கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 5
முகுந்தன், ‘தன் விஷயத்தை வீட்டில் கூறுவதற்கு இது சரியான நேரமா?’ என்றெண்ணியபடி தன் அறையோடு ஒட்டியிருந்த பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். குடும்ப சூழ்நிலை மனத்தில் தோன்ற, “கொஞ்சம் பொறுமையாக இருப்போம். நிரஞ்சனா இன்னும் படித்து முடிக்கவில்லை. இறுதி ஆண்டாவது வர வேண்டும்.’ என்ற முடிவோடு முகுந்தன் தன் நாட்களை நகர்த்தினான்.
இரண்டு நாட்கள் கழித்து, விடியற்காலை ஆறு மணிக்கு, முகுந்தனின் அலைப்பேசி அலறியது. முகுந்தனின் வாழ்வு திசை மாறப் போகும் நொடி என்றறியாமால், புது எண்ணிலிருந்து அழைப்பு வர, தூக்கக் கலக்கத்தோடு “ஹல்லோ…” என்று கூறினான் முகுந்தன்.
எதிர் பக்கம் கேட்ட குரலில், சடாரென்று எழுந்து அமர்ந்தான் முகுந்தன். எதிர் பக்கம் பேசியதைக் கேட்கும் வாய்ப்பு நமக்கில்லை.
“சரி… பயப்படாத… நான் இருக்கேன்.” என்று எதிர் பக்கம் பேசுபவரைச் சமாதானம் செய்யும் விதமாகப் பேசினான் முகுந்தன். “அங்கேயே இரு… நான் இப்ப வரேன்.” என்று கூறிக்கொண்டு எத்தனை வேகமாகத் தன்னை தயார் செய்து கொண்டு கிளம்ப முடியுமா அத்தனை துரிதமாகக் கிளம்பினான் முகுந்தன்.
‘இந்நேரத்தில் எங்கு கிளம்புகிறான்?’ என்ற எண்ணத்தோடு, முகுந்தனின் பெற்றோர் பார்த்து, அடுத்த கேள்வியை கேட்டும் முன் முகுந்தன் வேகமாக சென்றிருந்தான்.
முகுந்தனின் கார் சாலையில் வேகமாகப் பறக்க, அது வடபழனி கோவில் முன் நின்றது. முகுந்தனின் காரை பார்த்துவிட்டு வேகமாகக் காரை நோக்கி ஓடி வந்தாள் நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் தலை முடி கலந்திருந்தது. கண்களில் ஒளி இல்லை. உடல் சோர்ந்திருந்தது. கால்களில் செருப்பில்லை.. பாதங்களில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தன் துப்பட்டாவைச் சரி செய்த படி முகுந்தனை நெருங்கினாள் நிரஞ்சனா.
நிரஞ்சனா ஏதோ பேச ஆரம்பிக்க, அவள் கோலத்தைப் பார்த்து நிரஞ்சனாவை அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி, கார் கதவைத் திறந்து உள்ளே அமரச் சொன்னான் முகுந்தன்.
முகுந்தனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, நிரஞ்சனா காரில் ஏறி சாய்வாக அமர்ந்தாள். அவளுக்கும் அந்த ஆசுவாசம் தேவைப் பட்டது. சூடான டீயோடு அவளை நெருங்கினான் முகுந்தன். “நீ ஏதாவது சாப்பிட்டியா?” என்று நிரஞ்சனா விழி உயர்த்தி, அந்த பதட்டத்திலும் கேட்க, முகுந்தன் அவளை மையலோடு பார்த்தான்.
“நீ சாப்பிடு.” என்று கூறி அவன் டீ கடைக்குச் சென்று டீ வாங்கி அருந்தினான். நிரஞ்சனாவின் கோலம், முகுந்தனுக்குப் பல செய்திகள் கூறியது. தன் வாழ்வு திசை மாறப் போவதை உணர்ந்து கொண்டான் முகுந்தன். ‘என்ன நடந்தாலும், நிரஞ்சனாவை விட்டுக் கொடுக்கக் கூடாது.’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டான் முகுந்தன்.
