கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 28
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 28
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 28
கண்களில் கேள்வியை தேக்கி விஜயேந்திரன் பார்க்க, “எங்க அப்பா சொல்லுவாங்க, என் பாடலுக்குக் கற்சிலையும் உருகி அன்பை பொழியுமுன்னு. என் பாடலுக்குக் கற்சிலை அன்பை பொழியலைன்னாலும் பரவால்லை, கட்டின கணவனாவது அன்பை பொழிஞ்சிருக்கலாம். அதுக்கே வழி இல்லாத பாடல் எதுக்கு?” என்று விஜயேந்திரன் கேட்ட வேகத்தில் உணர்ச்சி பொங்க, பதில் கூறிவிட்டு நாக்கை கடித்து ஒற்றை கண்ணை மூடி திறந்தாள் கீர்த்தனா.
“இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு. நான் பாடலை.” என்று கீர்த்தனா மறுப்பு தெரிவிக்க, விஜயேந்திரன் அவளைக் கட்டாயப் படுத்தவில்லை.
கீர்த்தனா மளமளவென்று வேலையில் மூழ்க, விஜயேந்திரன் அவளை மௌனமாகப் பார்த்தான்.
‘கீர்த்தி அப்படி என்ன எதிர்பார்த்து விட்டாள்? பணம், புடவை, நகை இப்படி எதுவும் இல்லையே! மனைவி என்னும் அங்கீகாரம். பாசம்.. அன்பு… ஆனால், எல்லா பெண்களுக்கும் கிடைக்கும் அன்பு கூட கிடைக்காத துர்பாக்கியசாலி ஆகிட்டாளோ? அதுக்கும் நான் காரணம் ஆகிட்டேன்!’ என்ற எண்ணத்தோடு குற்ற உணர்ச்சியில் தவித்தான் விஜயேந்திரன்.
‘அவள் என்னிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும் தான். என்னால், கீர்த்தனாவை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியே நான் ஏற்றுக் கொண்டாலும், லீலா இல்லை அதனால் நானா? என்று கீர்த்தனா கேட்ட கேள்வி நிஜமாகிவிடாதா?’ என்று பல கேள்விகளோடு விஜயேந்திரன் குழம்ப, அவன் குழப்பத்தைக் கலைத்தது கீர்த்தனாவின் குரல்.
“வந்து.. என்னங்க…” என்று கீர்த்தனா தடுமாற, “பெயர் சொல்லிக் கூப்பிடு கீர்த்தி. இல்லைனா, அதுக்கும் முகுந்தன் எதாவது சொல்லுவான்.” என்று விஜயேந்திரன் கூற, ‘இவனுக்கு கீர்த்தி என்ற அழைப்பு எப்படி இவ்வுளவு எளிதாக வருகிறது?’ என்ற யோசனையோடு தலை ஆட்டினாள் கீர்த்தனா.
“இந்திரன்…” என்று கீர்த்தனா தயக்கத்தோடு அழைக்க, அவளைப் பிரமிப்பாகப் பார்த்தான் விஜயேந்திரன். அவன் பார்வையில் யோசனையோடு, “அப்படி கூப்பிடலாமில்லை?” என்று தயக்கமாகக் கேட்டாள்.
“எனக்கு அப்படி கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். ஆனால், யாரும் கூப்பிட்டதில்லை.” என்று விஜயேந்திரன் சோகமாகத் தோள்களைக் குலுக்க, ‘எத்தனை கற்பனையோடு நான் இந்த பெயரைக் கூப்பிட வேண்டும் என்று எண்ணினேன்.’ என்ற எண்ணம் தோன்ற, அதை பின்னே தள்ளி விட்டு, ‘நிகழ் காலம் மட்டுமே நிரந்திரம்.’ என்று மனதில் கூறிக்கொண்டே, “கூப்பிட்டா போச்சு.” என்று சிரித்த முகமாகக் கூறினாள் கீர்த்தனா.
