kannaadi Maaligai – Episode 3

kannaadi Maaligai – Episode 3

கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 3

அமெரிக்க வாஷிங்டன் களேரியா மாலில்… கண்ணாடி தடுப்புகளோடு பளபளவென்று மின்னும் தரையில் பலர் நடந்து கொண்டிருக்க… வேலடைன்ஸ் டே அன்று… பல இளம் ஜோடிகள் அவர்கள் இளமையை ருசித்துக் கொண்டிருந்தாலும் நம் கவனத்தை ஈர்ப்பது விஜயேந்திரன் லீலா ஜோடி தான்.

லீலாவின் கேள்வியில் அவள் வலிகளும், அவள் எதிர்பார்ப்புகளும் புரிந்தாலும், விஜய் நிதானமாக அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கோடு ஆழமாகப் பார்த்தான்.

“அவசரப்பட்டு கல்யாணம் பண்ண நம்ம லவ் சைல்டிஷ்  லவ் இல்லை. எங்க வீட்லயும் எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சோ திஸ் ஐஸ் தி ரைட் டைம். நான் இந்தியா போனவுடனே, நம்ம விஷயத்தை அம்மா, அப்பா கிட்ட பேசுறேன். சம்மதம் வாங்கினவுடனே கல்யாணம் தான். இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சவுடன் நான் ஒரேடியா இந்தியா போறது தான் என் பிளான். நீயும், நான் கிளம்பி கொஞ்ச நாளில் எல்லாத்தயும் செட்டில் பண்ணிட்டு இந்தியா வந்திரு. ஐ  வில் டேக் கேர்.” என்று கூற, லீலா அவனை ஏமாற்றமாக பார்த்தாள்.

லீலாவின் தோள் மேல் கை போட்டு, அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு நடந்தவாறு, “பேபி. நம்ம கல்யாணம் யாருமில்லாம தனியா நடக்க கூடாது. ஜெக ஜோதியா… செல்வம் செழிக்க செழிக்க கலகலன்னு நடக்கணும். அப்ப என் தேவதை நீ என் பக்கத்தில் சிரிச்சிகிட்டே நிக்கணும். நான் உன்னை ரசிக்கணும். நீ அப்ப வெட்கப்படணும்.” என்று விஜயேந்திரன் ரசித்துக் கூறி, லீலாவை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைக்க லீலா, “ஸ்….” என்று அலறினாள்.

சட்டென்று லீலாவை விலக்கி, அவளை தன் முன் நிறுத்தினான் விஜயேந்திரன்.

லீலா அகப்பட்டுக் கொண்டவளாய் தன் தலையைக் குனிந்து கொள்ள, அவள் தலையை நிமிர்த்தி லீலாவின் இடது பக்க தோள் மேல் இருந்த சட்டையை அகற்றினான் விஜய்.

லீலாவின் இடது தோளுக்கு சற்று கீழே விஜய் என்று பச்சை குத்தியிருக்க, அந்த இடம் சிவந்து காட்சி அளித்தது. லீலாவின் நிறத்திற்கு விஜய் என்னும் பெயர் பளிச்சென்று தெரிய, விஜயின் கண்களோ சிவந்திருந்த அவள் தோள்களைச் சற்று அச்சத்தோடு வருடியது.

விஜயின் கண்கள் கலங்க, “லீலா… உனக்கு வலிக்கலையா?” என்று நடுக்கத்தோடு கேட்டான். “குத்தும் பொழுது வலிக்கிற  மாதிரி இருந்தது. ஆனால், உன்னை நினைச்சவுடனே, ஒரு கிக்கா இருந்தது.” என்று லீலா விளையாட்டுத்தனமாகக் கண்சிமிட்டினாள்.

விஜயின் நடுக்கம், கோபமாக மாறியது. “லூசா நீ… ஏன் இப்படி எல்லாம் பண்ற?” என்று காட்டமாக விஜய் கேட்க, “நான் இப்படி எல்லாம் என் லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணும் பொழுதே, நீ என்னை உடனே கல்யாணம் பண்ண மாட்டேங்குற…” என்று லீலா விஜயை சீண்ட, விஜய் அவளை அடிபட்ட பார்வை பார்த்து விட்டு வேகமாக நடந்தான் விஜயேந்திரன் .

விஜயின் கண்களில் தெரிந்த வலியில் பதறிய லீலா, “ஹே… ஜஸ்ட் கிட்டிங்.” என்று கூறிக்கொண்டே லீலா அவன்  பின்னே சென்று அவன் கைகளைப் பிடிக்க, “நான் உனக்கு எவ்வுளவு பக்குவமா சொன்னேன். உனக்குப் புரியலையா? இல்லை என் மேல் நம்பிக்கை இல்லையா?” என்று கோபமாகக் கேட்டான் விஜய்.

