Kanne Kadhal Penne–EPI 4

239948099_925484634705538_288795760143811764_n-4f52d195

அத்தியாயம் 4

பஜ்ஜி இல்லாத கையேந்தி பவனா! உருளைக்கிழங்கு பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி இப்படி விதவிதமான பஜ்ஜிகள் சென்னை ரோட்டோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. அதற்குரிய சட்னியோடு மழை நேரங்களில் பஜ்ஜி சாப்பிடுவது என்பது ஒரு சுகானுபவம்.

 

முகத்தை ஏழு முழம் தூக்கி வைத்திருந்தான் ஜெய்சங்கர். அது ஏன் என தெரிந்தும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை கோபால்.

“போலிஸ்னா என்ன பெரிய பருப்பா? எந்தப் பருப்பையும் அசால்ட்டா வேக வைச்சு சாம்பர் வச்சிடுவான் இந்த சங்கரு. அது தெரிஞ்சும் எதுக்கு நைனா இந்த மாதிரிலாம் பண்ணுற நீ! செம்ம காண்டாகுது எனக்கு” என சில நாட்களாக திட்டுவது போல அன்றும் திட்டித் தீர்த்தான் தன் தகப்பனை.

“பருப்பா இருந்தா பரவாயில்லடா மவனே! அவனுங்க நெருப்பு! சுட்டா பொசுங்கிடுவோம்டா! எனக்கு உறவுன்னு இருக்கறதே நீ ஒருத்தன் தான். உனக்கு எதுனாலும் ஆகிப்போச்சுனா இந்த கோபாலு பாடில உசுர் தங்காதுடா! அதனால இந்த தேவா பொண்ண நீ பாக்கவும் வேணா, பழகவும் வேணா! இத்தோட சைட்டு, டாவு எல்லாத்தையும் மூட்டக் கட்டி வை!” என சொல்லி முடிக்கும் போதே அவரது போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது.  

நம்பரைப் பார்த்ததும் இன்னும் கோபம் எகிறியது இவனுக்கு.

“போன் அடிச்சிட்டா உன் தத்துப் பொண்ணு! நீயே எல்லாம் பார்த்துக்கோ! நான் ஆரோதானே! இந்தப் பாவப்பட்ட சங்கரு அந்தாண்ட போய் குந்திக்கறேன்” என கடுப்பாக சொன்னவன், கோபமாக கஸ்டமர் அமரும் நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டான்.

“இவன் ஒருத்தன். ஆனா ஊன்னா பால்வாடி கொழந்தையாட்டம் மூஞ்சைத் திருப்பிக்குவான். இன்னாத்துக்கு நைனா பேசாறான்னு திங்க்கு பண்ண மாட்டான்” என முணுமுணுத்தப்படியே, கஸ்டமரை கவனித்துக் கொண்டே பவலமல்லிக்கும் மூன்று பரோட்டாவைப் பார்சல் செய்தார்.

கோபாலுக்கு மிஸ்ட் கால் கொடுத்தது பவளமல்லிதான். அன்றையை பேயறை சம்பவம் நடந்ததில் இருந்து பரோட்டா வாங்க வரும் போது பரோட்டா மாஸ்டரை கொஞ்சமாய் நிமிர்ந்துப் பார்த்து, உதடுப் பிரித்து மெலிதாய் முறுவலிக்க ஆரம்பித்திருந்தாள் அவள். அதற்கே இந்த மாஸ்டர் வானுக்கும் பூமிக்கும் ராக்கேட் இல்லாமலே ரவுண்டு வர ஆரம்பித்திருந்தான்.

“அடேய்! ஜொள்ளு வழிஞ்சு சால்னால ஊத்திடப் போகுது! ஓவரா இளிக்காம வேலையைப் பாருடா மவனே” என கோபால் கண்டிக்கும் அளவுக்கு இவனது நடவடிக்கைகள் இருந்தன.

மகன் இப்படி வழிகிறானே, ஆனால் அவன் பேசினால் மட்டும் இந்தப் பெண் ஒற்றை வார்த்தை உதிர்க்காமல் வாயைக் கப்பென மூடிக் கொள்கிறாளே எனும் ஆதங்கத்தில் கோபாலே கொஞ்சமாய் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். பெரியவர் எனும் மரியாதையில் இவளும் அவர் கேட்ட கேள்விக்கு மதித்து பதில் சொல்வாள். அப்படித்தான் அவள் பெயரில் இருந்து சூப்பர்வைசர் வேலைப் பார்ப்பது வரை கறந்திருந்தார் கோபால்.

