Kanne Kadhal Penne–EPI 1

239948099_925484634705538_288795760143811764_n-c1f9fd20

அத்தியாயம் 1

 

சென்னையில் உள்ள ஸ்ட்ரீட் ஃபூட் அதாவது கையேந்தி பவன் என அழைக்கப்படும் உணவு கடைகளில் பிரபலமாக இருக்கும் ஐட்டங்களில் ஒன்று கொத்து பரோட்டா. முட்டை, கோழி அல்லது இறைச்சி சேர்த்து கொத்தித் தரப்படும் இந்த பரோட்டா 100 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

 

 

“சட்டு புட்டுன்னு வேலையைப் பார்க்காம மசமசன்னு நின்னதால இந்த ஈடு பரோட்டா தீஞ்சிப் போச்சு கோபால், தீஞ்சுப் போச்சு” என வசனம் பேசிய மகனை முறைத்துப் பார்த்தார் கோபால்.

“சங்கரு டேய், என்னா லந்தா? எனக்கு என்ன நாலு கையாடா இருக்கு? பரோட்டா தட்டனும், வேக வைக்கனும், சால்னாவ பார்க்கனும், வெங்காயம் வெட்டனும், ஆம்லேட்டு போடனும்! இம்மாம் வேலையையும் ஒத்தை மனுஷனா எப்டிடா செய்வேன்!”

“இப்போ நீ ஒத்தை மனுஷனா இருக்கறதுதான் பிரச்சனையா கோபால்! இந்தப் பல்லு போன கோபாலுக்கு இதுக்கு மேலயா ஒரு லதா பொறந்து வரப் போகுது! சீக்கிரமா கண்டுப்புடிச்சு ஜோடி சேர்த்திடறேன்! டோண்டு வோரி பீ ஹேப்பி!”

“திமிர் புடிச்சவனே! என்னடா நெனைச்சிட்டு இருக்க ஒன் மனசுல?”

“உங்களைத்தான் கோபால்! இப்பவும் சொல்றேன் கோபால், என் உள்ளத்துல உங்கள தவிர வேற யாருக்குமே இடம் கிடையாது!” என சரோஜாதேவி போல பேசியவன் பரோட்டாவைக் கொத்தும் ஜல்லி கரண்டியால் தன் நெஞ்சைத் தட்டிக் காட்டினான்.

“மவனே, என்னைக் காண்டாக்குனே எல்லாம் ராங்கா பூடும் பாத்துக்கோ!” என வெங்காயம் வெட்டும் கத்தியைக் காட்டி மகனை மிரட்டினார் கோபால்.

“நைனா, இந்த தள்ளாத வயசுல உன்னைப் போட்டு இப்படி வேலை வாங்கனும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன! சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ண பார்த்து கட்டி வைன்னு எத்தனை வருஷமா கேக்கறேன், கண்டுக்கறியா நீ? நான் கேட்ட டைமுலயே பாமாவ எனக்கு கல்யாணம் கட்டி வச்சிருந்தா இந்நேரம் உன் பேரன் வந்து வெங்காயம் வெட்ட ஹெல்ப்பு பண்ணிருப்பான்” என இவன் அங்கலாய்த்துக் கொண்டான்.

கோபாலுக்கு குப்பென வியர்த்துப் போனது.

“பரதேசி நாயே! பதினஞ்சு வயசுல பக்கத்து வீட்டு பாமாவ கட்டி வைன்னு ஒத்தக்காலுல நின்னத இன்னும் மறக்கலியாடா நீ! அவ கையை நீ புடிச்சு இழுத்த இழுப்புல, புள்ளய வளத்துருக்கான் பாருன்னு அவ புருஷன் என் முதுகுல டின்னு கட்டனது செத்தாலும் மறக்காதுடா எனக்கு!” என சொல்லி இன்னும் வலிப்பது போல முகத்தை சுளித்தார் கோபால்.

“அது அறியாத வயசு நைனா! அதான் ராவோட ராவா பொட்டிப் படுக்கையை கட்டிக் கிட்டு என்னை வேற வீட்டுக்கு ஷிப்டு பண்ணிட்டியே! காதல் தோல்வியில பாமா பாமான்னு எத்தனை நாளு நான் கோமாவுல கிடந்தேன்!” என பெருமூச்சு விட்டவன், தன் கடுப்பையெல்லாம் பரோட்டாவை கொத்துவதில் காட்டினான்.

