Kanne Kadhal Penne–EPI 15(EPILOGUE)

239948099_925484634705538_288795760143811764_n-bc06d42a

அத்தியாயம் 15 (எபிலாக்)

 

சுண்டல் என்றால் கண்டிப்பாக கடற்கரைதான் ஞாபகம் வரும். கடவுளுக்கு நைவேத்தியமாகவும் படைக்கப்படும் இந்த சிற்றுண்டி சென்னை கடற்கரையில் உள்ள கையேந்தி பவன்களில் பரவலாக விற்கப்படுவதை காணலாம். கொண்டைக்கடலை, பாசிப் பயிறு, கடலைப்பருப்பு, தட்டைப் பயிறு என வித விதமன தானியங்கள் கொண்டு சுண்டல் தயாரிக்கப்படுகிறது.

 

‘ஹோட்டல் கோபால்’ எனும் பெயர்ப்பலகை அந்த ஏகாந்த இரவு வேளையில் நியான் விளக்குகளால் அழகாய் மிளிர்ந்தது. நடுத்தரமான அந்த ஹோட்டலில் எப்பொழுதும் போல மக்கள் கூட்டம் நிறைந்தே இருந்தது. உள்ளே பகல் போல வெளிச்சமாய் இருக்க, வரிசையாய் மேசைகள் போடப்பட்டு சுத்தமாய் இருந்தது அந்த இடம்.

தட்தட்டேன பரோட்டா கொத்தும் ஓசையும், சொய்ங்கென தோசை வார்க்கும் ஒலியும்,

“மேஜை நம்பர் எட்டுக்கு ஊத்தப்பம் ஒன்னு பார்சல்”,

“மேஜை நம்பர் நாலுக்கு பில்டர் காபி ரெண்டு” என கலவையான மனிதர்களின் சத்தமும் காதை நிறைத்தது. உணவு வாசனையும், காபி, டீ மணமும் அமர்ந்திருப்பவர்களின் நாசியை சுகமாய் நிரடிப் போனது.

கடையின் ஒரு மூலையில் இருந்த மேசையில், அந்த சத்தங்களையும், வாசனையையும் கண்டுக் கொள்ளாமல், கருமமே கண்ணாக தனது வீட்டுப் பாடங்களை செய்துக் கொண்டிருந்தான் ஏழு வயது ஜீனியர் கோபால். அவனது தாயைப் போலவே கீழுதட்டை மடக்கிப் பல்லால் கடித்தவாறே முழு கவனத்தையும் பாடத்தில் வைத்திருந்தான் அவன்.

ஹோட்டலின் நுழைவாயிலின் வலது புறம் இருந்த கல்லாவில் நெற்றி நிறைய பட்டையுடன் அமர்ந்திருந்தார் சீனியர் கோபால். அவர் பின்னே, தலைக்கு மேல் வெங்கடாசலபதி படம் மாட்டி இருக்க, அதன் கீழே ஊதுபத்தி குத்தி வைக்கப் பட்டிருந்தது.

“நைனா! எப்படி இருக்கீங்க?” என பில் கவுண்டருக்கு வந்தவர் கேட்க சிரித்த முகத்துடன்,

“எனக்கு இன்னாப்பா குறை! உன்ன மாதிரி நாலு பேரு வரவால நாங்க நல்லா இருக்கோம்யா!” என சொல்லியபடியே பணத்தை வாங்கி சில்லரையைக் கொடுத்தார்.

அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு வருபவர்களுக்கு கோபால் நைனாவாகி இருந்தார். இப்பொழுதெல்லாம் வேலைக்கு ஆட்கள் இருக்க, கோபால் முழு நேரமும் கல்லாவில்தான் அமர்ந்திருப்பார். அது அவர் மகளின் கட்டளை.  

“அண்ணா! கறி கொத்து மூனு” எனும் குரலில் தலையை ஆட்டிக் கொண்ட சங்கர், கரண்டியை எடுத்து ஸ்டைலாக ஒரு சுழற்று சுழற்றி வேலையை ஆரம்பித்தான்.

சரக்கெடுக்கப் போவது, பில் கட்டுவது போன்ற வெளி வேலைகள் இல்லாத போது, கொத்து பரோட்டா போடும் தனது ஆஸ்தான வேலையை கவனிப்பான் ஜெய்சங்கர். சில நேரங்களில் வெய்ட்டர் அவதாரம் எடுப்பவன், பல நேரங்களில் அடுப்படியில் சால்னா சமைக்கும் வேலையையும் பார்ப்பான்! பாத்திரம் தேய்ப்பதில் இருந்து, கடைக்கு மாப் போடுவது வரை எல்லா வேலையையும் சமயத்துக்கு ஏற்றது போல செய்ய வேண்டும் என்பது வீட்டரசியின் கட்டளை!

இவர்கள் மூவரும் நமது கண் முன்னே இருக்க, எங்கே நமது வியாபார காந்தம்? கொஞ்சம் என்னோடு நடந்து ஹோட்டலின் சமயலறைக்கு வாருங்கள்!

