Kanne Kadhal Penne–EPI 5

239948099_925484634705538_288795760143811764_n-bdb2f972

அத்தியாயம் 5

சமோசா இந்திய உணவு என எண்ணிக் கொண்டிருக்கிறோம். சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் சம்போசா எனும் இந்த சமோசா ஈரான் நாட்டில்தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது என அறிந்துக் கொள்ளலாம். சென்னையில் பல ரோட்டோரக் கடைகளில் சைவ மற்றும் அசைவ சமோசாக்கள் கிடைக்கின்றன.

 

வீட்டுக்குள் நுழைந்து பாடியபடியே விளக்கைப் போட்ட ஜெய்சங்கர் அதிர்ந்துப் போய் நின்றான். அவர்கள் குட்டி வீட்டின் வரவேற்பறையில் சுவரில் சாய்ந்து சிலையென அமர்ந்திருந்தாள் பவளமல்லி.

வாய் மென்மையாய்,

“தங்கமே ஞான தங்கமே!” என முணுமுணுக்க தலையை ஒரு தடவை பலமாக உலுக்கினான் இவன்.

அந்த உலுக்கலில் அவள் பிம்பம் மாயமாய் மறைந்துப் போகாமல் அப்படியே இருக்க, மெல்ல அடியெடுத்து அவளை நெருங்கினான் ஜெய்சங்கர்.

இதெல்லாம் நிஜம் போல் தோன்றும் கனவோ என எண்ணி கீழே குனிந்து மென்மையாய்,

“தேவா!” என அழைத்தபடியே அவளது கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டான் இவன்.

தன் விரல் மென்மையான அவள் கன்னத்தில் புதைந்து வெளி வரவும்தான் பவளமல்லி நிஜமாகவே தன் வீட்டின் உள்ளே அமர்ந்திருக்கிறாள் என உணர்ந்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

அப்படியே சரிந்து அவள் முன்பு அமர்ந்தவன்,

“நீ..எங்க..எப்படி..இங்க” என வார்த்தை வராமல் தடுமாறினான்.

“அதெல்லாம் அப்பால கேக்கலாம், மொதல்ல நீ அந்தாண்ட தள்ளிப் போடா மவனே! பக்கத்துல போய் மூஞ்ச மூஞ்ச காட்டுனா பயந்துக்கப் போகுது புள்ள” என்றபடியே உள்ளே நுழைந்த கோபால் அவளைப் பார்த்து,

“வாம்மா!” என வரவேற்றார்.

அவரை நிமிர்ந்துப் பார்த்தவள், கலங்கிய கண்களோடு முறுவலிக்க முற்பட்டாள்.

“நைனா! தேவா நைனா தேவா!”

“தேவாதான்! நான் இன்னா தோசை தாவான்னா சொன்னேன்!”

அவர் சொல்லிய விதத்தில் மெல்லிய புன்னகைப் பூத்தது இவளின் உதட்டில்.

முறைத்த மகனைப் பார்த்து,

“சங்கரு டேய்! தட்டு எடுத்துட்டு வாடா இந்தப் புள்ளைக்கு! அப்படியே சூடா டீ வச்சி எடுத்துட்டு வா!” என்றவர், அவள் முன்னே தரையில் அமர்ந்து வாங்கி வந்திருந்த இட்லி பார்சலைப் பிரிக்க ஆரம்பித்தார்.

“ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா வாங்கிக் குடுடான்னு கேட்டதுக்கு, என்னமோ சொத்துல பாதி கரைஞ்சிட்ட மாதிரி ஓவர் சீன் போட்டாம்மா இவன்”

“நைனா, இந்த டகில்பாச்சா வேலைத்தானே வேணாங்கறது! வீட்டுக்கு விருந்தாளி வராங்கன்னு சொல்லிருந்தா எக்ஸ்ட்ரா நாலு கூட வாங்கிக் குடுத்திருப்பேன். ராத்திரி நேரம் நீ நெறைய துன்னுட்டு வவுத்து வலில துடிக்கக் கூடாதுன்னு ஒரு அக்கறையில சொன்னத இப்படி மாத்தி சொல்லற பாத்தியா!!!” என்றவாரே தட்டைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, டீ போட போனான் ஜெய்சங்கர்.