ஜெய்சங்கர், இருபத்தெட்டு வயது கட்டிளம் காளை. திருவான்மியூர் ஹவுசிங் போர்ட் வீட்டில் தன் தந்தையுடன் வசிக்கிறான். அவன் தந்தையைப் போலவே இவனும் ஒரு பரோட்டா மாஸ்டர். கோபால் சொற்ப சம்பளத்துக்காக நாயாய் உழைத்து ஓடாய் தேய்ந்தவர். இவனோ பதினாறு வயது வந்தவுடன் மற்றவருக்காக உழைப்பதை நிறுத்தி சொந்தமாக தொழில் தொடங்கி தங்களுக்காக உழைத்தான். அவனது முயற்சியில் உதித்ததுதான் ‘கோபால் கையேந்தி பவன்’.

ஜிம் பக்கமெல்லாம் போனதில்லை இவன். சின்ன வயதில் இருந்து கடுமையான உழைப்பினால் உரமேறிக் கிடந்தது அவன் தேகம். மாவு பிசைந்து, பரோட்டாவை ஸ்டைலாக தட்டி, கொத்தி என இவன் பார்க்கும் வேலைக்கு புஜங்கள் கரளாக்கட்டை போல வீங்கிக் கிடந்தன. நெடு நெடு வளர்த்தியில், அடுப்பில் வேகுவதால் கருத்துப் போய் கிடந்தவனை நேரில் பார்த்திருந்தால் டைரக்டர் பாலா கண்டிப்பாக அடுத்தப் படத்துக்கு கதாநாயகனாக்கி இருப்பார். அவர் படத்தில் நடிக்கத் தேவையான பத்து பொருத்தமும் பொருந்திய அழுக்கு சுப்பன்தான் இவன்.

முகம் எப்பொழுதும் முத்து முத்தாய் வியர்த்திருக்க, போட்டிருக்கும் கருப்பு டீஷெர்ட் அங்கங்கே மாவும் எண்ணெய்யும் பட்டு உடலோடு ஒட்டிக் கிடக்க, கட்டம் போட்ட லுங்கி முட்டி வரை மடித்து விடப்பட்டிருக்க, பரோட்டாவுக்கு விடும் எண்ணெயை தலை முடிக்கு விடாததால் முடி பரட்டையாய் சிலுப்பிக் கொண்டு நிற்க, மீசையும் முகம் நிறைத்த தாடியும் கரு கருவென வளர்ந்து நிற்க, ஆறாய் பொங்கும் வியர்வை வாசனை சால்னா வாசத்தைத் தோற்கடிக்க தில்லாய் கெத்தாய் ‘பிறர் வாழ்வதே எங்க வேர்வையில்தான்’ என பாடக்கூடிய அத்தனைப் பொருத்தமும் உடையவன் இவன்.

“நான் மட்டும் உனக்கு பொண்ணுப் பார்க்காமயாடா இருக்கேன்! எவள காட்டனாலும் மூக்கு சரியில்ல, முகரை சரியில்லன்னு தட்டிக் கழிக்கற நீ!”

“நைனா! வாழ்க்கையில ஒரு தடவை வரது கல்யாணம். காலம் பூரா வச்சி வாழ போறவ கண்ணுக்கு குளிர்ச்சியா ஜில்லுன்னு இருக்கனும்னு நெனைக்கறது தப்பா? தெனம் அடுப்புல வெந்து சாகறேன்! வீட்டுக்குப் போனா, அவ முகத்தப் பார்த்ததும் அப்படியே குத்தால அருவில குளிச்ச மாதிரி ஜிவ்வுனு மனசு சிறகடிக்கனும் நைனா! நீ முதல்ல அந்த தரகன மாத்து. எப்போ பாரு தீஞ்சது, கருகனது, வெந்தது, வேகாததுன்னு காட்டறான்.”

“இவரு இருக்கற கலருக்கும் பதுவுசுக்கும், அந்தப் பொண்ணு பேரு என்னடா?”

“எந்தப் பொண்ணு?”

“அதான் ரூமு கதவுல போஸ்டரு ஒட்டி வச்சிருக்கியே!”

