Kanne Kadhal Penne–EPI 7

239948099_925484634705538_288795760143811764_n-b2420787

அத்தியாயம் 7

 

பிரியாணி எனும் சொல் பிரியன் எனும் பெர்ஸியன் மொழியில் இருந்து மருவி வந்தது என அறியப்படுகிறது. இணையத்தில் பிரியணியைப் பற்றிய தேடுதல் ஒரு மாதத்திற்கு மட்டும் 4.56 லட்சமாக இருக்கிறது என கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. ஆம்பூர், ஹைதராபாதி, மலபார், திண்டுக்கல் பிரியாணி என சென்னையின் மூலை முடுக்குகளில் உள்ள ரோட்டோரக் கடைகளில் கிடைக்காத வகைகள் இல்லை.

 

“மா…மா!!!”

வியாபாரத்துக்காக சமைத்துக் கொண்டிருந்தவன் அவளது அழைப்பில் நிமிர்ந்துப் பார்த்தான்.

தொளதொள சுடிதாரில் துப்பட்டாவின் நுனியைத் திருகியபடியே நின்றிருந்தாள் பவளமல்லி.

“இன்னா?”

“வந்து…”

செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவளை நன்றாகப் பார்த்தான் ஜெய்சங்கர். நெற்றியில் பொடி பொடியாக வேர்த்திருக்க, கண்கள் இவனைப் பார்க்காமல் அங்கும் இங்கும் அலைபாய, மேனி மெலிதாக நடுங்கியபடி இருந்தது.

“சாகடிச்சுடுவேன்டி! என்னைப் பார்த்தா இன்னா பேய் மாதிரி இருக்கா? இன்னாத்துக்கு இந்த நடுங்கு நடுங்கற?”

அவன் சத்தத்தில் தூக்கிப் போட்டது இவளுக்கு.

“டேய் மவனே! இன்னாத்துக்குடா புள்ளய பேஜார் பண்ணுற?” என குரல் கொடுத்தார் வரவேற்பறையில் கால் நீட்டிப் படுத்திருந்த கோபால்.

“கோவாலு! இது புருஷன் பொஞ்சாதி மேட்டரு! நீ கம்முனு கிட” என அவரையும் சத்தம் போட்டான் இவன்.

“சர்தான்!” என வாயை மூடிக் கொண்டார் அவர்.

“சொல்லு! இன்னா வோணும்?”

“கா…காசு!”

“இன்னாத்துக்கு துட்டு?”

“உடுப்பு வாங்கனும்” உள்ளுக்குள் உதறினாலும் மெல்லிய குரலில் சொல்ல வந்ததை சொன்னாள் இவள்.

“தோ பாரு மல்லி! ஒனக்கு தாலி கட்டன அன்னிக்கே, இனி நீ என் பொறுப்புன்னு போட்டுக்க துணிமணி எடுத்துக் குடுத்துட்டேன்! இனிமே பொங்கலு, தீவாளின்னு பண்டிக வர சொல்லத்தான் எடுத்துக் குடுப்பேன்! புரிஞ்சதா?” என கறாராக இவன் சொல்ல, முணுக்கென கண்ணில் கண்ணீர் வழிந்து விட்டது இவளுக்கு.

அவனிடம் தன் இயலாமையைக் காட்டப் பிடிக்காமல், சட்டென நகர்ந்து அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். பொங்கி வந்த கண்ணீரை கன்னம் சிவக்கும் அளவுக்கு அழுத்தித் துடைத்தாள். அதுவோ நிற்கமாட்டேன் என வழிந்து தொலைத்தது.

வாங்கித் தந்தான்தான். ஏழு செட் சுடிதார், துண்டு, பேஸ்ட், பிரஷ், சவர்க்காரம் என தனக்குத் தெரிந்த அளவுக்கு வாங்கித் தந்தான் ஜெய்சங்கர். இவளையும் அழைத்து சென்றிருந்தால், அவளது அளவுக்கு இவளே எடுத்திருப்பாள். துணிமணியோடு உள்ளாடைகளையும் வாங்கி இருப்பாள். இவனாக எடுத்து வந்தது எல்லாம் பெரிய சைசில் இருக்க, எல்லாம் தொள தொள என தொங்கியது. அதைக் கூட சேப்டி பின் போட்டு ஒருவாறாக அணிந்துக் கொண்டாள். அதையே இரவில் நைட்டியாகவும் பயன்படுத்திக் கொண்டாள். ஆனால் உள்ளாடைகள்? இப்படி சில ஐட்டங்களைப் பெண்கள் உள்ளே அணிவார்கள் என அவனுக்கு தெரிந்திருக்கவில்லையோ! அம்மா, அக்கா, தங்கையோடு வளர்ந்திருந்தால் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். இவன்தான் மொட்டைப் பயலாக வளர்ந்திருந்தானே!    

