Kanne Kadhal Penne–EPI 14

239948099_925484634705538_288795760143811764_n-ecfc9194

அத்தியாயம் 14

 

குழி பணியாரம் தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாகும். பட்டு என கன்னடத்திலும், பொங்கனலு என சுந்தர தெலுங்கிலும், உண்ணியப்பம் என மலையாளத்திலும் அழைக்கப்படுகிறது இந்தப் பணியாரம். சென்னையில் பல கையேந்தி பவன்களில் இனிப்பு பணியாரம், மசாலா பணியாரம் என வித விதமான பணியாரங்கள் விற்கப்படுகின்றன.(எனக்கு ரொம்ப விருப்பம் பணியாரம்னா! என் சிஸ்டர் இன் லா ரொம்ப ருசியா செய்வாங்க! செஞ்சுக் குடுங்கன்னு நேரிடையா எப்படி கேக்கறது! அதனால அண்ணி, நீங்க செஞ்சப் பணியாரம் செம்ம ருசி. இப்படி நான் சாப்பிட்டதே இல்லைன்னு பிட்ட போட்டா, சிரிச்சிட்டே ரெசிபி குடுக்கறாங்க! நம்ம ராஜதந்திரம்லாம் வீணாப் போச்சு!)

 

“எடுங்கப்பா!”

“நானாம்மா?”

“ஆமா நைனா! சீக்கிரம் எடு! எவ்ளோ நேரம் ஒன் பேரன் இப்படிக்கா வெளியே நிப்பான்!”

பேரனுக்குப் பொறுமை பறந்திருந்தது. உவ்வேஏஏஏஏஏ என குரலை உயர்த்திக் கத்த ஆரம்பித்திருந்தான் அவன்.

“நான் எப்படிம்மா?” என பேரனின் கன்னத்தைத் தடவியபடியே தவித்தார் கோபால்.

“எங்களுக்கு எல்லாமே நீங்கத்தான்பா! நீங்க ஆசீர்வதிச்சு உள்ள அழைச்சாத்தான் எங்களுக்கு எல்லா நல்லதும் நடக்கும்.” என சொல்லியபடியே காட்டுக் கத்தல் கத்தும் மகனை நெஞ்சில் அணைத்து லேசாய் ஆட்டினாள் பவளமல்லி.

மகளின் கூற்றில் கண்ணெல்லாம் கலங்கிப் போக, உள்ளே குடு குடுவென ஓடிப் போய் கரைத்து வைத்திருந்த ஆரத்தியை எடுத்து வந்து வாசலில் நின்றிருக்கும் தனது மகனின் குடும்பத்திற்கு சுற்றினார் கோபால். அதன் பிறகே உள்ளே நுழைந்தனர் மூவரும்.   

வரவேற்பறையிலேயே பாயை விரித்து, அதில் துணியை விரித்து மகனைக் கிடத்தினாள் பவளமல்லி. மல்லியின் நிறத்தில், கை காலெல்லாம் தன்னைப் போல நீளமாக, அழகாய் இருந்த தன் மகனைப் பெருமைப் பொங்கப் பார்த்தான் ஜெய்சங்கர். செப்பு வாயைத் திறந்து குட்டி அழகாய் கொட்டாவி விட, அது கூட காவியமாக இருந்தது தகப்பனுக்கு.

“பாரு நைனா பாரு! எவ்ளோ அழகா கொட்டாவி வுடறான் பாரேன்”

“அடேய்! ஒன் ஒருத்தன் கண்ணே போதும்டா! அவன் எத செஞ்சாலும் பாரு நைனா பாரு நைனான்னு பேஜார் பண்ணுற!” என சொல்லிய கோபால், பேரன் அருகில் அமர்ந்து கன்னம் தொட்டு வழித்து நெட்டி முறித்தார்.

இருவரின் அட்டகாசத்தையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்தாள் மல்லி. சுகப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்திருக்க, ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த தாயும் சேயும் இன்றுதான் வீடு வந்திருந்தார்கள். இவர்களின் வருகைக்காக கோபால் கையேந்தி பவனுக்கு ஒரு நாள் விடுமுறை விட்டிருந்தனர்.

மெல்ல எழுந்து தனது அறைக்கு நடந்தாள் மல்லி. அவள் பின்னாலேயே இவனும் போனான்.

“குளிக்கனும் மாமா! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு!”