“அதே பரோட்டாவே துன்னு துன்னு நாக்கு செத்துடும்மா! அதான் சில நைட்டுக்கு இப்படி இட்லி, இடியாப்பம்னு பார்சல் வாங்கிக்கினு வருவோம்” என பேச்சுக் கொடுத்துக் கொண்டே உணவைத் தட்டில் இட்டுக் கொடுத்தார்.

வேண்டாமென இவள் தலையாட்ட,

“சாப்புடும்மா! வய்த்துல கனமா எதுனாச்சும் உழுந்தாத்தான், எதையும் சமாளிச்சிடலாம்னு மனசுக்கு தெம்பு வரும்” என வற்புறுத்தினார்.

“கை கழுவனும்பா” என மெல்லிய குரலில் சொன்னாள் இவள்.

“பின்னாடி போ, சங்கரு காட்டுவான்”

சின்ன வீடு அது. இரண்டாவது மாடியில் இவர்களது ஜாகை. மெல்ல எழுந்து, நொண்டி நொண்டி பின்னால் நடந்துப் போனாள் பவளமல்லி. ஆண்கள் இல்லம் என சொல்லாமல் சொல்வது போல அழுக்கும் பிசுப்புமாக இருந்தது வீடு. பரோட்டாவுக்கு வீட்டில் வைத்துத்தான் மாவு பிசைவார்கள் போல. இன்னும் மிசின் வைத்து மாவு பிசையும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை இருவரும். தன் கையே தனக்குதவி எனத்தான் வியாபாரம் ஓடுகிறது.

அண்டா, குண்டா என அந்தக் குட்டி சமையல் அறையே நிறைந்துப் போய் கிடந்தது. அதோடு மாவும் எண்ணெய்யும் அங்கங்கே கொட்டிக் கிடந்தது. இருவரின் பேச்சு சத்தத்தையும் கேட்டிருந்த சங்கர், தண்ணீரோடு ரெடியாக இருந்தான்.

“என்ன நொண்டற? என்னாச்சு?”

ஒன்றும் இல்லையென தலையசைத்தவள், சிங்க் பக்கம் வந்தாள்.

“இன்னிக்கு தண்ணி வரல! இந்த தண்ணில கைய கழுவிக்க! அப்படியே முகம் கழுவறதனாலும் கழுவிக்க! அடிக்கடி இங்கெல்லாம் பைப்புல தண்ணி வராது! அதனால தண்ணி லாரி வரப்போ புடிச்சு வச்சிக்குவோம்! கொஞ்சம் துட்டு உள்ளவங்க தண்ணி கேனும் வாங்கி வச்சிப்பாங்க! நானும் வாங்கி வைச்சிப்பேன்! வியாபாரத்துக்கு சுத்தமான தண்ணி வேணும்ல” என பேச்சுக் கொடுத்தப்படியே அவள் கையையும் முகத்தையும் கழுவுவதை ரசனையோடு பார்த்திருந்தான்.

மனமோ,

“என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்” என பாடியது.

ரசனை ஒரு புறம் இருந்தாலும், அவன் எண்ணமெல்லாம் இவள் எங்கே இங்கே என்பதிலேயே சுற்றி சுழன்றது. தகப்பனுக்கு இவள் வருவது தெரிந்திருக்கிறது என புரிந்ததில் இருந்து என்னவோ பெரிதாய் நடந்திருக்கிறது என தெரிந்துப் போனது இவனுக்கு. இவர்கள் வாயாலே எல்லாம் வரட்டும் என அமைதி காத்தான் ஜெய்சங்கர்.

அவள் முகம் கழுவித் துப்பட்டாவில் துடைத்தப்படி, முன்னறைக்கு நடக்க முயல, பட்டென கையைப் பிடித்து இழுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்த்தினான் இவன்.

“எ..என்ன?”

“காலுல ரத்தமா இருக்குத் தெரியலையா? ஏன் நொண்டறேனு கேட்டேன் தானே? வாயில என்ன பூந்தி லட்டா வச்சிருக்க? அடிப்பட்டுருக்குன்னு சொல்லத் தெரியாது?” என கடிந்தவன் மஞ்சள் டப்பாவைத் தேடி எடுத்தான்.

அவன் சத்தத்தில் பின்னால் வந்தார் கோபால்.

