கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  26

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  26

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  26

தன்னை போல், முகுந்தன், நிரஞ்சனாவின் மனநிலையை கீர்த்தனா காரணம் காட்ட, அதையே எண்ணியபடி, கீர்த்தனாவைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயேந்திரனின் கவனத்தை பூமாவின் குரல் தன் பக்கம் ஈர்த்தது.

“விஜய்… நீ முகுந்தனை பத்தி யோசிச்சி நடக்குறதில் அர்த்தம் இருக்கு. பாரு கீர்த்தனாவும் அப்படியே யோசிக்குறா. ரொம்ப நல்ல பெண் டா.” என்று பூமா தன் மருமகளைச் சிலாகிக்க, என்றுமில்லாமல், அவன் கண்களில் தன் தாயின் தாலி பளிச்சென்று பட்டது.

‘உங்க அம்மா தாலியை…’ என்று கீர்த்தனாவின் குரல் அவன் காதில் மீண்டும் ஒலிக்க, விஜயேந்திரனுக்கு அது நாராசமாக இருந்தது.

விஜயேந்திரனின் எண்ணங்கள் தறி கேட்டு ஓடியது. ‘அப்பா வேறு ஒரு பெண்ணை…’ என்ற எண்ணம் தோன்ற, அந்த நினைப்பில் அவன் உடல் கோபத்தில் முறுக்கேறியது.

‘நான் பெரிய தப்பு பண்ணிருக்கேனோ?’ என்ற கேள்வி அவன் மனதில் அமர்ந்தது. மனம் அவன் தவறை உணர்த்த முயல, அவன் அறிவு, ‘லாஜிக்கல்லி அப்படி என்ன தப்பு? நான் விரும்பியதைச் சொன்னேன். வேறு ஒருத்தியை மனசில் நினைச்சிட்டு, இவளுக்குத் துரோகம் பண்ணலையே?’ என்று சிந்தித்து.

சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள நடைமுறை சிக்கலை அவன் அறிவு புரிந்து கொள்ளவும், மனம் ஏற்றுக் கொள்ளவும் இல்லாமல் தள்ளாடியது.

அனைவரும் உணவருந்த அமர, இன்று பூமா, நவநீதன் அவர்களுடனே அமர்ந்தனர். பூமாவின் கண்கள் அனைவரையும் நோட்டமிட, நிரஞ்சனா, முகுந்தனுக்கு உணவு கொடுக்க, கீர்த்தனா அனைவருக்கும் பரிமாறினாள்.

“அண்ணா… நான் அடுத்த வாரத்திலிருந்து ஆபீஸ் வரேன்.” என்று முகுந்தன் கூற, ‘இவனால் என்ன செய்ய முடியும்?’ என்று விஜயேந்திரன், நவநீதன் இருவரும் தடுமாற்றத்தோடு பார்த்தனர்.

“என்ன அப்பா? என்னால முடியாதுன்னு இரண்டு பேரும் யோசிக்கிறீங்களா?” என்று முகுந்தன் ஏமாற்றத்தோடு கேட்க, “இல்லை பா…” என்று நவநீதன் தடுமாற, விஜயேந்திரன் மௌனம் காத்தான்.

“மாமா… இதில் யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?” என்று கூற, அனைவரும் கீர்த்தனாவை யோசனையாகப் பார்த்தனர்.

“மாமா… முகுந்தன் பாக்குற வேலை எல்லாம் லேப்டாப்பில் தான். தேவை படுற மாதிரி எல்லாம் வாய்ஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் ஆக்கிருவோம். வாய்ஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் பண்ண ஒன் வீக் டைம் போதும் மாமா. நான் பண்ணிறேன்.” என்று கீர்த்தனா கூற, “அண்ணி… பழைய மாதிரி ஆபீஸ் வாங்க. நாம, பழைய மாதிரி ஒர்க் பண்ணுவோம் அண்ணி.” என்று முகுந்தன் கீர்த்தனாவிடம் கேட்க, ‘இவங்க இருக்கும் இடத்திலா?’ என்று விஜயேந்திரனை யோசனையாகப் பார்த்தாள் கீர்த்தனா.

