கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  21

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  21

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  21

நிரஞ்சனாவின் கதறல், அந்த தொடுகையில் ஒலியில்லாமல் நின்றது. அவள் முன் முகுந்தன். நிரஞ்சனாவின் கண்ணீர், கீழே வருமுன் முகுந்தனின் கைகள் அதைத் தாங்கி பிடிக்க, முகுந்தன் என்று கதறிக் கொண்டு அவனைக் கட்டிப்பிடித்தாள் நிரஞ்சனா.

“முகுந்தன்… முகுந்தன்… என்னால் முடியலை. நீ வந்துட்டியா? வந்துட்டியா?” என்று தோள் சாய்ந்து பிதற்றினாள் நிரஞ்சனா. “நீரு. வராமல் எங்க டீ போவேன். நான் உன்னைத் தானே சுற்றிச் சுற்றி வருவேன்.” என்று காதல் வழிய ஒலித்தது முகுந்தனின் குரல். அவன் கைகள் அவள் கன்னம் தொட்டு, அவள் கழுத்தைத் தீண்டி, அவள் முதுகை ஆதரவாகத் தடவியது.  “தெரியும் முகுந்த். நீ என் கூடத் தான் இருப்ப. நீ என் கூடத்தான்…” என்று நிரஞ்சனா பிதற்றினாள். பூங்காவில் பலர் அவளை விசித்திரமாகப் பார்க்க, சுற்றுப்புறத்தை மறந்து அவள் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

நிரஞ்சனாவின் அழுகை அடங்கவில்லை. தோள்கள் மேலும் மேலும் குலுங்க அவள் கண்ணீர் நிற்கவில்லை. நிரஞ்சனாவின் கண்ணீர், அவளை  தொப்பலாக நனைத்து, அவளுக்கு சுய உணர்வைக் கொடுக்க, நிரஞ்சனா விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

‘ஐயோ… ஐயோ… என்ன பண்றேன் நான் இங்க? என்ன பண்ண போறேன்?’ பதறிக் கொண்டு ஓட்டம் பிடித்து, பஸ் ஏறி, மருத்துவமனை நோக்கி சென்றாள் நிரஞ்சனா.

மருத்துவமனை வாசலை நெருங்க, “அக்கா…” என்று நிரஞ்சனவை நெருங்கினாள் ஸ்வாதி. அவள் கைகளில் பணத்தைக் கொடுத்து, “அக்கா. அம்மா கொடுக்க சொன்னாங்க.” என்று ஸ்வாதி கூற, நிரஞ்சனாவின் கண்களில் நம்பிக்கை கீற்று.

அக்கா, தங்கை இருவரும் பணத்தோடு உள்ளே செல்ல, அங்கே கீர்த்தனா, நவநீதன், பூமா அனைவரும் ஐ. சி. யூ வாசலில் நிற்க, முகுந்தனுக்கான ஆபரேஷன் தொடங்கி இருந்தது.

இத்தனை மனிதர்கள், பணம் அனைத்தும் சில மணி நேரத்தில் முகுந்தனை சூழ்ந்து  விட, நிரஞ்சனா சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள். ஸ்வாதி செய்வதறியாமல் தவிக்க, “ஸ்வாதி… நீ கிளம்பு. அம்மா, தேடுவாங்க. நான் பாத்துக்கறேன்.” என்று நிரஞ்சனா அழுத்தமாகக் கூறினாள்.

ஸ்வாதி வேறு வழியின்றி கிளம்ப, நிரஞ்சனா கண்களில் அச்சத்தோடு அமர்ந்திருந்தாள். கீர்த்தனா அவள் அருகே மெளனமாக அமர்ந்திருக்க, பூமா நிரஞ்சனாவை க்ரோதமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நவநீதன் விஜயேந்திரனிடம் அலைபேசியில் பேசினார். “அப்பா. நான் இன்னைக்கு கிளம்பி வரேன் அப்பா.” என்று விஜயேந்திரன் கூற, “இல்லை. விஜய். எதோ அவசர வேலைன்னு சொன்னியே. நீ முடிச்சிட்டு வா. நான் பாத்துக்கறேன்.” என்று நவநீதன் கூற, “அப்பா. நான் ஒரு பத்து நாள்ல வந்துருவேன் அப்பா.” என்று விஜயேந்திரன் கூற, “கீர்த்தனா கிட்ட பேசு.” என்று நவநீதன் கூற, விஜயேந்திரன் மௌனித்தான்.

