Kannaadi Maaligai – Episode 2
Kannaadi Maaligai – Episode 2
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 2
அதே நாள் வேலடைன்ஸ் டே மாலையில் நிரஞ்சனாவும், முகுந்தனும் அலைப்பேசியில் பேசிய சில மணித்துளிகளுக்கு முன்…
தன் இரு சக்கர வாகனத்தைச் செலுத்தியபடி சென்னை போக்குவரத்து நிறைந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஓர் இளம் பெண். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஐடென்டிட்டி கார்டை உற்றுப் பார்த்தால், அவள் பெயர் கீர்த்தனா என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
இளம் ரோஜா பூவின் நிறத்தில் காட்டன் சேலை உடுத்திருந்தாள். அவள் தலை முடி, அடர்த்தியாக நீளமாக இருந்தது. அதைச் சற்று தளர்த்தி பின்னி இருந்தாள் கீர்த்தனா. அந்த கூந்தல், அந்த வாகனத்தின் சக்கரத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் நம்முள் எழ, அதை விட சற்று மேலே வரை அசைந்தாடி நம்மைப் பெருமூச்சு விட வைக்கிறது. அவள் தலையில் மல்லிகையும், ரோஜாவும் வீற்றிருந்தது. காலையில் வைத்த பூ போலும்! சற்று வாடி இருந்தது. இருந்தாலும் அதிலும் எதோ ஓர் அழகு நம்மை மயக்குகிறது.
வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள மெரினா கடற்கரைக்குச் சென்று சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு, அதன் பின் வீட்டுக்குச் செல்வது கீர்த்தனாவின் வழக்கம். கடல் காற்று ஓர் புத்துணர்ச்சி. அன்றைய களைப்பை, மறக்கச் செய்து அடுத்த வேலைக்கான புத்துணர்வைத் தரும் என்பது கீர்த்தனாவின் நம்பிக்கை. இன்று அலுவலகத்தில் தன்னுடன் பனி புரியும் தோழி கூறுவது நினைவு வரப் புன்னகைத்தாள்.
‘கீர்த்தனா… வழக்கம் போல இன்னைக்கி பீச் பக்கம் போயிராத… ஜோடி ஜோடியா நம்மளை கொன்றுவாய்ங்க…’ என்ற தோழியின் பேச்சு நினைவு வர, கீர்த்தனாவின் இதழ்கள் புன்னகையில் பெரிதாக விரிந்தது.
தலைக்கவசத்துக்குள் மறைந்து கொண்டும், துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டும் செல்லும் இளம் ஜோடிகள் அவளைக் கடந்து செல்ல, அவர்களைக் கேலியாகப் பார்த்தாள் கீர்த்தனா.
தோழியின் சொல்லுக்கிணங்கி, வண்டியை நேராக வீட்டுக்குச் செலுத்த, ‘நாம ஏன் மத்தவங்களுக்காக நம்மை மாத்திக்கணும். பீச் என்ன இன்னைக்கி அவங்களுக்கு மட்டும் தான் சொந்தமுன்னு எழுதி வச்சிருக்கா?’ என்ற கேள்வி கீர்த்தனாவை சீண்ட, கடற்கரை நோக்கி சென்றாள் கீர்த்தனா.
என்றாவது ஒரு நாள் நாம் கடற்கரையைக் கடந்து விடலாம் என்று நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் ஓயாமல் வரும் அலைகளை ரசித்துப் பார்த்தாள் கீர்த்தனா.
மற்ற நாட்களில் இருப்பதை விட அதிகமாக இருக்கும் ஜோடிகள் கீர்த்தனாவின் கண்களுக்குத் தப்பவில்லை. அவர்களைப் பார்த்த பொழுது, கீர்த்தனாவின் மனதில் பல கேள்விகள்.
‘இவர்களுக்கு எப்படி காதல் வருகிறது? ஒருவரைப் பார்த்தவுடன், இவன் அல்லது இவள் தான் தன்னவன், தன்னவள் என்று எண்ண முடிகிறது?’ என்று கீர்த்தனாவின் சிந்தனை ஓட ஆரம்பித்தது.
‘இவர்கள் அப்படி முடிவு செய்ய, இந்த இளைஞர்கள் அப்படி எத்தனை மனிதர்களைச் சந்தித்திருப்பார்கள்? பெற்று, வளர்த்து, படிக்க வைத்து என எல்லாம் செய்யும் பெற்றோர்கள், இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டார்களா? இவர்களுக்கு என்ன அவசரம்? எதற்காக இந்த அவசரம்?’ என்று அந்த இளம் ஜோடிகளைப் பார்த்து ஏளனமாக எண்ணியது கீர்த்தனாவின் நுண்ணறிவு.
