Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-21

Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-21

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்….

 

 

அத்தியாயம் 21

 

ஆரா, தினமும் தஞ்சையில் இருந்து  ஆராஸ்க்கு காரிலேயே போனாள்… திருச்சி ஆசீர்வாத்திற்கு பின் பக்கத்தில் அமைக்கப் பட்டிருந்த ஆராஸ், இது வரை வெறும் ஆன்லைனில் மட்டுமே இவள் டிசைன் செய்து தர , அதை அங்கு உள்ள ஸ்டிச்சிங் யூனிட் தைத்து டிஸ்பிளே டம்மிக்கு போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்…

 

 இப்போது தேவையான கஸ்டமர்களுக்கு அங்கேயே அளவெடுத்து, விரும்பும் டிசைனில் உடையை தயாரித்து தரும் விதத்தில், அவளுக்கு என்றே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டிருந்தது… அதுவும் அவளது அறையுடன் ஒரு படுக்கை கொண்ட தடுப்பும் உள்ளவாறு …. எல்லாம் அவன் செயல்…. ஆசீர்வாத்தையும் அவளே பார்த்துக் கொண்டாள்.

 

நிர்வாகத்தில் ஆரா தெளிவாகவே செயல்பட்டாள். அந்த வகையில் கிருஷிற்கும் இளாவிற்கும் பெருத்த மகிழ்ச்சி.

 

பொண்ணு வெளியில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க கூடாதுன்னு வீட்டுல இருந்து புட் பேஸ்கட்டூம் கூடவே போனது…

 

அதை பார்த்துட்டு சும்மா இருந்தா ,அவன் கிருஷ் இல்லையே…

 

“ஏய் புட் பாண்டா…  தஞ்சாவூரில இருந்து திருச்சிக்கு போக ஒரு மணி நேரம் ,வர ஒரு மணி நேரம், பத்து டூ அஞ்சு வேலை செய்யறது, சாரி கடையில சும்மா இருக்கிறது சுமார் ஏழு மணி நேரம்… இப்படி மொத்தமாவே ஒன்பது மணி நேரத்திற்கு 

ஒரு நாளைக்கு ஒன்பது டிஃபன் பாக்ஸை மூட்டைக்கட்டி பெரிய கூடையில போட்டு எடுத்துட்டு போற, இங்கயிருந்து எடுத்துட்டு போயி , அங்க உக்கார்ந்து தின்னுட்டு அங்க இருந்து இங்க ரிட்டர்ன் ஆவுறதுக்கு பேசாம இங்கேயே உக்கார்ந்து திங்கலாமே…?”

 

அவ்வளவு தான் பேஸ்கட்டை எடுத்து வீட்டிலேயே வச்சிட்டு போயிட்டா…

 

வேதா பார்த்துவிட்டு ஓடி வருவதற்குள் , அவள் காரை கிளப்பி கொண்டு சென்று விட,

 

“எருமை…எருமை …. எதை எதையோ பேசி அவளை திங்க விடாம பண்ணிட்ட போதுமா உனக்கு….? வயசு புள்ளை,  அவ சாப்பிடறதை கிண்டல் பண்ணாதன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன் உன்கிட்ட…” வேதா கிருஷ்ஷை திட்ட,

 

 

ரோஜா போனில் ஆராவிற்கு அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அது வீட்டிலேயே ரிங் ஆனது.

 

“மீ… லட்டு ஃபோனை வீட்டில விட்டுட்டு போயிட்டா…”

 

“இந்தா அவ விட்டுட்டு போன சாப்பாட்டுக்  கூடை. இது மேலதான கண்ணு உனக்கு. எல்லாத்தையும் கொண்டு போயி மொத்தமா நீயே கொட்டிக்க…”

 

அவன் கையில் வேதா கோபத்துடன் பேஸ்கட்டை திணிக்க,

 

“நீ புளிச்சு போன பழைய சோத்தை, புது டிஃபன் பாக்ஸில போட்டு பேக் பண்ணி கொடுத்தா, அவ எப்படி எடுத்துட்டு போவா… மானஸ்தி , தூக்கி கடாசிட்டு போயிட்டா… இனிமேலாவது நல்லா , வக்கனையா வாய்ல வைக்கிற மாதிரி ஒரு சாப்பாட்டை செஞ்சு கொடு தாய்க்கிழவி….”