“இருடி! சுட சுட மேலுக்கு ஊத்தனும்னு காந்திக்கா சொல்லிச்சு! புள்ளைங்கள ஸ்கூலுல இருந்து கூட்டி வர போயிருக்கு! வந்ததும் அக்காவே குளிக்க வைக்கும்”

“இல்ல மாமா, நீ குளிக்க வை! வேற யாரும் என்னை அப்படிப் பார்க்கறதுல எனக்கு இஸ்டமில்ல! கூச்சமா இருக்கும் மாமா”

மனைவியின் வார்த்தையில் புன்னகை வந்தது இவனுக்கு.

“சரிடி! சுடுதண்ணி வச்சிட்டு வரேன் இரு! அப்படியே பையனையும் சேர்த்து குளிப்பாட்டிரலாம்.”

முதலில் மகனை குளிக்க வைக்க ஆரம்பித்தனர் இளம் ஜோடி இருவரும். அவனோ தண்ணீர் மேல் விழுந்ததும் தொண்டையைத் திறந்து கத்தினான்.

“என்னடி இப்படி அழறான்! குளிக்கலனா போது வுடு!” என இவன் பதட்டப்பட, வெளியே கதவோரம் நின்றிருந்த கோபால்,

“அப்டியே ஒன்ன மாதிரியே இருக்கான்டா மவனே! டேய் சங்கரு குளிடான்னா, ஆடு மாடெல்லாம் குளிக்குதா நைனான்னு வம்பு பண்ணுவ! அப்படியே கபால்னு புட்சிக்கின்னு வந்து எருமை மாட்ட குளுப்பாட்டற மாதிரி குளுப்பாட்டி வுடுவேன்” என மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார் அவர்.

மனைவியின் முன்னாலேயே தன் மானம் கப்பல் ஏறியதில் முகத்தை அஷ்டக் கோணலாக்கினான் ஜெய்சங்கர். மல்லிக்கோ சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“அப்பாலே போ நைனா! வயசுப் பையன் குளிக்கறத எட்டிப் பார்த்திட்டு நிக்கற” என எரிச்சல்பட்டான் இவன்.

“இவன் வயசுப் பையனா? நல்லா சொல்றடா டீடேயிலு!” என்றவாரே முன்னறைக்குப் போய் விட்டார் அவர்.

சின்னவனைக் கதற கதற குளிக்க வைத்து, துவட்டி கோபாலிடம் கொடுத்தாள் மல்லி.

“அப்பா, பவுடர் போட்டு சட்டைப் போட்டு விடுங்க! நான் குளிச்சிட்டு வந்துடறேன்!”

அழும் குழந்தையை வாங்கிக் கொண்டவர், தனக்கு தெரிந்த வகையில் சமாதானப்படுத்தினார்.

“முடிச்சவிக்கிப் பெத்த மவனே அழுகாதடா!

மொள்ளமாரி பெத்த மவனே அழுகாதடா!

அல்லக்கை பெத்த மவனே அழுகாதடா

ஆஃபாயில் பெத்த மவனே அழுகாதடா

ஜோ ஜோ ஜோ ஜோ!” என தாலாட்டியப்படியே அவர் பவுடர் போட, குளியலறையில் இருந்து,

“தோடா! நைனா, சைக்கிள் கேப்ல என் தலைய ஏன் இப்டிக்கா உருட்டற! நீ பாடறியா இல்ல என்னை திட்டறியா?” என குரல் கொடுத்தான் ஜெய்சங்கர்.  

மல்லியும் குளித்து விட்டு வர, வீட்டிற்குள் நுழைந்தார் காந்திமதி.

“நான் வார வரைக்கும் பொறுக்கக் கூடாதா புள்ள?” என கடிந்துக் கொண்டவர், அவளை அமர்த்தி வைத்து முடிக்கு சாம்பிராணி புகைப் போட்டார்.

கோபால் பேரனுக்குப் போட்டிருந்த சட்டையைக் கலட்டி விட்டு, அப்படியே குட்டி பரோட்டாவையும் சூப்பர்மேன் போல சாம்பிராணி புகை மேலே பறக்க வைத்தார். புகை எரிச்சலில் வீச் வீச்சென முகம் சிவக்க கத்தினான் அவன்.   

“ஸ்பீக்கர முழுங்கிட்ட மாதிரி சவுண்ட பாரேன்!” என சிரித்தவர்,

“ஏ புள்ள! பத்திய சாப்பாடு ஆக்கிட்டு வந்துருக்கேன் பாரு! நீ மொதல்ல சாப்புடு! அப்புறம் இவனுக்குப் பால் குடுத்துப் படுக்க வைக்கலாம்! நீயும் அவன் தூங்கறப்பவே கொஞ்சம் தலைய சாய்ச்சுக்க! இதுங்கலாம் நைட்டுலதான் முழிச்சிக்கிட்டு நைட் டூட்டி பாக்கும்ங்க!’ என்றார்.