“ஏதோ, சொல்ல வந்தியே?” என்று விஜயேந்திரன் வினவ, “முகுந்தன் போய் நேரமாச்சு. அப்புறம், அத்தை மாமாவுக்குக் கால் பண்ணி, முகுந்தன் நல்லாருக்கிறதை சொல்லிருங்க. நானும் நிரஞ்சனாவுக்கு மெசேஜ் பண்ணிடறேன்.” என்று கூற, விஜயேந்திரன் சம்மதமாகத் தலை அசைத்தான்.
ஒரு சில நொடிகளுக்குப் பின், “உனக்கு எங்க வீட்டு மேல் எவ்வுளவு அக்கறை?” என்று விஜயேந்திரன் சிலாகிக்க, “அது உங்க வீடில்லை. நம்ம வீடு. நான் இந்த வீட்டு மருமகளாகி ஆறு மாசம் ஆகுது.” என்று கீர்த்தனா அழுத்தமாகக் கூற, கண் மூடி திறந்தான் விஜயேந்திரன்.
அவள் பேச்சு வலியைக் கொடுத்தாலும், அவள் சொற்கள் பிரதிபலித்த பொருள் இன்று மெலிதாக அவன் மனதை வருடியது.
“சரிங்க மேடம். அக்கறையுள்ள மருமக தான்.” என்று விஜயேந்திரன் புன்னகைக்க, “அது எனக்கே தெரியும்.” என்று கூறி கழுத்தை நொடித்து வேலையைத் தொடங்கினாள் கீர்த்தனா.
“கீர்த்தி… நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று விஜயேந்திரன் குறும்போடு கேட்க, “என்ன?” என்று அவன் முகம் பார்க்காமல், தன் மடிக்கணினியைப் பார்த்தபடி கீர்த்தனா கேட்க, “நீ ஒரே பொன்னாய் வளர்ந்துட்டியா? சின்ன வயசிலிருந்து சண்டை போட ஆளே இல்லாமல் வளர்ந்துட்டியா? அது தான் நான் கிடைத்தவுடனே, என்னை வச்சி செய்யற.” என்று விஜயேந்திரன் குறும்பு புன்னகையோடு கூறினான்.
கீர்த்தனா அவனிடம் வாதிடுவதற்குள், முகுந்தன் நண்பர்களோடு நுழைய அவர்கள் பேச்சு அங்கு தடைப்பட்டது.
அதன் பின் அனைவரும் ஒன்று கூட, சில மணித்துளிகள் பேச்சுக்குப் பின் கீர்த்தனாவைப் பாடச் சொல்ல, கீர்த்தனா தயக்கத்தோடு, கண்ணில் மறுப்போடும் விஜயேந்திரனை பார்த்தாள்.
கீர்த்தனாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவளுக்கு கைகொடுப்பது போல் சூழ்நிலையைத் தனதாக்கிப் பாட ஆரம்பித்தான் விஜயேந்திரன்.
விஜயேந்திரனின் குரல் கம்பீரமாக, அதே நேரம் தன்வசம் ஈர்ப்பது போல் ஒலிக்க அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது. கீர்த்தனா அவனை மெல்லிய புன்னகையோடு பார்த்தாள். கீர்த்தனாவின் புன்னகையில் அவன் புன்னகையும் விரிந்தது.
“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்
ஓ ஹோ…ஹோ.. ஓ ஹொ..ஹோ…
ஓ ஹோ…ஹோ..”
என்று அவன் குரல் இனிய கானமாக ஒலிக்க, அனைவரும் மெய்மறந்து அவன் இசையோடு கலந்தனர்.
“மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..”
வரிகள் அனைவருக்கும் புரியாவிட்டாலும், கீர்த்தனாவுக்குப் புரிந்தது. அவள் தன் கண்களை விரித்து அவனை மிரட்சியோடு பார்க்க, அவன் மீண்டும் கீர்த்தனாவைப் பார்த்தபடி சில வரிகளைத் திரும்பப் படித்தான்.
“இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு.”
கீர்த்தனாவின் கண்கள் கலங்கியது. யாரும் அறியாவண்ணம் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். விஜயேந்திரனின் கண்கள் அவள் கண்ணீரைத் தழுவியது.
“நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி.. மறுவாசல் வைப்பான் இறைவன்.” என்று விஜயேந்திரன் தொடர, தன் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிய, யாரும் அறியாவண்ணம் அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் கீர்த்தனா.
விஜயேந்திரன் தன் பாடலை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான். முகுந்தன் அவனுக்கு உதவப் பணிக்கப்பட்டவரோடும், நண்பர்களோடும் ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.
கீர்த்தனா, தடதடவென்று சத்தத்தோடு லப்டோப்பில் வேலையைத் தொடர, “கீர்த்தி…” என்று மெல்லமாக அழைத்தான் விஜயேந்திரன்.
அவன் அழைப்பு காதில் விழாதது போல், கீர்த்தனா பணியைத் தொடர, “கீர்த்தி…” என்று சத்தமாக அழைத்தான் விஜயேந்திரன்.
“நான் கோபமா இருக்கேன். என் கிட்ட பேசாதீங்க. நான் உங்களை காயப்படுத்திருவேன். ஆனால், ஒரு நண்பனை நான் காயப்படுத்த விரும்பலை.” என்று தன் கண்களை மடிக்கணினியில் வைத்தபடி கூற, “கீர்த்தி… எதுக்கு கோபம்? எனக்கு பதில் வேணும்.” என்று கனிவோடும், கண்டிப்போடும் கேட்டான் விஜயேந்திரன்.
“பெரிய தியாகின்னு நினைப்பா? இல்லை பயங்கர புத்திசாலின்னு நினைப்பா? பாட்டில் கருத்தைத் தூது விடுறீங்க?” என்று கீர்த்தனா கோபமாகக் கேட்க, விஜயேந்திரன் அவளைப் பார்த்து கேலியாகப் புன்னகைத்தான்.
‘என்ன சிரிப்பு?’ என்பது போல், கீர்த்தனா புருவம் உயர்த்த, “முன்னாடி சிலர் தூது விடுவாங்க. இப்ப அவங்க தூதுவிடறதில்லை. அவங்க தூது விட்டது தப்பிலைனா, நான் தூது விட்றதும் தப்பில்லை.” என்று கீர்த்தனாவிடம் வாதிட்டபடியே விஜயேந்திரன் அவன் நாற்காலியில் அமர்ந்து தன் கோப்புகளைப் பார்க்க, தன் மடிக்கணினியைப் பார்த்தபடி, “நல்லா பேசுறீங்க.” என்று கீர்த்தனா கூறினாள்.
பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளிலிருந்து கண்களை உயர்த்தி, கீர்த்தனாவைப் பார்த்து, “நல்லாவும் பாடுவேன்.” என்று தீவிர முகபாவனையோடு கூறினான் விஜயேந்திரன். கீர்த்தனா, அவன் முகம் பார்க்க, “இல்லையா?” என்று அவன் தோழமையுடன் சண்டைக்குத் தயாராக, “என் அளவுக்கு இல்லை.” என்று குறும்பு புன்னகையோடு முகத்தை அங்குமிங்கும் அசைத்தாள் கீர்த்தனா.
தான் பேசிக்கொண்டிருந்த பேச்சை மறந்து, “இப்படி சிரிச்சா ரொம்ப நல்லாருக்கு. எப்பவும் இப்படிச் சிரித்த முகமா இருக்கலாமே!” என்று விஜயேந்திரன் கோரிக்கையாகக் கேட்க, ‘அட! நானும் இதையே இவங்களை பார்த்து நினைத்தேனே!’ என்று அவள் மனம் துள்ள, ‘இந்த பேச்சு போகும் திசை சரியில்லை.’ என்று எண்ணத்தோடு தன் கவனத்தை வேலையில் திருப்பிக்கொண்டாள் கீர்த்தனா.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. முகுந்தன் வாய்ஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் மூலம் வேலையைத் திறம்படச் செய்து கொண்டிருந்தான். நிரஞ்சனா அவனுக்குத் துணையாக இருக்க, அவள் சண்டையும் நீண்டு கொண்டே போனது.
