Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-22

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…

 

அத்தியாயம் 22

 

வேதாவின் சண்டை கோதண்டத்திடம் மட்டுமல்ல, தூக்கத்துடனும் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

அவரது போன் ரிங் வர, எடுத்தால் இளா ,

இரண்டாவது ரவுண்டு புலம்ப ஆள் கிடைக்க,

 

“டேய்… என்னடா இப்படி ஆச்சு…?”

 

……

 

“யாரு கிருஷ்ஷா…? அந்த பய கத்து கத்துன்னு கத்திட்டான்… நானே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்குன்னு, உள்ள நடுங்கிக்கிட்டு ஆரா குட்டிக்காக தெம்பா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு இருக்கேன். இதுல  இவனை சமாளிச்சு  அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சுடா இளா.”

 

……

 

“ஏதோ நீ இருக்கிற தைரியம் தான் எனக்கு…”

 

…..

 

“நம்ம லட்டு விஷயத்துல என்னால சரியா யோசிக்க கூட முடியாதுடா, உனக்கு தெரியாதா…? யப்பா ராசா எப்படா வருவ.?”

 

……

 

“ஒரே படபடப்பா இருக்குடா..?”

 

…..

 

“இல்லையே…?” 

 

…..

 

“சரிடா நீ வேற, திட்டி தீர்க்காத. அந்த கருமத்த எங்க வச்சேன்னு தேடுறேன்.”

 

பீப்பி மாத்திரையை  தேடி எடுத்தவர், தண்ணி எடுத்து, மாத்திரையை விழுங்கி விட்டு,

 

“கிடைச்சுட்டு… முழுங்கிட்டேன்.”

 

…….

 

“நிஜமா சொல்றேன் நம்புடா தங்கம்.”

 

……

 

“லட்டு நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கு. அவ அண்ணங்காரன் தாம் தூம்முன்னு குதிக்கவும் பராக்கு பார்த்துது. அவன் வேணாம்னு கோச்சுகிட்டு அந்த பக்கம் போனான். இந்தப் பக்கம் அது சாப்பிடாம படுத்துடுச்சு பன்னி.அவுங்க வந்துட்டாங்கன்னு சொன்னதுல இருந்து, எனக்குத்தான் ஒரே உதறலாச்சே,  ரோ வும் பயந்துட்டா. இவனும் சென்னைக்கு கிளம்புவோம்ன்னு கத்தி அவள இன்னும் பயமுறுத்திட்டான். ரோ வை தூங்க அனுப்பிட்டு, லட்டுவும் போனதும், கோந்துகிட்ட சண்டை போட்டு வந்து படுத்துட்டென்.”

 

……..

 

“போடா போக்கிரி. எப்ப பார்த்தாலும் கிண்டல் கேலிதான். உன் மாமாட்ட அவருதான் காரணம் எல்லாத்துக்கும்முன்னு கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். பாவம்… சமாதானப்படுத்தனும்.”

 

…..

 

“சரிடா, பத்திரமா வா. லஞ்ச் ரெடி பண்ணிடறேன்.”

 

…..

 

போனை பேசிவிட்டு இளா வைத்ததும், பேசுவது அவராக இருந்தாலும் ஆரா விஷயத்தில் முடிவு இளாவினுடையது என்ற உறுதி எடுத்தவறாக, கோதண்டத்தை சமாதானம் செய்ய சென்றுவிட்டார்  வேதா, தூக்கத்தில்.

 

 வேதாவிடம் பேசி முடித்ததும்,

 

ஏறத்தாழ இரண்டு வாரத்திற்கு பின்பு இளா, ஆராவை அவனாக போனில் அழைத்திருந்தான். தூக்கம் வராமல் போர்வைக்குள் உருண்டு கொண்டிருந்தவளின் ஃபோன், இசைக்க, இளா. பேரைக் கண்டதும் முகம் கொள்ளா சிரிப்பு.

 

மதியம் அவளாக அழைத்திருந்தாள்… இப்போ அவனாக…

 

“இளா… எப்போ வருவ..? ஏன் என்கிட்ட பேச மாட்டேனுட்ட…? நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.” பேசிக்கொண்டே போனவளிடம்,

ஏதேதோ பேசி, அவள் சமாதானம் ஆகி, அவள் இயல்பானதும்,

 

…..

 

“ஆமா. உனக்கெப்படி தெரியும். இப்பத்தான் நீ கேட்டதும் பசிக்குது.”

 

….

 

“இரு பாக்குறேன்.”

 

கிச்சனை உருட்ட, வேதா வந்துவிட்டார்.