 

“எருமை…உன்னை திட்டியும் பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு… கை வலிதான் மிச்சம்..”

 

“அட பொங்காத இரும்மா… இங்க ஆசிர்வாத் மேனேஜர் சிவகுரு கிட்ட சொல்லி லஞ்ச் வாங்கித் தந்திட சொல்லிடுறேன்… அவசரப் பட்டு ஒரு உத்தம புத்திரனை ஒன்னும் சொல்லிடாத ராஜமாதா….”

 

ஒரு வழியா கூல் ஆன வேதா, 

“அப்படியே, காலையில பதினொரு மணிக்கு கட்லெட் கூட ஒரு கப் சாக்லேட் காம்ப்ளான்னும், ஈவ்னிங்  நாலு மணிக்கு சாண்ட்விச் கூட ஒரு ஸ்வீட் கார்ன் இல்லைன்னா மஷ்ரூம் சூப்பும் வாங்கிக்கொடுக்க சொல்லுடா…” வேதா பெரிய லிஸ்ட் போட்டு ஸ்நாக்ஸ் மெனு சொல்ல,

 

“எதுக்கு…. பேசாம…, ஏதாவது நல்ல ஓட்டல்லா பார்த்து உன் பொண்ணை தங்க வைக்க சொல்லிடுரேன், நிமிஷத்துக்கு ஒரு அயிட்டத்த எடுத்துட்டு போயி அவ வாயில போட்டுக்கிட்டே இருப்பாங்க….ஏதாவது சொல்லிடப் போறேன் ஒழுங்கா நீயா தப்பிச்சு ஓடிப் போயிரு…”

 

வேதா எஸ்கேப்…

ஆனால் அந்த சாப்பாட்டை வைத்துவிட்டு வந்தது, ஆராவிர்க்கு திருப்புமுனை சம்பவம் ஒன்று நிகழ காரணமாய் இருந்தது… அன்னைக்கு ஆராஸ்ஸின் இரண்டு ஸ்டாஃபை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ரெஸ்டாரன்ட்க்கு ஆரா லஞ்ச்சிர்க்கு போக,

 

அங்கே அம்பது வயதை கடந்த ஒரு பெண்மணி, கண்ணீரோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததயோ…, அவள் போகும் போது பின்னாலேயே சென்று, ஆராசில் அவள் நுழைந்ததை தெரிந்துகொண்டு சென்றதையோ ஆரா அறியவில்லை…

 

அடுத்த நாள் அதே பெண்மணி, இன்னொரு வயோதிக பெண்மணியோடு வந்திருந்தார்…

ஆராஸில் போடப்பட்டிருந்த கஸ்டமர்கள் வெய்ட் பண்ணும் குஷனில் வயதானவரை அமர வைத்து விட்டு,

“ஆனா அந்த ஃபோன் கால் வந்தப்ப கூட, நான் இதைப்பத்தி எல்லாம் யோசிக்கல அம்மா… அப்பாகிட்ட மறுபடி இந்த விஷயம் போயி,  அவரு வேற எதுவும் பிரச்சினை பண்ணிட கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா இவளைப் பார்த்ததுக்கு அப்புறம் ,என்ன ஆனாலும் பரவாயில்லை, இந்த முறை விட்டுக் கொடுத்திடக்கூடாது…அப்பாவை எப்படியும் சமாளிச்சிடலாம்னு ஒரு தெம்பே வந்துடுச்சு… நீ ஒரு தடவை அவ முகத்தை பாரும்மா… அப்பத்தான் உனக்கே புரியும்…”

 

சொல்லிக்கொண்டே அவரின் அம்மாவைப் பார்க்க, அவர் தள்ளாடியபடி , அளவெடுத்து கொண்டிருந்த பெண்ணிடம் ஏதோ அறிவுறுத்தி கொண்டிருந்த ஆராவிடம் போய்விட்டார்…

 

ஓரிரு கணங்கள் உற்று நோக்கியவர்…. 

“பொன்னு …. வந்துட்டியா…. இந்த பாவியை  மன்னிப்பியா….?” கேட்டபடி ஆராவின் இடுப்பை தழுவியபடி கதறி கீழே விழ,

ஒரு கணம் பதட்டத்திற்கு பிறகு ,அந்த வயதான பெண்மணியை தாங்கிக் கொண்டாள் ஆரா….