ரூமின் உள்ளே போய் குட்டித் துண்டு ஒன்றை எடுத்து வந்தவன், தண்ணீரில் அதை நனைத்து, அவள் முன்னே மண்டியிட்டான்.

“இல்லல்ல! நானே பார்த்துக்கறேன்!” என இவள் பதற,

“துண்ட குடுத்துட்டு முன்னாடி வா சங்கரு!” என அழைத்தார் கோபால்.

எழுந்துக் கொண்டவன், கோபமாக துண்டை அவள் மடியில் போட்டு விட்டு டீயை எடுத்துக் கொண்டு முன்னறைக்குப் போனான்.

“அவன் அப்படித்தான்! சும்மாவே கோபம் பொசுக்குன்னு வரும்! பொட்டப் புள்ளைக்கு கூச்ச நாச்சம் இருக்கும்னு புரியாதப் பய! நீ காயத்துக்கு மஞ்சப் பூசிட்டு வா கண்ணு” என சொல்லி நகர்ந்தார் கோபால்.

கால் பாதங்களில் அங்கங்கே கற்கள் குத்திக் கிழித்திருந்தன. அதோடு வலது கால் பெருவிரலில் பெரிதாய் காயம் பட்டு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. கையிலும் சிராய்த்திருந்தது. இவ்வளவு நேரம் பயத்திலும் பதற்றத்திலும் வலி தெரியாமல் இருந்தது மல்லிக்கு. இப்பொழுது இரு ஆண் மக்கள் தன்னைப் பாதுகாப்பாய் உணர வைக்க, வலியும் களைப்பும் தன்னால் முன்னே வந்து நின்றது. கீழே குனிந்து ஈர துண்டால் காலைத் துடைத்தவள்,

“ஹிஸ்!!!” என முனகினாள்.

அந்த சத்தத்துகே சட்டென பக்கத்தில் வந்து நின்றிருந்தான் ஜெய்சங்கர்.

“ரொம்ப நோவுதா? எங்க கிட்ட மருந்து மாத்திரை ஒன்னுமில்லையே! ஓன் நிமிட் வெய்ட் பண்ணு! எதிர்த்த வீட்டு அக்காட்ட எதாச்சும் இருக்கான்னு கேட்டுட்டு வரேன்” என நகர்ந்தவனின் கையைப் பற்றினாள் பவளமல்லி.

“லேசான வலிதான்! மஞ்சள் போட்டா சரியாகிடும்” என்றாள்.

அவள் துடைத்து, மஞ்சளைத் தடவும் வரை அங்கேயே நின்றான் ஜெய்சங்கர். அதன் பிறகு அமைதியாகப் போனது அவர்கள் உணவு நேரம்.

சாப்பிட்டு முடித்ததும்,

“சொல்லு கண்ணு!” என தலை குனிந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்து மென்மையாய் கேட்டார் கோபால்.

தான் போன் செய்து உதவி வேண்டும், மற்றதெல்லாம் நேரில் சொல்கிறேன் எனக் கேட்டதும், சற்றும் தயங்காமல் வீட்டு முகவரி சொல்லி, வீட்டு சாவி எதிர்த்த வீட்டில் ஒன்று இருக்கும் என்றதோடு, அவளுக்கு உணவிட்டு, கரிசனமாய் என்ன நடந்தது என விசாரிக்கவும் கண்களில் மடைத் திறந்தது பவளமல்லிக்கு.

இரு கைகளால் முகத்தை மூடித் தேம்பி தேம்பி அழும் பெண்ணவளையே தகப்பனும் மகனும் அமைதியாகப் பார்த்திருந்தனர். பெண் துணை இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இருவருக்கும், அழும் இந்தச் சின்னப் பெண்ணை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை. பேய் முழி முழித்த இருவரும், ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

“தோ பாரு தேவா! அழுகாதே!” என இவனும்,

“யம்மா! கண்ணு! அழவாச்சிய நிப்பாட்டுமா!’ என கோபாலும் தங்களுக்கு தெரிந்த அளவில் அவளை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

வாடிக்கையாளர்கள் சுற்றி நிற்க, அப்பாவும் மகனும் மிகவுமே பிசியாக இருந்த நேரத்தில்தான் போனில் அழைத்திருந்தாள் பவளமல்லி. அவளது நம்பரைப் பார்த்ததும் என்ன இந்த நேரத்தில் அழைக்கிறாள் என எண்ணியபடியே சற்றுத் தள்ளிப் போய் அழைப்பை எடுத்தார் கோபால்.

