் எரியத் தொடங்கியது.

ஓடினார். வேகமாக ஓடினார். கல்லின் ஒளி மலையின் மீது பட்டது. உடனே மலையின் அடிவாரம் சற்று நகர்வது போலத் தோன்றியது.

பட்டுத்துணி இப்போது முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்தது. கல்லின் வெப்பம் கையில் ஏறியது.

“சக்ரவானா…!!” தாத்தா கத்தினார் .

மலையடிவாரத்தில் நீர் தடாகம் சட்டெனத் தோன்றியது. அது நீலத் தாமரை மலர்கள் நிறைந்த நீர்த் தடாகம்!

அது கண்ணில் பட்டதும் உடனே கையில் இருந்த அந்த நீலக்கல்லை அதனுள் விட்டெறிந்தார்.

அது “க்லக்” என்ற சபத்தத்துடன் உள்ளே சென்றது. உள்ளே சென்றாலும் டார்ச் அடித்தது போல அந்த தடாகத்தை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்வொளியில் தாமரை மலர்கள் ஜொலித்தது.

கல் சிறிது சிறிதாக உள்ளே சென்றது. மீண்டும் “க்லக்” “க்லக்” என்ற ஒலியுடன் அது நீரில் இருக்க, தடாகத்தின் நீர் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது.

அந்த நீல கல் தடாகத்தின் நீரைக் குடிக்கத் துவங்கி இருந்தது. அதனுடைய உஷ்ணம் அத்தனை நீரையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

நீர் அனைத்தும் குறைந்து தாமரை மலர்கள் மட்டும் எஞ்சியது.

பின் மலர்களையும் ஒவ்வொன்றாக விழுங்கத் தொடங்கியது.

கடைசி மலர் மட்டும் அப்படியே நின்றது!

சென்ற முறை இந்தப் பூஜை செய்த போது, இரண்டு மலர்கள் நின்றது என்பதை தாத்தா அறிவார். இம்முறை ஒன்று தான்!

அடுத்த ஏகாதசி பூஜைக்குத் தான் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.  அனைத்தையும் வீரேந்திரன் கையில் ஒப்படைக்க அவர் உள்ளம் துடித்தது.

இன்னும் இரண்டே வருடம்! அதற்குள் குல தெய்வத்தை ஒரு முறையாவது கண்டு விட வேண்டும் என அவர் மனம் துடித்தது.

நள்ளிரவு கடந்து விட்ட சமயம். தடாகம் மறைய ஆரம்பித்தது. தன் சூட்டை தடாக நீரில் தனித்துக் கொண்ட கல்லை கையில் எடுத்துக் கொண்டார். மீதமிருந்த ஒரு நீலத் தாமரை மலரையும் எடுத்துக் கொண்டு மலை மீது நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

அவர் மனம் இப்போது துடித்துக் கொண்டிருந்தது. கண்கள் பனிக்கக் யாரையோ எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்.

*****

“வாவ்..வீர்.! யு ஆர் எ சாம்பியன். யு ஷுட் கோ டு ஒலிப்ம்பிக்ஸ். யு வில் பிரேக் தி ரெகார்ட்” அவனை வந்து கட்டிக் கொண்டு சொன்னாள் ஒரு மாடர்ன் யுவதி.

இரண்டு மணி நேரம் தொடர்ந்து அனைத்து கேம்மிலும் வீரேந்திரனே ஜெயித்துக் கொண்டிருந்தான்.

“ஹே! தேங்க்ஸ் லிஸி சுவீட்ஹார்ட்!” மெல்ல அவளை அணைத்து விடுவித்தான் வீர்.

வலிமையான புஜங்கள் தெரியும்படியான டைட்டான வெள்ளை  டிஷர்ட் அனிந்து அதற்கு பொருத்தமான காக்கி பேன்ட் , கைகளில் க்ளவுஸ் கண்ணில் சிறு லென்ஸ் வைத்த கிளாஸ்(ஆர்ச்சரிக்கு அணிவது)   என படு ஸ்மார்ட்டாக நின்றிருந்தான்.

வீர் இங்கு வந்ததிலிருந்து லிஸிக்கு அவன் மீது ஒரு கண். வாட்ட சாட்டமாக, ஒரு தேஜசுடன் இருக்கும் அவன் மீது யாருக்குத் தான் கண் இல்லை.

