kannaadi Maaligai – Episode 8 Part 1

kannaadi Maaligai – Episode 8 Part 1

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  8_ Part 1

அதிகாலை. இன்னும் சூரியன் கண்களுக்குப் புலப்படவில்லை. விஜயேந்திரன், அலைப்பேசியைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க, “யார் பேசுறாங்க விஜய்?” என்று காரை அந்த விடியற் காலையில் சாலையில் அசாத்திய லாவகத்தோடும், வேகத்தோடும் வாஷிங்டன் விமான நிலையம் நோக்கி  செலுத்தியபடி கேட்டாள் லீலா.

“தம்பி.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான் விஜய். “எடுத்துப் பேசு. என்ன விஷயமுன்னு தெரியனுமில்லை. அம்மா, அப்பாவும் எதுவும் சொல்லாம  வர சொன்னாங்கன்னு சொல்ற.” என்று லீலா பேசிக் கொண்டே வண்டியைத் திருப்ப, ‘முகிலன் கல்யாணம் விஷயம் தான் பிரச்சனை. இதை எப்படி லீலா கிட்ட சொல்றது? சொன்னால், நம்ம காதல் விஷயம் என்னவாகும்ன்னு பதட்டப்படுவா. தேவை இல்லாத சிக்கல்.’ என்று தன் மனதில் எண்ணியபடியே மறுப்பாகத் தலை அசைத்தான் விஜய்.

“பேசுற மூட் இல்லை லீலா. இந்தியா தானே போறேன் அவன் கிட்ட நான் நேர்ல போய் பேசிக்கிறேன்.” என்று விஜய் கூற, சம்மதமாகத் தலையசைத்து  விமான நிலையம் நோக்கி வேகமாகக் காரை செலுத்தினாள் லீலா.

விஜயேந்திரன் காரை விட்டு இறங்கி, பெட்டிகளோடு விமான நிலையம் நோக்கி செல்லுமுன் லீலாவை கண்களில் அன்பைத் தேக்கிக்கொண்டு பார்த்தான் விஜய்.

மனமில்லாமல் தலையசைத்து லீலா விடைபெற, சொல்ல வார்த்தைகளில்லாமல் விஜயேந்திரன் விடை பெற, விஜயேந்திரன் நடந்து செல்ல லீலா ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள் லீலா.

“விஜய்…” என்று லீலா உரிமையோடு அழைக்க, “ம்…” என்று மெல்லிதாக லீலாவின் அழைப்பிற்கு விஜய் பதில் கொடுத்தான். “நான்… நான் சுயநலமா யோசிக்குறேன்னு நினைச்சிறாத. வரும் பொழுது கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்கிரு. அடுத்த தடவை நீ இந்தியா போகும்  போது நானும் உன் கூட வருவேன்.” என்று லீலா சிணுங்கலாக அதே நேரம் உரிமையாகக் கூற, ‘முதல் முதலாக லீலாவை பார்த்த பொழுது அவள் பேசிய தமிழுக்கும், இன்று லீலா கோர்வையாகப் பேசும் தமிழுக்கும் எத்தனை வித்தியாசம்.’ என்ற எண்ணம் தோன்ற மெலிதாக புன்னகைத்தான் விஜயேந்திரன்.

இறுக்கமான ஜீன்ஸ். அவள் அங்கத்தின் அழகைத் தெளிவாகக் காட்டிய டாப்ஸ். இவை எதுவும் விஜயேந்திரனை ஈர்க்கவில்லை. ஆனால், லீலாவின் காதல் பேசும் கண்கள். அவளுக்கு யாருமில்லை என்ற ஏக்கத்தைக் காட்டும் அவள் கருவிழிகள். நீ மட்டும் தான் என்றும் எனக்கு என்று அவள் கருவிழிகள் காட்டும் விஜயேந்திரனின் முகம். லீலாவின் பேசும் விழிகளைப் பார்த்தபடி சுற்றுப்புறம் மறந்து நின்றான் விஜயேந்திரன்.