மடமடவென அவள் பேசியதில் இருந்து, எதுவோ சரியில்லை என புரிந்தது. அதோடு வயதுப் பிள்ளை அந்த இரவு நேரத்தில் உதவி என கேட்க, மறுக்கவும் முடியவில்லை அவரால். சரியென வீட்டுக்கு வர சொல்லிவிட்டார். ஆனாலும் மனதிற்குள் கலக்கமாகவே இருந்தது. போலிஸ் வீட்டுப் பெண். இவள் தங்களைத் தேடி வருவதால், தன் மகனுக்கு எதாவது இக்கட்டு வருமோ என பயந்தார்தான். ஆனாலும் மல்லியில் குரலில் இருந்த பதட்டம், ஒரு தகப்பனாய் அவரின் மனதை அசைத்துப் பார்த்தது. மகனிடம் சொன்னால் அவன் இன்னும் பதறுவான் என தெரிந்துதான், அன்று சீக்கிரமாகவே கடையடைத்து விட்டுக் கிளம்பி விட்டார். அதோடு வீட்டுக்கு வந்து விட்டதாக அவள் போன் செய்து சொல்லவும்தான் பதட்டம் குறைந்து உணவு வாங்கிக் கொண்டே வீடு வந்தார் கோபால்.

அழுகை விசிப்பாய் மாற, புறங்கையால் கண்ணைத் துடைத்தப்படி மெல்ல தனது கதையை சொல்ல ஆரம்பித்தாள் மல்லி. சின்ன வயதில் அனாதையாய் ஆனது, கனகா வீட்டுக்கு வந்தது, வளர்ந்தது, கதிரேசனின் இறப்பு, கந்தமாறனின் வரவு என எல்லாவற்றையும் சொன்னவள் அங்கே அனுபவித்தக் கொடுமைகளை ஓரளவு மட்டும் சொன்னாள். அதோடு அன்றைய தினம் என்ன நடந்தது என யார் முகத்தையும் பார்க்காமல், பார்வையைத் தன் கைகளில் பதித்து மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

அன்றைக்கு எப்பொழுதும் போல தங்கைகளுக்கு பரோட்டா போட்டுக் கொடுத்து விட்டு, சமையலை ஆரம்பித்தாள் மல்லி. என்றும் இல்லாத திருநாளாக, கந்தமாறன் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்திருந்தான். ஹாலில் கனகாவும் கந்தமாறனும் பேசிய சத்தம் இவளுக்கும் கேட்டது.

‘வெளியூருக்கு வேலைப் பார்க்க போகனுமா? என்ன திடீர்னு!’ என நினைத்தவளுக்கு கலக்கமாக இருந்தது.

சற்று நேரத்தில் அங்கே வந்த கனகா,

“புள்ளைங்களா! வெளியே போய் செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்துங்க! போங்க, போங்க” என விரட்டினாள்.

அவர்கள் போனதும் மல்லியை நெருங்கி சின்னக் குரலில்,

“தோ பாரு மல்லி! விளக்கமா பேச நேரமில்ல! இன்சு உன்னை யாருக்கோ வித்துட்டான். அவன் வாய்ஸ் நோட்டுல இருந்து இவ்ளோதான் என்னால கண்டுப் புடிக்க முடிஞ்சது! என்னால…என்னால உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது! நானும் பிள்ளைங்களும் சாப்பாட்டுக்கே அவன நம்பித்தான் இருக்கோம்! நீயா என் புள்ளைங்களான்னு வரப்போ, என்னால என் புள்ளைங்கள பத்தி மட்டும்தான் நெனைக்க முடியும். சுயநலம்தான்! ஆனா எனக்கு வேற வழி தெரியல!” என சொல்லியபடியே, எங்கே கந்தமாறன் வருகிறானோ என ரூம் கதவை எட்டிப் பார்த்துக் கொண்டாள் கனகா.

