Kanne Kadhal Penne–EPI 11

239948099_925484634705538_288795760143811764_n-cb95e266

அத்தியாயம் 11

 

கலக்கி அல்லது முட்டை கலக்கி என அழைக்கப்படும் உணவு வகை சென்னை ரோட்டோரக் கடைகளில் மிக பிரசித்தி பெற்றதாகும். கோயம்புத்தூரின் உணவான கலக்கி இப்பொழுது தமிழ்நாடு முழுக்கக் கலக்கிக் கொண்டிருக்கிறது. மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு எல்லாம் சேர்த்து வெளியே வெந்தும், உள்ளே வேகமாலும் சமைக்கப்படும் முட்டையைத்தான் கலக்கி என்கிறோம்.

 

தூக்கம் வராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் மல்லி. மனமெல்லாம் தன் கணவனை நினைத்து ரணமாகிப் போய் கிடந்தது. வலது கை தானாக வயிற்றை மெல்லத் தடவிக் கொடுத்தது. அழுத்தித் தடவினால் உள்ளிருக்கும் குழந்தைக்கு வலிக்குமோ என மிக மென்மையாக வருடினாள் மல்லி.

‘நீங்க வெளிய வரதுக்குள்ள நைனாவும் அம்மாவும் போடற  சண்டைலாம் போட்டு முடிச்சு ஒரு நிலைக்கு வந்துடுவோம்டா! என் அம்மாவும் இன்சும் புள்ளைங்க முன்னுக்கே கத்தி சண்டைப் போடற மாதிரி உங்க முன்னுக்கு நாங்க சண்டைப் போட்டுக்க மாட்டோம்டா செல்லம்!’

மல்லாக்கப் படுத்திருந்தவள், வலது புறம் திரும்பிப் படுக்க முனைந்த நேரம் கதவருகே நிழலாடியது. பக்கென தூக்கிப் போட, கண்ணைக் கசக்கிப் பார்த்தாள் மல்லி. அங்கே குழந்தைகள் போல முட்டிப் போட்டு நகர்ந்து வந்துக் கொண்டிருந்தான் ஜெய்சங்கர்.

வாந்தி எடுத்து கவிழ்ந்துக் கிடந்தவனை, கோபால்தான் சுத்தப்படுத்தி தன்னருகே படுக்க வைத்திருந்தார்.

“நான் பூ………….தமா நைனா? பூதம் இன்னா பண்ணும் தெரியுமா? அப்படியே கட்டிப் புடிச்சு அமுக்கும்” என்றவன் அருகில் படுத்திருந்த கோபாலை நெருக்குவது போல கட்டிப் பிடித்தான்.

“அடேய், அடேய்! விட்றா! பூதமுன்னு உன் தேவாத்தானே சொன்னா! அவளப் புடுச்சு அமுக்காம என்னை ஏன்டா பேஜார் பண்ணுற?”

“அவோ வய்த்துல பாப்பா இருக்கு! அமுக்கக் கூடாது! உன் வய்த்துல பீப்பாத்தானே இருக்கு! அமுக்கலாம், தப்பில்ல நைனா தப்பில்ல”

“தண்ணி அடிச்சாலும் வெவரமாத்தான்டா மவனே இருக்க! மல்லி மேல உள்ள கோவத்துல இப்படி மில்லி போட்டுட்டு (இந்த வசனத்த கமேண்ட் பண்ண தெய்வத்துக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா! ரைமிங்கா இருக்கவும் நான் சுட்டுக்கிட்டேன்) வந்து அலும்பு பண்ணுறியே, இதெல்லாம் நாயமாடா?”

“நாயமோ, நாய் ……………. காயமோ, எனக்கு இன்னா வந்துச்சு! அல்லா பேரும் என்ட்ட நாயமாத்தான் நடந்துகிட்டாங்களா? நான் மட்டும் இன்னா செருப்புக்கு நாயம் பாக்கனும்!” என எழுந்து அமர்ந்து கையை ஆட்டி ஆட்டிக் கேட்டான் ஜெய்சங்கர்.

