கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  20

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  20

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  20

தலையிலிருந்து வடிய ஆரம்பித்த இரத்தம், நிரஞ்சனாவின் முகத்தில் வழிந்து அவள் கண்களைத் தாண்டி வழிந்தது. நிரஞ்சனா சுயநினைவின்றி சரிந்து விழுந்தாள். தன் மனைவியின் பால் வடியும் அழகிய முகம் மெல்ல மெல்ல மறைந்து ரத்த வெள்ளத்தில் காட்சி அளிக்க, முகுந்தனின் உடல் நடுங்கியது.

‘ஐயோ…’ என்று அவன் மனம் அலற, அவனுக்கிருந்த வலியில் சத்தம் வராமல் தவித்தான் முகுந்தன்.

கூட்டம் அவர்களைச் சூழ, அனைவரின் உதவியோடு அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர். அதற்குள், முகுந்தன் அவன் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தான்.

நிரஞ்சனாவிற்கு, தையலிட்டு மயக்கம் தெளிய அவள் கண்கள் முகுந்தனைத் தேடியது. நிரஞ்சனாவின் முகம் அப்பட்டமாக வலியை வெளிக் காட்ட, முகுந்தனின் நண்பர்கள் அவளை நெருங்கினர்.

“முகுந்த் எங்க?” நிரஞ்சனாவின் குரல் பதட்டத்தில் துடித்தது. “ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு.” மெல்லமாக வெளி வந்தது நண்பர்களின் குரல்.

படக்கென்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா. “இல்லை… அவங்களுக்கு அடி படவே இல்லையே. நான் பார்த்தேன். நான் பார்த்தேன். நல்லா தான் இருந்தாங்க.” என்று நிரஞ்சனா எழுந்து நிற்க, அவள் தள்ளாடி விழுகையில் நண்பர்கள் அவளை தாங்கி பிடித்தனர்.

“எனக்கு ஒண்ணுமில்லை. என்னை அவங்க கிட்ட கூட்டிட்டு போங்க. நான் அவங்களை பார்த்தா நல்லா ஆகிடுவேன்.” என்று கூறிக்கொண்டே முன்னே நடக்க, அவளை ஐ.சி. யூ. விற்கு அழைத்துச் சென்றனர்.

ஐ.சி. யூ. வில் சுயநினைவை இழந்து படுத்திருக்கும், முகுந்தனைப் பார்த்த, நிரஞ்சனாவின் உலகம் தட்டாமாலை சுற்றியது.

நிற்க முடியாமல், நிரஞ்சனாவின் கால்கள் தடுமாற, பலத்தைத் தேடி அங்கிருந்த சுவரில் சாய்ந்தாள் நிரஞ்சனா. “நான்… நான் டாக்டரை பார்க்கணும்.” அவள் கண்ணீர் மல்க கூற, சிறிது நேரத்தில் அவள் மருத்துவரைச் சந்தித்தாள்.

மருத்துவர், ஏதேதோ கூற, அந்த பேதை பெண்ணால், எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் அறிவும், அவள் மனமும் செயலிழந்து நடுக்கத்திலிருந்தது. மருத்துவர் கூறிய, மருத்துவ சிக்கல்களுக்கும், இடர்பாடுகளுக்கும் அவள் செவி சாயவில்லை. அவள் செவிகளில் ஒலித்தது, ‘முகுந்தன் உயிருக்கு ஆபத்து. ஆபரேஷன் பண்ண லட்சக் கணக்கா பணம் வேணும்.’ இது மட்டுமே அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. நிரஞ்சனாவிற்கு இப்பொழுது அவள் வலி தெரியவில்லை. முகுந்தன்… முகுந்தன்… முகுந்தன் அவள் சிந்தை எங்கும் முகுந்தன் மட்டுமே நிறைந்திருந்தது.

முகுந்தனின் நண்பர்கள் உதவி செய்வார்கள் தான். ஆனால், அவர்கள் எவ்வுளவு உதவி செய்ய முடியும்? நிரஞ்சனாவின் எண்ணங்கள் தறி கேட்டு ஓடியது. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, கைகளைத் நாற்காலியில் ஊன்றியபடி, சில நொடிகள் யோசித்தாள். அதன் பின் நண்பர்களிடம் சென்று, “நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். நீங்க முகுந்தனை பார்த்துக்க முடியுமா?” என்று அவள் கேட்க, “நீங்க தனியா போக வேண்டாம். நாங்களும் வரோம்.” என்று கூற, மறுப்பாகத் தலை அசைத்து நிரஞ்சனா தனியே பயணிக்க ஆரம்பித்தாள்.

