Kanne Kadhal Penne–EPI 10

239948099_925484634705538_288795760143811764_n-8ecf192f

அத்தியாயம் 10

 

பிட்டு அல்லது புட்டு என சொல்லப்படும் இந்த உணவு தமிழ்நாடு, கேரளா, ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். மலேசியா, இந்தோனேசியாவில் மூங்கிலில் வைத்து அவித்து ‘புட்டு பேம்பூ’ என விற்கிறார்கள்.(மை பேவரேட்) சென்னை ரோட்டோரக் கடைகளில் கோதுமை, அரிசி, ராகி என பல புட்டு வகைகள் கிடைக்கின்றன.

 

எப்பொழுதும் இவன் எழுவதற்கு முன்னே எழுந்து வீட்டை சுத்தம் செய்து முடித்து, கடை சமையலுக்கும் ஆயத்த வேலையைத் தொடங்கியிருப்பவள், இன்னும் அசந்துத் தூங்கிக் கொண்டிருப்பதை அதிசயமாகப் பார்த்தான் ஜெய்சங்கர். தூங்கும் போது இவன் கைவளைவுக்குள் இருப்பவள், எப்படியும் புரண்டு நகர்ந்து பாயின் ஒரு மூலைக்குப் போய்விடுவாள். நடு இரவில் எழுந்து, அவளை இழுத்து மீண்டும் தன் கை அணைப்பில் வைத்துக் கொள்வான் இவன்.

அந்த அதிகாலையில், சுவற்றை ஒட்டிக் கொண்டு கருவறை குழந்தைப் போல சுருண்டுக் கிடந்தவளை எழுப்பாமல் தனது பாயை சுருட்டி வைத்து விட்டு வேலையைப் பார்க்கப் போனான் ஜெய்சங்கர். வெளியே கோபாலும் எழுந்து அமர்ந்திருந்தார். முகம் கழுவி விட்டு வந்தவன், மூவருக்கும் சூடாக டீ போட ஆரம்பித்தான். சில்வர் டம்ளரை தகப்பனிடம் கொடுக்க,

“எங்கடா புள்ள? இன்னும் எழுந்துக்கலையா?” என கேட்டார் கோபால்.

“ஐயே! நாங்கள்லாம் டீ போட்டா கோவாலு குடிக்க மாட்டாரோ? புள்ள வந்து போட்டுக் குடுத்தாத்தான் குடிப்பாரோ? இத்தினி வர்ஷமா நான் போட்ட டீல தான் இந்தாந்தண்டி தொந்தி வளந்திருக்கு நைனா உனக்கு! உன் கண்ணு, பொண்ணு, அம்மாடி, ஆத்தாடி வந்ததும் நானும் என் டீயூம் ஒனக்கு எளப்பமா போய்ட்டோம்ல!” என அங்கலாய்த்தான் இவன்.

“ஏன்டா நீ வேற! இன்னும் எழுந்திரிக்கலையான்னு கேட்டது ஒரு குத்தமா? இன்னா சொல்லு, குளிச்சு சுத்தப்பத்தமா நெத்தில குங்குமம் துன்னூருன்னு வச்சிக்கிட்டு, சிரிச்ச மொகமா ‘அப்பா டீ’ன்னு மங்களகரமா வந்து நிப்பாடா என் பொண்ணு! அந்த மாரியாத்தாவே நேருல வந்தா மாதிரி இர்க்கும்! நீயும் தான் இர்க்கியே, கப்புப் புடிச்ச கய்தை!”

“தோடா! அவ வந்ததும் என்னை தள்ளி வச்சிட்டல்ல நைனா!” என கேட்டவன், கோபாலின் மடியில் அமர்ந்துக் கொண்டான்.

“டேய், டேய்! அந்தாண்ட போடா! அஞ்சு வயசுல வந்து ஒக்காந்த மாதிரியே அஞ்சு கழுதை வயசாயும் வந்து ஒக்காருற! ஐயோ, யம்மா” என வலியில் கத்தினார் கோபால்.

