Kanne Kadhal Penne–EPI 3

239948099_925484634705538_288795760143811764_n-0ee11387

அத்தியாயம் 3

 

பானி பூரி இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிக பிரபலமான ரோட்டுக்கடை உணவாகும். சென்னையிலும் பானி பூரி கடைகளில் மக்கள் கூட்டத்துக்கு குறைவில்லை. இனிப்பு, புளிப்பு, உறைப்பு என ஜிவ்வென இருக்கும் இந்தப் பூரியின் சுவைக்கு அடிமையானவர்கள் ஏராளம்.

(இப்படி ஒரு ஐட்டம் இருக்கறதே எனக்கு கொஞ்ச வருஷத்துக்கு முன்னதான் தெரியும். அப்போ சிங்கப்பூர்ல ஒரு ரெஸ்டரண்ட்ல வேலைப் பார்த்துட்டு இருந்தேன். வேய்ட்டர் வேலைதான். வீட்டுல சும்மா இருக்கறதுக்கு கிடைச்ச வேலைய செய்வோம்னு சேர்ந்தேன். அங்க சாட் ஐட்டமும் கிடைக்கும். அந்த ஐட்டம் செய்யற அண்ணா(இந்தியாக்காரங்கதான்), கஸ்டமருக்கு செய்யறப்போ எக்ஸ்ட்ரா கொஞ்சம் செஞ்சு எனக்குக் குடுப்பாங்க. டேஸ்ட் பண்ணி பாரும்மான்னு. டாஹி பூரி, பானி பூரி, பேல் பூரி, பாவ் பஜ்ஜிலாம் சாப்பிட அங்கத்தான் கத்துக்கிட்டேன். சைவ கடை அது. மினி இட்லி, தயிர் வடை, பெசரட்டு, வெண் பொங்கல்(நம்ம வீட்டுல பொங்கல்னாலே சக்கரைப் பொங்கல்தான்) இதெல்லாம் கூட இங்கத்தான் பார்த்தேன், சாப்பிட்டேன். இந்த ஐட்டத்துக்கு இந்த சட்னி அப்படின்னு ரூல்ஸ் இருக்குன்னு இங்கத்தான் கத்துக்கிட்டேன். ரசிச்சு, ருசிச்சு, சாப்பிடறதுல நம்மள அடிச்சுக்க ஆளில்லன்னு புரிஞ்சுக்கிட்டதும் இங்கத்தான். வேய்ட்டர்னா எவ்ளோ கிள்ளுக்கீரைன்னு மனசு வலிக்க உணர்ந்துக்கிட்டதும் இந்த வேலைலதான். அதுக்குப் பிறகு எந்தக் கடைக்கு சாப்பிட போனாலும் வேய்ட்டருக்கு நன்றி சொல்லிடுவேன். டீ நல்லா இருந்ததுன்னா, கை கழுவ போகறப்போ, அண்ணா டீ நல்லா இருந்ததுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வருவேன்.)

 

பெண்ணாய் பிறந்தவர்கள் மாதா மாதம் அனுபவிக்கும் மூன்று நாள் இம்சையின் முதல் நாள் ஆரம்பித்திருந்தது பவளமல்லிக்கு. தலைவலிப் பிடிங்கி எடுத்தது. இல்லாத இடுப்பு வலிக் கொடுத்துத் தன் இருப்பைக் காட்டியது. ஆனாலும் சுணங்காமல் வேலைகளை எப்பொழுதும் போல செய்துதானே ஆக வேண்டும். இன்று பார்த்து அவர்கள் குழுவில் ஓர் ஆள் வேலைக்கு மட்டம் போட்டிருந்தாள். தன்னுடைய மேற்பார்வை வேலையோடு மட்டம் போட்ட ஆளின் வேலையையும் இவள்தான் பார்க்க வேண்டும்.  

இவர்கள் சுத்தப்படுத்த தேவையான பொருட்களை வைப்பதற்காக குட்டி அறை ஒன்று இருந்தது. மோப், சோப்புத் தூள், வேக்கியூம் எல்லாம் அங்கேதான் வைத்துப் பூட்டி வைப்பார்கள். சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு நாற்காலியும், காபி போட்டுக் குடிக்க ஒரு மின்சார கேட்டிலும் கூட இருந்தது. தன் சொந்த உபயோகத்துக்காக கேபினெட்டின் ஒரு மூலையில் ஒளித்து வைத்திருக்கும் தனது டம்ளரையும், நெஸ்காபி பேக்கட்டையும் வெளியே எடுத்தாள் பவளமல்லி. சூடாக ஒரு காபி போட்டுக் குடித்ததும்தான் சற்று தெம்பு வந்தது போல இருந்தது. அதன் பிறகே மடமடவென வேலையை ஆரம்பித்தாள்.