“காலம்பூராவும் எனக்கும் என் புள்ளைங்களுக்கும் உழைச்சிப் போடறதுக்கு உன்னை இந்த வீட்டுலயே வச்சிக்கனும்னு நெனைச்சேன். ஆனா இந்த இன்சு இப்படி ஒரு வேலைப் பார்ப்பான்னு நான் நெனைச்சே பார்க்கல! வளத்தக் கடமைக்கு நீ பிரதியுபகாரம் பண்ணனும்னு நெனைச்சேனே தவிர, கண்டவன் கையில கெட்டு சீரழிஞ்சிப் போகனும்னு நெனைக்கல! மூனு பொட்டைப் புள்ளைங்கள பெத்து வச்சிருக்கேன்! இந்தாளு உனக்குப் பண்ணற பாவம் என் புள்ளைங்க மேல விடிஞ்சுடக் கூடாதுன்னுதான் எச்சரிக்கறேன்! வெளிய போறப்போ, எப்படியாச்சும், எங்கயாச்சும் தப்பிச்சுப் போயிடு!”   

கனகா சொன்ன விஷயத்தில் நெஞ்சாங்கூடு காலியாகி விட்ட உணர்வு மல்லிக்கு. அவர்களின் மூத்த மகளை விட சில வருடங்கள் தானே பெரியவள் இவள். இத்தனை வருடங்கள் நாயாய் இவர்களுக்காக உழைத்திருக்கிறாளே, தன் கையால் சமைத்துப் போட்டிருக்கிறாளே! கொடுத்த உடையை உடுத்தி, கொடுத்த உணவை உண்டு, உழைத்தக் காசை அப்படியே இவர்களுக்கு தாரை வார்த்து இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாய் வாழ்ந்தாளே! தங்கள் கண் முன்னே வளர்ந்த பெண் என கொஞ்சம் கூடவா மனிதாபிமானம் இல்லாமல் போனது! தன்னை விற்க கந்தமாறன் முனைந்தது ஒரு பேரிடி என்றால், அதை தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் தன்னையும் தன் பிள்ளைகளையும் மட்டும் யோசித்த கனகாவின் செய்கை நெஞ்சில் ரத்தத்தை வரவழைத்தது. மனதில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பந்த பாசமும் அங்கேயே, அந்நொடியே மடிந்துப் போனது. இனி உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, இந்த வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேன் என வைராக்கியமாய் நினைத்துக் கொண்டாள் பவளமல்லி.

என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் என யோசிக்கும் முன்னே கந்தமாறன் வந்துவிட, அவசரமாய் கிளம்ப வேண்டிய கட்டாயம் அவளுக்கு. கந்தமாறனின் மிரட்டலுக்கு பயந்து கிளினிக்கின் உள்ளே நுழைந்தாலும், மனம் முழுக்க தப்பிக்க வேண்டும், முடியாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம்தான். இந்த உடலால் யாரும் பலன் அடைய விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்துக் கொண்டாள் பவளமல்லி.

கொஞ்சம் பெரிதாய் இருந்த அந்தக் கிளினிக்கில் கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஹோட்டல் முதலாளி கொடுத்த கார்டைக் காட்டி டோக்கன் வாங்கிக் கொண்டான் கந்தமாறன். இவர்கள் முறை வர, இவளோடு கந்தமாறனும் உள்ளே போனான். உள்ளே இருந்த பெண் டாக்டர், கந்தமாறனை வெளியே இருக்க சொல்லவும், எழுந்து வெளியே வந்து விட்டான்.

“சுடி பாட்டத்தயும், பேண்டிசையும் கழட்டிட்டு கட்டில் மேலே ஏறி படுமா” என டாக்டர் சொல்ல,

“டாக்டர்” என மெல்ல இழுத்தாள் இவள்.

“என்ன?”

“எனக்கு ஓன் பாத்ரூம் ரொம்ப கிட்ட வந்துடுச்சு! போய்ட்டு வந்துடவா?”

“என்ன பொண்ணும்மா நீ! போ போ, சீக்கிரமா போய்ட்டு வா” என எரிச்சலாக சொன்னார் அவர்.

இவள் கதவைத் திறந்து வெளியே வர, என்னவென வந்தான் கந்தமாறன்.