பட்டென அவர் வாயைப் பொத்தியவன், எழுந்து நின்றுக் கொண்டான்.

“கத்தாதே நைனா! என்னமோ ரொம்ப களைப்பா தூங்குறா! மொல்ல எழுந்து வரட்டும்” என்றபடியே அவர் வாயில் இருந்துக் கையை எடுத்தான்.

“மாமா!” என மெல்லிய முனங்கலாக சத்தம் கேட்க, அடித்துப் பிடித்து ரூமுக்கு ஓடினான் ஜெய்சங்கர்.

கோபாலும் அவன் பின்னே வந்தவர், உள்ளே அவள் எந்த நிலையில் இருக்கிறாளோ என தயங்கி அறையின் வெளியேயே நின்றுவிட்டார்.

சுவற்றில் சாய்ந்து, தலையைப் பிடித்தப்படி அமர்ந்திருந்தாள் பவளமல்லி.

“என்னடி? என்ன செய்யுது?” என பதட்டமாக அவள் முன்னே அமர்ந்தான் இவன்.

“தலை பாரமா இருக்கு மாமா! எழுந்தா பூமியே சுத்துது” எனவும், இவனும் வெளியே கேட்டப்படி நின்றிருந்த கோபாலும் பயந்துப் போனார்கள்.

“மவனே! ஆசுபுத்திரிக்குக் கூட்டிட்டுப் போவலாம்டா” என அவர் குரல் தர,

“ஆமாமா! வா, மொகம் கழுவி, துணி மாத்திக்கலாம்! அப்புறமா ஆசுபுத்திரிக்குப் போகலாம்” என கைத்தாங்கலாக அவளைத் தூக்கி நிறுத்தினான் ஜெய்சங்கர்.

அவன் மேல் சாய்ந்தப்படியே எட்டெடுத்து வைத்தாள் பவளமல்லி. முகம் கழுவியதும் கொஞ்சம் தெம்பாய் இருக்க,

“போங்க மாமா! நான் வரேன்” என குளியல் அறையில் இருந்து வலுக்கட்டாயமாக சங்கரை வெளியேத் தள்ளினாள்.

பல் துலக்கிக் கொண்டே கணக்குப் போட்டுப் பார்த்தாள் பவளமல்லி. சரியாக இரண்டு வாரம் நாள் தள்ளிப் போயிருந்தது. கொஞ்ச நாளாய் வாட்டி எடுக்கும் களைப்பு, சோர்வு, இன்று ஆரம்பித்திருக்கும் தலை சுற்றல் எல்லாம் இது குழந்தையாய் இருக்குமோ எனும் சந்தேகத்தைக் கொடுத்தது இவளுக்கு.

வலது கையை எடுத்து வயிற்றில் வைத்து மெல்லத் தடவிக் கொடுத்தவள்,

“உள்ள யாரு? குட்டி வடையா, குட்டி பரோட்டாவா?” என சின்னக் குரலில் கேட்டு பெரிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.

நீ அனாதையென முகத்தில் அறைவது போல சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு, தனகே தனக்காய் ஒரு கணவன், ஒரு அப்பா, இப்பொழுது ஒரு குழந்தை எனும் எண்ணமே அவ்வளவு இனிமையாய் இருந்தது.

“என்னடி பண்ணற இன்னும்? வெளிய வரியா, இல்ல கதவ ஒடைக்கட்டா?”

கணவனின் தவிப்பான குரலில், மெல்ல வெளியே வந்தாள் பவளமல்லி. புன்னகையுடன் வெளியே வந்தவளை, ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ஜெய்சங்கர்.

“மொகம்லாம் வெளுத்துப் போயி ஆவி கணக்கா உள்ள போன! வெளிய வரப்போ ஈன்னு இளிச்சிட்டே வர! என்னடி என்னாச்சு? ஜன்னி கின்னி வந்துடுச்சா?” என கேட்டப்படியே நெற்றியைப் புறங்கையால் தொட்டுப் பார்த்தான்.