பவளமல்லி கம்ப்யூட்டர் தட்டவில்லை, கக்கூசை கூட்டுகிறாள் என அறிந்ததில் இருந்து ஜெய்சங்கரை கையில் பிடிக்க முடியவில்லை.

“நைனா! நான் வெங்காயம் அவ வெளக்கமாறு. நான் பாமாயிலு அவ பினாயிலு. நான் ஆஃபாயிலு அவ ஹார்பிக்கு! அப்போ இது லவ் தானே கோபால்?”

“இன்னும் சொல்லேன், நீ முட்டாளு அவ முட்டக்கண்ணி, நீ மடசாம்பிராணி அவ மங்காத்தா ராணி, நீ பேமானி அவ தேவகன்னின்னு”

“தோடா, கலாய்ச்சிட்டாராம்!” என்றவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

பின் சீரியசான குரலில்,

“நைனா, தேவா படிச்சப் புள்ள. நாமளாம் அவளுக்கு தகுதியே இல்லைன்னு நெனைச்சித்தான் இத்தனை நாளா தள்ளி நின்னே ரசிச்சேன். ஆனாலும் மனசாட்சி உறுத்தித் தொலையும். உன் தகுதிக்கு தேவா கேக்குதான்னு காரித் துப்பும். அவள நெனைச்சி நான் ஏங்கித் தவிக்காத நாளே இல்ல நைனா! என்னவோ அவள பார்த்த நாளுல இருந்து அவ்வளவு புடிக்கிது. பூமிக்கே வலிக்குமோன்னு அவ நடந்து வர நளினம், ‘பரோட்டா மூனு’ன்னு கேக்கற அந்தக் குரலு, அலட்டல் இல்லாத அழகு, ஓசியில பரோட்டா வாங்கிக்காத தன்மானம் எல்லாம் ரொம்ப ரொம்ப புடிக்குது நைனா! எவனோ ஒருத்தன் அவ சடையைத் தொட்டதே என்னால தாங்கிக்க முடியல. கொலை வெறியே வந்திடுச்சு. அன்னைக்குத்தான் அவ மேல எவ்ளோ லவ்சுன்னு எனக்கே வெளங்குச்சு! இப்போத்தான் நாம ஒரே ரேஞ்சுன்னு தெரியுதே! இனி என்ன தடை! எனக்கு அவ வேணும் நைனா. வேற பொண்ணு பார்க்கறத விட்டுட்டு இவளையே எனக்குப் பொண்ணு கேளு” என்றான் ஜெய்சங்கர்.

தன்னைப் போல பட்டமரமாக நின்று விடாமல் மகன் வாழ்வு கப்பும் கிளையுமாக செழித்து ஓங்க வேண்டும் எனும் ஆசையில் அவளது குடும்பத்தைப் பற்றி மறுநாள் பரோட்டா வாங்க வந்தவளிடம் விசாரித்தவருக்கு பெரும் அதிர்ச்சியாகிப் போனது. விலாவாரியாக எல்லாவற்றையும் சொல்லாவிட்டாலும், தான் ஒரு வளர்ப்பு மகள், வளர்த்தவர் போலீஸ் அதிகாரி என கேள்விப்பட்டதில் இருந்து கல்யாணப் பேச்சே கூடாது என மகனைக் கிட்டத்தட்ட மிரட்டியிருந்தார் கோபால்.

“வளப்பு புள்ளயா இருந்தாலும், போலிஸ் வீட்டுப் புள்ள! நல்ல எடத்துல கட்டி வைக்கத்தான் நெனைப்பாங்கடா சங்கரு. நாம பொண்ணு கேக்கப் போனா, ரோட்டுக் கடைக்காரனுக்கு என் பொண்ணு கேக்குதான்னு முட்டிக்கு முட்டி தட்டிடுவானுங்க! வேணாம்டா இந்தக் காதலு கன்றாவிலாம். நைனா சீக்கிரமா உனக்கு வேற பொண்ணப் பார்த்து கட்டி வைக்கறேன். என் பேச்சுக்கு மருவாதி குடுக்கறவனா இருந்தா, அவ கிட்ட இருந்து தள்ளி நில்லு” என கறாராய் சொல்லி விட்டார்.

