கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  25

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  25

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  25 

விஜயேந்திரனின் கூற்றில், விழுக்கென்று அவனை நோக்கி நிமிர்ந்தாள் கீர்த்தனா. தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை ஆழமாக பார்த்தாள்.

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று புருவம் உயர்த்தி கேட்டு மேலும் தொடர்ந்தாள். “இந்த தாலியை கழட்டிட்டு இன்னொரு தடவை இன்னொரு தாலி கட்டுற மாதிரியா? எப்புடி?” என்று தன் கண்களில் கேள்வியைத் தேக்கி நின்றாள் கீர்த்தனா.

“கண்ணகி இருக்கும் பொழுது மாதவியைத் தேடிப் போன கோவலனுக்காகக் கண்ணகி காத்திருக்கலாம். மன்னித்து ஏத்துக்கலாம். ஆனால், கீர்த்தனா அப்படி இல்லை. உங்களுக்காக நான் காத்திருக்கலை.  நான் உங்களை மன்னிக்கவும் மாட்டேன்.  அந்த அளவுக்குப் பெண்கள் மாறி இருக்கோம் ஆனால், தாலியைக் கழட்டி மாத்துறளவுக்கு இன்னும் மாறலை.” என்று கூறி கீர்த்தனா இடைவெளி விட, ‘இவ எந்த காலத்தில் இருக்கா?’ என்ற எண்ணத்தோடு,  விஜயேந்திரன் முகத்தைச் சுருக்கி கீர்த்தனாவை சலிப்பாக பார்த்தான்.

‘விடுவேனா?’  என்று கீர்த்தனா மீண்டும் தொடர்ந்தாள்.  “ஆனால், உங்க புத்தி மாறவே இல்லைல?” என்று கீர்த்தனா நக்கலாகக் கேட்க, அவளைக் கண்களில் வலியோடு பார்த்தான் விஜயேந்திரன்.

கீர்த்தனா மீண்டும் தொடங்க, அவளை இடைமறித்தான் விஜயேந்திரன்.

“கீர்த்தனா, என் மேல் தப்பு இருக்கு. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், உன் பேச்சு நியாயம் இல்லை. இந்த கோவலன், மாதவி கதை  எல்லாம் ரொம்ப ஓவர். நீ சிலப்பதிகாரத்தை நல்லா படி. நான் அந்த கோவலன் மாதிரி எல்லாம் இல்லை. நான் உனக்கு துரோகம் பண்ணலை.” என்று விஜயேந்திரன் கூற, “ஓ! நியாயம் பண்ணிருக்கீங்க? அச்சோ! எனக்கு தெரியாம போச்சே?” என்று கீர்த்தனா கேலி போல் கடுப்பாக கூறினாள்.

“இந்த பார். நல்லா கவனிச்சுக்கோ. நான் பண்ண ஒரே தப்பு, அன்னைக்கு சொல்லாம போனது மட்டும் தான். அதுக்காக நீ இவ்வுளவு பேச வேண்டியதில்லை.” என்று விஜயேந்திரன் கோபத்தில் எகிற, “அஹ்ஹான்… கோபம் வருதா? வரும்… எதிர நிக்குறவ கேனையா இருந்தா, இஷ்டப்படி போவீங்க. வருவீங்க. கேட்டால் கோபம் வரும்.” என்று கீர்த்தனாவின் பொறுமை குறைந்து, அவள் கோபம் விர்ரென்று ஏறியது.

கீர்த்தனாவின் நிதானத்தையும், அவள் பொறுமையையும் அவள் கோபம் தவிடுபொடியாக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

“இத பார். நான் முதல் நாளில் எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்று மீண்டும் விஜயேந்திரன் பழைய பல்லவியைத் தொடங்க, “ஐயோ… எனக்கு இந்த கதையைக் கேட்டு புளிச்சி போச்சு.” என்று கீர்த்தனா தன் கண்களை மூடி உதட்டைச் சுழித்தாள்.