“யக்கா! சமையல்கட்டு சுத்தபத்தமா இருக்கனும்னு எத்தனை முறை சொல்லிருக்கேன்! பாருங்க எண்ணேய் தரையில ஊத்திக் கிடக்குது! அதை துடைக்காம வேலையைப் பார்த்துட்டு இருக்கீங்க! கீழ மேல வழுக்கி விழுந்தா யாருக்கு கஸ்டம்? உங்களுக்குத்தானே!” என சொல்லியபடியே மாப்பை எடுத்து வந்து அந்த இடத்தைத் துடைக்க ஆரம்பித்தாள் பவளமல்லி.

“யம்மா, யம்மா! குடுமா நானே தொடைக்கறேன்! புள்ளத்தாச்சிப் பொண்ணு இதெல்லாம் செய்யலாமா?” என உதவ வந்தார் சமையல் வேலைப் பார்க்கும் பெண்மணி.

புன்னகையுடன்,

“யக்கா! வயித்துல புள்ளதான் இருக்கு! என்னமோ வெடிகுண்டு இருக்கற மாதிரி இதை செய்யாதே அதை செய்யாதென்னு உங்க சங்கரு தம்பி மாதிரியே பேசறீங்க!” என்றவளுக்கு முதல் குழந்தைக்கு தன் கணவன் செய்த சேட்டைகள் ஞாபகம் வந்தது.

அதே போலத்தான் இந்த இரண்டாவது குழந்தைக்கும் இவளைப் போட்டு வாட்டிக் கொண்டிருந்தான். அவன் சொல்வதை அப்படியே கேட்டு விட்டால் அது மல்லி இல்லையே! குட்டி கோபாலுக்கு இரண்டு மாதமானப் போது இவர்களுக்கு வந்த சண்டையும், அதன் பிறகு மாறிப் போன வாழ்க்கையையும் நினைத்தப்படி அங்கிருந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்துக் கொண்டாள் ஏழு மாத கர்ப்பிணி பவளமல்லி.

“சொன்னா கேளுடி தேவா! புள்ளயயும் தூக்கிகினு நீ வேபாரத்துக்கு வர வேணா! இப்போத்தான் நான் எக்ஸ்ட்ராவா சம்பாதிக்கறேனே! இன்னும் என்னடி!” என படபடத்தவன், தன் தகப்பனிடம்,

“நைனா! ஒழுங்கா வூட்டுல இருந்து புள்ளயயும் பார்த்துக்கிட்டு ஒடம்பையும் பாத்துக்க சொல்லு உன் மகள! சொம்மா வடை சுடறேன், பஜ்ஜி போடறேன்னு குதிச்சா, நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என எகிறினான்.

“நான் இப்போ நல்லா தேறி வந்துட்டேன்! என்னால முன்ன மாதிரி வேபாரம் பார்க்க முடியும்! அப்புறம் ஏன் இந்த பிடிவாதம்? அப்பா! உங்க மகன் கிட்ட சொல்லி வைங்க, என்னை பேஜார் பண்ணா டங்குவாரு அந்துப் போயிடும்னு” என இவளும் எகிறினாள்.

குழந்தை முன்னே சண்டையிடக் கூடாது என குட்டி கோபாலை அறையில் படுக்க வைத்திருந்தவர்கள், பெரிய கோபாலை நடுவராக்கி அவர் தலையை உருட்டினார்கள்.

“என் விதி, பொறந்ததுல இருந்து வேலை வேலைன்னு ரோட்டுல சுத்திகினு இருந்தேன்! என் மவனுக்கு என்னடி தலை எழுத்து அப்படி நம்ம கூட ரோட்டுல வந்து நிக்க! நம்ம கஸ்டம் நம்மோட போட்டும்! அவன ராஜா மாதிரி வளக்கனும்டி மல்லி!”

“தோ பாரு மாமா! புள்ளைங்கல நம்ம கஸ்டத்தக் காட்டித்தான் வளக்கனும்! நாம நாய் படாத பாடு பட்டுக்கிட்டு, அவன மட்டும் ராஜா மாதிரி வளத்தா வாழ்க்கையோட கருப்புப் பக்கம் தெரியாம போய்டும் மாமா! எதா இருந்தாலும் அதான் அம்மாவும் நைனாவும் இருக்காங்களே, அவங்க பாத்துப்பாங்கன்னு அலட்சியம் வந்துடும். இந்தக் காலத்துப் புள்ளைங்க கெட்டு குட்டிச்சுவரா போறதுக்கு இதான் காரணம் மாமா!”

“கண்ணு சொல்றதும் சரிதான்டா மவனே”

“எல்லாம் ரைட்டுத்தான்! அதுக்குன்னு ரெண்டு மாச கொழந்தைய எண்ணேய் சட்டி இருக்கற எடத்துல வச்சிக்கனுமா மல்லி! எனக்கு மனசு கேக்கலடி” என சோகக் குரலில் சொன்னவனை ஆழ்ந்துப் பார்த்தாள் மல்லி.