ஒரு மூலையில் அமர்ந்திருந்த மல்லி,

“படுங்க மாமா, நாளைக்குப் பேசிக்கலாம்” என கண்ணீர் குரலில் சொன்னாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“மாமா மாமானு கூப்டே எனக்கு விபூதி அடிக்கப் பார்க்கறல! போதும்டி போதும்! தேன்மொழின்னு பேரு இர்ந்தாலும், மூக்குல ஓங்கிக் குத்துனா தேன் வராதுடி! ரத்தம்தான் வரும்!” என உளறினான்.

“இப்போ இன்னாத்துக்கு மவனே இந்த பழமொழி?”

“என் இஸ்டம் நைனா, நான் சொல்லுவேன்! கேக்க கஸ்டமா இருந்தா அவள போ சொல்லு!”

“இந்த ராத்திரி நேரத்துல எங்கடா போவா என் மவ?”

“எதே!! எங்க போவான்னு ஏன் கேக்கற? ஓஹோ!! என் மல்லிய வூட்ட வுட்டு வெளிய அனுப்ப ஐடியாரு பண்றியா நைனா? கொன்னுடுவேன் பார்த்துக்கோ!  மூனு முடிச்சு ஸ்ஸ்ஸ்ஸ்ட்ராங்கா போட்டு தாலி கட்டிருக்கேன்! நான் சாவற வரைக்கும் என்னை விட்டுப் போக விடமாட்டேன் ஒன் மவள! அப்படி செத்துட்டாலும் பூதமா வந்து என் தேவாவ தூக்கினு போய்ருவேன்!” என புலம்பியவன்,

“என்னை ஏன் நைனா பூதம்னு சொன்னா! நான் பூதமா நைனா?” என மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க நொந்துப் போனார் கோபால்.

“யம்மா, கண்ணு! நீ போய் ரூம்ல படுமா! இவன் பொலம்பிட்டே தூங்கிடுவான்” என அழுதபடி அமர்ந்திருந்த மல்லியைப் பார்த்து சொன்னார் கோபால்.

“ஆமா, போம்மா! போய் பட்துக்கோ! நம்ம பாப்பா இருக்குல்ல வயித்துல, நான் வேணா தாலாட்டுப் பாடவா அதுக்கு?”

“இப்போ பாடனாலும் பாப்பாக்கு ஒன்னும் கேக்காதுடா”

“ஏன் கேக்காது? எல்லாம் கேக்கும்! நைனா பேசறது கேக்குதுதான பாப்பா? இல்ல கிட்ட வரவா?” என கேட்டப்படியே நகர்ந்துப் போய் அமர்ந்திருந்த மனைவியின் வயிற்றில் கையை வைத்தான் ஜெய்சங்கர்.

“பாப்பா, பாப்பா! அம்மா வயித்துல நீ வந்ததுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நீ வயித்துல இருக்கன்னு சொல்லாம, உங்கம்மா வேலைக்கு வந்ததுனாலத்தான்டா நைனாக்கு கோபம் வந்துடுச்சு! கையில பட்ட எண்ணேய் வயித்துல பட்ருந்தா என்னாயிருக்கும்? கொஞ்சமா பட்டதனால தோலோட போச்சு! அப்படியே சட்டி கவுந்துருந்துச்சுனா உங்கம்மா நெலமை! கோபத்துல நாலு வார்த்தைத் திட்டிப்புட்டேன்! அதுக்கு என்னை பூதம்னு சொல்வாளா உங்கம்மா! செத்துப் போனா குழில பணத்தப் போடுன்னு சொல்றா! யாருக்காக இப்படிலாம் உழைக்கறேன், உங்களுக்காகத்தான! நீ சொல்லு பாப்பா அம்மாட்ட, இனிமே இப்படிலாம் பேசக் கூடாதுன்னு! உங்கம்மா இல்லாத ஒலகத்துல நான் மட்டும் இருந்துருவனா! சொல்லு பாப்பா” என கண்ணீர் வழிய புலம்பியவனைக் கட்டிக் கொண்டாள் மல்லி.

“வுடுடி! நீ வேணா எனக்கு! கட்டிப் புடிப்ப, அப்பாலே எட்டி உதைப்ப! எனக்கு என் பாப்பா மட்டும் போதும்” என அவள் மடியில் சரிந்து அப்படியே கண்ணை மூடினான் ஜெய்சங்கர்.