அன்பான வாசகர்களே!
நான் காதலுக்கு எதிரி அல்ல… இருப்பினும் சில சந்தேகங்கள்!
‘காதலால் பல சிக்கல்களைக் கேட்டறிந்த அவள் மனம், இந்த காதல் இவர்களுக்குத் தேவையா? உண்மையில் இங்கிருக்கும் அனைத்து காதலும் திருமணத்தில் முடியுமா? திருமணத்தில் முடிந்தாலும் இருவரின் பெற்றோரும் மனம் ஒப்பி ஏற்றுக் கொள்வார்களா?’ என்ற சந்தேகம் கீர்த்தனாவின் மனதில் எழ, அவள் கவனத்தை திசை திருப்பியது ஓர் குரல்.
“என்ன… இங்கன தனியா குந்தின்னுருக்க? ஒன் ஜோடி வரல?” என்று தள்ளாடியாடி ஓர் இளைஞன் கீர்த்தனாவின் அருகே நின்று கேட்டான்.
அவனை மேலும் கீழும் பார்த்தாள் கீர்த்தனா. ‘உடலில் தெம்பில்லை. சுற்றி இத்தனை மக்கள் ஜனம். நான் ஒன்னு விட்டால் இவன் தாங்குவானா? இதெல்லாம் யோசிக்காமல், போதையில் என்கிட்டே வம்பு பண்ண வந்துட்டான்.’ என்று முகம் சுழித்து வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள் கீர்த்தனா.
மீண்டும் அவள் கண்களில் இளம் ஜோடிகள் பட, ‘பாவம் இவர்களும் விவரம் அறியா வயதில், காதல் என்னும் போதையில் சிக்கிக் கொண்டார்கள் போல… கடவுளே நீ தான் எல்லாரையும் காப்பாத்தணும்.’ என்று அவர்களுக்காக கீர்த்தனா வேண்டிக்கொள்ள, “ஏய். ஏன்னா டீ லந்தா?” என்று அந்த குடிகார இளைஞன் மீண்டும் பேச, “கீர்த்தனா…” என்ற குரலில் அவள் திரும்பி பார்க்க, அங்கு முகுந்தன் நின்று கொண்டிருந்தான்.
“நீங்க எங்க இங்க?” என்று முகுந்தன் கீர்த்தனாவிடம் பேச, அந்த குடிகார இளைஞன் வந்த வழியே சென்று விட்டான்.
“சார்…. இது நான் உங்க கிட்டக் கேட்க வேண்டிய கேள்வி.” என்று புன்னகையோடு பதில் கூறினாள் கீர்த்தனா. “கீர்த்தனா, நான் பல தடவை சொல்லிட்டேன். நீங்க படிச்ச அதே படிப்பு தான் நானும். நானும் உங்க பேட்ச் தான். எங்க குடும்ப சிட்டுவேஷன் நான் எம்.டி. நீங்க எம்பிளாய். அவ்வுளவு தான். கால் மீ முகுந்தன்.” என்று முகுந்தன் தோரணையாகக் கூற, முகுந்தனின் மொபைல் ஒலித்தது.
மொபைலை சைலன்ட்க்கு மாற்றி விட்டு, “நீங்க கிளம்புங்க. இன்னைக்கி இங்க என்ன பண்ண போறீங்க?” என்று முகுந்தன் கூற, அவன் கூறுவது சரி என்று தலை அசைத்து கிளம்ப எத்தனித்தாள் கீர்த்தனா.
‘உங்களுக்கு என்ன வேலை.’ என்று கேட்கத் தோன்றினாலும், கேட்பது அநாகரிகம் என்று கருதி மௌனமாகத் தலை அசைத்து விடைபெற்றாள் கீர்த்தனா.
கீர்த்தனா கிளம்புவதை உறுதி செய்து விட்டு, நிரஞ்சனாவை தேடிச் சென்றான் முகுந்தன். அவளோ இலக்கில்லாமல் கடலை நோக்கி செல்ல, வேகமாக அவள் பின்னோடு சென்று அவளை தன் பக்கம் திருப்பி, பளாரென்று அறைந்தான் முகுந்தன்.
‘எதற்கு அறைந்தான்.’ என்று புரியாமல், நிரஞ்சனா பேந்த பேந்த முழிக்க, ‘அவசரப்பட்டுவிட்டோமோ…’ என்று எண்ணினான் முகுந்தன். “இல்லை… நீ கடல் பக்கமா அப்படியே போயிட்டு இருந்தியா… அது தான் பயந்துட்டேன்.” என்று முகுந்தன் தடுமாற, “செத்துருவேன்னு நினைச்சியா?” என்று காட்டமாகக் கேட்டாள் நிரஞ்சனா.