“சரி மாமா நான் வரல! ஆனா..”

“என்னடி?”

“உனக்கு அஞ்சு மாசம் டைம் குடுக்கறேன்! கடை ஒன்னு பாரு மாமா!”

அவள் சொன்னதைக் கேட்டு, அப்பாவும் மகனும் ஆவென வாயைப் பிளந்தனர்.

“இன்னா மல்லி வெளாடறியா? ஹோட்டல் வைக்கறதுனா பிஸ்கோத்து வேலைன்னு நெனைச்சியா?”

அவனை நிமிர்ந்து தீர்க்கமாய் பார்த்தவள்,

“ஏன் மாமா, இன்னும் எத்தனை நாளுக்குத்தான் மழை வெயில்லுன்னு வானம் பாத்து பொழப்பு நடத்தப் போறோம்? மழை வச்சு அடிச்சா கடைய மூடிட்டு எப்படா மழை நின்னு வெயில் வரும்னு எத்தனை நாளுக்கு வீட்டுல அடைஞ்சிக் கிடக்கப் போறோம்? அடிக்கற பேய் காத்துக்கு எப்ப கடை ரோட்டோட அடிச்சிக்கிட்டுப் போயிடுமோன்னு எத்தனை நாளைக்கு உசுர புடிச்சிட்டு வேலைப் பார்க்கப் போறோம்? போதும் மாமா, போதும்! ரோட்டுல நின்னதெல்லாம் போதும்!”

“தேவா! ஹோட்டல் வைக்கனும்னா கடைக்கு அட்வான்சு குடுக்கனும், வாடகை குடுக்கனும், பண்ட பாத்திரம் வாங்கிப் போடனும், மேசை நாக்காலின்னு செலவு பண்ணனும், கரண்டு காசு கட்டணும், தண்ணிக் காசு கட்டணும்! இப்படி ஏகப்பட்ட செலவு இருக்கும்டி! நம்மால முடியுமா?”

“ஹோட்டல்ல சின்ன வயசுல இருந்து வேலைப் பார்த்திருக்கீங்க! என்ன செய்யனும், ஏது செய்யனும்னு உங்களுக்கும் அப்பாவுக்கும் நல்லாவே தெரியும்! ஒரு முயற்சி செஞ்சுப் பார்ப்போம் மாமா! சரியா வரலனா மறுபடி வெக்கமே படாம கையேந்தி பவன ஆரம்பிச்சுடலாம்!” என தன்னம்பிக்கையுடன் சொன்ன மனைவியை ஆதூரமாகப் பார்த்தான் இவன்.

மனைவியின் பிடிவாதத்தால்தான் கடை தேட ஆரம்பித்தான் ஜெய்சங்கர். கையேந்தி பவனையும் பார்த்துக் கொண்டு, இந்த வேலையையும் சேர்த்து செய்தான். நல்ல இடத்தில் சின்னதாக ஒரு கடை வாடகைக்கு வந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த இடத்தில் இருந்த கடைக்கு வாடகையும் அதிகமாக இருந்தது! அதோடு மூன்று மாத அட்வான்ஸ், லொட்டு லொசுக்கு என எங்கேயோ போனது பட்ஜேட். இடிந்துப் போய் அமர்ந்தவன் முன்னே பணக்கட்டை நீட்டினாள் பவளமல்லி. ரூபாய் வாரியாக மடித்து ரப்பர் பேண்ட் போட்டு மொத்தமான கட்டாய் இருந்த நோட்டுக்களைப் பார்த்தவன், மனைவியையும் நிமிர்ந்துப் பார்த்தான்.

இவ்வளவு நாட்கள் வேர்வை சிந்தி, மூளையைக் குடைந்து அவள் சம்பாதித்த அத்தனையும் அந்த ரூபாய் கட்டில் இருந்தது.

“என்னடா, இத்தனை நாள் கண்டுக்காம இப்போ பணத்தை நீட்டறானு பார்க்கறியா மாமா? உடனே எடுத்துக் குடுத்துட்டா உனக்கு பொண்டாட்டி அருமை தெரியாம போய்டுமே! நீயும் எப்படியும் சமாளிச்சிருவன்னு பார்த்தேன்! ஆனா முடியாம இடிஞ்சுப் போய் நிக்கறப்போ, உதவி செய்யலைனா நாம புருஷன் பொண்டாட்டின்னு இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு!” என சிரித்தவளை வாரி அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