ஓடி வந்தப் போது போட்டிருந்ததையே இரவில் துவைத்து காற்றாடி காற்றில் காய வைத்து எத்தனை நாள் தான் அணிய முடியும். இன்னும் சில நாட்களில் மாதவிடாய் வேறு வந்துவிடும். அப்பொழுது என்ன செய்வது என ஒரே கவலைப் பெண்ணுக்கு.

இதற்காகவெல்லாம் ஆண்களை சார்ந்திருப்பது என்பது எவ்வளவு கஸ்டமான விஷயம் என நன்றாக புரிந்ததுப் போனது மல்லிக்கு. அந்த வீட்டில் கனகா திட்டித் தீர்த்தாலும், மலிவு விலையில் இதெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவார். இப்பொழுதோ, கணவன் எனும் ஆணிடம் அதுவும் அவளளவில் அந்நிய ஆணிடம் உள்ளாடைக்கு பணம் கொடு என கேட்கவே நா எழுவில்லை.

இவள் சட்டென உள்ளே வந்து விட்டாலும், கண்ணில் கண்ணீர் வடிந்ததைக் கவனித்து விட்டவனுக்கு மனது கேட்கவில்லை. அறையின் உள்ளே வந்து நின்றவன், கண்களும், கன்னமும், மூக்கும் சிவக்க நின்றிருந்த பெண்ணையே சற்று நேரம் பார்த்திருந்தான். பெருமூச்சுடன் அவளை நெருங்கியவன், லுங்கியின் இடுப்பில் மடித்துக் கட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணி, ஆயிரம் ரூபாயை அவள் கைப்பிடித்து வைத்தான். பணத்தை வாங்காதே என ரோஷம் கொண்ட மனது சொன்னது. வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத அறிவோ காரியம்தான் பெரிது என மல்லிக்குப் பாடமெடுத்தது. பணத்தைப் பெற்றுக் கொண்டவள் மெல்ல நிமிர்ந்து,

“தேங்க்ஸ்!” என சொன்னாள்.

“டாங்க்சு கெடக்குது! அடுத்த தபா இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கக் கூடாது என் முன்ன! துட்டு ஒன்னும் மரத்துல காய்க்கல! உன் புருஷன் வேர்வையில காய்க்குது! பாத்துத்தான் செலவு செய்யனும்! வெளங்குதா?” என கேட்க ஆமென மண்டையை ஆட்டி வைத்தாள்.

“மாமா”

ஆயிரம் ரூபாய் சுளையாய் போனதை நினைத்துக் கவலையில் இருந்தவனுக்கு அவளின் மாமா எனும் அழைப்பு புண்ணுக்கு புனுகு தடவியதைப் போல சுகமாக இருந்தது.

“ஹ்ம்ம்ம்”

“நீங்க வியாபாரத்துக்குப் போற நேரம், அக்கா கூட போய்ட்டு வந்திடவா துணி வாங்க?”

“பாத்து பத்ரமா போய்ட்டு வா” என்றவன் விட்ட வேலையைத் தொடரப் போனான்.

“ஏண்டா மவனே!”

“இன்னா நைனா?”

“நாங்களும் அல்வா துன்னுவோம்டா”

“துன்னு! இப்போ யாரு வேணான்னா. ஆனா என்னாண்ட காசு கேட்டுறாதே!”  

