Kanne Kadhal Penne–EPI 2

239948099_925484634705538_288795760143811764_n-b8ced3c3

அத்தியாயம் 2

ஜிகர்தண்டா என்றால் இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம் எனப் பொருள்படுமாம். மதுரையில் மட்டுமில்லாமல் சென்னையின் ரோட்டோரக் கடைகளிலும் இந்த பானம் மிகவும் பிரபலம். மலேசியா, சிங்கப்பூரில் கூட இந்த பானம் சில உணவுக் கடைகளில் கிடைக்கிறது

 

நடுத்தர மக்கள் பலர் வசிக்கும் அந்த குடியிருப்புப் பகுதியை நெருங்கும் போதே மனம் சோர்ந்துப் போனது பவளமல்லிக்கு. வேலை முடிந்து வீட்டுக்குப் போவது என்றால் ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு உற்சாகமாக இருக்கும். ஆனால் இவளுக்கோ வீட்டுக்குப் போவது என்னவோ சிறைச்சாலைக்குப் போவது போலவே தோன்றும். பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவளை ஓடி வந்துக் கட்டிக் கொண்டாள் அந்த வீட்டின் இளைய வாரிசு.

“அக்கா, பரோட்டா?” என கேட்டவளைப் பார்த்து முறுவலித்தாள் இவள்.

“வாங்கிட்டு வந்திருக்கேன்! தட்டுல போட்டுத் தரேன் வா” என சொல்லியபடியே சின்னவளுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள் பவளமல்லி.

பவளமல்லியைப் பார்த்ததும் மூத்தது இரண்டும் மூக்கைப் பொத்திக் கொண்டு ரூமின் உள்ளே ஓடியதைப் பார்த்து இவளுக்கு கோபம் பொங்கியது. பொங்கும் பாலை தண்ணீர் தெளித்து அடக்குவது போல பொங்கிய கோபத்தை தண்ணீர் அருந்தி அடக்கினாள் இவள்.

“அக்கா போய் குளிச்சிட்டு வந்து பரோட்டா போட்டுக் குடுக்கறேன் பிரதி” என சொல்லி, ஏழு வயது பிரதியை சாப்பாட்டு மேசை மேல் அமர்த்திவிட்டு ஓடி போய் அவசர அவசரமாகக் குளித்து விட்டு வந்தாள்.

ஏற்கனவே அவன் பிய்த்துக் கொடுத்திருந்த பரோட்டாவைத் தட்டில் வைத்து சால்னா ஊற்றி தங்கைக்குக் கொடுத்தாள். இன்னும் இரண்டு தட்டுகளிலும் அதே போல எடுத்து வைக்க, மற்ற இருவரும் நைசாக வந்து மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். பால் கொதிக்க வைத்து டீ ஆற்றி மூவருக்கும் கொடுத்தவள் தனக்கும் சின்ன டம்ளரில் கொஞ்சம் ஊற்றிக் குடித்தாள். மீதத்தை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தவள், இரவு சமையலுக்கு வேண்டிய ஆயத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

“ஏ மல்லி!”

நிமிர்ந்து தனது அம்மாவைப் பார்த்தாள் அவள். அல்லது முதலாளி அம்மாவென சொல்ல வேண்டுமோ! அப்பொழுதுதான் பகல் தூக்கம் தூங்கி எழுந்து முகத்தைக் கழுவித் துடைத்தப்படி வந்தார் கனகா. துடைத்து வைத்தக் குத்து விளக்கைப் போல அழகாய், அம்சமாய் இருந்த கனகாவை ஏறிட்டுப் பார்த்தாள் மல்லி. தோற்றத்தில் குத்து விளக்காய் இருந்தாலும், அவர் ஒரு குத்தும் விளக்கு என அறிந்து வைத்திருந்தவள் அவரிடம் அடங்கியேப் போய் விடுவாள்.