உணவை தட்டிலிட்டு மனைவியிடம் நீட்டினான் ஜெய்சங்கர். காந்திமதியோ தான் கோர்த்துக் கொண்டு வந்திருந்த வசம்பை குட்டியின் கையில் கட்டி விட்டார். அதோடு வேஷ்டி துணியில் மடித்து வைத்திருந்த அறுபதாம் பச்சையையும் கட்டி விட்டார்.

“இது இன்னாத்துக்கு காந்தியக்கா?”

“இந்த இலையைக் கட்டுனா காத்து கருப்பு அண்டாதுன்னு எங்காத்தா சொல்லிருக்குடா சங்கரு!”

மகனின் பிஞ்சிக் கையைத் தூக்கி முகர்ந்து பார்க்க, அவ்வளவு வாசனையாக இருந்தது அந்த இலை.

“தோ பாரு மல்லி! மத்த வேலைலாம் நீங்களே செஞ்சிக்கறீங்க! ஆனா உன் சாப்பாட்ட மட்டும் நான் செஞ்சிக் குடுக்கறேன்டி. இந்த மாதிரி டைமுல ஒடம்ப தேத்துற மாதிரி, பாலு சுரக்கற மாதிரி சத்தானதா சாப்புடனும் புள்ள!”

“சரிக்கா!” என ஒத்துக் கொண்டாள் இவள்.

“இன்னா இன்னா சாமான் வேணும் இவ சாப்பாட்டுக்குன்னு சொல்லிருக்கா, நான் வாங்கி தந்துடறேன்” என்றனிடம் தேவையானவற்றை அவர் சொல்லிக் கொண்டிருக்க, சின்னவனோ தாத்தனின் கையில் குளித்தக் களைப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

தனது உணவை முடித்துக் கொண்ட மல்லி, கோபாலிடம் இருந்து சின்னவனை வாங்கிக் கொண்டு தனதறைக்குப் போனாள். எப்படி பால் கொடுப்பது, எப்படி குழந்தையைப் பிடிப்பது, பால் குடித்ததும் எப்படி ஏப்பம் வர வைப்பது என எல்லாம் மருத்துவமனையில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். தலையணையை எடுத்து முதுகுக்கு அணைக் கொடுத்தவள் பாயில் அமர்ந்துக் கொண்டாள். இவர்களுக்காக புதிதாக ஸ்டேன்ட் ஃபேன் ஒன்று அங்கே முளைத்திருந்தது. புன்னகையுடன் மகனுக்கு பாலூட்ட ஆரம்பித்தாள் மல்லி. தூக்கக் கலக்கத்தில் இருந்தவன், ஆரம்பத்தில் குடிக்க மாட்டேன் என முரண்டுப் பிடித்தான். கொஞ்சிக் கெஞ்சிக் கன்னத்தை சுரண்டி என இவள் என்ன செய்தும் வேலைக்காகவில்லை.

உள்ளே நுழைந்த சங்கர் சிரிப்புடன் அம்மா மகனின் அலப்பறைகளைப் பார்த்திருந்தான். பின் கீழே மண்டி இட்டு அமர்ந்தவன்,

“நைனா செல்லக்குட்டில்ல! ங்கா குடிங்க!” எனும் குரலில் கண்களை லேசாக மலர்த்தியவ குட்டி பரோட்டா, பின் பால் அருந்த ஆரம்பித்தான்.

“யோ பரோட்டா! இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்! பத்து மாசம் சுமந்து, கஸ்டப்பட்டு பெத்தது நானு! என் கிட்ட அடம், உன் கிட்ட மட்டும் அடங்கிப் போறான்!” என இவள் கடுப்பாய் சொல்ல,

“அடம் புடிக்கவும், அன்பு காட்டவும், அரவணைச்சுப் போகவும் அம்மான்னு ஒருத்தி இருக்கான்ற சந்தோசத்துல அப்படி செய்யறான்டி! நமக்கெல்லாம் எங்கடி அந்த குடுப்பிணை இருந்துச்சு!” என லேசாய் கண் கலங்கிய கணவனை இன்னொரு கரத்தால் இழுத்து அணைத்துக் கொண்டாள் மல்லி.