“ஓ, என் தம்முவா! செல்லத்துப் பேரு தமன்னா! பரோட்டா மாவு மாதிரி என்ன வெள்ளைத் தெரியுமா என் செல்லம்”

“ஆமா தம்மு, தம்மு! உன் அழகுக்கு தம்மு மாதிரி பொண்ணுங்க கியூ கட்டி நிப்பாளுங்கன்னு நெனைப்பு உனக்கு! போடா, போக்கத்தவனே. எனக்கு வாயில கலிஜா வந்துடும்” என திட்டியப்படியே ப்ளாஸ்டிக் குவளைகளை கழுவ ஆரம்பித்தார் கோபால்.

“தோ பாரு நைனா, ஆம்பளைக்கு உழைப்புத்தான் அழகுன்னு சொல்லிக் குடுத்த நீயே, இப்படி ப்ளேட்ட மாத்தக் கூடாது! நெத்தி வேர்வை சிந்தி உழைச்சு, வீண் செலவு செய்யாம சேர்த்து வச்சி வீடு கட்ட நிலம் வாங்கிப் போட்டிருக்கேன்! இன்னும் ரெண்டு வருஷத்துல சின்னதா வீடும் கட்டிருவேன். என்னைக் கட்டிக்கிறவ ராணி மாதிரி சொந்த வீட்டுல சோக்கா இருக்கலாம் நைனா!”

தீய்ந்துப் போன பரோட்டாவை தூக்கி வீசாமல் அதில் சால்னாவை விட்டு ஒரு சுருட்டாக சுருட்டி வாயில் போட்டுக் கொண்ட மகனை ஏற இறங்கப் பார்த்தார் கோபால்.

“கஞ்சப் பிசுநாரி” என சத்தமாகவே முணுமுணுத்தார் அவர்.

“தோடா! சிக்கன சிகாமணின்னு சொல்லு நைனா”

வீண் செலவு செய்யாமல் என அவன் சொன்னது முற்றிலும் உண்மை. தேவையான செலவை செய்யக் கூட ஆயிரம் முறை யோசிப்பவன் இவன். சின்ன வயதிலேயே காசேத்தான் கடவுளடா எனும் பெரும் மந்திரத்தை வலிக்க வலிக்கக் கற்றுக் கொண்டவன், எண்ணி எண்ணித்தான் செலவு செய்வான்.

கோபால் மீது உயிரை வைத்திருந்தாலும், அவருக்கு கூட தேவையில்லாமல் நயா பைசா கொடுக்க மாட்டான். இவனிடம் பணத்தை வாங்குவதை விட காளை மாட்டில் பால் கறந்து விடலாம் என நொந்துப் போவார் அவர்.

தரகர் பார்த்துக் கொடுத்த இடங்களில் அப்படி இப்படி ஒன்றிரண்டு பெண்கள் இவன் கேட்ட மாதிரி அழகாய் இருந்து சம்பந்தமும் தகைந்து வந்தது. ஆனால் இவன் போடும் கண்டிஷன்களில் பேச்சு வார்த்தைப் பாதியிலேயே புட்டுக் கொண்டு போனது.

வாரம் ஒரு சினிமா, அடிக்கடி ஹோட்டல் சாப்பாடு, மாதம் ஒரு புது சேலை, வருடம் ஒரு நகைநட்டு, இப்படியெல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. கொடுக்கும் பணத்துக்குள் மொத்த குடும்ப செலவையும் அடக்க வேண்டும். இவனோடு சேர்ந்து உழைக்கத் தயங்கக் கூடாது. இப்படி திருமணத்துக்கு முன்னமே தெளிவாக சொல்லி வைத்தால் எந்தப் பெண் தான் ஒத்து வருவாள். இனிப்பாய் பேசி திருமணம் முடித்து அதன் பின் சுயரூபத்தைக் காட்டும் மற்ற ஆண்களைப் போல தந்திரமாகப் பிழைக்கத் தெரியாதவனுக்கு கல்யாணம் இழுத்துக் கொண்டேப் போனது.

“இந்த மாதிரி கண்டிசனு கர்மம்லாம் போட்டா, ஒனக்கு என்னை மாதிரியே இந்த சென்மத்துல கண்ணாலம் நடக்காதுடா டோய்!”