அவர்களின் அன்றாட வேலை, காலையில் வந்ததுமே ஒரு முறை ஒவ்வொரு தளத்தின் ஆண், பெண் இரு பாலரின் டாய்லெட்டுகளையும் கழுவி துடைப்பதில் ஆரம்பிக்கும். ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு ஆள் வேலைக்கு இருந்தார்கள். அதன் பிறகு மாலை மீண்டும் ஒரு முறை கழிவறையைக் கழுவி துடைத்து வேலையை நிறைவு செய்வார்கள்.

இவளும் முதலில் வேலையை ஆண்கள் கழிப்றையில் இருந்து ஆரம்பித்தாள். சுத்தம் செய்யும் போது, ‘வோர்க் இன் ப்ராக்ரேஸ்’ எனும் அட்டையை வெளியே வைத்தாலும், படித்த முட்டாள் சிலர் உள்ளே நுழைந்து விடுவார்கள். பல முறை பார்க்கக் கூடாததைப் பார்த்த சங்கடங்களை அனுபவித்து இருக்கிறாள் மல்லி. அப்படி கழுவும் வேலை இவள் தலையில் விடிந்தால் ஜெட் வேகத்தில் தான் ஆண்கள் டாய்லட்டை சுத்தம் செய்து முடிப்பாள். அன்றும் வேக வேகமாக கழுவி, மோப் போட்டு முடித்தவள் பெண்கள் கழிப்பறையினுள் நுழைந்தாள்.

ஆண்களே தேவலாம் என்பது போல இருந்தது பெண்களின் பகுதி. சானிடெரி நாப்கின்களைப் போட என ஒவ்வொரு குபிக்களிலும் வேஸ்ட் பின் கொடுத்திருந்தாலும், அதை உள்ளே போடாமல் யாரோ அப்படியே மேலே போட்டு விட்டுப் போயிருந்தார்கள். ஆரம்பத்தில் இதெல்லாம் பார்க்கும் போது இவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போகும். மெத்தப் படித்த இவர்களை விட, சுத்தம் செய்யும் தாங்கள் எவ்வளவோ மேல் என முனகிக் கொண்டே சுத்தம் செய்ய பழகி இருந்தாள் பவளமல்லி.

அதன் பிறகு வேலை செய்பவர்களின் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளை காலி செய்து வேறு குப்பைப் பை போட்டு வைக்க வேண்டிய வேலையைப் பார்த்தாள். மொத்த இடத்தையும் கூட்டி விட வேண்டும். கார்ப்பேட் போட பட்டிருப்பதால், வாரத்தில் மூன்று முறை வேகியூம் செய்ய வேண்டும். இன்று அட்டவணைப்படி வேகியூம் போட வேண்டிய நாளாதலால் வேகமாக அந்த வேலையைப் பார்த்தாள். அதோடு சேர்த்து வேலை செய்பவர்களின் மேசைகளை கவனமாக எந்தப் பொருளையும் நகர்த்தி விடாமல் சுத்தமாக துடைத்தாள். தனியறை வைத்திருக்கும் டீம் லீடர், மேனேஜர் பதவி உள்ளவர்களின் இடங்களையும் சுத்தம் செய்து, மீட்டிங் ஹால், பேண்ட்ரி என துடைத்து எடுத்து முடிப்பதற்குள் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது இவளுக்கு. அடிக்கடி செய்யும் வேலைதான், ஆனாலும் மாதவிடாயின் போது தவித்துத்தான் போய் விடுவாள் மல்லி.

அந்த தளத்தின் வேலையை முடித்து மற்ற தளங்களுக்கு மேற்பார்வைப் பார்க்கக் கிளம்பியவளை,

“ஓய் பாப்பம்மா!” என அழைத்தான் ப்ரோகிராமர் ஒருத்தன்.

