Kanne Kadhal Penne–EPI 12

239948099_925484634705538_288795760143811764_n-982925f6

அத்தியாயம் 12

விதவிதமான சாண்ட்வீச் சாப்பிட்டிருக்கும் நீங்கள், முறுக்கு சாண்ட்வீச் சாப்பிட்டிருக்கிறீர்களா? சென்னையின் கையேந்தி பவன்களில் இப்பொழுது இதுவும் ஒரு முக்கிய உணவாக விற்கப்படுகிறது. சாண்ட்வீச்சில் மேலும் கீழும் ரொட்டி வைத்தால், முறுக்கு சாண்ட்வீச்சில் குட்டி முறுக்கை மேலும் கீழும் வைத்து, அதன் நடுவே சட்னி, வெள்ளரி, வெங்காயம் வைத்து, மேலே சீஸ் தூவி கொடுக்கிறார்கள்.

 

“மல்லி, மல்லி!” எனும் குரலில் திரும்பிப் பார்த்தாள் பவளமல்லி.

“தோடா! உன்ன இல்லடி என் பொண்டாட்டி! மல்லிப்பூ விக்கிது அந்தம்மா” என புன்னகையுடன் சொன்னான் ஜெய்சங்கர்.

அன்று பரோட்டா கடைக்கு விடுமுறை தினமாதலால், காலையில் சரக்கெடுக்கும் வேலையெல்லாம் முடித்து விட்டு அந்தி சாயும் வேளையில் தன் ஆசை மனைவியை வடபழனி கோயிலுக்கு அழைத்து வந்திருந்தான் ஜெய்சங்கர். பேருந்தில் அலைக்கழிக்காமல், ஆட்டோவிலேயே கூட்டி வந்திருந்தான் தன் துணையை.

பின்னால் இருந்து பார்த்தால் கர்ப்பிணி பெண் போல தெரியாவிட்டாலும், முன்னேயிருந்து பார்த்தால் ஐந்து மாத வயிறு குட்டி தொப்பைப் போல தெரியும் மல்லிக்கு.

“உள்ளாற பாப்பா இர்க்கா இல்லையாடி? வயித்தயே காணோம்!” என புலம்புபவன், தாங்கள் பார்க்கும் தனியார் மருத்துவமனை டாக்டரையும் கேள்வியால் குடைவான்.

இவர்கள் மாதாந்திர சோதனைக்கு வந்தாலே நொந்துப் போவார் அந்த டாக்டர்.

“கடவுளே ஏன்பா இந்த மாதிரி கழிசடைங்க கிட்டலாம் என்னைக் கோர்த்து விடற” என சத்தமில்லாமல் முனங்கிக் கொண்டே சோதனைகளை செய்வார்.

ஆட்கள் அழுக்காய் இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் நோட்டில் இருக்கும் காந்தி அம்சமாய் இருப்பதுதானே முக்கியம் அவர்களுக்கு! படிப்பறிவில்லாத பரோட்டா நுணுக்கி நுணுக்கி கேட்கும்,

“இன்னா டாக்டரே படத்துலலாம் புள்ள வந்தா வாந்தி எடுப்பாங்க! என் பொண்டாட்டி எடுக்கக் காணோமே?”,

“டாக்டரம்மா, நான் பார்த்த கர்ப்பிணி பொண்ணுங்கலாம் முழுசா உப்பிப் போய் கிடப்பாங்க! இவளுக்கு வயிறு மட்டும் தள்ளிட்டு இருக்கு, உடம்பு ஒட்டிப் போய் கிடக்கே?”,

“அந்தாண்ட போடின்னாலும் கேக்காம, ஒட்டி ஒட்டிப் படுத்து உசுப்பேத்தறா டாக்டர்! இதனால பாப்பாக்கு ஒன்னும் ஆயிடாதுல?” என கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கொடுக்கும் காசுக்கு மேலேயே டாக்டரை கேள்வியாய் கேட்டு டார்ச்சர் செய்து விடுவான் ஜெய்சங்கர்.

