அத்தியாயம் 13
அத்தோ எனப்படும் பர்மா உணவு இப்பொழுது சென்னையின் இண்டு இடுக்கெல்லாம் விற்கப்படுகிறது. நூடுல்ஸ், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம் இன்னும் சில பொருட்கள் கொண்டு கடமுடாவென, காரசாரமாக, புளிப்பு எல்லாம் கலந்து சூப்போடு வேக வைத்த முட்டையும் சேர்ந்து வரும் உணவுதான் இந்த அத்தோ.
சரியாக நான்கு மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய மனைவியை புன்னகை முகமாக வரவேற்றான் ஜெய்சங்கர். ஆட்டோவை இவன் கட் பண்ணி அனுப்ப, மெல்ல அசைந்து திருவாரூர் தேர் போல நடந்து வந்தாள் பவளமல்லி.
“அப்பா, சாப்டீங்களா?” என கேட்டப்படியே தனது வேலையை ஆரம்பிக்க ஆயத்தங்கள் செய்தாள்.
“அதெல்லாம் ஆச்சிமா! நானும் ஒன் வூட்டுக்காரனும் வேபாரத்த கவனிச்சிக்கிட்டே ரெண்டு வா அள்ளிப் போட்டுக்கினோம்! நீ சாப்டியா கண்ணு?”
“சாப்பாடாம இருக்க முடியுமா உங்க பேரப்புள்ள கிட்ட? டயத்துக்கு உருண்டு பொரண்டு என் சாப்பாடு எங்கன்னு சிக்னல் குடுத்துடுமே!” என சொல்லியபடியே பெரிதாகி இருந்த தனது ஒன்பது மாதத்து வயிற்றைத் தடவிக் கொடுத்தாள்.
“சாப்பாட்டு மேட்டருல, என் சிங்கப்பையன் அப்டியே என்னை மாதிரி!” என பெருமையடித்துக் கொண்டே காலியான பிரியாணி அண்டாவைத் தூக்கிக் கீழே வைத்து விட்டு, பரோட்டா போட ஆவன செய்தான் ஜெய்சங்கர்.
“சிங்கப் பையனாத்தான் இருக்கனுமா? சிங்கப் பெண்ணா இருந்தா சங்கருக்கு ஆகாதோ?” என கேட்டப்படியே எண்ணெய் கொதித்திருக்கிறதா என அறிய சின்ன துளியாய் மாவை சட்டியில் இட்டாள் மல்லி.
“பையனோ பொண்ணோ, யாரா இர்ந்தாலும் ஒடம்பு சொகத்தோட பொறந்தா போதும்டி தேவா! கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன்”
“அல்லாம் நல்லா ஆரோக்கியாத்தான் பொறக்கும். அப்படியே என் மவள உரிச்சி வச்சு வேபார காந்தமா இருக்கும் பாரேன்!” என கோபால் சொல்ல,
“அப்படியே மவளுக்கு ஜிங் ஜாக் போட்ருவியே நைனா! நானும்தான் காந்தம். என்னை என்னிக்காச்சும் இப்டி பொகழ்ந்துருப்பியா?” என கேட்டப்படியே பரோட்டாவைக் கொத்த ஆரம்பித்தான்.
அவனது கொத்தும் சத்தத்துக்கு இவள் வயிற்றில் உள்ள பிள்ளை உருண்டு பிரண்டு நடனமாடியது.
“அடேய்! உங்க நைனா என்ன ரஹ்மான் மியூசிக்கா போடறாரு? இப்படி டான்ஸ் ஆடறியே!”
ஒரு கை மாவாய் இருக்க, இன்னொரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டாள் மல்லி.
“ஆரம்பிச்சிட்டானா ஆட!”
கொத்துவதை விட்டுவிட்டு அவள் அருகே வந்து குரல் கொடுத்தான் ஜெய்சங்கர்.
“பாப்பாக்குட்டி! கொஞ்ச நேரம் தூங்குங்கடா! உங்கம்மா ஜோலியா இருக்காங்கல்ல!” என வயிற்றைத் தடவிக் கொடுத்தான்.
தகப்பனின் குரலிலும், தடவலிலும் ஆட்டம் நின்றுப் போனது.