பவளமல்லி என பெயர் இருந்தும் அங்கே எல்லோருக்கும் அவள் ‘மகளிர் மட்டும்’ பாப்பம்மாத்தான். அவளைக் கூப்பிட்டு வைத்து சீண்டி, கிண்டல் அடிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி இவர்களுக்கு.

அவள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதில் அப்படி ஒரு இன்பம் அங்கு வேலைப் பார்க்கும் ஆண்கள் சிலருக்கு. என்னதான் ஹைபையாக கேர்ள்ப்ரேண்ட் இருந்தாலும், படா லோக்கலிடம் என்னதான் இருக்கிறது என அறிய துடிக்கும் அற்ப ஆசை.

‘இந்த பன்னாடையா’ என மனதில் அவனைத் திட்டியபடியே அவனிடத்துக்குப் போனாள் பவளமல்லி.

“சொல்லுங்க சார்!”

“தண்ணிக் கொட்டிருச்சு பாரு, துடைச்சி விடு” என சத்தமாக சொன்னவன், பின் குரலைத் தழைத்து,

“யோசிச்சு முடிவ சொல்லுன்னு சொல்லி ஒரு வாரம் ஆச்சு! கண்ணாமூச்சு ஆடிட்டு இருக்க நீ!” என முணுமுணுத்தான்.

“சார்!” என இவள் மறுக்கும் தொனியில் ஆரம்பிக்க,

“காசு மட்டும் இல்ல, நீ வேற எது கேட்டாலும் வாங்கித்தரேன்டி. ரெண்டே நாள் போதும்! சரின்னு சொல்லு” என படபடத்தான் அவன்.

“எது கேட்டாலும் வாங்கித் தருவியா?”

அவளது கேள்வியில் அப்படி ஒரு இளிப்பு இவனுக்கு.

“கண்டிப்பா வாங்கித் தரேன்டி! நைட்டுல கண்ண மூட முடியல. உன் நெனைப்பு வந்து வாட்டுது, உடம்பெல்லாம் காய்ச்சல் வந்த மாதிரி கொதிக்குதுடி பாப்பம்மா! சொல்லு என்ன வேணும்?” என்றவன் மேசையைத் துடைத்துக் கொண்டிருந்த அவள் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

கையை உருவிக் கொள்ளாமலே திரும்பி அவன் கண்ணை நேராகப் பார்த்தவள்,

“தாலி!” என்றாள்.

“என்னது????”

“தாலி ஒன்னு வாங்கி என் கழுத்துல கட்டு. ரெண்டு நாள் என்ன, நீ பாடையில போகிற வரைக்கும் உன் கொதிப்ப நான் அடக்கறேன்”

“என்னடி திமிரா?”

“ஏன், கிளினர்னா திமிர் இருக்கக் கூடாதா? கூட்டிப் பெருக்கறவனா கூப்டதும் வந்திடுவானு யார் சொன்னா? எங்களுக்கும் மானம் ஈனம் வெக்கம் வெங்காயம்லாம் இருக்கு! இதுக்கும் மேல காய்ச்சலடிக்குது, குளிரெடுக்குதுன்னு என் பின்னால வந்த, டப்பா டான்ஸ் ஆடிரும் பாத்துக்கோ! எங்கம்மாவோட புருஷன், ஈ த்ரீ ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்காரு. ஜட்டியோட உக்கார வச்சி முட்டிக்கு முட்டித் தட்ட சொல்லிடுவேன்” என மிரட்டியவள் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.

‘இவனுங்களுக்கு என்னைப் பார்த்தா படுக்கைக்கு கூப்டனும்னு மட்டும்தான் தோணும் போல! பரதேசிங்க! நான் என்ன அப்படி குறைஞ்சுப் போய்ட்டேன்! நெஞ்சு முழுக்க அன்ப கொட்டி வச்சிருக்கேன்! என்னைக் கட்டிக்கறவன அன்பால கூட்டி, ஆசையால மோப் போட்டு, காதலால கழுவி, பாசத்தால மொழுகி நெஞ்சுக்குள்ள சுத்தபத்தமா உக்காத்தி வச்சிக்குவேன். ஒனக்கு குடுத்து வைக்கல போடா!’ என மனதில் புலம்பிக் கொண்டே வேலையைப் பார்த்தாள்.