தகப்பன் பாசமும் தத்தை மேல் வைத்த நேசமும் போட்டிப் போட்டதில் பாசம் ஜெய்க்க, அன்றிலிருந்து ஜெய்சங்கர் அவளை ஓரக்கண்னால் சைட்டடிப்பதைக் கூட விட்டுவிட்டான்.

கடைக்கு வந்து அவள் நிற்கும் அந்த பத்து நிமிடமும் மகனின் மனநிலை எப்படி இருக்கும் என புரிந்திருந்தவர், நைசாக மல்லியிடம் அலைப்பேசி எண்ணைக் கேட்டார். அதைக் கொடுக்க ரொம்பவே தயங்கினாள் பவளமல்லி.

“அப்பா மாதிரி நெனைச்சிக் குடும்மா! இங்க வந்து தடிப்பசங்க மத்தியில நீ காத்துட்டு நிக்கறது எனக்கே சங்கடமா இருக்கு. வேலை முடிஞ்சதும் ஒரு மிஸ்ட்டு காலு குடு, நான் சுட சுட பரோட்டா போட்டு வச்சிடறேன்! நீ வந்து வாங்கிட்டு அப்படியே கெளம்பிடு! அதுக்குத்தான் கேக்கறேன் கண்ணு” என்றவரின் கனிவான பேச்சில் தனது நம்பரைக் கொடுத்தாள் மல்லி.

பேசி அவளது சம்மதம் வாங்கிய நாளில் இருந்து அவளது மிஸ்ட் கால் பார்த்து கோபால் பார்சல் ரெடி செய்து வைத்து விடுவார். மல்லி வந்து பணம் செலுத்தி விட்டு உடனே கிளம்பி விடுவாள். அவள் வரும் நேரம் தலையைக் குனிந்து அமர்ந்திருக்கும் பரோட்டா மாஸ்டரை ஓரக்க்கண்ணால் பார்த்து விட்டுத்தான் போவாள் பவளமல்லி.

மனதுக்குள்,

‘என்னாச்சி பரோட்டாவுக்கு! எப்போதும் பல்லு முப்பத்திரெண்டும் தெரியற அளவுக்கு சிரிப்பான். இப்போலாம் நம்மள நிமிர்ந்துக் கூட பார்க்கறது இல்ல! ஓஹோ! கக்குஸ்க்காரின்னு தெரிஞ்சதும் சாருக்கும் என்னைப் பார்த்து எளக்காரமா போயிடுச்சிப் போல! போடா போடா தீஞ்சுப் போன பரோட்டா!’ என திட்டிக் கொண்டே கடந்துப் போவாள் பவளமல்லி.

அவள் கடந்து போகும் வரை, கையை இறுக்கிப் பிடித்தப் போது பரிசாய் அவள் கொடுத்திருந்த நகக்கீறலை பார்த்தப்படி அமர்ந்திருப்பான் ஜெய்சங்கர். அவள் பஸ் நிறுத்தம் போன பிறகே பெருமூச்சுடன் எழுந்து வியாபாரத்தைக் கவனிப்பான்.

வெயில் தாள ஆரம்பித்திருந்த மாலை வேளை அது. பைக்கை புரசைவாக்கத்தில் இருந்த அந்த சைவ ஹோட்டலின் முன்னே நிறுத்திப் பூட்டினான் கந்தமாறன். உள்ளே நுழைந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் இருந்த டேபிளில் அமர்ந்தவனை நெருங்கி வந்தான் கடை சிப்பந்தி.

“என்ன சாப்படறீங்க சார்?”

“உங்க முதலாளிய பார்க்கனும். ஈ த்ரீ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்னு சொல்லு! அவருக்கு தெரியும். அப்படியே ஒரு காபி சொல்லிட்டுப் போப்பா”

காபி வரவும் மேசையில் கையால் மெல்லிய தாளம் போட்டுக் கொண்டே அதை அருந்த ஆரம்பித்தான் கந்தமாறன்.