“டாக்டர் டாய்லட்டுக்குப் போய்ட்டு வர சொன்னாங்க” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“சரி போ” என சொல்லியபடியே அவள் பின்னால் வந்தான் கந்தமாறன்.

அங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக டாய்லட் இருக்க, இவள் பெண்கள் டாய்லட்டில் நுழைந்துக் கொண்டாள். வெளியவே இவன் நிற்க,

“சார், பொண்ணுங்க போற இடத்துல உங்களுக்கு என்ன வேலை? முன்னப் போய் உட்காருங்க, வருவாங்க” என்றாள் சுத்தம் செய்பவள்.

எப்படி இருந்தாலும் வாசல் முன் வழியாகத்தானே இருக்கிறது எனும் எண்ணத்தில் முன்னே வந்து, அவள் வரும் வழியைப் பார்க்கும்படி அமர்ந்துக் கொண்டான் இவன்.

நிஜமாகவே பதட்டத்தில் அடி வயிறு முட்டவும்தான், டாய்லட் தேடி வந்தாள் பவளமல்லி. தனது குட்டிக் கைப்பையை கதவில் இருந்த ஆணியில் மாட்டியவள், முதலில் செய்ய வேண்டிய வேலையை செய்தாள். பின்பே அந்த டாய்லட்டை சுற்றி முற்றிப் பார்த்தாள்.

பார்த்தவளின் முகத்தில் மெல்லிய புன்னகை. அங்கே சின்னதாய் ஒரு ஜன்னல் போல அமைப்பு சற்று உயரத்தில் இருந்தது. உள்ளிருக்கும் வாடைப் போக அந்த ஜன்னலின் கண்ணாடி கதவைத் திறந்து, பின் மூடி வைப்பார்கள் போல. அந்த வெஸ்டர்ன் டாய்லட்டின் சீட்டை மூடியவள், கைப்பையை எடுத்துக் கொண்டு அதன் மேலே ஏறி நின்றாள். பின் அந்த ஜன்னலைத் திறந்தவள், முதலில் மெல்ல தலையை நீட்டி வெளியேப் பார்த்தாள். கிளினிக்கின் பின்னால் ஆள் நடமாட்டமில்லை. இவள் ஆள் மெல்லிய மேனியளாக இருக்க, அந்த சின்ன ஜன்னலில் உடலை நுழைத்துப் பொத்தென வெளியே வந்து விழுந்தாள் பவளமல்லி. அப்பொழுதுதான் காலின் பெருவிரலில் அடிப்பட்டது. அதோடு இரண்டு கையும் சிராய்த்துக் கொண்டது.

வலியைப் பொருட்படுத்தாமல் அவசரமாக எழுந்து நின்றவள், சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். அங்கிருந்த குறுக்கு சந்து கண்ணுக்குப் பட, அதன் வழி வேகமாக ஓட ஆரம்பித்தாள் பவளமல்லி. மூச்சு வாங்க, ரொம்ப தூரம் ஓடி வந்தவள் ஓர் ஆட்டோ வர, கைக்காட்டி அவசரமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

“எங்கமா போகனும்?”

“திருவான்மியூர் ஹவுசிங் போர்ட் போங்கண்ணா” என சட்டென வாயில் வந்து விட்டது இவளுக்கு.

தயக்கமாகப் பேசும் இவளை சகஜமாக்க, தங்களைப் பற்றியும் கொஞ்சம் பேசுவார் கோபால். அப்படித்தான் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என தெரிந்துக் கொண்டிருந்தாள் பவளமல்லி.

பள்ளியிலும் சரி, வெளியேவும் சரி இவளுக்கு பெரிதாய் நட்பென்று யாரும் இருந்தது இல்லை. ஹாய் பாய் எனும் அளவில்தான் எல்லோரோடும் பழகுவாள். நட்பென வந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும், குடும்பக் கதையை சொல்ல வேண்டும். இதெல்லாம் பிடிக்காததால் இவளும் ஒதுங்கியே இருந்துவிட்டாள். அந்தப் பழக்கமே இப்பொழுது ஆபத்து அவசரத்துக்கு உதவ யாரும் இல்லாமல் செய்துவிட்டது.     