இது பயணத்தின் ஆரம்பமா? நிறைவா? என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல்!

நிரஞ்சனா நேராக, அவள் வீட்டிற்குச் செல்ல, அவள் தலையில் கட்டு, அவள் இருந்த கோலத்தைப் பார்த்து, “அக்கா….” என்று அலறிக்கொண்டு வாசலை நோக்கி ஓடினாள் ஸ்வாதி.

“அக்கா… என்ன ஆச்சு? என்னக்கா ஆச்சு?” ஸ்வாதி நிரஞ்சனாவின் தோள்களைப் பிடித்துக் கொண்டு பதட்டமாகக் கேட்க, “எங்க டீ வந்த?” என்று நிரஞ்சனாவின் தாய் சுந்தரியின் குரல் கோபமாக ஒலித்தது.

நிரஞ்சனா, தன் தாயை பரிதாபமாகப் பார்க்க.. “அக்கா… என்ன ஆச்சுன்னு சொல்லு அக்கா.” என்று ஸ்வாதி தன் தாயை முந்திக் கொண்டு கேட்டாள் ஸ்வாதி.

நிரஞ்சனா வார்த்தைகள் வெளி வராமல் தவிக்க, “என்ன பெருசா நடந்திருக்கும்? வேலை முடிஞ்சி போச்சுன்னு அடிச்சி பத்திருப்பான். நாய், கையில் வேலை இல்லை. படிப்பும் இல்லை. வாழ வக்கில்லாமா, சாப்பிட வழி இல்லாம நம்ம வீட்டு வாசலில் வந்து நிக்குது.” என்று சுந்தரியின் குரலை ஆங்காரமாக ஒலித்தது.

‘அம்மா… இப்படி கூட பேசுவாங்களா?’ என்று கண்களில் பரிதவிப்போடு தன் தாயைப் பார்த்தாள் நிரஞ்சனா. “அம்மா.. கொஞ்சம் சும்மா இருங்களேன். அக்காவே அப்படி வந்திருக்கா. அவளைப் பேச விடுங்கள்.” கூறி ஸ்வாதி நிரஞ்சனாவிடம் பேச, “ஆக்சிடென்ட் ஆகிருச்சு ஸ்வாதி. முகுந்தன் ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அவங்களை காப்பாத்தணும். எனக்கு உங்களை விட்ட யாரை தெரியும் ஸ்வாதி?” என்று அவள் தங்கையின் தோள்களில் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.

“செஞ்ச பாவம் சும்மாவா விடும்? படிக்குற பொண்ணை இழுத்துட்டு ஓடினா, இப்படி தான் நடக்கும். பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது டீ. நீ நாசமா தான் போவ. அவர் பொழைக்க…” என்று சுந்தரி பேச, “அம்மா..” என்று தன் காதுகளை மூடிக் கொண்டு அலறினாள் நிரஞ்சனா.

வேதனை, ஏமாற்றம், அழுகை, இவை அனைத்தையும் தாண்டி, அவள் கோபம் விஸ்வரூபம் எடுத்தது.

முகுந்தனின் நிலை நிரஞ்சனாவின் கண் முன் தோன்ற, அவள் கோபம் நீர் பட்ட நெருப்பைப் போல்  பிசுபிசுத்துப் போனது. “அம்மா…” என்ற அழுகையோடு வந்த நிரஞ்சனாவின் குரல், சுந்தரியின் மனதை தொடவில்லை. மாறாக அவள் இழப்பைச் சீண்டிப் பார்த்தது.

“அப்படி கூப்பிடாத. நீ செத்துட்ட. இனி உனக்கு என்னவானா எனக்கென்ன? வெளிய போ. அம்மா, அப்பா வேண்டாமுன்னு தூக்கி போட்டுட்டு போற ஒவ்வொரு பொண்ணோட நிலைமையும் ஏதோ ஒரு விதத்தில் இப்படி தான் இருக்கும்.” என்று சுந்தரி பிடிவாதமாகக் கூற, செய்வதறியாமல் தன் தாயின் கோபத்திற்கும், தன் அக்காவின் கண்ணீருக்கும் இடையில் ஸ்வாதி தவித்தாள்.

