கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 10
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 10
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 10
விஜயேந்திரன் கீர்த்தனா கூறியதை மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘நான் விவாகரத்து தரணுமுன்னா வெரி சிம்பிள். இப்பவே தரேன். ஆனால்…’ என்று கீர்த்தனா இழுக்க, அமர்ந்தபடி அவளைக் கூர்மையாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
‘எப்படி கல்யாண பத்திரிக்கை அடிசீங்களோ? அதே மாதிரி விவாகரத்து பத்திரிகை அடிங்க. எப்படி ஊரெல்லாம் கூட்டி கல்யாணம் பண்ணீங்களோ? அதே மாதிரி கல்யாணத்துக்குக் கூப்பிட்ட எல்லாரையும் விவாகரத்துக்கு கூப்பிடுங்க. ஊரெல்லாம் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு பெருசா பண்ணனும். அதாவது, யாரெல்லாம் நம்ம கல்யாண வாழ்க்கை நல்லாருக்குனு வாழ்த்தினாங்களோ, அவங்க எல்லாரும் நம்ம விவாகரத்து வாழ்க்கையும் நல்லாருக்குன்னு வாழ்த்தணும். எப்படி எங்க அப்பா உங்களுக்கு ஜெகஜோதியா என்னைப் பெண் கொடுத்தாங்களோ? அதே மாதிரி என்னை திருப்பி கொடுத்திருங்க.’ என்று கீர்த்தனா தீவிரமாகக் கூறினாள்.
கீர்த்தனா கூறியதில் சற்று பதட்டம் அடைந்து அங்கிருந்து எழுந்தான் விஜயேந்திரன்.
‘எதுவும் லாஜிக் ஓட இருக்கனும். ஒரு கடையில் சாமான் வாங்குறீங்க. பிடிக்கலைன்னா திருப்பி கொடுக்க ரிட்டர்ன் பாலிசி இருக்கு பாஸ்.’ என்று விஜயேந்திரனுக்கு கீர்த்தனா விளக்க முயற்சிக்க, புருவம் சுழித்து அவளை சலிப்பாக பார்த்தான் விஜயேந்திரன்.
‘என்ன இப்படி பாக்கறீங்க?’ என்று நிதானமாக விஜயேந்திரனின் எதிரே இருந்த மெத்தையில் சாவகாசமாக சம்மணமிட்டு அமர்ந்து கேட்டாள் கீர்த்தனா.
வார்த்தைகள் வராமல் விஜயேந்திரன் தடுமாற, ‘நான் கேட்கறதில் என்ன தப்பு இருக்கு? ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணிட்டு, யாருக்கும் தெரியாம கழட்டி விட நினைக்கறது என்ன நியாயம்?’ என்று கீர்த்தனா தீர்க்கமாகக் கேட்க, ‘என்ன? என் மேல் தப்பு இருக்குனு நான் இறங்கி போனால், என்னை மிரட்ட பாக்கறியா?’ என்று நக்கலாக கேட்டான் விஜயேந்திரன்.
கீர்த்தனா உதட்டை சுழித்துச் சிரிக்க, ‘என் கிட்ட நல்லாயிருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நான் நல்லவன். இல்லைனா?’ என்று விஜயேந்திரன் தன் ஒற்றை விரலை உயர்த்தி கீர்த்தனாவை மிரட்டினான்.
‘ஐயோ… ரொம்ப பயமா இருக்கு.’ என்று கீர்த்தனா பாவமாக கூறி, ‘நிறைய படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிருக்கீங்கன்னு நினைக்கறேன்.’ என்று கூறி இடைவெளி விட்டு, ‘நீங்க நல்லவர் இல்லை. ரொம்ப நல்லவர்.’ என்று கீர்த்தனா கூற, அவளைச் சந்தேகமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
‘உண்மை.’ என்று கூறி அவள் தலை மீது சத்தியம் செய்தாள் கீர்த்தனா. ‘பின்ன இல்லையா? அம்மாவுக்காகக் கல்யாணம். காதலிக்காகத் தவிப்பு. தம்பி மேல பாசம். அப்பாவுக்காக அலுவலக பொறுப்பு. ம்.. ச்… மனைவி மேல் தான்?’ என்று தன் கன்னத்தில் யோசனையாக கை வைத்தாள் கீர்த்தனா.
