Kanne Kadhal Penne–EPI 6

239948099_925484634705538_288795760143811764_n-b2fed5df

அத்தியாயம் 6

ஆவிக்கு மிகவும் பிடித்த ஒரு உணவென்றால் அது இட்லிதான்!!! சென்னையில் நிறைய ரோட்டோர இட்லி கடைகளை காணலாம். கடையில்லாமல் வீதியோரத்தில் இட்லி பானையை  வைத்துக் கொண்டு குடும்ப கஸ்டத்தைப் போக்க இட்லி அவித்து விற்கும் பெண்மணிகளையும் பார்க்கலாம். பண்டைய காலத்தில் இட்லியை இட்டரிக என அழைத்தார்கள். செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, குஷ்பு இட்லி என பல பரிமாணங்களில் கிடைக்கின்றது இட்லி.

 

இரவே மறுநாளுக்கு வேண்டிய பரோட்டாவிற்கான மாவைப் பிசைந்து உருண்டைகளாக்கி வைத்து விட்டு, காலையில்தான் சால்னாவுக்கான ஆயத்தம் செய்வார்கள் ஜெய்சங்கரும் கோபாலும். கடைத் தெருவுக்குப் போய் வருவதாக சொல்லி கோபால் வெளியே போயிருக்க, சால்னா செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த சங்கரையே ஓரக் கண்ணால் பார்த்திருந்தாள் பவளமல்லி.

இவள் சங்கரின் வீட்டில் அடைக்கலமாகி அன்றோடு இரண்டு நாட்களாகி இருந்தன. வந்த நாள் இரவு இவள் பட்டான உதட்டை வைத்து அவன் கன்னத்தை அழுத்தமாய் பதம் பார்த்திருக்க, அவனோ கண்மண் தெரியாத ஆத்திரத்தில் பரதமே ஆடியிருந்தான். பெண் முத்தமிட்டால் ஆண் உச்சிக் குளிர்ந்துப் போவான் என எந்த மடையன் சொன்னது? பெண்ணிவள் முத்தத்தில் ஜெய்சங்கர் பேய்சங்கர் ஆகியிருந்தான்.

மல்லியின் மல்லிப் போன்ற உதட்டை(உதடென்றால் ரோஜாதானா? அந்த உதடுகள் மல்லிக்கு சொந்தமாதலால், அதை மல்லி உதடென்றே கொள்ள வேண்டும்!) இரு விரல் கொண்டு அழுத்திப் பிடித்தவன்,

“இனிமேங் காட்டி பஜாரி மாதிரி என் மேல வந்து உழுந்து உரசன, தர்ம அடி குடுத்துருவேன் பாத்துக்கோ! போடி அந்தாண்ட! கிஸ்சடிக்கறாளாம் கிஸ்சு!” என அடிக்குரலில் உறுமியவன் பட்டென எழுந்துக் கொண்டான்.

கோபமாக லுங்கியை மடித்துக் கட்டியவன், கதவோரம் சொறுகி வைத்திருந்த பீடியை எடுத்து வாயில் வைத்தப்படியே வீட்டின் வெளியே போய் விட்டான்.  

அவனது குரலிலும் இறுகிப் போன உடல் மொழியிலும் பவளமல்லி ரொம்பவே பயந்துப் போனாள். அந்த மு(கு)த்த சம்பவத்தில் இருந்து இன்று வரை இவளை முறைத்தப்படியே சுற்றிக் கொண்டிருந்தான் பரோட்டா மாஸ்டர். இவளும் கோபால் எதாவது கேட்டால் மட்டும்தான் வாயைத் திறப்பாள். மற்றப்படி அவள் வந்த அன்று அமர்ந்திருந்த இடத்தை இவளுக்கேப் பட்டாப் போட்டுக் கொடுத்து விட்டதைப் போல, அங்கேயே தான் சாய்ந்து அமைதியாக அமர்ந்திருப்பாள்.

எதிர்த்த வீட்டில் இருந்து, கீழ் வீட்டிலிருந்து, மேல் வீட்டிலிருந்து என பலர் சங்கரின் வீட்டுக்கு வந்து காட்சிப் பொருளைப் போல இவளைப் பார்த்து விட்டுப் போனார்கள்.