“எமகாதகன்! வவுத்துக்குள்ளயே அவங்க நைனா கொரலு நல்லா தெரியுது” என சிலாகித்துக் கொண்டார் கோபால்.
மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர் மூவரும். இப்பொழுது கோபால் கையேந்தி பவன், முற்பகல் பதினொன்றில் இருந்து இரவு பதினொன்று வரை இயங்குகிறது. தனது மனைவி வியாபார உலகின் புதிய மேக்னட்டாக உருமாறி வருவதைக் கண்டு இவனும் தனது வியாபாரத்தை விஸ்தரிப்பு செய்திருந்தான். வடை வியாபாரம், மாவு வியாபாரம் மட்டும் இல்லாமல் நகை சீட்டும் நடத்த ஆரம்பித்திருந்தாள் பவளமல்லி.
அவர்கள் ஹவுசிங் போர்ட்டில் வாழும் கீழ்த்தட்டு மக்களின் கனவான நகை நட்டு சேர்ப்பதை இவள் நனவாக்கினாள். இது சரிப்பட்டு வருமா என கொஞ்சம் முன் யோசனையாக, முதன் முதலாக சின்னதாக ஜிமிக்கி ஒன்றை அதுவும் நயன்தாரா ஜிமிக்கியை சீட்டுப் பிடிக்க ஆரம்பித்தாள். மிகவும் நம்பிக்கையான பத்து பேரை மட்டும் சீட்டுக்கு சேர்த்துக் கொண்டாள். இவள் சங்கிலி வாங்கிய கடை இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு உரிமையானது. அவர்களது பினாமியின் பேரில் அந்தக் கடை நடந்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்மணியிடம் தனது யோசனையை சொல்லி, இவர்கள் இருவருக்கும் எவ்வளவு கமிஷன் என பேசிக் கொண்டு ஆரம்பித்தனர் இந்த ஜிமிக்கி சீட்டை. இதே போல நிறைய வாடிக்கைக் கொண்டு வந்தால், இவள் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் கொடுக்கத் தேவையில்லை என அவர் சொல்லிவிட்டார். நகை சேர்ப்பதோடு, கமிஷனும் வர ஆரம்பித்தது இவளுக்கு. மெத்தப் படித்தவர்கள் ஷேர் மார்க்கேட், ஸ்டாக் என முதலீடு செய்தால், மற்றவர்களுக்கு தங்கம்தானே முதலீடு! இது வரை நான்கு பேருக்கு ஜிமிக்கி கையில் கிடைத்திருந்தது. இந்தக் கூட்டு முடிந்ததும் அடுத்தது சமந்தா வளையலுக்கு இப்பொழுதே இவளிடம் பெயர் பதிந்து வைத்திருந்தனர் அங்கு வசிக்கும் பெண்கள்.
இவனுக்கு மனைவியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையெல்லாம் இல்லை. அவளைப் போல தானும் இன்னும் முன்னேற வேண்டும் எனும் ஆவல் மட்டுமே. இரவின் தனிமையில் உறவின் முழுமையில், காந்தத்திடமே ஆலோசனைக் கேட்டான் கணவன்.
“தேவா!”
“ஹ்ம்ம் மாமா”
“தூங்கிட்டியாடி?”
“இல்ல மாமா! அப்படியே ஒரு சுகமான அசதி!”
“இருக்கும்டி இருக்கும்! டாக்டர் கிரீனு லைட்டு குடுத்ததும், காத்திருந்த மூனு மாசத்துக்கும் சேர்த்து என்னிய நல்லா வேலை வாங்கறடி!”
“யோவ், போயா! என்னமோ புடிக்காத வேலையைக் குடுத்துட்ட மாதிரி சலிச்சிக்கற! போ, போ தள்ளிப் படு” என இவள் முறுக்கிக் கொள்ள, இவனோ பின்னால் இருந்து தன்னவளை இறுக்கிக் கொண்டான்.
“என் ஆசை அக்கீஸ்ட்டு, பாச பிஸ்கோத்து, கும்மு குஜிலிக்கு இன்னா கோபம் வருதுடா டோய்!” என இவன் கொஞ்ச மெல்ல மலையிறங்கினாள் மல்லி.
“இன்னாவாம்? இப்போ எதுக்கு இந்தக் கொஞ்சல்?”