முகுந்தன் காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்ப, “எங்க போறோம்?” என்று கேட்டாள் நிரஞ்சனா. “எங்க போகணும்?” என்று சாலையைப் பார்த்தபடி கேட்டான் முகுந்தன்.
“கோவிலுக்குள்ள போலாம். நீ என்னை இப்ப கல்யாணம் பண்ணிக்கோ.” என்று அதிகாரமாக உரிமையோடு கூறினாள் நிரஞ்சனா. வடபழனி கோவிலுக்குள் செல்லாமல் காரை எதிர் பக்கம் செலுத்தினான் முகுந்தன். “நீ கூடச் சொன்ன வார்த்தையை காப்பாத்தமாட்டியா? எல்லாரை மாதிரியும் என்கிட்டே பொய் சொன்னியா?” என்று ஏமாற்றமாகக் கேட்டாள் நிரஞ்சனா. ‘அவள் பேசட்டும்…’ என்று மௌனமாகக் காரை செலுத்தினான் முகுந்தன்.
முகுந்தன் மௌனம் காக்க, நிரஞ்சனா கண்களில் கண்ணீர் வழியச் சாலையைப் பார்த்தபடி அமர்ந்தாள். முகுந்தனின் கார் அஷ்டலக்ஷ்மி கோவில் அருகே நின்றது. “இறங்கு நிரஞ்சனா.” என்று கூறி அவளைக் கோவில் அருகே இருக்கும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் மௌனமாக நடந்து சென்று அங்கு அமர்ந்தனர்.
“என்ன டீ ஆச்சு? விளையாட்டுப் பிள்ளை மாதிரி கல்யாணம் பண்ண சொல்ற?” என்று நிரஞ்சனாவின் முகம் பார்த்துக் கேட்டான் முகுந்தன். “உனக்கும் என்னைப் பார்த்தா விளையாட்டுப் பிள்ளை மாதிரி இருக்கா?” என்று நிரஞ்சனா கண்கலங்க, “ஏய்! என்ன டீ?” என்று நிரஞ்சனாவின் தலையை ஆதரவாக முகுந்தன் தடவ, அவன் கைகளைக் கோபமாகத் தட்டி விட்டாள் நிரஞ்சனா.
நிரஞ்சனா தன் முகத்தைக் கோபமாகத் திருப்பிக் கொள்ள, “நிரஞ்சனா…” என்று முகுந்தன் அழுத்தமாக அழைக்க, முகுந்தனின் மார்பில் சாய்ந்து கதறினாள் நிரஞ்சனா.
இத்தனை நாள் பழக்கத்தில், கண்களால் மட்டுமே காதல் பேசிய இவர்கள் இன்று அதை கடைப்பிடிக்க முடியாமல் உணர்ச்சியின் பிடியில் சிக்கி கொண்டனர். நிரஞ்சனாவின் தலை கோதி, “அழாத டீ… இப்ப என்ன கல்யாணம் தானே பண்ணிக்கிட்டா போச்சு. நான் வேண்டாமுன்னு சொல்லை டீ. நீ ரொம்ப டென்ஷனா இருந்த. பதட்டத்தில் இருக்கிற அப்ப நாம முடிவு பண்ண கூடாதில்லை. அதுக்கு தான் டீ இங்க கூட்டிட்டு வந்தேன்.” என்று முகுந்தன் சமாதானம் பேச, நிரஞ்சனா சற்று விலகி அமர்ந்து மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“கோவில் பக்கத்தில் இருக்கிற கடற்கரையில் கூட்டமும் இருக்கும். நாமும் பேச முடியும்.” என்று முகுந்தன் பேச, நிரஞ்சனா கடலை பார்த்தபடி வெறுப்பாக அமர்ந்திருந்தாள்.