அவர் அப்பளம் பொரித்து, உணவை சூடு செய்து விட்டு ஆராவிடம் வந்தவர், இளா பேசுவது தெரிந்ததும், டேபிளில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

 

இளாவிடம் பேசிக்கொண்டே டைனிங் டேபிளில் உண்டு,  உருட்டி , உருண்டு , கை கழுவி விட்டு, வந்து அவள் ரூமில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தாள். 

 

பேசும் போதே, ஆராவுக்குக் கண்ணை கட்டியது.

 

சீரான மூச்சுடன் அவள் தூங்கும் சத்தம் கேட்டதும் தான் ஃபோனை வைத்தான். இளா.

 

கிருஷ்ஷை ரோஜா சரி செய்து கொள்வாள்.

 

வெளியில் தெரியாவிட்டாலும் வேதா, பிள்ளைகளுக்கு ஒன்றேன்றால் கலங்கி நின்றுவிடுவார். அதனாலேயே அவருக்கு அழைத்து அவர் சஞ்சலத்தை சரி செய்தவன்,

 

ஆராவினை பேசி சரி செய்து உண்ண வைத்து  உறங்கவும் வைத்தான்.

 

எல்லாருக்கும் உறைவிடமாக, உந்து சக்தியாக இன்று இளா..

 

அவனின் சக்தியை

தேடி…விடிந்தும் விடியாத காலை பொழுதில்லேயே ,தஞ்சாவூரை அடைந்து விட்டான் . திருச்சி விமான நிலையம் வந்து , ஆசீர்வாத்தில் பார்க் செய்திருந்த அவனது காரிலேயே வீட்டிற்கும் வந்துவிட்டான்.

 

ஆராவைப் பார்க்கத்தான் இவ்வளவு அவசரம்.

 

உள்ளே நுழையும் போதே , காம்பவுண்ட் இல்லாத பழைய கால வீடு அது. அக்கம் பக்கத்து வீடுகளில்  வாசல் கொல்லைப்புறமுமாய்  மனிதர்களின் அரவம். வீட்டை தயார் செய்ய அங்கேயே தங்கி இருந்த அறிமுகத்தில் இவன் வரவை இயல்பாய் பார்த்தபடி அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். ஓரிருவர் புன்னகையுடன்… 

 

கிருஷ் எதிர்பட்டான்.

 

வீட்டின் வெளியேயிருந்த  கட்டிடத்தின் அட்டாச்சுடு பாத்ரூம் டாய்லெட் பகுதிக்குள் செல்ல வந்தவனிடம்,

 

“ஹாய் மச்சான்…!” இளா கட்டிக்கொள்ள,

 

“அதுக்கு இன்னும் டயம் இருக்குடா, இப்போ சூ சூ போறேன்.”

 

பெருமை போல விளக்கம் சொன்னவனிடம்,

 

“கருமம் படிச்சவனே…, ஒரு சட்டையை போட்டுக்கிட்டு வெளில வரமாட்ட, இப்படி பேர் பாடியா வந்துருக்கியே டா . வெக்கமா இல்லை.?…” இளா, 

 

“துணிஞ்சவனுக்கு  துக்கம் இல்லை…

தூக்கத்துல நடக்குறவனுக்கு வெக்கம் இல்லை…”” கிருஷ் ஷின் புது மொழி புரியாமல், 

 

“தூக்கத்துல நடக்குறியா…?”

 

“இப்போ தான் ஃபர்ஸ்ட் பேஸ் ஆஃப் ஸ்லீப்பிங்ல இருக்கிறேன்.

மூஞ்சில தண்ணிப் பட்டா தூக்கம் கலைஞ்சிடும், அதான் மூச்சா போயிட்டு , உடனே முக்காடு போட்டு தூங்கிடுவேன். ஹி ஹி ஹி, சிரித்து வைக்க,”

 

கிரிஷ்ஷின் விளக்கத்தில், தலையில் அடித்து கொண்டு

 

“போயித் தொலை பக்கி… உள்ளேயே உக்கார்ந்து தூங்கிடாத,”

சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான் இளா.

 

வேதா தனக்காக காஃபி போட்டுகொண்டு, திண்ணை அமைப்பில் அமர,

பேக்கை வைத்து விட்டு, சத்தம் போடாமல், பூனைப் போல நெருங்கியவன்.

 

“தாங்க்ஸ் ஃபார்  யூவர் காஃபி டார்லிங். “, திடுமென அருகில் உக்கார்ந்து காஃபியை பிடுங்கியவனாய் அதிர வைத்தான்.