குளிர்ச்சியாய்தான் இருந்ததது.

“அடேய்! மூஞ்சி கழுவிட்டு வந்தா ஜில்லுன்னுதான்டா இருக்கும். கழுத்துல கைய வச்சிப் பாருடா” என கோபால் சத்தம் போட்டார்.

அங்கும் குளிர்ச்சியாய்தான் இருந்தது.

“ஜொரம் இல்ல நைனா”

இருவரின் அலப்பறையில் சிரிப்பு வந்தது இவளுக்கு.

“நைனா, மறுபடியும் சிரிக்கறா நைனா! நீ ஓடு! ஓடிப்போய் ஆட்டோ புட்சிட்டு வா! இவள ரெடி பண்ணி வைக்கறேன்! ஸ்ட்ரேய்டா ஆசுபுத்திரி போய்டலாம்”

“ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? எனக்கு ஒன்னும் இல்ல” என்றவள், அவளுக்கென சங்கர் போட்டு வைத்திருந்த தேநீரை எடுத்துக் கொண்டு வரவேற்பறை தரையில் அமர்ந்துக் கொண்டாள்.

அவள் தேநீரை ரசித்துக் குடிக்கும் வரை அவள் முகத்தையேப் பார்த்திருந்தார்கள் இருவரும். விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என போராட்டம் அவள் மனதில். உறுதியாக தெரிந்துக் கொண்டவுடன், சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள் பவளமல்லி. ப்ளஸ் டூ வரை படித்திருக்கிறாளே, அதோடு படங்களில் சீரியல்களில் எல்லாம் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் அட்டையைப் பார்த்திருக்கிறாளே, அதை வாங்கி உறுதிப் படுத்திக் கொள்ள முடிவெடுத்தாள் பவளமல்லி. ஏமாற்றத்தை இவளால் தாங்கிக் கொள்ள முடியும். தன்னை தாங்கும் இந்த இரு ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது என புரிந்து தான் இந்த முடிவெடுத்தாள்.

அவளுக்கு சாப்பிட பரோட்டா கொண்டு வந்துக் கொடுத்தான் சங்கர்.

“நீங்களும் சாப்பிடுங்க!” என தன்னையேப் பார்த்தப்படி இருக்கும் கோபாலையும் சங்கரையும் சாப்பிட வைத்தாள் மல்லி.

“நெசமா ஒடம்புக்கு ஒன்னும் இல்லியா கண்ணு?”

“லேசா தூக்கக் கலக்கமா இருந்ததுப்பா! இப்போ டீ குடிச்சு நாஸ்தா சாப்பிட்டதும் சரியாகிடுச்சு. வாங்க வேலையைப் பார்ப்போம்”

“நீ ரெஸ்ட்டு எடு தேவா! நாங்க பார்க்றோம்” என இவன் சொல்லியும் தனது வடைக்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் இவள்.

“இன்னிக்கு ஒரு நாளைக்கு வேபாரத்துக்கு லீவு விடேன்டி!” என கெஞ்சி, கொஞ்சி கோபமாகக் கேட்டும் கூட இவள் அசைந்துக் கொடுக்கவில்லை.

எழுந்தப் போது இருந்த மயக்கம், சோர்வு விலகிப் போயிருக்க, எப்பொழுதும் போல சுறுசுறுப்பாக வேலையைப் பார்த்தாள் மல்லி.

“அடங்காப்பிடாரி, அறிவுக் கெட்டவ, ராங்கிப் புடிச்சவ” என திட்டியபடியே தனது வேலையைப் பார்த்தான் சங்கர்.

மதிய உணவை முடித்துக் கொண்டு, மாலை வியாபாரத்துக்குக் கிளம்பியது இந்தக் குடும்பம். அங்கே நடக்கப் போகும் அசம்பாவிததத்தைப் பற்றி கொஞ்சமாய் உள்ளுணர்வு காட்டிக் கொடுத்திருந்தால் கூட கிளம்பியே இருந்திருக்க மாட்டாள் பவளமல்லி.