 

ஆரா அழுதுக் கொண்டிருந்தவரை தேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்…

கூட வந்திருந்தவரிடம் ,

“மேடம் இவங்களைக் கொஞ்சம் பிடிங்களேன்… யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்காங்க…”

 

“நான் மேடம் இல்லைடா ,உன் பெரியம்மா… உங்கம்மா பொற்கொடியோட அக்கா… உனக்கு விருப்பமிருந்தா அம்மான்னும் கூப்பிடலாம். இல்லைன்னா என் பேரைச் சொல்லி ஜெயகொடின்னும் கூப்பிடலாம்… தப்பா எடுத்துக்க மாட்டேன்… இவங்க உன் அம்மாச்சி… பேரு தனஞ்ஜெயம்…”

 

இப்போது ஆராவிற்கு  பிடித்துக் கொள்ள  பிடிமானம் தேவைப்பட்டது…

 

 

“இங்க உனக்குன்னு தாத்தா , அம்மாச்சி ,மாமா, அத்தை ரெண்டு பெரியம்மா ,பெரியப்பா, எங்க பசங்கன்னு பெரிய குடும்பமே இருக்கு… இத்தனை நாளாய் உன்னை எங்களோட வச்சிக்குற பாக்கியம் இல்லாம போயிட்டுது… ஆனா நீயே இப்ப எங்களைத் தேடி வந்திட்ட….  எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்குலாம்டா பாப்பா…” என்று அவர் முடிக்க….

 

“மன்னிச்சுடுங்க…. எனக்கு குடும்பலாம் இல்லை… நான் ஒரு அனாதை… எனக்கு இளாவைத் தவிர வேற யாரையும் தெரியாது… இளா தவிர யாரும் கிடையாது. தயவு செஞ்சு கிளம்புங்க… அதோட இந்த ஊருக்கு நான்  யாரையும் தேடியும் வரல.” ஆரா கட் அண்ட் ரைட்டாக பேசி முடிக்க,

 

“நாங்க இருக்கும்போது  நீ எப்படிடா அனாதை ஆவ. அப்படிலாம் சொல்லாத பாப்பா….”  

 

“அப்படித்தாங்க சொல்லுவேன்….. ஆயிரம் தடவை கத்தி சொல்லுவேன் நான் அனாதைதான்… எங்கம்மா செத்தப்ப , எங்க போனீங்க நீங்கள்லாம்…,  அஞ்சு வயசுப் புள்ளையா நான் சாகக் கிடந்தப்ப எங்க போனீங்க  நீங்கள்லாம்… யாராவது வந்து சாப்பாடு ஊட்டிவிடுவாங்களா, தட்டி தூங்கவைப்பாங்களான்னு நான் தேடினப்போ எங்க போனீங்க , ஏதாவது ஜெயிச்சு பிரைஸ் வாங்கிட்டு வந்தா, அதை சொல்றதுக்கு கூட ஆள் இல்லாம நான்   ஏங்கினப்போ எங்க போனீங்க எல்லாரும்…. உங்க குடும்பத்தில  நீங்க பத்தாயிரம் பேர் கூட இருந்துட்டு போங்க எனக்கு என்ன வந்தது…? நான் அனாதைத்தான்… எங்க மாதாஜீ குடும்பம் மட்டும் இல்லைன்னா நானும் செத்து எங்கம்மா கிட்டயே போயிருந்திருப்பேன்… அவங்க மட்டும் தான் எங்களோட ஒரே சொந்தம்… தயவு செஞ்சு என்னைத் தேடி வராதீங்க…கிளம்புங்க…..”

 

“அய்யோ…. எதை கேட்க வேண்டியதா இருக்கும்னு பயந்து இத்தனை வருஷம் வாழ்ந்துட்டு இருந்தனோ…, அதை கேட்க வைக்கத்தான் என்னை உசுரோட இத்தனை நாள் உசிரோட வச்சிருந்தியா கடவுளே….?” 