“தே! இங்க இன்னா படமா ஓட்டறாங்க!” என கோபாலும் சங்கரும் கடிந்துக் கொண்டும் கூட இந்த மியூசியம் பீசை(மல்லி) பார்க்க வருபவர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை.

இவள் சாவி வாங்கிய எதிர்த்த வீட்டு பெண்மணி காந்திமதிதான் அவ்வப்பொழுது வந்து இவளிடம் அணுசரனையாக நான்கு வார்த்தைப் பேசிப் போவார். அவரோடு அவரது ஐந்துப் பிள்ளைகளும் வால் பிடித்த மாதிரி வந்து விடுவார்கள். வரும் பொழுது எல்லாம் இவளுக்கென வீட்டில் சமைத்ததைக் கொண்டு வந்துக் கொடுப்பார் அவர். தயக்கத்துடன் இவள் வேண்டாமென சொன்னால்,

“தோ பாரு புள்ள! ரெண்டு ஆம்பளையும் பரோட்டா, சால்னா, ஆம்லேட்டு, ஹோட்டலு பிரியாணின்னு துன்னுப்பாங்க! அதையே நீயும் எத்தினி நாளுக்கு துன்னுவ? நீ இங்க தேறிக்கற வரைக்கும் என் கையால சாப்புடு!” என வற்புறுத்துவார்.

ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டுமே பாசம் என்பது சாத்தியம் என சிறு வயது முதலே கண் கூடாக கண்டிருந்த மல்லி, காந்திமதியின் பாசத்தில் நெக்குருகித்தான் போனாள். உணவை வாங்கிக் கொண்டால் இவன் என்ன சொல்லுவானோ என மல்லி ஓரக்கண்ணால் ஜெய்சங்கரைப் பார்த்து வைப்பாள்.

“நீ வச்சிட்டுப் போக்கா! அவ அப்பாலே சாப்டுப்பா!” என மறைமுகமாக சாப்பிட சொல்வானே தவிர, வாயைத் திறந்து சாப்பிடு என சொல்வதை தவிர்த்தான் சங்கர்.

காந்திமதி வீட்டுக்குப் போனதும், அவசரமாக உணவை அள்ளி வாயில் திணித்துக் கொள்வாள் இவள். இல்லாவிட்டால் அதற்கு வேறு கையை நீட்டி விடுவானோ எனும் பயம் மனதைக் கவ்விப் பிடிக்கும். அவன் உதட்டைப் பிடித்தப் பிடியே அவ்வளவு வலித்தது அவளுக்கு! இந்த லட்சணத்தில் அடித்து வேறு வைத்தால் உயிர் பிழைப்போமோ என மேனி நடுங்கித்தான் போனது மல்லிக்கு.

கந்தமாறன் அடிக்கடி கை நீட்டும்படி இவள் வைத்துக் கொள்வது இல்லையென்றாலும், சில நேரங்களில் கனகாவின் மேல் உள்ள கடுப்பையெல்லாம் இவள் கன்னத்தில்தான் இறக்கி வைப்பான் அவன். அவ்வளவு பெரிய யானையையேப் பட்டினிப் போட்டு, அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தி, அதன் உடல் உறுதியை இழக்க வைத்து சின்ன சங்கிலியில் கட்டிப் போட்டு வீட்டுப் பூனை போல மாற்றத் தெரிந்தவன் மனிதன். மெல்லிய மேனி கொண்ட பவளமல்லி இந்த துன்புறுத்தலுக்குப் பயந்துப் போனதில் வியப்பொன்றுமில்லையே! வெளியிடங்களில் தைரியமானப் பெண்ணாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவள் ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்ட யானைதான்.

வாய் சொல்லில் வீரரடி என பாரதி சொன்னது போல இவள் வீரமெல்லாம் வாய் வார்த்தைகளில் மட்டுமே! அப்படிப்பட்டவள் துணிந்து ஜெய்சங்கரை முத்தமிட்டிருந்தாள் என்றால் எவ்வளவு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள் மல்லி என புரிந்துக் கொள்ளலாம். அதற்கு சங்கரின் எதிர்வினையால் இப்பொழுது அவள் மனதில் அவன் இன்ஸ் நம்பர் இரண்டாக பதிவாகிப் போயிருந்தான்.  