“சீச்சி! அந்த பெனாயில போட்டு உன் ஊத்த வாயக் கழுவு நைனா! எனக்கு அம்சமா, அழகா ஒரு பொண்டாட்டி கிடைக்கத்தான் போறா! அவ கூட நான் குஜாலா வாழ்ந்து புள்ளக்குட்டி பெக்கத்தான் போறேன். நீ வாயப் பொளந்துட்டு தூங்கறப்ப, என் புள்ள உன் வாயில பன்னீர உடத்தான் போறான். இப்படிலாம் நடக்கல, என் பேர மாத்தி வச்சிக்கறேன் நைனா!”

“என் தலைவன் நாட்டு நாட்டு செவன் ஞாபகமா உனக்கு ஜெய்சங்கருன்னு பேரு வச்சேன்டா! நான் வச்சப் பேரு நிலைக்கனுங்கறதுக்காகவாச்சும் உனக்கு சீக்கிரம் பொண்ணு அமையட்டும்டா மவனே!” என சொல்லி பெருமூச்சு விட்டார் கோபால்.

“ண்ணா முட்டைப் பரோட்டா ஒன்னு” எனும் குரலில் அப்பன் மகன் இருவரும் வேலையில் கவனமாகினர்.

“தம்பி, வெங்காயம் போட்டா போடாமலா?”

“போடுங்கண்ணே”

சில்வர் குவளையில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி, அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை கொஞ்சமாய் அள்ளிப் போட்டு, தட்தட்டென கரண்டியால் அடித்து தனியாக வைத்தவன், பரோட்டா உருண்டையை எடுத்து நன்றாக கையால் தேய்த்து, பின் தூக்கி ஒரு சுழற்று சுழட்டி, தோசைக் கல்லில் போட்டு அதை கரண்டியால் சதுரமாக்கினான். அதில் முட்டைக் கலவையை ஊற்றி கையாலேயே மெழுகி, பின் ஜல்லி கரண்டியால் சதுரத்தை முக்கோணமாக்கி வேகவிட்டான். வெந்ததும் கரண்டியால் அதை எடுத்தவன்,

“நைனா!” என குரல் கொடுத்தான்.

அவர் தட்டுடன் ரெடியாக, இவன் ஸ்டைலாக தூக்கிப் போட்டான் பரோட்டாவை. அவர் அதைக் கேட்ச் பிடித்து, அதில் சால்னாவை ஊற்றி வந்திருந்த கஸ்டமரிடம் கொடுத்தார்.

ஜெய்சங்கர் ஸ்டைலாக பரோட்டா போடும் அழகுக்கே நிறைய பேர் இவனது கையேந்தி பவனுக்கு வருவார்கள். பரோட்டாவும், சால்னாவும் ருசியாக இருப்பது இன்னொரு ப்ளஸ்! இவர்கள் வைத்திருக்கும் குட்டி கையேந்தி பவனில் பரோட்டா வகைகள் மட்டுமே மெனு! அதோடு குடிக்க டீயும் விற்றார்கள். டீயை கலக்கி டீ ட்ரம்மில் ஊற்றி வைத்து விடுவார்கள். கஸ்டமர் டீ கேட்கும் போது, அந்த ட்ரம்மில் இருந்த குழாய் வழி டீயை பிடித்து ஒரு ஆற்று ஆற்றிக் கொடுத்து விடுவார்கள். இந்த ரெண்டு ஐட்டத்துக்கே வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது. மாலையில் நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு பதினொன்றுக்கு வியாபாரத்தை முடித்து கடையை எடுத்து வைப்பார்கள் இருவரும்.

வந்தவர்கள் உட்கார ஐந்தே நாற்காலிகள்தான். மற்றவர்கள் எல்லாம் நின்றபடியே உண்டு விட்டுப் போவார்கள். பலர் பார்சல் வாங்கிப் போவதும் உண்டு. அப்பாவுக்கும் மகனுக்கும் கஸ்டமர்களை மாறி மாறி கவனிப்பதில் பெண்டு நிமிர்ந்துவிடும். அதோடு இவர்கள் கடை போட்டிருக்கும் இடம் ஒரு எம். என்.சி வளாகத்துக்கு அருகாமையில் இருந்தது. அங்கே வேலை செய்யும் இளசுகள் சம்பளம் எடுத்து இரு வாரத்துக்கு பிட்சா, பர்கர் என பந்தா காட்டினாலும், மீதி இரண்டு வாரத்துக்கு கோபால் கையேந்தி பவனில்தான் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.

