கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 23
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 23
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 23
“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா. இல்லை என் மனசை சொல்லனுமா?” என்று கீர்த்தனா நேரடியாகக் கேட்க, விஜயேந்திரன் அவளைத் தர்மசங்கடமாகப் பார்த்தான்.
“புரியலைல? என் பேச்சு புரியலைத் தானே? புரியாது. உங்களுக்கு எதுவுமே புரியாது.” என்று ரௌத்திரமாகக் கூறி, “எனக்கு ஒரு சந்தேகம். கல்யாணம் முடிஞ்சனைக்கு, ஆணோ, பெண்ணோ எனக்கு ஒரு லவ்வர் இருக்கானு சொன்னால், ஓ அப்படியா, சூப்பர். உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க. நான் உங்களைச் சேர்த்து வைக்கிறேன். எங்கிருந்தாலும் வாழ்கன்னு எந்த மனைவி, எந்த புருஷன் சொல்லுவான் சொல்லுங்க?” என்று கீர்த்தனா நேரடியாகக் கேட்க, விஜயேந்திரன் திருதிருவென்று முழித்தான்.
“சரி… ஏதோ வயசு கோளாறு. லவ் பண்ணி தொலச்சிட்டாரு. விட்டு தள்ளுவோமென்று நினைக்கிறது ஒரு ரகம். இல்லைனா அதையே சொல்லி… சொல்லி உசிரை வாங்கறது இன்னொரு ரகம். நான் நல்லவ தாங்க. பெருந்தன்மையா விட்டுத்தள்ளுவோம்முன்னு தான் நினச்சேன்.” என்று கீர்த்தனா, பெருமூச்சோடு விஜயேந்திரனின் அருகில் நின்று கூற, அவளை ஆழமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
“ஆமாங்க… நீ அந்த பெண்ணை எவ்வுளவு விரும்புனீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால், நீங்க தான் மாப்பிள்ளைன்னு சொன்னவுடன், நான் உங்க மேல வைத்த அன்பு உண்மை.” என்று கீர்த்தனா தன் காதலைச் சொல்லாமல் சொல்ல, விஜயேந்திரனின் கைகள் தானாக இறங்கியது.
‘காதல், அன்பு… இந்த வார்த்தைகள் தன் வாழ்க்கையை எப்படி சுழட்டி அடிக்கிறது?’ என்ற எண்ணத்தோடு பேய் அறைந்தார் போல் சுவரில் சாய்ந்து நிற்க, “என் மேல எந்த தப்புமில்லை. நீங்க, நட்புன்னு சொன்னப்ப கூட, இதை கடந்து வந்திறலாம்ன்னு நான் நம்பினது நிஜம். நட்புன்னு சொன்னாலும், மனைவி இல்லைன்னு ஆகிருமா? அதுமட்டுமில்லை, உங்க கண்கள் நட்பை தாண்டிய நெருக்கத்தை என்கிட்ட காட்டியது நிஜம். நீங்க காதலை பத்தி சொல்லும் பொழுது கூட, அது பழைய காதல்ன்னு நான் நம்பினேன். நீங்களும் எல்லாத்தயும் கடந்து வந்திருவீங்கன்னு நம்பினேன். காலம் போனால், சரியாகிரும்ன்னு எனக்கு தோணுச்சு.” என்று கீர்த்தனா பேச, “நான் அப்படி சொல்லலை…” என்று விஜயேந்திரன் அவளை இடைமறித்துத் தடுமாறினான்.
“ஐயையோ… ஐயையோ…. ” என்று தன் உதடுகளை தன் விரல்களால் மூடினாள் கீர்த்தனா. “நான் உங்களைத் தப்பா சொல்லலைங்க. தப்பு முழுக்க என் மேல தான். நீங்க உண்மை காதலர். காதலுக்கு நேர்மையானவர். அதே நேரம் மனைவிக்கு உண்மையானவர். உங்களைத் தப்பு சொல்ல முடியுமா?” என்று தன் கண்களை விரித்துக் எகத்தாளமாக கேட்டாள் கீர்த்தனா.
விஜயேந்திரன் கீர்த்தனாவின் ஏகதாளத்தில் திக்குமுக்காடி போக, “தப்பு என் மேல தான். எல்லா தப்பும் என் மேல தான். நீங்க சொன்னதை புரிஞ்சிக்குற அறிவு என் கிட்ட இல்லை.” என்று மேலும் கீர்த்தனா கூற, “இப்ப நீ என்ன தான் சொல்ல வர?” என்று நேரடியாகக் கேட்டான் விஜயேந்திரன்.