“நிரஞ்சனா… என்ன ஆச்சு?” என்று கேட்க, “நம்ம விஷயம் வீட்டில் தெரிஞ்சிருச்சு. உங்க கிட்ட பேச கூடாது. இரண்டு வருஷம் படிப்பில் கவனம் செலுத்த சொன்னாங்க. படிப்பு முடிஞ்சவுடனே உங்க வீட்டில் பேசுறேன்னே சொன்னாங்க. நீயும் அது தானே சொன்ன?” என்று நிரஞ்சனா கேள்வியாய் நிறுத்த, முகுந்தன் ஆமோதிப்பாகத் தலை அசைத்தான்.
“ஆனால்… ஆனால்…” என்று நிரஞ்சனா மேலும் பேச முடியாமல் விசும்ப, “நிரஞ்சனா…” என்று கண்டிப்போடு அழைத்தான் முகுந்தன்.
நிரஞ்சனா அவனை மிரண்டு விழிக்க, “இப்ப என்ன ஆச்சு?” என்று காரியத்தில் கண்ணாகக் கேட்டான் முகுந்தன்.
“எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. நேத்து பொண்ணு பார்க்க வந்தாங்க. நாளை மறுநாள் நிச்சியதார்த்தம். அடுத்த வாரம் கல்யாணம்.” என்று நிரஞ்சனா கூற, முகுந்தன் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
அதே நேரம், நிரஞ்சனாவை வீட்டில் காணாமல், ‘இந்நேரம் ஏதாவது கோவிலுக்குத் தான் போயிருக்க வேண்டும்.” என்ற எண்ணத்தோடு அவள் சொந்த பந்தம் எனப் பலரும் அவளைத் தேடி கோவில் கோவிலாக அலைந்தனர்.
“நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டாங்க. இதை கேட்டா, நான் தான் நம்ப வச்சி அவங்க கழுத்தை அறுத்துட்டேன்னு சொல்றாங்க.” என்று நிரஞ்சனா கோபமாகக் கூறினாள். முகுந்தனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “நீ தான் காலேஜ் வந்த, ஏதாவது பிரச்சனைனா வந்திரு கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொன்ன?” என்று நிரஞ்சனா கோபமாகக் கேட்டு நிறுத்த முகுந்தன் யோசனையில் ஆழ்ந்தவனாக மௌனமாக அமர்ந்திந்தான்.
“இத பார்… காலேஜ் வந்து என்னை விரும்பினது நீ… கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொன்னது நீ. நான் உன்னை விரும்பியது நிஜம். உன்னை விட்டு வேற ஒருத்தரைக் கல்யாணம் செய்துக்க முடியாது. அது உன் வாழ்க்கை, என் வாழ்க்கை, பாவம் மூணாவது ஒரு மனிதரோடு வாழ்க்கைன்னு மூணு பேர் வாழ்க்கையை என்னால் கெடுக்க முடியாது.” என்று நிரஞ்சனா தீவிரமாகப் பேசினாள்.
“அவர் எந்த நாட்டுக்கு கொம்பனா இருந்தாலும் என்னால அவரை கல்யாணம் செய்ய முடியாது. இந்த லட்சணத்தில் அவருக்கு வயசு கூட, படிக்கக் கூட இல்லை. எங்க வீட்டில் லவுன்னு தெரிஞ்சவுடன் வீம்புக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பாத்திருக்காங்க.” என்று நிரஞ்சனா இயல்பாகப் பேச, நிரஞ்சனா பதட்டம் குறைந்து சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டாள் என்று புரிந்து கொண்டான் முகுந்தன்.