“ஒரு வேளை லீலாவுக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா அவளை கல்யாணம் செய்திருப்பீங்க அப்படி தானே?” என்று கீர்த்தனா சினத்தோடு கேட்க, “அது எப்படி பண்ணுவேன். உன்னை விவாகரத்து பண்ணாமல், நான் அவளை எப்படி கல்யாணம் பண்ணுவேன்? அவளை பார்க்கணும், பேசணுமுன்னு போனேன். நிலைமையை எடுத்து சொல்ல… நம்ம கல்யாணம் முடிந்தவுடன் சொல்லணுமுன்னு நினச்சேன். போக முடியாத சூழ்நிலை. இப்ப போக வேண்டிய கட்டாயமுன்னு போனேன்.” என்று தான் செய்தது சரி போல் பேச, கீர்த்தனாவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

கீர்த்தனா மௌனமாக பார்க்க, “அதே நேரத்தில் உன் வாழ்க்கையையும் சரி செய்யணுமில்லை?” என்று நல்லவன் போல் கேட்க, “நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்கு தோணலயா?” என்று கீர்த்தனா நேரடியாகக் கேட்டாள்.

“நான் தான் தப்பே பண்ணலையே. நான் உன்கிட்ட எதையும் மறைக்கலை கீர்த்தனா.” என்று விஜயேந்திரன் நிதானமாகக் கூற, ‘ஐயோ…’ என்று கீர்த்தனாவின் இதயம் பதற, “சொல்லிட்டு பண்ணாலும், சொல்லாமல் பண்ணாலும் கொலை கொலை தான்.” என்று கீர்த்தனா கூற, “நீ சின்ன விஷயத்தை பெருசு படுத்துற கீர்த்தனா. நான் தான் எல்லாத்தையும் சரி பன்றேன்னு சொல்றேன்ல?” என்று கீர்த்தனாவின் பிடிவாதத்தில் கடுப்பாகி விஜயேந்திரன் பெருமூச்சோடு கூறினான்.

கீர்த்தனா தன் கண்களை இறுக மூடித் திறந்தாள்.

“உங்க அப்பாவுக்கு ஒரு காதலி இருந்து…” என்று கீர்த்தனா தொடங்க, “கீர்த்தனா… நிறுத்து….” என்று கர்ஜித்தான் விஜயேந்திரன்.

“என்ன அதுக்குள்ள கோபப்படுறீங்க? உங்க அப்பா காதலியோட போயிருந்தா, உங்க அம்மா தாலியை கழட்டிட்டு, வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி, அவரோட…” என்று கீர்த்தனா பேச,  “போதும் நிறுத்து…” என்று அலறியபடி தன் காதுகளை மூடினான் விஜயேந்திரன்.

“உங்க அம்மான்னா வலிக்குது. நான் அப்படின்னா இனிக்குத்தா? அவங்களுக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா…” என்று கீர்த்தனா பேசிக் கொண்டே போக, “கீர்த்தனா… நீ ரொம்ப அசிங்கமா பேசுற.” என்று விஜயேந்திரன் கர்ஜிக்க, “எப்படிங்க அசிங்கமாகும்? நீங்க செஞ்சது சரின்னா… நான் பேசறதும் சரி தான்.” என்று கூறி சற்று இடைவெளி விட்டாள்.

“உங்க அப்பா வேறு பெண்ணைப் பார்க்க போறது அசிங்கம்ன்னா, நீங்க  லீலாவை தேடிப் போனது கேவலம். அசிங்கம். அவமானம்.” என்று அழுத்தத் திருத்தமாகக் கூறினாள் கீர்த்தனா.

“என்னை வேறு ஒருத்தரைக் கல்யாணம் செய்யச் சொல்லும் பொழுது, உங்க அம்மாவையும் அந்த நிலையில் வைத்து பாருங்க. அப்புறம் பேசுங்க.” என்று எச்சரிக்கை செய்ய, கீர்த்தனாவைக் குழப்பமாகப் பார்த்தான் விஜயேந்திரன்.