மகனை மல்லியின் மடியில் இருந்து இழுத்துப் படுக்க வைத்தார் கோபால்.

“வுடு நைனா! பாப்பாக்கு தாலாட்டுப் பாடனும். கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாயவா! ஆராரிராரோ ராரோ ராரோ!” என ராரோ பாட்டுக்கு ரயில் பெட்டி போல் போய் கொண்டே இருந்தது.

பாடி அட்டகாசம் செய்தவன், ஒரு வழியாக தூங்கவும்தான் இவள் வந்து உள்ளே படுத்தாள். நடு இரவில் பூனை மாதிரி தன்னைத் தேடி வருபவனைப் பார்த்து மெல்லிய புன்னகை வந்தது இவளுக்கு.

மல்லியை நெருங்கி வந்தவன், உடலைக் குறுக்கி அவளது நெஞ்சில் தலை வைத்து விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தான். தன்னைத் தாயாக்கியவன் மீதும் தாய்மை உணர்வு ஊற, காயம் இல்லாத கையால் மெல்ல அவனது சிகையைக் கோதி கொடுத்தாள் பவளமல்லி.

“ஹ்ம்ம்! தேவா!” என சுகமாக முனகியவன், இன்னும் அவள் நெஞ்சில் வாகாக ஒண்டிக் கொண்டான்.

சண்டை முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேறிய நொடி, மல்லியின் தலையை வருடிக் கொடுத்து கோபால் சொன்ன கதை மனத்திரையில் ஓடியது இவளுக்கு. கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்,

“நான் வேணாமாம், எனக்குள்ள இருக்கற பாப்பா மட்டும் வேணுமாம்! கொழுப்புடா பரோட்டா உனக்கு! இனிமே உனக்கு அம்மா, ஆத்துக்காரி, ஆசான், தோழி, எல்லாமே நான்தான் மாமா! என்னை விட்டுடுடின்னு கெஞ்சற அளவுக்கு அன்பையும் அள்ளிக் குடுப்பேன், வம்பையும் வளத்து வைப்பேன்!” என முனகினாள் பவளமல்லி.

கோபாலின் குரல் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க, தூக்கமில்லாமல் தவித்தாள் பேதை.

“பாவப்பட்ட ஜீவன்மா நம்ம சங்கரு! பணம்தான் எல்லாம்னு அடிச்சு சொல்லிக் குடுத்திருக்கு அவன் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம்” என பெருமூச்சுடன் ஜெய்சங்கரின் கடந்த காலத்தைப் பகிர்ந்துக் கொண்டார் கோபால்.

“மனுஷ பெறவி ஒரு கலீஜான பெறவிம்மா! பொம்பளன்னு வந்துட்டா அவ பிச்சைக்காரியா இருந்தாக் கூட விட்டு வைக்க மாட்டானுங்க! இவன் அம்மாவும் ரோட்டுல பிச்சை எடுத்துட்டு இருந்தவதான். கூட்டமா போய் பிச்சை எடுத்து, வர பணத்துல துன்னுட்டு, நைட்டுல ப்ளாட்பாரத்துல சுருண்டுப் படுத்துக்கற கூட்டத்துல ஒருத்தி. இவன் வயித்துல வந்தப்ப அவளுக்கு நாப்பது வயசு இருக்கும்மா! பிரியாணி வாங்கிக் குடுத்து கூட்டிட்டுப் போவானுங்க! சில சமயம் ஒன்னும் குடுக்காம தரதரன்னு இழுத்துட்டுப் போவானுங்க! ஏன் போலிசுங்க கூட இவளுங்க மாதிரி ஆளுங்கள வுட்டு வைக்கறது இல்ல! இவன் அம்மாவுக்கே, யாருக்கு இவன் பொறந்தான்னு தெரியுமோ என்னமோ!” என பெருமூச்சு ஒன்றை விட்டார் கோபால்.