அதற்குள், அலைபேசி கீர்த்தனாவிடம் கை மாறி இருக்க, அங்கு அமைதி நிலவியது. விஜயேந்திரன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, ஆழமாக மூச்செடுக்க, அந்த மூச்சு சத்தம் கீர்த்தனாவைத் தீண்ட, கீர்த்தனாவின் கோபம் விர்ரென்று ஏறியது.

“கீர்த்தனா…” என்று அவன் அழைக்க, அந்த அழைப்பு கீர்த்தனாவின் செவிகளைத் தீண்டும் முன் , படக்கென்று தன்  முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அலைபேசியைத் தூர நிறுத்தினாள் கீர்த்தனா.

“கீர்த்தனா… கீர்த்தனா… கீர்த்தனா…” என்று விஜயேந்திரனின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, அலைபேசியிலிருந்த சிவப்பு நிறத்தை அழுத்தி அவன் சத்தத்தை நிறுத்தினாள் கீர்த்தனா.

அலைபேசியை, கீர்த்தனா நவநீதனிடம் கொடுக்க, “பேசிட்டியா கீர்த்தனா?” என்று நவநீதன் கேட்க, “இல்லை மாமா… சிக்னல் சரி இல்லை போல. லைன் கட் ஆகிருச்சு.” என்று கீர்த்தனா கூற, அவளை ஆமோதிப்பது போல் தலை அசைத்தார் நவநீதன். “விஜய் எப்ப வருவான்?” மருத்துவமனையில், ஐ. சி. யூ வாசலில் அமர்ந்திருந்த, பூமா தன் கணவனிடம் கேட்க, “பத்து நாள்ல வந்திருவான்.” என்று நவநீதன் கூறினார்.

இந்த பதிலில் பூமா சற்று தெம்பாக உணர்ந்தார். நிரஞ்சனாவுக்கு சற்று தனிமை உணர்விலிருந்து விடுபட்டவளாக காட்சி அளித்தாள். ‘யாருமே எதுமே பேச மாட்டேங்கறாங்க. முகுந்தன் அண்ணன் வந்தா நமக்கு பிரச்சனை இல்லை.’ என்று நிரஞ்சனா எண்ண, ‘இவங்க எதுக்கு இங்க வரணும்? வந்தா… வந்தா.. நான்… இல்லை… இல்லை… என்னால், இனி அவங்களோடு வாழ முடியாது. நான் இங்கிருந்து கிளம்பனும். எனக்குத் தனிமை வேணும். அப்பா இப்ப ஊருக்கு போயிருக்காங்க. நம்ம வீட்டுக்கு போனால் தனிமை கிடைக்கும்னு பார்த்தா, இங்க நிலைமை சரி இல்லை. நான் இப்ப கிளம்ப முடியாது…” கீர்த்தனாவின் அறிவு வேகமாகப் பதட்டமாகச் செய்வதறியாமல் யோசித்தது.

அவர்கள் சிந்தனையோட்டத்தோடு, நேரமும், நாட்களும் வேகமாக நகர்ந்தது.

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்க, முகுந்தனுக்குச் சுயநினைவு அத்தனை எளிதாகத் திரும்பவில்லை. பத்து நாள் கழித்து, விஜயேந்திரன் இந்தியா திரும்பினான்.

விஜயேந்திரன் மருத்துவமனைக்கு வர, கீர்த்தனா தயங்க  நிரஞ்சனா வேகமாக ஓடி, அவன் முன் நின்றாள். ஒருமுறையே பார்த்திருந்தாலும், அன்று விஜயேந்திரன் பேசிய ஆதரவான வார்த்தைகள், நிரஞ்சனாவுக்கு நெருக்கத்தைத் தர, தனிமை உணர்வு விலகிய நிம்மதி அவள் கண்களில் தெரிந்தது. நிரஞ்சனாவின் கண்கள் கண்ணீரை உகுக்க, அவள் தலையை ஆதரவாகத் தடவி, “ஏன் அழற? முகுந்தன் நல்லபடியா திரும்பி வருவான். அவனை உன்னிடம் பழையபடி ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு? அதுக்கு எவ்வுளவு செலவானாலும் சரி. எந்த நாட்டுக்குப் போனாலும் சரி. ஒகே?” என்று விஜயேந்திரன் கூற, மெல்லிய புன்னகையோடு தலை அசைத்தாள் நிரஞ்சனா.

பத்து நாட்களுக்கு பின் நிரஞ்சனாவின் முகத்தில் மெல்லிய புன்னகை. முகுந்தனின் அண்ணன் அனைத்தையும் சரி செய்து விடுவான் என்ற நம்பிக்கை நிரஞ்சனாவுக்கு!