மற்ற தளங்களுக்கும் போய் அங்கே வேலை எப்படி நடந்திருக்கிறது என பார்த்து விட்டு வந்தவள், அக்கடாவென இவர்கள் சாமான் வைக்கும் அறையில் போய் அமர்ந்துக் கொண்டாள். நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து இரு கால் முட்டிகளையும் நெஞ்சோடு சேர்த்து வைத்து தலையை முட்டியில் சாய்த்துக் கொண்டு கண் மூடினாள். பத்து நிமிடம் போயிருக்கும்,

“மல்லி, எழாவது ப்ளோர்ல இருப்பாரே அந்த சொட்டை மேனெஜர், உன்னைப் பார்க்கனும்னு சொன்னாரு! போய் என்னான்னு கேட்டிரு. நான் சாப்பிட்டு வரேன்” என சொல்லி விட்டு சென்றார் அவர்கள் குழுவில் இருக்கும் கொஞ்சம் வயதான பெண்மணி.

‘ம்ப்ச்! யார பத்தி கம்ப்ளேன் பண்ண கூப்பிடறாரோ தெரியலையே! ஏஜேன்சி வரைக்கும் போனா, என்னைல கேள்விக் கேட்டு கொடையுவானுங்க! ஒரு வாரமாச்சும் எதாச்சும் பிரச்சனை இல்லாம போகுதா!! நாய் பொழப்புடா இது’ என முனகிக் கொண்டே எழுந்து எழாவது தளத்துக்குப் போனாள் பவளமல்லி.

“சொல்லுங்க சார், எதாச்சும் பிரச்சனையா?” என அந்த நிர்வாகியைப் பார்த்து பவ்யமாய் கேட்டாள் இவள்.

“அப்படிலாம் ஒன்னுமில்லம்மா! இன்னிக்கு ஈவ்னிங் ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. நெறைய வெள்ளைக்காரங்க வருவாங்க அட்டேண்ட் பண்ண. சாப்பாடுலாம் வெளிய ஆர்டர் குடுத்துருக்கோம். நீயும் இன்னும் யாராச்சும் ஒரு ஆளும் இருந்து, மீட்டிங் முடிஞ்சதும் கொஞ்சம் கிளின் பண்ணிடுங்கம்மா! நாளைக்கு வரைக்கும் போட்டு வச்சா, நாறிடும் மீட்டிங் ஹால்! நாளைக்கு காலையிலயும் ஒரு மீட்டிங் இருக்கு. நீ இருந்தா எந்தக் குறையும் இல்லாம எல்லாம் பார்த்திடுவ. அதான் உன்னை இருக்க சொல்றேன்” என கேட்டுக் கொண்டார்.

இந்த மாதிரி அதிகப்படி வேலைக்கு ஏஜென்சி கம்பெனியிடம் தனியாக வசூலித்துவிடும். அதோடு அன்று தங்கி இருந்து சுத்தம் செய்பவர்களுக்கும் ஓவர்டைம் கிடைக்கும். எப்பொழுதும் மற்றவர்களை வேலைக்கு அமர்த்தி விட்டு இவள் கிளம்பி விடுவாள். இந்த நிர்வாகி கொஞ்சமே கொஞ்சம் நல்லவர். இவளை மதித்து நல்லபடி நடத்துவார். அதனாலேயே இருந்து வேலை செய்வதற்கு சரியென ஒத்துக் கொண்டாள் பவளமல்லி. தனது டப்பா போனை எடுத்து, வீட்டுக்கு அழைத்து ஓவர்டைம் பற்றி கனகாவிடம் சொல்ல, அவர் பொரிந்துத் தள்ளிவிட்டார்.

“நெஜமா ஓவர்டைம்மா இல்ல வீட்டு வேலைக்குப் பயந்துகிட்டு பொய் சொல்றியா? அனாதையா கிடந்தவள, கூட்டி வந்து சோறு போட்டு, நல்ல துணிமணி எடுத்துக் குடுத்து வளர்த்து விட்டுருக்கேன்! அதை என்னைக்கும் மறந்துடாதடி மல்லி. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல கொண்டு வந்து வச்சாலும், பழக்கதோஷத்துல எதையோ திங்கறதுக்கு தேடிப் போகுமாம். அது மாதிரி என்ன குலம், என்ன கோத்திரம்னு தெரியாத உன்னை கொண்டு வந்து சீவி சிங்காரிச்சு நடு வீட்டுல உக்காத்தி வச்சிருக்கேன். நாய் எதையோ தேடிப் போன மாதிரி நீ எவனையோ தேடிப் போயிடாத! அப்புறம் இன்ஸ் பெல்ட்டாலேயே பூஜைப் போட்டுருவாரு. ஞாபகம் வச்சி நடந்துக்க. நான் ஏஜேன்சி ஓனர் கிட்ட ஓவர்டைம்மா இல்லையான்னு இப்போவே விசாரிக்கறேன். போனை வைடி!” என திட்டித் தீர்த்து விட்டுத்தான் வைத்தார்.