தலையில் அடித்துக் கொண்டு முதியவர் அழ , கூட்டம் கூட ஆரம்பித்தது…

 

ஒன்றும் புரியாத ஆரா, லேண்ட் லைனில் இருந்து, ஃபோன் செய்தவள்….,

“இளா…. எனக்கு பயமா இருக்குடா உடனே வா… இங்க ரெண்டு பேர் அம்மா ஃபேமிலின்னு சொல்லிட்டு வந்து என்னென்னமோ சொல்றாங்க… உடனே வா…” அழுது கொண்டே இளாவை துணைக்கு அழைத்தாள்…

 

அவனளித்த பதிலில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய், 

 

“சீக்கிரம் வர சொல்லு இளா… நான் அதுவர வெளியே போகவே மாட்டேன்.” அவள் அறையிலேயே அமர்ந்து கொண்டாள்.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆசிர்வாத் மேனேஜர் சிவகுரு வந்து விட, அவர்களை அவர் வெளியேற்றப் பார்க்க,

அந்த பெண்மணி அங்கிருந்து அகல மறுத்து அழுதபடியே இருந்தார்…

 

பெரிய இடத்து பெண்களின் தோற்றப் பொலிவோடு இருந்த அவர்களை , அதற்கு மேல் அவரால் வற்புறுத்தவும் முடியாமல் தயங்கி நின்றார்…

 

சரியாக ஒரு மணி நேரத்தில் கிருஷ் ஆஜராகி விட்டான்…

ஆராவைத் தேடி போக…,

“அண்ணா”ன்னு ஓடி வந்து கட்டிகிட்டாள் அவனை…,

“அழக்கூடாது லட்டு… அண்ணன் வந்துட்டேன்ல நான் பார்த்துக்கிறேன்…”

“நீ வா என் கூட, பயப்படக் கூடாது… இப்போ வீட்டுக்கு கிளம்பிடலாம்…”

கிருஷ் வந்தது ஆராவுக்கு புது தெம்பையே தந்தது… முகம் கழுவி விட்டு, அவனோட வெளியே வர,

 

“நீங்க தான் பாப்பா சொன்ன இளா வாப்பா….? ரொம்ப நன்றி தம்பி… தெய்வம் போல எங்க பொண்ணை பார்த்துகிட்டதுக்கு…” ஜெயக்கொடி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் பேச,

 

“அது நான் இல்லைங்க… நாங்க ஆரா இளாவோட ஃபேமிலி ஃப்ரெண்ட்… கிருஷ்ணா…”

 

“இவங்க எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் இல்ல , என் அண்ணன்… உறவுக்காரங்க கை விட்டாலும், அனாதையாவே சாகாம எங்களை காப்பாத்தினவங்க…” ரோஷம் போல ஆரா கூற, 

 

கிருஷ் செல்லமாக மண்டையில் வலிக்காதது போல ஒரு கொட்டு வைத்தான். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறிய புன்னகை அனைவரிடமும்…

 

“நீங்க எதாவது பேசனும்னா டைரெக்ட்டா எங்க கிட்ட பேசியிருக்கலாமே… எதுக்கு இப்படி ஷோரூம்க்கு வந்து லட்டுவ பயமுறுத்தினீங்க…? எங்களுக்கு எல்லாம் லட்டு அழவும் பதட்டமாயிடுச்சு…”

 

“நாங்க யாருன்னு தெரியுமா…?” ஜெயக்கொடி கேட்க,

 

“தெரியும்…ஆரா அம்மாவோட குடும்பத்தை சேர்ந்தவங்க தானே…,?”

 

“ஆமாம்ப்பா…  நான் நேத்து மதியமே  பாப்பாவை பார்த்துட்டேன்… என் தங்கை பொற்கொடியை  அச்சில் வார்த்தது போல இருந்ததும், அவ ஆசிர்வாத்தோட கட்டிடத்துக்குள்ள நுழையவும் , பாப்பா அவ மக’ன்னு தெரிஞ்சுகிட்டேன்… சரி அம்மாவைக் கூட்டிட்டு வந்து காட்டிட்டு போயிடலாம்ன்னு நினைச்சுதான் அழைச்சுட்டு வந்தேன் இங்க… பேத்தியைப் பார்த்ததும், அவங்க உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டாங்க… அவளும் பயந்துட்டா…” இதுவரை இதுபோல அடுத்தவர் முன் தயங்கி நிற்கும் அனுபவம் இல்லாததால் கூனி குறுகி போய் இருந்தார்.