“இல்ல தேவா! நம்ம பரோட்டா வேபாராத்த கொஞ்சம் டெவலப்பு பண்ணலாம்னு யோஜனையா இருக்கு! அதான் படிச்சப் புள்ள உன் கிட்ட ஐடியா கேக்கலாம்னு!”
தன் உடல் நிலை அனுமதித்த அளவு மெல்ல எழுந்து அமர்ந்தவள், நைட்டியைத் தலை வழி மாட்டிக் கொண்டாள்.
“போய் லைட்ட போட்டுட்டு, இப்படி வந்து ஒக்காரு மாமா” என சொன்னவளின் குரலில் குதூகலம்.
இவனும் லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு, லைட்டை போட்டு விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“இத்தனை நாளா இத சொல்லனும்னு வாய் துருதுருக்கும்! ஆனா நீ என்ன நெனைச்சிப்பியோன்னு தயக்கமா இருக்கும் மாமா”
“என் கிட்ட இன்னாடி தயக்கம்!”
“எல்லாரையும் சொல்லல, ஆனா பொதுவாவே ஆம்பளைங்களுக்கு சம்பாத்திய விஷயத்துல ரொம்ப ஈகோ இருக்கும் மாமா. பொண்டாட்டி தன்ன விட கூட சம்பாரிச்சா ஏத்துக்கவே முடியாது! நீ அப்படி இல்லைனாலும், வெளிய பலரு அப்படித்தான் இருக்காங்க. அதோட சம்பாதிக்கறது எப்படின்னு பொண்டாட்டி அட்வைஸ் பண்ணாலும் ஏத்துக்க மாட்டாங்க. நம்ம காந்திக்கா புருஷன்லாம் அப்படித்தான். அக்கா, வேற வேலைப் பாருன்னு சொன்னதுக்கு அப்பிப்புட்டாராம் அப்பி. நீயும் நாயா பேயா உழைக்கற! உங்கிட்ட இதை செய்யு அதை செய்யுன்னு நானா வாயக் குடுக்க, திடுதிப்புன்னு உனக்கு கோபம் வந்திடுச்சுன்னா! அதான் வாயத் தொறக்கல நான்”
நாடியில் கையை வைத்து யோசித்தான் சங்கர்.
“கோபம் வந்தாலும் வந்திருக்கும் தேவா! சம்பாதிக்கற திமிருல நமக்கே அட்வைசு பண்ணறாளான்னு நெனைச்சாலும் நெனைச்சிருப்பேன். அது உன்னை முழுசா புரியாத சங்கரு! இப்போ உன்ட்ட வந்து ஐடியா கேக்கறது உன்னை முழுசா புரிஞ்சுக்கிட்ட சங்கரு! நம்ம பொண்டாட்டி நம்ம குடும்ப நல்லதுக்குத்தான் சொல்வான்னு நம்பிக்கை வந்து பல மாசம் ஆச்சிடி” என்றவனை கட்டிக் கொண்டாள் இவள்.
சற்று நேரம் ஒருத்தர் அருகாமையை இன்னொருத்தர் அனுபவித்தப்படி அமர்ந்திருந்தனர்.
“இப்போ நாம நாலு மணிக்குத்தானே வியாபாரம் ஆரம்பிக்கிறோம்! இனிமே பதினொரு மணிக்கு ஆரம்பிப்போம்!”
“அத்தினி மணிக்கே பரோட்டா போட்றலாம்னு சொல்றியாடி?”
“இல்ல மாமா! நாம பரோட்டா பிரியாணி(இது என்னோட சொந்த ஐடியா! யாராச்சும் வியாபாரம் ஆரம்பிக்க முடிவெடுத்தா எனக்கு காபிரைட் குடுக்க வேணா! வாழ்நாள் முழுக்க எனக்கு ஃப்ரீயா பரோட்டா பிரியாணி குடுத்தா போதும்! நெஜமா யாரும் இப்படி செஞ்சிருக்காங்களா தெரில! இருந்தா சந்தோஷம்தான்) போடுவோம்”
“பரோட்டா பிரியாணியா?”
“ஆமா மாமா! புதுமையா எதாச்சும் செஞ்சா மக்கள் மத்தியில நல்லா ரிச் ஆகும் மாமா! இப்போ சுட சுட பரோட்டா போட்டு, அத பாதியா வெட்டி அதுக்குள்ள பிரியாணிய திணிச்சி, பரோட்டா பிரியாணின்னு விப்போம்.”