‘இந்த பார் இப்படிப் பேசியே என்னை கடுப்பேத்தின நடக்கிறதே வேற.’ என்று விஜயேந்திரன் சீற, ‘என்ன பண்ண முடியும்?’ என்று தெனாவட்டாக கேட்டாள் கீர்த்தனா.
‘நீங்க மட்டும் தான் படம் பார்த்து வளர்ந்தீங்களா? நாங்க படம் பார்த்து வளர மாட்டோமா? நீங்க நல்லவரா இருக்கலாம். ஆனால், நான் அப்படி இல்லை. கடவுளாலே கூட எல்லாருக்கும் எல்லா நேரமும் நல்லவரா நடந்துக்க முடியாது. இப்ப பாருங்க அந்த கடவுள் என் கிட்ட நல்லவரா நடக்கலை. எல்லாருக்கும் அம்மா, அப்பா இருக்கும் போது, எனக்கு கடவுள் அம்மாவை ரொம்ப நாள் தரலையே. உங்களுக்கு காதலி, மனைவின்னு ரெண்டையும் கொடுத்த கடவுள் எனக்குச் சரியான கணவரைக் கூட கொடுக்கலை பாருங்க.” என்று கீர்த்தனா குறைபட, ‘இவள் பேசுற மாதிரியே என்னை குத்தி காட்டுறாளோ?’ என்று தன் நெற்றியை தடவி விஜயேந்திரன் அவளை பார்த்தான்.
“நான் அவரை மாதிரி தான். எப்பவும் நல்லவளா இருக்க முடியாது. ஏன் கெட்டவன்னு கூட வச்சிக்கலாம்.’ என்று விளையாட்டாக ஆரம்பித்து தன் பேச்சை தீவிரமாக முடித்தாள் கீர்த்தனா.
‘ஊப்…’ என்று பெருமூச்சோடு விஜயேந்திரன் அவளைப் பார்த்து, ‘நீ ரொம்ப பேசுற.’ என்று கடுப்பாக கூறினான் விஜயேந்திரன்.
‘ஒகே. நான் ரொம்ப பேசலை. என் பிரச்சனை இது தான். தப்பு உங்க மேல! நாம சுமுகமா பிரிஞ்சாலும், இந்த உலகம் என்ன பேசும் தெரியுமா? கீர்த்தனா பொண்ணு தானே? கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாமே? அப்படின்னு என் மேல் தப்பு மாதிரி பேசும். பெண்ணை சரியா வளர்க்கலையோன்னு எங்க அப்பா வருத்தப்படுவாங்க. அதெல்லாம் நடக்க நான் விட மாட்டேன். ஒரே வழி, நான் சொன்ன மாதிரி ஊரைக் கூட்டி, உங்களுக்கு ஒரு பழைய காதல் இருக்கு. இந்த கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லுங்க. அப்பவும் எங்க அப்பாவுக்கு வருத்தம் தான். ஆனால், சரி ஒரு கேவலமான, மோசமான மாப்பிள்ளை பார்த்துட்டோம்ன்னு எங்க அப்பா கொஞ்ச நாளில் சரியாகிருவாங்க. அப்படி இல்லைனா, இரண்டாவது வழி, பேசாம என்னை கல்யாணாம் செய்த பாவத்துக்கு, இது தான் வாழ்க்கைன்னு அமைதியா இருங்க. இப்ப நான் நீங்க சொன்னதுக்கெல்லாம் அமைதியா இருக்கிற மாதிரி.’ என்று கூறிவிட்டு மெத்தையில் படுத்துவிட்டாள் கீர்த்தனா.