இவளுக்கு திக்கென இருந்தது. இவ்வளவு நாள் கோபால்தான் தன் கணவனின் அப்பா என எண்ணி இருந்தவளின் நினைப்பு பொய்த்துப் போயிருந்தது.

“நான் பரோட்டா மாஸ்டரா இருந்தக் கடைக்கு அடிக்கடி வரும் இவன் அம்மா! வெளியெ ஓரமா நின்னு, பரோட்டா வாங்கித் துன்னுட்டுப் போவும். எல்லாரையும் போல நைனான்னு தான் கூப்புடும்! கொஞ்ச மாசத்துல வயித்த தள்ளிட்டு நிக்கவும், என்னத்தான்னு நான் கேட்டதுக்கு, ‘வயித்துல நின்னுடுச்சு நைனா! மருத்துவச்சிக்கிட்ட மருந்து வாங்கிப் போட்டும் பிடிவாதமா ஒக்காந்த்துருக்கு உள்ள! அபார்சனு பண்ண துட்டுக்கு எங்க போவேன்! சனியன், பொறந்து தொலைக்கட்டும். அத காட்டிப் பிச்சை எடுத்துட்டுப் போறேன்’னா! நாட்டுல எத்தினியோ பேரு கோயில் கொளமெல்லாம் சுத்தியும் புள்ள இல்லாம கிடக்க, கலைச்சிப்புட மருந்துப் போட்டும், கலையாம நின்ன இந்த சங்கருலாம் தெய்வக் கொழந்தைம்மா! மவராசி எப்படியே பெத்தெடுத்தா இவன. சின்னப் புள்ளயில எலும்பும் தோலுமாத்தான் இருப்பான் ஒன் புருஷன். பாலு குடுத்து புஷ்டியா வச்சிருந்தா எவன் காசு போடுவான்! அடிக்கடி கடைக்கிட்ட வந்து நைனா பசிக்குதுன்னு நிப்பான். என் மொதலாளி ஒரு பரதேசி பண்ணாடைம்மா! தின்ன கையில ஈ கூட ஓட்ட மாட்டான். அந்தாளுக்குத் தெரியாம, திருட்டுத்தனமா பரோட்டா குடுப்பேன். வெறும் பரோட்டாவ வரட்டு வரட்டுன்னு கடிச்சு துன்னுட்டு ஓடுவான். அஞ்சு வயசு ஆனதும், அவன் அம்மா இவன தனியா பிச்சை எடுக்க அனுப்பிட்டு, அவ வேற எடத்துக்கு பிச்சை எடுக்கப் போயிடுவா! அந்த வயசுலயே ஐயா, அம்மான்னு ரோடு ரோடா மழை வெயில்னு பாக்காம பிச்சை எடுத்தவன்மா நம்ம சங்கரு! சிலரு பாவப்பட்டு காசு போட்டாலும், பலரு அடிச்சிடுவாங்க! எட்டி உதச்சிடுவாங்க! அடிய வாங்கிட்டு மறுபடி ஐயா, அம்மான்னு போய் நிப்பான். வெறும் கையோட வந்து நின்னா, அவன் அம்மா குழந்தைன்னு கூட பார்க்காம அடி பின்னிடும்.”

ஐந்து வயது ஒல்லி உருவம் ஒன்று பரட்டைத் தலையுடன், கிழிந்த உடையுடன் பிச்சை எடுக்கும் தோற்றம் கண் முன்னே வர, கண்ணீர் மடைத் திறந்தது இவளுக்கு.

“என்னமோ இவன் மேல ஒரு பாசம் எனக்கு! பொறந்ததுல இருந்து இவன் வளர்ச்சியப் பார்க்கறதுனால இருக்கலாம்! இல்ல நைனான்னு சிரிச்ச மொகமா வந்து நிக்கறதுனால இருக்கலாம். என்னமோ ஒரு பந்தம் எங்களுக்குள்ள! நானுமே காதல் தோல்வியில ஒண்டிக்கட்டையா கிடந்தேன். இவன் நைனான்னு கூப்புடறது, நமக்கும் ஒரு ஒறவு இருக்குன்னு அப்படி ஒரு சந்தோஷத்தக் குடுத்துச்சு எனக்கு”

“அப்புறம் எப்போ நிரந்தரமா உங்க கிட்டயே வந்து சேர்ந்தாருப்பா?”