 

“அம்மாடியோ…!” குதித்து எழுந்துவிட்டார் வேதா.

 

கிருஷ்,அப்போதுதான் வெளியே வர, நடந்ததை பார்த்ததும்,

 

“ஏற்கனவே தாய்கிழவி சுகர் பீப்பின்னு இழுத்துட்டு கிடக்கு, இதுல ஏன்டா அந்த கிழவியை, இப்படி கிட்ட போயி பயங்காட்டுற..?  பதட்டத்துல கோதண்டத்துக்கிட்ட  பார்சல் ஆகிருக்கும் இந்நேரம்..”

 

“ஆமாவா டாலி, என்னைய பார்த்து ஏன்டா செல்லம் பயந்த..?”, பின்னேயிருந்து கட்டிக் கொண்டு இளா கேட்க,

 

வேதாவுக்கு வெட்கமாகி, “விடுறா போக்கிரி…”

 

“டேய் , கிழவியை என்னடா பண்ற..?, கையை எடுடா.” கிருஷ் அடித்து விடுவிக்க,

 

“என் ஆளை நான் கட்டிப் பிடிப்பேன்,” சொல்லியபடி கட்டியும் பிடித்து, “முத்தமும் கொடுப்பேன்ன்னு” சொல்லி வேதா கன்னத்தில் இளா முத்தம் வைக்க,

 

“கருமம் கருமம்… உன் டேஸ்ட் ஏன்டா இப்படி போகுது, ஆன்டியை கட்டி பிடிச்சு ஆன்டி ஹீரோ ஆகாம ஆராவை கட்டிபிடிச்சு ஆரா ஹீரோ ஆகு, இல்லைன்னா நம்ம தாய்க்கிழவிக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு ஒரு ஆயா கிழவி இருக்கு ஆரா அம்மா வீட்டுல, நிமிஷத்துக்கு ஒரு வேஷம் கட்டுது, திடீர்னு அழுவுது, திடீர்னு சிரிக்குது, என்னா பெர்பார்மென்ஸ் கொடுக்குது தெரியுமா..? உட்டா நம்ம லட்டை அப்படியே அள்ளி முழுங்கிட்டு போயிடும்.”

 

“மட்டிப் பயலே, கல்யாணமும் பண்ணி பிள்ளையும் பொறக்க போகுது , மரியாதை கொடுக்க தெரியாதா உனக்கு..?,” 

முதுகில் ஒரு அடி வைத்து, 

 

“உனக்கு எங்க ,யாரை எப்படி பேசணும்னு தெரியாது ராஸ்கல்… அந்தம்மா எவ்ளோ பெரியவங்க அவங்களை கிழவி அது இதுன்னு பேசுற… அதுக்கு மேல அவங்க நடிக்கிறாங்க அது இதுன்னு…” உண்மையில் கண்டிப்பான குரலில் கூறினார் வேதா.

 

“பின்ன நாம நல்ல அழகா, கொஞ்சி கெஞ்சி ஆளாக்கி , வேளைக்கு வித விதமா சோறுட்டி கொழுக் மொழுக் க்குனு வளர்த்து வச்சுருப்போம் அமுல் பேபியா… நோகாம இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வந்து  தூக்கிட்டு போயிடுவாங்களா அவளை.” 

கிருஷ் ஆதங்கப்பட்டான்.

 

“அவங்க எங்ககிட்ட அனுப்பிடுங்கன்னு அவுங்க கேட்டாங்களா..? இல்லைதானே, அப்படி ஒரு வேளை கேட்டா ஆராவும் இளாவும்  முடிவெடுப்பாங்க.” வேதாவின் முடிவிற்கு கிருஷ் முறைக்க,

 

“டாலியை ஏன்டா முறைக்கிற… ஆரா மேஜர். அவங்க அப்படியெல்லாம் கட்டாயப்படுத்தி  அழைச்சுட்டு போயிட முடியாது. . இந்த விஷயத்தில் நம்ம லட்டு முடிவுதான் ஃபைனல். அதோட நம்ம லட்டு அப்படியெல்லாம் என்ன விட்டுட்டு, நம்மளை விட்டு போய்டுவாளா…? என்ன விட்டுட்டு அவளால இருக்கத்தான் முடியுமா…? யோசிச்சு பாரு மச்சான் நீ நினைக்கிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை கிடையாது. அவங்க வந்தா மேனேஜ் பண்ணிக்கலாம் , அதனால நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காத மச்சான்.. பீ கூல்…”.