எப்பொழுதும் போல இவன் பரோட்டாவைக் கவனிக்க, மல்லி வடை சுட ஆரம்பித்தாள். எம்.என் சி கூட்டம் மாலை தேநீருக்காக வர ஆரம்பித்தது. கோபாலும் மாறி மாறி அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். இப்பொழுதெல்லாம் இங்கே அடிக்கடி விஜயம் செய்யும் ஆட்களில் அந்த ‘படுக்க வா’ ப்ரோகிராமரும் அடக்கம். உணவைத் தின்றானோ இல்லையோ, ஓரக்கண்ணால் மல்லியை தின்றுத் தீர்த்தான். பாப்பம்மா மல்லிக்கும், பரோட்டாவின் மல்லிக்கும் இருக்கும் பத்து வித்தியாசங்கள் என்ன என கேட்டால், சங்கரை விட இவன் இன்னும் விலாவாரியாக சொல்வான்.

முன்பு ஒட்டிக் கிடந்த கன்னம், இப்போது உப்பிக் கிடந்தது. உடம்பு தேவையான இடங்களில் சதை வைத்து, இன்னும் கிக்கேற்றியது. கணவனின் கவனிப்பால், முகம் பொலிவாகிக் போயிருந்தது மல்லிக்கு. மொத்தத்தில் மாற்றான் வீட்டு மல்லி, அவன் சித்தத்தை சிதறடித்திருந்தாள். அவள் வேண்டும் என மனமும் உடலும் பேயாட்டம் போட்டது. கேவலம் ஒரு முன்னாள் கிளினர், இன்னாள் வடைக்காரி தன்னை மறுப்பதா எனும் ஆத்திரமும், அகங்காரமும் கண்ணை மறைத்தது அவனுக்கு.

சங்கர் வேலையில் கவனமாய் இருக்க, தேநீர் கப்போடு வடையில் மும்முரமாய் இருந்தவளின் அருகே நெருங்கினான் இவன். அவள் நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை.

“ஏய் பாப்பம்மா” என மெல்லிய குரலில் அவன் முணுமுணுக்க நிமிர்ந்துப் பார்த்தாள் மல்லி.

அவள் பார்வையில் அவ்வளவு அலட்சியம். அவனைக் கண்டுக் கொள்ளாமல் மீண்டும் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“அஞ்சாயிரம் தரேன்டி! ஒரே ஒரு தடவை, போதும்!”

இவனிடம் கோபத்தைக் காட்டினால், சங்கருக்கு விஷயம் தெரிந்து தேவையில்லாத கைக்கலப்பு வரும் என நினைத்தவள், எதுவும் பேசாமல் வேலையை மட்டும் பார்த்தாள்.

ஜெய்சங்கரின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே இன்னும் பேச்சை வளர்த்தான் அவன். அவன் பேச்சை எங்கோ நாய் குரைக்கிறது என்பது  போல கண்டுக் கொள்ளாமல் இருந்தாள் மல்லி. கோபாலோ அமர்ந்திருந்தவர்களுக்கு சால்னா கொண்டு போய் ஊற்றிக் கொண்டிருந்தார்.

அவளது அலட்சியம் கண்மண் தெரியாத கோபத்தைக் கொடுத்தது அவனுக்கு.

“இந்த அழகு இருக்கவும்தானடி இவ்வளவு திமிரு உனக்கு! அழிக்கறேன்டி இந்த அழகையும், திமிரையும்” என்றவன் இவள் சுதாரிப்பதற்குள், கையில் வைத்திருந்த தேநீரை வடை சட்டியில் பட்டென ஊற்றினான்.

இவள் சட்டென பின்னே நகர்ந்தும் தெறித்து வந்த எண்ணெய் வடை போட்டுக் கொண்டிருந்த கையைப் பதம் பார்த்து விட்டது.