 

“வேற எதுவும் உள்நோக்கம் இல்லைங்க…. எங்களைப் பத்தி வேணும்னா வெளிய விசாரிச்சுக்கொங்க… எங்கப்பா கண்டராதித்யர்… எங்க அண்ணா விக்கிரமாதித்யர்… அவங்களை இங்க நிறைய பேருக்கு தெரியும்…” நம்பிக்கைக்குரிய மனிதர்கள் என்றும் தம்மை உணர்த்தும் தவிப்பு குரலில் அவர் கூற,

 

“கண்டர் சார், இங்க ரொம்ப பெரிய ஆளு சார்… அவரு யாரை சொல்லுறாரோ அவங்கதான் இங்க எம் பி, எம் எல் ஏ சார்… பார்த்து நடந்துக்கொங்க…” சிவகுரு வந்து  கிருஷ்ஷின் காதை கடித்தார்…

 

“அவர் பெரிய ஆளா இருந்தால்….????. அழறது எங்க வீட்டு இளவரசி சார்…” அதே குரலில் கடுபடித்தான் கிருஷ் பதிலுக்கு…

 

“சரி இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்…?” வந்திருந்த பெண்களிடம் திரும்பி…,

 

“நாங்க எங்க வீட்டு பொண்ணை பார்க்கத்தான் வந்தோம் … பார்த்துட்டோம். இந்த விஷயம் எங்கப்பாவுக்கு கூடத் தெரியாது. தெரிஞ்சிருந்தா எங்க மேல ரொம்ப கோபப்பட்டிருப்பார்… நாங்க கிளம்புறோம் தம்பி… எங்களுக்கு வேற எதுவும் வேனாம்ப்பா…” ஜெயக்கொடி முடித்துக் கொண்டார்.

 

“இல்லை… எனக்கு என் பேத்தி வேணும். என் பொண்ணு கூட நான் வாழ முடியாத வாழ்க்கையை அவ மகளோட வாழனும்.” கத்தி கதறினார் அந்த முதியவர்…

 

“அம்மா என்ன பேசறோம்னு தெரிஞ்சு பேசறீங்களா…? பிளீஸ் போயிடலாம்மா… அப்பாக்கு தெரிஞ்சா…”

 

“தெரிஞ்சா என்ன…? தெரியட்டும்… அச்சில வார்த்தது போல பொன்னு சாயலில அவ பொண்ணை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியாது. பெத்தவளோட வலி என்னன்னு அவருக்கு எந்த காலத்துலயும் புரியப்போறது இல்லை…” அவர் ஏறத்தாழ பொங்கி வெடித்தார்….

 

தலை சுற்றியது கிருஷ்ஷிர்க்கு…. ஆரா இன்னும் அதிகமாக அண்ணனின் தோளோடு ஒன்றினாள்…

 

வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் ரசா பாசத்தை விரும்பாதவனாக…., 

“இங்க எதுவும் பேச வேண்டாம்… பின்னால் ஆசிர்வாத் பில்டிங்கில கெஸ்ட் ரூம் இருக்கு, அங்க வெய்ட் பண்ணுங்க…. நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்து உங்களை பார்க்கிறேன்…

சிவகுரு இவங்களை கூட்டிட்டு போங்க… குடிக்க எதுவும் கொடுங்க… நான் மேனேஜ்மென்ட் ரூமில் இருக்கேன்…”

 

அதற்கு மேல் அவர்களின் பதிலயும் எதிர்பார்க்காமல் ஆராவை இழுத்துக் கொண்டு சென்று  விட்டான் ஆசிர்வாத் கட்டிடத்திற்குள்… இந்த புதிய சூழ்நிலை அவனுக்குள் நிறைய பதட்டத்தை பயத்தை ஏற்படுத்தி இருந்தது…

 

வேதாவிற்க்கும் , இளாவிற்கும் கான்ஃபிரன்ஸ் கால் செய்தவன், நிலைமையை கூறி கலந்து ஆலோசித்து, வந்திருந்த பெண்மணிகளிடம் சென்றான்…,

 

“இங்க பாருங்க மேடம்… , ஆரா இப்போ எங்க வீட்டு பொண்ணு… எங்கம்மா மட்டும் தான் எல்லாருக்கும் பெரியவங்க… என் வோய்ஃப் இப்போ நிறைமாத கர்ப்பிணி, அவளை விட்டுட்டு  அவங்களால இங்க வர முடியாது…” 