“பழைய காதலை மறந்து இந்த வாழ்க்கையை ஏத்துக்குற அளவுக்கு நான் நல்லவ தான். ஆனால், நீங்க பழைய காதலியை சந்திச்சிட்டு வந்தாலும், அதை ஏத்துக்கிட்டு கடந்து வர அளவுக்கு நான் நல்லவ கிடையாது.” என்று கீர்த்தனா பகிரங்கமாக அவள் எதிர்ப்பை தெரிவிக்க, “உன்னை யாரும் ஏத்துக்க சொல்லலை.” என்று விஜயேந்திரன் அவளை கூறினான்.
கீர்த்தனா, அவனை கண்களில் வலியோடு பார்க்க, தன் தவறை உணர்த்தவனாய், “இத பார். எனக்கு இங்க ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு. உன் கிட்ட சண்டை போடுற தெம்பு என் மனசில் இல்லை. எல்லாத்தையும் மறந்திரு. மன்னிச்சிரு.” என்று இறங்கினான் விஜயேந்திரன். இல்லை என்று மறுத்தாலும், அவன் செய்த குற்றத்தை அறிந்த மனசாட்சி அவனை வாட்டியது.
“மறந்து… மன்னிச்சி?” என்று அவள் கேள்வியாக நிறுத்த, “நாம எப்பவும் போல நண்பர்கள்.” என்று விஜயேந்திரன் நட்பு கரம் நீட்ட, “யார் நட்பும் எனக்கு வேண்டாம்.” என்று கூறி, வழக்கமாக அவன் அடுக்கும் தலையணையை இன்று கீர்த்தனா அடுக்கி விட்டு போர்வைக்குள் சென்று தூக்கத்தைத் தழுவினாள்.
தூக்கம் அவளை தழுவினால் தானே!
விஜயேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, “என்ன சொன்னா உங்க லீலா?” என்ற கீர்த்தனாவின் சத்தம் போர்வைக்குள் இருந்து வந்தது.
“லீலாவுக்கு கல்யாணாகிருச்சு. ஷி இஸ் கேரியிங் நவ்.” என்று தொலைந்து போன, குரலில் விஜயேந்திரன் கூற, படக்கென்று போர்வையிலிருந்து வெளியே வந்தாள் கீர்த்தனா. கீர்த்தனாவின் உணர்வுகளும் எரிமலையாக வெளிவர ஆரம்பித்தது.
விஜயேந்திரனை அருவருப்பாகப் பார்த்தாள். “ஏய். ஏன் என்னை அப்படி பாக்குற?” என்று விஜயேந்திரன் அவள் பார்வையின் வீரியம் தாங்காமல் பதட்டமாகக் கேட்க, கீர்த்தனா பேசிக்கொண்டே மெல்ல அவன் அருகே சென்றாள்.
“அப்ப, நீங்களா திரும்பி வரலை? உங்களுக்கு மனைவின்னு என் எண்ணம் வரலை. அவளுக்குக் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தா நீங்க அவளை இந்நேரம் கல்யாணம் பண்ணிருப்பீங்க? அப்படி தானே? இப்ப அவளுக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சவுடனே வேற வழி இல்லாம, என் கிட்ட வந்திருக்கீங்க?” என்று கனல் கக்கும் விழிகளோடு அவன் சட்டையைப் பிடித்தாள் கீர்த்தனா.
“இதப்பார். நான் அவளைச் சந்திக்கப் போனது நிஜம். ஆனால், நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்லை.” என்று விஜயேந்திரன் சமாதானமாகக் கூற, “எப்படி எல்லாம் இல்லை ?” என்று கீர்த்தனா கண்களை சுருக்கி கேட்டாள்.
“அவ இல்லைன்னு நீ… அப்படி எல்லாம் இல்லை.” என்று விஜயேந்திரன் கீர்த்தனாவுக்கு புரியவைக்கும் நோக்கோடு கூறினான். விஜயேந்திரனுக்கு அவ்வாறு சொல்லவே அருவருப்பாக இருந்தது. ‘அவ இல்லை இவள் … என்ன அருவருப்பான பேச்சு. ச்ச… ச்ச… இல்லை…’ என்று பதறியது அவன் மனம்.