விஜயேந்திரன், கீர்த்தனா நாட்கள் சற்று அழகாகவே நகர்ந்தது. கீர்த்தனா மீண்டும் அலுவலக பணியில் இணைந்து கொள்ள, அவளுள் ஓர் உற்சாகம் கரை புரண்டது. அவர்கள் நட்பும் எந்தவித தொய்வுமின்றி தெளிவான நீரோடை போல் சென்றது.
அன்று இரவு,
முகுந்தனுக்குத் தேவையானவற்றை நிரஞ்சனா அவனிடம் பேசாமல் செய்து கொண்டிருந்தாள். ‘எத்தனை நாள் இந்த சண்டையை நீட்டிப்பது? நான் இவள் நல்லதுக்கு தானே ஆபீஸ் கூட்டிட்டு போகலை. இதை இவள் புரிஞ்சிக்க மாட்டாளா?’ என்று முகுந்தனின் எண்ணம் வேகமாக ஓட, ‘என் நல்லதுக்குத் தான் சொல்றாங்க. அதை அன்பா சொல்ல கூடாதா? என்னை முகுந்த் சமாதானம் செய்யணுமுன்னு கூட யோசிக்கலை. கொழுப்பு. அவனுக்கு எல்லாரும் இருக்காங்க. அது தான் என்னை கண்டுக்கலை. வரட்டும். என்னைக்காவது வரட்டும் அன்னைக்கு வைக்கறேன் வேட்டு.’ என்று மனதில் கருவியபடி வேலையைத் தொடர்ந்தாலும், அவள் கண்கள் முகுந்தனைத் தீண்ட, அவள் செவிகள் அவன் அழைப்புக்காக ஏங்கியது.
‘இல்லை… இவளை இப்படியே விட்டா சரி கிடையாது? என்கிட்டே பேசமாட்டாளா? யாரோ மாதிரி பேசுறா.’ என்று எண்ணத்தோடு, “நீரு…” என்று மெத்தையில் சாய்வாக அமர்ந்து மென்மையாக அழைத்தான் முகுந்தன்.
“ம்…” என்று தள்ளி நின்று கொண்டு நிரஞ்சனா கேட்க, “கூப்பிட்டா பக்கத்தில் வர மாட்டியா? இல்லை வந்தாலும் பிரயோஜனுமில்லைன்னு வரலியா?” என்று அவள் அருகே வராத கோபம் அவன் வார்த்தையில் அப்பட்டமாக வெளி வந்தது.
முகுந்தன் அருகே வந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “உன் மேல் செம்ம காண்டில் இருக்கேன். சப்பு சப்புன்னு நாலு கன்னத்தில் கொடுக்கலாமுன்னு. இதுல இப்படி வேற பேசிகிட்டு இருந்தன்னு வை, பேசவமாட்டேன்… அப்படியே கன்னத்தில் ஒன்னு வைப்பேன். ஜாக்கிரதை.” என்று தன் ஆள் காட்டி விரல் உயர்த்தி எச்சரித்தாள் நிரஞ்சனா.
முகுந்தன் அவளை மௌனமாகப் பார்க்க, “அன்னைக்கு என்னை திட்டன தானே? சமாதானம் செய்ய இவ்வளவு நாளா?” என்று காட்டமாக கேட்டாள் நிரஞ்சனா.
அவளிடம் சண்டையிட அவன் தாயாராக, நிரஞ்சனாவின் கண்கள் கலங்க, ‘இவளுக்கு என்னை தவிர யார் இருக்கா?’ என்ற எண்ணம் தோன்ற, “சாரி டீ… நீரு… நீரு…” என்று அவன் குழைய, “நான் காலேஜ் போறேன். படிக்கறேன். உன் கூட ஆபிஸ் வரேன்னு சொல்லமாட்டேன். ஆனால், என் கூட சண்டை போடாத.” என்று அவன் மார்பில் சாய்ந்து அவனிடம் இழைந்தாள் நிரஞ்சனா.
“நீரு… நீரு…” அவள் கூந்தலில் முகம் புதைத்து, அவன் கொஞ்ச, விழுக்கென்று எழுத்து அமர்ந்து, “நான் கோபமா இருக்கேன்.” என்று சற்று நகர்ந்து அமர்ந்தாள் நிரஞ்சனா.