கடைப் போடாத தினத்தில் கோபாலாவது அவர்கள் வீட்டில் ஓட்டுக்காக கிடைத்த குட்டித் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பார். சங்கர் ரொம்பவே குறைவு அதெல்லாம் பார்ப்பது. கடை அடைக்கும் அந்த ஒற்றை நாளில்தான் சரக்கெடுப்பது, காய்கறி வாங்குவது என வெளி வேலைகள் செய்வான். அதற்குப் பிறகு கவிழ்ந்தடித்துப் படுத்து விடுவான். ஆறு நாட்களுக்கு உழைக்கும் உழைப்புக்கு அந்த ஒற்றை நாளில்தான் எனெர்ஜி ஏற்றிக் கொள்வான். அப்படிப்பட்டவனிடம் தவமாய் தவமிருந்து படத்தில் மருமகளுக்கு மட்டும் அல்ல, அம்மாவுக்கும் அல்வா பிடிக்கும் எனும் வசனத்தை சொன்னால் அவனும் என்னவென்றுதான் புரிந்துக் கொள்வான்.

“தேவா புள்ளைக்கு மட்டும் உடுப்பு வாங்க துட்டு குடுக்கற! எனக்கும் லுங்கி கிழிஞ்சுப் போச்சு! துட்டு குடு!”

“லுங்கி கிழிஞ்சா தெச்சுப் போட்டுக்க நைனா! புதுசு புதுசா உடுத்தி சோக்கு காட்டறத்து எந்த லதா உனக்காக காத்திட்டு இருக்கு?”

தனக்கு மட்டும் பணம் கொடுத்தது கோபாலுக்குப் பிடிக்கவில்லையோ என சங்கடமாகிப் போனது மல்லிக்கு.

“அப்பா! மாமா குடுத்த காசுல பாதி நீங்க வச்சுக்குங்க” என நீட்டியவளை சிரிப்புடன் பார்த்தார் அவர்.

“கண்ணு! என் மவன பேஜார் பண்ணிப் பார்க்கறதுல ஒரு குஜாலும்மா! வயசு போன காலத்துல எனக்கு எதுக்கு புது உடுப்பு! நீ நல்லதா வாங்கி உடுத்திக்க தாயீ”

அவரது சிரிப்பில்தான் இவளுக்கு ஆசுவாசமாகியது.

அழுது பணம் வாங்கியவள், தனக்கே தனக்காய் வேண்டும் என நினைக்காமல் தன் தகப்பனுக்கு அதில் பாதியைத் தாரை வார்க்க முனைந்ததைப் பார்த்த சங்கருக்கு மெலிதாய் புன்னகைப் பூத்தது.

திருமணமாகி ஐந்து நாட்கள் ஓடியிருந்தாலும், இருவரும் இன்னும் தனித் தனியாகத்தான் படுத்தார்கள். வரவேற்பறையில் கோபாலுடன் இவன் பாய் விரித்துப் படுத்துக் கொள்ள, அவளோ உள்ளறையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள்.

“என்னடா மவனே? இப்படித் தனி தனியா இருந்தா, எப்படா பேரன் வந்து என் வாயில பன்னீர தெளிக்கிறது?” என அங்கலாய்த்தார் கோபால்.

“பாவம் நைனா தேவா! வளத்த அப்பன் இப்படியானது, ஓடியாந்தது, வேற வழி இல்லாம என்னைக் கட்டிக்கிட்டதுன்னு பல அதிர்ச்சி அவளுக்கு. கொஞ்ச நாளு நம்மக் கூடலாம் நல்லா பழகிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம் மத்த மேட்டர” என அவர் வாயை அடைத்திருந்தான்.

அதோடு அவனுக்கு உள்ளுக்குள் அவள் மீது கோபம். எப்படி தன்னைப் பார்த்து வைப்பாட்டியாய் வைத்துக் கொள் என அவள் சொல்லலாம் எனும் ஆதங்கம். இத்தனை நாள் மரியாதையாய் தள்ளி நின்று சைட்டடித்தானே தவிர, தன் மூச்சுக் காற்று அவள் மேல் மோதியிருக்குமா எனும் ஆத்திரம். பின் ஏன் தன்னைப் பற்றி இவ்வளவு தப்பாக நினைத்தாள் எனும் எரிச்சல். இருந்த கோபத்தில் அவளை நெருங்கினால் எங்கே மல்லி மலரை கசக்கிப் பிழிந்து எறிந்து விடுவோமோ என பயந்தான்.