“அப்ப எப்படி?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள் கீர்த்தனா. “கீர்த்தனா நீ இப்ப கோபமா இருக்க தூங்கு. இல்லைனா, இரெண்டு நாள் உங்க வீட்டுக்கு போயிட்டு வா.” என்று சமாதானமாக பேசினான் விஜயேந்திரன்.
“ஏன் என்னை உயிரோட சாகடிச்சாச்சு? எங்க அப்பாவை கொல்லணுமா?” என்று கீர்த்தனா காட்டமாகக் கேட்க, “ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்று தன்மையாக கேட்டான் விஜயேந்திரன்.
அவன் சட்டையிலிருந்து தன் பிடிமானத்தைத் தளர்த்தினாள் கீர்த்தனா. “வேற எப்படி பேசணும்?” என்று கீர்த்தனா, அவன் முகம் பார்த்துக் கேட்க, “தப்பு தான். போனது தப்பு தான். அதுக்கான தண்டனையை நானும் அனுபவிச்சிட்டேன்.” என்று விஜயேந்திரன் உடைந்த குரலில் கூறினான்.
“லீலா என்னை நம்பலை. அம்மா, அப்பாவுக்காகத் தான் நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொன்னதை அவள் நம்பலை. எதையுமே அவள் நம்பலை.” என்று கரகரப்பான குரலில் கூறினான் விஜயேந்திரன்.
“அவ என்னை ரொம்ப அசிங்கமா பேசிட்டா. நான் உன்கிட்ட மனைவின்னு உரிமை எடுத்துக்கலைங்கறதையும் அவ நம்பலை.” என்று விஜயேந்திரன் மேலும் கூறுமுன், “ஐயோ….” என்று காதுகளை மூடிக் கொண்டு அலறினாள் கீர்த்தனா.
அவள் அலறலின் காரணம் புரியாமல், விஜயேந்திரன் அவளை பரிதாபமாகப் பார்க்க, “அசிங்கமா இருக்குங்க. என் அந்தரங்கத்தை நீங்க இன்னொரு பொண்ணு கிட்ட சொல்லிருக்கீங்க? அவ யாரு என் விஷயத்தை தெரிஞ்சிக்க?” என்று காட்டமாகக் கேட்டாள் கீர்த்தனா.
முகத்தில் அறைந்தார் போல் உணர்ந்தான் விஜயேந்திரன். “அவள் யார்?” என்ற கீர்த்தனாவின் நியாயமான கேள்வி விஜயேந்திரனை ரணமாக அறுத்தது.
“கீர்த்தனா…” தடுமாறினான் விஜயேந்திரன். “இல்லைங்க. நான் உங்க மனைவி. அவ யாரு? காதலி இல்லை முன்னாள் காதலி? இப்ப அடுத்தவன் பொண்டாட்டி. ஏன் அவளையும் உங்க கூட வர சொல்ல வேண்டியது தானே?” என்று கீர்த்தனா கடுமையாகக் கேட்க, “கீர்த்தனா.” என்று உறுமினான் விஜயேந்திரன்.
“ஏன் பசங்க நீங்க பண்ணா சரி. பொண்ணு அவ பண்ணா தப்பு?” என்று கேள்வியாக நிறுத்தி, “இல்லை அவ புருஷன், என்னை மாதிரி ஏமாளி இல்லையோ? எங்க வேணும்ன்னாலும் போ… இஷ்டப்படி வான்னு சொல்றதுக்கு.” என்று கீர்த்தனா நிறுத்தி, நிதானமாக யோசனையாகக் கேட்க, “நீ என்னை கொல்ற கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் சலிப்பாக கூறினான்.
“நீங்க என்னை கொன்னுட்டிங்க. நான் யாரைக் கொல்ல? விட்டுட்டு போனப்ப கூட பாதி தான் செத்தேன். அவளுக்குக் கல்யாணம் ஆகிருச்சுனு திரும்ப வந்ததில் முழுசா செத்துட்டேன். ஊருக்காக கல்யாணம். கல்யாண பண்ண பாவத்துக்கு நான் இங்க… நான் வருத்தப்பட்டாலும், என் அப்பா கஷ்டப்பட கூடாதே.” என்று கூறி கீர்த்தனா தன் தலையில் படார் படாரென்று அடித்து கொள்ள, “கீர்த்தனா… ப்ளீஸ்.” என்று கெஞ்சி அவள் கைகளைப் பற்றி அவள் செயலை தடுத்தான் விஜயேந்திரன்.