டாக்டர் ஸ்கேன் செய்து குழந்தையைக் காட்டும் நாட்களில் கணவனும் மனைவியும் கண்ணில் நீருடன்தான் திரையைப் பார்த்திருப்பார்கள். அனாதையாய் வளர்ந்தவர்களுக்கு தங்களை அம்மாவெனவும் நைனாவெனவும் அழைக்க ஒரு சொந்தத்தைக் கொடுத்திருந்த கடவுளுக்கு இருவரும் நன்றி சொல்லாத நாளில்லை.

அந்தப் பூக்கார பெண்மணியின் அருகே போய், இரண்டு முழம் மல்லிகை வாங்கிக் கொண்ட பவளமல்லி தனது குட்டி பர்சை திறந்துப் பணம் எடுப்பதற்குள் இவன் பணத்தை நீட்டி இருந்தான்.

“என் மல்லிக்கு மல்லி வாங்கிக் குடுக்க சொல்ல என் சொத்து ஒன்னும் அழிஞ்சுடாதுடி! உன் துட்ட உள்ளாறயே வை”

அந்தப் பெண் கொடுத்த மல்லியை வாங்கி அழகாய் தன் மல்லியின் தலையில் சொறுகி விட்டவன், அப்படியும் இப்படியும் அவள் தலையைத் திருப்பி சரியாக வைத்திருக்கிறோமா என பார்த்துக் கொண்டான்.

புன்னகையுடன்,

“சாமி கும்புட போலாம் மாமா” என மெல்ல நடக்க ஆரம்பித்தாள் மாது.

“அழகுடி நீ!” என முணுமுணுத்தப்படியே அவளோடு உள்ளே நுழைந்தான் சங்கர்.

கோமணம் கட்டிய ஆண்டி இவர்களை அன்புடன் உள்ளே வரவேற்றான்.

“வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி” என பாடல் ஒலிக்க, அதோடு சத்தம் போட்டு பாடியபடியே வந்தான் ஜெய்சங்கர்.

“பேசாம வாங்க மாமா! எல்லாம் ஒரு மாதிரி பார்க்கறாங்க”

“இதென்னாடி பேஜாரா இருக்கு! கோயிலுக்கு வந்தா இந்தப் பாட்டுத்தான்டி பாடனும்! பின்ன என்ன வாடி வாடி வாடி கைப்படாத சீடினா பாடுவாங்க!” என்றவனை முறைத்தவளுக்கு களுக்கென சிரிப்பு வந்துவிட்டது.

புன்னகை முகமாகவே இருவரும் கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு, முருகனைத் தரிசித்தனர். தரிசனம் முடிந்து, சற்று நேரம் அமர்ந்தார்கள் இருவரும்.

“பாடி கண்டிஷனு எப்டி இருக்கு தேவா? வூட்டுக்குப் போலாமா இல்ல இன்னும் சுத்தலாமா?” என கேட்டான் சங்கர்.

“யோவ்! எத்தனை தடவையா இதயே கேப்ப! நான் புள்ளத்தானே சுமந்திருக்கேன்! என்னமோ வயித்துல வெடிகுண்ட வச்சிருக்கற மாதிரி மொல்ல நட, குலுங்காதே, அலுங்காதேன்னு எப்போ பாரு ஒரே ரவுசு!”

“சரி சரி கோச்சுக்காதே! வா கெளம்பலாம்” என மனைவியை அழைத்துக் கொண்டு கோயில் வெளியே வந்தான் ஜெய்சங்கர்.

போன முறை நடந்த சண்டை, சமாதானத்துக்குப் பிறகு இருவரிடையேயும் பல மாற்றங்கள் வந்திருந்தன. கை குணமானதும் வடை போடுவதை இவள் மீண்டும் தொடர, கோபித்துக் கொள்ளாமல் அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொடுத்தான் சங்கர். அவள் சமைக்கும் இடம் யாரும் போகாத மாதிரி அடைப்பு வைத்தவன், தன் குழந்தையை சுமக்கும் மனைவியை கவனமாகப் பார்த்துக் கொண்டான். கோபாலும் மகளை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்.