சடாரென்று தன் தாயில் காலில் விழுந்தாள் நிரஞ்சனா. “அம்மா… தப்பு தான். நான் பண்ணது பெரிய தப்பு தான். எல்லா பிரச்சனையும் என் காதலால் தானே வந்துச்சு. நான் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.” என்று தாயின் பாதத்தில் முட்டிக் கொண்டு கதறினாள் நிரஞ்சனா.

மகளின் வருத்தத்தில் தாயின் மனம் தடுமாற, ஸ்வாதியின் உள்ளம் தவித்தது. “அக்கா. என்ன அக்கா பண்ற? ஏற்கனவே உனக்குத் தலையில் அடிபட்டிருக்கு. நீ எழுந்திரு அக்கா.” என்று ஸ்வாதி தன் தமக்கையின் கண்ணீரைத் துடைத்தபடி கண்ணீரோடு கூற, “அம்மா… என் புருஷனை காப்பாத்தி கொடுங்க அம்மா. அம்மா… வாங்க அம்மா… ஸ்வாதி… அம்மா கிட்ட சொல்லு டீ.” என்று தேம்பிக் கொண்டே, தன் தாயைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள் நிரஞ்சனா.

மேலும் நிரஞ்சனாவை அந்த கோலத்தில் பார்க்க முடியாமல் தவித்த சுந்தரியின் தாய் பாசம் அவளை முகம் திருப்பிக் கொள்ள செய்தது. “ஸ்வாதி. என் புருஷன். உன் அப்பா. இவளால் தான் உடம்பு சரி இல்லாம, இப்ப தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்காங்க. என் தாலியை பறிக்காம அவ இங்கிருந்து போக மாட்டாளா?” என்று சுந்தரி அங்கிருந்த சுவரைப் பார்த்தபடி கேட்க, விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.

தன் தாயை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தாள் நிரஞ்சனா. எழுந்து நின்று தன் கண்களைத் துடைத்துக்  கொண்டு எதுவும் பேசாமல் சாலையை நோக்கி நடந்து சென்றாள்.

“அக்கா…” என்று அழைத்துக் கொண்டு அவள் பின்னே செல்ல, ஸ்வாதி எத்தனிக்க, அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தியது சுந்தரியின் கைகள்.

சுந்தரி கண்களில் கண்ணீரோடு உள்ளே செல்ல, “நீங்க ஏம்மா அழறீங்க? சந்தோஷமா இருங்க.” என்று ஸ்வாதியின்  குரல் தீர்க்கமாக ஒலித்தது.

“என்ன டீ வாய் ரொம்ப நீளுது?” என்று சுந்தரி கோபமாகக் கேட்க, “நான் மதிக்க வேண்டிய இடத்தில்  நீங்க இருக்கீங்க. இல்லைன்னு இப்ப தானே தெரியுது.” என்று ஸ்வாதி குரலை உயர்த்த, படாரென்று அவள் கன்னத்தில் சுந்தரியின் கைகள் இறங்கியது.

“அடி ம்மா. அடிச்சி கொன்று. இன்னைக்கு நீ அக்காவுக்கு பண்ணதை விட அது மேல்.” என்று ஸ்வாதி கூற, சுந்தரி அவளை ஆழமாகப் பார்த்தார்.

“அக்கா என்ன அம்மா பெரிய தப்பு பண்ணிட்டா? லவ் பண்ணா. தப்பு தான். ஆனால், அவ்வுளவு பெரிய தப்பு இல்லையே?” என்று ஸ்வாதி கூற, “திருட்டு கல்யாணம் பண்ணிருக்கா உங்க அக்கா. அதுக்கு  நீ வக்காலத்தா?” என்று சுந்தரியின் குரல் கோபமாக ஒலித்து, “உங்க அப்பா மாத்திரை சாப்பிட்டு தூங்கிட்டு இருக்காங்க. அமைதியா உன் வேலையை பாரு. எதுக்கு தேவை இல்லாத பேச்சு?” என்று சுந்தரி உள்ளே செல்ல தன் தாயின் வழியை மறித்து நின்றாள் ஸ்வாதி.