அமைதியாக அமர்ந்திருந்தவளின் கை காலெல்லாம் துறுதுறுத்தது அந்த வீட்டைக் கூட்டிப் பெருக்கி, அழுக்கு பிசுப்பு எல்லாம் போக துடைத்துப் பளபளப்பாக்க வேண்டுமென. ஆனால் உரிமையாய் எதையும் செய்ய முடியாமல் மனதில் ஒரு தடை. எப்பொழுதும் போல தன் மேலேயேப் பாவமாகிப் போய் விட, மனம் கனத்துக் கிடந்தது. ஒரு பெரிய ஆபத்தில் இருந்துத் தப்பிக்க, இங்கே இவர்களுக்கு காலில் கட்டிய கல்லாய் பாரமாகிக் கிடக்கிறோமோ என மனம் தவியாய் தவித்தது.

அந்த நேரம்தான் தடதடவென பூட்ஸ் சத்தம் நாராசமாய் இவள் காதில் வந்து விழுந்தது.

உடல் அப்படியே தூக்கிப் போட,

“மாமா!” என கத்தியபடியே எழுந்து ஜெய்சங்கரிடம் ஓடுவதற்குள் கொத்தாய் அவளது தலைமுடியைப் பிடித்திருந்தான் இன்ஸ்பெக்டர் கந்தமாறன்.

“யாருக்கிட்டடி உன் தில்லாலங்கடி வேலையக் காட்டற? ஓடுகாலி சிறுக்கி!” என கத்தியவன் ஓங்கி அவளை அறைவதற்குள் தொப்பென கீழே விழுந்துக் கிடந்தான்.

“யோ இன்ஸூ!! யாரு மேல கைய வைக்கற? என் பொண்டாட்டிய்யா அவ! கண்டவன் மூச்சுக் காத்து அவ மேல பட்டாலே கொத்து பரோட்டா மாதிரி கொத்திடுவேன் கொத்தி! நீ அவ மேல கையையே வைக்கறீயா? அம்மாம் பெரிய தவுலத்தா நீ?” என கேட்டப்படியே கீழே கிடந்தவனுக்கு குனிந்து இன்னொரு பேயறை வைத்தான் ஜெய்சங்கர்.

பொண்டாட்டி எனும் சொல்லில் கந்தமாறன் மல்லியின் கழுத்தைப் பார்க்க,

“இன்னா லுக்கு?” என கேட்டப்படியே மல்லியை நெருங்கி அவள் நெஞ்சுக்குள் உறவாடிக் கிடந்த, சின்னதாய் தங்கத் தாலி கோர்த்து இவன் கட்டி இருந்த மஞ்சள் கயிற்றை வெளியே எடுத்துப் போட்டான் ஜெய்சங்கர்.

“ஊர்ல நீ மட்டும்தான் போலிஸா? எங்களுக்கும் போலிஸ தெரியும்டா டேய்! திருவான்மியூர் ஸ்டேஷன்ல நான் கைநாட்டு வைக்க, இவ கையெழுத்துப் போட புருஷன் பொஞ்சாதியாத்தான் வெளிய வந்தோம். அப்படியே கோயிலுல வச்சி தோ, இந்த ரெண்டுக் கையாலத்தான்..” என இரண்டு கரங்களையும் காட்டி, அதைக் கொண்டே இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவன்,   

“தாலியையும் கட்டி இவளுக்கு புருஷனாவும், டொண்டிஃபோர்(டுவெண்டி ஃபோர்) ஹவர் காவக்காரனாவும் மாறி இர்க்கேன். இன்னா தைரியம் இர்ந்தா என் வூட்டாண்டயே வந்து என் ஆளயே இஸ்த்துக்குன்னு போவ ட்ரை பண்ணுவ!” என கேட்டப்படியே சரமாரியாக வெளுத்து விட்டான்.

ஆரம்பத்தில் அதிர்ச்சியில் இருந்த கந்தமாறனும் கொஞ்ச நேரத்தில் தேறிக் கொண்டான். எழுந்து நின்று சங்கரின் அடிகளைத் தடுக்க ஆரம்பித்தவன்,

“போலீஸ் மேலயே கைய வைக்கறியாடா நாயே! உன்னை லாக்கப்புல போட்டு முட்டிக்கு முட்டித் தட்டி, அதோட சேர்த்து குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விடல என் பேரு கந்தமாறன் இல்லடா!” என அவனும் ஆக்ரோஷமாகத் தாக்கினான்.