வடை வியாபாரத்தில் வந்தப் பணத்தையும், சங்கரிடம் கடனாக கொஞ்சம் பணத்தையும் வாங்கி, இரண்டு மாதங்களில் இட்லி தோசை மாவு அரைக்கும் பெரிய சைஸ் கிரைண்டரை வாங்கிப் போட்டாள் மல்லி. அதில் மாவு அரைத்து, அதை பேக்கேட் போட்டு அவர்கள் ஹவுசிங் போர்ட்டில் வசிக்கும் பெண்களுக்கு விற்றாள். அவர்களும் சித்தாள், துப்புரவு பணி, துணி கடைகளில் வேலை என கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்தானே. பணத்துக்காக உழைத்து விட்டு, வீட்டில் பந்த பாசத்துக்காகவும் ஓடாய் உழைக்கும் அவர்களுக்கு இவள் விற்கும் மாவு மிகவுமே உதவியாக இருந்தது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்த மாவு பாக்கேட் நாள் ஒன்றுக்கு ஐம்பது அறுபது கூட விற்றுப் போகும். இவளுக்கு உதவியாக காந்திமதியும் இருக்க, கமிஷன் போல அவருக்கும் பணம் கொடுத்து விடுவாள். பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு, வீட்டு வேலை மதிய தூக்கம் என இருந்த காந்திமதிக்கும் இந்த வேலையில் வந்த வருமானம் மிகவும் உதவியாக இருந்தது.

“பார்டா பாரு! அம்பானியா மாறிக்கினு வர என் மக ஆல் இன் ஆல் அழகு ராணிய பாருடா பாரு” என பெருமைப் பீற்றிக் கொள்வார் கோபால்.

அவளது திட்டமிடல்களிலும், செயலிலும் ஆரம்பத்தில் அதிர்ந்தாலும், முடியாது என சொன்னால் எங்கே மறுபடியும் முட்டிக் கொள்ளுமோ எனும் பீதியில் தலையாட்டி இருந்தான் சங்கர். அதோடு கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமே எனும் உந்துதலிலும் வெளியே பணம் புரட்டிக் கொடுத்து, கிரைண்டர் வாங்குவதிலும் அலசி ஆராய்ந்து உதவினான் இவன். காந்தி கணக்குத்தான் என இவன் நினைக்க, பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பிக் கொடுத்து வாயடைக்க வைத்திருந்தாள் மல்லி. மனைவி தொட்டதெல்லாம் துலங்குவதில் இவனுக்குமே ஏகப்பட்ட சந்தோஷம்.   

அவளது வருமானத்தை என்ன செய்கிறாள் என இவன் கேட்டுக் கொண்டதில்லை. கடுமையாக உழைப்பவள், பணத்தின் அருமை தெரிந்து பத்திரமாக கையாள்வாள் எனும் நம்பிக்கை வந்திருந்தது. இன்னுமே இவன் சிக்கன சிகாமணியாக இருந்தாலும், அவளுக்காக தன் கொள்கையில் இருந்து கொஞ்சமாக இறங்கி வந்தான். பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல, தன் பூமகளுக்காக நேரம் ஒதுக்க ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.

அதிகம் செலவு வராத இடங்களான கோயில்களுக்கு அழைத்துப் போனான். குட்டி ஹோட்டல்களில் சாப்பிட அழைத்துப் போனான். ஏசியை அனுபவிப்பதற்காக மாலுக்குக் கூட போனார்கள். அங்கே இவள் ஆசையாய் ஐஸ்க்ரீம் பார்லரைப் பார்க்க, விலையைப் பார்த்தவனுக்கு நெஞ்சு வலியே வந்தது.