“அக்கா கல்யாணம் பண்ணி கிட்டதுக்கு நீங்க தான் காரணம். அக்காவும் அத்தானும் இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவிலே இல்லை. விஷயம் தெரிஞ்சவுடனே, இதை பக்குவமா பேசாம, அக்காவை ஏமாத்தி அவளுக்குக் கல்யாணம் பண்ண நினைச்சது நீங்க. அவ வாழ்க்கையை காப்பாத்திக்க அவளுக்கு வழி தெரியலை. அதுக்கு தான் அப்படி பண்ணிட்டா. அக்கா பண்ணது தப்பு தான். ஆனால், அதுக்கு நீங்க தான் முக்கிய காரணம்.” என்று ஸ்வாதி கூற, சுந்தரி தன் மகளைக் கோபமாகப் பார்த்தார்.

‘உண்மை சுடத் தான் செய்யும்.’ என்று ஸ்வாதியின் எண்ணப் போக்கு ஓட, “அம்மா… அத்தான் நல்லவர் அம்மா.” என்று, ‘உனக்கு எப்படி தெரியும்?’ என்பது போல் தன் மகளைப் பார்த்தார் சுந்தரி.

“அக்காவுக்கும் உங்க மேல பாசம் அதிகம் அம்மா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீ புத்திசாலித்தனமா நடந்துக்கோ. அம்மா, அப்பாவை பாத்துக்கோன்னு சொல்லுவா அம்மா. அக்காவும், அத்தானும் உங்களை விட நல்லவங்க அம்மா. அவங்க செஞ்ச தப்பு, நீங்க செஞ்ச தப்பை விட கம்மி தான் அம்மா.” என்று அங்கிருந்த சுவரில் சாய்ந்து மண்டியிட்டு அமர்ந்து, முகம் மூடி தன் தமக்கையின் நிலைமையை எண்ணி கதறி அழுதாள் ஸ்வாதி.

அதே நேரம், கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது. ‘மாமா எவ்வுளவு நல்லவங்க? அத்தை என் மேல் எவ்வுளவு பாசமா இருக்காங்க. எனக்கு அம்மா இல்லைங்கிற எண்ணமே, இப்ப எல்லாம் எனக்கு வரவே இல்லையே! ஆனால், நான் இந்த வீட்டை விட்டு, இங்க கிளம்ப வேண்டிய நிலை. இது தான் என் விதியோ?’ என்ற கேள்வி கீர்த்தனாவின் மனதில் தோன்ற, அவள் கண்களில் வரும் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஹ்ம்ம்ம்….” கீர்த்தனாவின் பெருமூச்சு அந்த அறையைச் சூழ்ந்தது. “எனக்கு எதுமே முழுமையா கிடைக்காதோ? இது தான் என் விதியோ?” என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு, தன் பெட்டியை அடுக்கினாள் கீர்த்தனா.

‘இன்னைக்கு அத்தை, மாமா கிட்ட சொல்லிட்டு இங்கிருந்து கிளம்பனும். போதும் நான் எதிர்பார்த்ததும், ஏமாந்ததும் என் வீட்டுக்கு போகணும்!’ என்ற முடிவோடு கீர்த்தனா அறையிலிருந்து வெளியே வந்து படிகளில் இறங்கி வர, நிரஞ்சனா பதட்டமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏய்! நில்லு.” என்று முகுந்தனின் தாயின் குரல் அதிகாரமாக ஒலித்தது. அந்த குரலை உதாசீனப்படுத்தி விட்டு, வீட்டிற்குள் அவள் பார்வையைச் செலுத்தினாள் நிரஞ்சனா.

கீர்த்தனா இறங்கி வர, நவநீதன் தன் மனைவியின் குரலில் வாசல் பக்கம் திரும்பினார். நிரஞ்சனாவின் கோலத்தைப் பார்த்து, “என்ன ஆச்சு?” என்று பதட்டமாக வினவினார் நவநீதன்.

“ஆக்சிடென்ட்… முகுந்தன் ஹாஸ்பிடல்ல இருக்காங்க. ஆபரேஷன் பண்ணனும். அவரை காப்பாத்துங்க. ” என்று நிரஞ்சனா அழுகையோடு கூறினாள், “என்ன சொல்ற?” என்று நவநீதன் பதட்டமாகக் கேட்க, அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து, “படுபாவி. என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்ச… இப்ப கொன்னுட்டியா?” என்று கோபமாகக் கத்தினார் பூமா.