“என்ன காத்து இந்தப் பக்கம் வீசுது?” என கேட்டப்படியே வந்து அமர்ந்தான் அந்த ஹோட்டலின் முதலாளி.

“போன் போட்ட எடுக்கமாட்டியாய்யா?” என எரிச்சல் குரலில் கேட்டான் இன்ஸ்பெக்டர்.

“எதுக்கு எடுக்கனும்?”

“என்னய்யா இப்படி சொல்லற? நம்ம டீலிங் மறந்துப் போச்சா?”

“இது சரி வராது இன்சு! விட்டுரு”

“யோ யோ! என்னய்யா இப்படி காலை வாரி விடற! வட்டிக்காரன்லாம் கழுத்த நெறிக்கறான்யா! உன்னை நம்பித்தான் தவணை சொல்லிருக்கேன்!” என படபடத்தான் கந்தமாறன்.

அலட்டிக் கொள்ளாமல், தனக்குக் கொண்டு வரப்பட்ட காபியை மிடறு மிடறாக ரசித்துக் குடித்தான் அந்த முதலாளி. பின் நிமிர்ந்துப் பார்த்தவன் கடுமையான குரலில்,

“இது சுத்தமான வியாபாரம் இன்சு. பேச்சு சுத்தம் இல்லாதவன்கிட்ட நாங்க எந்த டீலிங்கும் வச்சிக்கறது இல்ல. எங்க ஆளுங்க மாட்டுனா எப்.ஐ.ஆர் போடாம கேச திசைத் திருப்ப உதவியா இருக்கியேன்னுதான் நீயா என் கிட்ட வந்தப்போ, மத்தவங்களுக்கு குடுக்கறத விட அமவுண்ட் கொஞ்சம் கூட்டி குடுக்க ஒத்துக்கிட்டேன். ஆனா…”

“ஆனா என்னய்யா?”

“அந்தப் பொண்ணு எவனோ ஒருத்தன் கையை பப்ளிக்ல இறுக்கிப் புடிச்சிக்கிட்டு நிக்கிது. நாலு பேரு பார்க்கறப்பவே இப்படி இருக்காங்களே, பார்க்கதப்போ எப்படிலாம் இருப்பாங்க?”

“அப்படிப்பட்ட பொண்ணுல்லய்யா அவ!”

“ரெண்டு கண்ணால பார்த்த நான் என்ன கேணையனா இன்சு?”

பதட்டமாக இருந்தது கந்தமாறனுக்கு. இந்த டீலிங்கில் வரும் பணத்தை வைத்துத்தான் கந்து வட்டிக்காரனுக்கு செட்டில் செய்ய வேண்டும். இவன் பேசுவதைப் பார்த்தால் பணத்தைக் கொடுக்க மாட்டானோ என தவிப்பாக இருந்தது.

எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்தால் வந்த வினை. முதலில் விளையாடிய போது பணம் கொட்டவும், பேராசை பீடித்துக் கொண்டது இவனுக்கு. கொஞ்ச கொஞ்சமாய் பணத்தை இழக்கும் போதெல்லாம் அடுத்ததில் அள்ளி விடலாம் என மேலும் மேலும் கடன் வாங்கி, இப்பொழுது கடன் கழுத்தை நெறிக்கிறது. போலீஸாக இருந்துக் கொண்டு இந்த மாதிரி சட்டத்துக்குப் புறம்பான சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால் வேலை போய் விடக்கூடிய வாய்ப்பு வேறு இருந்தது. அங்கங்கே லஞ்சம் வாங்கி ஓரளவுக்கு கடனின் அசலைக் கட்டி இருந்தான் கந்தமாறன். கடைசியாக இன்னும் ஐந்து லட்சம் வட்டிக்குத் தேவைப்பட்டது. அதற்குத்தான் இந்தக் கடை முதலாளியோடு ஒப்பந்தம் போட்டிருந்தான்.