அவன் சிரிப்பிற்கே பள்ளி, கல்லூரி , ஆபீஸ் என பெண்கள் கூட்டம் அவன் பின்னால் அலையும்.

அவனும் அனைவரிடமும் சகஜமாவே பழகுவான். ஊர் சுற்றுவது, விளையாட்டு  என இருந்தாலும் அவனுடைய லிமிட்டை தாண்டவே மாட்டான்.

எந்தப் பெண்ணாக இருந்தாலும், அவன் நினைத்தால் ஒரே நாளில் அவன் மடியில் விழத் தயாராக இருந்ததால் அவனுக்கு வேறு எண்ணமே அவர்கள் மேல் தோன்றுவதில்லை.

இப்படி கண்டதும் சொக்கி விழும் பெண்கள் மீது அவனுக்கு நாட்டமில்லை. பெண்கள் எப்போதும் ஒரு திமிருடன் இருக்கவேண்டும் என்று நினைப்பான்.

“வீர்..ஒய் டோன்ட் வி ஹேங்அவுட் டுடே?” லிஸி மெல்ல அவனைத் தனியே அழைக்க,

“சாரி பேப்..ஹேவ் அப்பாயின்மென்ட்ஸ்..சி யூ நெக்ஸ்ட் வீக்” என அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற பிறகும் ஒரு மணி நேரம் நன்றாகத் தூங்கிவிட்டு மெல்ல எழுந்திருந்தாள் சம்ரக்க்ஷா.

கடிகாரத்தில் நேரம் பார்த்தவள், “ஐயையோ அந்த பக்கி புள்ள வந்துடுமே!அப்பறம்  பசில என்னை தான் கொன்னு  திண்பான்” என பதறிப் போய் அவசரமாக ரைஸ் குக்கரில் சாதம் வைத்துவிட்டு, பின் சிம்பிளாக ரசம் வைத்துக் கொண்டிருந்தாள்.

ரசமும் சாம்பாரும் மட்டும் எளிமையாகச் செய்ய இருவருக்குமே கற்றுக் கொடுத்து அனுப்பி இருந்தனர் இருவரின் தாயும்.

“சாம். பசிக்குது டி. ரெடியா” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் வீர்.

நல்லவேளையாக அப்போது தான் எல்லாம் முடிந்திருந்தது.

“ம்ம்ம்… ரெடி தான்.” அவன் அருகில் வந்தவள், அவனிடம் வேறு வாசனை வருவதை உணர்ந்தாள்.

லிஸி அவனை அணைத்ததில் அவளின் குபீர் சென்ட் வாசம் அவன் மீதும் துளி ஒட்டிக் கொண்டு வந்திருந்தது.

இதையெல்லாம் சரியாக மோப்பம் பிடித்து விடுவாள் சம்ரக்க்ஷா.

“என்ன டா.?லிஸி கூட…ம்ம்ம் ம்ம்ம்ம்” அவனது சட்டையைப் பிடித்து கண்ணடிக்க,

“ச்சி..பொண்ணா டி நீ… ஒரு பையன் கிட்ட எப்படி இந்த மாதிரி கேக்கற?” அவளை தள்ளி விட்டு கை கழுவிக் கொண்டு தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டான்.

“டேய் மச்சான்.. நீ யார வேணா ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. உன் மேல அவ வாசம் வீசுது கண்ணா.. இதுக்குத் தான் காலைலேயே ஓட்றியா?” அவனைத் துளைக்கும் பார்வை பார்த்தாள்.

“ஐய..பெரிய சிபிஐ..கண்டு புடிச்சுட்டா…போடி லூசு. நான் மேட்ச் வின் பண்ணதுக்கு அவ ஹக் பண்ணா. அதுனால அவ சென்ட் வாசம் வருது. அதுமில்லாம அது ஓவர் ஸ்மெல். என்னோடது மைல்ட் ஸ்மெல். சோ அது ஓவர்டேக் பண்ணுது. உன் கற்பனைய ஓட விடாத.” ஹோம்தியேட்டரில் பாட்டை ஒலிக்கவைத்து விட்டு  உண்ண ஆரம்பித்தான்.

“ஆஹா… அவ உன்கிட்ட அப்பட்டம்மா வழியறத நானே பாத்திருக்கேன். என்கிட்டே கதை சொல்லாத” தானும் தட்டை எடுத்துக் கொண்டு வந்து உண்டாள்.