தாம்பத்தியம் என்பது என்ன? உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்துக் கொள்வது மட்டுமா? இணைக்கு கஸ்டம் என ஒன்று வந்தால் மொத்தத்தையும் பகிர்ந்துக் கொள்வதுதான் தாம்பத்தியம். அதில் இந்தப் பணமும் அடக்கம். ஆனாலும் பாத்திரம் அறிந்து பிச்சையிடு எனும் ஒரு வாசகம் இருக்கிறது! சங்கர் மாதிரி கணவனுக்கு எதையும் கொடுக்கலாம்! சுயநலமாக இருக்கும் மனிதனுக்கு(கணவனுக்கு) கொடுக்கும் முன் தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் எனும் வாசகத்தை நினைவில் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.(அவங்க கஸ்டப்படறப்ப மனசு கேக்காம இருக்கறத எல்லாம் நாம வழிச்சுக் குடுப்போம்! அதுவே நல்ல நிலைல இருக்கறப்போ மனைவிக்குன்னு செய்ய ஆயிரம் முறை யோசிக்கற கணவரும் இருக்காங்க! இப்படி ஒரு ஹஸ்பெண்ட் உள்ளவங்க உஷாரா பொழச்சிக்குங்க! கண்டிப்பா கொஞ்சம் உங்களுக்காக சேமிச்சு வைங்க! எதாச்சும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்குங்க டியர்ஸ்!)

மல்லி கொடுத்தப் பணத்தையும் தன்னிடம் இருந்த பணத்தையும் போட்டு ஹோட்டலை திறந்தான் ஜெய்சங்கர். ஏற்கனவே இருந்த அனுபவம் கைக் கொடுக்க, வியாபார சூட்சுமத்தை சட்டென பற்றிக் கொண்டான் இவன். இவனோடு சேர்ந்து, கோபாலும் மல்லியும் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். கையேந்தி பவனுக்கு வாடிக்கையாய் வருபவர்களிடம் கடை விபரம் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் வியாபாரம் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை.

ஓய்ந்துப் போன கணவனைத் தேற்றினாள் மல்லி.

“சாப்பாடு ருசியா இருந்தா எங்கிருந்தாலும் ஆளுங்க வரத்தான் செய்வாங்க மாமா! நம்ம சாப்பாடு ரொம்பவே நல்லா இருக்கு! ஆனா வெளியே யாருக்கும் தெரியாம இருக்கு! தெரிய வைக்கனும்! அதுக்கு என்ன வழின்னு பார்ப்போம்” என்றவள் அன்றாட வேலைகளோடு இதையும் சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.     

அந்த ஏரியாவில் வேலைப் பார்க்கும் ஆட்களும், கடை வீதிகளுக்கு பொருள் வாங்க வரும் ஆட்களும் மட்டும் சாப்பிட வந்துப் போனார்கள். வந்தவர்கள் ருசி பிடித்திருக்க மறுபடியும் வந்தார்கள். ஆனாலும் கொடுக்கும் வாடகைக்கு வருமானம் கட்டி வராமல் அல்லாடித்தான் போனார்கள் இவர்கள்.

குழந்தையை கடையிலேயே ஒரு இடம் பார்த்து வைத்துக் கொண்டாள் மல்லி. வேலையையும் பார்த்துக் கொண்டு மகனையும் கவனித்துக் கொண்டாள். அவள் மட்டும் அல்லாது கோபாலும் சங்கரும் கூட வேலையோடு வேலையாக குட்டி கோபாலையும் கவனித்துக் கொண்டார்கள்.

கொஞ்சம் ஓய்வாய் இருக்கும் போது எப்பொழுதும் போல யூடியூப்பில் சமையல் பார்த்துக் கொண்டிருந்த மல்லிக்கு, சட்டென பல்ப் எரிந்தது. உணவு ரிவீயூ கொடுக்கும் பல சென்னல்களில் சென்னையில் இருக்கும் பத்து செனல்களுக்கு, ‘எங்கள் கடைக்கும் வந்துப் பாருங்கள், அசந்துப் போவீர்கள்!’ என கடை பெயர், முகவரி முதல் கொண்டு கமேண்ட் செய்தாள். அப்பாடக்கர் செனல்கள் கண்டுக் கொள்ளா விட்டாலும், இப்பொழுதுதான் சிறகை விரிக்க ஆரம்பித்திருக்கும் சேனலில் இருந்து ஒருத்தன், நண்பனுடன் வந்தான். அவர்களுக்கு இலவசமாக உணவுக் கொடுத்து, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து ஸ்டைலாக சங்கர் போடும் கொத்து பரோட்டாவை படம் எடுக்க வைத்தாள் பவளமல்லி. சங்கருக்காக கூட்டம் வந்ததோ, இல்லை செனலின் உரிமையாளன் ரசித்து ருசித்து விரலை சப்பி உண்டதைப் பார்த்து கூட்டம் வந்ததோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஆனால் கூட்டம் வந்தது! இவர்கள் மூவர் சமாளிக்க முடியாத அளவுக்குக் கூட்டம் வந்தது.

இரண்டு வருடங்கள் எடுத்தது நன்றாக லாபம் பார்க்க! மகனோடு கடை வியாபாரமும் தாறுமாறாக வளர்ந்தது. இப்பொழுது வீட்டைக் கட்டலாம் என முடிவெடுக்க, வந்தது கடை முதலாளியால் தொல்லை. தன் கடையால்தானே வளர்ச்சி என வாடகையை எக்கச்சக்கமாக ஏற்றிக் கேட்டார் மனிதர்.