“மாமா!” எனும் இவள் அலறலில் ஓடி வந்தான் ஜெய்சங்கர். சட்டென நடந்ததை ஊகித்தவன், ஓட முயன்ற ப்ராகிரமரை பிடித்துத் தரையில் தள்ளி வெளுத்து விட்டான்.

விபத்தாய் நடந்த சம்பவம் என நினைத்துக் கொண்டதால்தான் அவனுக்கு ரத்தக்காயத்தோடு நிறுத்தி உயிரை மிச்சம் வைத்திருந்தான் ஜெய்சங்கர். வேண்டும் என்றே செய்திருந்தான் என தெரிந்திருந்தால் அங்கே ஒரு கொலை விழுந்திருக்கும்.

“மாமா” எனும் மல்லியின் வலி நிறைந்த சத்தத்திலும்,

“டேய்! அந்தப் பரதேசிய விட்டுட்டு புள்ளய பாருடா” எனும் கோபாலின் கூக்குரலிலும்தான் நிதானத்துக்கு வந்தான் சங்கர்.

“இனி எங்க கடைப்பக்கம் எட்டிப் பார்த்துடாதேடா! செத்துருவ” என ஓங்கி அவனை மிதித்துவிட்டு, மனைவியிடம் ஓடி வந்தான்.

வலது கையில் அங்கங்கே திட்டுத் திட்டாய் எண்ணெய் தெறித்து தோல் வலண்டுப் போயிருந்தது. பட்டென அவளைத் தூக்கிக் கொண்டவன்,

“நைனா, கடைய அடைச்சிட்டு வூட்டுக்குப் போயிடு!” என கத்தியபடியே, ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டான்.

தனியார் கிளினிக் ஒன்றுக்குப் போக சொன்னவன், மனைவியின் கையைப் பிடித்து ஊதியபடி,

“வலிக்குதாடி?” என கேட்டுக் கொண்டே வந்தான்.

வலி இருந்தும், அவன் தவிப்பில் இல்லையென தலையாட்டி பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டாள் இவள்.

கிளினிக்கில் டோக்கன் வாங்கி அவளை அமர்த்தி வைத்து விட்டு, லுங்கியின் மடிப்பில் சொறுகி இருந்த ஏ.டி.எம் கார்டை வெளியே எடுத்தான் சங்கர்.

“இங்கயே இருடி! நான் ஓடிப் போய் பணம் எடுத்துட்டு வந்துடறேன்”

“இங்க அதிக செலவாகும் போல மாமா”

“வாய மூடு தேவா! எதெதுக்கு கணக்குப் பார்க்கறதுன்னு ஒரு வெவஸ்த்தை வேணா!” என எரிந்து விழுந்தவன், விடுவிடுவென வெளியே நடந்தான்.

அவனின் லுங்கி, அவர்கள் இருவரின் தோற்றம் எல்லாவற்றையும் அருவருப்பாகப் பார்த்தனர் அங்கே அமர்ந்திருந்த சிலர். டோக்கன் வாங்கும் போது கூட ‘காசு இருக்கா?’ என ஒரு மாதிரியான குரலில் கேட்டாள் வரவேற்பு பெண். மற்றவர்களின் பார்வையில் கூனிக் குறுகாமல், உழைத்து உண்பவர்கள் நாங்கள் என நிமிர்ந்தே அமர்ந்திருந்தாள் மல்லி.

சங்கர் திரும்பி வர, இவளது முறையும் வந்தது. டாக்டர் கூட இருவரின் தோற்றத்தை ஒரு மாதிரிதான் பார்த்தார். மல்லியின் கையை சுத்தம் செய்து, குளிர்ச்சியான களிம்பு ஒன்றைப் பூசியவர்,

“ஊசி ஒன்னுப் போட்டுக்கலாம்” என சொன்னார்.

இவள் கணவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தயக்கத்துடன்,

“எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு டாக்டர்! ஊசிப் போடலாமா?” என கேட்டாள்.