 

“கேட்டுக்கோடா கிருஷ்  நல்லா”, பின் இளாவிடம் திரும்பி,

“நல்ல சங்கா எடுத்து காதுக்குள்ள உட்டு ஊது… உள்ள உறைக்குதா பார்ப்போம். நேத்துல இருந்து கொதிக்கிற எண்ணையில ஊத்தின தண்ணி போல ஒரே சத்தம். காதை கிழிச்சுட்டான். நான் போயி டிஃபன் பண்றேன் ,” சொல்லிவிட்டு வேதா கிளம்பினார்.

 

“தாய்க்கிழவிக்கு கொழுப்பை பாரு. ஒரு பெரிய மனுஷன் கோபப்பட்டா சமாதானப் படுத்தி சோறு போடுவோம்ன்னு நினைக்காமல், ராத்திரி என்னை பட்டினியா போட்டுட்டு எண்ணெய் தண்ணின்னு எதுகை மோனை பேசுது. இதுலாம் தாயா … பேய்…”

 

“நான் இன்னும் போகல… இங்கதாண்டா  நிக்கிறேன்.” சொல்லிவிட்டு கிருஷ் முதுகில் ரெண்டு அடி போட்டார்.

 

 “ஏண்டா ஏழு கழுத வயசாச்சு இன்னும் உன்ன இடுப்புல தூக்கி வச்சு  சோறு ஊட்டிவிடுவாங்களா…? பசிச்சா நீயே தின்னுக்க வேண்டியதுதானே …  உன் வயிறு, உனக்கு பசி… நீ திங்காம போயிட்டு, சமாதானப்படுத்தலைன்னு எகத்தாளம் பன்ற… லூசு பயலே…”

 

“நீங்கெல்லாம் கை விட்டாலும், என் தங்கச்சி தங்கம், என் செல்லகுட்டி எனக்காக சாப்பிடாம போயி படுத்துட்டா பாரு… ரோஜா வந்து சொன்னா, போயி சாப்பிடு, லட்டும் சாப்பிடலைன்னு. தங்கை உடையான் சொறி சிரங்குக்கு அஞ்சான்…” வேதாவையும் இளாவையும் சொறி சிரங்காய் சுட்டி காட்டி சொல்லிவிட்டு,

 

“ஹா ஹா ஹா…”. கிருஷ் சத்தம் போட்டு சிரிக்க,

 

“ஹி ஹி ஹி… இவரு பெரிய ரங்காராவ்… அப்படியே இடி முழங்க சிரிக்கிறாரு… ரோ தூங்க போன அரைமணி நேரத்துல, லட்டு சோறு வேணும்னு கிட்சனை உருட்டிட்டு இருந்துச்சு. போயி அப்பளம் வடாம் வத்தல் பொரிச்சு கொடுத்து அவ தின்னு முடிச்சதும்,  மீந்த சோறுல நான்தான் தண்ணி ஊத்தி வச்சுட்டு வந்து படுத்தேன். நைட் உன் பங்கு சாப்பாடு மீந்து போனதால உனக்கு இன்னிக்கு பழைய சோறுதான்டி…”

வேதாவின் நக்கலில் இளாவும் சேர்ந்து சிரிக்க,

 

“தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி…

 

தாளம் வந்தது பாட்டை வச்சி…

 

ஊட்டி வளர்த்த என் அன்பு தங்கச்சி…

 

உட்டுட்டு தின்னா… கண்ணு குளமாச்சி…”

 

வேதாவின் முதுகில் டீ ஆர் ராய்,  பாடிக் கொண்டே தாளம் தட்ட, இளா,

“என் டாலி என்ன மேளம்மா உனக்கு…?” கிருஷ் கையை எடுத்து விட்டு…

 

“உனக்கு வலிக்குதடா பேபிமா…” வேதாவிடம் கொஞ்சினான். 

 

இவன் கன்னத்தில் செல்லமா குத்திட்டு,

அவர் சிரித்து கொண்டே போக,

 

“இந்த கிழவியை கரெக்ட் பண்ணுன டெக்னிக்கில கொஞ்சத்தையாவது லட்டுகிட்ட யூஸ் பண்ணியிருந்தா, அப்படி இப்படின்னு ஏதாவது ரொமான்ஸ் நடந்து இருக்கும் . நீ வேஸ்ட் பண்ணிட்ட, . வேஸ்ட் ஃபெல்லோ.” சிம்ரன் ஸ்டைலில் திட்டினான் 

கிருஷ் ,

 

“டெக்னிக்கை யூஸ் பண்ணாமலேயே, ரொமான்ஸ் நடந்துச்சே.”