ஒல்லியான தேகம், சின்ன பெண், தலையில் காயம், வலி, மனதில் சுமை, பயம் அவள் கால்கள் தள்ளாடியது. கடைசியில் எப்பொழுது சாப்பிட்டால் என்று தெரியவில்லை என்பதைச் சோர்ந்து போன அவள் கண்கள் அப்பட்டமாக வெளிக்காட்டியது.

பூமாவின் தாக்குதலில், சுழன்று விழுந்தாள் நிரஞ்சனா. “உன் ராசி தாண்டி… எல்லாத்துக்கும் நீ தான் காரணம். குடும்பத்தை  விட்டு முகுந்தனை பிரிச்சி. பெரிய கம்பனியில் எம். டி. ஆக இருந்த அவனை சாதாரண வேலைக்காரனாய்  மாற்றி, இன்னைக்கி படுக்க வச்சிட்டியே.” என்று அவர் துவேசத்தோடு கூற, நிரஞ்சனா அவளை கண்டுகொள்ளவில்லை.

‘தன் மாமியாருக்கு இப்படி ஒரு முகமா?’ கீர்த்தனா அதிர்ச்சியில் உறைந்து போனாள். நிரஞ்சனா, தன் மொத்த பலத்தையும் திரட்டிக் கொண்டு, கீர்த்தனாவை நோக்கி ஓடினாள்.

“உங்க ஹஸ்பண்ட் எங்க? முகுந்தன் அண்ணன் இருந்தா எல்லா பிரச்சனையும் சரி ஆகிரும் கூப்பிடுங்களேன். நான் கால் பண்ணேன் எடுக்கலை. நீங்க கூப்பிட்டுச் சொல்லுங்களேன்.” என்று தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற நிரஞ்சனா, கீர்த்தனாவிடம் கெஞ்ச, செய்வதறியாமல் நிரஞ்சனாவைப் பரிதாபமாகப் பார்த்தாள் கீர்த்தனா.

நவநீதன், “பூமா, கிளம்பு. நாம முகுந்தனைப் பார்க்கப் போகலாம்.” என்று கூற, “போலாம். ஆனால், இந்த பொண்ணை வெளிய போக சொல்லுங்க. இவ கூட இருந்தால், முகுந்தன் ஒரு நாளும் நல்லா இருக்க மாட்டான். அவளை முகுந்தன் வாழ்க்கையை விட்டுப் போக சொல்லுங்க.” என்று பூமா அழுத்தமாகக் கூறினார்.

பூமாவின் பேச்சு நிரஞ்சனாவின் தலையில் இடியை இறக்க, “முடியாது. முடியாது.” என்று பயத்தில் அலறினாள் நிரஞ்சனா.

“அத்தை…” என்று கீர்த்தனா ஏதோ கூற ஆரம்பிக்க, “கீர்த்தனா. நீ சும்மா இரு.” என்று தன் மருமகளை அடக்கினார் பூமா.

நவநீதன், தன் மனைவியைக் கோபமாகப் பார்க்க, “நீ முகுந்தன் மேல வச்சிருக்கிற பாசம் உண்மைனா, அவன் நல்லா இருக்கணுமுன்னா நீ போய்டு.” என்று பூமா ஆணையிட, ‘நான் விலக வேண்டுமா? முகுந்தனுக்காக நான் விலகினால் தப்பில்லையோ?’ என்று நிரஞ்சனாவின் அறிவு சிந்திக்க, நிரஞ்சனாவின் மனம் முரண்டு செய்தது.

“அவன் கட்டின தாலியைக் கழட்டி கொடுத்துட்டு போ.” என்று பூமா ஆத்திரமாகக் கூற, “பூமா.” என்று கத்தினார் நவநீதன். “இவளால் தாங்க முகுந்தன் இப்படி இருக்கான். இவ அவனை விட்டுட்டு போய்ட்டா. முகுந்தன் நல்லாகிருவன்.” என்று பூமா அழுத்தமாகக் கூறினார்.

தன் மாமியார் மேல் இருந்த மொத்த பிம்பமும், கீர்த்தனாவுக்குச் சுக்கு நூறாக உடைந்தது. ‘சுயநலம் பிடித்த மனிதர்கள். விஜயேந்திரன் தன் தாயைப் போல் தான் போலும்.’ என்று கீர்த்தனாவின் மனம்  பூமாவின் பேச்சோடு விஜயேந்திரனின் செயலை ஒப்பிட்டு பார்த்தது.