அதனால்தான் நெஞ்சு முட்ட அவளைக் கட்டி அணைத்து காதல் செய்ய ஆசையிருந்தும் தள்ளியே நின்றான். அவள் பார்க்காத நேரத்தில் அவளைப் பார்வையால் கொள்ளையடித்தான். கல்யாணமாகியும் தள்ளி நின்று சைட்டடித்த ஒரே கணவன் இவன்தான் என சொல்லிவிட ஆசைதான். ஆனால் முக்கால்வாசி நாவல் ஹீரோக்கள் இந்த கேட்டகரியில் வருவதால், வேண்டுமானால் அவர்களில் இவனும் ஒருவன் என சொல்லிக் கொள்ளலாம்.

ஆண்கள் இருவரும் வியாபாரத்துக்குக் கிளம்பி இருக்க, இவள் அவசர அவசரமாய் அவர்கள் சமைத்து நாறடித்து விட்டுப் போயிருந்த இடத்தைக் கழுவி மொழுகி விட்டாள். கந்தமாறன் வந்து கூந்தலைப் பிடித்தத் தினம் முதன் முதலாக மாமா என ஜெய்சங்கரை அழைத்திருந்த மல்லி, அன்றிலிருந்தே அந்த மாமனையும் அவன் வீட்டையும் தனது உரிமையாய் நினைக்கத் தொடங்கி இருந்தாள். அவன் தொட்டுத் தாலிக் கட்டிய போது மனதினுள் வந்திராத உரிமை, என் பொண்டாட்டிட்டா என நெஞ்சை நிமிர்த்தி அவன் சொல்லி சொல்லி அடித்த நொடி வந்திருந்தது. ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என மனம் ஆலோலம் பாடியது. பிறகென்ன, அவள் கையில் அந்தக் குட்டி மாளிகைப் பளபளத்தது.

வேலையை முடித்துக் குளித்து வந்தவள், வேகமாய் தயாராகினாள். வெளியே போகிறோம் எனும் எண்ணமே உல்லாசத்தைக் கொடுத்தது பாவைக்கு. வீடு, பள்ளி, வீடு, வேலை என இருந்தவளுக்கு கடைத் தெருவுக்குப் போவது என்னவோ கலிபோர்னியா போவது போல உற்சாகத்தைத் தந்தது.

“மல்லி!” என காந்திமதியின் சத்தத்தில்,

“வந்துட்டேன்கா” என பதில் கொடுத்தப்படியே வெளியே வந்தாள்.

“வாப்புள்ள! சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்! நாம போய்ட்டு வரதுக்குள்ள இதுங்க வீட்டை ரெண்டுப் பண்ணிடும்ங்க”   

இரண்டு வயதான கடைசி மகனை மட்டும் கையில் தூக்கிக் கொண்டு, மற்றவர்களைப் பெரிய மகளின் பொறுப்பில் விட்டு விட்டுக் கிளம்பினார்கள் பெண்கள் இருவரும். பேருந்து எடுத்து, தி. நகரை அடைவதற்குள் வேர்த்து விறுவிறுத்துப் போனது.

குட்டியோ புது சித்தியுடன்தான் இருப்பேன் என அடம் பிடித்தான். கொழுகொழுவென இருந்தவனை இவளால் ரொம்ப நேரம் தூக்க முடியவில்லை, மூச்சு வாங்கியது. மகனை வாங்கிக் கொண்ட காந்திமதி,

“கொழந்தைய சொமக்க முடியலை! நீயெல்லாம் எப்படித்தான் புருஷனைத் தூக்கி சொமக்கப் போறியோ! இந்த லட்சணத்துல ஒத்த நைட்டுல மல்லி மல்லின்னு இவ பின்னால சுத்தனுமாம்” என சொல்லி குபீரென சிரித்தார்.

“போக்கா!” என்றவளுக்கும் வெட்கத்துடன் சிரிப்பு வந்து தொலைத்தது.

அன்று இவளை உட்கார வைத்துப் பாடம் எடுத்திருந்தார் காந்திமதி.