“ஆஹான்! அப்படின்னா நொந்த மாறன்னு மாத்தி வச்சிக்கடா என் சிப்சு!”

சண்டை என வந்தால் சட்டைக் கிழிவது சகஜம்தானே! இங்கே பரோட்டாவுக்கும் சட்டைக் கிழிந்து அங்கங்கே ரத்தமும் எட்டிப் பார்த்தது. அடி கொடுத்த மாஸ்டருக்கே ரத்தக் காயம் என்றால் அடி வாங்கிய இன்ஸுவின் நிலை!! ரத்த ஆறே ஓடியது கந்தமாறனின் உடலில்.

இவர்கள் இருவரின் அடிதடி சத்தத்தில் பல வீடுகளில் இருந்து ஆட்கள் திமுதிமுவென வந்து விட்டார்கள்.

“நம்ம சங்கருதான் ஜெய்ப்பான்கறேன்! பத்து ரூவா பெட்டு!” என பெட்டிங் வேறு ஆரம்பித்தது.

வீட்டின் உள்ளே இவளோ உறைந்துப் போய் நின்றாள்.

“எங்க வீட்டுப் பொண்ண கடத்திக் கொண்டு வந்து தாலி வேற கட்டிருக்க! எவ்ளோ திமிருடா உனக்கு?”

“தோடா! என் மாமானாரு(மாமா வேலை செய்யும் மாமனார்) நீ தெனம் குரும்பாடு வெட்டி ஆக்கிப் போட்டதுல, திமிரு கூடித்தான் போச்சு! இப்போ அதுக்கு இன்னாங்கற நீ?”

கந்தமாறனின் இரு கையையும் மடக்கிப் பிடித்து அவன் காதோரம்,

“எனக்கு வர ஆத்திரத்துக்கு வளத்தப் புள்ளயையே கூட்டிக் குடுத்த *******(மகா மோசமான கெட்ட வார்த்தை ஒன்று இங்கே வருகிறது) உன்னையெல்லாம் கொன்னு கூவத்துல வீசனும்னு மனசு துடிக்குதுடா பேமானி! ஆனா செய்யமாட்டேன்! எனக்கு என் பொண்டாட்டிக் கூட நூறு வருஷம் வாழனும். உன் உசுர எடுத்துட்டு கம்பி எண்ண நான் ஒன்னும் கேணையன் இல்ல. இனிமே என் மல்லி இருக்கற பக்கமே உன்னைப் பார்க்கக் கூடாது! அப்படி வந்த, உடம்புல ஒரு பீசு கூட வெளிய கண்டுப்புடிக்க முடியாத அளவுக்கு தடயமில்லாம கொத்திக் காக்காய்க்குப் போட்டுருவேன்.” என்றவன் ஓங்கி வயிற்றிலேயே முழு பலம் கொண்டு ஒரு குத்து விட, அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டான் கந்தமாறன்.

கண்கள் இரண்டும் மேலே சொறுகிக் கொள்ள, அமர்ந்த வாக்கிலேயே பின்னால் சரிந்தான் அவன்.

“சார்பட்டா பரம்பரை என்னடா குத்துனான்! எங்க பரோட்டா பரம்பரைக் குத்துனான் பாத்தியா கும்மாங்குத்து! சங்கருடா, ஜெய்சங்கரு! எடு பத்து ரூபாவ!” என ஒரே ஆர்ப்பாட்டம் சண்டையை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் மத்தியில்.

மயங்கிப் பொய் விழுந்துக் கிடந்தவனை, எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தப்படி நின்றாள் பவளமல்லி. மனக்கண்ணில் ஒவ்வொரு தடவையும் அடிவாங்கி சுருண்டுப் போய் கிடக்கும் குட்டி மல்லியும், பெரிய மல்லியும் வந்து வந்துப் போக, உதட்டில் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை விரிந்தது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உதட்டில் வடிந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டிருந்த தன் கணவனைக் கண்கள் மின்ன பார்த்தவளுக்கு உள்ளமெங்கும் பரவசம் பூத்துக் குலுங்கியது.