லீலா விஜயேந்திரனை பரிதாபமாக பார்த்தாள். லீலாவின் பரிதாப பார்வையில்  மனம் இறங்கி, மேலே எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான் விஜயேந்திரன்.

“வி.. ஜெய்…” என்று அழைத்துக் கொண்டு காலை தரையில் உதைத்தவாறு, நடந்தாள் லீலா.

“குழந்தையா நீ?” என்று குழைவாகக் கேட்டான் விஜய். “பின்ன இல்லியா? நீ தான் கல்யாணத்துக்கு அப்புறம் என்னைக் குழந்தை மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னியே.” என்று லீலா இழைய, விஜயின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“இனி இப்படிச் செய்யாத.” என்று விஜயின் குரல் கண்டிப்போடு கூற, “இட்’ஸ் லவ்… உனக்குப் புரியலை.” என்று லீலா கடிந்து கொள்ள, விஜய் மீண்டும் கோபமாக நடந்தான்.

“ஹே விஜய்…” என்று அழைத்துக் கொண்டு, விஜயின் பின்னே ஓடி, அவன் காருக்குள் நுழைந்தாள் லீலா. “விஜய்… நீ ரொம்ப பண்ற… கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை எப்படி சுத்த விடுறேன் பாரு?” என்று லீலா தன் தலையைச் சிலுப்ப, “எப்படி?” என்று ஆர்வமாக கேட்டான் விஜய்.

“ட்ரைலர் வேணுமா?” என்று லீலா கண்சிமிட்ட, “ஐயோ சாமி…” என்று அலறி, அவன் காரை உயிர்பித்தான் விஜயேந்திரன்.

“உனக்கு பிடிச்ச பாட்டு…” என்று லீலா, மியூசிக் சிஸ்டத்தை உயிர்ப்பிக்க, பாடலை மென்மையாக முணுமுணுத்தபடி காரை ஓட்டினான் விஜய்.

“நீ சூப்பரா பாடுற…எனக்குத் தான் பாடத் தெரியாது.” என்று லீலா விஜயை பாராட்ட ஆரம்பித்து தன் இயலாமையை சோகமாக முடிக்க, “ரசிக்க தெரிஞ்சா போதும். நான் ரசனையோடு பல விஷயங்கள் சொல்லி தரேன்.” என்று விஜய் கண்சிமிட்ட, “ஹே…” என்று சத்தம் எழுப்பி தன் தலையை அங்குமிங்கும் அசைத்தாள் லீலா. லீலாவை குறும்பு பார்வை பார்த்தான் விஜயேந்திரன்.

அதே நேரம் கீர்த்தனா, தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“பொதுவா சனிக்கிழமை விடுமுறையா தான் இருக்கும். ஆனால் இன்னைக்கி நீ ஆபீஸ் போன, சீக்கிரம் வந்திருவன்னு நினச்சேன்.” என்று சமையல் அறையிலிருந்தபடி குரல் கொடுத்தார் சத்யமூர்த்தி. கீர்த்தனாவின் தந்தை.

நடுத்தர வர்க்கத்தினரை விடச் சற்று வசதியாகக் காட்சியளிக்கிறது கீர்த்தனாவின் வீடு.  வெளியில் கார் நின்று கொண்டிருக்க, அதைக் கடந்து உள்ளே வந்த கீர்த்தனா, தந்தையின் குரல் கேட்டு “வேலை அப்பா…” என்று சிரித்த முகமாக பதிலளித்தபடி உள்ளே நுழைந்தாள்.

“அப்பா… இதை ஏன் நீங்க பண்றீங்க? நான் வந்து பண்ண மாட்டேனா?” என்று இன்முகத்தோடு கடிந்து கொள்ள, “உங்க அம்மா இருந்திருந்தா…” என்று சத்தியமூர்த்தி ஆரம்பிக்க, “அப்பா… ஆரம்பிக்காதீங்க. அம்மா இருந்தால் கூட என்னை இப்படி கவனிச்சிருக்க மாட்டாங்க.” என்று தன் தந்தையின் வேலைக்கு ஒத்தாசையாகப் பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தாள்.

“பாக்கியம் பாட்டி வேலையை முடிச்சிட்டு கிளம்பிட்டாங்களா?” என்று கீர்த்தனா கேட்க, “ம்… கிளம்பிட்டாங்க கீர்த்தனா.” என்று கீர்த்தனாவின் தந்தை சத்யமூர்த்தி கூறினார்.

“அப்பா! நீங்க எதுவும் செய்ய வேண்டாம். நான் இதோ குளிச்சிட்டு வந்து எல்லாம் செய்றேன்.” என்று கூறி குளியறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா.

குளித்துவிட்டு நீல நிற புடவைக்கு மாறியிருந்தாள் கீர்த்தனா.

ஹாலில், கீர்த்தனாவின் தாயின் புகைப்படம் பெரிதாக மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது.