“நைட்டுக்கு இட்லி அவிச்சு ரெண்டு வகை சட்னி செஞ்சிடு. அப்படியே இவங்க அப்பாவுக்கு காரசாரமா கறி குழம்பு வச்சிடு. இப்போ எனக்கு டீ குடு, தொண்டைக் காஞ்சுப் போச்சு” என சொல்லியபடியே நாற்காலியில் அமர்ந்த கனகா பிள்ளைகள் பரோட்டா சாப்பிடுவதைப் பார்த்து,

“கண்ட கண்ட கடைல வாங்கனதுலாம் என் பிள்ளைங்களுக்குத் தராதேன்னு எத்தனை தடவை சொல்லறது?” என கத்திக் கொண்டே மூத்தவள் தட்டில் இருந்து கொஞ்சமாய் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

வாங்கி வந்தாலும் கத்துவார், வாங்கி தராவிட்டாலும் கத்துவார்.

“என் புள்ளைங்க கேட்டதக் கூட வாங்கிக் குடுக்காம, காச சேர்த்து வச்சி எவன் கூட ஓடிப் போக ப்ளானு?” என கேட்டு இன்னும் சில பல கெட்ட வார்த்தைகளை எடுத்துக் கட்டிக் கோர்த்து இவள் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விடுவார் கனகா.

என் பிள்ளைகள், இவங்க அப்பா எனும் வார்த்தைகள் எப்பொழுதும் போல நெஞ்சைக் கீறிக் கிழிக்க அமைதியாய் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பவளமல்லி. அவள் சமைக்கட்டும், அடுப்படியில் ஓர் ஓரமாய் நின்று பெண்ணவளைக் கொஞ்சம் ஆராயலாம் வாருங்கள்.

பவளமல்லி, பெயருக்கு ஏற்றது போல வெளேரென இல்லாவிட்டாலும் மாநிறத்தில் அழகாகவே இருந்தாள். சராசரி பெண்களை விட உயரம் கொஞ்சம் கம்மி. கிள்ளி எடுக்க சதை இல்லாத அளவு ஒல்லி உடல்வாகு. கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் நடுவே ஒரு முட்டையை வைக்கும் அளவுக்கு குழி இருக்கும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இவள். காற்று கொஞ்சம் வேகமாய் அடித்தால் விமான டிக்கேட் எடுக்காமலே பறந்து பயணம் செய்யக் கூடிய அத்தனை தகுதியும் இவளுக்கு உண்டு.

மூன்று வயதில் ஒரு கோர விபத்தில் தாய் தந்தையைப் பறி கொடுத்திருந்தாள் பவளமல்லி. மூவரும் பயணப்பட்ட மோட்டார் வாகனம் லாரி ஒன்றால் அடித்து வீசப்பட்டதில் சம்பவ இடத்திலே இவள் பெற்றோர் உயிரிழந்திருந்தனர். கடைசி நேரத்தில் கூட மகளைக் காக்க வேண்டி அவளை அணைத்துப் பிடித்து தன்னில் சுருட்டி வைத்து பாதுகாத்த அன்னையால் கால் எலும்பு முறிவோடு தப்பினாள் குட்டி மல்லி.

இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கு அடித்துக் கொண்ட சொந்தபந்தங்கள், அடிப்பட்டுக் கிடந்த குழந்தையின் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டனர். சற்று குணமானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டாள் பவளமல்லி. அங்கேயும் ஒரு வருடம்தான் இருந்திருப்பாள். நான்கு வயது பூர்த்தியாகும் போது ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டாள் இவள்.

இவளைத் தத்தெடுத்த கனகா, கதிரேசன் ஜோடிக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக பிள்ளைப் பேறு இல்லை. பிரச்சனை கதிரேசனுக்கு மட்டும்தான் என தெரிந்ததும் பூகம்பம், எரிமலை எல்லாம் வெடித்தது அவர்கள் வாழ்வில். பார்க்காத மருத்துவமில்லை, ஏறாத கோயில் குளமில்லை. எதுவும் கைக்கொடுக்கவில்லை அவர்களுக்கு.