விஜயேந்திரன் மௌனம் காக்க, “அண்ணா… என்ன அமைதியா இருக்க? அண்ணியை ஆஃபீசிலே பாரு. எப்படி இருக்காங்கன்னு? வர சொல்லுன்னா.” என்று முகுந்தன் கேட்க, “போயிட்டு வா… ” என்று பூமா, நவநீதன் இருவரும் ஒரு சேர கூற, நிரஞ்சனா அங்கு நடக்கும் சம்பாஷணைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி அம்மா. அடுத்த வாரத்திலிருந்து, நாங்க மூணு பேரும் ஒண்ணா போறோம்.” என்று விஜயேந்திரன் கூற, ‘எதுவும் என்னைப் பாதிக்காது.’ என்பது போல் கீர்த்தனா தோளைக் குலுக்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

ஒரு வாரம், விஜயேந்திரன், கீர்த்தனா இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் பெரிதாக இல்லை. ‘நான் அன்னைக்கு ரொம்ப ஓவரா பேசிட்டேனோ? நான் இவ்வுளவு தரம் தாழ்ந்து பேசணுமா? இவங்களால் என் சுயமே மாறுதே!’ போன்ற எண்ணங்கள் கீர்த்தனாவின் மனதை அரித்தாலும், ‘அவங்க பண்ணது சரியா?’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள் கீர்த்தனா.தன் கவனத்தை முகுந்தன் பக்கம் திருப்பினாள்.

கீர்த்தனா தான் செய்யும் கைவேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, முகுந்தனுடன் பணி புரிய ஆரம்பித்தாள். முகுந்தனின் சொல்லுக்கு ஏற்ப, அந்த லேப்டாப்பில்  உள்ள சாப்ட்வேர் பணி புரிய, “கீர்த்தனா அக்கா… சூப்பர்.” என்று நிரஞ்சனா கைதட்டினாள்.

கீர்த்தனா புன்னகைக்க, “அக்கா… எனக்கு பைனல் இயர் ப்ராஜெக்ட் நீங்களே பண்ணி குடுத்துருங்க அக்கா.” என்று நிரஞ்சனா, இடுப்பில் கை வைத்துக் கூற, “ஆஹா…” என்று கண்களை விரித்தாள் கீர்த்தனா.

“அப்படியே அவங்களுக்கு இன்னொரு டிகிரி வாங்கி குடுக்க போறியா?” என்று முகுந்தன் கேட்க, “அக்கா. முகுந்த் நான் சொல்ற மாதிரி எல்லாம் கேட்குற மாதிரி ஒரு சாப்ட்வேர் செஞ்சி கொடுங்களேன்.” என்று நிரஞ்சனா கேட்க, அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.

“முகுந்தன் ஏற்கனவே அப்படி தானே இருக்கிற மாதிரி தெரியுது?” என்று கீர்த்தனா உள்ளே நுழைந்த விஜயேந்திரனை பார்த்தபடி கூற, “ஹா… ஹா… பார்த்தியா நீரு…” என்று நிரஞ்சனாவை கேலி செய்து சிரித்தான் முகுந்தன்.

“அக்கா… நீங்க தங்கைக்குத் தான் சப்போர்ட் பண்ணனும். கொழுந்தனுக்கு இல்லை.” என்று நிரஞ்சனா சிணுங்க, “நாம எப்பவும் நியாயத்தின் பக்கம் தான். தப்புனா தப்பு தான்.” என்று கீர்த்தனா கறாராக கூறி புன்னகைக்க, விஜயேந்திரன் புருவம் உயர்த்தி கீர்த்தனாவைப்  பார்த்தான்.

“அண்ணா. அண்ணி கறாரா பேசினாலும் எவ்வுளவு ஜாலி டைப் தெரியுமா? நான் வந்ததிலிருந்து அண்ணி அப்படி இல்லவே இல்லை அண்ணா. நீ என் பிரச்சனையில் அண்ணியை கவனிக்கறதே இல்லை போல?” என்று முகுந்தன் கேள்வியாக நிறுத்த, “ச்..ச… அப்படி எல்லாம் இல்லை டா.” என்று குற்ற உணர்ச்சியோடு மறுத்தான் விஜயேந்திரன்.