ஒரு பேப்பரில் எழுதி, 

“இது நாங்க இப்போ தஞ்சாவூரில இருக்கிற அட்ரஸ்… இது என்னோட கார்ட். அதில் என் ஃபோன் நம்பரும் இருக்கு… வரும் போது ஃபோன் பண்ணிட்டு வாங்க… இங்க நடந்த விஷயத்தில் லட்டு ரொம்பவும் பயந்து போயிட்டா… நீங்க எது பேசறதா இருந்தாலும் அங்க வச்சு பேசறதுதான் சரியா இருக்கும்… ஒரு நாள் முன்னாடி சொன்னீங்கன்னா இளாவையும் வரச் சொல்லிடுவேன்… அவன் இப்போ பிசினஸ் ரிலேட்டடா வெளியில் போயிருக்கான்… அம்மா உங்களை எங்க வீட்டுக்கு கூப்பிட்டு பேசறதுக்கு மன்னிப்பு கேட்க சொன்னாங்க. சோ, உங்களுக்கு விருப்பம் இருந்தால், ” அழைப்பதற்கு மனமே இல்லாத தொனியில் கிருஷ் இழுத்தான் அவனது தாயின் வார்த்தைக்காக…

 

“இல்லை பரவாயில்லை தம்பி நாங்க உங்க வீட்டுக்கு வந்து தொந்தரவு தர மாட்டோம்…” ஜெயக்கொடி அவனின் தொனி புரிந்தவராய் தவிப்புடன் முடிக்க,

 

“என்னைக்கு வர்றோம்னு ஃபோன் பண்றேன் தம்பி… ரொம்ப நன்றி…” அவசரமாக கிருஷ் கையில் இருந்த பேப்பரை பிடுங்கியவராக, அவரது தாய் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார்…

 

வீட்டிற்க்கு போனதும் , இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் கொட்டி, 

“அவங்கள எதுக்கு வீட்டுக்கு வர சொன்னீங்க…? வந்து ஆராவை வேணும்னு கேப்பாங்க…, அப்படியே தூக்கி கொடுங்க… நான் எப்படி முடிச்சு வைக்கிறதுணு பார்த்தா, அட்டிரசை தர சொல்லி ஆரம்பிச்சு விடுறீங்க…”

 

“ஆரா நம்ம வீட்டு பொண்ணு… அவளைலாம் அப்படித் தர முடியாது… கூப்பிட்ட தோஷத்துக்கு அந்த கூட்டம் வந்தால், கொஞ்சம் பொங்கலை யும், புளியோதரையும் போட்டு அப்படியே துரத்தி விட்டிரு…

அதோட எல்லாரும் சென்னைக்கு கிளம்புரோம் ,அங்கேயே டெலிவரியைப் பார்த்துக்குறோம்… அவ்வளோ தான்…” ரோஜா அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

காட்டுக் கத்தலாய் கத்தினான் கிருஷ்…

 

“ரோ…, இங்க வா, உன் புருஷனுக்கு கொலைப் பசி போல இருக்கு, லோ பீப்பீ ஆகி கத்தறான்… சோத்தை போட்டு பெட்ரூமில் தள்ளி கதவை பூட்டி வை…” கூலாக வேதா ரிப்ளை தட்ட,

 

“இங்க பாரு தாய் கிழவி, காமெடி பண்ணிட்டு இருந்த அப்புறம் உன்னைத்தான் முதல்ல டைவர்ஸ் பண்ணுவேன்…”

 

“அதை முன்னாடி பண்ணித் தொலை… இன்ப சுற்றுலா போகனும்னு ரொம்ப நாளாவே ஆசை… என் துன்பம் உன்னை கூட்டிகிட்டு எங்க போகன்னு துக்கத்துல இருந்தேன்… நீயே வழி சொல்லிட்டே…”

 

“மீ நானும் இல்லையா…?” ரோஜா.

 

“என்னை தனியா விட்டுட்டு போகவே கூடாது மாதாஜி  நீங்க…” அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அடமாய் ஆரா.

