கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 15

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 15

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  15

விஜயேந்திரனின் உலகம் தட்டாமாலை சுற்றியது. தான் செய்த தவறு அவன்  முன் பூதாகரமாய் நின்றது. அவன் இமைகள் இமைக்க மறுக்க, அவன் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. ‘நான் நல்லவன் தானே? ஏன் என்னை இப்படி இக்கட்டில் மாட்டிவிட்டாய்?’ என்று அவன் மனம் இறைவனிடம் சண்டையிடத் தொடங்க, அதற்கு மேல் அங்க நிற்க இயலாமல் வேகமாகக் கதவை அடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் விஜயேந்திரன்.

தோட்டத்துக்குச் சென்று அலைப்பேசியில் அவன் நண்பரைத் தொடர்பு கொள்ள, “விஜய், லீலா இஸ் பேக் டு நார்மல். ஆனா, எங்க கிட்ட பேச மாட்டேங்கறா.” என்று அவன் நண்பன் கூற, “பேக் டு நார்மல்.” என்ற சொல்லில் நிம்மதி அடைந்தவனாக, “கொஞ்ச நாளில் நான் அங்க வந்திருவேன். இதை மட்டும் லீலா கிட்ட சொல்லு.” என்று விஜேயேந்திரன் கூற, “விஜய்.” என்று அதிர்ச்சியாக அழைத்தான் அவன் நண்பன்.

“வேற வழி இல்லை டா. லீலாவை மனசில் வச்சிக்கிட்டு, என்னால வேற யார் கூடவும் வாழ முடியாது. இங்க எல்லா விஷயத்தையும் சரி பண்ணிட்டு நான் அங்க வந்திறேன்.” என்று மேலும் சில விஷயங்களைப் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா வேலையில் மூழ்கியிருக்க, சமையல் அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன். அவன் உள்ளே நுழைய, பணிப்பெண் வெளியே சென்றுவிட்டாள்.

விஜயேந்திரன் சமையலறையைப் பார்வையிட, “ஏதாவது வேணுமா? நீங்க கூப்பிட்டு இருந்தா நானே வந்திருப்பேனே.” என்று கீர்த்தனா பதவிசமாக கேட்க, மேலும் கீழும் தலை அசைத்தான் விஜயேந்திரன். விஜயேந்திரனின் மனம் குற்ற உணர்வில், அவளிடம் சண்டையிட மனமில்லாமல் அமைதி காத்தது.

“பசி வந்திருச்சா? நீங்க காலையில் கூட சாப்பிடலை. இப்ப ரெடி ஆகிரும்.” என்று கீர்த்தனா அக்கறையாகக் கூற, “பசிக்கலை. நீ கொடுத்த சம் மில்க் ஷேக் நல்லாருந்துச்சு. ஆனா, என்னனு தெரியலை.” என்று அவன் நட்புக் கரம் நீட்டத் தயாராக, அதைப் பற்றிக் கொள்ளத் தயாரானாள் கீர்த்தனா.

“பட்டர் புரூட் மில்க் ஷேக்.” என்று அவள் கூற, “ஓ. டேஸ்ட்டி. இப்ப தண்ணீர் போதும்.” என்று கேட்க, கீர்த்தனா தண்ணீர் கொடுக்க, அவள் சமையல் பதார்த்தங்களை ஆராய்ந்தான்.

அவன் ஆராயும் பார்வையைப் பார்த்த கீர்த்தனா, “உங்க வீடு மாதிரி எங்க வீடு பெருசா இருக்காது.” என்று கீர்த்தனா இயல்பாகக் கூற, மறுப்பாகத் தலை அசைத்து, “நீ தான் எல்லாம் பண்ணனுமா? வந்து எல்லா வேலையும் இப்ப பண்ணியா?” என்று கேள்வியோடு நிறுத்தினான்.

“அப்படி எல்லாம் இல்லை. கூட உதவிக்கு இருக்காங்க தானே.” என்று அவள் புன்னகைக்க, ‘இவள் எத்தனை கஷ்டத்தையும் சிரித்தே சமாளிப்பாள் போல.’ என்று அவன் எண்ணினான்.

கீர்த்தனா வேலை செய்யத் தொடங்க, “எதுக்கு இவ்வுளவு பண்ணனும்?” என்று அவளுக்கு அவன் உதவி செய்ய முயல, “என்ன பண்றீங்க?” என்று பதறினாள் கீர்த்தனா.