இவனும் அவர்களைக் கலாய்த்து சிரிக்க சிரிக்கப் பேசுவான்.

“டேய் தம்பிகளா! நீங்க அழகா சட்டைப் போட்டுருக்கீங்க, நான் அழுக்கா சட்டைப் போட்டுருக்கேன்! இருந்தாலும் நம்ம ரெண்டு பேர் தொழிலுக்கும் ஒரு ஒத்துமை இருக்குடா!” என பரோட்டாவை கொத்தியபடியே பேச்சுக்கு இழுப்பான் அவர்களை.

“எதே!!! நம்ம தொழிலுல ஒத்துமையா?”

“ஆமான்டா! நீங்க அந்த கம்ப்யூட்டரை லொட்டு லொட்டுன்னு தட்டறீங்க! நான் இந்த பரோட்டாவ லொட்டு லொட்டுன்னு கொத்தறேன்! எங்கயும் லொட்டு இங்கயும் லொட்டுடா!” என சொல்லி சிரிப்பான்.

“போண்ணா, காமேடி பண்ணிக்கிட்டு! லொட்டு சேமா இருந்தா போதுமா? துட்டு(சம்பளம்) வித்தியாசப்படுதுல” என கிண்டலடித்து விட்டுப் போவார்கள் இளசுகள்.

இவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வான். அவர்களைப் போல இவனுக்கு கிரேடிட் கார்ட் உண்டா, ஈ.எம்.ஐ உண்டா, நன்றாய் பாட்டு விட்டு அடிக்கும் டீம் லீடர்தான் உண்டா! அடுத்த நாள் வியாபாரத்துக்கு சரக்கு வாங்கும் பணத்தை எடுத்து தனியாக வைத்தால், மீதி பணம் அப்படியே அவனது கைக்கு வந்து விடும் சொந்தத் தொழில் அல்லவா!

வேலைகளை செய்துக் கொண்டிருந்தவனை, போனில் வைத்திருந்த அலார சத்தம் கலைத்துப் போட்டது. அந்த அலாரத்தை நிறுத்தியவன், கேனில் வைத்திருந்த நீரை எடுத்து முகத்தைக் கழுவி துண்டால் துடைத்துக் கொண்டான். தங்களது உடமைகளைப் போட்டு வைத்திருக்கும் பையில் இருந்து பவுடர் டப்பாவை எடுத்தவன், கொஞ்சமாய் கையில் கொட்டி முகத்தில் பூசிக் கொண்டான். சீப்பை எடுத்து முடியையும், மீசைத் தாடியையும் சீவி சரி செய்தவன், பையில் இருந்த சின்னக் கண்ணாடியை எடுத்து முகத்தைத் திருப்பி அப்படியும் இப்படியும் பார்த்தான்.

“கோவாலு!”

மகனின் அலப்பறைகளைப் பார்த்தப்படியே அவன் விட்டுப் போன வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர்,

“இன்னா மேட்டரு?” என குரல் கொடுத்தார்.

“நல்லா இருக்கனா?”

“உனக்கென்னடா! அழகன்டா நீ”

தகப்பனின் புகழ்ச்சியில் அகமகிழ்ந்தவன், அடுப்புடன் போராடிக் கொண்டிருந்தவரின் கன்னம் பிடித்துக் கிள்ளி முத்தமிட்டான்.

“நைனான்னா நைனாத்தான்” என்றவன் பாண்டி பஜாரில் வாங்கி பத்திரமாக பாதுகாக்கும் கறுப்புக் கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக அணிந்துக் கொண்டான்.

கண்ணாடியைப் பார்த்து மறுபடியும் தலையைக் கோதிக் கொண்டவன், தூரத்தே தெரிந்த எம்.என்.சி நுழைவாயிலையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்தப்படி இருந்தான். இரண்டு மாதங்களாய் அவன் ஜொள்ளு ஊற்றி சைட்டடித்துக் கொண்டிருக்கும் தேவதை பெண் ஒருத்தி அங்கிருந்து வெளியேறி இவனது கடைக்கு மெல்ல நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

“நைனா, வரா நைனா வரா!”