கீர்த்தனா அவனிடம் அகப்படாமல் நழுவ, விஜயேந்திரனும் அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான்.  பதினைந்து நாட்கள் கழித்து, முகுந்தனுக்கு நினைவு திரும்பியது. ஆனால்… முகுந்தனின் கை, கால் இரண்டும் செயலிழந்து விட்டது என்று மருத்துவர் அனைவரின் தலையிலும் இடியை இறக்கினார்.

பூமா, அனைவரின் சொல்லுக்குப் பயந்து, அமைதியாகக் கண்ணீர் உகுக்க, நிரஞ்சனா தரையில் விழுந்து கதறி அழுதாள். யாராலும், நிரஞ்சனவை நெருங்க முடியவில்லை.”எல்லாம்… நான் செய்த பாவம்.” என்று தலையை தன் கால் முட்டியில் புதைத்துக் கொண்டு அழுதாள்.

இந்த பத்து நாட்களில், கீர்த்தனா, நிரஞ்சனாவிடம் பெரிதாகப் பேசவில்லை. அவ்வப்பொழுது, நிரஞ்சனாவின் தங்கை ஸ்வாதி, வந்து நிரஞ்சனாவுக்கு ஆறுதல் கூறுவதோடு சரி.

‘இப்படி சொந்த பந்தம் அனைத்தையும் இழக்க வைக்கும் காதல் தேவையா?’ என்ற கேள்வியே கீர்த்தனாவின் மனதில் எழும். ஆனால், இன்றைய செய்தி, நிரஞ்சனாவின் அழுகை, இந்த கேள்வியைத் தாண்டியும் நிரஞ்சனாவின் மீது கீர்த்தனாவின் மனதில் பரிதாபத்தைப் பிறக்கச் செய்தது.

நிரஞ்சனாவின் அழுகை அதிகரித்துக் கொண்டே போக, விஜயேந்திரன் செய்வதறியாமல் திகைக்க… கீர்த்தனா நிரஞ்சனாவின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“டாக்டர் இன்னைக்கு நிலைமையை சொன்னாங்க. சரி பண்ண முடியாதுன்னு சொல்லலியே.” என்று கீர்த்தனா கூற, நிரஞ்சனா விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள். “சரி ஆகிருமா?” என்று வெளியே வர பயந்த குரலைத் தேக்கி தைரியத்தைத் திரட்டி மெல்லமாக கேட்டாள் நிரஞ்சனா.

“கண்டிப்பா சரி ஆகிரும்.” என்று கீர்த்தனா நம்பிக்கையோடு கூற, தன் தங்கையிடம் தன் பாரத்தை இறக்க விரும்பாமல் மௌனம் காத்த நிரஞ்சனா கீர்த்தனா கூறிய சொல்லிலிருந்த ஒட்டுதலில், கீர்த்தனாவின் மடியில் முகம் புதைத்து விசும்பினாள் நிரஞ்சனா.

கீர்த்தனாவின் கைகள், தானாக நிரஞ்சனாவின் தலையை ஆதரவாகத் தடவியது. நிரஞ்சனாவின் அழுகை மெல்லமாக குறைந்தது.

“நீ தானே முகுந்தனுக்கு நம்பிக்கை. நீ தானே முகுந்தனுக்கு பெட்டர் ஹாஃ. நீ அழுதா, அவன் தாங்குவானா?” என்று விஜயேந்திரன் ஆழமான குரலில் கேட்க, நிரஞ்சனா தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, மறுப்பாக தலை அசைத்தாள்.

‘ஊருக்கெல்லாம் உபதேசம் நல்லா தான் இருக்கு.’ என்ற எண்ணத்தோடு கீர்த்தனா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். முகுந்தனைப் பார்க்க அனுமதி கிடைக்க, நவநீதன், பூமா, விஜயேந்திரன், கீர்த்தனா அனைவரும் உள்ளே செல்ல, நிரஞ்சனா வெளியே அமர்ந்திருந்தாள்.

முகுந்தன் அசதியாக தன் கண்களை திறந்தான்.        விஜயேந்திரன், நவநீதன் உணர்ச்சி துடைத்த முகத்தோடு முகுந்தன் அருகே நிற்க, கீர்த்தனா முகுந்தனை பார்த்தபடி சுவரில் சாய்ந்து நின்றாள்.

பூமா அவன் தலை கோதி அழுதார்.

“அம்மா… ஒண்ணுமில்லை அழாதீங்க.” என்று முகுந்தன் ஆதரவாகப் பேச, தன் தாயின் கண்ணீரைத் துடைக்க அவன் கைகள் பரபரக்க, “அம்மா… அழாதீங்க. என்னால உங்க கண்ணீரைக் கூட துடைக்க முடியாது.” என்று முகுந்தனின் குரல் கோபமாக ஒலித்தது.