தன்னால் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க முடியவில்லையே எனும் தாழ்வு மனப்பான்மையில் கொஞ்சமாக குடிக்க வேறு ஆரம்பித்திருந்தான் கதிரேசன். அப்பாவாக முடியாதவனுக்கு ஆண்மை இருந்து என்ன பயன் என தோன்றி விட, தாம்பத்திய உறவு எனும் சொல்லே அடியோடு கசந்ததுப் போனது அவனுக்கு. சம்சாரத்தை நெருங்கப் பயந்தவன், சரக்கை இறுக பற்றிக் கொண்டான்.  

கனகாவுக்கோ கணவனின் இயலாமையால் தன்னை எல்லோரும் மலடி என்கிறார்களே எனும் கோபம் உள்ளிருந்து வாட்டி வதைத்தது. நம் சமூகத்தில் பெண்ணுக்குத்தான் பிரச்சனை என பட்டென உடைத்து சொல்லி விடுமளவுக்கு, ஆணின் பிரச்சனையைக் கடைப் பரப்புவது இல்லையே! தாய்மையைக் கொடுக்காத கணவன், தன் தாபத்தையும் கண்டுக் கொள்ளாததில் உள்ளுக்குள் மரித்துப் போனாள் கனகா.

இந்தப் பிரச்சனையால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. எங்கே இவள் தனக்கு துரோகம் செய்து விடுவாளோவென இவன் வார்த்தையால் அவளை வதைக்க, என்னைக் கேள்வி கேட்டு என் நடமாட்டத்தைக் குறுக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என இவள் குதிக்க வாழ்க்கையே நரகமாகிப் போனது இருவருக்கும்.

“பிள்ளை இல்லன்னு இவன வெட்டி விட்டுட்டு இன்னொருத்தன கட்டனா, அவனுக்கு மட்டும் புள்ள இருக்கும்னு என்ன நிச்சயம்? இந்த மாதிரி அத்து விடறதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது. புருஷன் செத்து மறுகல்யாணம் பண்ணி வச்சா ஏத்துக்கற சமூகம், விவாகரத்துன்னா யாரு மேல குத்தமோன்னு கண்ணுல வெளக்கெண்ணெய விட்டுட்டு பார்க்கும்டி! உனக்கும் கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காளுங்க! அத யோசிச்சாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிப்போ கனகா! ஆத்தா அப்பன் இல்லாம எத்தனையோ புள்ளைங்க அனாதையா கிடக்குது. அதுல ஒன்ன எடுத்து வளத்தா புண்ணியத்துக்கு புண்ணியமா போகும், உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு இணக்கம் வரும்” என அழுது புலம்பிய மகளுக்கு அறிவுரை தந்தார் கனகாவின் அம்மா. பெரிய மகள் ஏடாகூடமாய் விவாகரத்து என போனால், தனது இளைய மகள்களின் வாழ்க்கை என்னாகுமோ எனும் பயம் அவருக்கு.

இரு வீட்டாரும் நெருக்கடித் தர, வேண்டா வெறுப்பாக தத்தெடுக்கப்பட்டவள்தான் பவளமல்லி. வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டவளை அன்பாய் அரவணைக்கவோ, ஆசையாய் கொஞ்சி மகிழவோ யாருமில்லை. அவளைப் பார்க்க பார்க்க கணவன் மனைவி இருவருமே இரு வேறு மனநிலையால் பாதிக்கப்பட்டார்கள். இப்படி ஒரு குழந்தையைக் கொடுக்க முடியவில்லை என்றுதானே என்னை இவள் கேவலமாக நடத்துகிறாள் என வெம்பிப் போய் குடிகாரனாக இருந்த கதிரேசன் மொடாக் குடிகாரனாக மாறினான்.

‘பெத்துக்க எல்லாத் தகுதியும் எனக்கிருந்தும் இப்படி ஒரு அனாதை பிள்ளையை கொண்டு வந்து நடு வீட்டுல உக்காத்தி வச்சிருக்காங்களே’ என வெந்து தகித்தாள் கனகா.

இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாய் பிள்ளை இருப்பாள் என இரு வீட்டுப் பெரியவர்களும் செய்த ஒரு செயல் சின்னவளின் வாழ்க்கையை சிதைத்துப் போட்டது.