ஜெய்சங்கர் ஆவென பார்த்தான் தன் மல்லியை.
“எப்புடிடி இப்படிலாம் யோசிக்கற?”
“டாக்டர் பாப்பா நல்ல பாட்டுலாம் கேக்கனும்னு சொன்னாங்கன்னு எனக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் குடுத்தல்ல மாமா! அதுல யூடியூப் இருக்கு! நேரம் கிடைக்கறப்போ இப்படிலாம் பாப்பேன்! அதுல மூங்கில் பிரியாணி, இளநீர் பிரியாணின்னு கண்டதெல்லாம் செஞ்சு காட்டறானுங்க! அப்படி உதிச்ச ஐடியாத்தான் இது!”
“அது சரி! ஆனா நமக்கு பிரியாணி செய்யத் தெரியாதே!”
“பொறக்கறப்போ எல்லாத்தையும் கத்துக்கிட்டே பொறக்கறமா? போக போகத்தானே கத்துக்கறோம். அதே மாதிரி யூடியூப் பார்த்து, அலசி ஆராஞ்சி நாம செஞ்சுப் பார்ப்போம்! கண்டிப்பா ஓர்க் அவுட் ஆகும் மாமா”
“நெஜமா வேலைக்காகுமா தேவா?”
“அட போ மாமா! பிரியாணின்னு எழுதி வச்சாலே நம்ம பயப்புள்ளைங்களாம் எச்சி ஊற அதையே பார்த்துட்டு நிப்பானுங்க! சென்னையில பிரியாணி வித்தவன், தோத்ததா சரித்திரமே கிடையாது”
அவள் சொன்னது போலவே, அலசி ஆராய்ந்து, நிறைய முயற்சிகள் செய்து கடைசியில் ஒரு வழியாக ருசியான ரெசிபி கைவசமானது இவர்களுக்கு. ஆரம்பத்தில் ஒரு ட்ரை கொடுப்போமே என சாப்பிட்டவர்கள், மொறு மொறு பரோட்டாவின் உள்ளே இருந்த காரசாரமான பிரியாணியின் ருசிக்கு மயங்கித்தான் போனார்கள். பெரிய அண்டாவில் செய்து எடுத்து வரும் பிரியாணி, இப்பொழுதெல்லாம் விற்றுத் தீர்ந்த்து விடுகிறது.
வடை வியாபாரம் முடித்து தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் பவளமல்லி. என்னவோ இன்று உடம்பு ரொம்பவே அலண்டுப் போனது போல இருந்தது அவளுக்கு. அவளது முக மாற்றத்தைப் பார்த்த சங்கர்,
“என்னடி பண்ணுது?” என வேலையைப் போட்டுவிட்டு அருகே வந்து கேட்டான்.
“களைப்பா இருக்கு மாமா! கொஞ்சம் டீ ஊத்தி குடேன்”
அவன் செய்வதற்குள் கையில் தேநீருடன் வந்தார் கோபால்.
“இந்தா கண்ணு குடி! குடிச்சிட்டு வூட்டுக்குப் போய் ரெஸ்ட்டு எடுமா” என வாஞ்சையாக சொன்னார்.
“நைனா, நைட்டுக்கு காந்திக்கா புருஷன வர சொல்லறேன்! வேபாரத்த அவரு கூட பாரு! நான் இவள கூட்டிட்டு வூட்டுக்குப் போறேன்”
காந்திமதியின் கணவரிடம் பேசியிருந்தான் சங்கர். வாரத்தில் மூன்று நாட்களுக்கு இரவு வியாபாரத்துக்கு உதவியாக வருவார் அவர். அதற்கான பணத்தை கொடுத்து விடுவான் சங்கர்.
“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் டென்ஷன் ஆகறீங்க! பாப்பா பொறக்க இன்னும் நாளிருக்கு”
“வயித்துல கத்தி வச்சா செலவு ரொம்ப ஆகும்னு, நார்மலு டெலிவரி வேணும்னு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யற நீ! அதுக்குன்னு ஒரு அளவு வேணாமாடி! ஒம்பது மாசம் மேல ஆகுது! டாக்டரு உடம்புக்கு ரெஸ்டு வேணும்ன்னு சொல்லிருக்காங்க! இருந்தாலும் பிடிவாதமா இங்க வர நீ” என கடிந்துக் கொண்டவன், அவள் தேநீரை அருந்தியதும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டே ஆட்டோவில் ஏற்றிக் கிளம்பி விட்டான்.
வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழையும் போதே பனிக்குடம் உடைந்து தரையை நனைத்திருந்தது. இருவருக்கும் முகம் வெளிரி போனாலும், தைரியமாக பிரசவத்தைக் கையாள முயன்றார்கள்.
“மாமா! பயப்படாதே மாமா! டாக்டர் கிட்ட கேட்டு, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு நாம ரெடியாகித்தானே இருக்கோம். பயப்படாதே! எனக்கு நீ, உனக்கு நான்! நம்ம ரெண்டு பேருக்கும் அப்பா! எல்லாலே நாமத்தான் பார்த்துக்கனும். ஹாஸ்பிட்டல் நம்பருக்கு கூப்டு சொல்லு, இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்னு” என சொன்னவள், மெல்ல நடந்து குளிக்க துண்டெடுத்துக் கொண்டு குளியலறைக்குப் போனாள்.
ஜெய்சங்கர் இவர்கள் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சொல்லி விட்டு, அப்படியே டாக்சிக்கும் அழைத்து ஏற்பாடு செய்தான். அதன் பிறகு அவசரமாக குளியலறைக்கு ஓடினான். மனைவியை குளிக்க வைத்தவன், உடலைத் துடைத்து மாற்று உடை அணிவித்து விட்டான். இவனும் ஓடிப் போய் காக்காய் குளியல் போட்டு விட்டு வந்தான். டாக்டர் என்ன கொண்டு வர வேண்டும் என லிஸ்ட் கொடுத்திருக்க, அதையெல்லாம் இருவரும் வாங்கி ஒரு பேக்கில் போட்டு வைத்திருந்தனர். டாக்சி வந்து ஹான் அடிக்க, கடவுள் படத்துக்கு முன் நின்று வணங்கி விட்டு, மனைவிக்கு திருநீர் இட்டான் ஜெய்சங்கர். பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு, மனைவியை அலேக்காக தூக்கிக் கொண்டான்.
“என்னால நடக்க முடியும் மாமா!” என இவள் வலியை மறைத்து மெல்ல புன்னகைக்க,
“என் பொண்டாட்டியையும் புள்ளயையும் சொமக்க எனக்கு தெம்பிருக்குடி! கம்முன்னு வா” என மிரட்டியபடியே கீழே இறங்கினான்.
வெளியே வந்த காந்திமதியிடம்,
“அக்கா, நான் பெத்தெடுத்துட்டு வரேன்” என விடைப் பெற்றுக் கொண்டாள் பவளமல்லி.
காந்திமதிக்கு இவர்களைப் பார்த்து அவ்வளவு ஆச்சரியம். இவரெல்லாம் ஒவ்வொரு பிள்ளைக்கும் தாய் வீடு போய் அவரின் கவனிப்பில் சீராடிவிட்டு வந்தார். இங்கேயோ இவர்களே வளையடுக்கி சீமந்தம் செய்து கொண்டனர். இப்பொழுது தைரியமாக யார் உதவியையும் எதிர்ப்பார்க்காமல் இவர்களே பிரசவத்துக்கும் கிளம்பி விட்டார்கள்.
“மல்லிப்புள்ள நல்ல படி பெத்து பொழைச்சு வரனும் ஆண்டவா!” என வேண்டிக் கொண்டார்.
இவரும் பிள்ளைகள் அத்தனைப் பேரை வைத்துக் கொண்டு எப்படி அவர்களுக்கு உதவியாக செல்ல முடியும்! வீட்டுக்கு வந்து விட்டால், உதவியாய் இருக்கலாம் என எண்ணிக் கொண்டே தன் வீட்டினுள் நுழைந்துக் கொண்டார்.