தன் வீட்டின் முன்னே கூடி இருந்தக் கூட்டத்தைப் பார்த்தப்படியே உள்ளே வந்த கோபால் அதிர்ந்துப் போனார்.

“அடேய் மவனே! உசுரு இருக்கா, இல்ல உருவிட்டியா?” என கேட்டப்படியே கந்தமாறனின் அருகே போய் ஆராய்ந்தார்.

“எல்லாம் உசுரோடத்தான் இருக்கான். என் முன்னாலயே என் தேவா முடியப் புடிச்சு அடிக்க வரான் நைனா! மாமுல் வாங்கற இந்த மாமா பயலுக்கே இவ்ளோ தில்லு இருந்தா, உழைச்சி சாப்பிடற எனக்கு எவ்ளோ இருக்கும்.”

“அதானே!” என வெளியே நின்றிருந்தவர்கள் கோரஸ் கொடுக்க,

“சண்டையைத் தடுக்காம வேடிக்கைப் பார்த்துட்டு அதானே நோதானேன்னு! எடத்தைக் காலி பண்ணுங்கடா கஸ்மாலங்களா!” என கோபால் சத்தம் போட, கூட்டம் கலைந்தது.   

தனது போனை எடுத்த ஜெய்சங்கர், தங்களது போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து விவரத்தை சொன்னான்.

“ஒன்னுத்துக்கும் பயப்படாத நீ! தப்பெல்லாம் அவன் மேல இருக்கு. உங்க மூனு பேருக்கும் பாதுகாப்பு வேணும்னு நீ எழுதிக் குடுத்த கம்ப்ளேய்ண்ட அவன் காதுல போட்டு வைக்கறேன். அதுக்கும் மேல உன்னை நெருங்கமாட்டான். அப்படி நெருங்குனா விட்டுடுவோமா நாங்க! நேத்து ஸ்டேஷன்ல உங்கிட்ட சொன்ன மாதிரியே வேலையை விட்டு தூக்கிட்டாங்க. இப்போ பல்லு புடுங்கனா பாம்புடா அவன்! கந்தமாறன் மேல இல்லாத கேசு இல்ல! காசு வாங்கிட்டு ஏரியால நடக்கற ப்ராத்தல கண்டுக்காம இருந்தது, கஞ்சா கடத்தலுக்கு உடந்தையா இருந்தது, நெறைய கேச எப்.ஐ. ஆர் போடாம காசு வாங்கிட்டு களைச்சி விட்டதுன்னு அடுக்கிட்டேப் போகலாம். வாங்கன துட்ட கீழ வேலைப் பார்க்கறவங்களுக்கு கொஞ்சம் குடுத்துருந்தாலாச்சும் தப்பிச்சிருப்பான். அடிச்சத முழுக்க அவனே ஆட்டைய போட்டா, மத்தவனுங்க சும்மாவா இருப்பானுங்க! நேரம் பார்த்து போட்டுக் குடுத்துட்டானுங்க! மேலிடம் பெரிய ஆப்பா வச்சிடுச்சு கந்தமாறனுக்கு. அது மட்டும் இல்லாம இவன் கந்து வட்டிக்கு கடன் வாங்கன பய பூராம் இவனை வலை வீசித் தேடிட்டு இருக்கானுங்க! எங்கயும் தப்பிக்க முடியாது அவன். இங்கருந்து ஏட்ட அனுப்பிவிடறேன்! முன்னால் இன்ஸ ஆட்டோல போட்டு வீட்டப் பார்க்க அனுப்பி வைச்சிடுவாரு. நீ புது மாப்பிள்ளையா கவலை இல்லாம ஜம்முன்னு இருடா!”

“சரிங்க சார்”

“சங்கரு!”

“சொல்லுங்க சாரே”

“மீதி அமவுண்ட சீக்கிரமாக் குடுக்கப் பாரு என்ன! நமக்கு தெரிஞ்சப் பையன்னுதான் பாதி காசு வாங்கிட்டு கேச எடுத்துட்டு கல்யாணத்தையும் ஒரே நாளுல பண்ணி வச்சேன்! சார மறந்துடாதே”

“ரெண்டு மாசத்துல பணத்தப் புரட்டிருவேன் சார்! கண்டிப்பா குடுத்துடுவேன்” என வெளியே போய் மெல்லிய குரலில் பேசி முடித்தான் ஜெய்சங்கர்.