அவர் பேசியதில், பசி கூட மறத்துப் போனது பவளமல்லிக்கு. கண்ணில் துளிர்த்த நீரை சுண்டி விட்டவள், மதிய உணவை ஒதுக்கிவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மாலை மணி ஐந்தாகி இருந்தது. வேலையில் ஒரு கண்ணும் எம்.என்.சி வாசலில் ஒரு கண்ணுமாக இருந்தான் ஜெய்சங்கர்.

“கோவாலு!!”

“என்னடா?”

“இன்னிக்கு என் தேவாவ இன்னும் காணோம்!”

“யாரு தேவா? வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடின்னு கானா பாடுவாரே வெள்ளை சொக்கா தேவா, அவரா?”

“போ நைனா! தேவதைய சுர்க்கி தேவான்னு சொன்னேன்! அவ பேரு தெரியலையே, மன்சுக்குள்ள தேவான்னு கூப்டு பழகிடுச்சு”

“யெச்சூஸ்மீ மவனே! வெறும் சைட்டுனுட்டு மன்சுக்குள்ளலாம் அந்த பொண்ணு பேர இன்னாத்துக்கு கூப்ட்டுட்டு இருக்க நீ! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்!”

“விடு நைனா! மனுஷனே பீலிங்குல இருக்கான், நீ வேற நொய் நொய்ன்னுட்டு. வேபாரத்தப் பாரு!” என்றவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

‘இன்னிக்கு வேலைக்கு வரலியோ! ஒடம்பு கிடம்பு முடியலியோ!’ என எண்ணியவாறே பரோட்டாவைக் கொத்தினான்.

ஆறாகியும் ஆளைக் காணாமல், அன்று அவள் வேலைக்கு வரவில்லை என முடிவெடுத்தவன் கவனத்தை வேலையில் திருப்பினான். ஆறுக்கு மேல் வியாபாரம் சூடு பிடிக்கும் நேரமாதலால் அவனுக்கும் வேறு சிந்தனைகளுக்கு நேரமில்லாமல் போனது.

மெல்ல இருள் கவிழ கூட்டமும் குறைந்திருந்தது. ரேடியோவில் இரவு மணி ஒன்பது என சொல்ல,

“அதுக்குள்ள ஒம்பது ஆச்சி நைனா! நீ வேலையை விட்டுட்டு மொதல்ல சாப்பிடு! நான் கஸ்டமர பார்த்துக்கறேன்” என்றான் இவன்.

“டேய் சங்கரு, அங்க பஸ் ஸ்டாப்ல பாரு! நம்ம புள்ள மாதிரியே இருக்கு!”

சடாரெனெ தலையைத் திருப்பிப் பார்த்தான் இவன். இவர்கள் கடைக்கு எதிர்புறம் கொஞ்சம் தள்ளி இருக்கும் அந்த பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தாள் அவள். எப்பொழுதும் பரோட்டா வாங்கி விட்டு அந்த நிறுத்தத்தில் போய்தான் பஸ் ஏறுவாள் மல்லி.

அவளருகே  இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் பேசுவது கேட்காவிட்டாலும், எதோ வம்பு செய்கிறார்கள் என அவர்களின் உடல் மொழியில் இருந்து புரிந்தது. அதில் ஒருவன் இவனது தேவாவின் சடையைப் பிடித்து இழுக்கவும், பட்டென ஜல்லிக் கரண்டியைப் தூக்கிப் போட்டு விட்டு சாலையைத் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு ஓடினான் ஜெய்சங்கர்.

“அடிதடி வேணாண்டா சங்கரு! கையால பேசாம, வாயால பேசுடா டேய்!” என கோபால் கத்தியதை காதில் வாங்கவேயில்லை இவன்.