“ஒரு தடவை எவனோ வந்து எப்பொழுதும் போல இவன் அம்மாவ கூட்டிட்டுப் போயிருக்கான்! இந்த மாதிரி போனாக்கா, மிஞ்சி மிஞ்சி ரெண்டு நாள்ல வந்துடுவா! ஆனா இந்த தபா ஆள் ஒரு வாரம் ஆகியும் வரல! புள்ள தனியாத்தான் இருந்துருக்கான். எங்க போய் அம்மாவ தேடனும்னு தெரியல இவனுக்கு. நைட்டு நான் கடை அடைக்கறப்போ, அழுதுட்டே நைனானு வந்து நின்னான். நானும் என்னால முடிஞ்ச அளவுக்குத் தேடிப் பார்த்தேன். அவள கண்டுப்புடிக்க முடியல! கூட்டிட்டுப் போய் கொன்னுட்டானுங்களா இல்ல வந்தவன் கூடவே போயிட்டாளான்னு ஒரு எழவும் தெரில! அன்னில இருந்து என் கூடவே வச்சிக்கிட்டேன் இவன. டேய், இவனே, சனியனேன்னு கூப்புட்டு இருந்த பையனுக்கு நாந்தான் அவன் ஏழு வயசுல ஜெய்சங்கருன்னு பேரு வச்சேன், சோறு வச்சேன். இன்னி வரைக்கும் என் காலயே நைனா, நைனான்னு சுத்திட்டு கெடக்கான்.”

தான் அம்மாவின் வீட்டில் இடிசோறு வாங்கி வளர்ந்திருக்க, தன் கணவன் கண்டவர்களிடம் இடி போல் அடி வாங்கி வளர்ந்திருக்கிறான் எனும் விஷயமே நெஞ்சை அழுத்தியது இவளுக்கு.

“என் கூடவே அந்த வயசுல கடைக்கு வேலைக்கு வந்தான். மேசைத் தொடைக்கறது, தண்ணிப் புடிச்சு வைக்கறது, பரோட்டா சர்வ் பண்ணறதுன்னு வேலையை ஆரம்பிச்சான். என் மொதலாளி, சால்னாவ கொஞ்சமா சிந்திட்டாக் கூட சொத்தே போய்ட்ட மாதிரி படீர்னு கொழந்தை முதுகுல அடிப்பான். வலிச்சாலும், கண்ணுல தண்ணி விடமாட்டான். நீ ஸ்கோலுக்கு போடா, நைனா பார்த்துக்கறேனு சொன்னாலும் காசு வேணும் நைனான்னு கூடவே வருவான். அப்போதில இருந்தே காசுன்னா கண்ணாயிரம்தான். அவன் வயசு பசங்க வெளாடி திரிஞ்சப்ப இவன் காசு சேர்க்கறதுல குறியா இருந்தான். ஏன்டா இப்படின்னு கேட்டா, காசுதான் கடவுள் நைனாம்பான். பத்து பைசா சம்பாதிக்க எத்தனை அடி எத்தனை மிதி வாங்கிருக்கேன்! அப்படி சம்பாதிச்சத சும்மா செலவு பண்ணறது நாயமா சொல்லு! சேர்த்து வைக்கனும் நைனா! இந்தப் ப்ளாட்பாரத்துல பொறந்தவன், சொந்தமா வூடு கட்டனும். ராஜா மாதிரி என் ஊட்டுல படுத்துத் தூங்கனும். அப்போத்தான் இந்தக் கட்டை வேகும் நைனா, அப்படிம்பான். அப்படியே கணக்குப் பார்த்தே வளந்துட்டான் தாயீ! அன்பா பேசிப் புரிய வைம்மா எதுவா இருந்தாலும் கரீக்டா கேட்டுக்குவான்.”