இந்த இக்கட்டில் இருந்து யார் தன்னைக் காப்பாற்றுவார் என நினைக்கும் போதே பரோட்டா மாஸ்டரின் உருண்டு திரண்ட புஜங்கள்தான் இவள் கண் முன்னே வந்து நின்றது. அன்று அவன் கொடுத்த அறை ஒவ்வொன்றும் பளிச் பளிச்சென கண் முன்னே மின்னி மறைந்தது. ஆரம்பத்தில் தன்னை ஆர்வமாகப் பார்த்தவன், இப்பொழுது கண்டுக் கொள்வதில்லை என மனம் துவண்டுப் போனாலும், கோபால் கண்டிப்பாக தனக்கு உதவுவார் எனும் நம்பிக்கையுடன்தான் அவருக்குப் போன் செய்தாள். அவள் நம்பிக்கையை வீணாக்காமல், அவர் வர சொல்லவும்தான் நிம்மதியே வந்தது அவளுக்கு.

மெல்லிய விசிப்புடன் அவள் சொல்லி முடிக்க, ரத்தம் கொதித்தது ஆண்கள் இருவருக்கும்.

“துத்தேரி! இவன்லாம் என்ன மனுஷ ஜென்மம்! நாதாரி நாய்” என கண்ட மேனிக்குத் திட்டிய ஜெய்சங்கர் பட்டென எழுந்துக் கொண்டான்.

“வீட்டு அட்ரசு சொல்லு தேவா! இப்பவே போய் அந்த இன்ஸ்ச பொழந்துக் கட்டிடறேன்” என லுங்கியை மடித்துக் கட்டினான் ஜெய்சங்கர்.

“டேய், டேய், அடங்குடா சங்கரு! விடிஞ்சதும் என்ன செய்யறதுன்னு பார்ப்போம்! தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னு குதிச்சா போதுமா! யோசிச்சு எதுனாச்சும் பண்ணுவோம்! இப்போ மல்லி புள்ள படுக்கறதுக்கு ரெடி பண்ணலாம்! புள்ள பார்க்கவே களைச்சித் தெரியுது!” என்றவர் அவளுக்கு படுக்க ஆயத்தம் செய்ய அறைக்குள் நுழைந்தார்.

அவர் உள்ளே போனதும், அருகில் அமர்ந்திருந்த சங்கரின் பக்கம் குனிந்தவள் மெல்லிய குரலில் அவன் காதோரம்,

“யோவ் பரோட்டா! என்னை அந்த இன்சுக்கிட்ட இருந்து காப்பாத்தி விட்டிரு ப்ளீஸ்! கண்டவனுங்க கிட்ட சிக்கி சின்னாப்பின்னமாகறதுக்கு பதிலு, உன் ஒருத்தனுக்கு மட்டும் வைப்பாட்டியா இருந்துட்டுப் போறேன்!” என சொல்லி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

அவள் பேச்சிலும் செயலிலும் விக்கித்துப் போனான் ஜெய்சங்கர்.  

பவளமல்லி அங்கே அடைக்கலமாகிய இரண்டாவது நாள், வீட்டினுள் தடாலடியாக நுழைந்து, அவளது கூந்தலை இறுகப் பற்றியிருந்தான் கந்தமாறன்,

“யாருக்கிட்டடி உன் தில்லாலங்கடி வேலையக் காட்டற?”

 

(காதல் மலரும்…)

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். போன எபில டேய் பரோட்டா, பாப்பம்மாவ காப்பாத்துடான்னு கேட்டீங்க! நாமளும் ரியல் லைப் ஹீரோயின்தான். எல்லா டைமும் நம்ம ஹீரோவா(வீட்டுக்காரு) வராரு நம்மள காப்பாத்த? எத்தனை தடவை நம்மளே நாமளே காப்பாத்திக்கறோம் 🙂 நான் சொல்லறது நெஜம்தானே! இந்த சீன்ல அவள அவளே காப்பாத்திக்க வேண்டிய நிலைமை. ஹீரோவ கூப்பிடற அளவுக்கு அவளுக்கு டைம் இல்ல. ஆனா இனிமே நம்ம ஹீரோ கூடவே இருப்பான் அவன் தேவாவ பாதுக்காக்க! உங்களோட கமேண்ட் பார்க்க ஆவலா வேய்ட்டிங்.. அடுத்த எபியில சந்திக்கும் வரை, லவ் யூ ஆல் டியர்ஸ்)