டாக்சியில் கணவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள் பவளமல்லி. இருவரும் பிள்ளைப் பிறப்பைப் பற்றி அத்தனை வீடியோ பார்த்திருந்தார்கள். முதன்முறை ஒரு வீடியோவைப் பார்த்து இவனுக்கு காய்ச்சலே வந்து விட்டிருந்தது. இவளுக்கும் பயந்து வந்ததுதான். முத்தெடுக்க வேண்டுமென்றால் முத்துக்குளிக்க பயந்தால் ஆகுமா என மனதைத் திடப்படுத்திக் கொண்டாள் பவளமல்லி.
“மாமா”
“சொல்லுடி”
“பயமா இருக்கா?”
அவள் அப்படி கேட்டதும், அவன் கண்ணில் அடக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அவள் தோள் மேல் தெறித்தது.
“ரொம்ப பயமா இருக்குடி மல்லி”
“அய்யே! நம்ம சுத்திப் பாரு எத்தனை ஜனங்க நடமாடறாங்க! அவங்க அம்மாலாம் இப்படி பயந்திருந்தா இத்தனை பேரு பொறந்துருக்க முடியுமா? யோசிச்சுப் பாரேன், நைனா நைனான்னு கூப்டுக்கிட்டே உன்னை சுத்தி வர போற குட்டி வாண்டு! அம்மா எனக்குத்தான், நீ தள்ளிப் போன்னு உன் கூட சண்டைப் புடிக்கப் போற நம்ம செல்லக்குட்டி! ஜானி ஜானி யெஸ் பாப்பான்னு இங்கிலீசுல பாட போற நம்ம குழந்தை! அதையெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு பயப்படாம நான் வெளிய வர வரைக்கும் காத்திருக்கனும்! சரியா?”
தலை மெல்ல ஆடியது இவனுக்கு.
“வாயத் தொறந்து சொல்லு மாமா”
“பயப்படாம காத்திடுட்டு இருப்பேன்டி, என் மல்லி!” என குரல் கரகரக்க சொன்னவன், அவள் உச்சியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
மருத்துவமனைக்கு வந்ததும் மல்லியை லேபர் வார்டுக்கு அழைத்துப் போனார்கள். காத்திருக்கும் நேரத்தில் தனது நைனாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் சங்கர்.
“நைனா! நீ வூட்டுக்கு போய்டு! நாளைக்கு வந்தா போதும்” என சொல்லியிருக்க, அவரோ வியாபாரத்தை முடித்துக் கொண்டு கையில் காபி ப்ளாஸ்க்கோடு ஓடி வந்திருந்தார் மகனிடம்.
அன்றிரவு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தப்படி இருவரும் மல்லியைப் பற்றியும் அவள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே புது வரவுக்காக காத்திருந்தனர்.
“நைனா! இன்னா நைனா இம்புட்டு நேரமாகுது! பயமா இருக்கு எனக்கு”
“மொட்டு விரியறதும் புள்ள வெளி வரதும் அந்த ஆண்டவன் கைலத்தான்டா இருக்கு மவனே! காத்துக்கினு இருப்போம்”
இவன் பயத்துடனே குறுக்கும் நெடுக்கும் நடந்தப்படி,
“இந்த ஒரு புள்ள போதும் நைனா!” என அறிவிக்க,
“ஹ்க்கும்! கொழந்தைசாமின்னு பேரு வச்சா, அம்பது வயசானாலும் கொழந்தைசாமின்னுதான் கூப்புடுவாங்களே தவிர, கெழட்டுசாமின்னு கூப்ட மாட்டாங்கடா மவனே!” என எடுத்து விட்டார் கோபால்.
“இப்போ நான் சொன்னதுக்கும் இந்த பழமொழிக்கும் இன்னா கனெக்ஷனு?” என இவன் காண்டாக,
“என்னை எத்தினி வாட்டி இப்படி காண்டாக்கிருப்ப! இப்ப என்னோட டர்னு” என புன்னகைத்தார் கோபால்.
இவனுக்கும் லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது. அந்த நேரம் லேபர் வார்டின் கதவு திறந்தது. வெளியே வந்த தாதியிடம் விரைந்தான் ஜெய்சங்கர்.
“உங்களுக்குப் பையன் பொறந்துருக்கான் சார்!”
(காதல் மலர்ந்தது..)
(போன எபிக்கு லைக் அண்ட் கமேண்ட் போட்ட தங்கங்களே! நன்றி, நன்றி! அடுத்த எபில மீண்டும் சந்திக்கலாம். லவ் யூ ஆல்)