“இனிமே அன்பா பாத்துக்குவேன்பா என் புருஷன”

அவள் தலையைத் தடவிக் கொடுத்த கோபால்,

“உன் மேல உசுரையே வச்சிருக்கான் கண்ணு! அன்ப காட்டத் தெரியாத காட்டுப் பையன். அனுசரிச்சுப் போன்னு சொல்லல! அரவணைச்சுப் போ, லைப்பு அதிரசம் கணக்கா இனிக்கும்னு சொல்லறேன். ரெண்டு பேரும் ரெண்டு சைடா வெடைச்சுக்கிட்டு நின்னா வாழ்க்கை வேப்பிலை மாதிரி கசந்துதான் போகும்மா! எனக்கு நீங்க ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு மாதிரி! ஒரு கண்ணுல தூசு வுழுந்தாலும் ரெண்டு கண்ணும் கலங்கிடும் தாயீ. ஒனக்கோ அவனுக்கோ ஒன்னுன்னா என் நெஞ்சு வெடிச்சிடும்மா” என கண் கலங்கினார் கோபால்.

அவர் கண்ணைத் துடைத்து விட்ட பவளமல்லி,

“எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்பா! நீங்க எப்போதும் போல ஜாலியா இருங்க!” என தேற்றினாள்.

கோபால் சொன்னக் கதையை அசைப் போட்டபடியே, கணவனை அணைத்தப்படி தூங்கிப் போனாள் மல்லி.

மறுநாள் எப்பொழுதும் போல விடிய, எல்லோருக்கும் முன் எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தான் ஜெய்சங்கர். தள்ளாடியபடி எழுந்து வந்த மல்லியைத் தாங்க வந்தவனைத் தடுத்து நிறுத்தினாள் இவள்.

“மல்லி!” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு பின்னாலேயே வந்தவனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் குளியலறையில் நுழைந்தாள் மல்லி.

குளித்து விட்டு வெளியே வந்தவள் முன், சூடான தேநீரை நீட்டினான் ஜெய்சங்கர். அதை வாங்கிக் கொள்ளாமல், முகத்துக்கு பவுடர் பூசி பொட்டிட்டாள் இவள்.

“மல்லி” என மீண்டும் குட்டிப் போட்ட பூனை போல அவள் பின்னாலேயே போனான் இவன்.

சுவற்றில் ஒட்டி இருந்த கடவுள் படம் முன் வந்து நின்றவள், மெல்லிய குரலில் தேவாரம் படித்து நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டாள்.

“மல்லி” என மீண்டும் தேநீர் கோப்பையைத் தூக்கிக் கொண்டு அவள் முன் வந்து நின்றான் சங்கர்.

அவனைக் கண்டுக் கொள்ளாமல், இவளே தனக்கு தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து பருக ஆரம்பித்தாள்.

“மல்லி!” என அவள் முன்னே வந்து அமர்ந்தான் இவன்.

காலையிலேயே எழுந்து மகன் போட்டுக் கொடுத்த தேநீரை குடித்து விட்டு வெளியே போயிருந்தார் கோபால். இல்லையென்றால் இவர்கள் இருவரின் அக்கப்போரை பார்த்து நொந்துப் போயிருப்பார் மனிதர்.

“மல்லி, பேசுடி!”

கண்களை மூடி ரசித்துப் பருக ஆரம்பித்தாள் இவள்.

“தேவா!”

தேநீர் குவளையைக் கீழே வைத்து விட்டு, விரல்களால் தரையில் கோலம் போட்டவள் இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“ஏ என்னடி! மொத புடிச்சு ஒருத்தன் மல்லி, மல்லின்னு உசுர உட்டுட்டு இருக்கான், இன்னா மேட்டருன்னு கொஞ்சமாச்சும் கண்டுக்கறியா?” என குரலை உயர்த்தினான்.

இவள் நிமிர்ந்து அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தாள். கப்பென வாய் மூடிக் கொண்டது இவனுக்கு.

“நேத்து நான் பண்ண ரவுசுக்கு ரெண்டு அடி வேணும்னா அடிச்சிருடி! இப்படி பேசாம இருக்காதே! கஸ்டமா இருக்கு” என அவள் கரங்களை எடுத்து தன் முகத்தின் மேல் வைத்தான்.

பட்பட்டென முகத்திலும் தோளிலும் அடி விழ, அமைதியாக வாங்கிக் கொண்டான் இவன்.