ஆழமாக மூச்செடுத்து, “நீ இல்லைன்னா எனக்கும் இந்த உலகத்தில் ஒண்ணுமில்லை.” என்று வெட்டப்பட்டிருந்த லீலாவின் குட்டை தலை முடியைக் கோதி, மேலும் பேச வார்த்தைகள் தெரியாமல் அந்த சிறு பிரிவையும் தாங்க முடியாத ஏக்கத்தோடு  அவளைப் பார்த்தான் விஜய்.

“மிஸ் யு விஜய்.” என்று லீலா அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, தான் பெற்றதை எந்தவித வஞ்சனையுமின்றி திருப்பி கொடுத்துவிட்டு  விமான நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன், லீலா இவர்கள் இருவருக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.

விஜயேந்திரன் விமான நிலையத்திற்குள் நுழைய, அவன்  அலைப்பேசி மீண்டும் ஒலிக்க, “ம்…” என்று விஜய் கூற, “அண்ணா… என் கிட்டப் பேச மாட்டியா?” என்று முகுந்தனின்  குரல் அழாக்குறையாக ஒலிக்க, “என்ன பேசணும்?” என்று விஜய் நறுக்குத்தெரித்தார் போல் கேட்டான்.

“அண்ணா… என்ன நடந்ததுன்னா?” என்று முகுந்தன் பேச ஆரம்பிக்க, “இதை நீ என் கிட்ட நேத்து பேசிருக்கலாமே! எல்லாம் பண்ணிட்டு தான் பேசுவியா? நான் எவ்வுளவு தள்ளி இருந்தாலும், சின்ன விஷயம் கூட என்கிட்டே கேட்காம பண்ணமாட்டியே டா. இதை ஏன் டா பண்ண? என்கிட்டே சொல்லிருந்தா நான் பொறுமையா பேசி உனக்குச் சம்மதம் வாங்கி கொடுத்திருப்பேனே! அம்மா எப்படி வருத்தப்படுறாங்க தெரியுமா?” என்று அலைபேசி வழியாக விஜயேந்திரனின் குரல் காட்டமாக வெளிவந்தது.

முகுந்தன் மேலும் பேச எத்தனிக்க, “நான் நேரில் வந்து பேசுறேன். இந்தியா கிளம்பிட்டேன்.  நான் போர்டிங் பாஸ் வாங்கணும். நேரம் ஆச்சு.” என்று கூறி அலைப்பேசி பேச்சைத் துண்டித்து  வேகமாக நடந்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரன், விமானத்தில் ஏறி அமர்ந்து தன் கண்களை இறுக மூடினான்.

‘முகுந்தனின் கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு. இப்ப நான் அங்க போய் என்ன நடக்க போகுது.  அம்மா, எதுக்கு என்னை அவசரமா வர சொன்னாங்க? இப்ப இருக்கிற சூழ்நிலையில் நான் லீலாவை பத்தி பேச முடியுமா?’ போன்ற கேள்விகளோடு சென்னை விமான நிலையம் வந்திறங்கினான் விஜயேந்திரன்.

சராசரி பெண்களே அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரம். உடற்பயிற்சி செய்பவன் என்பதை எடுத்துரைக்கும் கட்டுக்கோப்பான தேகம். செல்வச்செழிப்பில் வளர்ந்ததைக் காட்டும் அவன் பாவனை. அமெரிக்கக் குளிரிலும், உணவிலும் பளபளத்த அவன் முகம். எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டும் அவன் கூர்மையான கண்கள். வேகநடை நடந்து, விஜயேந்திரன் வெளிய வர, சில பெண்களின் பார்வை அவனைத் தழுவ, சில ஆண்களின் பார்வையும் அவனைப் பொறாமையோடு தழுவியது.