வீட்டுப் பிள்ளையாய் கொண்டு வரப்பட்டவள் வேலைக்காரியின் அரவணைப்பில்தான் வளர்ந்தாள். இவளுக்கு ஆறு வயதான போது, இரவில் குடித்து விட்டுப் படுத்த கதிரேசன் காலையில் எழவில்லை. குடியோடு போதைப்பழக்கமும் இருந்தது என போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. போதை மருந்து ஓவர்டோஸ் ஆனதால் இறப்பு என டாக்டர் சர்டிபிகேட் வந்தது. கேசை விசாரித்த இன்ஸ்பெக்டரையே மறு மாதம் மணந்துக் கொண்டாள் கனகா. மணந்த ஏழு மாதத்தில், குறைப்பிரசவத்தில் எந்தக் குறையும் இல்லாமல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் அவள்.(இந்த பத்திய நல்லாப் படிச்சுட்டு, நாசுக்கா நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்குங்க டியர்ஸ்!)

அதன் பிறகு வேலைக்காரியின் அரவணைப்பில் வளர்ந்த பவளமல்லி வேலைக்காரியாகவே ஆகிப் போனாள். சொந்தக் குழந்தை வந்தப் பிறகு ஏற்கனவே வெறுப்புடன் பார்க்கப்பட்ட பவளமல்லி இப்பொழுது முழு அந்நியமாகிப் போனாள். அறியாத வயதில் பெற்றவர்களின் பாசத்தை அனுபவித்திருந்திருப்பாள். ஆனால் விவரம் தெரிந்ததில் இருந்து வேலைக்காரியின் அன்பு மட்டும்தான் பவளமல்லி அறிந்துக் கொண்டது. அவளும் இரவில் தன் வீட்டுக்குப் போய் விட்டால், தனிமைதான் மல்லியின் தோழி. ப்ளஸ் டூ வரைக்கும் கவர்மெண்ட் பள்ளியில் படித்தவளுக்கு படிப்பும் சுமாராகத்தான் வந்தது. வேலைக்காரிக்குத் துணையாய் வீட்டு வேலை, சமையல் என ஆரம்பித்து வேலைக்காரியாகவே மாறிப்போனாள். கனகாவின் மூன்றுப் பிள்ளைகளைப் பார்க்கும் ஆயா வேலையும் சேர்ந்துக் கொள்ள எங்கிருந்தது அவளுக்குப் படிக்க நேரம்!

சம்பளத்து மேல் கிம்பளம் வாங்கியும் மூன்று குழந்தைகளோடு மல்லியும் கொசுறாய் இருக்க, குடும்பத்தை சமாளிக்க திண்டாடித்தான் போனான் கனகாவின் இரண்டாவது கணவன் இன்ஸ்பெக்டர் கந்தமாறன். கந்தமாறனைப் பொருத்த வரை, பவளமல்லி தேவையில்லாமல் அவன் தலையில் சுமத்தப்பட்ட சுமை. வீட்டில் அனைத்து வேலையையும் அவள் பார்க்க, வேலைக்காரிக்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சமாகிறது என்பதால்தான் அவளை சகித்துக் கொள்கிறான். ஊர் வாய்க்கு பயந்து ப்ளஸ் டூ வரை படிக்க வைத்தவர்கள், அதோடு நிறுத்தி இவளை வேலைக்கு அனுப்பினார்கள்.   

எம். என். சியில் இவள் கம்ப்யூட்டர் தட்டுகிறாள் என நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை தலையில் தட்டித் தூக்கித் தூர போடுங்கள். பவளமல்லி அங்கே சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்களுக்கு சூப்பர்வைசர் வேலை பார்க்கிறாள். வேலைக்கு யாராவது மட்டம் போட்டால் கூட்டல், பெருக்கல் வேலையை இவளே பார்க்க நேரிடும். டாய்லட் கழுவுவது அதோடு டீ லேடி வேலைப் பார்ப்பது என எல்லா வேலையையும் செய்வாள் இவள். கிளினர் என கிண்டலடிக்கத்தான் கனகாவின் மூத்த வாரிசு இருவரும் இவளைப் பார்த்தாலே மூக்கைப் பொத்துவது. மூன்றாவதுக்கு இன்னும் விவரம் தெரியாததால், மல்லியை அக்கா அக்காவென சுற்றி வருகிறாள்.(பேஸ்புக்ல கிளினர் வேலைன்னு பதில் சொன்ன எல்லோரும் உங்கள நீங்களே தட்டிக் குடுத்துக்குங்க)