“நாளைக்கு ஆபீஸ் போகணும்… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு படுப்போம்.” என்று கீர்த்தனா கூற, “விஜய் அத்தான். நீங்க அவங்களோட பேசிட்டு இருங்க அத்தான். நான் அக்காவுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்றேன்.” என்று நிரஞ்சனா கூறிக் கொண்டு கீர்த்தனாவோடு சமையலறைக்குச் சென்றாள்.

அவள் கண்கள் அலைபாய, “என்ன தேடுற நிரஞ்சனா?” என்று கீர்த்தனா கேட்க, “உங்க பிரென்ட் தான்.” என்று நிரஞ்சனா கிசுகிசுத்தாள்.

“அது யாரு?” என்று கீர்த்தனா நிரஞ்சனாவின் முகம் பார்த்துக் கேட்க, “லேடி ஹிட்லர். உங்க மாமியாரைத் தான் தேடுறேன்.” என்று நிரஞ்சனா அங்குமிங்கும் பார்வையிட்டாள்.

“அவங்க தூங்க போய்ட்டாங்க.” என்று கீர்த்தனா கூற, “ஓ… சூப்பர் அக்கா.” என்று கூறி சமையலறை திண்டின் மீது அமர்ந்தாள் நிரஞ்சனா.

“எனக்கு மாமியார்னா உனக்கு யாரு?” என்று கேட்டுக் கொண்டே, கீர்த்தனா மறுநாள் சமையல் வேலைக்குத் தேவையானவற்றைச் செய்ய, “தெரியல அக்கா. அவுங்க தான் என்னை மருமகளா ஏத்துக்கவே இல்லையே.” என்று நிரஞ்சனா உதட்டைச் சுழித்துக் கூற, கீர்த்தனா தலை அசைத்து கேட்டுக் கொண்டாள்.

“தயிர் உறை ஊத்து நிரஞ்சனா.” என்று பேச்சைத் திசை மாற்றியபடி, பாலை எடுத்துக் கொடுத்தாள் கீர்த்தனா. “அக்கா, பாலை தயிரில் ஊத்தணுமா? இல்லை தயிரைப் பாலில் ஊத்தணுமா?” என்று நிரஞ்சனா அதிதீவிரமாகச் சந்தேகமாகக் கேட்க, பக்கென்று சிரித்தாள் கீர்த்தனா.

“கிட்சன் பக்கம் கூடப் போனதில்லையா நிரஞ்சனா?” என்று கீர்த்தனா முன்னே விழுந்த கூந்தலை பின்னே தள்ளிவிட்டுக் கேட்க, “எங்க அக்கா வாய்ப்பு கிடைச்சுது? அதுக்குள்ள கல்யாணம் நடந்திருச்சு…'” என்று நிரஞ்சனா விளையாட்டு போல் கூறினாலும், அவள் குரல் வலியை வெளிப்படுத்தியது.

“கல்யாணம் பண்ணதை நினைத்து வருத்தப்படுறியா?” என்று கீர்த்தனா நிரஞ்சனாவின் முகம் பார்த்து கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்லை அக்கா. முகுந்தனைக் கல்யாணம் பண்ணதை நினைத்து நான் ஒரு நாளும் வருத்த படமாட்டேன். சந்தோசம் தான் படுவேன் அக்கா. ஆனால், கல்யாணம் நடந்த விதம்… அது என்னைக்கும் ஒரு வருத்தம் தான் அக்கா. காதலிக்கணுமுன்னு திட்டம் போட்டெல்லாம் காதலிக்கலை. வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணணுமுன்னு நான் நினச்சது கூட இல்லை அக்கா. ஆனால், நடந்திருச்சு.” என்று நிரஞ்சனா கண் கலங்க, “ஏய்! இப்ப எதுக்கு அழற?” என்று பதட்டத்தோடு கேட்ட கீர்த்தனா திண்டின் மேல் அமர்ந்திருக்கும் நிரஞ்சனாவை நெருங்கினாள்.