“தெனமும்தான் பரோட்டா வாங்க வரா!”

“இவள மாதிரி உனக்கு ஒரு மருமக வந்தா எம்மாம் ஷோக்கா இருக்கும்!”

“கனவு காணலாம்டா மவனே! அதுக்குன்னு ஆகாச கனவு கூடாது! அந்தப் பொண்ணு எம்மாம் அழகா இருக்கு, பெரிய வேலை வேற பாக்குது! நல்லா படிச்சிருக்கும் போல! இந்த எட்டாத பழம் தேவையாடா உனக்கு?”

“எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடறவன் இல்ல இந்த சங்கரு! லைட்டா பார்க்கறதுல என்ன தப்பு? பாமா விஷயத்துல நீ சாத்துன சாத்து இன்னும் மறக்கல எனக்கு! அப்போ என்ன சொன்ன நீ?”

“அத்தையும் நீயே சொல்லித் தொலை”

“பொண்ணுங்க பூவு மாதிரி! தூரத்துல இருந்துப் பார்த்து ரசிக்கலாம்! பறிச்சு மோந்துப் பார்த்துக் கசக்கிப் போட்டுறக் கூடாதுன்னு சொல்லி சொல்லி அடிச்சில்ல! அது அப்படியே இந்த மனசுல பதிஞ்சுக் கிடக்கு நைனா! நீ சொன்னததான் நான் கரீக்டா ஃபோலோ பண்ணறேன்! கண்ணுக்கு குளிர்ச்சியா தெரியற புள்ளைங்கள ஜாலியா சைட்டடிக்கறேனே தவிர பறிக்க நினைக்கல! சீக்கிரம் எனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வை, இதக் கூட விட்டுடறேன்! அப்புறம் பாரு இந்த ஜெய்சங்கர் ஸ்ரீராமசங்கர்னு பேர் வாங்குவான்!”

“நெசமாலுமாடா?”

“உன் மேல சத்தியமா நைனா! அதான் பார்க்க, ரசிக்க எனக்கே எனக்குன்னு ஒருத்தி வந்துடுவாளே! அவ முந்தானையைப் புடிச்சிட்டு சுத்தோ சுத்துனு சுத்தப் போற எனக்கு மத்த பொண்ணுங்கள சைட்டடிக்க எங்கிருந்து டைமு கிடைக்கப் போகுது!” என கனவில் மிதந்தவாறே பேசிக் கொண்டிருந்தவனை,

“பரோட்டா மூனு பார்சல்” எனும் தேன் குரல் பூமிக்கு இழுத்து வந்தது.  

“நீ கேட்டா, பரோட்டா கடையையே குடுப்பேனே!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவன், கறுப்புக் கண்ணாடியின் உபயத்தால் தன் முன்னே நின்றிருந்தவளை அணு அணுவாய் சைட்டடிக்க ஆரம்பித்தான்.

கைகள் அதன் போக்கில் பரோட்டாவை ரெடி செய்தாலும் ஓர விழிப்பார்வை பாவையையே சுற்றி வந்தது. மாநிறத்தில், மூக்கும் முழியுமாய் அழகாய் பொம்மை போல இருந்தாள் பெண். சுடிதார் அணிந்து, துப்பட்டாவை ஒழுங்காய் போட்டு பின் செய்து, நீள தலை முடியை ரப்பர் பேண்ட் போட்டு கட்டி, கொஞ்சமாய் அதில் மல்லியை சொறுகி இருந்தாள். முகம், கழுத்து எல்லாம் வியர்வையில் லேசாய் நனைந்திருந்தது. நெற்றியில் குட்டியாய் ஒரு கருப்புப் பொட்டு. சின்னதாய் ஒரு கைப்பையை தோளில் மாட்டி இருந்தாள். பார்வை யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அவன் போட்டுக் கொண்டிருக்கும் பரோட்டாவின் மேலேயே நிலைத்திருந்தது.