விஜயேந்திரனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் புன்னகையைக் காண முடியவில்லை. அவனுக்காகக் காத்திருந்த காரில் ஏறி, வீட்டை நோக்கிப் பயணித்தான் விஜயேந்திரன்.

சில மணித்துளிகளில், அந்த கார் அவர்கள் வீடு, இல்லை பங்களாவிற்குள் நுழைந்தது.

“அம்மா…” என்று அழைத்துக் கொண்டு விஜயேந்திரன் உள்ளே நுழைய, “விஜய்…” என்று அழைத்துக் கொண்டு அவன் தோள் சாய்ந்து அழுதார் பூமா, விஜயேந்திரனின் தாயார்.

“அம்மா. இப்ப எதுக்கு அழறீங்க? அழுது என்னவாக போகுது?” என்று தன் தாயைச் சமாதானம் செய்தபடியே, அவரை அழைத்துக் கொண்டு சோபாவில் அமர வைத்து அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான் விஜயேந்திரன்.

“அம்மா. முகுந்தன் எங்க?” என்று கேள்வியோடு அவனைக் கண்களால் வீடு முழுக்க தேடினான் விஜயேந்திரன். “அவன்  இங்க இல்லை.” என்று முகுந்தனின் பெயரைக் கூடச் சொல்ல விருப்பமில்லாமல் பூமா விசும்ப, “அம்மா. நடந்தது நடந்து போச்சு. தம்பி எங்க போவான். என்ன பண்ணுவான்.” என்று விஜய் பூமாவை சமாதானம் செய்ய, அவர்கள் இருவரையும் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தார் நவநீதன். விஜயேந்திரனின் தந்தை.

“அவன் இங்க வரக்கூடாது. அவன் இங்க வந்தால் என்னை உயிரோட பார்க்க முடியாது.” என்று பூமா பிடிவாதமாகக் கூற, “அப்பா. நீங்க சொல்லக் கூடாதா?” என்று கேட்டு தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

நவநீதன் பேச ஆரம்பிக்க, “நீங்க பேசாதீங்க. நீங்க தான் இவ்வுளவு பிரச்சனைக்கும் காரணம். உன்னை அமெரிக்கா அனுப்ப வேண்டாம்முன்னு சொன்னேன். சின்னவனை நம்பி கம்பனி கொடுக்க வேண்டாம். அவன் ஒரு அவசர கொடுக்கை. நீ இங்க இருந்திருந்தா இப்படி ஒரு தப்பு நடந்திருக்குமா?” என்று பூமா தன் கணவனைப் பார்த்து காட்டமாகக் கேட்க ஆரம்பித்து, விஜயேந்திரனை பார்த்துக் கேள்வியாக நிறுத்த விஜய் மௌனமாக தன் தலையை குனிந்து கொண்டான்.

“நீ அமெரிக்கால இருந்தது போதும். முகுந்தன் விஷயம் ஊருக்கே தெரிஞ்சு நம்ம மானம் போச்சு. ஊர் வாயை மூடுற மாதிரி உன் கல்யாணம் ஜேஜேன்னு நடக்கணும்.” என்று பூமா அழுத்தமாகக் கூற, “அம்மா…” என்று அதிர்ச்சியாக அழைத்தான் விஜயேந்திரன்.

“என்னடா அம்மா?” என்று முகுந்தன் மீது காட்ட முடியாத கோபத்தை பூமா விஜய் மீது காட்ட, “அம்மா. என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? இவ்வுளவு பிரச்சனைக்கு இடையில் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்று உறுதியாகக் கூறினான் விஜயேந்திரன்.

“ஏன்… நீயும் உன் தம்பி மாதிரி லவ் பண்றியா?” என்று பூமாவின் உதடுகள் கூர்மையாகக் கேட்டாலும், அவர் கண்கள் விஜய், “இல்லை.” என்று பதில் கூற வேண்டும் என்று ஆணித்தரமான நம்பிக்கையோடு எதிர் பார்த்தது.