நிரஞ்சனா வருத்தத்தில் இருக்க, கீர்த்தனா பதட்டத்தில் இருக்க, சமையலறைக்கு வெளியே கேட்ட காலடி ஓசையை இருவரும் கவனிக்கவில்லை.

இவர்கள் பேசுவதை மற்றோரு செவிகளும் கேட்க ஆரம்பித்தது.

“என் நிலைமையில் ஓன்னு கதறி அழணும் அக்கா. ஆனால், நான் அழக் கூட ஆள் இல்லாத துர்பாக்கியசாலி. எங்க அம்மாவுக்கும் என்னை பிடிக்கலை.” என்று நிரஞ்சனா விசும்ப, “நிரஞ்சனா அப்படி எல்லாம் இல்லை. எந்த அம்மாவுக்காது குழந்தையை பிடிக்காம போகுமா? கோபம் அவ்வுளவு தான்” என்று கீர்த்தனா சமாதானம் செய்ய, “கோபம் எல்லாம் என் நிலையைப் பார்த்துமா போகலை?” என்று பரிதாபமாகக் கேட்டாள் நிரஞ்சனா.

“முகுந்த் அம்மாவுக்கும் என்னை பிடிக்கலை. ஒரு வேளை, எனக்கு அடி பட்டிருந்தா, எங்க வீட்ல என்னை பார்க்க வந்திருப்பாங்க இல்லை?” என்று விரக்தி புன்னகையோடு கேட்டு, கீர்த்தனாவின் தோள் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.

‘தனக்கு மட்டும் துன்பமில்லை. எல்லாருக்கும் எதோ ஒரு வகையில் கஷ்டம்.’ என்று எண்ணத்தோடு, தன் சோகத்தை மறந்து, “நிரஞ்சனா அழாத…” என்று கீர்த்தனா கூற, “அக்கா… நான் அழணும்… எனக்கு எதாவது பிரச்சனைனா நான் முகுந்த் கிட்ட சொல்லி அழுவேன்.

எல்லாமே சரியாகிரும்… ஆனால், நான் இப்ப அழுதா, முகுந்த் தாங்க மாட்டான். அவனுக்கு சரியானதும், சேர்த்து வச்சி அவன் கிட்ட அழுவேன்.” என்று நிரஞ்சனா கூற, அவள் தலை கோதி, “சரி அப்ப அழுத்துக்கலாம்… இப்ப அழாத. சரியா?” என்று கீர்த்தனா அவள் கண்களை துடைத்தபடியே கூறினாள்.

“அக்கா… நீங்க என் கூடவே இருப்பீங்கள்ல?” என்று கீர்த்தனாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நிரஞ்சனா கேட்க, “நம்ம குடும்பம். நாம எங்க போக போறோம்?” என்று புன்னகையோடு கேட்டாள் கீர்த்தனா.

“அது சரி… நம்மளை என்ன பண்ண முடியும்?” என்று நிரஞ்சனா தன் சோகத்திலிருந்து மீண்டவளாய் கண் சிமிட்டி கேட்டு, திண்டிலிருந்து இறங்கினாள்.

வெளியே நின்று கொண்டிருந்த நபரும் காலடி ஓசை எழுப்பாமல் விலகிச் செல்ல, கீர்த்தனா, நிரஞ்சனா இருவரும் வேலையை முடித்துவிட்டு அவர்கள் அறையை நோக்கிச் சென்றனர்.

 

மறுநாள் காலையில்,

“முகுந்த்… நான் காலேஜ்க்கு போகலை.” என்று நிரஞ்சனா திட்டவட்டமாக அறிவிக்க, “ஏன்?” என்று முகுந்தன்  கண்களைச் சுருக்கி கேட்டான்.

“நீ நான் இல்லாமல் எப்படி ஆஃபிஸில் சமாளிப்ப? நான் உன் கூட வருவேன்.” என்று நிரஞ்சனா பிடிவாதமாகக் கூறினாள். “ஒன்னும் தேவை இல்லை. அண்ணன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க. நீரு நீ கிளம்பு. உன் படிப்பை பாரு.” என்று முகுந்தன் நிரஞ்சனாவின் கூற்றை எதிர்க்க, அவனை முறைத்து பார்த்தாள் நிரஞ்சனா.