“ஆம்பள சென்மமும் பொம்பள சென்மமும் ஒத்துமையா கொஞ்சி கொலாவிக்கிட்டு ஈயும் பீயுமா(சாரி டியர்ஸ், அவங்க பாஷைல இப்படித்தான் பேச முடியும். அவ்வ்வ்வ்) ஒட்டிக்கினு கிடக்கறதெல்லாம் சுத்த பம்மாத்து. அப்படிலாம் ஆருமே இர்க்க முடியாது. அவன் ஒரு நாய் சென்மம், இவ ஒரு பேய் சென்மம். (man from mars, woman from venus—நு சொல்றாங்க)ரெண்டும் ஒட்டிக்கிட்டே கிடக்கறதெல்லாம் ஆகற மேட்டரு இல்ல! அவனே மயங்கினாத்தான் உண்டு! அதுவும் எதைப் பார்த்து மயங்குவான்னு கண்டுப்புடிக்கறதுக்குள்ள நமக்கு கெழவி வயசு ஆகிடும். ஒவ்வொருத்தி சொல்லுவா, அதையும் இதையும் காட்டி புருஷன மயக்கிடலாம்னு. அப்படி செஞ்சா வதவதன்னு என்னை மாதிரி பெத்துத் தள்ள முடியுமேத் தவிர வேற ஒரு மண்ணும் வேலைக்கு ஆகாது. படுத்து எழுந்ததும் அப்படியே நம்மள டீல்ல விட்டுட்டு, அவன் சோலியப் பார்க்கப் போய்டுவான்! புருஷன் மனச தொட அவன் வயித்து வழியாப் பாதை இருக்குன்னு கேணை கிறுக்கிங்க சொல்லி வச்சிருக்குங்க! அதெல்லாம் எம்மாம் பெரிய பொய் தெரியுமா! தின்னு ஏப்பம் விட்டதும் உன்னை டீல்ல விட்டுட்டுப் போயிடுவான். அப்புறம் எப்படி அவன மடக்கறது?”

“சொல்லுக்கா, எப்படி?”

“அடி போடி போக்கத்தவளே! அது தெரிஞ்சா நான் பொஸ்த்தகம் போட்டு துட்ட அள்ளிருக்க மாட்டேன்! புருஷன மடக்கறேன், மயக்கறேன்னு திரியாம வாழ்க்கைய அதன் போக்குல வாழுடி! வாழ்ந்துப் பார்த்தாத்தான் அதன் சூட்சுமம் தெரியும். தடிக் கொண்டு அடிக்காம, தானா கனிய விடு. அங்கயும் இங்கயும் சுத்தித் திரிஞ்சு, பொண்டாட்டித்தான் தெய்வம்னு ஒரு நாள் காலுல வந்து விழுவான். அந்த நேரம் நீ உசுரோட இருந்தா, அப்போ முந்தானையில முடிஞ்சுக்கோ” என அசால்ட்டாக வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார் காந்திமதி.

அவர் சொன்னது போல வாழ்ந்துப் பார்த்துவிடுவது என முடிவெடுத்திருந்தாள் நம் பவளமல்லி.     

“அடியே, என்னடி கனா கண்டுட்டு இருக்க?”

“அன்னைக்கு நீ சொன்னத நெனைச்சிட்டு இருக்கேன்கா!”

“அது சரி! நைட்டுல ஒன் கிட்ட மொரட்டுத்தனம் இல்லாம நடந்துக்கறானா சங்கரு?”

இவள் பேய் முழி முழிக்க,

“என்னடி முழிக்கற? ஒன்னும் நடக்கலியா இன்னும்?” என கேட்டார் அவர்.

இல்லையென தலையாட்டினார் இவள்.

“ஓஹோ!! சரி வா, வாங்க வேண்டியதப் பார்க்கலாம்”

தி.நகரில் மாட மாளிகை கடைகள் பல இருந்தாலும், இவர்களைப் போல எண்ணி எண்ணி செலவு செய்பவர்களுக்கெனவே பிளாட்பார கடைகளும் இருந்தன. உள்ளாடைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், வேண்டியதை பொறுக்கி எடுத்தாள் மல்லி.

“நாலு நூறு ரூபாம்மா!” என கடைக்காரன் சொல்ல, பணத்தை எடுக்கப் போனவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் காந்திமதி.