 

“என்னடா சொல்ற..? ரொமான்ஸ் சா… அப்புறம்..?” கிருஷ் ஆர்வமாய் கேட்க,

 

“அதான் பார்த்தியே…நீயே… ஒரு மாசம் தலைமறைவாக வாழ்ந்தேனே தெரியலையாடா உன் கண்ணுக்கு.” இளா சிரித்து கொண்டே கூற,

 

“தலை மறைவா போகிற அளவுக்கு என்னடா பண்ணி வச்ச…?”

 

“ஒரே ஒரு கிஸ்ஸடிச்சுட்டன் மச்சான். அதுல லட்டு பயந்துட்டு.” 

 

“அடப்பாவி, ஒரே ஒரு கிஸ்ஸுக்காடா ஓடின…? அதுதான், நீயும் அவளும் சினிமா போஸ்டரும் மைதா கோந்தும் போல பச்சக் பச்சக்க்கின்னு ஒட்டிக்கிட்டும் ஒரசிகிட்டும் பிச்சு எடுக்க முடியாத அளவுக்கு திரிவீங்களே…? அந்த முத்தத்தை , அதுக்கிட்ட கேட்டிருந்தாலே அள்ளிக் கொடுத்திருக்கும், அதுக்காடா ஓடுன ஃபண்ணி பில்லோ”

 

“அது இதுவரை கொடுத்த சாதாரண கிஸ் இல்ல, அஞ்சு பத்து நிமிஷமா என்னை மறந்து கொடுத்த லவ் கிஸ். லிப் லாக் பண்ணிட்டேன்டா, இதுக்கு மேல கேட்காத மச்சான்.” வெட்கப் பட்டான் இளா.

 

“அடப்பாவி… சும்மா கிஸ் கொடுத்தேன்னு நினைச்சுட்டு பேசினா, ஆரா பிள்ளையை அம்மாவாக்குற கிஸ் கொடுத்திட்டு, எஸ்ஸாகிட்ட நீ…, ராஸ்கல்.”, இளா முதுகில் அடி வைத்து கிருஷ் கேட்க,

 

“இதுலாம் ஒரு கிஸ்ஸுக்கு மட்டும் இல்லடா…லட்டுக்கு என்னோட காதல் ரிலேட்டடா எதை தந்தாலும், அது கசப்புல முடிஞ்சிட கூடாதுங்குற பயம்.  அப்புறம் கடைசி வரை அவளால என்னை லவ்வோட பார்க்க முடியாம போயிடும்.

லவ்வுன்னு தெரிஞ்சதுகப்புறம், எனக்கு அன்புத் தனியா காதல் தனியான்னு பிரிச்சு காட்ட முடியலடா. அவ கூடவே இருக்கும்போது எந்த நிமிஷம் என்கிட்ட இருந்து என்ன உணர்வு வெளிப்படுதுன்னு தெரியல…

நம்ம ஆராதான,ன்னு காட்டவும் முடியல,”

 

“நம்ம ஆராக்கிட்ட இப்போ காட்டக் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ணவும்  முடியல… இப்படியே போனா லட்டு கல்யாணத்தை வேணாம்னு சொல்லிடும்ன்னு ஒரு பக்கம் தோண,… அதான், கல்யாணம் வைக்கிற வரை அப்பப்போ போக வர இருப்போம்னு  கொஞ்சம் தள்ளி இருந்தேன்… அதுக்குள்ள இப்போ பொற்கொடி அத்தை வீட்டாளுங்க வந்துட்டாங்க. இந்த நேரம் என்னைத் தான் தேடுவா டா லட்டு. நான் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவா, அதான் ஆகரது ஆகட்டும்னு வந்துட்டேன் மச்சான்.”

 

“லவ்வு கல்யாணம் இத்துலாம் இவளோ கஷ்டமாடா…?”

 

“அது நாம யாரை வாழ்க்கை  துணையா ச்சூஸ் பண்றோம் அப்படிங்கறத பொருத்தது. நம்ம லட்டு ஒரு யுனிக் பீஸ். அது எப்போ எப்படி ரியாக்ட் பண்ணுகிறது அதுக்கே தெரியாது. அவளுக்கா லவ் வரட்டும். இளா நீ இல்லாம இருக்க முடியா துன்னு தேடி ஓடி வரட்டும். அப்பதான் என்னோட…. எங்களோட கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கும். ஈசியாவும் போகும்.”