“முகுந்த்… நீ நான் சொல்றதை கேட்க கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்க.” என்று நிரஞ்சனா கோபமாகக் கூற, “நீரு… நீ இப்ப என்ன தான் சொல்ற?” என்று முகுந்தன் உதட்டை சுழித்து வினவ, “உன்னால நான் இல்லாமல் சமாளிக்க முடியாது. நான் உன் கூட தான் இருப்பேன். உன் கூட ஆபீஸ் வரேன். உனக்கு சரியான பிறகு என் படிப்பை பார்த்துக்களாம்.” என்று நிரஞ்சனா பிடிவாதமாகப் பேசிக்கொண்டே போக, “நீரு…” என்று அலறினான் முகுந்தன்.

நிரஞ்சனா அவன் அலறலில் மிரண்டு விழிக்க, “என்னை நோயாளின்னு சொல்லி காட்டுறியா?” என்று முகுந்தன் அவள் விழிகள் பார்த்து கேட்க, “முகுந்த்…” என்று கண் கலங்கினாள் நிரஞ்சனா.

“இந்த கண்ண கசக்குற வேலை எல்லாம் வேணாம். நீ காலேஜ் போற.” என்று முகுந்தன் ஆணையிட, “டேய்… உனக்கு உடம்பு சரி இல்லை. அதனால், சண்டை போடா மாட்டேன்னு நினைக்காத. என்னை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்.” என்று அவனை எச்சரித்தாள் நிரஞ்சனா.

“ஓ… மேடம் என்ன பண்ணுவீங்க?” என்று முகுந்தன் நக்கலாகக் கேட்க, “சண்டை போடுவேன். மரியாதையா சாரி கேட்டிரு. என்னை திட்டினதுக்கு. இல்லை பின்னாடி வருத்தப்படுவ!” என்று நிரஞ்சனா உதட்டை வலப்பக்கமும், இடப்பக்கமும் அசைக்க, “நேரமாச்சு. நீ காலேஜ் கிளம்பு.” என்று காரியத்தில் கண்ணாக இருந்தான் முகுந்தன்.

கடுப்பாக துண்டை முகுந்தன் அருகே வீசிவிட்டு குளியலறை நோக்கிச் சென்றாள் நிரஞ்சனா. குளியலறையில் இருந்து மீண்டும் வெளியே வந்து, “என்னை திட்டினதுக்குச் சாரி கேட்க மாட்ட?” என்று நிரஞ்சனா புருவம் சுருக்க, “நீ இன்னும் காலேஜ் போகலையா?” என்று உதட்டைச் சுழித்தான் முகுந்தன்.

படாரென்று கதவைச் சாற்றிக் கொண்டு, ‘இப்ப காலேஜ் போறேன். வந்து உன்னை என்ன பன்றேன்னு பாரு?’ என்று முகுந்தனைத் திட்டிக்கொண்டே, குளிக்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா.

 

அதே நேரம் சமயலறயில், இட்லிக்குச் சாம்பார் செய்து கொண்டிருந்த கீர்த்தனா, அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொண்டிருக்க, அவள் எண்ணம் அன்றைய நாளை பற்றி சிந்தித்தது.

‘அவங்க இருக்கிற அதே  ஆஃபீசில் நானா?’ இந்த எண்ணமே கீர்த்தனாவுக்குப் பதட்டத்தைத் தர, அவள் முகத்தைச் சுழித்து வேகமாகத் திரும்ப, அந்த சூடான சாம்பார் சரித்து கீர்த்தனா மீது பட்டுத் தெளிக்க, “அப்பா…” என்று அலறினாள் கீர்த்தனா.

நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த, பூமா, நவநீதன், விஜயேந்திரன் பதறிக் கொண்டு சமையலறை நோக்கி ஓடினர்.

கைகள் நடுங்க, வலி தாள முடியாமல் துடித்தாள் கீர்த்தனா.