‘இவ பேசிப்பேசியே, எல்லா தப்பும் என் மேலன்னு சொல்லுவா போல. போறபோக்கில் என்னையும் நம்ப வச்சிருவா போல… இவ இங்க இருக்க கூடாது.’ என்ற எண்ணத்தோடு,  “கீர்த்தனா, நீ இங்க இருந்து உங்க வீட்டுக்குப் போக மாட்டியா?” என்று கீர்த்தனாவின் பேச்சை சமாளிக்க முடியாமல் கேள்வியோடு நின்றான் விஜயேந்திரன்.

“நான் ஏன் போகணும்? உங்களைப் பாதியில் விட்டுவிட்டு வரவா, எங்க அப்பா அவ்வுளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ணாங்க?” என்று விஜயேந்திரனின் கேள்விக்கு தன் கேள்வியைப் பதிலாக்கினாள் கீர்த்தனா.  “ஏய்! பணம் தான் பிரச்சனைனா, நான் குடுத்திறேன். நீ இங்க இருந்து போயிடு. ஏதாவது காரணத்தை நான் உண்டு பண்றேன். நீ இங்க இருக்காத.” என்று விஜயேந்திரன் கட்டளையிட்டான்.

புடவை முந்தானையை இடுப்பில் சொருகியபடி, மெத்தை மீது சம்மணமிட்டு அமர்ந்தாள். “சூப்பர் பாஸ். பொய் சொல்றது. திருட்டுத் தனமா ஓடுறது இதெல்லாம், உங்களுக்கு கை வந்த கலை போல! இது எனக்கு தெரியாம போச்சே!” என்று கண்களை விரித்து ஆச்சரியமாக கூறி, அவளைச் சீற்றத்தோடு பார்த்தான் விஜயேந்திரன்.

“உண்மை சுடத்தான் செய்யும். அதை விடுங்க. கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், நீங்க தப்பு பண்ணிருக்கீங்க. பொய் சொல்லணும். ஓடி ஒளியனும். ஆனால், தப்பே பண்ணாத நான் ஏன் பொய் சொல்லணும். உண்மையைச் சொல்லுவோம்.” என்று கீர்த்தனா கூற, ‘காதல் அப்படி ஒரு குற்றமா?’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அதை ஒதுக்கி விட்டு, “அப்ப, நீ இங்க இருந்து போக மாட்ட?” என்று விஜயேந்திரன் கண்களை சுருக்கி கேட்க, “நான் அப்படிச் சொல்லவே இல்லையே. உண்மையை சொல்லுங்க…” என்று கீர்த்தனா மீண்டும் தொடங்க விஜயேந்திரன் கை உயர்த்தி, அவள் பேச்சை நிறுத்தினான்.

“நீ இங்க இருந்து போக மாட்ட? இப்படியே என்னைப் பேசி பேசி நோகடிக்கணும். அப்படியே சாகடிக்கணும். அது தானே உன் எண்ணம். அது தானே உன் திட்டம்.” என்று விஜயேந்திரன் கீர்த்தனாவின் நெற்றியில் அடித்தார் போல் கேட்க, சரேலென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.

தன் கண்களை இறுக மூடினாள் கீர்த்தனா. ‘நான் இவங்களை சாகடிக்க நினைப்பேனா? நான் இவங்களைக் கஷ்டப்படுத்த நினைப்பேனா? வந்த புதிதில், பல வாக்குவாதங்கள், மோதல்கள் வந்தாலும், இவங்க எனக்கு ஒரு நல்ல நண்பர் தானே? இந்த ஆறு மாசத்தில், எனக்காக நிறைய பண்ணிருக்காங்களே? ஆனால், என்னை பத்தி அவங்களுக்கு தெரியாதா? என் அன்பை அவங்க ஒரு நொடி கூட புரிஞ்சுக்கலையா? இல்லை நான் புரிய வைக்கவே இல்லையோ? ‘ என்று பல கேள்விகள் தோன்றி கீர்த்தனாவின் மனதை ரணமாய் அறுத்தது.