 

முகுந்தனின் கண்கள் அறையை வட்டமடித்தது. நிரஞ்சனாவை அவன் கண்கள் தேட, விஜயேந்திரன் நிரஞ்சனாவை தேடி வெளியே வர நிரஞ்சனாவை அங்குக் காணவில்லை.

விஜயேந்திரன், உள்ளே நுழைய, முகுந்தனைப் பார்த்த பூமா, “உன் பொண்டாட்டியை தேடுறியா? அவ எப்படி வருவா? பாக்க ராஜா கணக்கா இருக்க. பணக்கார பையன்ன்னு உன்னை மயக்கிட்டா. உனக்கு இப்படி ஆகிருச்சுன்னு தெரியவும் விட்டுட்டுப் போயிருப்பா.” என்று பூமா கழுத்தை நொடிக்க, கீர்த்தனா முகத்தைச் சுழித்தாள்.

“அம்மா.” என்று முகுந்தன் கண்ணீரோடு அழைக்க, “அம்மா…” என்று விஜயேந்திரனின் குரல் கண்டிப்போடு அழைத்தது.

“அத்தை. இந்த பதினைந்து நாளா, உங்க வேதனைக்கு நிரஞ்சனாவோட வேதனை எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை.” என்று கீர்த்தனா உரிமையோடு கூற, விஜயேந்திரன் கீர்த்தனாவை அண்ணாந்து பார்த்தான்.

விஜயேந்திரனின் பார்வை தீண்டல் கீர்த்தனாவைச் சுட, கீர்த்தனா தன் கவனத்தை முகுந்தனிடம் திருப்பினாள். அப்பொழுது நிரஞ்சனா, கதவை திறந்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.

‘அத்தனை நேரம் அழுது வடிந்த நிரஞ்சனாவா இது?’ என்ற கேள்வி அனைவரின் முகத்திலும் இருந்தது. தெளிவான முகத்தோடு, அழுததற்கான அடையாளம் எதுவும் இல்லாமல் காட்சியளித்தாள் நிரஞ்சனா.  முகுந்தனின் பார்வை நிரஞ்சனாவை நெருங்க, அவள் தனிமை தவிடுபொடியானது. இத்தனை நேரம் இல்லாத பலம், அவள் கால்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதில் ஆராயமுடியாதபடி, “முகுந்த்… முகுந்த்… முகுந்த்…” என்று அழைத்துக் கொண்டு அவனிடம் பறந்து வந்தாள் நிரஞ்சனா.

“நீரு…” என்று முகுந்தன் அழைக்க, “இந்த குரலைக் கேட்காமல் நான் இத்தனை நாளில் செத்துட்டேன் டா…” என்று கூறி நிரஞ்சனா முகுந்தனின் கழுத்தை அணைக்க, அவர்களுக்குத் தனிமை கொடுத்து விஜயேந்திரன், நவநீதன், கீர்த்தனா விலக, “ச்சீ… என்ன பொண்ணோ? இங்கிதம் தெரியாமல்…” என்று முணுமுணுத்து கொண்டே வெளியேறினார் பூமா.

“நீரு… நீரு…” என்று முகுந்தன் அவளை மீண்டும் மீண்டும் அழைக்க, நிரஞ்சனா தன் கன்னத்தை அவன் கன்னத்தோடு வைத்து இழைந்து, “கூப்பிடு டா… நீருன்னு கூப்பிடுடா…” என்று உணர்ச்சி  பெருக்கோடு கூறினாள்.

தன் மனைவி இத்தனை அருகாமையில் இருக்க, தன் கைகள் அவளை எங்கெங்கோ எங்கெங்கோ தீண்ட நினைக்க, அவன் மூளை செய்ய நினைக்கும் வேலையை கைகள் செல்ல முடியாமல் தவிக்க, “என்னால, எதுமே முடியாது டீ. நான் இனி உனக்கு கஷ்டம் டீ…” என்று முகுந்தன் கலங்க, அவனை பேச விடமால், அவன் உதடுகளை தன் செவ்விதழ்களால் மௌனிக்கச் செய்தாள் நிரஞ்சனா.

நீண்டு, நெடிய நிமிடங்களாகத் தொடர்ந்த அந்த முத்தம், இருவரின் உயிரோடு கலந்தது. தன்னவனின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட நிரஞ்சனா, அவன் முகத்தை கைகளில் ஏந்தி, முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள் நிரஞ்சனா.