அருகே வந்த பூமா, “நல்ல வேளை. காட்டன் சேலை. சுத்தம் பண்ணிட்டு மருந்து போடு விஜய்.” என்று கூற, “சரி  அம்மா…” என்று தன் தாய்க்கு பதிலளித்துவிட்டு, கீர்த்தனாவை கை தாங்களாகப் பிடிக்க, கீர்த்தனா அவன் தொடுகையால் ஏற்பட்ட அவஸ்தை, வலி என் அனைத்தும் கலந்து துடித்தாள்.

நடக்க முடியாமல் அவள் திணற, “கீர்த்தனா காலையும் சூடு பட்டிருக்கா?” என்று கேட்க, அவள் மௌனம் காக்க, “டேய். அவளைத் தூக்கிட்டுப் போடா. பாரு என்ன ஆச்சுன்னு?” என்று நவநீதன் கூற,  சடாரென்று அவளை கைகளில் ஏந்தினான் விஜயேந்திரன்.

இதை எதிர்பார்க்காத, கீர்த்தனா அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள்.

இருவரின் உணர்வுகளும், உணர்ச்சிகளும் அலைமோத, அவன் அவர்கள் அறையின் கதவை மோதி திறந்தான்.

அவன் கைகளுக்கு மருந்திட, “நான் போட்டுக்கறேன்…” என்று தலையைக் குனிந்த படியே கூறினாள் கீர்த்தனா.

இடுப்பு பகுதி சிவந்திருக்க, விஜயேந்திரன் மருந்து தடவ, எத்தனிக்க அவள் இடுப்பை வளைத்து விலக, “ஒரு டாக்டர் கிட்ட காண்பிக்க மாட்டியா?” என்று அழுத்தமாக வெளி வந்தது அவன் குரல்.

கீர்த்தனாவின் உணர்வுகள் மேலே எழும்ப, ‘டாக்டரும், இவனும் ஒண்ணா? இவனுக்கு நான் யாரோ! ஆனால், எனக்கு?’ என்ற எண்ணம் தோன்ற கீர்த்தனாவின் உணர்வுகள் சற்று மட்டுப்பட்டு, ‘உனக்கு இவன் என்ன ஸ்பெஷல்?’ என்று அறிவு நக்கலாகக் கேட்க, அவள் கோபம்  சிவ்வென்று ஏறியது.

‘இல்லை நான் அன்னைக்கே கேட்க வேண்டியதெல்லாம் கேட்டுட்டேன். இனி எதுவும் பேசக் கூடாது.’ என்று தனக்கு தானே அவள் அறிவுறுத்திக் கொண்டிருக்க, வலியால் கீர்த்தனா அவள் காலை அசைக்க,  கீர்த்தனாவின் சேலை விலகலில் வாழைத்தண்டு போன்ற அவள் கால்கள் தெரிய, அதில் இன்று ஏற்பட்ட காயமும் தெரிந்தது.

காயத்தைப் பார்த்த பதட்டத்தில், ‘ஐயோ…’ என்று  விஜயேந்திரன் அவள் சேலையை  விலக்க, சடாரென்று கால்களை உருகிக் கொண்டாள் கீர்த்தனா.

விஜயேந்திரன் அவளைத் தர்மசங்கடமாகப் பார்க்க, தலையைக் குனிந்து கொண்டு,  “நான் போட்டுக்கறேன்.” என்று முணுமுணுத்தாள் கீர்த்தனா. “எப்படி?” என்று அவன் பேச்சு ஒற்றை வார்த்தையாக வெளிவந்தது. கீர்த்தனா அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்த அவள் நாணம், விஜயேந்திரனுக்கு பல செய்தி கூற, மருத்துவம் என்று வியாக்கியானம் பேசினாலும், இப்பொழுது விஜயேந்திரனும் தடுமாறினான்.

“இல்லை… நான்… நான்…” என்று கீர்த்தனா தடுமாற, “காயம் ஆறனும். நான்…” என்று அவன் தயங்க வேறு வழியின்றி கால்களை நீட்டினாள் கீர்த்தனா.

கால் முட்டு பகுதியின் மேல்  ஏற்பட்ட காயம் அவளை இம்சிக்க, விஜயேந்திரனின் தொடுகை அவளை அதை விட அதிகமாக இம்சித்தது.