“ஏன்மா, அதை முதல்ல சொல்லத் தெரியாதா? இரு, பேபியான்னு கன்பர்ம் பண்ணிட்டு அடுத்து என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்”

நாள் தள்ளிப் போனது புரியாவிட்டாலும், பேபி என்பது புரிந்தது சங்கருக்கு. சட்டென மலர்ந்த முகம், சற்று நேரத்தில் கடுகடுவென மாறியது. மனைவியை முறைத்தப்படி அமர்ந்திருந்தான் இவன்.

நர்ஸ் வந்து டெஸ்ட்டுக்கு அழைத்துப் போய், குழந்தைத்தான் என உறுதிப் படுத்த, கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பெண். அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதன் பிறகு வீரியமில்லாத வலி மருந்து கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பி வைத்தார் டாக்டர்.

பணம் கட்டி விட்டு ஆட்டோவில் ஏறி அமர,

“மாமா” என அழைத்தாள் பவளமல்லி.

அவன் திரும்பியும் பார்க்கவில்லை, வாய் திறந்தும் பேசவில்லை. இவளும் அதற்கு மேல் அமைதியாகிப் போனாள். உடம்பு அசந்துப் போக மெல்ல அவன் மேல் சாய்ந்துக் கொண்டாள். அவள் தோள் மேல் கைப்போட்டுப் பிடித்துக் கொண்டவன், அமைதியாகவே வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் வரவேற்ற கோபால்,

“எப்படிமா இருக்கு கை? டாக்டர் என்ன சொன்னாங்க?” என கேட்டார்.

“டாக்டர் நீ தாத்தாவாகப் போறன்னு சொன்னாங்க நைனா”

“இன்னடா சொல்ற? நெசமாலுமா?” என கேட்ட கோபாலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

சின்னப் பையன் போல துள்ளிக் குதித்தார். தகப்பனின் சந்தோசத்தைப் பார்த்தவன், மனைவியை கோபமாக முறைத்தான்.

“நீ சந்தோசத்துல தலைகாலு தெரியாம ஆடற! ஆனா உன் கண்ணுக்கு குழந்தை வந்ததுலாம் ஒரு மேட்டரே இல்ல! இல்லைனா விஷயம் தெர்ஞ்சிருந்தும் மறைப்பாளா நம்மட்ட? அவளுக்கு வடை போடனும், காசுப் பார்க்கனும், நல்லா செலவு செய்யனும்! அது மட்டும்தான் மேட்டரு. புள்ள விஷயத்தை சொன்னா, எங்க வூட்டுலயே இருன்னு சொல்லுவோம்னு பயந்து நம்மட்ட மறைச்சிட்டா நைனா” என எகிறினான்.

“டேய் சங்கரு! அப்படிலாம் பண்ணாதுடா நம்ம புள்ள”

“பணப்பேய் நைனா இவ! எப்பப்பாரு துட்டு, துட்டுன்னு அதே நெனைப்புத்தான்” என கத்தினான்.

உடல் சோர்வு, கை எரிச்சல், ப்ரோகிராமர் பேசிய பேச்சு, இப்பொழுது கணவனின் ஆத்திரம் என எல்லாம் சேர்ந்து பொறுமையான மல்லியை கோபக்கார மல்லியாய் மாற்றியது. என்ன, ஏது என கேள்விக் கேட்காமலே, தன்னைக் குற்றவாளியாக்கிய கணவன் மீது ஆத்திரம் பொங்கி வந்தது.

“ஆமா! நான் பண பேய்தான்னு சொல்லுங்கப்பா உங்க மகன்கிட்ட! எனக்கு துட்டுத்தான் முக்கியம். வேற எதுவும் எனக்கு முக்கியமில்ல! நான் பணப்பேய்னா இவர் மட்டும் யோக்கியமா? பணத்தைக் காவக் காக்கற பூதம் உங்க மகன்!”