பதட்டமாக நிரஞ்சனாவின் இதழ்களை, முகுந்தன் தன் கைகளால் மூட, முகுந்தனின் கைகளை வேகமாகத் தட்டி விட்டாள் நிரஞ்சனா.
அதே வேகத்தோடு, கரைக்கு வந்து பொத்தென்று அமர்ந்தாள் நிரஞ்சனா. நிரஞ்சனாவின் அருகே பெருமூச்சோடு அமர்ந்தான் முகுந்தன்.
“என்ன சாக போறேன்னு நினைச்சியா?” என்று கடுங்கோபத்தோடு மீண்டும் கேட்டாள். “நீ விட்டுட்டு போனதுக்கெல்லாம் நான் சாக மாட்டேன்.” என்று சிறு பிள்ளை போல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நிரஞ்சனா.
முகுந்தன் நிரஞ்சனாவை புன்னகையோடு பார்க்க, “இல்லை நான் செத்தா உனக்கு என்ன? என்ன சொன்ன… நான் உன்னை லவ் பண்ணலை… என்னை மாதிரி பணக்கார பையன் உன்னை மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பொண்ணை ஏன் லவ் பண்ணனும்? ஜஸ்ட் டைம் பாஸ்… போதுமா… போ… உனக்கும் எனக்கும் ஒரு மண்ணுமில்லை.” என்று முகுந்தன் கூறியதை அவள் மீண்டும் கூற, முகுந்தன் நிரஞ்சனாவை கெஞ்சுவது போல் பார்த்தான்.
“உனக்கும் எனக்கும் ஒரு மண்ணுமில்லையா? நான் உனக்கு டைம் பாஸா?” என்று நிரஞ்சனா, கண்களில் கண்ணீர் மல்கக் கேட்க, நிரஞ்சனாவின் கண்ணீரைத் துடைத்தபடி, “நீ மட்டும் என்னைப் பார்த்து உன் மேல் லவ் இல்லைன்னு சொல்லலாமா?” என்று முகுந்தன் தன் காதலியின் கோபத்தைக் குறைக்க இறங்கிப் பேசினான்.
செல்வத்தில் புரளும் முகுந்தனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்க பல பெண்கள் இருக்க, அவன் தன் காதலியின் இன்முகம் காண ஏங்கி நின்றான்.
நிரஞ்சனா, தன் கண்களைத் துடைத்தபடி, “சாரி…” என்று கூற, அவள் கன்னத்தை வருடி, “சாரி டீ… நான் உன்னைப் பார்த்து பயந்துட்டேன். நான் பேசினதுல நீ கோபத்தில் தான் அப்படி கடலுக்குள்ள நடந்தியோன்னு…” என்று முகுந்தனின் குரல் மன்னிப்பை யாசிக்க, புன்னகையோடு மறுப்பாகத் தலை அசைத்தாள் நிரஞ்சனா.
“ஏன் லேட்?” என்று நிரஞ்சனா அடுத்த சண்டைக்குத் தயாராக, “நான் இன்னைக்கி நம்ம மீட் பண்ண வேண்டாமுன்னு சொன்னேன்…. நீ தான் கேட்கலை. திடீருன்னு நீ வர சொன்னா… எப்படி வரது? மீட்டிங்… அப்புறம் டிராபிக் அப்படின்னு லேட் ஆகிருச்சு.” என்று முகுந்தன் சற்று கோபமாகவே விளக்கம் கொடுத்தான்.
“நான் ஒன்னும் உங்களைப் பார்க்க ஆசைப் பாட்டு வரச் சொல்லலை. நம்ம விஷயம் எப்படியோ வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு. எப்ப என்ன ஆகுமுன்னு எனக்கு தெரியலை. அது தான் என் பிரெண்ட்ஸ் எல்லாரும் வெளிய போறாங்க. அவங்க கூட போறேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன். சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. நான் கிளம்புறேன்.” என்று நிரஞ்சனா எழுந்து கோபமாக நடக்க எத்தனிக்க, “அவசர குடுக்கை…” என்று நிரஞ்சனாவை கேலி பேசி, அவள் கைகளைப் பிடித்து முகுந்தன் இழுக்க, நிரஞ்சனா கடற்கரை மண்ணில் சரிந்து விழுந்தாள்.
நிரஞ்சனா கோபமாக முறைக்க, முகுந்தன் அவளைச் சமாதானம் செய்ய, காதலர்களின் ஊடல் குறைந்து காதல் மேலோங்க, அவர்களை இரு கண்கள் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் வாஷிங்டனில், களேரியா மாலில் லீலாவின் பேச்சைக் கேட்கப் பொறுமையாக அமர்ந்திருந்தான் விஜயேந்திரன்.