 

“நன்றி கெட்ட கூட்டங்க… ஒரு மனுஷன் நியாயத்துக்கு போராடும் போது விட்டுட்டு கட்சி தாவல் பண்ணுதுங்க…

அதுலயும் இந்த சோத்து மூட்டை , அதுக்காக தான் கத்துறேன்னு தெரியாம மாத்தாஜீ…நேத்தாஜின்னு ஓடுது பின்னாலேயே…” கிருஷ் முணு முணுக்க…

 

“இவரு பெரிய திருப்பூர் குமரன் கொடிய தூக்கிட்டு வந்துட்டார்…

ஏன்டா… இவங்க ரெண்டு பேரும் கடைசி வரை நம்ம மூணு பேர் கூட மட்டும் உறவாடிட்டு இருந்தால் போதுமா. கஷ்டம் நஷ்டமுன்னு நம்மள சுத்தி நிக்க நாலு பேராவது வேணும் டா… பொற்கொடி அக்கா குடும்பத்தில் அவங்க பண்ணினது தப்புதான்… பொற்கொடின்னு ஒரு பொண்ணு எனக்கு இல்லவே இல்லைன்னு கதவை சாத்தினது ,  அவங்க அப்பா. அவங்க அம்மாக்கு என்ன சூழ்நிலையோ… யாருக்குத் தெரியும்.”

“இன்னைக்கு அவங்க அம்மா கதறி அழுதாங்கன்னு சொன்னது என் மனசுக்கு  ரொம்ப பாரமாச்சுடா. ஒரு அம்மா பெத்த புள்ளைய பறி கொடுத்துட்டு நிக்கறது, புருஷனை பறிக் கொடுக்கிறதை விட ரொம்ப பெரிய கொடுமை… இத்தனை வருஷமா என்னென்ன நினைச்சு கண்ணீர் விட்டாங்களோ…? அதுவும் அவங்க பொண்ணு சாயலில் பேத்தியை பார்த்ததும்  அவங்கன்னு இல்ல, அவங்க இடத்தில் எந்த அம்மாவா இருந்தாலும் தாங்கியிருக்க முடியாதுடா… ஒரு அம்மாவுக்கு தான் அந்த வலி தெரியும். எவ்வளோ பெரிய குடும்பத்தை சேர்ந்தவங்க… பொது இடத்தில ஆராகிட்ட அப்படி அழுதாங்கன்னு நீ சொன்னதும் எனக்கே ஒரு மாதிரி ஆச்சு அதான் வீட்டுக்கு பேச வர சொன்னேன். 

சும்மா உளறிட்டு இருக்காம போயி சாப்பிடு… நீயும் டென்ஷனாகி ,லட்டு குட்டியையும் டென்ஷனாக்குற…”

 

“ஏதாவது பண்ணித் தொலைங்க… எனக்கு சாப்பாடு வேணாம்.” கிருஷ் உள்ளே போய் விட்டான்…

 

“லட்டு… ஏதாவது சாப்பிட்டியா ந” ரோஜா

 

ஆரா உதட்டை பிதுக்கவும்… 

 

“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் ரொம்ப ஏத்தம் தான்… ஒன்னு தொண்டை கிழிய கத்துது, இன்னொன்னு உதட்டை பிதுக்குது. ரெண்டு பேர்க்கும் சோறு கிடையாது…,” நிறை மாத கர்ப்பிணியான ரோஜா…

 

“என்னை பட்டினியா போடுறதுக்கு முன்னாடி எல்லா சாப்பாட்டையும் ஃப்ரிட்ஜில வச்சி பூட்டி சாவியை என்கிட்ட கொடுங்க. அப்பதான் போவேன் நான்…”

 

“ஏன்டி சாவிய உன்கிட்ட தரனும்…”

 

“என்னை விட்டுட்டு நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டா அதான்… பாப்பா பசி தாங்க மாட்டேன்…

பத்து நிமிஷம் கழிச்சு வந்து சாப்பிடுவேன்.”

 

 “இங்கே எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. இந்த சின்ன எருமை பத்து நிமிஷம் கழிச்சு வந்து திங்குமாம்… கடவுளே…. புள்ளத்தாச்சின்னு கூட பார்க்காம,  இதுங்க ரெண்டும் எனக்கு பீப்பி ஏத்துதூங்களே…”

 

“அந்த ரெண்டு எருமைங்களையும் நான் மேய்ச்சுக்கிறேன், நீ  போயி ரெஸ்ட் எடு ரோ..” வேதா கூல் செய்தார் ரோஜாவை.