கீர்த்தனாவின் பேச்சில் இப்பவும், விஜயேந்திரனுக்கு உடல் சிலிர்த்தது. “எவ்வுளவு நக்கல்? இது தான் சாக்குன்னு என்னை நார் நாராகக் கிழித்துவிட்டாள். திமிர் பிடிச்சவள். இவளோடு ஒருத்தன் வாழ முடியுமா?” என்று தனக்கு தானே கோபத்தில் முணுமுணுத்தான் விஜயேந்திரன்.
தூக்கம் கண்களை தழுவ, அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.
மெத்தையில் படுத்திருந்த கீர்த்தனாவைப் பார்த்தான் விஜயேந்திரன். அவனால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
“இவ சாதாரண பெண் கிடையாது. அவ்வுளவு சீக்கிரம் நான் நினைக்கிறது நடக்காது.” என்று மெல்லமாக முணுமுணுத்தான் விஜயேந்திரன். அவனுக்கு தலை விண்வினென்று வலித்தது.
‘இப்படி என்னோடு பிடிவாதமாக வாழ்வதில், இவளுக்கு என்ன லாபம்? இல்லை உண்மையிலே இவள் திருமணத்தை இந்த அளவுக்கு மதிக்கிறாளா? இல்லை விவாகரத்துக்குப் பின் அவ வாழ்க்கையை எண்ணி அஞ்சுகிறாளா?’ போன்ற கேள்விகளோடு மெத்தையில் அமர்ந்தான் விஜயேந்திரன்.
கீர்த்தனா தன் முகத்தைப் போர்வைக்குள் மறைத்திருக்க, “ஐயோ சாமி, தாலி கட்டினதுக்கே, இவ்வுளவு பேச்சு. தூக்கத்தில் தெரியாமல் கை பட்டிருச்சு… அவ்வுளவு தான். விஜய் செத்தடா நீ.” என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டு, தலையணையால் அவர்களுக்கு இடையில் சுவரை எழுப்பினான் விஜயேந்திரன்.
விஜயேந்திரனின் செயலில், போர்வைக்குள் இருந்து மெலிதாக எட்டிப் பார்த்தாள் கீர்த்தனா. அவள் அதரங்கள் மெல்லிய புன்னகையால் விரிந்தது. அது விரக்தி புன்னகையோ?
விஜயேந்திரன் தலையணைக்கு இந்த பக்கம், தூக்கம் வராமல் புரள, கீர்த்தனா புரண்டு படுத்தாள்.
‘நான் இத்தனை துரதிஷ்டசாலியா? எல்லாருக்கும் கிடைக்கும் தாய்ப் பாசமும் கிடைக்கவில்லை. கட்டிய கணவனுக்கும் என்னை ஏன் பிடிக்காமல் போகணும்?’ என கீர்த்தனாவின் மனம் ஊமையாய் அழுதது.
‘ஏதோ இன்னைக்கி பேசி சமாளிச்சிட்டேன். ஆனால், நாளை? பிடிக்காத ஒரு மனிதனோடு எப்படி வாழ முடியும்? இல்லை அப்படி என் சுயமரியாதையை இழந்து நான் ஏன் வாழ வேண்டும்?’ என்று கீர்த்தனாவின் தன் மானம் அவன் மேல் அன்பு கொண்ட மனமோடு சண்டையிட்டது.
அன்பிற்கும், சுயமரியாதைக்கும் இடையே கீர்த்தனாவின் மனம் ஊசல் ஆட, ‘ஓவென்று கதற வேண்டும் போல் இருக்கிறதே? யார் மடியில் படுத்து கதறுவேன்?’ என்று கீர்த்தனாவின் மனம் கேட்க, உடன்பிறப்பும், தாயுமில்லாத தனிமை அவளை வாட்டியது.
கீர்த்தனாவின் அறிவோ ‘அம்மா இருந்திருந்தா மாப்பிள்ளை மனசு என்னனு தெரியாம இப்படி என்னை கல்யாணம் பண்ணி குடுத்திருப்பாங்களா? அப்பாவுக்கு இதெல்லாம் பார்க்க தெரியலியே?’ என சிந்திக்க, கீர்த்தனாவுக்கு அவள் மேல் பச்சாதாபம் தோன்றியது.