“உனக்குச் சூழ்நிலை சரி இல்லைன்னா விடு. கல்யாணம் எல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு உதவி பண்ணு. வேற எங்கேயாவது எனக்குத் தங்க ஏற்பாடு பண்ணு. ஒரு வேலை வாங்கி குடு. நான் பார்ட் டைம் ஜாப் பாக்கறேன். அப்புறம் மத்ததை யோசிக்கிறேன்.” என்று நிரஞ்சனா உறுதியாகக் கூற, “இவ்வளவு யோசிக்குற நீ, வீட்டிலிருந்து வரும் பொழுது ஒரு ஸ்லிப்பர் போட்டுவரக் கூடாதா? கால்ல ரத்தம் வருது பாரு.” என்று நிரஞ்சனாவின் பாதத்தை வருடியபடி முகுந்தன் அக்கறையாக கேட்டான்.
“இல்லை…. ஸ்லிப்பர் போட்டா, வீட்டைவிட்டு வெளிய வரும் பொழுது சத்தம் வருமுன்னு தான்… ” என்று பதில் கூறியபடி, சட்டென்று பாதத்தை விலக்கினாள் நிரஞ்சனா. முகுந்தன் நிரஞ்சனாவை கேள்வியாகப் பார்க்க, “என்ன பண்றீங்க?” என்று கோபமாகக் கேட்டாள் நிரஞ்சனா.
அப்பொழுது, இரு கண்கள் நிரஞ்சனாவை நோட்டமிட்டு, அலைப்பேசியில் பேசியபடி அங்கிருந்து நகர்ந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ என் மனைவி.” என்று கண்சிமிட்டிச் சிரித்தான் முகுந்தன். நிரஞ்சனா அதிர்ச்சியாகப் பார்க்க, “இப்ப இருக்கிற நிலைமையில் நீ வீட்டுக்குத் திரும்பப் போக முடியாது. உன்னைத் தனியா எங்கயோ விட்டுட்டு என்னால் நிம்மதியா இருக்க முடியாது. எங்க வீட்டில் சொல்லி, உடனே சம்மதம் கிடைக்காது. என் அண்ணனுக்கு இப்ப தான் பொண்ணு பார்த்திருக்காங்க. இன்னும் அண்ணன் கிட்ட பேசலை. அவன் வரும் பொழுது பேசணும்னு காத்து கிட்டு இருக்காங்க. எங்க வீட்டில் சொல்லி இப்ப வேலைக்கு ஆகாது.” என்று நிரஞ்சனாவிடம் பேசி, அவளைப் பொறுமையாக இருக்கும்படி செய்கை காட்டி தன் நண்பர்களிடம் பேசினான் முகுந்தன்.
முகுந்தன் பேசி முடித்த பின், “ஏதும் பெரிய பிரச்சனை ஆகிறதா?” என்று நிரஞ்சனா பயத்தோடு கேட்க, “என்ன வேணுமானாலும் நடக்கலாம். நம்ம வாழ்க்கை எப்படியும் திசை மாறலாம். சமாளிப்போம்.” என்று முகுந்தன் ஆழமாகக் கூற, நிரஞ்சனா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
முகுந்தனின் நண்பர்களின் ஏற்பாட்டில், அஷ்டலட்சுமி கோவிலில் முகுந்தன், நிரஞ்சனா கழுத்தில் தாலி கட்டினான். எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி பதட்டத்தோடு அரங்கேறியது அவர்களின் திருமணம்.
அது நடந்து சில துளிகளில், நிரஞ்சனாவின் தாய், தந்தை மற்றும் அவள் உறவினரகள் செய்தியறிந்து கோவிலுக்கு வந்தனர்.
அப்பொழுது திருமணம் முடிந்திருக்க, நிரஞ்சனாவின் தாயார் நிரஞ்சனவை அடிக்க, முகுந்தன் முன்னே சென்றான்.