“இங்க பாரு இன்சு! சீல் உடைக்காத பாட்டிலுகுத்தான் கொட்டி குடுப்பானுங்க! உன் வீட்டுப் பொண்ணு அந்தப் பையன் கூட ஒட்டி ஒரசி, பட்டு படர்ந்து இருந்தத பார்த்தாலே தெரியுது ப்ரெஸ்சு பீசு இல்லைன்னு. வேணும்னா ஒன்னு பண்ணலாம். உன் சொந்த மவள அனுப்பி விடறியா? இந்த வியாபாரத்துல வயசு குறைய குறைய, அமவுண்டு கூடும்யா!”

“யோ நாதாரி!” என கத்திய கந்தமாறன் பட்டென எழுந்து ஹோட்டல் முதலாளியின் கழுத்தைப் பிடித்து விட்டான். தடதடவென இரண்டு மூன்று சிப்பந்திகள் ஓடி வந்து கந்தமாறனைப் பிடித்துக் கொண்டார்கள்.

“விடுங்கடா! என்ன இருந்தாலும் சர்க்காரு ஆபிசர்! அதுக்கு உண்டான மரியாதைய குடுக்க வேணா! நீ உக்காரு இன்சு! சொந்த ரத்தம்னதும், அப்படியே துடிச்சிடுச்சா!” என கிண்டலாக சிரித்தான் ஹோட்டல் முதலாளி.

ஆத்திரமாக வந்தாலும், இப்பொழுது கோபம் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடக் கூடாது என மீண்டும் அமைதியாக அமர்ந்துக் கொண்டான் கந்தமாறன்.

“எங்க வீட்டுப் பொண்ணு கன்னிதான்னு டாக்டர் சர்டிபிகேட் வாங்கித் தரேன்யா!”

“உன் டாக்டர நான் நம்ப மாட்டேன். உங்களுக்கெல்லாம் பொய் சர்டிபிகேட் குடுக்க சொல்லியா தரனும்! நான் சொல்ற டாக்டர் கிட்ட போ! இந்த சலுகைக் கூட அமைச்சருக்கு உன் வீட்டுப் பொண்ண புடிச்சுப் போச்சுன்றதுனாலத்தான். இல்லைனா என் கழுத்த புடிச்ச உன் கிட்ட இன்னும் உக்காந்துப் பேசிட்டு இருப்பனா! முகம் ரொம்ப லட்சணமா இருக்குன்னு படத்தப் பார்த்தே ஜொள்ளு விட்ட மனுஷன், எப்போ கச்சேரின்னு கேட்டுட்டே இருக்காரு. ரிசல்ட்டு ஓகேன்னா இன்னிக்கே அவள அமைச்சர் வீட்டுக்கு அனுப்பிடலாம். மொத்த பணமும் அமைச்சர் வீட்டுக்கு பொண்ணு போய் இறங்கனதும் உன் கைக்கு கேஷா வந்துடும். ரிசால்ட்டு சொதப்பனாலும் பாதகமில்ல, குடுக்க வேண்டிய அமவுண்டுல பின்னாடி ரெண்டு சைபர வெட்டிட்டு, அவள மத்த கிராக்கியோட கிராக்கியா சேர்த்துக்கறேன்.”

“டீல்ல பேசனப்படி உள்ளூருல அவள வச்சிக்க வேணாம். வெளி மாநிலத்துக்கு அனுப்பிடு! இங்க எவனாச்சும் பார்த்துத் தொலைச்சிட்டா மானம் போயிடும். சொந்தக்காரங்க கிட்ட வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கான்னு சொல்லி அப்படியே சமாளிச்சிடறேன்”

“சரி, சரி! இந்தா கார்ட்டு. இன்னிக்கே போய் இந்த டாக்டர்ட செக் பண்ணிடு! நம்ம பசங்களயும் பின்னால அனுப்பி விடறேன்! எல்லாம் சரியா வந்தா, அமைச்சரோட பீச் ஹவுசுக்கு அவனுங்க கூட்டிட்டுப் போயிடுவானுங்க” என சொல்லி எழுந்துக் கொண்டான் கதர் வேட்டி சட்டையில் பாந்தமாக பக்தி மணம் கமழ இருந்த அந்த சைவ ஹோட்டலின் முதலாளி.  

கூடவே வேனில் வந்தவர்களை வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லி விட்டு, தான் மட்டும் வீட்டுக்குள் நுழைந்தான் கந்தமாறன். முன்னே வந்த கனகாவிடம்,

“மல்லி வீட்டுக்கு வந்துட்டாளா?” என கேட்டான்.