அந்த இன்ஸ்பெக்டர், பினாமி பெயரில் வைத்திருக்கும் கடையில் தான் வியாபாரத்துக்கு சரக்கெடுப்பான் ஜெய்சங்கர். அப்படி வந்த பழக்கம்தான் அவர்களுக்குள். பழக்கம் இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் எதுவும் சட்டென நடக்காதே! தனது கல்யாணத்தையும் லஞ்சம் கொடுத்துத்தான் சுமூகமாக முடித்திருந்தான் சங்கர். அவருக்கு மீதிப் பணத்தைக் கொடுக்க, இன்னும் நாயாய் பாடு பட வேண்டியது அவனது தலைவிதி.

சட்டம், ஒழுங்குமுறை, நியாயம், தர்மம் என பலர் இருந்தாலும் இன்னும் சிலர் இப்படித்தான் காசுக்கு விலை போகும் காவாலிகளாக இருந்தனர். பெருமூச்சுடன் உள்ளே வந்தவனின் பார்வை பவலமல்லியின் மேல் மோதி நின்றது.

‘பொண்டாட்டி அடி நீதானே
என் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி
தேவையில்லை வைப்பாட்டி’ என மனம் சந்தோஷ கூச்சலிட்டது.

ஆனாலும் முகத்தைக் கடுகடுவெனத்தான் வைத்திருந்தான். அவளின் வைப்பாட்டி எனும் சொல் மனதை ரணமாய் கீறிக் கிழித்திருந்தது.

‘சட்டைக் கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்

பரோட்டா பிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்!!!!’ என அவன் மனம் ஊமையாய் அழுதது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

ஏட்டு வந்து கந்தமாறனை அள்ளிப் போட்டுக் கொண்டு போக, மகனின் காயத்துக்கு மருந்திட்டார் கோபால்.

“விடு நைனா! இதெல்லாம் ஒரு வலியா! உடம்புல அடிக்கறத விட நெஞ்சுல அடிக்கறதுதான் வலிக்குது! நீ கெளம்பு, வேபாரத்துக்கு டைம்மாச்சு! வீட்டப் பூட்டிக்கிட்டு உன் மருமகள பத்திரமா இருக்க சொல்லு! காந்திமதி அக்காட்டயும் இவள ஒரு எட்டு வந்துப் பார்த்துக சொல்லு நைனா! நான் போய் சாமானெல்லாம் எடுத்து வைக்கறேன்!” என கிளம்பினான்.

“உன் மருமகளாமே! அப்போ உனக்கு பொண்டாட்டி இல்லையா? நேத்து கல்யாணம் முடிச்சு, இந்த ப்ளாக்குக்கே வெறும் குஸ்கா மட்டும் குடுத்துக் கொண்டாடன கெஞ்சப் பிசுநாரியோட பேச்சப் பாரு!” என முனகியபடியே அவன் சொல்லியதை செய்யப் போனார் கோபால்.

அவர்கள் கிளம்பியதும் இவளைப் பார்த்துப் போக வந்த காந்திமதியிடம்,

“யக்கா! புருஷன மயக்கி முந்தானையில முடிஞ்சிக்க என்ன செய்யனும்? ஒரே நைட்டுல ‘மல்லி மல்லி இது ஜாதி மல்லி’ன்னு என் பின்னாலயே சுத்தனும் இந்தாளு! அதுக்கு வழி சொல்லுக்கா!” என கேட்டாள் பவளமல்லி.

அவள் தீவிரத்தைக் கண்டு வாயடைத்துப் போனார் காந்திமதி. சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!!!தாங்குவானா பரோட்டா?????

 

(காதல் மலரும்….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்த எபில சில பல தர லோக்கலான வார்த்தைகள் வந்திருக்கும். கதையே அப்படிப்பட்ட கதை என்பதால் எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!!!!! இதுக்குத்தான் கதை ஆரம்பத்துல இறங்கி வாங்கன்னு கூப்பிட்டேன்!!! 🙂 அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்)