நிரஞ்சனா குழம்பியது ஓர் நொடி தான், மொத்த பலத்தையும் திரட்டிக் கொண்டு, பூமாவின் முன் நின்றாள் நிரஞ்சனா.

“முடியாது. நான் என் முகுந்தனை  எங்கயும் விட்டுக் கொடுக்க  முடியாது. உங்க பையன், நீங்க இல்லைனாலும் பரவைல்லைன்னு தான், என்னைக் கல்யாணம் செய்துகிட்டார். உங்க பையன்னு சொல்கிறதை விட, என் கணவர்ன்னு சொல்றதில் தான் முகுந்தனின் மூச்சு இருக்கு. நான் விலகிப் போனால், முகுந்தன் தாங்க மாட்டார். என்னைக்காவது ஒரு நாள், உங்க கூட சமாதானம் ஆகலாமுன்னு நினைச்சிருந்தோம். இனி ஒரு நாளும் நடக்காது. முகுந்தன் எழுந்து வந்ததும், நான் எல்லாத்தயும் அவன்  கிட்டச் சொல்லுவேன். முகுந்தன் பார்த்துப்பார்.” என்று கண்ணீர் மல்க நிரஞ்சனாவின், இளம் இரத்தமும், காதல் கொண்ட மனமும் பேசியது.

“நான் முகுந்தன் மேல வச்சிருக்கிற அன்பு உண்மைன்னா, என் முகுந்தன் பொழச்சிப்பான். அப்ப, பையன் உரிமை கொண்டாடிட்டு வாராதீங்க. நான் உங்களை சேர்த்துக்க மாட்டேன்.” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீராவேசமாகக் கூறினாள் நிரஞ்சனா.

‘ஏதோடும், யாரோடும் வாழ்க்கை முடிவதில்லை.’ என்று நிரஞ்சனா சொல்லாமல் சொல்லிக்கொண்டே போக, அதைப் புரிந்தார் போல் கீர்த்தனாவின் உதட்டில் மெல்லிய வளைவு தோன்றியது.

அதற்கு மேல் முகுந்தனின் வீட்டில் நிற்க, மனமில்லாமல், நிரஞ்சனா வெளியே சென்று சாலையில் நடந்தாள். மேலும் நடக்க முடியாமல் அவள் கால்கள் தள்ளாட, அங்கிருந்த பூங்காவில் அமர்ந்தாள் நிரஞ்சனா.

‘நான் கோபமா  பேசிட்டு வந்துட்டேன். முகுந்தனை நான் எப்படி காப்பாத்த போறேன். முகுந்தன் அம்மா சொன்ன மாதிரி, நான் விலகிட்டா எல்லாம் சரியாக்கிருக்குமா? நான் தான் முகுந்தனுக்கு இடைஞ்சலோ?’

என்று நிரஞ்சனாவின் மனம் குழப்பத்தில் தவிக்க,                                           அப்பொழுது அருகே இருந்த தேநீர்க் கடையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிரஞ்சனாவின் மனதை தீயாய் சுட்டது.

 “பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாளாலதான்

கருவோடு வந்தது தெருவோடு போவது

மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி

நடக்குதம்மா வேஷம் கலைக்

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேலை

நெருங்குதம்மா

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா”

 

“ஓ….” என்று நிரஞ்சனா தன் காதுகளை மூடிக்கொண்டு அலறுமுன், அவள் தோளில் ஓர் கை ஆதரவாக விழுந்தது.

 

“யாருக்கு இல்லை இழப்புகள்? வாழ்க்கை இழப்புகளோடு முடிவதில்லை!

 துன்பம் இல்லா பணக்காரன் உண்டா? இன்பம் இல்லாத ஏழைகளும் இல்லை!

 ஒரு முறை கூட அழாத ஆண்கள் உண்டா? துன்பத்தில் அழுது மடிபவர்கள் பெண்களும் இல்லை!”

கண்ணாடி மாளிகை உடைந்தது நிஜம்!  வலிகள் காத்திருப்பது நிஜம்! காதல் நிறைந்திருப்பதும் நிஜம்!

வலிகள் தாண்டியும், வழிகளை அமைப்பது தானே பெண்ணின் சாமர்த்தியசாலித்தனம்?

வாழ்க்கையையும், தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல்… கீர்த்தனா, நிரஞ்சனா இருவரின் நிமிர்ந்த, கம்பீர நடையோடு…

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

 

error: Content is protected !!