“ஆறு நூறு ரூபாவுக்கு குடுப்பா”

“கட்டாதும்மா”

“அப்போ விடு! வாடி வேற கடைக்குப் போலாம்”

“ம்மா, ம்மா! வா, வா! மொத போனியே வாங்காம போனா எப்படி! சரி சரி, எடு! ஆறு நூறு ரூபாவுக்குத் தரேன்” என இறங்கி வந்தான்.

ஆச்சரியமாக காந்திமதியைப் பார்த்தாள் பவளமல்லி. மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடித்தார் காந்திமதி. மெல்ல சிறகை விரிக்க ஆரம்பித்திருந்த இந்தக் குருவி, கொஞ்சம் கொஞ்சமாய் வெளி உலகத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது.

ஆயிரம் ரூபாய் நமக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கையில் சம்பளத்தை வாங்கி தனக்காக செலவு செய்திராத மல்லிக்கு அது பெரிய தொகையாகவே தெரிந்தது. உள்ளாடைகள், சேனிடரி நாப்கின், காந்திமதியின் பிள்ளைகளுக்கு கொஞ்சமாய் மிக்ஸர், அழகழகாய் தோடுகள், ஒரே ஒரு விலை குறைந்த செருப்பு, கணவனுக்கும் அவன் அப்பாவுக்கும் துணி குவியலில் இருந்து வாங்கிய இரண்டு லுங்கி, இரண்டு நைட்டி என கணவன் கொடுத்த மொத்த காசுக்கும் வேட்டு வைக்காமல், இருநூறு ரூபாயை மிச்சம் பிடித்து ஜெய்சங்கரின் மனைவி என சொல்லிக் கொள்ள மொத்த தகுதியும் இருக்கிறது என நிரூபித்தாள் மல்லி.

அன்று வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்த கோபாலிடம்,

“நைனா!” என வந்து நின்றார் காந்திமதி.

குசுகுசுவென இருவரும் பேசி முடித்ததும் வீட்டுக்கு வந்தார் கோபால். வந்தவரிடம் லுங்கியை எடுத்து நீட்டினாள் பவளமல்லி. அவருக்கு கண்கள் இரண்டும் கலங்கிப் போனது. சங்கரும் அவள் தனக்குக் கொடுத்திருந்த லுங்கியை சந்தோசத்துடன் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எது வேணும்னாலும் நாங்களேத்தான் வாங்கிக்கனும், நாங்களேத்தான் செஞ்சுக்கணும். எங்களுக்கு எடுத்துப் பிடிக்க இன்னி வரைக்கும் யாருமே இருந்தது இல்ல. இப்போ நீ வாங்கிக் குடுக்க சொல்ல மன்சே நெறைஞ்சுப் போச்சு கண்ணு”  

இவளுக்கும் அழுகை வரும் போல இருந்தது.

“சரி சரி, செண்டிமெண்ட புழியாம துன்ன வா நைனா” என அவள் முகம் அழுகைக்கு போக முனைவதைப் பார்த்து பேச்சைத் திசைத் திருப்பினான் சங்கர்.

இருவரும் அமர, இவள் வாங்கி வந்திருந்த ரோட்டுக்கடை பிரியாணியையும், அவர்கள் வாங்கி வந்திருந்த இட்லி தோசையையும் பரிமாறினாள் மல்லி.

“நீயும் வந்து குந்து” என கைப்பிடித்து மல்லியையும் அமர வைத்தான் சங்கர்.

அன்றுதான் முதன் முதலாக மூவரும் ஒன்றாய் குடும்பமாய் அமர்ந்து உணவு உண்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்,

“டேய் மவனே!” என அழைத்தார் கோபால்.

“இன்னா நைனா?”

“இன்னிக்கு நைட்டு என் தோஸ்த்து வீட்டுக்குப் போறேன்டா!”

“யோ கோவாலு! மாவு பெசைய உடம்பு வணங்காம எஸ்கேப் ஆகற பாத்தியா?” என இவன் கத்த, அவர் திரும்பிப் பார்க்காமல் கிளம்பி விட்டார்.   

முனகிக் கொண்டே இவன் போய் குளித்து விட்டு வந்தான். அதன் பிறகு எப்பொழுதும் போல பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆரம்பித்தான் சங்கர். அவன் பிசைவதைப் பார்த்தப்படியே அமர்ந்திருந்தாள் இவள். மௌனமாக நேரம் கடக்க,

“மாமா!” என அழைத்தாள் மல்லி.