லீலா மறுப்பாக தலை அசைத்து, மௌனம் காத்தாள்.
லீலா – கோபால் என்ற இந்திய தந்தைக்கும், எமிலி என்ற அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவள். லீலா பதினாறு வயதாக இருக்கும் பொழுது ஒத்து வராமல் லீலாவின் தாய் தந்தை பிரிந்து விட, லீலாவுக்கு தனிமையே துணையாகிப் போனது. தாய், தந்தை இருவருக்கும் இவள் மீது பாசம் தான். ஆனால், அவர்கள் இருவரின் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள, லீலாவால் தான் எந்த குடும்பத்தோடும் ஓட்ட முடியவில்லை. லீலா தன் முடிவை தான் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சுயத்தோடு அமெரிக்கத் தாயால், அமெரிக்க மண்ணில் வளர்க்கப்பட்டவள். அதே நேரம், சாய தோளும், தட்டிக்கொடுக்க உறவுகளும், துணை நிற்க அன்பும் வேண்டும் என்று இந்தியத் தந்தையால் போதிக்கப்பட்டவளும் கூட…
பணத்திற்கும், சுகத்திற்கும் பஞ்சமில்லா லீலாவின் மனம் கட்டுப்பாடு விதிக்காத காதலுக்காக ஏங்கி நின்றது.
விஜயேந்திரன்… சென்னையில் தனக்கென பிசினெஸ் சாம்ராஜ்யம் இருக்க, அனுபவத்திற்காகச் சகஜமான அமெரிக்க வாழ்வை விரும்பி வாழும் இளைஞன். விதிவசத்தாலோ? இல்லை வயதின் வசத்தாலோ? இல்லை காதல் வசத்தாலோ? லீலாவின் அழகில் மயங்கி நின்றான்.
விஜயேந்திரியனுக்கு லீலாவின் மேல் பரிதாபம்… காதல்… ஆசை… என கூறிக்கொண்டே போகலாம்.
லீலாவின் பின்னணி தெரிந்த விஜயேந்திரனுக்கோ அவள் இன்று கண் கலங்கும் காரணம் தான் புரியவில்லை.
அவளே மௌனத்தை உடைக்கட்டும் என்று, லீலாவின் கைகளை தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டு, சீராக வளர்க்கப்பட்டு நகப்பூச்சு பூசப்பட்ட அவள் விரல்களை வருடியபடி அதைப் பார்த்துக் கொண்டிருக்க… “விஜய்… உனக்கு நகம் வளர்த்தா பிடிக்காதில்லை. நான் சீக்கிரம் மாத்திக்கறேன்.” என்று லீலா சம்பந்தமில்லாமல் பேச்சை ஆரம்பித்தாள்.
மறுப்பாகத் தலை அசைத்தான் விஜயேந்திரன். “எனக்கு இது பிடிச்சிருக்கு. நீ நீயா இருக்கணும். உனக்கு பிடிச்ச மாதிரி. கல்யாணம்ங்கிறது நாம் இனிமையா பயணிக்க வேண்டிய விஷயம். நாம அதில் நம் சுயத்தைத் தொலைக்கக் கூடாது.” என்று விஜய் அழுத்தமாகக் கூற, “அப்ப… நான் உனக்காக சாரி கட்ட வேண்டாமா? என் கூந்தலை நீளமா வளர்க்க வேண்டாமா?” என்று லீலா கேள்வியாக நிறுத்த, “என்னைக்காவது ஒரு நாள் எனக்காக அப்படி இரு… மத்த நேரம் நீ உனக்கு பிடிச்ச மாதிரி இரு…” என்று விஜய் கூற, ‘என் விஜய்…’ என்று எண்ணி அவனைப் பெருமையாகப் பார்த்தாள் லீலா.
“விஜய்….” என்று ஆழமான குரலில் அழைத்து, “லோன்லினஸ் இஸ் கில்லிங் மீ… ஒன்னு நாம இப்பவே மேரேஜ் பண்ணிப்போம். ஆர் லெட்ஸ் லிவ் டுகெதர்…” என்று அமெரிக்கப் பெண்ணாக லீலா கேட்க, விஜய் கூறிய பதிலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தவித்தாள் லீலா.
வாழ்வென்னும் கண்ணாடி மாளிகையில்…
காதல் என்னும் மாயவலையில் சிக்கியதால், இவர்கள் வாழ்வில் விழப்போகும் முடிச்சுகள் என்ன?
அதை இவர்கள் அவிழ்க்க…
இவர்களின் கண்ணாடி மாளிகை நிற்குமா?
சுக்கு நூறாக உடையுமா?
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…