“முகுந்தன்…” என்ற ஒற்றை அழைப்பில் நிரஞ்சனா அவனைக் கட்டுப்படுத்தினாள். கண்களால், பொறுமையாக இருக்கும் படி செய்கை காட்டி, முகுந்தனை தள்ளி நிறுத்தினாள். ‘பொது இடத்தில் என்ன செய்து விட முடியும்?’ என்ற எண்ணத்தோடு, தன் தாய் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டாள் நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் தாய் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அழ… நிரஞ்சனா வீட்டின் சொந்தங்கள் அங்கு ஒன்று கூடி இருந்தது. “தாலி கட்டிட்டா இது கல்யாணமா? தாலியைக் கழட்டி உண்டியலில் போட்டுட்டு வீட்டுக்கு வா.” என்று நிரஞ்சனாவின் சொந்தக்காரர் ஒருவரின் குரல் ஓங்கி ஒலித்தது.
நிரஞ்சனாவின் சொந்த பந்தம் அவர்களை சூழ்ந்து விட, ‘என்ன நடக்கிறது?’ என்று பார்க்க முயன்றும் தோற்றுப் போயினர் பொது மக்கள்.
நிரஞ்சனாவுக்குள் அச்சம் பரவ, ‘இவர்களால் என்ன முடியும்?’ என்று முகுந்தன் கோபமாகப் பார்த்து, நிரஞ்சனாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒதுங்கி நின்றான்.
அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, நிரஞ்சனாவின் கழுத்தில் உள்ள தாலியை ஒருவர் கழட்ட முயல, நிரஞ்சனா வேகமாக பின்னே நடந்தாள் அங்கிருந்த கல் தடுக்கி கீழே விழ அங்கிருந்த கம்பியில் மோதி அவள் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.
முகுந்தனை வேகமாக ஒதுக்கி விட்டு நிரஞ்சனாவை சுற்றி வளைத்தது கூட்டம். தன் கழுத்தில் கிடந்த தாலியை கைகள் நடுங்க, இறுக்கமாகப் பற்றினாள் நிரஞ்சனா.
அந்த கூட்டத்தை ஒதுக்கி விட்டு முகுந்தன் உள்ளே செல்ல முயன்றான். வேண்டுமென்றே அவனை உள்ளே செல்லவிடாமல் ஒதுக்கித் தள்ளியது அந்த கூட்டம். ‘நிரஞ்சனாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டது தவறோ?’ என்ற பதட்டம் முகுந்தனுக்குள் பரவியது. வார நாள், காலை நேரம் சற்று கூட்டம் குறைவாக இருந்தாலும், அங்குக் கூட்டம் கூட ஆரம்பித்தது. நிரஞ்சனாவின் ஆசை, வாழ்க்கை இதைத் தாண்டி அவர்கள் குடும்ப பாரம்பரியத்தைக் கைப்பற்றி காப்பாற்ற முயன்றனர் நிரஞ்சனாவின் குடும்பத்தினர்.
தன் கழுத்தை மறைத்துக் கொண்டு, ரத்தம் வழியும் தன் தலையை மடிக்குள் புதைத்துக் கொண்டு, முகுந்தன், முகுந்தன் முகுந்தன் என்று தன் சுற்றுப்புறத்தை மறந்து முனங்க ஆரம்பித்தாள் நிரஞ்சனா.
காலம் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது?
அன்பான இளம் வாசகர்களின் கவனத்திற்கு,
கதைகளில், முகுந்தனைப் போன்ற சிறந்த காதலர்களையும், நல்ல மனிதர்களையும் பார்க்கலாம்.
ஆனால் நடைமுறையில்?
அப்படியே பார்க்க முயன்றாலும் எத்தனை சதவீதம்? காதல் என்னும் மாயவளைக்குள் சிக்குவதற்கு முன் சிந்திப்பது சாலச் சிறந்ததோ?
நல்ல மனிதனையே காதலித்தாலும், நிரஞ்சனாவின் நிலை…. நிரஞ்சனாவின் வாழ்வென்னும் கண்ணாடி மாளிகை அந்தரத்தில் ஆட ஆரம்பித்தது.
நிரஞ்சனாவும், முகுந்தனும் அதைக் கீழே விழாமல், கல்லடி பாடாமல் தாங்கி பிடிப்பார்களா?
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…