 

“சரி வா. போயி காலையிலேயே உன்னோட உலக உருண்டைக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம்.” இளாவை அழைத்து கொண்டு ஆரா ரூமிற்க்கு செல்ல,

 

ஆரா, கால் மட்டும் போர்வையை விட்டு வெளியே நீட்டியிருக்க, போர்வைக்குள்ளே ஆழ்ந்த உறக்கம்.

 

“அண்ணன் கோவிச்சிட்டு போனேன்னு அக்கறை இல்லாம, சோறு வேணாம்னு என் பொண்டாட்டிக்கிட்ட பொய் சொல்லிட்டு, எல்லாரும் தூங்கினதும், சத்தம் போடாம போயி,  சோறை சட்டியோட தனியா முழுங்கிட்டு எப்படி அசந்து உறங்கிது பாரு அனகோண்டா.”

திட்டிவிட்டு போர்வையை உருவ, 

 

இளா அவனை முறைத்து விட்டு போர்வையை இழுத்து  அவள் கழுத்து வரை மூடிவிட்டான்.

 

முகத்தில் கிடந்த முடியை ஒதுக்கி விட்டு நகரப் போக,

 

கண்ணை மூடியபடியே,  “இளா ,” ஒரு சந்தோஷ அழைப்பு…

 

“ஆமாம்.” அவனும் சிரித்தபடி ஒத்து கொண்டான்.

 

“பாருடா… கோவெறிக் கழுதைக்கு இப்படி ஒரு மோப்ப சக்தியா..?” 

அவள் கண்களை மூடியபடி பதில் சொன்னதில்,  காண்டான கிருஷ்.

 

இளாவினை வாயில் விரல் வைத்து பேசாதே சொல்லி, வேறு பக்கம் நகர்த்தி விட்டு, 

இன்னும் புன்னகை மாறா முகத்தோடு கண்ணை மூடியபடி இருந்தவளின் அருகில் சென்று, தன் கழுத்தில் போட்டிருந்த துண்டின் முனை எடுத்து அவள் மூக்கின் அருகே நீட்ட,

 

“ஐய்ய..! இது என்னடா..?, எலி செத்த நாத்தம் அடிக்குது. உவ்வே… அந்த இத்துப் போன பெருச்சாளியை உடனே டிஸ்போசல் பண்ணிடு இளா.” ஆரா முகத்தை சுளிக்கவும்,

 

குபீர்ன்னு இளா சிரிக்க, கடுப்பான கிருஷ்,

 

“இதான்டி நேரங்கிறது…, 

காடு மாறிப்போச்சு காட்டெருமை எண்ணிக்கை கூடிப் போச்சுன்னு , வேட்டையாடுற வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு  சிங்கம் கம்முன்னு இருந்தா, அது கடிச்சு போட்ட கறியையே கவ்விட்டு போயி  தின்னு பெருத்து போன பெருச்சாளி , கொழுப்பு அதிகமாகி, சோறு போட்ட  சிங்கத்தையே பிராண்டி பார்க்குதாம்.”

 

“எனக்கு ஒரு டவுட். நீங்க சொன்ன கதைபடி, நான் ஆசிர்வாத் ஆராஸ்சுன்னு பிஸியா டெய்லி வேலை பாக்குறேன்,  சோ… மீ…தான், தட் ஹார்டு ஒர்கிங் சிங்கம். அது கன்பார்ம்.., ஆனா அண்ணி மாசமா இருக்காங்கன்னு , காரணம் சொல்லிட்டு, அவங்களுக்கு ஆக்குற சோறையெல்லாம் அபேஸ் பண்ணி தின்னுட்டு, ரொம்ப மாசமா சும்மா….வே  இருந்து பெருத்து போன பெருச்சாளி கேரக்டர் தான் யாரா இருக்கும்ன்னு ஒரே யோசனையா இருக்கு, உங்களுக்கு தெரியுமா யார்னு மிஸ்டர் கிருஷ்ணா கோ….தண்டம்…”. ஆரா தண்டத்தை அழுத்தி உச்சரிக்க,

 

“காட்டுப் பன்னி…, என் மாமியார் வீட்டுல இருந்துகிட்டு, எங்கம்மா சோறு போடறதையே மேய்ஞ்சுட்டு, எட்டு மணி வரை நல்லா தூங்கிட்டு,  என்னையே தண்டம் சொல்றியா…? வீட்டை விட்டு வெளில போடி…”  எட்டி உதைக்க,

 

இளா அவனை உதைக்க விடாமல் பிடித்து கொண்டு ஆராவிற்கு சப்போர்ட்டினான்.