வெட்கம் அவளை விழுங்க, அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் கீர்த்தனா.

பல முறை லீலாவை  பல விதமான ஆடைகளில் பார்த்திருந்தாலும், என்றும் ஏற்படாத உணர்வை, இன்றைய கீர்த்தனாவின் தடுமாற்றம், வெட்கம், விலகல் தர, விஜயேந்திரனின் கைகள் நடுங்கியது.

‘இது என்ன பதட்டம்.’ என்ற எண்ணத்தோடு, அவன் மருந்திட, கீர்த்தனாவைப் பார்க்கத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தி, தன் கவனத்தை தான் செய்யும் வேலையில் மட்டுமே செலுத்தினான் விஜயேந்திரன்.

‘நான் ஏன் கீர்த்தனாவைப் பார்க்க வேண்டும்?’ என்ற கேள்வி விஜயேந்திரனின்   மனதில் எழ, ‘இந்திய முட்டாள்கள். தாலி… மஞ்சள் கயிறு மாஜிக்… இதை எல்லாம் நம்பும் மனுசங்க தானே நீங்க. உனக்குக் காதல் முக்கியம் இல்லை. கட்டினவ தான் முக்கியம். எவ்வளவு படிச்சாலும், நீங்க மாற மாட்டீங்க. உங்களுக்காக வாழ மாட்டீங்க…’ என்று அன்று லீலா பேசியது நினைவு வர, தன்னை மறந்தவனாய் அவளுக்கு மருந்திட்டுக் கொண்டே இருந்தான் விஜயேந்திரன்.

நொடிகள் நிமிடங்களாக நீடிக்க, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கீர்த்தனா தவித்தாள். மறுக்கவும், மறக்கவும் முடியாமல் கீர்த்தனாவின் உணர்வுகள் அல்லாடியது.

கோபம் அவளை பேச உந்த, வெட்கம் அவளை மௌனிக்க செய்தது.

நொடிகளை இவன் மறக்க, ஒவ்வொரு நொடியும் அவளுக்கு யுகங்களாகக் கழிய, வெட்கம் ஆசையைத் தீண்ட, ஆசை ஏமாற்றத்தை உணர்த்த… அவன் ஸ்பரிசம் ஏதோதோ எண்ணத்தை அவளுள் எழுப்ப, அதை அவனிடம் மறைக்க அவள் மௌனத்தைக் கையில் எடுக்க, கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் கோர்த்தது.

வலி, இழப்பு என அனைத்தும் அவளைப் பலவீனப் படுத்த, ‘இல்லை… நான் அழக்கூடாது. அதுவும் இவங்க முன்னாடி  நான் அழக்கூடாது.’ என்று கீர்த்தனா அவள் மனதைக் கட்டுப்படுத்த வெட்கத்தை கடந்த கோபம் வார்த்தைகளாக வெளி வந்தது.

கீர்த்தனாவின் மனப்போராட்டம் அறியாமல் விஜயேந்திரன் அவளுக்கு மருந்திட, “உங்களுக்கு இப்ப  லீலா ஞாபகம் வருதோ?” என்று குரூரமாக அவன் நெஞ்சை ரணமாய்  அறுப்பது ஒலித்தது அவள் குரல்.

விஜயேந்திரன் கையிலிருந்த மருந்து கீழே விழ, பதட்டமாக எழுந்து அவள் வாயை மூடினான் விஜயேந்திரன்.

அவளைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தான். கீர்த்தனாவை அவன் ஆழமாகப் பார்க்க, ‘அப்பா…’ என்று அலறிய அவள் குரல் அவன் காதில் இப்பொழுதும் ஒலிக்க, அவள் நிலைமையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

சொல்லி அழவும் ஆள் இல்லாமல், முடிவு எடுக்கத் தெரியாமல் தவிக்கும் பேதை மனம் அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிய, விஜயேந்திரன் அவள் எதிரே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

அழுகையை மறைக்க நினைத்த கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் கோர்க்க, அவள் முகத்தில் ஓர் மெல்லிய புன்னகையும் பூத்தது. அந்த புன்னகை விஜயேந்திரனை ஈர்த்ததா இல்லை?

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!