நிகழ் காலத்திற்கு திரும்ப மறுத்து, கீர்த்தனாவின் இமைகள் பிரிய மறுக்க, “என்னை சாவடிக்கணும். கொல்லனும்? அப்படி தானே?” என்று தன் விரல்களால் கீர்த்தனாவின் முகத்தை உயர்த்தி  விஜயேந்திரனின் வார்த்தைகள் கர்ஜனையாக ஒலிக்க, அடிப்பட்ட பாம்பாகச் சீறினாள் கீர்த்தனா.

வலிகள் கீர்த்தனாவின் மனதை உருக்கியது. விஜயேந்திரன் மேல் அவள் கொண்ட அன்பு, காதல் வெளிப்பட வாய்ப்பில்லாமல் போக, அது கோபமாக மாறி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

“ஆமா… கல்யாணமான பெண்ணை விட்டுட்டு போனா, எவ்வுளவு வலிக்கும்முன்னு உங்களுக்கு புரியனும். உங்களுக்குப் புரிய வைப்பேன்.” என்று அவனை எச்சரித்துவிட்டு, மேலும் பேச எதுவும் இல்லை என்பது போல், சமையலறை நோக்கி ஒயிலாக நடந்தாள் கீர்த்தனா.

‘இவ இப்ப என்ன தான் சொல்ல வரா? இங்க இருந்து போக மாட்டாளா? என்னை பிடிக்கலைன்னா, இங்கிருந்து போக வேண்டியது தானே? இவ என்ன தான் நினைக்குறானே புரியலையே!’ என்று விஜயேந்திரனின் எண்ணம் தறி கெட்டு ஓட, விஜயேந்திரனின் தலை விண்வினென்று வலிக்க ஆரம்பித்தது.

அதே நேரம் நிரஞ்சனா வீட்டில், நிரஞ்சனாவின் தாயார் சுந்தரி எதோ சிந்தனை வயப்பட்டவராகக் காணப்பட்டார்.  ‘நிரஞ்சனா அக்கா, வந்துட்டு போனதிலிருந்து இப்படி தான் இருக்காங்க அம்மா.’  என்று எண்ணினாள் ஸ்வாதி.

நிரஞ்சனாவின் தந்தை ராமலிங்கம் உடல் நிலை தேறி இருந்தார். “ஸ்வாதி… உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சனை. உங்க அக்காவை நினைச்சுகிட்டு இருக்காளா?” என்று கேட்டார் ராமலிங்கம்.

“ஆமா… அப்பா… அன்னைக்கு அக்காவை ரொம்ப திட்டிட்டாங்க. அப்புறம் மனசு கேட்கலை.  பணம் கொடுத்தாங்க. அக்கா நிலைமை என்னன்னு தெரியணும். ஆனால், என்கிட்டே கேட்க மனசில்லைன்னு நினைக்கறேன்.” என்று தன் தந்தையிடம் கிசுகிசுத்தாள் ஸ்வாதி.

“நீயாவது, உங்க அம்மா கிட்ட நிலைமையைச் சொல்ல வேண்டியது தானே? பாவம். எப்படி கவலையா இருக்கா பாரு?” என்று தன் மனைவிக்காகப் பரிந்து பேசினார் ராமலிங்கம்.

“அப்பா… அக்கா பாவம் அப்பா. அவ பண்ணது தப்பு தான். ஆனால்,அவ இல்லாம நாம எப்படி அப்பா இருக்க முடியும். அத்தான் ரொம்ப நல்லவங்க அப்பா. இப்ப மனசு உடைஞ்சி இருக்கா அப்பா. நாம போனால் சந்தோஷமா படுவா. புது நம்பிக்கை அவளுக்கு வரும் அப்பா.” என்று அத்தனை அப்பா போட்டு தன் தந்தையைப் பேசியே தன் தமக்கைக்காக  தன் பக்கம் இழுக்க முயற்சிக்க, “ஸ்வாதி… சாப்பிட வாங்கப் பேசினது போதும்.” என்று இவர்கள் பேச்சைக் கேட்ட படியே, வேலை பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி அழைத்தார்.