சங்கர் கோபத்தில் கொதிக்க, அமைதியாய் யோசனையில் ஆழ்ந்தாள் மல்லி. கடை இருந்தாலும் முன்பு செய்து வந்த எந்த தொழிலையும் இவள் விட்டு விடவில்லை. காந்திமதியை ஏஜெண்டாக மாற்றி மாவு வியாபாரம் செய்தாள். நகை சீட்டையும் தொடர்ந்துக் கொண்டிருந்தாள். அதில் வரும் பணத்தைத் தனியாக சேமித்து வந்தாள். அவளிடம் வாங்கிய பணத்தை லாபம் வர ஆரம்பித்த உடனே சங்கர் திருப்பிக் கொடுத்திருக்க, அதையும் சேமித்து வைத்திருந்தாள்.

“இவனுங்களோட படா பேஜாரா போச்சிடா மவனே! இன்னமோ இவன் கடை ராசிக்குத்தான் நமக்கு வேபாரம் பிச்சிக்கினு போதுன்ற மாதிரி பேசறான் பேமானி!”

“ஒருத்தன் முன்னேறி வந்தா பொறுக்காது நைனா நம்மாளுங்களுக்கு. நண்டு மாதிரி கீழ இழ்த்து வுட்டுருவானுங்க! ரெண்டு மடங்கு வாடகை கேட்டாக் கூட பர்வால! மூனு மடங்கு கேட்டா, நாம பொழைக்கறது இல்ல!” என இவனும் ஆதங்கத்தை கோபமாய் வெளிப்படுத்தினான்.

“இந்தாங்க ரெண்டு பேரும் காபி குடிங்க!” என காபி கொடுத்து மலை இறக்கினாள் இருவரையும்.

இடுப்பில் இருந்த மகனோ,

“நானுக்கு!!!” என காபி தம்ளரைப் பார்த்துக் கேட்டான்.

அவனுக்கு அதே போல தம்ளரில் நன்றாக ஆற்றி, பாலை ஊற்றிக் கொடுத்தாள் மல்லி.

“உனக்கு தேவா?” என கேட்ட சங்கர் தனது தம்ளரில் இருந்து அவளுக்கு ஒரு வாய் கொடுக்க, குட்டியும் தனது தம்ளரில் இருந்து கீழே மேலே ஊற்றி தனது அம்மாவுக்குக் கொடுத்தான். இவளுக்கு முகமெல்லாம் புன்னகை. தகப்பன்தான் அவனுக்கு குரு! அவனைப் போலவே சில பல வேளைகளில் தாயை,

“டேவா!” என கூப்பிடுவான் குட்டி கிருஷ்ணன்.

“நைனா செல்லம்! வாங்க இங்க!” என மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான் சங்கர்.

“நைனா ச்செல்லோம், டேவா ச்செல்லோம், தாதா ச்செல்லோம்” என ஒவ்வொருவரையும் காட்டி சொன்னான் குட்டி.

அவன் மழலையில் மனம் லேசாக மூவரும் சிரித்துக் கொண்டார்கள்.

“பேசாம நாமும் ஒரு கடை வாங்கிடலாம் மாமா” என இரவின் தனிமையில் தூங்கி விட்ட மகனின் தலையை வருடியபடி சொன்னாள் மல்லி.

“வடை வாங்கற மாதிரி கடை வாங்கலாம்னு சொல்ற! இன்னாடி கிறுக்குப் புடிச்சிருச்சா!” என கேட்டான் இவன்.

“லோகேஷ்னு(low cash) பேரு இருந்தாலும் லாட்டரி விழுந்தா அவனுக்கும் ஹை கேஷ்(பணம்/high cash) வந்துடும் மாமா!”

“தோடா! அந்தாளு கூட சேராதன்னு சொன்னா கேக்கறியாடி! பாரு இப்போ நைனா மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம இந்த மைனாவும் பேசற!” என கடுப்பானான் இவன்.

அவன் முகம் போன போக்கைப் பார்த்து வாய் பொத்தி சிரித்தவள், நடுவில் இருந்த மகனைத் தள்ளி படுக்க வைத்து விட்டு கணவனின் அருகே நெருங்கி அமர்ந்தாள்.

“இன்னா மயிலு சிர்ச்சிக்கின

இங்க வந்து ஒர்சிக்கின” என பாட்டாவே பாடியவனை கட்டிக் கொண்டவள்,

“வீடு கட்டறதுக்கு சேர்த்த பணம் இருக்கு! நான் சேர்த்து வச்சப் பணமும் இருக்கு மாமா! இப்போதைக்கு தலைக்கு மேல ஒரு கூரை இருக்கு நமக்கு! அது போதும். மொதல்ல கடை வாங்குவோம்! அப்புறம் செட்டிலாகிட்டு வீடு கட்ட ஆரம்பிப்போம்” என சொன்னவளை அழுத்தமாய் அணைத்துக் கொண்டான் இவன்.