“வந்துட்டாங்க! சமையல் பண்ணிட்டு இருக்கா! காபி கொண்டு வர சொல்லவா?”

“இல்ல வேணா! இன்னிக்கு காலையில உன் கிட்ட சொன்னேன்ல, அவளுக்கு வெளியூர்ல வேலைப் பார்த்து வச்சிருக்கேன்னு! அந்த வேலை விஷயமா இப்பவே கிளம்பி வர சொல்லிட்டாங்க! அவள போய் குளிச்சி கிளிச்சி கெளம்ப சொல்லு”

“ஏங்க, அந்த வேலைக்குப் போயேத்தான் ஆகனுமா? இங்க இருந்தாலாச்சும் வீட்டு வேலைக்கு கூட மாட ஒத்தாசையா இருப்பா!”

“ஏன்டி நீ வேற டார்ச்சர் பண்ணிக்கிட்டு! அங்க போய் வேலை செஞ்சா சுளையா சம்பளம் வரும்டி. நம்ம புள்ளய நல்ல காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கலாம்! காலையிலதான் படிச்சு படிச்சு சொன்னேன். இப்போ வந்து ஏங்க, எதுக்குங்கன்னு நிக்கற! போ போ, அவள கிளம்ப சொல்லு. நானும் குளிச்சிட்டு வரேன்”

ஆத்திரமாகப் படபடவென பேசிவிட்டு ரூமுக்குள் போன தன் கணவனை அமைதியாகப் பார்த்திருந்தாள் கனகா. ஐந்து நிமிடம் கழித்த ரூமினுள் போனவள், அவனது போனை எடுத்துக் கடவு சொல் தட்டி ஆராய்ந்தாள். அவன் கேடி என்றால் இவள் ஜில்லா கேடியாயிற்றே! பின் பெருமூச்சுடன் பவளமல்லியைத் தேடிப் போனாள் கனகா.

கையில் ஒரு குட்டி பேக்குடன் கந்தமாறனுடன் புறப்பட்டாள் பவளமல்லி. கடைசி தங்கையை ஒரு முறை அணைத்து விடுவித்தவள், தாயின் முகத்தை சில நொடி ஆழ்ந்துப் பார்த்து விட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

பைக்கில் கந்தமாறனின் பின்னால் அமைதியாக ஏறி அமர்ந்தாள் பவளமல்லி. பைக் காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்தது. அவள் கண்களில் வழிந்த கண்ணீர் காற்றின் வேகத்தில் வேகமாய் காய்ந்துப் போனது. அந்த தனியார் கிளினிக்கின் முன்னே பைக்கை நிறுத்திய கந்தமாறன்,

“வா! அவங்க என்ன டெஸ்ட் செஞ்சாலும் வாய மூடிட்டு இருக்கனும். புரிஞ்சதா? எதாவது அழும்பு பண்ணீனா இங்கயே அடி வாங்கி செத்துடுவ!” என மெல்லிய குரலில் மிரட்டினான்.

கை தன்னிச்சையாக கன்னத்துக்குப் போக, சரியென மெல்ல தலையாட்டினாள் பவளமல்லி. பைக் பின்னால் ஹோட்டல் முதலாளியின் வேன் வேறு வந்து நின்றது. தூக்குக் கயிற்றுக்கு போவது போல கால்கள் கனக்க, மெல்ல அந்த கிளினிக் உள்ளே அடி எடுத்து வைத்தாள் பாவை.

ஜெய்சங்கரோ கடையடைத்து விட்டு தன் தகப்பனுடன் வீட்டை அடையும் போது நள்ளிரவு மணி பன்னிரண்டு ஆகியிருந்தது. சோகமாக,

“கண்ணிரண்டில் நான்தான்

காதல் எனும் கோட்டை

கட்டி வைத்துப் பார்த்தேன்

அத்தனையும் ஓட்டை!” என பாடியபடியே வீட்டுக் கதவைத் திறந்தவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைக்குத்தி நிற்க, வாய்

“தங்கமே ஞான தங்கமே!” என முணுமுணுத்தது.

(காதல் மலரும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபில சந்திக்கலாம். அண்ட்டில் தென், லவ் யூ ஆல்)