“எனக்கு வழிஞ்சாலே புடிக்காது. ஒருத்தன் அழகா இருந்துட்டா போதுமே.. அப்டியே மேல வந்து விழ வேண்டியது. ஏன் டி இப்படி இருக்கீங்க..?” அவளையும் சேர்த்துக் கூற,

“ஏய்…யார சொல்ற.. நான் எல்லாம் திரும்பி கூட பாக்க மாட்டேன். அதும் உன்னை நீயே அழகன்னு சொல்லிக்கற பாரு..இது கேவலமோ கேவலம் டா..” சீறினாள்.

“ஹே ஹே…நீயா ?திரும்பி கூட பாக்க மாட்டியா?!  உங்க காலேஜ்ல ஜொள்ளு விடறதுல நீ தான் பர்ஸ்ட்ன்னு உன் ப்ரென்ட் அன்னிக்கு சொன்னா.. யாரோ ஒருத்தன் பேரு சொன்னாளே..ம்ம்  மறந்துட்டேன். அவன அடிக்கடி மீட் பண்றியாமே. நீயெல்லாம் என்னை சொல்ற. இதுல சீன் வேற” போட்டா போட்டி தொடர்ந்தாலும் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான்.

“யாரு..அவளா.?உன் கிட்ட பேசணும்னு அவ எதையாவது சொல்லுவா.. அதெல்லாம் நம்பிட்டு இருப்பியா..? எனக்கு பசங்களே புடிக்காது. எந்த பொண்ணப் பாத்தாலும் வழிஞ்சுக்கிட்டு”

“எப்படி டி சளைக்காம அப்படியே பேச்ச மாத்தற..பிராடு.”

“நீ தான் டா பிராடு. நல்லா ஜலபுலஜன்க்ஸ் பண்ணிட்டு, இங்க வந்து அப்பாவி மாதிரி பேசற” சாப்பாடு ஒருபுறம், வாய் சவடால் ஒரு புறம் என கச்சேரி களைகட்டியது.

“ஜலபுலஜன்க்சா…அடிபாவி.. ஒரு நல்லவன் சாபம் உன்ன சும்மா விடாது” உண்டு முடித்து அவன் அறைக்குச் சென்றான்.

“நீ தான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே…எல்லா பொண்ணுங்களையும்.. இதுவரை எத்தன பொண்ணுங்க டா..சொல்லு”

அவளும் சீக்கிரம் உண்டு பின்னாலேயே வர,

“டேய் எங்க போற..சண்ட போடு டா” என்றாள்.

அவனோ, உண்ட களைப்பில் படுத்துவிட்டான்.

“சாம் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன். காலைல தூங்கவே முடியறதில்ல. அந்த கனவு மறுபடியும் வருது.  அதுனாலயே சரியான தூக்கம் இல்ல. ப்ளீஸ் டி” எனவும்,

உடனே பரிதாபம் வந்தது. அந்தக் கனவால் அவன் படும் கஷ்டங்கள் அவளுக்கு மட்டுமே தெரியும்.

“ஹே! நாம எதாவது டாக்டர பாக்கலாமா? இல்ல உங்க லேப்ல இருக்கற சைகாட்ரிஸ்ட் கிட்ட காட்டலாமா? அடிக்கடி அந்த கனவு வருதுன்னா தேர் மஸ்ட் பீ சம்திங் இன் யுவர் டீப் மைன்ட்”.

வீட்டை விட்டு வந்ததலிருந்து இருவரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும், அதில் விளையாட்டுத் தனம் மட்டுமே இருக்கும். ஒருவருக்கொருவர் உதவியும் செய்து விட்டுக் கொடுக்கவும் ஆரம்பித்திருந்தனர்.

“அதெல்லாம் அப்பறம் யோசிக்கலாம். ஐ வான்ட் டு ஸ்லீப்” என தலையணைக்குள் புகுந்து கொண்டான்.

“எரும..போய்த் தொல..ஈவ்னிங் ஒழுங்கா என்கூட ஷாபிங் வரணும் ஏன்னா நான் உனக்காக இன்னிக்கு சமைச்சேன்” டீல் பேசிவிட்டுச் சென்றாள்.

கனவிற்குள் மீண்டும் புகுந்தான் வீர் என்கிற காண்டீபன்.

அங்கே தாத்தா யாருக்காக காத்திருந்தாரோ அவரும் மலை உச்சியில் இருந்து இறங்கி வந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!