சென்னையில் இவர்கள் பட்ஜெட்டுக்கு கடை கிடைத்து விடுமா என்ன! புறநகர் ஏரியாவில் சின்னதாக கடை வாங்கியவர்கள், மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார்கள். காலையில் இருந்து இரவு வரை அயராத உழைப்புத்தான். அதற்கு பிறகு ஏறுமுகம்தான் சங்கரின் குடும்பத்துக்கு. சின்னதாய் ஆரம்பித்தக் கடையை எடுத்துக் கட்டி நடுத்தரமாக்கினார்கள். ஏற்கனவே சங்கர் வாங்கி இருந்த நிலத்தில், சில வருடங்கள் கழித்து மூன்று அறை, ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு குளியலறை என கச்சிதமாக ஒரு வீட்டைக் கட்டினார்கள். குட்டி கோபாலின் ஆறு வயதில் அந்த வீட்டுக்குக் கிரகபிரவேஷம் செய்து குடியேறிய தினம் கதறி அழுதுவிட்டான் ஜெய்சங்கர்.

“டேய்! இன்னாடா நீ! நல்ல நாளும் அதுவுமா கண்ணீர் வுட்டுக்கினு!” என கோபால் சத்தம் போட,

“என் வீடு நைனா! சொந்த வீடு! ரோடு ரோடா பிச்சை எடுத்து ப்ளாட்பாரத்துல தூங்கிக்கினு இருந்த இந்த ஜெய்சங்கர் கட்டுன சொந்த வீடு! என் வீடு! நம்ம வீடு” என மற்ற மூவரையும் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டான் ஜெய்சங்கர்.

அன்று விருந்தாட வந்த ஹவுசிங் போர்ட் மக்களுக்கு, புகுமனை விழாவுக்கு சைவமாய் இருக்க வேண்டுமென சொல்லி வெஜிடேபிள் பிரியாணி போட்டு அனுப்பினான் இவன்.

“டேய் பிசினாரி சங்கரு! கோழி போடவே மாட்டியாடா?” என ஆதங்கமாய் ஒருவன் கேட்க,

“போட்டுருக்கேனே! நல்லா தேடி பார்டா என் வெண்ட்ரு! பிரியாணில ப்ரோகோலி(ழி) போட்டுருக்கேன்” என பதில் சொன்னான் கெஞ்ச கேப்மாரி சங்கர்.

வாழ்க்கையில் உழைப்பு ஒன்றே பிரதானமாய் இருக்க, கொஞ்சம் ஒரு நிலையை அடைந்ததும் குடும்பமாக ப்ளைட்டில் சுற்றுப் பயணம் போனார்கள் இவர்கள் நால்வரும்! மல்லியின் நெடுநாள் ஆசையை நிறைவேற்றியவன் கெத்தாய் பார்க்க, அவள் காதலாய் பார்த்தாள் தன்னவனை.

“இங்கின இருக்கற மதுரைக்கு ப்ளைட்டுல கூட்டிக்கினு வந்துட்டு, இன்னமோ மலேசியாவுக்கு கூட்டிக்கினு போன மாதிரி மெதப்பா பார்க்கறான் பாருமா மகளே!” என சின்னவனுக்கு கேட்காத மெல்லிய குரலில் மகனைக் கலாய்த்தார் கோபால்.

“ஒன்னை மட்டும் ப்ளைட்டுல வித்தவுட்ல கூட்டிகினு வந்துருக்கனும் நைனா!” என கடுப்பாய் சொன்னாலும், இனி வருடா வருடம் இப்படி உள்நாட்டிலேயே குடும்பத்தை சுற்றுப் பயணம் கூட்டி செல்ல வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

வாழ்க்கை ஒரு சீராய் போகவும், தங்களது இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர் இருவரும்.

“தேவா, தேவா! ஓடிவா! வந்து பாரேன் நம்ம மவன” எனும் கணவனின் குரலில் சமையல் இடத்தில் பழைய நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தவள் வெளியே வந்தாள்.

ஆறாம் நம்பர் மேசையில் ஒரு ஆங்கிலேய ஜோடி தங்கள் குட்டிக் குழந்தையுடன் அமர்ந்திருக்க, இவர்களின் குட்டி கோபாலன் அவர்கள் அருகே மெனுவுடன் நின்றிருந்தான்.

“நம்ம கடை பயலுங்க எல்லால் பெப்பேன்னு முழிச்சிக்கினு நின்னானுங்க அந்த வெள்ளைக்காரன் பேச்சுக்கு. நம்ம மவன், புக்க மூடி வச்சிட்டு மெனு கார்ட்ட எடுத்துட்டு வேய்ட்டர் அவதாரம் எடுத்துட்டான்”

அடிக்கடி அங்கே நடக்கும் நிகழ்வுதான் இது. சின்னதில் இருந்தே நம் ஹோட்டல், நாம்தான் செய்ய வேண்டும் என மல்லியால் பழக்கப்படுத்தப்பட்டிருந்தான் குட்டி. அவன் நைனா, தாத்தாவைப் போல பரோட்டா போடவும் தெரியும், அம்மாவைப் போல கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யவும் தெரியும் அவனுக்கு.