ராமலிங்கம் பெருமூச்சோடு எழ, ஸ்வாதி கோபமாக எழுந்து வந்தாள். “அம்மா… உங்களுக்கு அக்கா மேல பாசம் இல்லை. உங்களுக்கு உங்க கெளரவம், உங்க பிடிவாதம், உங்க மரியாதை தான் முக்கியம். நாங்க முக்கியம் இல்லை. நீங்க அவசரமா கல்யாணம் பேசலைனா, அக்கா இப்படி பண்ணிருக்கவே மாட்டா. அன்னைக்கு அவ அத்தானை தேடி போகாம, செத்து போயிருந்தா நீங்க சந்தோஷ பட்டிருப்பீங்க.” என்று ஸ்வாதி கோபமாகப் பேச, தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார் சுந்தரி.

“உங்க அக்கா, என்னை விட்டுட்டு போய் கொல்றா… நீ கூட இருந்தே கொல்ற…” என்று கதறி அழ, “அம்மா… சாரி அம்மா… உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு நான் அப்படி பேசலை அம்மா. சாரி…சாரி…” என்று ஸ்வாதி கூற, கண்களில் கண்ணீர் வழிய, உணவு பரிமாறினார் சுந்தரி.

அதே நேரம், நிரஞ்சனா, முகுந்தன் வீட்டிற்குள் நுழைய, முகுந்தன் முகத்தில் மெல்லிய புன்னகை. அவன் கேட்ட கேள்வி அவன் மனதில் தோன்றியது .

‘நான் அன்னைக்கு  உன்னைப் பக்குவமா பேசி திரும்பி அனுப்பிருக்கணுமோ? நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டதால் உனக்கு இவ்வுளவு கஷ்டமும்…’ என்று முகுந்தன் பேச, ‘முகுந்த். எனக்கு நிறைய மனவருத்தம் இருக்கு முகுந்த். அதை எல்லாம் உன் அருகாமையில் நான் மறந்தே போயிருவேன்.’ என்று மேலும் மேலும் பல செயல்களால் அவன் வருத்தத்தை மறக்க செய்த மனைவியின் அன்பில் அவன் முகத்தில் பெருமிதம் வழிந்தது.

முகுந்தனின் சக்கர நாற்காலியை அவன் அறைக்கு நிரஞ்சனா தள்ளி செல்ல, அவர்களைத் தொடர்ந்தது பூமாவின் கண்கள்.

முகுந்தனை பின்னே இருந்து கட்டிக் கொண்டு, நிரஞ்சனா அவன் கன்னத்தோடு இழந்து, இதழ் பதிக்க, “நீரு, கதவை கூட சாத்தாம என்ன டீ பண்ற?” என்று முகுந்தன் நெளிய, “உங்க அம்மா… நம்மளை பார்த்துகிட்டே இருக்காங்க டா.” என்று நிரஞ்சனா இதழ் உரசி அவன் காதில் கிசுகிசுக்க, “அடியேய்…” என்று முகுந்தன் அலறினான்.

“பின்ன என்ன டா? இங்கிதம் இல்லாம நம்மளை நோட்டம் விடுறது. ஜன்னல் வழியா தோட்டத்திலிருந்த நம்மளை பார்த்துகிட்டே இருந்தாங்க டா.” என்று புகார் படித்தாள் நிரஞ்சனா.

“ஏய். நாம்ம சண்டை இல்லாம சந்தோஷமா இருக்கோமான்னு  பார்த்திருப்பாங்க.” என்று முகுந்தன் தன் தாயை விட்டுக்கொடுக்காமல் பேச, “கரெக்ட் முகுந்த். அது தான் நானும் சந்தோஷமா தான் இருக்கோமுன்னு சொல்லாம சொல்லிட்டேன்.” என்று நிரஞ்சனா விட்டுக்கொடுக்காமல் கூற, முகுந்தன்  புன்னகைத்துக் கொண்டான்.