“உனக்கு நான் அம்மா! எனக்கு நீ அம்மா! பழசெல்லாம் மறந்துட்டு இனி புதுசா வாழ்வோம் மாமா”

மனைவியும் மகனும் தூங்கும் வரை அவர்களுடனே இருந்தான் சங்கர். அதன் பிறகு வெளியே வந்தவன்,

“நைனா! ஓன் வீக்கு நான் இவ கூடத்தான் இருக்கனும்! அதுக்குன்னு கடையையும் அடைச்சிப் போட மிடியாது. அடுப்பெரிஞ்சாதான் நம்ம பொழப்பு ஓடும்! எப்போதும் போல மாவு பெசைஞ்சு, பிரியாணி சமைக்கறதெல்லாம் செஞ்சுடறேன்! பகல் வேபாரத்த நீ பாத்துக்கோ! ஒதவிக்கு கீழ் வீட்டு பையன் கிட்ட சொல்லி வைக்கறேன்! காலேஜூ லீவூதானாம்! வேலை இருந்தா குடுண்ணான்னு கேட்டான். நான் ஒரு நாலு மணி போல வரேன்! ரெண்டவுரு வடை கடைய நான் போடறேன்! அப்பால நைட்டுக்கு காந்திக்கா புருஷன் வந்துடுவாரு! இவிங்களுக்கு எல்லாம் சம்பளம் குடுக்கறதுல கொஞ்சம் பணம் வெளியப் போனாலும், கடை மூடிக் கிடக்கறத வுட இது எவ்வளவோ மேலு! நீ இன்னா நைனா சொல்லுற?”

“கடைய பத்தி நீ கவலைய வுடு, நான் பாத்துக்கறேன்! நீ பொண்டாட்டி புள்ளய பாருடா மவனே!”  

அன்றிரவு மகனின் பசி சிணுங்களில் கூட கண்ணைத் திறக்க முடியவில்லை பவளமல்லியால். அப்படி ஒரு அலுப்பு. உடலெல்லாம் ஓய்ந்துப் போனது போல வலி. தன் வலியை வெளியே காட்டினால் வீட்டில் இருக்கும் இரு ஆண்மகன்களும் ஆடிப் போய் விடுவார்கள் எனதான் சிரித்த முகமாகவே வளைய வந்தாள் இவள். பிள்ளைப் பெற்று வருவது என்பது மறு ஜென்மம் எடுத்து வருவதாயிற்றே! மெல்லிய மேனி பாவையின் மொத்த சத்தையும் உறிஞ்சி எடுத்திருந்தான் சின்னவன். இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து கொஞ்சம் உடலைத் தேற்றிக் கொண்டு போகும்படி டாக்டர் சொல்லியிருக்க, பிடிவாதமாய் கிளம்பி வந்திருந்தாள் வீட்டுக்கு. இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் தாய் சேய் இருவரும் தங்கி வருவதென்றால் எவ்வளவு செலவாகுமோ எனத்தான் இவள் எண்ணமெல்லாம் இருந்தது.

மெல்ல கண்ணைத் திறந்துப் பார்க்க, அங்கே மகனைக் கையில் ஏந்தியபடி,

“அம்மா பாவமா தூங்கறாடா ராஜாக்குட்டி! அழுந்து எழுப்பி வுட்றாதடா மவனே!” என கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.

அவன் மகனோ பசியில் தகப்பனின் நெஞ்சில் வாயை வைத்திருந்தான்.

“அடேய், அடேய்! அங்கிட்டு ஒன்னும் வராதுடா டேய்!” என கூச்சத்தில் இவன் நெளிய, மல்லிக்கோ சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

அவளது சிரிப்பு சத்தத்தில், மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் சங்கர்.

“ஏன்டி, குஜாலா சிரிக்கறியா நீ! பாவம் நம்ம பொண்டாட்டி, தூங்கட்டும்னு இவன்ட்ட நான் மாட்டிட்டு முழிக்கறேன்!” என புன்னகைத்தவாறே மகனை மனைவியின் மடியில் கிடத்தினான்.

அவனுக்குப் பாலூட்டியவாறே, கணவனைப் பார்த்து புன்னகைத்தவள் மெல்லிய குரலில் ஹம் செய்தாள்.

“என்ன பாட்டுடி தேவா?”

“உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே” என மெல்லிய குரலில் மகனின் கன்னத்தைத் தடவியவாறே கண்ணில் நீர் கோர்க்க கணவனைப் பார்த்துப் பாடினாள் மல்லி. அந்த இக்கட்டில் இவன் தஞ்சமளிக்காதிருந்தால் அவளின் கதியென்ன!

அழாதே என்பது போல தலையாட்டியவன்,

“போடி பைத்தியக்காரி! உன் கிட்டத்தான்டி இந்த பரோட்டாவோட நெஞ்சம் தஞ்மாகியிருக்கு! உனக்கு நான் ஆதரவு குடுத்தேன்னு சொல்லறத விட எனக்கு நீ வாழ்க்கை குடுத்தேன்னு வேணும்னா சொல்லலாம்” என்றவன், அந்த பாடலின் மீதி வரியைப் பாடிக் காட்டினான்.

“பாறை ஒன்றின் மேலே

ஒரு பூவாய் முளைத்தாயே

உறவுக்கு உயிர் தந்தாயே!”

அவனின் பாட்டு சத்தத்தில் பால் குடித்து முடித்திருந்த குட்டி, சுகமாய் தூங்கிப் போனான். அவனுக்கு பேம்பர்ஸ் மாற்றி தனதருகே படுக்க வைத்தவள், கணவனின் புஜத்தில் தலை சாய்த்து நிம்மதியாய் தூங்கிப் போனாள். கையருகே இருந்த தன் இரு சொர்க்கத்தையும் அணைத்தப்படி இவனும் உறக்கத்தைத் தழுவினான்.

அடுத்து வந்த ஒரு வாரமும் நிற்க நேரமில்லாமல் வேலைப் பார்த்தான் ஜெய்சங்கர். பிள்ளையை சுமந்தப் போது கூட, மனைவியின் நடையில் ஒரு துள்ளலைக் கண்டிருந்தவனுக்கு, தற்போது அவள் மெல்ல எட்டெடுத்து நடக்கும் நடையே சொன்னது அவளின் களைப்பின் அளவுகோளை. அதோடு தண்ணீரில் அதிகம் நிற்கக் கூடாது என காந்திமதியும் சொல்லி இருக்க, மனைவியை குளிக்கும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் ஓய்வாக இருக்க வைத்தான் இவன். மகனை இவள் பார்த்துக் கொள்ள, மகனையும் இவளையும் சேர்த்து இவன் பார்த்துக் கொண்டான். கடைக்கான சமையல், மனைவி மகனை குளிக்க வைப்பது, எல்லோருடைய துணியையும் துவைத்துப் போடுவது, நான்கில் இருந்து ஆறு வரை காந்திமதியை மனைவிக்கு துணை வைத்து விட்டு வடை போடுவது என நேரம் பறந்தது. அந்த ஒரு வாரத்திலேயே ஓய்ந்துப் போயிருந்தவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது மல்லிக்கு.

சரியான நேரத்துக்கு சத்தான உணவு, மகன் அனுமதித்த அளவுக்கு உறக்கம், கணவன் கட்டாயப்படுத்திக் கொடுத்த ஓய்வு என ஓரளவுக்குத் தேறிக் கொண்டாள் பவளமல்லி. விட்டிருந்த மாவு வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்தாள். வேண்டாமென தடுத்த கணவனிடம்,

“இப்போ நான் நல்லா தேறிட்டேன் மாமா. ரொம்ப உடம்ப அலட்டிக்கற வேலைலாம் செய்யல! எனக்கும் தெரியும் மாமா, நான் ஆரோக்கியமா இருந்தாத்தான் என்னை சுத்தி இருக்கற இந்த மூனு ஆம்பளைங்களையும் கருத்தாப் பார்த்துக்க முடியும்னு! மிசின்ல போட்டா அதுப்பாட்டுக்கு அரைச்சிடுது! இதுல என்ன கஸ்டம் எனக்கு!” என சமாதானப்படுத்தி இருந்தாள்.

அரசாங்கத்திலோ தனியாரிலோ வேலைப் பார்த்தால், இரண்டில் இருந்து ஆறு மாதங்கள் பிரசவ விடுமுறை கொடுப்பார்களாம்! இவர்களைப் போன்ற மக்களெல்லாம் அதை எதிர்ப்பார்க்க முடியுமா! கையில காசு வாயில தோசை என இவர்களுக்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்களோ என்னவோ! உழைத்து சம்பாதித்தால்தானே வீட்டில் அடுப்பெரியும்.