“இல்லை எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. நீங்க எதுக்காக எனக்கு இதெல்லாம் பண்ணனும்?” என்று அவன் கேள்வியாக நிறுத்த, “இது இனி நடக்க போற விஷயத்துக்காக இல்லை. நேற்று நடந்த கல்யாணத்துக்காக.” என்று கீர்த்தனா கூற, “அது நிலைக்காது. அப்புறம் எதுக்கு இப்படி?” என்று விஜயேந்திரன் அழுத்தமாகக் கேட்டான்.  “அது ஊருக்குத் தெரியாதே.” என்று நக்கலாகக் கூறினாள் கீர்த்தனா.

“ப்ளீஸ் கீர்த்தனா, இப்ப சண்டை வேண்டாம். சண்டை போடுற மனநிலையில் நான் இல்லை.” என்று கூற, “சாப்பிடுவோமா? ரெடி ஆகிருச்சு.” என்று கீர்த்தனா அவனை அழைக்க, “கொஞ்சம் நேரம் ஆகட்டும்.” என்று கூறி அவன் ஹாலுக்கு வர, “கீர்த்தனா, மத்த வேலையை அவங்க பார்த்துப்பாங்க. நீ மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.” என்று கீர்த்தனாவின் தந்தை சத்தியமூர்த்தி கூறினார்.

அவள் அறை என்ற சொல்லில், விஜயேந்திரன் பதட்டமாக, கீர்த்தனா நொடிப் பொழுதில் அவர்கள் அறைக்குள் நுழைந்து விட்டு சில நிமிடங்களில் வெளியே வந்தாள்.

“உள்ளே வாங்க…” என்று கீர்த்தனா அழைக்க, விஜயேந்திரன்  மறுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உள்ளே சென்றான்.

அவன் கண்ட காட்சி மறைந்திருக்க, ஓர் நிம்மதி  பெருமூச்சோடு அங்கிருந்த நாற்காலியில்  அமர்ந்தான் விஜேயேந்திரன்.

கீர்த்தனா அவன் எதிரே இருந்த மெத்தையில் அமர்ந்தாள். என்ன பேசுவதென்று தெரியாமல், விஜயேந்திரன் மெளனமாக அமர்ந்திருக்க, “என் ரூமுக்கு வர முதல் ஆள் நீங்க தான்.” என்று கண் சிமிட்டி கூறினாள்.

“ஒரு வேளை அம்மா, தம்பி, தங்கைன்னு இருந்தா வந்திருப்பாங்களா இருக்கும். அப்பா என் ரூம்க்கு வர மாட்டாங்க. நான் தான் அப்பா ரூமுக்கு போவேன்.” என்று கூற, “உனக்கு நண்பர்கள் யாரும் கிடையாதா?” என்று அவள் முகம் பார்த்து கூர்மையாகக் கேட்டான் விஜயேந்திரன்.

“நண்பர்கள் இருக்காங்க. எல்லாரும் ஸ்கூல், காலேஜ் அப்படின்னு அங்கேயே நிறுத்திருவேன். இங்க, வந்தா உனக்கு அம்மா இல்லையா? உங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணலையான்னு தேவை இல்லாத பேச்சு வரும். ஐ ஹெட் இட்.” என்று கீர்த்தனா தோள்களைக் குலுக்க, விஜயேந்திரன் அவளைப் பரிதாபமாகப் பார்க்க,  “சிலர், நானே எல்லா வேலையையும் பண்றதை பார்த்துட்டு, என்னைப் பரிதாபமா பார்ப்பாங்க.  எனக்கு அது சுத்தமா பிடிக்காது.” என்று கீர்த்தனா கண்டிப்போடு கூற, ‘இது தனக்கான எச்சரிக்கையா?’ என்ற எண்ணத்தோடு அவளை ஆழமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

“முதன் முறையா, எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.  என் ரூமுக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு கிபிட்” என்று அவனிடம் தங்க நிற காகிதத்தில் சுற்றப்பட்ட அட்டைப் பெட்டியைக் கொடுத்தாள் கீர்த்தனா.

விஜயேந்திரன், அவளைத் தயக்கமாகப் பார்க்க, “ஜஸ்ட் அஸ் எ பிரென்ட்.” என்று கீர்த்தனா கண்சிமிட்ட, அதை புன்னகையோடு பெற்றுக் கொண்டான் விஜயேந்திரன்.