“கோவம் போச்சா? இப்பவாச்சும் பேசுவியா?”

“எதுக்குப் பேசனும்? ஒன்னும் தேவையில்ல! நான் பேசி மட்டும் என்ன ஆகப் போகுது! நான் பணப்பேய்னு நீங்கதான் முடிவு பண்ணி வச்சிருக்கீங்கல்ல! என் தரப்பு நியாயத்த சொல்ல எனக்கு சான்ஸ் குடுத்தீங்களா? என்ன ஏதுன்னு விசாரிக்காம, குதி குதின்னு குதிக்கறீங்க! ஆம்பள திமிருல போய் சரக்கடிச்சிட்டு வரீங்க! எனக்கும்தான் உங்க மேல கோபம்! நானும் போய் சரக்கடிச்சுட்டு வரவா? சோகம் வந்தா சரக்கடிக்கறது, கோபம் வந்தா சரக்கடிக்கறது, சந்தோஷம் வந்தா சரக்கடிக்கறது இப்படின்னு சரக்கடிக்க ஒரு காரணத்த தேடிக்கறீங்க! எங்களுக்கும்தான் ஆயிரத்தெட்டு பெரச்சனை! நாங்களும் போய் சரக்கடிக்கட்டுமா? பொழப்பு நாறிடும்” என படபடத்தாள் மல்லி.

“இதான்டி மொத தடவை! இந்த குஜாலுக்கெல்லாம் காசு செலவு பண்ணதில்லைடி இது வரைக்கும்! இனிமே பண்ணவும் மாட்டேன்! மன்னிச்சுக்கடி மல்லி”

மெல்லிய குரலில் அமைதியாக எதற்காக குழந்தை விஷயத்தை பிறகு சொல்லலாமென இருந்தாள் என விளக்கினாள் மல்லி. அவள் விளக்கத்தைக் கேட்டவன், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

“எதுவுமே அனுபவிக்காம வளந்த எனக்கு, நெஞ்சு முழுக்க இது வாங்கனும் அது வாங்கனும்னு அவ்ளோ ஆசை. உங்கள இஸ்டப்பட்டுத்தான் கட்டிக்கிட்டேன் மாமா. உங்க கொள்கைக்கு ஏத்த மாதிரிதான் நடக்கப் பழகிட்டு வரேன். ஆனாலும் எனக்குன்னு சில செலவுங்க இருக்கு. முதன் முதலா காசு கேட்டப்பவே நீங்க போட்ட சத்தத்துல, இனிமே புருஷனா இருந்தாலும் தன்மானத்த விட்டுக் காசு கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். அதான் உழைக்க ரெடியானேன். என் கையில சேமிப்புன்னு நாலு காசு இருந்தாத்தான் தன்னம்பிக்கையா இருக்கும் மாமா வாழ்க்கையை எதிர்கொள்ள! அதுக்குப் போய் என்னைப் பண பேய்ன்னு சொல்லுவியா? நமக்குக் கிடைக்காததெல்லாம் நம்ம புள்ளைக்குக் கிடைக்கனும்னு ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும் தோணும் மாமா. நாளைக்கு நம்ம புள்ள கிட்டயும் இப்படி நீ வள்ளுன்னு விழுந்து வச்சா, அது மனசு உடஞ்சிப் போயிடாது? நம்ம புள்ளைக்காக, அது கேக்கற நியாயமான ஆசைகளை நிறைவேத்தி வைக்க உழைக்கனும்னு நெனைச்சேன். என்னைப் போய் பணப்பேய்னு சொல்லிட்டியே மாமா!” என அழுதவளை அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

“தப்புத்தான் தேவா! தப்புத்தான்!”

“என் மேலயும் தப்பிருக்கு மாமா! மனசு விட்டு உன் கிட்ட பேசிருக்கனும்! இனிமே எதா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி தெளிஞ்சுக்கலாம் மாமா! ஒருத்தருக்கு ஒருத்தர் வார்த்தையை விட்டுக் காயப்படுத்திக்க வேணா!”