முகுந்தன் புன்னகையோடு, “பக்கத்துல வா டீ.” என்று கண்சிமிட்டி அழைத்தான். நிரஞ்சனா மறுப்பாக தலை அசைக்க, “நீரூ…” என்று அவன் இழுக்க, “நான் கோபமா இருக்கேன்.” என்று அவள் உதட்டை அங்குமிங்கும் அசைத்து எழுந்து செல்ல, “நீரு… ஐ வாண்ட் டு ஹக் யு. ப்ளீ…” என்று அவன் வாக்கியத்தை முடிப்பதற்குள் முகுந்தனின் இதழ்களை மூடிவிட்டு அவன் கைக்குள் அடங்கி போனாள் நிரஞ்சனா.
“சாரி டீ. உனக்காகத்தான் சொன்னேன். கொஞ்சம் விட்டாலும், நீ காலேஜ் போக மாட்டா. அது தான் டீ சமாதான படுத்தலை.” என்று நிரஞ்சனாவின் கன்னத்தோடு இழைந்து அவன் கூற, “ம்…” என்று அவள் முறுக்கி கொண்டாள். வார்த்தைகள் சண்டையிட்டுக் கொள்ள, அவர்கள் செயல்கள் அவர்களை நெருக்கமாக்கிக் கொண்டிருந்தது.
தனிமை, தீண்டல் அவர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்ல, அவர்கள் சுவாசக்காற்று இருவரின் அருகாமையும் உணர்த்த முகுந்தனின் கைகளை அவள் தன்னோடு இறுக்க, “ஓ…” என்று கூச்சலிட்டு எழுந்தாள் நிரஞ்சனா.
முகுந்தன் அவளைப் புரியாமல் பார்க்க, தன் கைகளால் உதட்டை மூடி கண்ணீர் மல்க அவனைப் பார்த்தாள் நிரஞ்சனா.
“டேய்… டேய்…” அவள் வார்த்தை வராமல் தடுமாற, “முகுந்த். உனக்குத் தெரியலையா?” என்று அவள் கேட்க, அவன் விழித்தான்.
“என்ன?” என்று முகுந்தன் விழி உயர்த்தி கேட்க, “உன் விரல்களில் அசைவு தெரிஞ்சிச்சு.” என்று கூக்குரலிட்டாள் நிரஞ்சனா. அவள் விழிகள் ஆனந்தத்தை மின்னலாகக் காட்ட, அதை ஏமாற்ற மனமில்லாமல் ஆனால் மௌனிக்கவும் முடியாமல், “நீரு…” என்று ஏக்கமாக அழைத்தான் முகுந்தன்.
அந்த நீரு என்ற அழைப்பில் படக்கென்று அத்தனை உணர்வுகளும் வடிந்து நின்றாள் நிரஞ்சனா.
அறை எங்கும் நீரு… நீரு… நீரு… என்று சூழ்ந்து நின்றது. முகுந்தனின் கோபமும் நீரு தான். கொஞ்சலும் நீரு தான். ஏக்கமும், நிராசையும் நீரு தான்.
அந்த அழைப்பில் மட்டுமே நிரஞ்சனாவின் உயிர் துடித்துக் கொண்டிருந்தது.
நிரஞ்சனா அசையாமல் நின்று கொண்டிருக்க, “நீரு…” என்று ஏக்கமாக அழைத்து, “எனக்கு எதுவும் தெரியலை டீ.” என்று பரிதாபமாக கூறினான் முகுந்தன்.
அவன் முன் நின்று அவள் இடை மேல் அவன் கைகளை வைத்து, “இந்த இடத்தில் நான் உணர்ந்தேன். எனக்கு தெரியாதா? நீ சொல்றது சரியா இருக்குமா? இல்லை நான் சொல்றது சரியா இருக்குமா?” என்று பிடிவாதமாகக் கேட்டாள் நிரஞ்சனா. அவளை மறுத்துப் பேச முடியாமல், முகுந்தன் அவளைப் பார்க்க, அவன் முகத்தை கையில் ஏந்தி, “டாக்டர் என்ன சொன்னாங்க? சீக்கிரம் வந்திருமுன்னு சொன்னாங்க தானே? நான் உன்னை நல்லா பார்த்துக்கிட்டா ரொம்ப சீக்கிரம் வருமுன்னு சொன்னாங்க தானே? இதுவே இவ்வளவு நாள் ஆகிருச்சு பாரு? நான் எங்க குலசாமிக்கு வேண்டிருக்கேன். நிறைய வேண்டுதல் வச்சிருக்கேன். சீக்கிரம் வந்திரும். இல்லலலை வந்திருச்சு.” என்று நிரஞ்சனா தொடர்ந்து பேசினாள்.