அவன் முகத்தைப் பார்த்தவள்,

“நானே வாங்கிக்கறேன் மாமா! காந்திக்கா சொன்னாங்க, இந்த நேரத்துல ஆசைப்பட்டத சாப்பிடலன்னா, நம்ம புள்ள பொறந்ததும் காதுல சீல் வடியுமாம்! பாவம் இல்ல நம்ம கொழந்தை! இதனாலலாம் அது கஸ்டப்படலாமா?” என சொல்லியபடியே தனது குட்டி பர்சை எடுத்தவளை, தடுத்து விட்டுத் தானே வாங்கிக் கொடுத்தான் இவன்.

அந்தக் குட்டி பர்சில் பணம் வைத்திருக்கிறாளா, அல்லது இவனை உசுப்பேற்றி செலவு செய்ய வைக்க காலியான பர்சை வைத்திருக்கிறாளா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

“உனக்கு மாமா?”

“எனக்கு இதெல்லாம் துன்னா ஜலிப்பு புடிக்கும்! நீ சாப்புடு”

“ஆ காட்டு மாமா!” என சொல்லி அவனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டுத்தான் இவள் சாப்பிட்டாள்.

கொள்ளைப் பணம் பரிதாபமாக பனிக்கூழாய் போன சம்பவத்துக்குப் பிறகு மாலுக்கு இவளை அழைத்துப் போக பைத்தியமா சங்கருக்கு!

இவன் இப்படி மாறி இருக்க, மனைவியோ அவனை கோபால் சொன்னது போலவே அரவணைத்துக் கொண்டாள். ஆரம்பத்தில் உடலளவு ஒட்டி இருந்தவர்கள், இப்பொழுது உள்ளத்தளவிலும் ஒட்டி உறவாட ஆரம்பித்திருந்தனர். அவன் கோபத்தில் எகிறினால், இவள் அடங்கிப் போனாள். இவள் ஆத்திரத்தில் கத்தினால், அவன் அமைதியாகிப் போனான். கோபதாபங்கள் மறைந்ததும் இருவரும் பேசி தங்கள் உறவை சீர்படுத்திக் கொண்டனர். கட்டிப் பிடித்துக் காமம் செய்வது மட்டும்தான் காதலா! காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேனே உன்னைத் தாயாக என அவள் காலை வேளைகளில் துவண்டுப் போகும் போது தாயாய் தாங்கிப் பிடித்தான் ஜெய்சங்கர்.

இவளும் தன்னுள்ளே அணைப் போட்டு வைத்திருந்த அன்பையெல்லாம் கணவன் மீது வாரி இறைத்தாள். உணவை அள்ளிக் கொடுத்தாள், அவன் உடையில் கவனம் செலுத்தினாள். உணவு தொழிலில் இருக்கும் போது சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என அவன் தாடியை மழிக்க வைத்தாள். வடைக்காரியாக மாறி இருந்தாலும் உள்ளுக்குள் இருந்த சுத்தக்காரி அவ்வப்பொழுது தலையை நீட்டத்தான் செய்வாள்.

“மாவு கொட்டிருச்சு, துடைங்க! கையை நல்லா கழுவுங்க! கரண்டிய சால்னாவுலயும், சட்னியிலும் மாத்தி மாத்திப் போடாதீங்க” என ஆட்டி வைப்பாள் சங்கரை.

“தோ நைனா! உன் மவ வாயை அடிச்சுப் பேக்கப் போறேன் பாரு! கம்முன்னு கிடக்க சொல்லு!” என கோபாலை இவன் அரட்டி வைப்பான்.

“அப்பா, நான் சொன்னத கேக்கலனா உங்க மவன எண்ணேய் சட்டில போட்டு வாட்டி எடுத்துடுவேன். சொல்லி வைங்க” என இவள் சத்தம் போடுவாள்.

“கோவாலு, உன்னை இப்படி வௌவாலு மாதிரி தொங்க விட்டு அடிக்குதுங்களே இதுங்க ரெண்டும்! நீ ரெம்பப் பாவம்யா” என தனக்குத் தானே சத்தமாய் புலம்பிக் கொள்வார் அந்த அப்பாவி மனிதர்.