 

“அண்ணி நீங்களும் போயி ரெஸ்ட் எடுங்க. நான் கிருஷ் அண்ணவோட சாப்பிட்டுக்கிறென்…”

 

“அடேய்…” ரோஜா அதட்டவும் ஆரா அவளறைக்கு ஓடி விட்டாள்.

 

”முடியலடா சாமி…” பெருமூச்சு விட்டபடி ரோஜா சென்று விட்டாள்….

 

வேதாவிற்குள் என்னென்னவோ யோசனைகள்…சிரிக்க சிரிக்க பேசி மறைத்தாலும் சீரியஸாக ஏதேதோ எண்ணங்கள் . கணவரின் புகைப்படத்தில் இருந்து விழிகளை அகற்றாதவராய், கோந்து என்னையா நடக்குது…?

 

ஆராவைத் தேடி அவளது அம்மாவின் பிறந்த வீட்டு சொந்தம் வந்திறங்க, ‘ஏன் வர்றாங்க..? எதுக்கு வர்றாங்க…? என்ன பேசுவாங்க..?’  வீட்டின் பெரியவராய் மொத்த பொறுப்பும் வேதாவின் தலையில், உசுருக்குசுரா வளர்த்த பொண்ணை தூக்கிட்டு போயிடுவாங்களோன்னு பயம் ஒரு பக்கம் , இடையில் ஆரா- இளா கல்யாணத்தில் எதுவும் பிரச்சினை ஆகிடுமோன்னு கவலை ஒரு பக்கம்… யோசித்ததில் கணவரிடம் அடைக்கலமாகி இருந்தார்.

 

“யோவ்… கோந்து… என்னையா நடக்குது..? நம்ம புள்ளைங்க எல்லாம், ஒவ்வொண்ணும் ஒரு பக்கம், ஒருத்தன் வீட்டுக்கு வராம ஊர் ஊரா சுத்தறான், இன்னொருத்தன் சென்னைக்கும் திருச்சிக்கும் பாதி நாள் பறந்து பறந்து அலைகழியுறான்.ஒருத்தி நிறைமாசமா தலைப் பிரசவத்துக்கு நிக்குறா… இன்னொருத்தி இன்னும் பிள்ளை பருவத்தை தாண்டாம வளர்ந்தும் வளராம நிக்கிறா…

 

சரி அந்த புள்ளைக்கு கல்யாணத்தை பண்ணி விட்டுருவோம்ன்னு நான் நினைச்சுட்டு இருந்தா, இடையில் இவங்க தேடி வந்துருக்காங்க…”

 

“என்னையா நினைச்சுட்டு இருக்க நீ… எனக்கு என் புள்ளைங்க எல்லாம் எப்போதும் கல கலன்னு சிரிச்சு சந்தோஷமா இருக்கணும். அதைவிட்டு உன் பாட்டுக்கு ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கலாம்னு நினைச்ச, பிரஷர் தாங்காம நெஞ்சு வெடிச்சு, செத்து உன்கிட்ட வந்து உன்னைத்தான் டார்ச்சர் பண்ணுவேன் பார்த்துக்க,”

 

எல்லாப் பிரச்சனைக்கும் அவர்தான் காரணம் போல, நியாயம் கேட்டுவிட்டு, ஒரு வார்னிங்கையும் தந்துவிட்டு மனதின் பாரம் குறைந்ததும் வேதா சென்றுவிட,

 

‘நான் என்ன பண்ணினேன்னு, இப்படி என் கிட்ட சண்டை போட்டு போறா…?’ன்னு பாவமாய் புகைப்படத்தில் பார்த்திருந்தார் கோதண்டம்.

 

எவ்வளவு வளர்ந்து பெரிய மனுஷங்களா ஆனாலும், அவங்கவங்களுக்குள்ள இருக்கிற குழந்தைத்தனத்தை எப்பயாவது யார்கிட்டயாவது வெளிப்படுத்துவாங்க… அப்படி தன் புருஷிடம் குழந்தையாய் மாறி கோபித்து கொண்டு போனார் வேதா….

 

  1.  

சாஷா…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!