இவளுக்காக சற்று பெரிய உருண்டையாய் பிடித்து வைத்திருந்த மாவை எடுத்து பரோட்டா சுட்டவன், அதை பிய்த்து எடுக்கக் கூட இவள் கஸ்டப்படக்கூடாதே என அதை சின்ன சின்னதாய் வெட்டி, சால்னாவை தனியாக கட்டி பார்சல் செய்துக் கொடுத்தான். அவளை கவர்வதற்காக போன முறை மூன்று பரோட்டாவுக்கு காசு வாங்கிக் கொண்டு நான்காய் வைத்துத் தர, மறுநாளே எக்ஸ்ட்ரா பரோட்டாவின் பணத்தையும் சேர்த்துத் தந்து விட்டிருந்தாள் அவள். அதனால்தான் இவளுக்காக ஸ்பெஷல் பெரிய பரோட்டா! அதோடு இவளுக்கு மட்டும் கையைக் கழுவி சுத்தபத்தமாக செய்துக் கொடுப்பான் சங்கர்.

கடை ரேடியோவில் டூயட் பட பாட்டு ஓடிக் கொண்டிருக்க, பரோட்டா பார்சலை அவள் கையில் கொடுத்தவன்,

“அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு

சீப்பாக இருப்பேன்

இல்லை செந்தாமரை பாதத்தில்

செருப்பாக பிறப்பேன்!!!” என முணுமுணுத்தான்.

மெல்ல நிமிர்ந்து கண்ணாடி அணிந்திருந்த அவன் முகத்தை முதன் முதலாயக நேராய் பார்த்தவள்,

“செருப்பு பிஞ்சிடும்!” என மெல்லிய முனகலாய்  வார்த்தையை உதிர்த்து விட்டு மடமடவென நடந்துவிட்டாள்.

“பேசிட்டா நைனா!!! பேசிட்டா!!!” என ஈயென இளித்த மகனைப் பார்த்து தூவென துப்பினார் கோபால்.

சிக்கன சிகாமணி என பெயர் வாங்கியவனிடமிருந்து சின்னதாய் என்றாலும் சில பல சலுகைகளைப் பெற்ற பெண்ணிவள், முழுதாய் அவனை முந்தானையில் முடிவாளா!!!!

 

காதல் மலரும்….

 

(வணக்கம் டியர்ஸ்.. 

 

எப்பொழுதும் கதை ஆரம்பிக்கறப்போ இந்த நாட்டுக்குப் போகலாம் வாங்க, இந்த வருஷத்துக்குப் போகலாம் வாங்கன்னு கூப்பிடுவேன். இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமா, இறங்கி வாங்கப்பான்னு கூப்பிடப் போறேன்! எங்க எறங்கி வரனும்? அதாவது இப்போ நாம இருக்கற ஸ்டேட்டஸ்ல இருந்து பல படி இறங்கி கீழ வாங்கன்னு கூப்பிடறேன். அப்போத்தான் நாம இந்த ஜெய்சங்கர புரிஞ்சுக்க முடியும். 

ஜெய்சங்கர் உழைச்சு ஓடாய் போகும் வர்க்கத்த சேர்ந்தவன். அவன் பேச்சு(இன்னா நைன்னா, நாஸ்த்தா துன்னியா…இங்க வந்து குந்து– இப்படிலாம் ஓவரா கதைல வராது. ஏன்னா இப்போ எல்லாருமே ஓரளவு நல்லாத்தான் பேசறாங்க. ஆனாலும் சில சமயம் பல வார்த்தைகள் இப்படி வந்து விழத்தான் செய்யுது. அந்த மாதிரித்தான் ஜெய்சங்கர உருவாக்கிருக்கேன். இன்னாமே ஒன்க்கு மட்ராஸ் பாஷ வர்லன்னு, இப்டி சொல்லி டபாய்க்கப் பார்க்கறியான்னு என்னை பேஜாஇ பண்ணக்கூடாது 🙂  ) .இந்த அழகன்/அழுக்கன் தான் ஹீரோ. நடை உடை பாவனைலாம் என் மத்த ஹீரோங்க மாதிரி இருக்காது.  ஹீரோயின பத்தி நெக்ஸ்ட் எபில பார்க்கலாம். சாதாரண கதை களம்தான். பெரிய எதிர்பார்ப்புலாம் இல்லாம வாங்க, படிக்கலாம். போக போக என்னென்னிக்கு அப்டேட்னு சொல்லறேன். ஆனா முடிஞ்ச அளவுக்கு வீக்லி 2 வரும்.

வந்து ஆட்டோல குந்துமே, மட்ராஸ ஒரு ரவுண்டுடுவோம்! போலாம் ரைட்!!!!!!!)