மூவரையும் நெருங்கியவன்,

“என்னங்கடா, தனியா நிக்கற புள்ளக்கிட்ட ரவுசு காட்டறீங்களா?” என கோபமாய் கேட்டான்.

“தோடா வந்துட்டாரு ஹீரோ! இவளுக்கு நீ என்ன மாமனா இல்ல மச்சானா?” என திமிராய் பேசினான் ஒருத்தன்.

மல்லியின் சடையைப் பிடித்து இழுத்தவனோ, மீசையை முறுக்கிக் கொண்டு சங்கரை அடிக்க வந்தான்.

மல்லியோ கலக்கமாய் ஆண்கள் மூவரையும் பார்த்தாள்.

“நான் யாரா இருந்தா ஒனக்கு என்னடா? தனியா போற பொண்ணுக்கு சேப்டி இல்லைன்னா இந்த ஜெகத்தையே அழித்திடுவோம்னு காந்தி தாத்தா சொல்லிருக்காருடா என் வெண்ட்ரு!” என்ற ஜெய்சங்கர், அடிக்க வந்தவனின் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்து பளார் பளாரேன அறைந்தான்.

வாய் பேசியவன் நண்பனுக்காக நடுவே வர, அவன் வயிற்றில் ஓங்கி ஒரு எத்து விட்டான் ஜெய்சங்கர்.

“யப்பா!” எனும் கதறலுடன் அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட, கையில் அகப்பட்டிருந்தவனுக்கு அல்லு விட்டது.

“இனிமே இப்படிலாம் செய்ய மாட்டேங்க! விட்டுருங்க” என கெஞ்ச ஆரம்பித்தான் அவன்.

‘ரெண்டு மாசமா சைட்டடிக்கற நானே, நிழல கூட தொட்டுப் பார்த்தது இல்ல. இந்த மொள்ளமாரி என் தேவா முடியைப் புடிச்சுப் பார்த்திருக்கு’ என கோபமாக நினைத்தவன்,

“இனிமே செய்ய மாட்ட, சரி! இப்போ செஞ்சதுக்கு தண்டனை வேணா?” என கேட்டான்.

“இப்ப அறைஞ்சதே இடியை இறக்கன மாதிரி வலி உசுரு போகுது! விட்டுருங்கண்ணா” என இறைஞ்சினான்.

“உனக்கு அம்மா இருக்காங்களாடா?”

“இருக்காங்கண்ணா!”

“இத்த அவங்க குடுக்க வேண்டியது! அவங்க சார்பா நான் குடுக்கறேன், வாங்கிக்க!” என சொல்லி ஒரு பேயறை வைத்தான் ஜெய்சங்கர்.

“அம்மா!!!!!!!” என கதறினான் அறை வாங்கியவன்.

“அக்கா இருக்கா?”

எங்கே இருக்கிறாள் என சொன்னால், அவள் சார்பாகவும் அறை விழுமோ என பயந்து இல்லை என்றான்.

“இல்லாங்காட்டி போகுது! இல்லாத அக்கா சார்பா இத்த வாங்கிக்க!” என இன்னொரு அறை வைத்தான்.

தங்கை, பாட்டி, சித்தி, அத்தை, சின்னம்மா, அண்ணி இப்படி ஒவ்வொரு உறவு முறைக்கும் ஓர் அறை கிடைக்க, கதி கலங்கிப் போனான் பெண்ணிடம் வீரத்தைக் காட்டியவன்.

ஜெய்சங்கர் அடிப்பதையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் பவளமல்லி.

கீழே அமர்ந்திருந்தவனுக்கும் சைக்கிள் கேப்பில் அறை விழத்தான் செய்தது.

மாறி மாறி இருவரையும் வெளுத்தவன்,

“என் கண்ணு முன்னாடி நிக்காம இப்படியே அப்பீட் ஆயிடுங்க! இருக்கற காண்டுல ரெண்டு பேரையும் காலி பண்ணிடுவேன்” என மிரட்ட, இருவரும் எடுத்தார்கள் ஓட்டம்.

அவர்கள் ஓடியதும் பவளமல்லியைத் திரும்பிப் பார்த்தவன்,

“அறிவில்ல உனக்கு?” என கோபமாக இரைந்தான்.