“நைனா! என்னை பூதம் கீதம்னா அறைஞ்சி பல்லப் பேத்துருவேன்னு சொல்லி வை”

“அப்பா! என்னை பேய்ன்னு சொன்னாரு, நானும் பாஞ்சி பாஞ்சி அடிச்சிருவேன் சொல்லு வைங்க” என இருவரும் கோபாலை மாற்றி மாற்றித் தங்கள் பக்கம் இழுத்து நியாயம் கேட்டார்கள்.

“ஷப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!” என நொந்துப் போனார் கோபால்.

கோபம் எல்லாம் அழுகையாய் மாற,

“அவன் அவன் பொண்டாட்டிக்கு என்னேன்னமோ செய்யறானுங்க. ஆனா நான், எனக்குன்னு செலவுக்கு நானே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். பொம்பளன்னு பொறந்தா அது இதுன்னு ஆசை இருக்காதா? எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வைக்க நான் என்ன துறவியா? காசு கேட்டா, வல்லுன்னு மேல விழுந்து பிராண்ட வேண்டியது! இப்படி ஒரு புருசன் வாச்சா, எவளா இருந்தாலும் என்னை மாதிரித்தான் நடந்துப்பா! பணப்பேயாத்தான் மாறிப்போவா! இப்படியே பணத்தை காபந்துப் பண்ணி நாளைக்கு நான் செத்ததும் என் குழியில கொண்டு வந்துப் போடுங்க!” என கத்தினாள்.

“ஏய் என்னடி சொன்ன?” என கையை ஓங்கியவன், பட்டென கையை கீழே இறக்கிக் கொண்டான்.

“வயித்துல என் புள்ள இருக்கறப்போ, குழி கிழின்னு அபசகுணமாப் பேசாதடி” என்றவனின் குரல் ஓய்ந்துப் போயிருந்தது.

கண்கள் இரண்டும் சிவந்துப் போய் கிடக்க, முகம் இரும்பென இறுகிக் போக சட்டென வெளி நடப்பு செய்துவிட்டான் ஜெய்சங்கர்.

கீழே மடிந்து அழும் பெண்ணைப் பார்ப்பாரா? இல்லை நொந்துப் போய் வெளியேறி இருக்கும் மகனைப் பார்ப்பாரா?   

அன்றிரவு என்றும் இல்லாத பழக்கமாக, ஃபுல் போதையில் வீடு வந்து சேர்ந்தான் ஜெய்சங்கர்.

தட்டுத் தடுமாறி வந்தவனை கோபால் தாங்கிப் பிடிக்க, மல்லியோ கண்ணில் நீருடன் அவனைப் பார்த்திருந்தாள். அவளைப் பார்த்ததும் ஒரு சைட்டாக உதடு இழுத்து இளித்து வைத்தவன் தன் கர்ண கடூரக் குரலில்,

“மல்லிகைப் பூ கையில் வாங்கி சுத்தாதீங்க

முள்ள போல குத்துதுன்னு கத்தாதீங்க

இந்த ஜெய சங்கர் பட்டப் பாடு

அத சொன்னாலே வெக்கக்கேடு” என பாடியபடியே கோபால் மேல் உவ்வேக்கென வாந்தி எடுத்து வைத்தான்.

“அட நாரப்பயலே!”

 

(காதல் மலரும்…)

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்!! ஐ மீன் கேக்கனும்! எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும். நவராத்திரி வரதால நெறைய வேலை இருக்கு. அதை எல்லாம் முடிச்சிட்டு, நிம்மதியா நம்ம கதையைத் தொடர்வோமா! இடுக்கடில எபி குடுத்தா கதையும் சரியா வராது, வீட்டுல வேலையும் ஒழுங்கா நடக்காது! அதான் இந்த முடிவு. புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன்! லவ் யூ ஆல்! டேக் கேர் டியர்ஸ்! நான் வர வரைக்கும் நீங்க மண்டைய பிச்சிக்கக் கூடாதுன்னுதான் இந்த எபிக்கு ட்வீஸ்ட் ஒன்னும் வைக்காம முடிக்கறேன் 😊 )