மல்லிக்கு கீழே ஆறு பேர் வேலை செய்கிறார்கள். இந்த மாதிரி வேலைகளை எடுத்து நடத்தும் ஏஜென்சி ஓனர் கந்தமாறனுக்கு தெரிந்தவர். பேரங்காடி ஒன்றில் அதே ஏஜென்சிக்காக வேலைப் பார்த்தவள், இந்த எம்.என்.சிக்கு வேலை மாறி வந்து இரு மாதங்களே ஆகியிருந்தன. வேலைப் பார்ப்பது இவளாய் இருந்தாலும், சம்பளம் அப்படியே கந்தமாறனுக்குப் போய்விடும். செலவுக்கு மட்டும் அதில் இருந்து கொஞ்சமாய் கொடுப்பாள் கனகா.  

அவள் வயது பெண்களைப் போல அழகழகான ஃபேன்சி தோடு, விதவிதமாய் சுடிதார், குதிகால் வைத்தது, வைக்காதது என ரகரகமாய் செறுப்பு என வாங்கி அணிந்து மகிழ மனம் துடியாய் துடிக்கும். சம்பளத்தையே கண்ணில் பார்க்காதவள், எங்கிருந்து இதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வாள்! ஆயிரத்தெட்டு ஏக்கங்கள், ஆதங்கங்கள், ஆசைகள் எல்லாவற்றையும் அந்த குட்டி மனதில் புதைத்து வைத்திருக்கிறாள் பவளமல்லி. ஆனாலும் எதையும் வாய் விட்டு கேட்கமாட்டாள். சின்ன வயதில் தங்கைக்குப் போட்டிருப்பதைப் போலவே சட்டை வேண்டும் என கேட்டு அடம் பிடித்து போலிஸ் அடி என்றால் என்ன என அனுபவித்திருக்கிறாள்.

மூன்று நாள் காய்ச்சலில் விழுந்து எழுந்தவள், அதற்கு மேல் எதற்கும் அடம் பிடித்ததே இல்லை. வாயை மூடிக் கொண்டு சொன்ன வேலையை செய்யும் வரை கந்தமாறனும் இவளை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டான்.

இந்த வீட்டில் இப்படி வேலைக்காரியாகவே இருந்து ஜீவனை விட்டுவிடுவோமா என பயம் வர, வீட்டை விட்டு ஓடிப் போய்விடலாமா என கூட பல முறை யோசித்திருக்கிறாள் பவளமல்லி. கந்தமாறன் கனகாவிடம் பகிர்ந்துக் கொள்ளும் கற்பழிப்பு, கொலை, விபச்சார கேஸ் விவரங்கள் காதில் விழும் போது, அப்படிப்பட்ட யோசனையே பைத்தியக்காரத்தனம் என கைவிட்டு விடுவாள். முதுகொடிய வேலைப் பார்த்தாலும் இந்த வீட்டில் கிடைக்கும் பாதுகாப்பு வெளியே கிடைக்காது என நன்றாக புரிந்தது அவளுக்கு. அதோடு ஓடிப் போய், பிடிபட்டுக் கொண்டால் அதற்கு மேல் வாழ்க்கையே நரகமாகி அல்லவா போய் விடும். கந்தமாறனின் இடி போன்ற அடியை நினைக்கும் போது உடம்பே நடுங்கிப் போகும் பெண்ணுக்கு.