“தோ பாரு நைனா! கோபாலுன்னு பேரு இருந்தாலும் கண்ணீர் வுட்டா தண்ணிதான் வருமே தவுர பாலு வராது”

“அடேய், நாலு அடி வேணும்னா அட்ச்சிருடா! இப்படி பழமொழி சொல்லிக் என்னை பேஜாராக்காதே!” என நொந்துப் போவார் கோபால்.

சற்று முன் கோயிலுக்கு அழைத்தப் போதும் இவர்களுக்கான தனிமையைக் கொடுப்பதற்காக ஓய்வெடுக்க வேண்டுமென வீட்டில் இருந்துக் கொண்டார் கோபால்.

“எங்க போறோம் மாமா?” என இவள் கேட்க,

“நீதானே சொன்ன ரயில்ல போனது இல்ல, ப்ளைட்டுல போனது இல்லன்னு! இன்னிக்குப் போலாம்”

“அய்!!!! நெஜமாவா மாமா?”

“நெசமாத்தான்டி” என கைப்பிடித்து சற்று நடக்க வைத்து வடபழனி மெட்ரோ ஸ்டேசனுக்கு அழைத்துப் போனான் ஜெய்சங்கர்.

இருவருக்கும் டிக்கேட் எடுத்தவன், மெட்ரோ ட்ரேனில் இடம் பிடித்து மனைவியை அமர்த்தி, தானும் அமர்ந்துக் கொண்டான். ரயிலில் அதுவும் குளு குளு ரயிலில் ஒரு பயணம், இனிமையாக ஆரம்பித்தது இருவருக்கும். அவன் கைப்பற்றியபடியே சந்தோசமாக வேடிக்கைப் பார்த்தப்படி வந்தாள் இவள்.

மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ரயில் போக உள்ளிருந்தே,

“தோ பாரு மல்லி, அதான் ஏர்போட்டு! தூரமா தெரியுது பாரு, அதான் ஏரோப்ளேனு! பாரேன், பாரேன் மேல ஒன்னு ஏறுது!” என இவன் சுட்டிக் காட்ட, குழந்தைக் குதூகலத்துடன் பார்த்திருந்தாள் இவள்.

“எப்போ மாமா நாம ப்ளேனு ஏறுவோம்?”

“போவோம்டி! கண்டிப்பா ஒரு நாளு ஏரோப்ளேன்னுல போவோம்!”

நமக்கு சர்வ சாதாரணமாய் இருக்கும் ரயில் பயணங்கள், விமான பயணங்கள் எல்லாம் இன்னும் இவர்கள் மாதிரி சில ஆட்களுக்கு சிம்ம சொப்பனம்தான்!

அங்கிருந்து திரும்பி ரயில் ஏறி லிட்டில் மவுண்ட் ஸ்டேஷனுக்குப் பயணப்பட்டார்கள் இருவரும்.

“தோ பாரு பரங்கிமலை” என காட்டினான் ஜெய்சங்கர்.

கடந்துப் போகும் காட்சிகள் அவ்வளவு அழகாய் இருக்க,

“பாப்பாக்குட்டி! நீ வெளிய வந்ததும் உன்னையும் இப்படி கூட்டிட்டு வரோம்டா கண்ணா!” என தன் வயிற்றை வருடியபடியே மெல்லிய குரலில் பிள்ளையிடம் பேசினாள் மல்லி.

அவள் வெளியே பார்த்திருக்க, முகம் மலர்ந்து விகசிக்க அழகாய் இருந்த தன் மனைவியையே வைத்தக் கண் வாங்காமல் இவன் பார்த்திருந்தான். ஒரு பெண்ணை மகிழ்விக்க வைரமும் வைடூரியமும் தேவையில்லை. அவளது சின்ன சின்ன ஆசைகளைப் பூர்த்தி செய்தாளே, அகமகிழ்ந்துப் போவாள் அவள் என நன்றாக உணர்ந்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி மெல்ல நடந்தார்கள் இருவரும்.

“ஹோட்டல்ல துன்னுட்டுப் போலாமா தேவா?”