அவன் கோபக் குரலில் திக்கென உடம்புத் தூக்கிப் போட்டது இவளுக்கு. இருந்தாலும் யாரிடமோ பேசுகிறான் என்பதைப் போல அமர்ந்திருந்தாள் இவள்.

“லேட்டா ஆபிசு முடிஞ்சா, வீட்டுல யாரயாச்சும் கூப்ட வர சொல்லனும்னு தெரியாது? இப்படித்தான் தன்னந்தனியா இருட்டுல வந்து நிப்பியா! மண்டைல மசாலா இருக்கா இல்லையா? காலம் கெட்டுக் கிடக்குது! நீ வேற அழகா இருந்து தொலையற! ஒன்னுக் கிடக்க ஒன்னு ஆனா யாருக்கு நஷ்டம்!” என பொரிந்துக் கொட்டினான்.

பிடித்து வைத்தப் பிள்ளையாரைப் போல அமர்ந்திருந்தாள் பவளமல்லி. இவனுக்கு இன்னும் கோபம் எகிறியது. அவளை நெருங்கி வந்தவன்,

“தோ பொண்ணு, பேசமாட்டியா? வாயில என்ன கொழுக்கட்டையா அடைச்சி வச்சிருக்க?” என கத்தினான்.

இவள் சட்டென எட்டி அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“ஏய், ஏய்!”

அவள் தொடுகையில் கோபம் எங்கோ ஓடிப் போயிருக்க, வார்த்தை வராமல் தடுமாறினான் ஜெய்சங்கர். அவள் பிடி இன்னும் இறுக, அவளின் நகம் சங்கரின் கையைப் பதம் பார்த்தது. அக்கைகளின் நடுக்கத்தில் என்னவோ சரியில்லை என புரிந்துக் கொண்டவன்,

“தேவா! என்ன பண்ணுது உனக்கு?” என கேட்டான்.

“தலை….சுத்துது, மயக்கம் வர மாதிரி இருக்கு”

“ஐயயோ!!!! ஒனக்கு கல்யாணம் ஆகிடுச்சா! உண்டாகி இருக்கியா? கழுத்துல தாலியப் பார்க்கவேயில்லையே நானு!” என பதறினான் இவன்.

களைப்புடன் இருந்தாலும் அவன் கேட்ட கேள்வியில் கோபம் வந்தது இவளுக்கு.

“பசி மயக்கம்யா!” என்றவளுக்கு கண்களில் லேசாய் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. பார்த்திருந்தாலும், முன்னே பின்னே பழகியிராத ஓர் ஆண்மகனின் கையைப் பற்றிக் கொண்டு இருப்பது அவமானமாக இருந்தது. கையை விட்டால், விழுந்து விடுவோமோ என பயமாக வேறு இருந்து தொலைத்தது.

தள்ளாடியவளின் கையை இவனும் இறுக்கிக் கொண்டான்.

“என்ன பொண்ணு நீ! உழைக்கறதே இந்த வயித்துக்குத்தான். சாப்பிடாம கொள்ளாம என்ன வேலை பார்த்து கிழிக்க வேண்டிக் கிடக்கு!” என இவளைக் கடிந்துக் கொண்டவன்,

“நைனா!” என கத்தி அழைத்தான்.

சாலையில் மறுபுறம் இருந்து,

“என்னடா மவனே” என கோபால் குரல் கொடுத்தார்.

“மூனு பரோட்டா தட்டுல போட்டு கொண்டா நைனா!”

“ரெண்டு போதும்” என மெல்லிய குரலில் இவள் சொன்னாள்.

“நீ சும்மா இரு!” என சிடுசிடுத்தான் மல்லியிடம்.

இவளை இப்படியே விட்டுவிட்டு இவன் போய் உணவு எடுத்து வருவதற்குள் கீழே விழுந்து வைத்து விடுவாளோ என பயந்துதான் தகப்பனைக் கொண்டு வர சொன்னான்.

கோபால் உணவுடன் தண்ணீர் பாட்டிலும் கொண்டு வந்து கொடுத்து விட்டு, என்னவென விசாரித்தார். விஷயம் அறிந்து அவர் பங்குக்கு மல்லிக்கு அறிவுரையை அள்ளி விட,

“போ நைனா, போய் வேபாரத்தாப் பாரு! துன்னுட்டு துட்டு குடுக்காம ஓடிற போறானுங்க!” என விரட்டி விட்டான் சங்கர்.