சரளமான ஆங்கிலத்தில் உரையாடி அவர்களுக்கு ஆர்டர் எடுத்தவன்,

“நைனா, சிக்கன் கொத்து ரெண்டு!”,

“அம்மா, மெது வடை மூனு! அப்படியே பில்டர் காபி ரெண்டு!” என குரல் கொடுத்தான்.     

திரும்பி அவன் மேசைக்கு வரும் முன், சுமார் நான்கு வயது இருக்கும் அந்த வெள்ளையர்களின் குழந்தை இவனைப் பார்த்து சிரிக்க, இவனும் அதன் கன்னம் தட்டி,

“கியூட்டி ஃபை!” என கொஞ்சி விட்டுப் போனான்.

“நீ பதினஞ்சு வயசுல பாமா கையைப் புடுச்சு இழுத்த! ஒன் மவேன், என் செல்லப் பேரன் ஏழு வயசுலயே வெள்ளைக்காரி கன்னத்தைப் புடிச்சிட்டு போறான்! விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா மொளைக்கும்!” என போகிற போக்கில் சொல்லி விட்டுப் போக, பத்ரகாளியாய் கணவனை முறைத்தாள் மல்லி.

“யாரது பாமா?”

“யோ நைனா! நாரதர் வேலை பார்த்துட்டல்ல! இரு வரேன் உனக்கு!” என நழுவப் பார்த்தவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் மல்லி.

“யாரு பாமா?”

“அடப்போம்மா! அப்போ பக்கத்து வூட்டுல இருந்துச்சு பாமா. எனக்கு சோறுலாம் போடும். அன்பா நாலு வார்த்தைப் பேசும். நம்ம கூடவே ஒரு பொண்ணு இருக்கனும்னா என்ன உறவா  இருக்கனும்னு இந்த நாரதர் நைனாக்கிட்டத்தான் கேட்டேன் மல்லி. பொண்டாட்டியா இருக்கனும்னு சொன்னாரு! அதான் என் பொண்டாட்டியா வா பாமான்னு கையைப் புடிச்சேன்! அது ஒரு மேட்டர்னு அந்த பாமா புருஷன் நைனாவ அப்பு அப்புன்னு அப்பிட்டான்!” என சொல்ல பொங்கி சிரித்தாள் மல்லி.

“ஏ பாத்துடி! வயித்தப் புடிச்சிக்கப் போகுது!” என இவன் பதறும் அளவுக்கு சிரித்தாள்.

மகனோ அம்மாவின் சிரிப்பொலியில் ஓடி வந்து மல்லியைக் கட்டிக் கொண்டான். மூவரையும் கண்ணில் கண்ணீருடனும் உதட்டில் சிரிப்புடனும் பார்த்திருந்தார் கோபால்.

அன்றிரவு சின்ன கோபால் பெரிய கோபாலுடன் படுத்துக் கொள்ள, கிடைத்ததடா சான்ஸ் என குதூகலத்துடன் மல்லிகையை கையில் சுற்றிக் கொண்டு மைனர் போல ரூமில் நுழைந்தான் ஜெய்சங்கர். கட்டிலில் சாய்ந்துப் படுத்திருந்த தன் மல்லியை அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்தடியில் வாசம் பிடித்தான்.

“கல்யாணமாகி இத்தினி வருஷமானாலும் சும்மா கும்முன்னு இருக்கடி மல்லி, என் கள்ளி! ஒன்னப் பார்த்தாலே,

‘மல்லி மல்லி செண்டு மல்லி

ஆளை அசத்துதடி’ன்னு பாட சொல்லுது! ஆனாலும் என் மவன் புண்ணியத்துல அடிக்கடி பாட முடியல! நைனா, நைனானு என்னை அங்க இங்க அசைய விடாம இரும்புப் புடி போட்டு கட்டிப் புடிச்சுப் படுத்துக்கறான்! அவன வச்சிக்கினு ரெண்டாவது ரெடி பண்ணறதுக்குள்ள நாம பட்டப்பாடு!” (இந்தப் பாட்ட சஜேஸ்ட் பண்ணி கமேண்ட் போட்ட சகோதரிக்கு நன்றி!) என்றபடியே அவள் முகத்தைத் திருப்பி முத்தமிட்டான் இவன்.

முத்தமிட்டு அடுத்தக் கட்டத்தை எட்ட முனைந்தவனைத் தள்ளி விட்டாள் இவள்.

“இன்னாடி! பொசுக்குன்னு மாமான தள்ளி வுட்டுட்ட! இன்னிக்கும் என் ஆசைலாம் சொய்ங்குன்னு சுட்ட தோசையாகிடுச்சா! ஓ மை கடவுளே!” என புலம்பியவன்,

“இன்னா மல்லி? ஒடம்பு எங்கயாவது நோகுதா? டாக்டர்ட்ட போலாமா?” என அக்கறையாக கேட்கவும் தவறவில்லை.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா! இப்போ நமக்கு ரெண்டாவதா ஒரு பாப்பா வரப் போகுது!”