ஹாலில் அமர்ந்திருந்த பூமா, “என்னங்க…” என்று கிசுகிசுப்பாக அழைக்க, “நீ ஏன் அவங்க ரூமை பார்த்த?” என்று நவநீதன் கேட்டார்.

“நீங்களும் பார்த்தீங்களா?” என்று பூமா கண்களை விரிக்க, “கண்ணில் பட்டது.” என்று நவநீதன் கூற, “ஆ…” என்று வாயை பிளந்தார் பூமா.

“என்னங்க….” என்று பூமா மீண்டும் தொடங்க, “என்ன இப்படி இங்கிதம் இல்லாம பன்றாங்க? அது தானே கேட்க போற?” என்று சோபாவில் சாய்ந்து மொபைலை பார்த்தா படியே நவநீதன்  கேட்க, “இல்லைங்க… விஜய், கீர்த்தனாவை நாம்ம இப்படி பார்த்ததில்லையே?” என்று பூமா யோசனையாகக் கேட்டார்.

“இது தான் இப்ப உனக்கு கவலையா?” என்று நவநீதன் கேட்க, “இல்லைங்க… கவலை படணுமோன்னு சந்தேகம் வருதுங்க.” என்று சந்தேகமாகக் கூறினார் பூமா.

“இவங்க லவ் மேரேஜ்… அவங்க அப்படி இல்லைல.” என்று நவநீதன்  கூற,  “கல்யாணமாகி ஆறு மாசம் ஆகுதுங்க. அன்னைக்கு விஜய் யூ.எஸ். போனது கூட கீர்த்தனாவுக்கு தெரியலை. முன்னெல்லாம், கீர்த்தனா வளைய வளைய வருவா. இப்ப எதோ நெருடுதுங்க. அதுவும் முகுந்தனையும், இந்த பெண்ணையும் பார்த்து ரொம்ப குழப்பமா இருக்குங்க.” என்று பூமா பேசிக்கொண்டே போக, “என்னடி நீ என்னை ரொம்ப குழப்புற?” என்று நவநீதன் அலைப்பேசியைத் தூர வைத்து தன் மனைவியைப் பார்த்துக் கூறினார்.

இருவரும் ஏதோ பேசியபடி, “விஜய்… கீர்த்தனா…” என்று இருவரையும் அழைத்தனர்.

விஜயேந்திரன், கீர்த்தனா இருவரும் வர, “உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா?” என்று பூமா நேரடியாகக் கேட்க, இருவரும் பதட்டமாக, “அப்படி எல்லாம் இல்லையே…” என்று ஒருசேர கூறினார்.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள, “அப்புறம்… ஏன் ஆளாளுக்கு ஒரு பக்கம் இருக்கிற மாதிரி இருக்கு?” என்று நவநீதன் பொசுக்கென்று கேட்டுவிட, இருவரும் ஒன்று போலக் காரணம் கூற, பெரியவர்கள் அவர்கள் காரணத்தை ஒத்துக்க கொண்டு தலை அசைத்தனர்.

கீர்த்தனா யாரும் அறியாமல், விஜயேந்திரனை பார்த்து முகத்தைச் சுழித்துக் கொண்டு உள்ளே செல்ல, ‘நான் சொல்றதில் ஒரு அர்த்தம் இருக்கு. இவளும் அதையே ஏன் சொல்ல வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்ற அவள் மீதிருந்த கோபத்தை தாண்டியும், அவன் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

கீர்த்தனாவின் கோபத்தை காட்டுவது போல், அவள் கூந்தல் விழுக் விழுக்கென்று வேகமாக  அங்குமிங்கும் அசைய, புன்னகையோடு, அவள் இடுப்பின் அசைவுக்கு ஏற்ப ஆடும் கூந்தலைப் பார்த்தபடி தன் தாடையைத் தடவிக் கொண்டான் விஜயேந்திரன்.

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்.

 

error: Content is protected !!