அவர் போனதும் இவளைப் பார்த்து,

“தேவா, சாப்பிடறதுக்காச்சும் தெம்பிருக்கா? இல்ல ஊட்டி விடவா?” என கேட்டவனை முறைத்தாள் இவள்.

“ஒடம்புக்கு முடியலைன்னாலும் இந்த மொறைப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல!”

அவசரமாய் அவன் கொண்டு வந்திருந்ததை அள்ளி விழுங்கினாள் பவளமல்லி. கிட்டத்தட்ட காலை உணவைத் தவிர அன்று முழுக்க அவள் பட்டினியாக இருந்திருந்தாள். வேலையும், மன சோர்வும், மாதாந்திர பிரச்சனையும் அவளது பசியை மந்தித்திருந்தன. என்னவோ சட்டென தலையை சுற்றிவிட்டது. வயிற்றுக்குள் உணவு விழவும்தான் கொஞ்சம் தெம்பு வந்தது அவளுக்கு.

சாப்பிட்டு முடித்து, தண்ணீர் குடித்து அந்த பாட்டில் தண்ணீரிலேயே கையையும் கழுவினாள் பவளமல்லி. அதன் பிறகே சுற்றுப்புறம் உறைத்தது. தன்னையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருக்கும் பரோட்டாக்காரனும் கண்ணுக்குத் தெரிந்தான். மயக்கத்தில் சட்டென அவன் கையைப் பற்றியதை நினைத்து தர்மசங்கடமாக இருந்தது இவளுக்கு.

தட்டைப் பக்கத்தில் வைத்து விட்டு, கைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயல,

“தோ பாரு! காசுலாம் மெதுவா குடுத்துக்கலாம். நான் எங்கும் ஓடிப் போயிட மாட்டேன்! இப்போ எப்டி இருக்கு உடம்பு? இன்னும் மயக்கம் வருதா?” என கேட்டான்.

இல்லையென தலையாட்டினாள் இவள். தட்டை தண்ணீரில் அலசி, அவனிடம் நீட்டினாள் பவளமல்லி. அவள் ஸ்டெடியாக நிற்கிறாளா என ஆராய்ந்தப்படியே தட்டை வாங்கிக் கொண்டான் ஜெய்சங்கர்.

இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவளது பஸ் போய் விட்டிருந்ததால், அடுத்த பஸ்க்காக காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவனிடம் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் இவள் பஸ் வரும் பாதையையேப் பார்க்க,

“ஒரு தேங்க்சு சொன்னாளா பாரேன், ராங்கிப் புடிச்சவ!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் இவன்.

அவன் முனகியது கேட்டாலும், அதற்கு மேல் அவனிடம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை இவள். அப்படி இருந்தும் அவள் பஸ் வரும் வரை அங்கிருந்து நகரவில்லை ஜெய்சங்கர். பஸ் வந்ததும், அவனிடம் ஒன்றுமே சொல்லாமல் ஏறிக் கொண்டாள் பவளமல்லி.

“போய்ட்டு வரேன்னாச்சும் சொல்றாளா பாரேன்! திமிர் புடிச்ச ராட்சசி” என இவன் முணுமுணுத்தான்.

பஸ் கொஞ்சம் நகர்ந்ததும்,

“ஹோய் பரோட்டா!” என குரல் கேட்டது.

“அடிங்க!!!” என்றபடி இவன் பஸ்சை பார்க்க, படிகளில் நின்றபடி இவனை எட்டிப் பார்த்து,

“ரொம்ப நன்றிஈஈஈஈஈஈஈ!” என கத்தினாள் பவளமல்லி.

இவனது முகம் பூவாய் மலர்ந்துப் போனது.

“சொல்லிட்டாளே அவ நன்றிய

சொல்லும் போதே சுகம் தாளல” என பாடியபடியே லுங்கியை மடித்துக் கட்டி ஆட்டம் போட்டுக் கொண்டே சாலையைத் தாண்டி தனது கடைக்குப் போனான் ஜெய்சங்கர்.

இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு நின்றது ஒருத்தனின் கண்ணில் பட்டதையும், அது கன்னியின் வாழ்வில் கண்ணி வெடியைக் கொழுத்திப் போட போவதையும் யார் சொல்வது பவளமல்லியிடம்!!!!!!

 

(காதல் மலரும்..)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல் டியர்ஸ்)