“ஹ்ம்ம்!”

“எனக்கும் மாவு பிசைய சொல்லித் தரியா?”

நிமிர்ந்துப் பார்த்தான் தன்னவளை. அவள் முகத்தில் கெஞ்சலைப் பார்த்து,

“கையக் கழுவிட்டு வா” என சொன்னான்.

ஓடிப் போய் கையைக் கழுவி விட்டு வந்து அவன் முன்னே அமர்ந்தாள் அவள்.

“மாவுல இப்படி எண்ணெயை விட்டு, இப்படி பிசையனும்” என அவன் செய்து காட்ட அவளும் முயன்றாள்.

“அப்படி இல்லைடி!” என்றவன் எழுந்து வந்து அவள் பின்னே முட்டிப் போட்டு அமர்ந்துக் கொண்டு அவள் கைப்பிடித்து சொல்லிக் கொடுத்தான்.

இவளும் ஆர்வமாய் கற்றுக் கொண்டாள்.

“இப்படித்தான் கொஞ்ச கொஞ்சமா எண்ணெய் விட்டு மாவ சேர்த்து பெசையனும்” என பேசிக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தவனின் சத்தம் மெல்ல குறைந்திருந்தது.

அவள் முதுகில் ஒட்டி, கழுத்தில் முகத்தை வைத்து, கையைப் பிடித்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் மூச்சு காற்று அனலாய் காதோரம் மோத, இவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

“என்ன மாமா?” என கேட்டவளின் குரல் கிணற்றில் இருந்து வருவது போல மெலிதாக ஒலித்தது.

அவள் மேல் வந்த சுகந்தமான வாசம் சங்கரைக் கிறுக்காக்கியது. தலையில் அவள் சூடி இருந்த மல்லி, கையில்லாத பனியன் போட்டிருந்தவனின் முடியடர்ந்த நெஞ்சில் உராய்ந்து அவனைப் பித்தாக்கியது.

“மல்லிம்மா”

“ஹ்ம்ம்ம்”

அவள் முதுகில் இன்னும் ஒட்டியவன், கழுத்தில் தனது முதல் முத்திரையைப் பதித்தான்.

மேனி சிலிர்த்து அடங்கியது பெண்ணுக்கு. அவள் சிலிர்ப்பு இவனைப் பைத்தியமாக்கியது.

“தேவா!” என்றவன் அடுத்த முத்ததை அவள் கன்னத்தில் பதித்தான்.

அப்படியே அவன் நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டாள் பவளமல்லி. மாவு கையோடு அவள் கன்னத்தைப் பற்றி தன் புறம் திருப்பி,

“தம்மாத்துண்டு இருந்துட்டு மனுஷன் உசுர பரோட்டாவ பிக்கிற மாதிரி பிச்சிப் பிச்சிப் போடறடி!” என புலம்பியவன், அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மாவும் எண்ணெயும் ஒட்டி இருந்த கரத்தை அவன் முடியில் விட்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இவள். சத்தமான முத்தம் இருவரையும் பித்தமாக்க, யார் கொடுத்தது யார் எடுத்தது என தெரியாமல் நீண்ட நேரம் நீண்டது இதழணைப்பு. அப்படியே அவன் பின்னால் சரிய, அவன் நெஞ்சில் பஞ்சென விழுந்தாள் இவள். காமன் கணைத் தொடுக்க, பரோட்டாவுடன் அழகாய் இணைந்தது அவன் சால்னா. பக்கேட் தண்ணீரில் இன்பமாய் முங்கிப் போனது அவள் மாப்.(mop)

‘வாய் விட்டு நானொன்று

கேட்கிறேன் தாவென்று

பாய் விரித்தேனடி மானே

அங்கங்கள் பசும் தங்கங்கள்

அள்ளும் நேரம் வா….

மல்லியே சின்ன முல்லையே

எந்தன் மரிக்கொழுந்தே’

மல்லியே சின்ன முல்லையே

எந்தன் மரிக்கொழுந்தே’

(காதல் மலரும்..)

(போன எபிக்கு லைக் கமேண்ட் மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல் டியர்ஸ்)