“உனக்கு எப்ப இவ்வுளவு பக்தி வந்துச்சு?” என்று முகுந்தன் கேட்க, “எல்லாரை மாதிரி தான். கஷ்டம் வரும்பொழுது, பக்தி தானா வந்திரும். பக்திங்கறது கூட ஒரு நம்பிக்கை தானே?” என்று அவன் கேள்விக்குக் கேள்வியைப் பதிலாக்கினாள் நிரஞ்சனா.
“நீ வச்ச ரோஜா செடியில் ஒரு குட்டி மொட்டு இருக்கே, அது பூவாக ஒரு வராம ஆகுமா?” என்று நிரஞ்சனா தீவிரமாகக் கேட்க, “எது அந்த ஊட்டி ரோஸா?” என்று முகுந்தன் சந்தேகம் கேட்க, நிரஞ்சனா தன் தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்டினாள்.
“சரியா தெரியலியே?” என்று முகுந்தன் கூற, “சரி விடு. உன் விரல்களுக்கு அசைவு வந்திருச்சு. டாக்டர், அசைவு வர ஆரம்பிச்சிருச்சுனா, சீக்கிரம் சரியாகிருமுன்னு சொன்னாங்க.
அது பூவாகரத்துக்குள்ள, சரியாகிரும். நீ தான் எனக்கு அதை தலையில் வைக்குற… நான் காலேஜுக்கு ரோஸ் வச்சிட்டு போறேன். சைட் ரோஸ். எனக்கு சென்டர் ரோஸ் வச்சா பிடிக்காது. ஓகேவா?” என்று நிரஞ்சனா தன் கைகளை இடுப்பில் வைத்துக் கேட்க, “நீரு. அவசரப்படாதே. நாளைக்கு டாக்டரை பாப்போம். அப்புறம் பேசுவோம்.” என்று முகுந்தன் மெதுவாகக் கூறினான்.
“எனக்கு பூ வச்சி விடுவியா? மாட்டியா?” என்று நிரஞ்சனா பிடிவாதமாகக் கேட்க, “நீரு…” என்று அவன் கெஞ்ச, கொஞ்ச, “வச்சி விடுவியா? மாட்டியா?” என்று நிரஞ்சனா இன்னும் அழுத்தமாகப் பிடிவாதமாகக் கேட்க, “சரி டீ. வச்சி விடுறேன்.” என்று கோபமாகக் கூறினான் முகுந்தன்.
“தட்ஸ் இட். நம்பிக்கை தானே வாழ்க்கை. சரியாகிருமுன்னு நான் நம்பறேன். நீயும் நம்புற. மருந்து சாப்பிடுறோம். ட்ரீட்மெண்ட் போறோம். எப்படி வராமல் போகும். அட் ஆன் டானிக். கடவுளை வேற கும்பிடறேன்.” என்று நிரஞ்சனா கண்சிமிட்ட, “நீ அழகா இருக்க டீ.” என்று கண்களால் அவளைத் தழுவினான் முகுந்தன்.
“இந்த இருட்டில், நான் நல்லா கூட தெரியலை.” என்று நிரஞ்சனா கழுத்தை நொடிக்க, “அது தான் உறுதியா சொல்றேன்.” என்று முகுந்தன் கேலி பேச, “டேய்…” என்று அவனை நெருங்கினாள் நிரஞ்சனா.
அவர்கள் சண்டைகள் எல்லைமீற, தீண்டல்கள் சுகமாக மாற, பேச்சுக்கள் வரம்பு மீற, நமக்கு அங்கு என்ன வேலை?