“ஆமா வரப்போகுது! அதுக்கு?”

“அதுக்கு இப்படியே வர வருமானம் போதும்னு இருந்துட்டாப் ஆகுமா?”

அவள் கூற்றில் ஜெர்க்கானவன், கலவரமாக அவள் முகத்தைப் பார்த்தான்.

“மனுஷன அக்கடான்னு வுடமாட்டியாடி? இப்போ இன்னா ப்ளானு பண்ணிருக்க நீ?”

“டொட்டடொய்ங்க்!!!!!” என அவள் காட்டிய அச்சடித்த நோட்டிஸ் தாளில் பெரிதாக போடப்பட்டிருந்த வாசகத்தைப் படித்துக் காட்டினாள் மல்லி.

“ஆபிஸ் கிளினிங் காண்ட்ராக்ட்!!!”

அடுத்த அவதாரம் எடுக்க வியாபார காந்தம் பவளமல்லி தயாராகி விட்டாள். அவளுக்குப் பின்னால் அவள் அப்பா கண்டிப்பாக வருவார்! ஏனென்றால் இவள் அவரின் கண்ணல்லவா! அவள் கணவனும் பக்கபலமாக இருப்பான்! ஏனென்றால் இவள் அவன் காதல் பெண்ணல்லவா! (ஷப்பாடா! இந்தத் தலைப்ப உள்ள கொண்டு வரதுக்குள்ள எனக்கு டப்பா டான்ஸ் ஆடிருச்சு! நைனாவும் மவனும் பிச்சி பிச்சி எடுத்துக்கிட்டாலும் கண்ணே காதல் பெண்ணேன்னு தலைப்பு வந்திடுச்சு! நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்). அவர்களோடு மகனும் ஏன் வயிற்றில் இருக்கும் மகளும்(எப்படி மகள்னு கேக்கறீங்களா? நான்தானே ஆத்தர்! அப்போ நான் சொல்றதுதான் கரீக்டு) கூட துணை நிற்பார்கள்.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே எனும் பாடலை அழித்து, அடித்துத் திருத்தி,

“சிங்கக் குடும்பம் ஒன்று புறப்பட்டதே!!!!” என பாடுவோம் வாருங்கள்!

 

முற்றும்.

 

(இந்தக் கதையில என்னோடயும், மல்லி, பரோட்டா, நைனாவோடவும் பயணித்த அனைவருக்கும் மிக்க நன்றி! மனசுக்குத் திருப்தியா இந்தக் கதைய எழுதனேன்! நான் சொல்ல நினைச்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன்! அவங்க வாழ்க்கை முறை, ஹவுசிங் போர்ட் வீடு, பரோட்டா போடறதோட கஸ்டம், உணவுத் துறையில இருக்கறவங்க படற பாடு, கிளினிங் வேலையில வர கஸ்டம், பெண்ணுக்கு வர கொடுமைகள், புருஷன் பொண்டாட்டியோட ஆரம்பக்கால மோதல், பின் புரிந்துணர்வு, இப்படி பல விஷயங்கள சொல்லிருக்கேன்! சூரியவம்சம் மாதிரி ஒரு பாட்டுல முன்னேறாம, கொஞ்சம் கொஞ்சமா அவங்க முன்னேறி வந்ததாத்தான் காட்டிருக்கேன்! இன்னும் கூட அவங்க அம்பானி ஆகல! ஆனா ஒரு காலத்துல அதாவது அவங்க மகன் காலத்துல ஆகறதுக்கு சான்ஸ் ரொம்பவே இருக்கு! மல்லி மாதிரி ஒரு மனைவி இருந்தா, நிறைய ஜெய்சங்கர் உருவாகலாம். அதே மாதிரி சங்கர் மாதிரி ஒரு புருஷன் இருந்தா, மல்லி மாதிரி நிறைய பெண்கள் குடும்பத்த முன்னேற்றிக் கொண்டு வரலாம்! மல்லியோட அம்மாவயும் அவரோட புருஷனையும் நடுவுல கொண்டு வரப் பிடிக்கல! அவங்க சேப்டர அப்பொவே க்ளோஸ் பண்ணிட்டாரு கோபால்! சோ அது அப்படியே இருக்கட்டும்! எப்பொழுதும் போல இந்தக் கதைக்கும் ஆதரவு குடுப்பீங்கன்னு நம்பறேன்! நீங்க குடுக்கற ரிவீயூதான் எனக்கு உந்து சக்தி! சின்னதோ பெரியதோ, தமிழோ தங்கிலிசோ உங்க கருத்த மறக்காம சொல்லுங்க டியர்ஸ்! இதுக்கு மேல பல கடமைகள் வரிசைக் கட்டி நிக்கிது! எல்லாத்தையும் முடிச்சுட்டு மெதுவாவே வரேன்! அடுத்த கதையுடன் சந்திக்கும் வரை, லவ் யூ ஆல்! டேக் கேர் டியரிஸ்)