கீர்த்தனாவின் கண் அசைப்பில், விஜயேந்திரன் அதை திறக்க, அதில் பல வண்ண நிறத்தோடு, பளபளவென்று மின்னிக்கொண்டு ஓர் அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.   “வாவ். ரொம்ப அழகா இருக்கு. ஆனால், கிளாஸ்… பத்திரமா வைக்கணும்.” என்று  ரசனை கலந்த குரலில் பாதுகாப்பான உணர்வோடு  கண்ணாடி மாளிகையைக் கவனமாகக் கையில் ஏந்தியபடி கூறினான் விஜயேந்திரன்.

“கடவுள் நமக்கு கொடுக்குற வாழ்க்கை கண்ணாடி மாளிகை மாதிரி. பார்த்து பத்திரமா கையாளனும். அது உடையாமல் மாளிகை மாதிரி ஜெகஜோதியா  இருக்கிறதும், இல்லை சுக்கு நூறா உடையறதும், நாம வாழற விதத்தில் தான் இருக்கு.” என்று கீர்த்தனா, அவனுக்குத் தான் பரிசளித்த கண்ணாடி மாளிகையைப் பார்த்தபடி கூற, கண்ணுயர்த்தி  அவளைப் பார்த்தான் விஜயேந்திரன்.

தான் பாதுகாக்க வேண்டிய கண்ணாடி மாளிகை எதுவென்று தெரியாமல் அவன் மனம்  ஏங்க, அவன் மனதின் ஏக்கம் புரியாமல், கீர்த்தனா சிந்தனையில் மூழ்கினாள்.

இருவரும் கீர்த்தனாவின் வீட்டில், உணவை முடித்துவிட்டு அவர்கள் வீட்டுக்குத் திரும்ப, கீர்த்தனா பல யோசனையோடு மௌனம் காக்க, “நாளைக்கி நான் ஆபீஸ் போகலாம்ன்னு பாக்கறேன்.” என்று விஜயேந்திரன் மௌனத்தைக் கலைக்க, எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறி, அதை ஏற்றுக் கொள்ளவும் கீர்த்தனாவின் மனது பழகி கொண்டிருந்தது.

விஜயேந்திரன் மேலும் பேசத் தயங்கி, வண்டியைச் சாலையில் செலுத்தியபடி அவள் முகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க, அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டவள் போல், “உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நான் ஆபீஸ் வந்து தொந்திரவு பண்ண மாட்டேன்.” என்று கீர்த்தனா தன்னிலை அறிந்து கூறினாள்.

“ஏங்க… உங்களை பிடிக்காதுன்னு யாரவது சொல்லுவாங்கள்ளா?” என்று விஜயேந்திரன் பரிதாபமாகக் கேட்க, “என்ன இது ஒரு நாளில் இப்படி உஜாலாக்கு மாறிட்டீங்க?” என்று கேலி போல் கேட்டாள் கீர்த்தனா.

“நான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லலை. நீங்க தான் என்னை பேசியே மடக்குறீங்க.” என்று விஜயேந்திரன் தலை சாய்த்து வெண்பற்கள் தெரிய கம்பீரமாகச் சிரித்தபடி கூற, அவன் சிரிப்பில் ஒரு நொடி மயங்கி  சுயநினைவுக்கு வந்தாள் கீர்த்தனா.

‘சிரிச்சா எவ்வுளவு நல்லாருக்கு? இதை உரிமையோடு சொல்லும் நாள் விரைவில் வருமா?’ என்று அவள் மனம் ஏங்க, ‘இந்த சிரிப்புக்கு நீ சொந்தக்காரி இல்லை.’ என்று அவள் அறிவு அறிவுறுத்த, அங்கு மௌனம் நிலவியது.

“இல்லை, உங்களை காயப்படுத்தணும்னு நான் நினைக்கலை. ஆனால், நீங்க ஆபீஸ் வர வேண்டாம்.” என்று கோரிக்கை போல் விஜயேந்திரன் கூற, கீர்த்தனா கண்ணுயர்த்தி அவன் முகம் பார்க்க, “உங்க பார்வை என்னைக் குற்றம் சொல்ற மாதிரியே இருக்கு. நான் உங்களுக்கு பண்ணிட்டு இருக்கிற அநியாயம் என்னை ரணமா அறுக்குது. நான் இந்த மனநிலையில் உங்களைப் பக்கத்தில் வச்சிக்கிட்டு வேலை பார்க்க முடியாது.” என்று வேதனையோடு விஜயேந்திரன் கூற, நொந்து கொண்டிருப்பவனை மேலும் நோகடிக்க விரும்பாமல் சம்மதமாகத் தலை அசைத்தாள் கீர்த்தனா.