அதே நேரம் விஜயேந்திரன் அவன் அறையில் தூக்கம் இல்லாமல் திரும்பிப் படுத்தான். அந்த மெத்தையில் அவர்கள் இருவர் மட்டும் தான். இடையில் இருந்த தலையணைகள் காணாமல் போயிருந்தன. அவனும் வைக்க வில்லை. அவளும் வைக்கவில்லை.
‘இவள் எனக்குத் தோழி மட்டும் தானா? என் குடும்பத்தில் மேல் இவ்வுளவு அக்கறை கொண்டவள்? காலைல இருந்து இரவு வரை என் குடும்பத்தை மட்டுமே நினைக்கிறவ எனக்குத் தோழியா மட்டும் இருக்க முடியுமா? என் சின்ன சின்ன விஷயத்தில் கூட அக்கறை எடுத்துக்கறா? நான் போடுற ட்ரெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரை! ‘ என்ற கேள்வியோடு திரும்பிப் படுத்தான் விஜயேந்திரன்.
“தூக்கம் வரலையா?” என்று கண்களை மூடியபடியே, கீர்த்தனா கேட்க, இது தான் சாக்கு என்று அவள் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் விஜயேந்திரன்.
“கீர்த்தி…” விஜயேந்திரனின் குரல், மெல்லமாக பாந்தமாக அன்போடு ஒலித்தது. அந்த குரல் அவளைத் தீண்ட, திடுக்கிட்டு தன் உணர்வுகளை மறைக்கப் போராடி திறந்த தன் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள் கீர்த்தனா.
‘ஐயோ.. ஜஸ்ட் பிரெண்ட் என்று நானே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? யார் கீர்த்தின்னு கூப்பிட்டாலும் எனக்கு கோபம் வரும். இவங்களை மட்டும் ஏன் கூப்பிட விட்டேன்? இவங்க… இவங்க…’ அவள் எண்ணங்கள் செல்ல கூடாத இடத்துக்கு செல்ல, ‘இல்லை மன்னிப்பு கேட்டுட்டாங்க. அவங்களும் வருத்தப்படுறாங்க. நான் அதை மன்னிக்கலைனாலும், மறந்திறனும்.’ என்று தனக்குள் உருபோட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.
“கீர்த்தி…” அவன் மீண்டும் அழைக்க, “ம்…” அங்கு முனங்கல் சத்தம் மட்டுமே கேட்டது.
“கீர்த்தி, உனக்கும் தூக்கம் வரலையா?” என்று உரிமையோடு ஒலித்தது அவன் குரல்.
ஆனால், அவன் பதில் கொடுக்க நேரம் கொடுக்காமல் “கீர்த்தி. உனக்கு ஒரு கிபிட் கொடுக்கணும். வாங்கிப்பியா?” என்று தயக்கத்தோடு சந்தேகமாகக் கேட்டான் விஜயேந்திரன்.
“இந்த இருட்டில் என்ன கிபிட்?” என்று கீர்த்தனா சற்று படபடப்போடு கேட்டாள். “ஏன் இருட்டில், கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?” என்று அவள் படபடப்பு புரியாமல் விளையாட்டாகக் கேட்டான் விஜயேந்திரன்.
‘இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? என் எண்ணங்களுக்கு என்ன அர்த்தம்?’ என்று கீர்த்தனாவின் அறிவு சிந்தித்தாலும், ஆசை கொண்ட அவள் மனம், அவன் மனதோடு கோபம், வெறுப்பு என அனைத்தையும் கட்டவிழ்த்து கீர்த்தனாவை விட்டு ஓடியது.
“வாங்கிப்பேன்.” என்று மென்மையாகக் கூறினாள் கீர்த்தனா. அவனும் தயக்கத்தோடு, அவன் பரிசை கொடுக்க அவளை நெருங்கினான்.
“கீர்த்தி கண்ணை மூடு.” என்று அவன் மென்மையாக கூற, தன் விழிகளை எதிர்பார்ப்போடு மூடினாள் கீர்த்தனா. அவன் கொடுத்த பரிசில், மெய்சிலிர்த்து உணர்ச்சி பெருக்கோடு அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.