“உன் மனசக் கஸ்டப்படுத்தக் கூடாதுன்னு ஒரு மேட்டர நான் மறைச்சு வச்சேன். ஆனா அந்த விஷயமே மனச அழுத்த உன்னைக் குத்திக் கிழிச்சிருக்கேன்டி. மன்னிச்சிடு மல்லி”

“என்ன விஷயம் மாமா? சொல்லுங்க! இனிமே எந்த விஷயத்தையும் என் கிட்ட இருந்து மறைக்காதீங்க”

கல்யாணத்துக்காக போலிசுக்கு பணம் கொடுத்ததை சொன்னான் ஜெய்சங்கர்.

“ஒவ்வொரு எக்ஸ்ட்ரா ரூபாவையும் சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயம்டி! இன்சுக்கு குடுக்கனுமே! அந்த நேரத்துல நீ வேற காசுங்கவும் பட்டுன்னு கோபம் வந்துடுச்சு!”

அவ்வளவு அழுத்ததிலும் தனக்காக உடை வாங்கப் பணம் கொடுத்ததும், அதன் பிறகு கூட வேலை செய்யாமல் இருக்க இவள் கேட்ட இரண்டாயிரம் ரூபாயை கொடுக்க ஒத்துக் கொண்டதும், இவளது வடை வியாபாரத்துக்கு பாத்திர பண்டங்கள் வாங்கித் தந்ததும் கண் முன் விரிந்தது மல்லிக்கு. பாய்ந்து கணவனைக் கட்டிக் கொண்டாள்.

“எல்லாரும் வரதட்சணை வாங்கிட்டு பொண்ண கட்டிப்பாங்க! நீ எனக்காக அந்த இன்சுக்கு தட்சணைக் குடுத்து என்னைக் கட்டிருக்க!” என கண்ணீர் உகுக்க,

“இதுக்குத்தான் சொல்லக் கூடாதுன்னு நெனைச்சேன்! அழாதடி! உன்னை சீக்கிரம் என் பொண்டாட்டியாக்கிக்கனும்னு தோணுச்சே தவிர, பண கணக்கெல்லாம் அப்போ மைண்டுல வரவேயில்லடி! நீன்னு வந்துட்டா என் சிக்கனமெல்லாம் சின்னாபின்னமாகிப் போயிடுதுடி! அம்புட்டு லவ்வு மாமனுக்கு உன் மேல! அந்தாளுக்கு பணத்தக் குடுத்து முடிச்சுட்டேன்! இனிமே கொஞ்சம் தாராளமா துட்டுப் பொழங்கும் மல்லி” என்றான் சங்கர்.

“அப்போ பெரிய டீவி ஒன்னு வாங்கலாமா?” என வம்பிழுத்தாள் மல்லி.

“மண்டய பொளந்துடுவேன் பாத்துக்கோ! இனிமே என் பொண்டாட்டி டெலிவரிக்கு காசு சேக்கனும்! ப்ரைவட்டுல வச்சிப் பார்க்கனும்” என்றபடியே அவள் காயம் பட்ட கைக்கு மருந்திட்டவனை காதலுடன் பார்த்தாள் மல்லி.

கை காயம் ஆறும் வரை மல்லி வீட்டில் இருக்க, அப்பாவும் மகனும் மட்டும் வியாபாரத்துக்கு போய் வந்தார்கள்.

அன்று வேலையை முடித்து விட்டு ஓய்வாய் அமர்ந்திருந்தவளைத் தேடி மேல் வீட்டு பெண் வந்திருந்தாள்.

“யம்மா மல்லி! மாவு இருக்கா? கொஞ்சமா இந்தப் பாத்துரத்துல ஊத்திக் குடேன்! தோசை ஊத்தலாம்னா என் மவ சுத்தமா காலி பண்ணி வச்சிருக்கா மாவை”

அவர் கொண்டு வந்த பாத்திரத்தையும், அவரையும் யோசனையாகப் பார்த்தாள் மல்லி.

 

(காதல் மலரும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. நான் திரும்பி வரும் வரை பொறுமையா இருந்ததுக்கும் நன்றி. என்னைத் தேடிய செல்வங்களே, நன்றி நன்றி!!! அடுத்த எபில சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்!)