அந்த பச்சாதாபம் கண்ணீராய் மாற, ‘இல்லை கீர்த்தனா அழ கூடாது. கண்ணீர் பலவீனம். இதெல்லாம் ஒரு விஷயமா? அறிவால் சிந்திக்காமல், மனதால் சிந்திப்பவர்கள் காதலில் விழுவது சகஜம் தான். மதுவின் போதை போல். காதல் மாதுவின் மேல் கொண்ட போதை. காலம் இந்த போதையை தெளிய வைத்துவிடும். கீர்த்தனா உனக்குப் பொறுமை வேண்டும். அவ்வுளவு தான்.’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு, நித்திரையில் ஆழ முயன்றாள் கீர்த்தனா.
மறுநாள் விடியற்காலையில், படிப்பதற்காக சீக்கிரம் எழுந்து கொண்ட நிரஞ்சனா, சமையலறையில் மும்முரமாக வேலையில் இறங்க, அவளை பின்னோடு நெருங்கி, “ப்பா…” என்று சத்தம் செய்தான் முகுந்தன்.
நிரஞ்சனா எதிர்பாராத இந்த சத்தத்தில் நடுங்க, அவள் கையிலிருந்த கோப்பை கீழே சரிய பால் தரையில் வழிந்தது.
“நானே கஷ்டப்பட்டு உங்களுக்கு டீ போடுறேன்.” என்று நிரஞ்சனா சிணுங்க, “கோபம் போயிருச்சா நீரு?” என்று மென்மையாக இழைந்தான் முகுந்தன். “என்ன கோபம்?” என்று நிரஞ்சனா புரியாமல் கண்களைப் பெரிதாக்கி விழிக்க, “நேத்து ராத்திரி, ஒரு பேபி இந்த வீட்டில் ம்.. ம்… அப்படின்னு அழுதுச்சு.” என்று முகுந்தன் நிரஞ்சனாவை போல் அழுது பாவனை காட்ட, “உங்களை…” என்று நிரஞ்சனா தன் இடுப்பில் கைவைத்து அவனிடம் சண்டைக்கு தயாரானாள்.
“நிரு… சும்மா அசத்துற டீ நீ. நேத்து சேலையில் செம்ம.” என்று முகுந்தன் அவளை நெருங்க, “உங்க பேச்சும் , செயலும் ஒத்து போகலை.” என்று முகத்தில் புன்னகையோடும், குரலில் கண்டிப்போடும் நிரஞ்சனா கூற, அவளை இடையோடு அணைத்து, அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்.” என்று ஆழமான கூறினான் முகுந்தன்.
முகுந்தனின் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்து, “இப்ப எதுக்கு இவ்வுளவு உணர்ச்சிவசபடுறீங்க?” என்று நிரஞ்சனா தன்மையாகக் கேட்க, “நீ சொல்லலைனா நான் அண்ணன் கல்யாணத்துக்குப் போயிருக்க மாட்டேன். நான் ரொம்ப மிஸ் பண்ணிருப்பேன். தேங்க்ஸ் டீ.” முகுந்தன் மீண்டும் கூற, “நான் யாரோவா? இப்படி தேங்க்ஸ் சொல்லறீங்க?” என்று கேட்டு அவனிடமிருந்து விலகி வேலையை நிரஞ்சனா தொடர்ந்தாள்.
“நீ ஏன் இதெல்லாம் பண்ற? நான் பண்ண மாட்டேனா? நீ படிக்கற வேலையை பாரு.” என்று முகுந்தன் கண்டிப்பான குரலில் கூற, “உங்க அண்ணனும் உங்க கல்யாணத்தை மிஸ் பண்ணிருப்பாங்கள்ல?” என்று நிரஞ்சனா கேட்க, “எங்க அண்ணன் மட்டுமில்லை எல்லாரும் மிஸ் பண்ணிருப்பாங்க.” என்று முகுந்தன் கேலியாகக் கூறினான்.