 

“எங்கண்ணி வீடு இது, எங்க மாதாஜீ சோறு போடுறாங்க,  நாங்க எப்போ வேணும்னாலும் தின்போம், எங்க வேணும்னாலும் உருளுவோம். உருண்டு, உருண்டு டயர்ட் ஆனா, அங்கனைக்குள்ளேயே  பாயை விரிச்சு , மல்லாக்க படுப்போம். அப்படியே  நல்லா காலைத் தூக்கி வெட்டியா இருக்கிறவன் மடியில் நீட்டி வச்சுட்டு  மறுபடியும் தூங்குவோம்…. நீ போடா முதல்ல…”

 

சொல்லியபடி காலைத் தூக்கி கிருஷ் மடியிலும், தலையை இளா மடியிலும் வைத்து வாகாய் படுத்து கொண்டாள் ஆரா.

 

“இதுக்கு கொழுப்பு கூடி போச்சு…”ஆராவின் கையில் கிள்ளியவன்,

 

  “அவ இவ்வளோ பேசறா ஏதாவது கேக்குறானா பாரு பக்கி பயலே…” இளாவினை முறைத்து வைக்க,

 

“என்னடா இப்படி கேட்டுட்ட, நீ என் நண்பன் டா… ஏய் லட்டு, அந்த வெட்டி பெருச்சாளி யாருன்னு கண்டுபிடிச்சியா இல்லையா…? உன் அண்ணன் ஆசைப்படறான்ல சொல்லுடி…”இளா,

 

“அதுமடியில் தான காலை நீட்டப் போறேன்னு சொல்லிட்டு நீட்டினேன்… இன்னுமா அந்த பெருச்சாளிக்கு தெரியல…”

 

சொல்லிவிட்டு ஆராவும் இளாவும் பக்கென்று சிரித்து விட, எழுந்து ரெண்டு பேருக்கும் அடியை கைவலிக்க கொடுத்தவன்,

 

“நாளைக்கு உங்க மம்மி வீட்டு  பூச்சாண்டி ஆயா வரட்டும், இரு உன்னை புடிச்சு கொடுக்கிறேன். அது வந்து பாப்பான்னு கூப்பிட்டதும் அண்ணான்னு சொல்லிட்டு ஓடி வந்து என்னை பிடி, அப்புறம் பாரு, எடைக்கு வைக்காமலேயே அள்ளி கொடுத்திடறேன்டி அரிசி மூட்டை உன்னை.”

 

“நான் ஏன் உன்னை புடிக்கிறேன். என் இளா வந்துட்டான்ல, அவனை இறுக்கி பிடிச்சுக்குறேன்.”

 

“நல்லா வாயால வடை சுடு… அதுக்குத்தான் நீ லாயக்கு.கிஸ்…” 

 

இளா கிருஷை ஷ்..சொன்னான் உதட்டின் மேல் விரல் வைத்து…

 

“ஏய்… எழுந்திரிடி எருமை… பல்லை கூட விளக்காம பேசிட்டு இருக்க, வெக்கமா இல்லை..” பேச்சை மாற்றினான் கிருஷ்

 

“ஆமா இவரு விளக்கிட்டாரு, எங்களை சொல்ல வந்துட்டாரு…” ஆரா

 

“சிங்கம் என்னைக்கு பல்லு விளக்கி இருக்குடி . நாங்க அப்படியே வாயைத் திறந்தா பன்னீரும் ரோஜாவுமா மணக்கும்… அப்புறம் வீட்டுக்கு ஊதுபத்தியே தேவை இல்லை.நான் ஊதினா மட்டும் போதும், ஊதட்டாடி …?” கிருஷ் நெருங்க,

 

  

“டேய் அண்ணா முன்னால நீ போய் குளிடா.. உன் துண்டை முகர்ந்து பார்த்ததுலயே மூக்கு பொசுங்கி போச்சு… இதுல வீடு முழுக்க  ஊதறதா இருந்தா, ஊர்ல எல்லாருக்கும் சேதி சொல்லி அனுப்பிட்டு, எங்களுக்கு சங்கூத ஆள் ஏற்பாடு பண்ணிட்டு  அப்புறம் ஊது…” ஆரா அசிங்கப்படுத்தினாள்.

 

வேதா வந்து டீயைத் தர, 

 

“ஐ..! கழநித் தண்ணி வந்துட்டு… நான் போயி பிரஷ்ஷை விளக்கிட்டு வரேன்…” கிருஷ் குதித்து ஓட,

 

“எருமைன்னு கன்பார்ம் பண்ணிட்டு போகுது பாரு, கழனித்தண்ணிக்கு குதூகலம்,” வேதா தலையில் அடித்து கொண்டு ,

 

“நீ குளிக்க போகலையாடா இளா.” கேட்டுவிட்டு ஆராவிடம்,

 

“ஏய் ..! சின்ன எருமை, கல்யாண வயசாச்சி, மடில படுத்திட்டு கொஞ்சல், எழுந்திருடி. போயி பல்லை விளக்கிட்டு வா, காபி தர்றேன்.”