“வேணா மாமா! வெளிய வர முன்ன சமைச்சிட்டுத் தானே வந்தேன். குழம்பு இருக்கும்! வீட்டுல போய் தோசை ஊத்திக்கலாம்! சும்மாவே ட்ரேயின் டிக்கட்டுக்கு காசு அள்ளி விட்டுருக்கீங்க! இதுக்கும் மேல செலவு வேணா” என சங்கரின் சங்கரியாக பேசிய மனைவியை ஆசைப் பொங்கப் பார்த்தான் இவன்.  

வீட்டுக்கு வந்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு, அக்கடாவென சுவற்றில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் இவள். அவள் முன்னே அமர்ந்தவன், மெல்ல அவள் கால்களை அமுத்திக் கொடுத்தான்.

“வெளியதான்டா பெத்த பேரு உனக்கு! இங்க பொண்டாட்டிக்கு காலு புடிச்சிட்டு இருக்க” என கிண்டலடித்தப்படியே வந்தார் காந்திமதி.

“சேச்சே காலுலாம் புடிக்கலக்கா! தூசியா இருக்குன்னு தட்டி வுட்டுட்டு இருந்தேன்” என தன் கெத்தை நிலை நாட்டியவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார் கோபால்.

“நம்பிட்டோம்டா!” என்றவர்,

“இந்தா புள்ள! இன்னிக்கு மாவு வித்தக் காசு! கணக்கும் எழுதி வச்சிருக்கேன் பாரு” என புத்தகத்தையும் நீட்டினார்.

பணத்தை வாங்கி அவரது கமிஷனை எண்ணி நீட்டினாள் இவள்.

“ஒன் புண்ணியத்துல, என் கையிலயும் நாலு துட்டு புலங்குது மல்லி” என்றவர்,

“புள்ள! சொந்தத்துல கண்ணாலம் ஒன்னு வருது! ஒன் சங்கிலிய குடேன்! போய்ட்டு வந்து திருப்பிக் குடுத்துடறேன்!” என கேட்டார்.

சிறுக சிறுக பணம் சேர்த்து நடுத்தரமாய் ஒரு சங்கிலி வாங்கி கழுத்தில் போட்டிருந்தாள் மல்லி. சங்கிலியையும், காந்திமதியையும் மாற்றி மாற்றி யோசனையாகப் பார்த்த மனைவியை கிலியுடன் பார்த்தான் இவன்.

‘என்னமோ ப்ளான போட்டுட்டா போலிருக்கே!’ என மனதினுள் புலம்பினான் ஜெய்சங்கர்.

 

(காதல் மலர்ந்தது..)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். இந்தக் கதை சரியா வருதா, இந்த மாதிரி ரெண்டு பேர உங்களுக்கு நாயகன் நாயகியா ஏத்துக்க முடியுதான்னு கொஞ்சம் குழப்பமா இருந்தது. ஆரம்பத்துல அவ்ளோ ரெஸ்பான்ஸ் வரல. சோ சீக்கிரம் முடிச்சிடலாம்னுதான் சம்பவங்கள்லாம் பட்டு பட்டுன்னு வந்துச்சு! இப்போ பார்த்தா பரோட்டா எங்கன்னு நெறைய பேர் கேக்கறீங்க! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு டியர்ஸ். இந்தக் கதைல இதுக்கும் மேல இழுக்க ஒன்னும் இல்ல. மேபீ இன்னும் ஒரு மூனு நாலு எபில எண்ட் கார்ட் போட்டுடுவேன் டியர்ஸ்! அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்!!!! மலேசியாவுல இருந்து இன்னிக்கு மேட்ரோ ரயில் சேவையை அலசி ஆராஞ்சு, எங்கருந்து எங்க போகுதுன்னு ஒரு ரிசேர்ச்சே செஞ்சேன். அத்தனை வீடியோ பார்த்தேன். ஹஹஹ.. நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கொடுத்த தோழி தங்கமலருக்கும் ஒரு நன்றி )