சில நிமிடங்கள் அமைதிக்குப் பின், “சாரி.” என்று விஜயேந்திரன் ஆழமாகக் கூற, “நீங்க சாரி சொல்லவேண்டியது லீலா கிட்ட… என்கிட்டே இல்லை. ஐ அம் ஹாப்பி. எனக்கு என்ன குறை?” என்று அவள் முகம் பார்த்து புன்னகையோடு கேட்டாள் கீர்த்தனா.

‘பிடிவாதக்காரி.’ என்று அவன் எண்ண, ‘பழைய காதல்ன்னு சொன்னா? கட்டின தாலியைக் கழட்டி கொடுத்துட்டு நான் போகணுமா? என்ன முட்டாள்தனம்? ஊரறிய, அக்னி சாட்சியாக பண்ண கல்யாணத்துக்கு என்ன மரியாதை? எல்லாருக்கும் டிவோர்ஸ் ஒரு விளையாட்டா போச்சு.’ என்று எண்ணியப்படியே அவள் மௌனம் காக்க… அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.

இருவரும் ஒருவரையொருவர் காயப்படுத்திவிடக் கூடாது என்றெண்ணி, அவர்கள் இயல்புக்கு மாறாகவே சற்று அமைதியாகவே அவர்கள் நாட்களைக் கடத்தினர். அவர்கள் பிடிமானத்தை விட்டும், பிடிவாதத்தை விட்டும் சிறிதும் இறங்கவில்லை.

‘எத்தனை நாட்களுக்கு?’ என்ற கேள்வி அவர்கள் மனதில் தோன்றினாலும், பதில் இல்லா கேள்வியாக அவர்கள் நாட்கள் நகர்ந்தது.

அதே போல், கொஞ்சம் சண்டை, மிஞ்சும் காதல் என்று நிரஞ்சனா முகுந்தனின் நாட்களும் நகர்ந்தது.

அன்று நிரஞ்சனாவின் பிறந்தநாள்.

முகுந்தன், ஆர்வமாக தன்  மனைவியை காண வீட்டுக்குள் நுழைய, அவன் மெத்தையில் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

“நீரு… என்ன ஆச்சு?” என்று முகுந்தன் பதட்டமாக வினவ, “அப்பா… அம்மா…” என்று அவள் விசும்ப ஆரம்பிக்க, முகுந்தன் அவளைக் கோபமாக முறைத்தான்.

“உனக்கு திருப்தியே வராதா? உனக்காக நான் எவ்வுளவு செய்றேன்? எப்ப பாரும், அம்மா… அப்பா… அப்படின்னு சொல்லிட்டே இருப்பியா? ஏன் என் உயிரை வாங்குற?” என்று முகுந்தன் கடுப்பாகக் கேட்க, அவள் முகுந்தனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

திருமணத்திற்கு பின், முகுந்தனின் இந்த கோபம் புதிது. ஏன் முதன் முறை என்று கூடச் சொல்லலாம். நிரஞ்சனாவின் கண்கள் அந்த அதிர்ச்சியை அப்பட்டமாக காட்ட, “நான் உன்னை புது டிரஸ் போட்டு ரெடியா இருக்க சொன்னேன்.” என்று அழுத்தமாகக் கூறினான்.

“நான் என் பிரண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிருக்கேன்.” என்று முகுந்தன் கூற, நிரஞ்சனா பதட்டமாக எழுந்தாள். “அஞ்சே நிமிஷம் டைம் உனக்கு. எல்லாரும் இப்ப வந்துருங்க. நீ முகத்தை கழுவிட்டு கிளம்பி வெளிய வர.” என்று ஆணையிட, வேறுவழியின்றி கிளப்பி வந்தாள் நிரஞ்சனா.