“நான் அவசரப்பட்டுட்டேனோ?” என்று நிரஞ்சனா குற்ற உணர்வோடு கேட்டாள்.
“நீ அவசர படலைனா நாம்ம ரெண்டு பெரும் மிஸ் ஆகிருப்போம் டார்லிங்.” என்று முகுந்தன் கண்ணடிக்க, நிரஞ்சனா வெட்கப்பட்டுப் புன்னகைத்து, தன் சோகத்தை மறைத்துக் கொண்டாள்.
நிரஞ்சனாவை தன் பக்கம் திருப்பி, “நீ சந்தோஷமா இருக்கியா?” என்று முகுந்தன் கேட்க, “நீங்க என் பக்கத்தில் இருக்கும் போது, என் சந்தோஷத்திற்கு என்ன குறை?” என்று நிரஞ்சனா மழுப்ப, “கவலைப் படாத நிரும்மா. நான் உன்னை பாத்துக்கிற விதத்தில், உங்க அம்மா, அப்பா நாம் தேடிருந்தா கூட, இப்படி மாப்பிள்ளை பார்த்திருக்க மாட்டோமுன்னு சொல்லும் காலம் வரும். ஒகே பேபி.” என்று முகுந்தன் வாக்குறுதியை அள்ளி வீச, நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
“நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்…”
முகுந்தன் இருவருக்கும் டீ கலந்து வர, நிரஞ்சனா தன் புத்தகத்தை வைத்துக் கொண்டு, சிந்தனையில் ஆழ, அவள் தலையில் நங்கென்று கொட்டி, ‘என்ன?’ என்று கண்களால் வினவி அவளுக்குக் டீ கோப்பையை நீட்டினான் முகுந்தன்.
‘தேங்க்ஸ்.’ என்று கண்சிமிட்டலில் கூறி, டீயை ருசித்து அருந்த ஆரம்பித்தாள் நிரஞ்சனா.
அதே நேரம், விஜயேந்திரனின் இல்லத்தில். காலையிலிருந்து கீர்த்தனா அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
தலை குளித்து தழைய தழைய புடவை கட்டி, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. அவள் தலை முடியிலிருந்து வழிந்த நீர், கீர்த்தனாவின் தோள் தொட்டு அவள் கைமீது சரிந்து வழிந்து ஓடியது. அவள் நடுவகிட்டில் இருந்த குங்குமம் அவள் அழகை மேலும் மெருகூட்ட, கிளி பச்சை நிறத்திலிருந்த அவள் புடவை கீர்த்தனாவுக்கு இன்னும் சௌந்தரியத்தை சேர்த்தது.
கண்களை நேரே செலுத்த முயர்ச்சித்தாலும், கீர்த்தனாவிடம் தெரிந்த தெய்வீகத்தன்மை அனைவரையும் கவர்ந்து அவள் பக்கம் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.
புள்ளி வைத்து, சிக்கல் கோலமிட்டு, அந்த சிக்கல் கோலத்தின் இணைப்பில் அவள் ரோஜா பூவை கம்பிகளால் மலர வைக்க, அனைத்து பணியாட்களும் அசந்து போயினர்.
பூமாவும், நவநீதனும் மருமகளைச் சிலாகிக்க, எல்லா விஷயங்களும் கையை விட்டுப்போவது போல் உணர்ந்தான் விஜயேந்திரன்.
“இல்லை விடமாட்டேன். என்னை மீறி எதுவும் நடக்காது.” என்று விஜயேந்திரன் உறுதி கொள்ள, அதே நேரத்தில், விஜயேந்திரனின் அலைப்பேசியில் ஒரு காணொளி செய்தி வர, விஜயேந்திரனின் கைகள் நடுங்கி, அலைப்பேசி தவறி கீழே விழுந்தது.
ஆணாகப் பிறந்ததால், கதறி அழ முடியாமல் பால்கனி சுவரில் சாய்ந்து கண்கலங்கி நின்றான் விஜயேந்திரன்.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…