சரேலென்று அவள் கைகளை உருவிக் கொண்டு, “காதலிச்ச எல்லாரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்படுறீங்க. ஆனால், சம்பந்தமே இல்லாம நான் ஏன் சங்கடப்படணும். உங்க மேல ஆசை வைத்த பாவத்துக்கா?” என்று கேட்டு, தன் மனதிலிருந்த கோபத்தைச் சிறிது கொட்டிவிட்ட நிம்மதியில், கீர்த்தனா மெத்தையை நோக்கி நடக்க… பலநாட்களாக இருந்த பதட்டம், கவலை, அழுத்தம் என அனைத்தும் சேர்ந்து அவள் சரிந்து விழ அவளைத் தாங்கி பிடித்தான் விஜயேந்திரன். அவனை விலக்கி விட்டு, மெத்தையில் படுத்துக் கொண்டாள் கீர்த்தனா.
விஜயேந்திரன் பால்கனியில் நின்று இருள் நிறைந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் தோட்டத்தின் ஓரத்திலிருந்த, பூ பந்தலில் நிலை குத்தி நின்றது. அன்று அவன் அவசரமாகக் கிளம்பிச் செல்ல காரணமாக இருந்த தழுவலும் விஜயேந்திரனின் கண்முன் விரிந்தது. எத்தனை நிமிடங்கள் கடந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அறைக்குள் சென்றான். களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த, கீர்த்தனாவை பார்த்தான்.
தூக்கத்திலும், சேலை கலையாமல் அவள் படுத்திருந்த விதம், அவள் ஒழுக்கத்தைக் காட்டியது. ‘நான் ஏன் இவளைத் திருமணம் செய்து, இவள் வாழ்க்கையை வீணாக்கினேன்?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான் விஜயேந்திரன்.
‘லீலா திருமணம் ஆகாமலிருந்திருந்தால், நான் ஒருவேளை லீலாவை திருமணம் செய்திருந்தால்? இவள் என்ன செய்திருப்பாள்?’ என்ற கேள்விகள் மனதில் எழ, ‘அது எத்தனை பெரிய பிசகு ஆகி இருக்கும்?’ என்று விஜயேந்திரனின் எண்ண ஓட்டம் ஓட, திகைத்து நின்றான் விஜயேந்திரன்.
“அப்ப கீர்த்தனா சொன்னது சரி தானா? அவ இல்லைன்னு நானா? நான் அத்தனை கேவலமான மனிதனா?” என்று விஜயேந்திரன் முனங்கியபடியே, அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் தரையில் சாய்வாக அமர்ந்தான்.
அவனுக்குத் தலை விண்வினென்று வலித்தது.
‘காதல் அத்தனை பெரிய குற்றமா? இல்லை நான் செய்த திருமணம் குற்றமா? அம்மா, அப்பா சொன்னாங்கன்னு தானே கல்யாணம் பண்ணேன். நான் பண்ணலைனா, அம்மாவுக்கு ஏதாவது ஆகிருக்குமே?’ விஜயேந்திரனின் மனம் தாய்க்காகச் சிந்தித்தது.
‘நான் போகலைனா லீலா என்ன ஆவான்னு யோசிச்சேன். ஆனால், அவளும் என்னை நம்பவில்லை. என்னவெல்லாம் பேசிவிட்டாள்?’ விஜயேந்திரனின் மனம் லீலாவின் பேச்சை வேண்டாமென்றாலும் நினைவு கூர்ந்து பார்த்தது.
‘நீ இல்லாமல் குடிச்சிட்டு சாகக் கிடந்த என்னை காப்பாத்தின ஹென்றி எங்க? நீ எங்க? உன் ஒழுக்கத்திற்குத் தான் உன்னை விரும்பினேன். கடைசியில் அதுவும் பொய். யார் கிட்டக் கதை விடுற? பக்கத்துல மனைவி… … … … … … … … … … … … … … … … … … … … …” மேலும் லீலாவின் பேச்சைச் சிந்திக்கும் சக்தி இல்லை விஜயேந்திரனுக்கு.
மறக்க நினைத்தாலும், தவிர்க்க நினைத்தாலும் அந்த வார்த்தைகள் அவனைத் துரத்தப் போவது அறியாமல் லீலா கூறிய வார்த்தைகளை தவிர்க்க நினைத்தான் விஜயேந்திரன்.