அன்றைய வேலைகளை முடித்து, கொஞ்சமாய் வயிற்றுக்கும் போட்டுக் கொண்டு தனது இடத்தில் போய் முடங்கிக் கொண்டாள் மல்லி. ஆரம்பத்தில் இவளுக்கு என ஒரு ரூம் இருந்தது. மற்ற பிள்ளைகள் வர, வர பழைய சாமான் போட்டு வைக்கும் அறை பழைய பிள்ளைக்கு வழங்கப்பட்டது. சின்னதாய் ஒரு காற்றாடி, மெலிதான மெத்தை, துணிகளை மடித்து வைத்துக் கொள்ள ஒரு பெட்டி, முகம் பார்க்க குட்டிக் கண்ணாடி என இதுதான் அவளது அரண்மனை.

ஓயாத உடல் உழைப்பால் உடம்பு அடித்துப் போட்டது போல வலித்தாலும் உடனே தூங்கி விடவில்லை இவள். எப்பொழுதும் போல கண்ணை மூடிக் கொண்டு சுகமான கற்பனைகளில் ஆழ்ந்துப் போனாள் பவளமல்லி. சின்ன வயதில் ஆரம்பித்தப் பழக்கம் இது.

அப்பொழுதெல்லாம் கனகாவும், கந்தமாறனும் தன்னைப் பாசமாகப் பார்ப்பது போல, தன்னோடு ஓடிப் பிடித்து விளையாடுவது போல, உணவை ஊட்டி விடுவது போல கற்பனை செய்து மகிழ்ந்துப் போவாள். கொஞ்சம் வயது ஏற, நன்றாக படிப்பது போல, மிஸ் தன்னைப் பாராட்டுவது போல, சக மாணவர்கள் தன்னைக் கண்டு பொறாமைப் படுவது போல கற்பனை செய்வாள். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், நல்ல வேலைக் கிடைப்பது போல, ஆபிசில் அமர்ந்து மற்றவர்களோடு பேசி சிரித்து வேலை செய்வது போல கற்பனை விரியும் மல்லிக்கு. இந்தக் கற்பனைகள் மட்டுமே அவளை உயிர்ப்போடு வைத்திருந்தன.

வேலைக்குப் போனதில் இருந்து, கல்யாண கனவு காண ஆரம்பித்திருந்தாள் பவளமல்லி. சராசரி பெண்களைப் போல அழகான கணவன், அன்பான துணைவன் அமைந்தாலே பேரின்பமே என பாட்டை மாற்றிப் பாடி கனவு காணவில்லை அவள். பிறகென்ன கனவு? முத்தக் கனவா அல்லது அதோடு இணைந்த யுத்தக் கனவா? அதுவும் இல்லை.

அவள் கற்பனையில், அவள் கணவன் வித விதமாய் உடை வாங்கித் தந்தான், ஹோட்டலுக்கு அழைத்துப் போய் வயிறு முட்ட உணவு வாங்கிக் கொடுத்தான், படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுப் பயணம் அழைத்துப் போனான். இவள் கண் பார்த்தப் பொருளை அடுத்த நொடி இவள் காலடியில் கொண்டு வந்துப் போட்டான். வேலைக்காரியாய் வாழ்பவளை தன் வீட்டின் மகாராணியாய் முடி சூட்டினான். இந்த மாதிரி கற்பனைகளில் சுகம் காணுபவள், பல நாட்களில் தூங்கவே மணி பின்னிரவு ஒன்றாகி விடும்.

அன்றும் கற்பனையில் ஆழ்ந்தவள்,

“அவன கண்டா வர சொல்லுங்க!!!!” என மெல்லிய குரலில் பாடினாள்.

பின் வெட்க சிரிப்புடன்,

“எங்கடா இருக்க நீ?” என கேட்டப்படியே தூங்கிப் போனாள் பவளமல்லி.

 

(காதல் மலரும்…)

(போன எபிக்கு லைக் , கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. 

பரோட்டாவையும், பாப்பம்மாவையும்(மகளிர் மட்டும் கிளினர் கேரெக்டர்)  ஜோடி சேர்த்து வைக்கலாம் வாங்க! அடுத்த எபில சந்திக்கற வரைக்கும், டேக் கேர் டியர்ஸ். லவ் யூ ஆல்)