கிரைண்டர் ஓசையோ, சமைக்கும் சத்தமோ, வித விதமாக வரும் சமையல் வாசனையோ எதையும் கண்டுக் கொள்ளாமல் சின்னவர் அவர் பாட்டுக்கு சாப்பிடுவது, தூங்குவது என தனது வேலையை நன்றாகப் பார்த்தார். வயிற்றில் இருந்தே கேட்ட ஒலி பழகி விட்டதோ என்னவோ!

ஒரு மாதத்தில் தொட்டிலில் போட்டு, அக்கம் பக்கம் உள்ளவர்களைக் கூப்பிட்டு பெயர் வைத்தனர் குட்டி பரோட்டாவுக்கு.

“இன்னா பேருடா வைக்கப் போறீங்க?” என கோபால் கேட்டதுக்கு,

“சக்கரைப்பாண்டின்னு பேரு வச்சாலும், நாலு நாள் குளிக்காம பொறங்கைய நக்குனா உப்பு டேஸ்ட்டு வருமே தவுர சக்கரை டேஸ்ட்டு வராது நைனா!” என எடுத்து விட்டான் மகன்காரன்.

“பேரனுக்கு இன்னா பேருன்னு தானே கேட்டேன்! இதுக்கு போயி ஒம் புருஷன் என்னிய காண்டாக்குறான்மா கண்ணு!” என கோபித்துக் கொண்டு வெளியே போய் விட்டார் அவர்.

மனைவி முறைத்தாலும் தான் சொன்ன ஜோக்கை நினைத்து கெக்கேபெக்கேவென இவனே சிரித்துக் கொண்டான்.  

சின்னவனைத் தொட்டிலில் போட்ட தினம், மகன் காதருகே குனிந்து பெற்றவர்கள் இருவரும்,

“ஜெய் கோபால கிருஷ்ணன்” என மூன்று முறை சொல்ல, கோபாலுக்கு கண்ணீரே வந்து விட்டது.

தேம்பித் தேம்பி அழுதவரை இரண்டு பேரும் இரண்டு பக்கமாகக் கட்டிக் கொண்டனர்.

“நீதான் நைனா எனக்கு தெய்வம்! ஒன் பேர என் மவனுக்கு வைக்காம வேற யார் பேர வைப்பேன்!”

“திக்குத் தெரியாம நின்ன எனக்கு, வழி காட்டனது நீங்கத்தான்பா! உங்க பேர பையனுக்கு வைக்கறதுல எங்களுக்குத்தான் பெருமை”

கண் கலங்கி நின்ற மூவரையும் பார்த்து,

“இன்னா சங்கரு! இன்னிக்காச்சும் வெறும் குஸ்காவ காட்டி ஏமாத்தாம பிரியாணி போடுவன்னு வந்தா, சோக சீன் ஓட்டிக்கினு இருக்க!” என வந்திருந்தவர்கள் உசுப்ப, மூவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விருந்து பரிமாறினார்கள்.

இந்த விருந்துக்காவது சிக்கன் பிரியாணி போட்டிருப்பான் என நீங்கள் நினைத்தால், அது பெரிய தவறு மக்களே! கோழியின் குழந்தையான முட்டையை வைத்து முட்டை பிரியாணியோடு விருந்து சிறப்பாக முடிந்தது.

“கண்ணாலத்துக்கு குஸ்கா, புள்ள பொறந்ததுக்கு முட்டை பிரியாணி! இந்த சங்கரு பேரன் பொறந்தாத்தான் நம்ம கண்ணுல லெக் பீஸ காட்டுவான் போலிருக்கு!” என முனகியப்படியே போனார்கள் வந்திருந்தவர்கள்.

‘யாரு கிட்ட! சங்கர்டா, சிக்கன சிகாமணி சங்கர்டா!!!!’

கிருஷ்ணனுக்கு இரண்டு மாதங்கள் ஆனதும், அவனையும் தூக்கிக் கொண்டு வியாபாரத்துக்கு வருவேன் என ஒற்றைக் காலில் நின்றாள் மல்லி. மறுபடியும் ஆரம்பித்தது ஒரு போர்! இவர்கள் நடுவில் சிக்கி சின்னாபின்னமானார் ஒருவர்.

யாரவர்?

அப்பாவி கோபால்தான் அவர்!!!!!

 

(காதல் மலர்ந்தது…)

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபி எபிலாக்! முடிஞ்சா வீக்கேண்ட் தரேன்! இல்லைனா திங்கள்தான்! டேக் கேர் அண்ட் லவ் யூ ஆல் டியர்ஸ்)