ஆனால், முத்தாய்ப்பாக லீலா கூறிய வார்த்தைகள், ‘ஐ அம் மேரீட் அண்ட் கேரியிங்.’
இப்பொழுதும் அந்த வார்த்தையில் விஜயேந்திரனின் உடல் நடுங்கியது.
‘ச்ச… இத்தனை நாளில் லீலா என்னை இவ்வுளவு தான் புரிஞ்சிகிட்டாளா? என் மேல் நம்பிக்கை இல்லையா? இவ்வுளவு தான் காதலா? எத்தனை முத்தங்கள்? எத்தனை இதழ் அணைப்புகள்? எத்தனை தழுவல்கள்? காதல் எதில் முடிகிறது?’ கண்களில் கண்ணீரோடு சுவரில் சாய்ந்தான் விஜயேந்திரன்.
அதே நேரம் முகுந்தன் அறையில்,
நிரஞ்சனாவின் முகம் அந்திவானமாய் சிவந்திருந்தது. முகுந்தனின் பார்வை அவளை எங்கெங்கோ தீண்ட, நிரஞ்சனா வெட்கி தலை குனிந்தாள். அவன் கைகள் அவளை முற்றுகை இட , நிரஞ்சனாவின் இதயத் துடிப்பு தன் வேகத்தைக் கூட்டியது. அந்த தனிமையில், அந்த இருளில், நிரஞ்சனாவின் லப்டப், லப்டப் என்ற இதயத் துடிப்பும், நிரஞ்சனாவின் வேகமான மூச்சுக் காற்று மட்டுமே அறையை நிரப்பியது.
“நீரு…” முகுந்தனின் குரலில், ஆசை, காதல், ஏக்கம் என அனைத்தும் வழிந்தோடியது. நிரஞ்சனாவின் இதழ்கள் வெட்கத்தில் துடிக்க, இதயம் வேகத்தில் துடிக்க, அவள் கண்கள் பயம், ஆர்வம் கலந்து பட்டாம்பூச்சியாய் படபடக்க, அவள் தன் உணர்வுகளை மறைக்க, தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“நீரு…” என்று முகுந்தனின் குரல் அவள் எண்ணத்தை மட்டுமே ஏந்தி ஒலிக்க, “ம்…” என்று தயக்கத்தோடு கூறினாள் நிரஞ்சனா.
முகுந்தன் அவளை நெருங்க, அவன் மூச்சுக் காற்று அவளைத் தீண்ட, அவள் மூச்சுக் காற்று அவனைத் தீண்ட, முகுந்தனின் கைகள் நிரஞ்சனாவின் இடையை வளைத்து, அவனோடு இறுக்கியது. “முகுந்த்… என்ன பண்ற?” என்று நிரஞ்சனாவின் குரல் குழைய, “ஏன் நீரு, உனக்குத் தெரியலை?” என்று முகுந்தனின் குரல் கிசுகிசுத்தது.
முகுந்தன் நிரஞ்சனாவின் நெற்றியில் இதழ் பதிக்க, “டேய்… என் படிப்பு இன்னும் முடியலை.” என்று நிரஞ்சனா கொஞ்ச, “நீரு… நீரு… நீரு…அதுக்கு என்ன இப்ப?” என்று முகுந்தனின் குரல் குழைய, படக்கென்று எழுந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.
“முகுந்த்… முகுந்த்… முகுந்த்…” என்று முகுந்தனைப் பதட்டமாக எழுப்பினாள் நிரஞ்சனா. முகுந்தன், கண்விழிக்க, “முகுந்தன்… என்ன ஆச்சு? என்னை கூப்டீங்களே? எதுவும் பிரச்சனையா?” என்று பயத்தோடு கேட்டாள் நிரஞ்சனா.
‘எல்லாம் கனவா?’ என்ற எண்ணத்தோடு, “இல்லை… அதெல்லாம் இல்லை. ஏதோ கனவு.” என்று முகுந்தன் கூற, “என்ன கனவு?” என்று நிரஞ்சனா கேட்க, “ஞாபகம் இல்லை.” என்று முதல் முறையாக முகுந்தன் நிரஞ்சனாவிடம் உண்மையை மறைத்தான்.