“அம்மா.” என்று விஜயேந்திரன் தன் தாயின் கேள்வியில் கட்டுண்டு, இறைஞ்சுதலாக அழைக்க, “உன் தம்பி அவன் பங்குக்கு ஒரு சின்ன பெண்ணை கல்யாணாம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான். நீ உன் பங்குக்கு ஒரு குட்டை முடியோடு,  ஜீன்ஸ் போட்ட அமெரிக்கப் பெண்ணை விரும்பியிருந்தா என் கிட்ட சொல்லாதடா. பேசாம அடுத்த வேளை சாப்பாட்டில் விஷம் வச்சி குடுத்துட்டு, அப்படியே அமெரிக்கா போய் நிம்மதியா இருந்திரு.” என்று பூமா நிற்க தெம்பில்லாமல் சோபாவில் சாய்ந்து விசும்பினார்.

“பூமா…” என்று நவநீதன் கர்ஜிக்க, “என்னையே அடக்குறீங்களே? அவனை பாருங்க, குடும்ப மானம் கப்பல் ஏறுது. ஒரு வார்த்தை கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்றானா பாருங்க. நான் என்ன பிள்ளை வளர்த்தேன்னு எனக்கே தெரியலியே?” என்று பூமா அழ, “அம்மா. நான் உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண மாட்டேன் அம்மா. இப்ப இந்த அவசர கோலத்தில் கல்யாணம் வேண்டாமுன்னு தானே சொல்றேன். கம்பெனி பொறுப்பு எடுத்துக்கறேன். கொஞ்சம் நிதானமா முடிவு பண்ணுவோம். அப்புறம் கல்யாணம் விஷயம் பேசுவோம்.” என்று விஜயேந்திரன் மென்று விழுங்கினான்.

“பொண்ணு பார்த்தாச்சு. எங்களுக்குப் பெண்ணை பிடிச்சிருக்கு. உன்கிட்ட பேசி வரசொல்றதுக்கு முன்னாடி இப்படி ஆகிருச்சு. எல்லாம் உனக்கு தெரிந்த பொண்ணு தான். நம்ம சத்யமூர்த்தி பொண்ணு கீர்த்தனா தான் அந்த பொண்ணு.” என்று நவநீதன் கூற, விஜயேந்திரன் தன் தந்தையை அதிர்ச்சியாக பார்த்தான்.

“அப்பா. என்  கிட்ட  ஒரு வார்த்தை கூட சொல்லலியே?” என்று விஜய் பரிதாபமாகக் கேட்க, “இப்ப சொல்றோம். நீ என்ன சொல்ற?” விடாப்பிடியாகக் கேட்டார் பூமா.

“அம்மா. நீங்க என் விருப்பத்தை கேட்கலை. உங்க விருப்பத்திற்கு சம்மதம் சொல்ல சொல்றீங்க.” என்று தன்மையாக தன் மனதை வெளிப்படுத்தினான் விஜயேந்திரன். “நீயும் உன் தம்பி மாதிரி, எங்க மானத்தை வாங்க போற? அப்படி தானே?” என்று பூமா மீண்டும் தொடங்க, அங்கு வாக்கு வாதம் முற்றி போய், பூமா மூச்சு வாங்கியபடியே சோபாவில் சரிய, தன் அன்னைக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தபடி, அமைதியாக தன் தாயைப் பார்த்தான் விஜயேந்திரன்.  “நீ சம்மதம் சொல்ல மாட்டா?” என்று அந்த நிலையிலும் தன் மகனைப் பார்த்து ஏமாற்றமாக, ஏக்கமாகக் கேட்டார் பூமா.

அங்குத் தாயின் பாசம் முன்னேறிக் கொண்டிருக்க, குடும்ப சூழ்நிலை முன்னே நிற்க விஜயேந்திரனின் காதல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

error: Content is protected !!