 

“பத்து நிமிஷம் மட்டும், பிளீஸ் மாதாஜி… இளாகிட்ட பேசணும் போல இருக்கு,”

 

முகம் புன்னகை பூசி கொள்ள,

“அண்ணிக்கு ஹார்லிக்ஸ் கலந்து வைக்கிறேன், நீதான் எடுத்துட்டு போகனும்.மூஞ்சிய பாரு பாவமா வச்சுக்கிட்டு… இதை எந்த ஊர்ல வாங்கினான்னு தெரியல…? ஒரு வார்த்தை அதட்ட முடியல., சீக்கிரம் பேசிட்டு வந்து சேரு,”

 

தாயாக பம்மிலேயே ஒரு தொம்மு வைத்துவிட்டு சென்றார்.

 

“இளா…” ஆராதான்,

 

“சொல்லுடி, கேட்டுட்டு தான் இருக்கிறேன்.” இளா,

 

 “நேத்து அவங்க ரெண்டு பேரும் வந்து நின்னுக்கிட்டு, இருத்தங்க பெரியம்மா சொல்றாங்க, ஒருத்தங்க அம்மாச்சியாம்… எனக்கு கை காலெல்லாம் நடுங்கிட்டு.  நாம ஒண்ணா இருப்போம்னு, கூப்பிட்டாங்க பாரு,  எனக்கு அழுகையா வந்துட்டுடா. எனக்கு இளா தவிர வேற தெரியாது, மாதாஜி ஃபேமிலி தான் எனக்கு எல்லாமே ,வேற யாரும் கிடையாதுன்னு சொல்லிட்டேன்.”

 

“.. ம்ம்….”

 

“அவங்க வந்து கூப்பிட்டா அனுப்பிடுவியா என்னை…?”

 

“மாட்டேன்.”

 

“நானே போயிட்டா…?”

 

“வெயிட் பண்ணுவேன் திரும்பி நீ என்கிட்ட வர,”

 

எழுந்து  இளா கன்னத்தில்  ஒரு அறை விட்டவள்,

 

“நான் போறேன்னு சொன்னாலும் நீ அனுப்ப கூடாது. புரியுதா? நீ இனிமே எங்கேயும் என்னை விட்டு போக கூடாது.

நானும் இனிமே எங்கேயும் போக மாட்டேன்.” 

 

“ஆமாம் எங்கேயும் போகாம இங்கேயே இப்படியே இருந்து, எங்க உயிரை வாங்கு…” கிருஷ் டீ கப்போட கவுன்டர் தர,

 

“ச்சே… கொஞ்சம் கூட பிரைவசியே இல்ல இளா இங்க… ஒரே பெருச்சாளி தொல்லை,  எலிப்பொறில மசால் வடை வச்சு பிடிக்கணும் முதல்ல “, சொல்லிவிட்டு ஆரா எழுந்து ஓடினாள்.

 

“மவளே …சிக்கின, சித்தெறும்பு போல காலுல போட்டு நசுக்கிடறேண்டி.” திட்டினான் கிருஷ்.

 

“பவ்வ்…”காட்டி விட்டு மறைந்தே போனாள்.

 

இளா யோசனையில் இருக்க,

 

“திமிரை பார்த்தியா இதுக்கு, உன்னையே அறையுது. உன்னோட பிரகாசமான கல்யாண வாழ்க்கை கண்ல தெரியுது எனக்கு… என்ன முடிவெடுத்து இருக்க..?”

 

“ஆராவுக்கு என்ன விருப்பமோ அதான் எனக்கும். நாமளாவது நாலு மனுஷங்களோட பழகி , நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிட்டோம், அவளுக்கு நம்மளை தவிர வேற எதுவும் தெரியாது. அவங்க வந்தா பார்த்துப்போம் டா மச்சான்.”

  •  

அன்று மாலையே, ஆராவின் பாட்டி தனஞ்ஜெயத்திடம் இருந்து ஃபோன் வந்தது. அடுத்த நாள் காலை குடும்பத்துடன் வரப் போவதாக…

வேதாவின் வீடு, புயலடித்து ஓய்ந்தது போல, அயர்ந்து நின்றது… 

 

சாஷா…