முகுந்தனின் கண்களில் கண்ணீர் வடிய, “என்னால முடியாதுன்னு  நீ குடுக்கறியா?” என்று கரகரப்பான குரலில் கேட்டான் முகுந்தன். “ச்ச… சால்ட்டி கிஸ்…அழாத முகுந்த்.” என்று முகத்தைச் சுழித்தாள் நிரஞ்சனா. தன்னவளின் எண்ணம் புரிந்து முகுந்தன் மேலும் எதுவும் பேசவில்லை.

“பொண்டாட்டி கிஸ் பண்ணா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது.” என்று நிரஞ்சன் முகுந்தனைக் கண்டிக்க, சம்மதமாகத் தலை அசைத்தான் முகுந்தன்.

நிரஞ்சனா, எழுந்து அமர்ந்து மறுபக்கம் திரும்பி அமர, அவள் கண்கள் கலங்கியது. “நீரு…” என்று முகுந்தன் அழைக்க,”ம்…” என்று நிரஞ்சனா சத்தம் செய்ய, “என்னை பாரேன்.” என்று முகுந்தன் கூற, வெளிவர துடித்த கண்ணீரை உள்ளிழுத்து, அவன் பக்கம் திரும்பி அமர்ந்தாள் நிரஞ்சனா.

முகுந்தன் நிரஞ்சனாவை கண்களால் அழைக்க, நிரஞ்சனா அவன் அருகே செல்ல, “அழுதியா?” என்று கிசுகிசுப்பான குரலில்  கேட்டான் முகுந்தன்.

“நான் ஏண்டா அழணும்? நீ தான் பொழச்சிட்டியே? அதுக்கா?” என்று கேலி போல் கேட்டு சூழ்நிலையை இயல்பாக்க விரும்பினாள் நிரஞ்சனா. “கை, கால் தான் வேலை செய்யாது. மூளை, மனசு எல்லாம் நல்லா தான் இருக்கு.” என்று முகுந்தன் அழுத்தமாகக் கூற, “ஆமா முகுந்த் அழுதேன். இப்படின்னு தெரிஞ்சவுடன் அழுதேன். ஆனால், நான் அழுதா துடைக்க, உன் கைகளால், இப்ப முடியாதுன்னு நானே துடைச்சிகிட்டேன். உனக்கு சரியானதும் சேர்த்து வச்சி அழறேன். நீ தாங்கி பிடிக்கணும். சரியா?” என்று உரிமையோடு   நிரஞ்சனா கூற, “சரியாகிடுமா டீ?” என்று முகுந்தன் சந்தேகமாகக் கேட்டான்.

நிரஞ்சனா நம்பிக்கை வார்த்தை கூற, கீர்த்தனா அவர்கள் அறைக்குள்  நுழைந்தாள். முகுந்தன் முகத்தில் ஒரு தெளிவு, நிரஞ்சனாவின் முகத்தில் ஓர் புன்னகை, கீர்த்தனாவின் கண்களுக்குக் காதல் புதிய கோணத்தில் காட்சி அளித்தது.

“முகுந்தன்… நாளைக்கு வீட்டுக்கு போகலாமுன்னு சொல்லிட்டாங்க. நானும், உங்க அண்ணனும் இங்க தான் இருக்கோம். அத்தை, மாமா, வீட்டுக்கு போறாங்க. ஏதாவது வேணுமின்னா, நிரஞ்சனா கிட்ட சொல்லுங்க.  நாங்க வெளிய தான் இருக்கோம்.” என்று கீர்த்தனா கூற, இருவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர் இருவரும்.

‘நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன்?’ என்ற கேள்வியோடு, கீர்த்தனா வெளியே இருந்த நாற்காலியில் அமர, அவள் அருகே அமர்ந்தான் விஜயேந்திரன்.

பல நிமிட யோசனைக்குப் பின், “எங்க வந்தீங்க?” என்று தன் கண்களைச் சுருக்கி, எங்கோ பார்த்தபடி கேட்டாள் கீர்த்தனா. “இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்?” என்று விஜயேந்திரன் கேட்க, “எங்க போனீங்க? யாரை பார்த்தீங்க? ஏன் திரும்பி வந்தீங்க? இப்படி எல்லாம் கேவலமா உங்களைக் கேட்க கூடாதுன்னு நாசூக்கா கேட்கறேன்னு அர்த்தம்.” என்று கீர்த்தனா கடுப்பாகக் கூறினாள்.

கீர்த்தனா கேட்ட கேள்விக்கு விஜயேந்திரன் கூறிய பதிலில் அவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தாள் கீர்த்தனா.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

 

error: Content is protected !!