‘நீ சேலை கட்டினா உங்க அம்மா மாதிரியே இருக்க.’ என்று கீர்த்தனா முதல் முதலாகப் புடவை கட்டிய அன்று தன் தந்தை கூறியது நினைவு வர, தன் சேலையைத் தடவிப் பார்த்தாள் கீர்த்தனா.  அன்றும் முதல் இன்று வரை பெரும்பாலும், கீர்த்தனா சேலை கட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

கீர்த்தனாவின் வீடெங்கும் கண்ணாடிகளால் செய்யப்பட்ட பொம்மைகள் அழகழகாகக் காட்சி  அளித்தது. கீர்த்தனா கண்ணாடி பொம்மைகளை ரசனையோடு பார்த்துவிட்டுச் செல்வதைப் பார்க்கையில், அனைத்தும்  அவள் கை வண்ணம் என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

“கீர்த்தனா நீ விளக்கேத்தி சாமி கும்பிடு. நான் உன்கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்.” என்று தந்தை கூற, தலை அசைத்து பூஜை அறை நோக்கி உள்ளே சென்றாள் கீர்த்தனா.

“கீர்த்தனா… நீ ஆசையாக வைத்த பெயர். கூப்பிட்டு அழகு பார்க்கத் தான் நீ இல்லை.” என்று தன் மனைவியை நினைத்து முணுமுணுத்தபடி, மணி சத்தம் கேட்கப் பூஜையறைக்குள் நுழைந்தார் சத்யமூர்த்தி.

பூஜையை முடித்துவிட்டு, கீர்த்தனா எழ, “கீர்த்தனா ஒரு பாட்டு பாடேன்.” என்று கண் மூடி தன் மகளின் கான வெள்ளத்தில் நனையத் தயாராகி கண்களை மூடினார் சத்தியமூர்த்தி.

கீர்த்தனா இறைவனைத் தரிசித்தபடி பாட ஆரம்பித்தாள்.

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

கீர்த்தனாவின் குரல் நம்மை வசியப்படுத்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இல்லமெங்கும் தெய்வ மணம் கமல, கீர்த்தனாவின் குரல் வீடெங்கும் ஒலித்தது.

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா

உரைத்தது கீதை என்ற தத்துவமே

அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

கீர்த்தனா பாடி முடிக்க, பெருமாளை நேரில் தரிசித்த உணர்வோடு கண்களைத் திறந்தார் சத்யமூர்த்தி.

“நீ நல்லாருக்கணும்.” என்று தன் மகளை ஆசிர்வதித்து எழுந்து ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தார் சத்யமூர்த்தி.

“கீர்த்தனா, உனக்கு ஒரு மாப்பிள்ளை வீடு வந்திருக்கு. அதைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி உன் மனசில் யாரவது இருந்தா அப்பா  கிட்ட சொல்லு அந்த இடத்தையே பேசி முடிச்சிருவோம்.” என்று கேலியாகக் கேட்டு பெண்ணின் மனதை அறியும் முயற்சியில் இறங்கினார் சத்யமூர்த்தி.

“அப்பா…” என்று கீர்த்தனா சத்தமாக அழைத்தாலும் அவள் முகத்தில் வெட்கம் குடியேறியது. “சொல்லுமா…” என்று சத்தியமூர்த்தி தன்மையாக வினவ, ” அப்பா… அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அப்பா. எனக்கு இந்த காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா? அப்படியே ஏதாவது இருந்தாலும்  உங்க கிட்ட தானே அப்பா முதலில் சொல்லுவேன்.” என்று தந்தையை விட தன்மையாகக் கேட்டாள் கீர்த்தனா.

பாவம் அவள் அறியவில்லை, தன் தந்தையிடமும் தன் மனதை மறைக்கும் காலம் வருமென்று!

அப்பொழுது, தந்தை கீர்த்தனாவிடம் ஓர் புகைப்படத்தை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்ட கீர்த்தனா தன் தந்தையை அதிர்ச்சியாகப் பார்த்தாள். “உனக்கு ஏற்கனவே தெரிஞ்சவர் தான்.” சத்தியமூர்த்தி கண்சிமிட்டி கூற, கீர்த்தனா மெல்லிய தலை அசைப்போடு அந்த புகைப்படத்தை ஆழமாகப் பார்த்தாள். அவள் முகத்தில் ஓர் வெட்க புன்னகை அரும்பியது. அந்த புன்னகையை அவள் தந்தை கண்டுகொள்ளுமுன் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் கீர்த்தனா.

அந்த புகைப்படத்தில் இருப்பது யாரென்று அறிய  நாம் கீர்த்தனாவைத் தொடர்ந்து சென்றாலும், கீர்த்தனா அதை கை வளைவிற்குள் மறைத்துக் கொண்டதால் நம்மால் பார்க்க முடியவில்லை.

காலம்  கீர்த்தனாவின் மணவாளனை நம்  கண்முன் நிறுத்தும்.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

 

error: Content is protected !!