“சரி விடு முகுந்த். நீ தூங்கு. நாளைக்கு நீ ஆபீஸ் வேலை பார்க்க ஆரம்பிச்சிரு. நான் உதவி பண்றேன்.” என்று நிரஞ்சனா முகுந்தனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகக் கூற, “ம்…” என்று சத்தம் மட்டுமே முகுந்தனிடமிருந்து வந்தது.
அவன் பக்கம் திரும்பிப் படுத்த நிரஞ்சனா, “எதுவும் யோசிக்கிறியா? என் கிட்ட மறைக்கறியா?” என்று நிரஞ்சனா அவன் கண்களைப் பார்த்துக் கேட்க, முகுந்தன் மௌனித்தான்.
“முகுந்த் எல்லாம் சரியாகிரும். நீ பாரேன். என்னை எப்படி தாங்க போறேன். நான் நல்லா படிக்கிறேன் டா. நீ சொன்ன மாதிரி. உங்க அண்ணன் எல்லாம் பார்த்துப்பாங்க. லீவ் முடியற வரைக்கும், நான் உன் கூடவே இருந்து உதவி பண்றேன். அப்புறம், நீ எப்படி சொல்றியோ அப்படி பண்றேன் டா. நான் உன் கூடவே இருப்பேன்.” என்று முகுந்தனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் நிரஞ்சனா.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை நீரு. எல்லாம் சரியாகிரும். நான் நல்லா தான் இருக்கேன்.” என்று தன் மனைவியைச் சமாதானம் செய்தான் முகுந்தன்.
கணவனின் ஆறுதல் சொல்லில் அவன் தோள் சாய்ந்து கண்ணுறங்கினாள் அவன் மனைவி நீரு.
முகுந்தனின் மனதில் பல கேள்விகள். ‘இந்த விபத்திற்கு முன்னாள், நான் தூக்கத்தில் நீரு என்றால், வெட்கத்தில் முகம் சிவந்து, தூக்கத்திலும், என் பெயரா? என்று சிணுங்கும் என் நீரு எங்கே? அவள் என்னை வெட்கம் கலந்து, உரிமையோடு பார்ப்பாளே! ஆனால், இப்பொழுது நான் கூப்பிட்டால், பதட்டம், பயம் இப்படி தானே என்னை பாக்குறா? என்னை இனி ஒரு நோயாளியாகத்தான் பார்ப்பாளா?’ பல கேள்விகள் அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
‘இது தான் வாழ்க்கை என்றால், நிரஞ்சனா என்னை ஏற்றுக் கொள்வாளா? இல்லை அவள் என்னை ஏற்றுக் கொள்ளணுமுன்னு நான் நினைக்கறது சரியா? வீட்டை எதிர்த்து வேற கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஏதோ உடல் நிலை, என்னை ஏத்துக்கிட்டாங்க. ஆனால், என் நீருவின் நிலைமை? அவள் வீட்டில் என்ன சொல்லுவாங்க?’ பல கேள்விகள் அவனைக் குழப்ப, தன் சொல்லில் நம்பிக்கையோடு உறங்கும், தன் மனைவியைப் பார்த்தான் முகுந்தன்.
அவளே பற்றுக்கோல் என்பது போல், அவள் தலை மீது தன் தலையைச் சாய்த்து, ‘நல்லதே நடக்கும், என்று நம்புவோம்.’ என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான் முகுந்தன்.
‘எல்லாம் சரியாகிடும்… எல்லாம் சரியாகிடும்… எல்லாம் சரியாகிடும்…’ முகுந்தனின் அறிவு கூறிக்கொண்டே இருக்க, அவன் மனம், ‘சரியாகா விட்டால்?’ என்று பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது.
‘காதல்… காதல்… காதல்… உண்மை தான். ஆனால், காதலின் தொடக்கம் எங்கே? இல்லையென்றால் இப்படியாக்கப்பட்ட கனவுகள் எனக்கு வருமா? சந்தேகங்கள் வருமா?’ என்ற கேள்வி தோன்ற, ‘வாழ்க்கையில் எங்கோ தோற்றுவிடுவேனோ.’ என்ற அச்சம் தோன்ற முகுந்தனின் கண்கள் கலங்கியது. தன் மனைவி அறியாவண்ணம் தன் கண்ணீரை இருளில் மறைத்துக் கொண்டான் முகுந்தன்.
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
கண்ணாடி மாளிகை சற்று உடைந்து, கீறல்களோடும் இருளிலிருந்தாலும், காதல் என்னும் ஒளி காட்டும் பாதையில்
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.