பிரமாண்டமான கேக், பிஸ்சா பார்ட்டி என்று வீடு களைகட்டியது. நண்பர்களின் ஆர்ப்பாட்டம், கேலி கிண்டல் என நேரம் நகர, நிரஞ்சனா சற்று ஒதுக்கத்தோடும், ஒதுங்க முடியாத நிலையோடும் அவர்களோடு நேரத்தை நகற்றினாள்.

முகுந்தனின் பார்வை அவளையே வட்டமடிக்க, அதையும் கவனித்து கேலி கிண்டலோடு பிறந்தநாளைச் சிறப்பித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

எல்லாரும் அங்கிருந்து கிளம்பி விட, உடையை மாற்றிவிட்டு அங்கிருந்த சோபாவில் மொந்தென்று அமர்ந்தாள் நிரஞ்சனா. அவள் அமர்ந்திருந்த தொனியில் கடுப்பாகி, “உனக்கு என்ன பிரச்சனை? நான் உன்னைச் சந்தோஷமா வச்சிக்கலையா?” என்று கோபமாகக் கேட்டான் முகுந்தன்.

நிரஞ்சனா முகத்தைத் திருப்ப, அவள் முகத்தை அழுத்தமாக தன் பக்கம் திருப்பி, “என்ன பிரச்சனைன்னு கேட்டேன்?” என்று குரலில் அழுத்தம் கொடுத்து, அவள் முன் கோபமாக நின்றபடி கேட்டான் முகுந்தன்.

“நீ தான் பிரச்சனை. நீ தான் என் பிரச்சனை. உனக்கு நான் நல்ல படிக்கணும். நான் நல்ல வேலைக்கு போகணும். இந்த ஊர் உலகத்துக்கு நீ என்னை நல்லா பாத்துக்கறன்னு காட்டணும். இந்த ஊரில், இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருத்தரும் நீ என்னைச் சந்தோஷமா வாழ வைக்கறன்னு சொல்லணும்.” என்று நிரஞ்சனா காட்டமாகக் கூற, “இதுல என்ன டீ தப்பு இருக்கு?” என்று தன் கோபத்தை விட்டு பரிதாபமாகக் கேட்டான் முகுந்தன்.

“என் விருப்பம் தெரியுமா உனக்கு? என் சந்தோசம் என்னனு தெரியலை. என் மனசில் என்ன இருக்குனு உனக்குப் புரியலை.” என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

“நீ லவ் பண்ணும் பொழுது அதிகமா கோபப்பட்டா  கூட, எனக்கு என்ன பிடிச்சிருக்கோ, நான் என்ன நினைக்கிறனோ அதை தான் பண்ணுவ. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்ட. கோபப்படறதில்லை. உன் இயல்புக்கு நேர் எதிர்மாறா! அன்பா தான் இருக்க! ஆனால், என் மனசை நீ புரிஞ்சிக்கவே இல்லை.” என்று நிரஞ்சனா அழுகையோடு கோபமாகக் கூற, “எதுக்கு இப்ப குழப்புற? உனக்கு உங்க அம்மா, அப்பாவைப் போய் பார்க்கணுமுன்னா போ. யாரும் இங்க வேண்டாம்முனு சொல்லலை. உன்னை தடுத்தும் நிறுத்தலை.  அதுக்காக ஏன் சுத்தி வளைச்சி பேசுற? போ இங்கிருந்து போ.” என்று அவன் கடுங்கோபத்தில் கத்தினான்.

“போக வழி இல்லைன்னு தானே இப்படி சொல்ற. இதை உன்னைத் தேடி வந்தனைக்கே சொல்லிருந்தா, எங்கேயோ விழுந்து செத்து தொலைஞ்சிருப்பேன்.” என்று நிரஞ்சனா கண்ணீர் மல்க கூற, “அப்படியே என்னையும் கொன்னுடு.” என்று முகுந்தன் காட்டமாகக் கூற, அவனை பரிதாபமாக பார்த்து அங்கிருந்த சோபாவில் சாய்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் விசும்பல் முகுந்தனின் மனதைக் கசக்கிப் பிழிய, அவளைச் சமாதானம் செய்ய அவன் கைகள் பரபரக்க, துக்கம் தாளாமல்  அவன் நெஞ்சம் வேகமாய் துடிக்க, இவை அனைத்தையும் தாண்டி முகுந்தனின் தான் என்ற அகங்காரம் தலை தூக்கி நின்று அவர்கள் காதலை வேடிக்கை பார்த்தது.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

 

error: Content is protected !!